Sunday, September 11, 2016

ஜேஎன்யு மாணவர்கள் சரியான முறையில் பதிலடி தந்திருக்கிறார்கள்: சீத்தராம் யெச்சூரி


ஜேஎன்யு மாணவர்கள் சரியான முறையில் பதிலடி தந்திருக்கிறார்கள்: சீத்தராம் யெச்சூரி
புதுதில்லி, செப். 12-
ஆர்எஸ்எஸ்-பாஜக  தங்கள் மீது மேற்கொண்ட பாசிசத் தாக்குதலுக்கு ஜேஎன்யு மாணவர்கள் மிகச் சரியான முறையில் பதிலடி தந்திருக்கிறார்கள் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர் அணி மகத்தான முறையில் வெற்றிவாகை சூடியுள்ளது, இது தொடர்பாக சீத்தாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
"ஆர்எஸ்எஸ்-பாஜகவின் தாக்குதலுக்கு மிகச் சரியான முறையில் பதில் கூறப்பட்டிருக்கிறது, இவ்வாறான பதில் ஜேஎன்யூ மாணவர்களிடமிருந்து வந்திருக்கிறது. செவ்வணக்கம் தோழர்களே. நாங்கள் அனைவரும் உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறோம்.
இந்த ஆண்டின் பிப்ரவரியில்தான் ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறாக்கள் ஜேஎன்யு மீதான தாக்குதலுக்குக் கவனம் செலுத்தத் தீர்மானித்தது. அவர்கள், ஜேஎன்யுவைத் தங்களுக்கு எதிரான ஓர் அடையாளமாகப் பார்த்தார்கள்.
போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சில தொலைக்காட்சி அலைவரிசைகளில்  காட்டப்பட்டதை அடுத்து, ஜேஎன்யு மாணவர்கள் மீது தேசவிரோதக் குற்றச்சாட்டுகளில் தொடங்கி, நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே கும்பல்களால் வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படுவது வரை அது தொடர்ந்தது. இவ்வாறு ஜேஎன்யு மாணவர்கள்  மிகவும் பயங்கரமான தாக்குதலுக்கு ஆளானார்கள்.
இவ்வாறு இவர்களைத் தாக்கியவர்களுக்கு மத்திய அமைச்சர்கள், ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள், சமயங்களில் காவல்துறையினரும் ஆதரவாக நின்றார்கள். இவற்றுடன் ஆளும் கட்சியினரின் பணபலம் புகுந்து விளையாடியதையும் மறந்துவிட முடியாது. ஆயினும் ஜேஎன்யு மாணவர்கள் இவை அனைத்திற்கும் வளைந்து கொடுக்கவில்லை.  நான் படித்த பல்கலைக்கழகம் தொடர்ந்து அதன் மாணவர்களுக்கு இவ்வாறான உயர்ந்த மாண்புகளை ஊட்டி வளர்த்து வருவதற்காக என்னால் அதிக அளவில் பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
பாஜக-ஆர்எஸ்எஸ் வகையறாக்களால் ஜேஎன்யு குறிப்பாக குறி வைக்கப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு. உண்மையில், ஜேஎன்யு, நாம் வாழும் நாட்டின் பல்வேறு விதமான மக்களின் ஒரு நுட்பமான மாதிரியாகும். இங்கே நாட்டின் அனைத்து முனைகளிலிருந்தும் வந்துள்ள மாணவர்களைப் பார்க்க முடியும், பல்வேறு இனத்தினர் – பிற்படுத்தப்பட்டவர்கள், அடக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலையில் வாழக்கூடியவர்கள் – என அனைத்துத்தரப்புப் பிரிவுகளில் இருந்தும் வந்துள்ள மாணவர்களைப் பார்க்க முடியும். அதுமட்டுமல்லாமல் இங்கே பெண்களும் அவர்களுடன் இணைந்து, அனைத்து மாணவர்களும் சரிநிகர் சமானமான நிலையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்க முடியும்.  இதுதான் நாம் விரும்பும் உண்மையான இந்தியாவாகும்.  சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும், அனைத்து மக்களுக்கும் அனைத்து வாய்ப்புகளும் சமமான முறையில் கிட்ட வேண்டும் என்றும் நாம் ஆசைப்படுகிறோமே அதன் ஒரு மாதிரி இங்கே இருக்கிறது. அவர்களின் அபிலாசைகள் அவர்கள் ஏற்றுள்ள முற்போக்குக் கொள்கைகளின் விளைவாக விளைந்துள்ளவைகளாகும். இவர்களின் கொள்கையின்படி பாலின அடிப்படையிலோ, சாதி அல்லது மதத்தின் அடிப்படையிலோ வித்தியாசங்கள் கிடையாது. மாறாக, தாங்கள் கனவு காணும் இந்தியாவைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இவ்வாறான இவர்களது அபிலாசைகள்தான் பாஜக-ஆர்எஸ்எஸ் வகையறாக்களை நடுங்க வைத்திருக்கிறது.
ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் ஒரு போர்க்களத்தில் மட்டுமே நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்.  ஆர்எஸ்எஸ்-பாஜகவிற்கு எதிராகவும் அதன் நச்சுத்தன்மை கொண்ட சித்தாந்தத்திற்கு எதிராகவுமான யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு முன் இதுபோன்று எண்ணற்ற போர்க்களங்களில் நாம் வெற்றி பெற வேண்டி இருக்கிறது. அத்தகையதோர் போராட்டத்திற்கு நம்மை மேலும் தீவிரமாக அர்ப்பணித்துக் கொள்வதற்கான வாய்ப்பாக இந்த வெற்றியை நாம் பயன்படுத்திக் கொள்வோம்.
1977 ஏப்ரலில் நான் ஜேஎன்யு மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்டபோது வெற்றி பெற முடியாததுபோலவே தோன்றியது. ஆயினும் வெற்றிபெற்றபின்னர் நான் மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கையில், இந்த வெற்றிக்காக ஜேஎன்யு மாணவர்களுக்கு வெறுமனே நன்றி கூறினால் மட்டும் போதாது, இடதுசாரிகள் மீதும், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்கான அவர்களுடைய போராட்டத்திலும் அவர்கள் நம்பிக்கையை வைத்திருப்பதற்காகவும், நாம் அவர்களுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம் என்று கூறினேன். இன்று மீண்டும் அவர்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். செவ் வணக்கம்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
(ந.நி.)


Saturday, September 10, 2016

குஜராத் கோப்புகள் 11 பயன்படுத்திய பின் பதுங்கிக்கொண்ட அரசாங்கம்


ராணா அய்யூப்
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குழு பொறுப்பதிகாரி ஜி.எல். சிங்கால் என்னுடன் பேசப்பேச மேலும் பல உண்மைகளை வெளிப்படுத்தினார்.
கேள்வி: உங்கள் சீனியர் ஒரு தலித், இல்லையா?
பதில்: இல்லை. ஆனால் நான் அவர்களுக்குத் தவிர்க்க முடியாதவனாக இருந்தேன். அவர்களுக்காக நடவடிக்கைகளை மேற்கொண்டேன். பல சமயங்களில் ஒரு கான்ஸ்டபிள் செய்யக்கூடியவேலைக்குக்கூட என்னை அனுப்புவார்கள்.
கேள்வி: நீங்களும் ஏதோ சில பிரச்சனைகளில் சிக்கியிருக்கிறீர்களாமே?
பதில்: 2004ல் நான்கு பேரை என்கவுண்ட்டர் செய்தோம். அவர்களில் இரண்டு பேர் பாகிஸ்தானியர்கள், இரண்டு பேர் மும்பையிலிருந்து வந்தவர்கள். அவர்களில் ஒரு பெண்ணும் உண்டு - இஸ்ரத் ஜஹான். நாடறிந்த வழக்காகிவிட்டது அது. அது உண்மையான என்கவுண்ட்டர்தானா என்று கண்டறிய உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
கேள்வி: அது போலி என்கவுண்ட்டரா? அதில் நீங்கள் ஏன் வருகிறீர்கள்?
பதில்: சில சிக்கலான பிரச்சனைகளை மாறுபட்ட முறையில்தான் கையாள வேண்டியிருக்கும். 9/11க்குப் பின் அமெரிக்கா என்ன செய்தது? சந்தேகத்துக்குரியவர்களை குவாண்டனாமோ முகாமில் வைத்து சித்ரவதை செய்யவில்லையா? எல்லோரும் அல்ல, ஒரு பத்து சதவீதம்பேர் சித்ரவதைக்கு உள்ளானார்கள். அவர்களில் எந்தக் குற்றமும் செய்யாதவர்களும் இருக்கத்தான்செய்தார்கள். ஆனாலும் தேசத்தைக் காப்பதற்காக அதைச் செய்ய வேண்டியதாகிறது.
கேள்வி: அந்த என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டவர்கள் லஸ்கர் பயங்கரவாதிகளா?
பதில்: ஆம்.
கேள்வி: அந்தப் பெண்ணுமா?
பதில்: இதோ பாருங்கள், அந்த நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டுவிட்டார். அவர் பயங்கரவாதியாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஒரு முகமூடியாகக் கூட பயன்படுத்தப்பட்டிருக்கலாம்...
கேள்வி: இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வன்சாரா, பாண்டியன், அமின், பர்மர்ஆகியோரும், வேறு சில அதிகாரிகளும் கீழடுக்கு சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்களே? அரசாங்கம் இவர்களைப் பயன்படுத்திக்கொண்டு பிறகு கைகழுவி விட்டுவிட்டது என்பதாகத்தான் இது இருக்கிறதா?
பதில்: நாங்கள் எல்லோருமே அப்படித்தான். அரசாங்கம் இப்படி நினைத்துச் செய்யவில்லைதான். ஆனால், அவர்கள் என்ன சொன்னாலும் நாங்கள் அதற்குக் கட்டுப்பட்டு, அவர்களின்தேவைகளை நிறைவேற்றத் தயாராக இருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு அரசு ஊழியர் என்ன செய்தாலும் அரசாங்கத்திற்காகத்தான் செய்கிறார். ஆனால்அதன் பிறகு அரசாங்கமும் சமுதாயமும் அவரை அங்கீகரிப்பதில்லை. வன்சாரா இந்த அரசாங்கத்திற்காக என்னவெல்லாம் செய்தார்! ஆனால் யாரும் அவர் பக்கம் நிற்கவில்லையே...
கேள்வி: உங்கள் ஆட்கள் அரசியல் அதிகாரத்தில் அமர்ந்திருப்போரின் கட்டளைப்படிதானே செயல்பட்டார்கள்? ஆனால், அவர்களை ஏன் இவர்கள் காப்பாற்றவில்லை?
பதில்: இந்த அமைப்புடன் ஒத்துப்போக வேண்டும் என்றால் சமரசம் செய்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
கேள்வி: ஆனால் பிரியதர்சி அரசாங்கத்திற்கு நெருக்கமானவராக இருக்கவில்லையே...
பதில்: அவர் அரசாங்கத்திற்கு நெருக்கமானவராகத்தான் இருந்தார். ஆனால், ஏதேனும் தப்பான செயலைச் செய்யச் சொன்னால் மறுத்து விடுவார்.
கேள்வி: அவரையும் பாண்டியனையும் ஒரு என்கவுண்ட்டரில் ஈடுபட அரசாங்கம் சொன்னதாகவும், தான் அதைச் செய்ய முடியாதென மறுத்துவிட்டதாகவும் பிரியதர்சி என்னிடம் கூறினார்.
பதில்: பாண்டியனும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
கேள்வி:: அவர் எப்படி உள்துறை அமைச்சருக்கு (அமித் ஷா) நெருக்கமானவரானார்?
பதில்: ஏடிஎஸ் பொறுப்புக்கு வருவதற்கு முன் அவர் உளவுத் துறையில் இருந்தார்.
கேள்வி: முதலமைச்சரும் உள்துறை அமைச்சரும் தங்களுக்கு வேண்டிய சில செயல்களைச் செய்ய வைத்தார்கள் என்று எனக்குத் தெரிகிறது...
பதில்: சில விஷயங்கள் நம் கைகளில் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் இந்த அமைப்புக்காகச் செயல்பட்டோம்.
கேள்வி: நீங்கள் இப்போதும் கண்காணிக்கப்படுகிறீர்களா, அல்லது உங்கள் வழக்கு முடிந்துவிட்டதா?
பதில்: வழக்கு சுறுசுறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது.
கேள்வி: அரசாங்கம் உங்களுக்கு உதவுகிறதா, இல்லையா?
பதில்: அதிகாரத்தில் காங்கிரஸ் இருந்தாலும் சரி, பாஜக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகள் என்றால் அரசியல் கட்சிகள்தான். எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் முதலில் தங்கள் நலன்களைக் காப்பாற்றிக்கொள்ளவே முயல்வார்கள். எங்களுடைய வழக்கில் உதவுகிறார்கள்தான். ஆனாலும் தங்களுக்கு எதுவும் வராமல் பார்த்துக்கொள்வார்கள்.
எங்கள் என்கவுண்ட்டர் வழக்குகளை விசாரிப்பவர்கள் யார் என்று பாருங்களேன். கர்னாயில் சிங், தில்லியில் ஸ்பெஷல் செல் காவல்துறை இணை ஆணையராக இருந்தவர். அவருடைய பதவிக்காலத்தில் நாற்பத்து நான்கு என்கவுண்ட்டர்கள் நடந்திருக்கின்றன. அவர்தான் இப்போது எங்களை விசாரிக்கிற எஸ்ஐடி தலைவர். அடுத்து, சதிஷ் வர்மா. தன்னை மனித உரிமைகளுக்காக நிற்கிற ஒரு சுத்தமான ஆள் என்று காட்டிக்கொள்கிறவர். அவர் பத்து என்கவுண்ட்டர்களைச் செய்திருக்கிறார்.
கேள்வி: இதற்கு என்னதான் முடிவு?
பதில்:பொறுத்திருந்து பார்ப்போம், எதுவும் வெளியில் வராது.
(தொடரும்)


ஹரியானா மாநிலத்தில் பசு பாதுகாப்புக் குழுவினரின் கொடூரம் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்றங்களைச் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக

ஹரியானா மாநிலத்தில் பசு பாதுகாப்புக் குழுவினரின் கொடூரம்
வன்புணர்வு மற்றும் கொலைக் குற்றங்களைச் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக

ராஜ்நாத் சிங்கிற்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்
புதுதில்லி, செப். 10-ஹரியானா மாநிலத்தில் மேவாட் மாவட்டத்தில் ஏழை குடும்பத்தைச்சேர்ந்த மதச்சிறுபான்மையினர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதற்கு எதிராக உடனடியாகத் தலையிடுமாறு மத்திய உள்துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:2016 ஆகஸ்ட் 24-25 இரவு ஹரியானா மாநிலம், மேவாட் மாவட்டத்தில் தாவோரு உட்கோட்டத்தில் திங்கர்ஹரி கிராமத்தில் ஜஹருதீன் என்பவர் குடும்பத்தினர் மீது கயவர்கள் சிலர் காட்டுமிராண்டித்தனமான முறையில் வன்புணர்வு மற்றும் கொலை செய்துள்ள குற்றங்கள் தொடர்பாக மிகவும் மனவேதனையுடனும், கோபத்துடனும் தங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சுரேந்தர் சிங் மற்றும் இந்தர்ஜித் சிங் ஆகியோர் ஆகஸ்ட் 30 அன்று சம்பவ இடத்திற்குச் சென்று நேரடியாக விசாரணை செய்ததன் அடிப்படையில் இதனை எழுதுகிறேன். இந்த சம்பவம் தொடர்பாக செப்டம்பர் 1அன்று தாவோருவில் நடைபெற்ற பஞ்சாயத்திலும் இந்தர்ஜித் பங்கேற்றிருந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், எங்கள் கட்சித் தலைவர்கள். பஞ்சாயத்தில் பலர் கூறிய விவரங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன்.
தாக்குதலால் இருவர் சாவு
திங்கர்ஹரி கிராமத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறு அளவு நிலத்தில் பயிர்செய்து ஜஹருதீன் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். இதர பண்ணை விவசாயிகளைப்போலவே இவர்களும் பண்ணை நிலத்தில் குடிசை வேய்ந்து வாழ்ந்து வந்தார்கள்.
2016 ஆகஸ்ட் 25 இரவு குடிபோதையிலிருந்த சமூக விரோதிகள் சிலர் பண்ணைவீடுகள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். இவர்களில் நால்வரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
இரண்டு இளம் பெண்களை பாலியல்ரீதியாகக் குறிவைத்தே இவர்கள் அங்கேவந்திருக்கிறார்கள். ஆயினும் இவர்கள்வருவதை அறிந்து வயதான தம்பதிகளான இப்ராகிம் (38), ரஷீதான் எழுந்துவிட்டார்கள். சமூக விரோதிகளை இவர்கள் தட்டிக்கேட்க, அவர்கள் இவர்களைக் கடுமையாகத் தாக்கியதில் அவர்கள் இறந்துவிட்டார்கள். வீட்டிலிருந்த ஜஹருதீன், அவர் மனைவி ஆயிஷா மற்றும் குழந்தைகள் பர்வேஸ் (11) , நவீத் (8) ஆகியோருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பின்னர் இவர்கள் குறிவைத்து வந்த இரு சிறுமிகளும் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஆறு மாத கைக்குழந்தைக்குத் தாயான மூத்த பெண் எப்படியோ தப்பி ஓடி ஒளிந்துவிட்டார். அவர் வந்து சரணடையாவிட்டால் அவரது 6 மாத குழந்தையை கண்ட துண்டமாக வெட்டிவிடுவோம் என்று அந்தக் கிரிமினல்கள் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோய் ஒளிந்திருந்த அவர் இவர்களுக்கு முன்னால் வந்துள்ளார். பின்னர் இரு பெண்களையும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, கயவர்கள் கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர். இரண்டாவது சிறுமி 13 வயதுக்கும் குறைந்தவராவார்.
தகவல் தெரிந்து உறவினர்களும் மற்றவர்களும் வந்து பார்த்தபோது, அவர்கள் கண்முன்னாலேயே இந்தக் கொடுமைகள் நடைபெறுவதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். காவல்துறையினரும் வந்துவிட்டனர். எனினும் குற்றச்செயல்களின் தன்மைக்கேற்ப சட்டரீதியான நடவடிக்கை எதையும் அவர்கள் தொடங்கிடவே இல்லை.
பின்னர் மாவட்ட மருத்துவமனைக்கு இவ்விரு இளம்பெண்களும் கொண்டு செல்லப்பட்டனர். இரு சடலங்களும் அங்கேதான் வைக்கப்பட்டிருந்தன. இவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்கப்படவில்லை. மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் வாங்குவதற்காக இந்த இரு பெண்களும் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
வழக்கறிஞர் சங்கத்தின் மூத்த வழக்கறிஞர் தலையிட்டு நிர்ப்பந்தம் அளித்ததைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து இ.த.ச.302 (கொலை) பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இ.த.ச. 460 (கொலை செய்வதற்காக வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக) பிரிவின்கீழ் மட்டும்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு மிகவும் கொடூரமான முறையில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் மிகவும் அச்சத்துடன் நிலைகுலைந்துள்ளனர். காவல்துறையினர் குற்றமிழைத்த கிரிமினல்களுக்குப் பரிவு காட்டிவருவதைப் பார்த்து இங்கேயுள்ள மக்கள் அனைவருமே இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு ஆத்திரம் அடைந்துள்ளனர்.
பசு பாதுகாப்புக் குழுவை சேர்ந்தவர்கள்
இவ்வாறு காட்டுமிராண்டித்தனமான முறையில் நடந்துகொண்ட கிரிமினல்கள் நான்கு பேரும் உள்ளூரைச்சேர்ந்த பசு பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. தாவோரு நகரத்தில் இச்சம்பவம்தொடர்பாக நியாய பஞ்சாயத்து நடைபெற்றிருக்கிறது, கடும் மழை பெய்தபோதும் அதனைப்பொருட்படுத்தாது அனைத்துத்தரப்பு மக்களும் அங்கே குழுமினார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்துப் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் திரண்டுவந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
நியாய பஞ்சாயத்தில் கட்டார் அரசாங்கம் இக்குற்றத்தைப் புரிந்தவர்களுக்கு எதிராக நியாயம் வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிரிமினல்களுக்கு ஆதரவாக நடந்துவரும் காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது, இந்தப் பிரச்சனை ஒரு சட்டம் –ஒழுங்குபிரச்சனை, மாநில அரசின் அதிகாரத்திற்குஉட்பட்டது என்ற போதிலும்கூட, தாக்கப்பட்டிருப்பவர்கள் மதச்சிறுபான்மையினர் என்பதைக் கணக்கில் கொண்டு, இப்பிரச்சனையில் தாங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத்தில் கோரியுள்ளார்.
(ச.வீரமணி)


Friday, September 9, 2016

குஜராத் கோப்புகள் 10 உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட உரையாடல்


ராணா அய்யூப்
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் குழு பொறுப்பதிகாரி சிங்கால் ஒரு சிகரெட்டைப்பற்ற வைத்துக்கொண்டு என் கேள்விகளுக்குத் தயாரானார். அந்த உரையாடல் அவரதுசிக்கலான வாழ்க்கையையும், அவரது மனப்போக்கு உருவாகியிருந்த விதத்தையும் அறிந்துகொள்ளஉதவியது.
பதில்கள் பூடகமாகவே இருந்தன என்றாலும் அவருடைய நீண்ட அமைதியும், கூர்மையான பார்வையும், மேசையில் தன் விரல்களால் தட்டிக்கொண்டிருந்த விதமும் எண்ணற்ற பக்கங்களைக் கூறின. எச்சரிக்கையாகப் பேசுவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, என்னிடமிருந்து தீங்கு எதுவும் வராது நம்பியதாலோ என்னவோ மனம்திறந்து பேசினார்.
‘சார், உங்களை உங்கள் வீட்டில் குடும்பத்தாருடன் சந்திக்க விரும்புகிறேன், என்றேன்.‘வேண்டாம் ப்ளீஸ். அவர்கள் ஏற்கெனவே சங்கடத்துடன் இருக்கிறார்கள். என் என்கவுண்ட்டர்கள்அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
வீட்டிற்கு அருகே போலீஸ் வண்டி வரக்கூடாது, தூரத்திலேயே நிறுத்திவிட்டு வரச் சொல்லுங்கள் என்கிறார்கள்,’ என்றார்.
ஒப்புதல் வாக்குமூலம்
நான் இந்தப் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த பின்னாட்களில், அவர் சிபிஐ-யால் கைதுசெய்யப்பட்டு, இஸ்ரத் ஜஹான் என்கவுண்ட்டரில் தன்னுடைய பங்கு குறித்து ஒப்புதல் வாக்குமூலம்அளித்திருந்தார். அந்த என்கவுண்ட்டரில் மாநிலத்தின் வேறு பல அதிகாரிகளும் உடந்தையாகஇருந்ததை அவருடைய வாக்குமூலங்கள் வெளிப்படுத்தின.
சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில், இஸ்ரத் ஒரு லஸ்கர்-இ-தொய்பா ஆள் அல்ல என்றும், அவர்மீதான என்கவுண்ட்டர் போலியானதுஎன்றும் குறிப்பிட்டிருந்தது.சிங்காலின் மூத்த மகன் ஹர்டிக், தனது தந்தையைப் பற்றிய விமர்சனங்கள் ஊடகங்களில் வந்ததன் பின்னணியில் மனம் நொந்து 2013ல் தற்கொலை செய்துகொண்டார். ஹர்டிக் மேல் மிகுந்தபாசம் கொண்டிருந்தவர் சிங்கால். மகனின் அகால மரணத்திற்குப்பிறகுதான் அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தார்கள்.அந்த நண்பர்களிடமிருந்து வந்த கடைசித் தகவல்:
அவர் பதவி விலகிவிட்டார். அரசாங்கம்வற்புறுத்தியும் தனது முடிவை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார். சிபிஐ-யிடம் சிங்கால், தான் அப்ரூவராக மாற விரும்பவில்லை என்றும், தன்மீது இரக்கம் காட்ட வேண்டியதில்லை என்றும்,வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களைப் போலவே தன்னிடமும் விசாரணையை நடத்துமாறும் கேட்டுக் கொண்டார். இந்த மாறுபட்ட வேண்டுகோள், என்னை 2010 டிசம்பரில் எங்களுக்கிடையே நடந்த உரையாடலுக்கு இழுத்துச் சென்றது.
வேடிக்கையான சூழ்நிலை
ஜி.எல். சிங்காலுடன் ஒரு திரைப்பட இயக்குநராக நான் நடத்திய அந்த உரையாடலிலிருந்து:
கேள்வி: குஜராத் காவல்துறையினர் குறித்து ஏராளமானவைகள் அடிபடுகிறதே?
பதில்: இது ஒரு வேடிக்கையான சூழ்நிலை. எங்களிடம் ஏதாவது புகாருடன் வரக்கூடிய ஒருவருக்கு மனநிறைவாக நாங்கள் செயல்பட்டோம் என்றால் அது அரசாங்கத்தை நிலைகுலையச்செய்ததாகிவிடும். நாங்கள் அரசாங்கத்திற்கு சாதகமாக நடந்து கொண்டால், புகார்தாரர்நிலைகுலைந்து போவார். போலீஸ்காரர்களாகிய நாங்கள் இப்படித்தான் இடையில் சிக்கியிருக்கிறோம்.
கேள்வி: என்கவுண்ட்டர் அதிகாரிகளில் பெரும்பாலோர் கீழடுக்கு சாதிகளிலிருந்து வந்தவர்கள். அவர்கள் இன்றைய அரசியல் அமைப்பில் பயன்படுத்தப்பட்டுவிட்டு பின்னர் கைவிடப்பட்டார்களா?
பதில்: ஆம், அவர்கள் எல்லோரும் போலீசில்தான் இருக்கிறார்கள். அதிகாரம் மிகுந்ததுறை இது.
மதவாதியாக காவல் அதிகாரி
கேள்வி: கலவரங்கள் மாநிலத்தைப் பாதித்தது எப்படி?
பதில்: நான் இங்கே 1998லிருந்து பணியில் இருந்து வருகிறேன். எண்ணற்ற கலவரங்களைப் பார்த்திருக்கிறேன். 1982, 1983, 1985, 1987 ஆகிய ஆண்டுகளிலும் கலவரங்களைப் பார்த்திருக்கிறேன். அயோத்தி சம்பவத்திற்குப் பிந்தைய 1992 கலவரத்தையும்பார்த்திருக்கிறேன். 2002ல் நிறைய முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு முன் முஸ்லிம்கள்தான் இந்துக்களைக்கொன்றார்கள். எனவே 2002ல் என்ன நடந்திருந்தாலும், அது இத்தனை ஆண்டு கால முஸ்லிம்களின் தாக்குதல்களுக்குப் பழி வாங்குவதாகவே இருந்தது. வெளி உலகில் இருப்பவர்கள்தான் கூச்சல் போட்டார்கள். இந்துக்கள் கொல்லப்பட்ட சூழ்நிலையை அவர்கள் பார்க்கவில்லை.
கேள்வி: நீங்கள் சொன்னபடி, தலித்தாகிய முன்னாள் அதிகாரி ராஜன் பிரியதர்சியை நான் சந்தித்தேன்.
பதில்: எல்லா அதிகாரிகளுடனும் நான் பணியாற்றியிருக்கிறேன். அவரைப் போல ஓர் அற்புதமான அதிகாரியாக என்னால் வேறு யாரையும் பார்க்க முடியவில்லை. எவருக்கும் வளைந்துகொடுக்காத நேர்மையான அதிகாரி அவர்.
கேள்வி: அவர் என்னுடன் பேசியபோது, தான் அனுசரித்துப்போக அரசாங்கம் விரும்பியதாகவும், ஆனால் தான் ஒருபோதும் அதற்குத் தயாராக இல்லை என்றும்கூறினார்...
பதில்: ஒருதடவை நீங்கள் அரசாங்கத்துடன் சமரசம் செய்துகொண்டு விட்டீர்கள் என்றால்,பின்னர் நீங்கள் எல்லாவற்றுடனும் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும்...
சாதியால் மறுக்கப்பட்ட பதவி உயர்வுகள்
கேள்வி: ஆனால் ஆட்சியாளர்கள் உங்களை ஆதரிக்கத்தானே செய்தார்கள்?
பதில்: இல்லவே இல்லை. நான் ஒரு தலித். ஆனால் பிராமணனைப்போல ஒவ்வொன்றை யும் என்னால் செய்ய முடியும். என் மதத்தைப் பற்றி அவர்களை விட எனக்கு அதிகமாகவே தெரியும்.ஆனால் ஜனங்கள் இதனை உணரவில்லை. ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தது என் தவறா?
கேள்வி: உரிய பதவி உயர்வுகள் உங்களுக்கு வழங்கப்படவில்லை, அதற்கு உங்கள் சாதிதான்காரணம் என்று சொல்லப்படுகிறதே.
பதில்:ஆம். எல்லா மாநிலங்களிலும் இருப்பது போலத்தான் இங்கேயும். பிராமணர்களோ சத்திரியர்களோ தங்களுடைய ஜூனியராக, தலித்தையோ, பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களை யோ வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
(தொடரும்)


Thursday, September 8, 2016

குஜராத் கோப்புகள் 9 அதிகாரப்பூர்வமற்ற நேர்காணலுக்கு ஒரு பாடம்


ராணா அய்யூப்
நான் மைக்கை சிங்காலுக்கு அறிமுகப்படுத்தினேன். அவனை அவர் பிரச்சனையின்றி ஏற்றுக்கொண்டதாகவே தோன்றியது. வெளிநாட்டவரின் ஆங்கில உச்சரிப்பில் அவரிடம் நாங்கள் வந்ததன் நோக்கத்தை விளக்கினேன். சிங்கால் அவ்வப்போது தலையை ஆட்டியபடி ஒவ்வொரு சொல்லையும் கவனித்துக் கேட்டார்.அவர் கவனத்தை மேலும் கவர்கிற எண்ணத்துடன், இருவருக்கும் தெரிந்த பெயர்களைப் பயன்படுத்த முயன்றேன். ‘உண்மையிலேயே சார், மாயா கோட்னானி மேடத்தை நாங்கள் சந்தித்தபோது அவர் உங்களைப் பற்றி மிக உயர்வாகச் சொன்னார்.
மாநிலத்தின் பிரகாசமான அதிகாரிகளில் நீங்களும் ஒருவர் என்றார்,’’ என்றேன். இது தேவையான விளைவைத் தந்தது. அவரது இறுக்கமானமுகம் தளர்ந்தது. அவருடைய சாதனைகளை நான் பாராட்டியபோது அவர் முகம் சிவந்தது. தன் பதவியே பறிபோய்விடுமோ என்ற சிக்கலான நிலைமை ஏற்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து வந்தவர் அவரைப் பாராட்டியது அவர் மனதிற்கு ஆறுதலாக இருந்திருக்கலாம்.
சாதி பற்றி ஒரு பேச்சு
எங்கள் உரையாடலில் சாதி அமைப்பு குறித்துப் பேச்சு வந்தது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் பிறந்து, சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் பற்றிப் பேசியபோது, சிங்கால், தன்னைச் செதுக்கிய ராஜன் பிரியதர்சி அப்படிப்பட்டவர்தான் என்று மிகுந்த மரியாதையுடன் குறிப்பிட்டார். ஏடிஎஸ் முன்னாள் தலைவரான ராஜன் பிரியதர்சி எங்கள் ஆவணப்படத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க முடியும் என்றார். ஓராண்டுக்கு முன் பணி ஓய்வு பெற்ற அவர் அகமதாபாத்தில்தான் தன் குடும்பத்துடன் வசிக்கிறார் என்று தெரிவித்தார். படத்தயாரிப்பு பற்றி நாங்கள் கூறியவற்றில் அவருக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும்; அவரைப் பார்ப்பதற்குத் தானே உதவுவதாகத் தெரிவித்தார்.
ஒரு மணி நேர உரையாடலுக்குப் பின், கடும் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஏடிஎஸ்தலைமையகத்திலிருந்து மைக்கும் நானும் அமைதியாக வெளியே வந்தோம். வழியில்நின்றுகொண்டிருந்த பாதுகாவலர் இப்போது எங்களுக்குப் புன்னகையுடன் விடைகொடுத்ததுடன், ஓர் ஆட்டோவையும் வரவழைத்து, எங்களை அதில் அனுப்பிவைத்தார். ஆட்டோ ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு, நாங்கள் ஒருவரை யொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். ‘‘நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது, இல்லையா,’’ என்று கேட்டான் மைக். ஆம் என்று தலையாட்டினேன்.
அடுத்த அழைப்பு
மறுபடியும் சிங்காலை சந்திப்பதற்கு சிறிது இடைவெளி விடத் தீர்மானித்தேன். அவரை அடிக்கடிபோன் மூலம் தொடர்பு கொண்டால் ஒருவேளை அவர் எரிச்சலடையக்கூடும், சந்தேகம்கூட ஏற்படக்கூடும். இதற்கிடையில் குஜராத் பற்றிய எங்களது ஆராய்ச்சி தொடர்பான பதிவு ஒன்றைத் தயாரித்து அவருக்கு அனுப்பினேன்.
அவருடன் நடத்திய உரையாடலில் கிடைத்த தகவல்களின்அடிப்படையிலேயே அதைத் தயாரித்திருந்தேன். அதில் அவர் மாநில வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன்பங்களித்து வருவதாகக் காட்டியிருந்தேன். அதைத் தொடர்ந்து அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் அழைப்பு விரைவில் வந்தது.இந்தத் தடவை நான் மட்டும் செல்லத் தீர்மானித்தேன்.
அரசியல்வாதிகளுடன் நடத்திய நேர்காணல்களில் நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம், இப்படிப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நம்மோடு பேச முன்வருகிறபோது வேறு யாரும் உடனிருப்பதை விரும்ப மாட்டார்கள் என்பது. இம்முறை கேட்க வேண்டிய கேள்விகளை முதல் தடவையை விட நன்றாகத் தயார் செய்துகொண்டு செல்லத் தீர்மானித்தேன். சென்ற சந்திப்பின்போது சிங்கால் நடந்துகொண்ட விதம், தற்போதைய சந்திப்பில் அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கறந்திட முடியும் என்ற நம்பிக்கையை அளித்திருந்தது.
குர்தாவுக்குள் மறைத்த கேமரா
அன்று மாலை எச்சரிக்கையாக, சின்னஞ்சிறு வீடியோ கேமராவை எனது குர்தாவிற்குள் மறைத்து வைத்தேன். குர்தாவின் மேல் பகுதியில் காஷ்மீரி பூ வேலைப்பாடு நெய்யப்பட்டிருந்தது. அதற்குள் ஒரு சிறிய துளை இருந்தது. கேமராவுடன் இணைக்கப்பட்ட ஒரு ஒயர் அந்தத் துளையின் வழியே கீழே சென்று ஒரு சிறிய பட்டனுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
நான் அந்தப் பட்டனை அழுத்தினால் கேமரா இயங்கும். அது இயங்குவதற்கு அடையாளமாக ஒரு சிவப்பு விளக்கு எரியும். இது ஒரு மிகவும் நுட்பமான உத்தி. அது வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நான் நன்றாகப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். கேமரா இயங்குவதை நிச்சயப்படுத்துவதற்காக என் பேனாவை அடிக்கடி நழுவ விடுவேன். அதனை எடுப்பதற்காகக் குனிவது போல, குர்தாவுக்குள் கேமரா சிவப்பு விளக்கு எரிவதை உறுதிப்படுத்திக் கொள்வேன். இம்முறை ஏடிஎஸ் அலுவலகப் பாதுகாவலர் புன்னகையுடன் வரவேற்றார். ‘‘மேடம், எப்போதுஷூட்டிங் ஆரம்பிக்கப் போகிறீர்கள்,’’ என்று கேட்டார்.
விரைவில் என்று பதிலளித்தேன்.சிங்காலின் அறைக்குள் நுழையும்போது அவர் உற்சாகத்துடன் ‘ஹலோ’ என்று வரவேற்பார்என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்பதை அவர் முகம் காட்டிற்று. தன் முன் கணினித் திரையில் ஓடிக்கொண்டிருந்த வீடியோவையும்அதன் கீழ் வந்த அடிக்குறிப்புகளையும் அவர் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் வசிக்கும் பகுதியில் உள்ள வம்பர்கள் சிலர் தயாரித்திருந்த வீடியோ அது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் கண்காணிப்பாளராக இருப்பவருக்கு அது ஒரு பெரிய பிரச்சனையேகிடையாது. ஆனால் அந்த அடிக்குறிப்புகள் அப்படிப்பட்டவையல்ல. காவல்துறையிலேயே உள்ள சக அதிகாரிகள் சிலர் அவருக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சில ரகசிய உள்ளடி வேலைகளில் இறங்கியிருந்தார்கள்.
அப்படித் தயாரிக்கப்பட்டிருந்த வீடியோ பதிவுதான் அது. சிறிது நேரம் கழித்து அதனை நிறுத்திய சிங்கால் தன்னை இயல்பாக மாற்றிக்கொண்டார். அவரைப் பற்றி நான் செய்திருந்த ஆராய்ச்சி அவருக்குப் பிடித்திருந்தது போலும். தன்னைப் பற்றி வேறு எவரிடமாவது விசாரித்தேனா, அவர்கள் என்ன சொன்னார்கள் என்று அறிவதில் ஆர்வமாக இருந்தார். உரையாடலைப் பதிவு செய்ய சரியான தருணம் அது. நாட்டிலேயே பயங்கரமானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டவர்களைச் சுட்டுக் கொன்றவருக்கு எதிரில் நான் அமர்ந்திருந்தேன்.
(தொடரும்)Wednesday, September 7, 2016

குஜராத் கோப்புகள்(8) வீர விருது பெற்றவரின் மேசையில்...


ராணா அய்யூப்
சிங்காலைச் சந்திக்கப் புறப்பட்டோம். அவர் சாதாரண போலீஸ் அதிகாரியல்ல; குஜராத்பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் குழு (ஏடிஎஸ்) கண்காணிப்பாளர், பல என்கவுண்ட்டர்களை நடத்தியவர் என்று அவரைச் சந்திப்பதன் முக்கியத்துவத்தை மைக்கிடம் கூறியிருந்தேன்.சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) புலனாய்வு தொடங்கியிருந்த பின்னணியில் சிங்காலின்ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட நேரம் அது. அவரும் தன்னை சந்திக்க வருகிறவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருந்தார். எஸ்ஐடி ஏற்கெனவே இரண்டு இளநிலைஅதிகாரிகளைக் கைது செய்திருந்தது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரால் ஓர் அப்பாவிப் பெண்ணை நாடகமாடிக் கொன்றுவிட்டார்கள் என்பதுதான் அவர்கள் மீதானகுற்றச்சாட்டு.
வளர்க்கப்பட்ட பகைமைச் சூழல்
இதற்கான பின்னணி குஜராத்திற்கு ஒன்றும் புதிதல்ல. மக்களிடையே ஒரு பகைமைச் சூழல் ஏற்படுத்தப்பட்டிருந்தது. நிலைமை மேலும் மோசமாகக்கூடும் என்பது தெளிவாகத் தெரிந்தது. முதலமைச்சர் நரேந்திர மோடி, குஜராத்தின் பெருமையை அந்நியர் படையெடுப்புகளிலிருந்து பாதுகாக்க வந்த இந்துத் தலைவராகப் பார்க்கப்பட்டார். கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்படுவது தொடங்கியது. உயரதிகாரிகளே கூட அந்த அக்கிரமங்களைச் செய்தார்கள் என்றாலும் புகார்கள் நிரூபிக்கப்படவில்லை. விசாரணைக் குழுக்கள் அனைத்தும் அதிகாரிகளின் செயல்பாடு அல்லது செயலின்மை குறித்துக் கடும் விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அடிமட்டத்தில் இருந்த சிலரைத் தவிர, அதிகார பீடத்தில் இருந்தவர்கள் பாதிப்பின்றி நீடித்தார்கள். இதனால் ஊக்கமடைந்தவர்களாக மேலும் மேலும் என்கவுண்ட்டர்களை நிகழ்த்தினார்கள்.குஜராத் என்கவுண்ட்டர்கள் நிகழ்த்தப்பட்ட வடிவங்கள் மிகக் கேவலமானவை. சமீர்கான் பர்தான், சாதிக் ஜமால், இஸ்ரத் ஜஹான், ஜாவீத், சொராபுதீன், துளசி ராம் பிரஜிபதி உள்ளிட்டோர்‘என்கவுண்ட்டர்களில்’ கொல்லப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தாலும் குஜராத் உயர்நீதிமன்றத்தாலும் நேரடியாக மேற்பார்வையிடப்பட்டன. மேலோட்டமாகப் பார்த்தால் கூட, அவை மிகுந்த கவனத்துடன் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொலைகளே என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். 19 வயது இளம் பெண் இஸ்ரத் ஜஹான் கொல்லப்பட்ட விதம், கொடூரச் செயல்களின் வரிசையில் முதலிடம் பிடிக்கத்தக்கது. அதனைச் செய்தவர் சிங்கால். வேறு சில என்கவுண்ட்டர்களிலும்அவருக்குப் பங்குண்டு என்றாலும், அவற்றில், அவர் புலனாய்வுக்குக் குறுக்கே நின்றார் என்ற அளவிலேயே குற்றச்சாட்டு இருந்தது.
வீர விருது
2002 அக்சர்தம் ஆலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலை மிகவும் வெற்றிகரமாகக் கையாண்டது உள்ளிட்ட அவரது வெற்றிகரமான நடவடிக்கைகள் அவருக்கு குஜராத் அரசின் வீரச்செயல் விருதினைப் பெற்றுத் தந்திருந்தன. அந்த வயதில் இத்தகைய அங்கீகாரத்தைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல.அகமதாபாத்தில் சாஹிபாக் பகுதியிலிருந்த ஏடிஎஸ் அலுவலகத்திற்கு மைக்கும் நானும் சென்றோம். கறாரான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டோம். பாதுகாப்புப் பணியிலிருந்தவர் எங்களைக் கண்டதும் குழப்பமும் வியப்பும் அடைந்தார் போலும். அரைப் பாவாடையும் பலவண்ணத் தலைப்பாகையும் அணிந்த ஒரு பெண், ஒரு வெளிநாட்டு இளைஞனோடு எதற்காக ஏடிஎஸ் பொறுப்பதிகாரியைச் சந்திக்க வந்திருக்கிறாள்?சில நிமிடங்களில் ஒரு காவலர் அங்கே வந்து, அந்தப் பாதுகாவலரிடம் குஜராத்தியில் கண்காணிப்பாளர் அனுமதியோடுதான் வந்திருக்கிறோம் என்பதைச் சொன்னார். மைக் வழக்கமான வசீகரப் புன்னகையுடன் காணப்பட்டான். அவனுடைய வயதில் வேறு யாராகஇருந்தாலும் அந்த சூழ்நிலையில் கொஞ்சம் நடுங்கிப் போயிருப்பார்கள். அவன் நல்ல புரிதலோடுதான் இருந்தான் என்றாலும், எங்கே தடுமாறிவிடுவானோ என்ற ஐயம் எனக்குக் கொஞ்சம் இருக்கவே செய்தது. எனினும், நான் வியக்கும் விதத்தில் சிறப்பாகச் செயல்பட்டான் அவன்.வரவேற்பறைக்குள் நுழைந்தபோது மற்ற சிந்தனைகள் மறைந்தன. சிங்காலைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த அதிகாரிகள் முதல் காவலர்கள் வரையிலான காவல்துறையினர் சீருடையின்றி இருந்தனர். விளையாட்டு ஷூ அணிந்திருந்தனர். இவை அவர்களை சாமானிய மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டின. டி.வி.யில் பாலிவுட் படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அது கோவிந்தா நடித்த படம். மைக் அதை ஆர்வத்துடன் கவனித்தான். காத்திருந்தவர்களில் சிலரையும்அந்தப் படம் ஈர்த்திருந்தது. ஒரு இளம் காவலர் மைக் அருகில் வந்து அமர்ந்துகொண்டு, காவலர்கள்பாணியில் ‘வணக்கம்’ வைத்தான். தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசினான். மைக் எந்த நாட்டுக்காரன், இங்கே என்ன சாப்பாடு பிடித்திருக்கிறது என்பது முதல் இரு நாடுகள் பற்றியதகவல்கள் வரையில் அவர்களுடைய உரையாடலில் இடம்பெற்றன. மைக் தன்னை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். கொஞ்சமும் நடுக்கமோ, மிகையான ஆர்வமோ அவனிடமிருந்து வெளிப்படவில்லை.
முன் தயாரிப்பு

அப்போது அங்கே வந்தார் ஆர்டர்லி. ‘மைதிலி தியாகி, ஐயா உங்களை அழைக்கிறார்’ என்றுகூறினார். சந்திப்பு நாடகத்தின் முதல் காட்சி தொடங்குகிறது. நாற்பதுகளின் முற்பகுதியில் இருந்தகிரிஷ் சிங்கால், நன்கு உடையணிந்துகொண்டு, புன்முறுவலுடன் பழகுவதற்கு இனியவராகவே காணப்பட்டார். அவரது கை விரல்களில் பாதி சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. தன் மடிக்கணினியில் ஏதோ ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தார். மேசையில் ஓஷோ புத்தகங்கள் இருந்தன. ‘நீங்கள் ஓஷோவைப் பின்பற்றுபவரா என்று இருக்கையில் உட்கார்ந்து கொண்டே அவரிடம் கேட்டேன். என்னுடைய டைரியை கவனமாக மேசை மீது வைத்தேன். ரகசியமாக வீடியோ கேமரா பொருத்தப்பட்ட டைரி அது. உணர்ச்சிவசப்படக்கூடியவரான சிங்கால், பேசுகிறபோது முக்கியமானது எதையாவது சொல்லிவிட்டால் பதிவு செய்யத் தவறிவிடக்கூடாது என்ற எண்ணத்தால் இந்த முன்னேற்பாட்டுடன்தான் வந்திருந்தேன்.(தொடரும்)

Tuesday, September 6, 2016

அமெரிக்காவின் அடி வருடியா இந்தியா? : பிரகாஷ் காரத்பிரகாஷ் காரத்


(கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு (எல்எஸ்ஏ) ஒப்பந்தம் என்பது அதில் கையெழுத்திடுகிற நாட்டின் ராணுவ வசதிகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள சட்டரீதியான அங்கீகாரத்தை அளிக்கிறது. அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதற்கான சேவை மற்றும் பொருள்களுக்கு ஒரு தொகையையும் அளிப்பதற்கு வகை செய்கிறது.)
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தமது அமெரிக்கப்பயணத்தின்போது, அந்நாட்டுடன் கடல்வழி மற்றும் வான்வழி ராணுவ நடவடிக்கைகளுக்காக ஒப்பந்தம் (Logistics Agreement) செய்து கொண்டிருப்பதானது இதுவரை இல்லாத ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஓர் அந்நிய ராணுவப் படை, அதுவும் ஓர் ஏகாதிபத்திய நாட்டின் மிகவும்வலுமிக்க ராணுவம், இப்போது இந்தியாவின் கடல்வழி மற்றும் வான்வழி தளங்களில் வந்து, தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ள வழி வகுத்துத்தரப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா, தன்னுடன் ராணுவக் கூட்டணி அல்லது நெருக்கமாக ராணுவ ஒத்துழைப்பு வைத்துக்கொண்டுள்ள நாடுகளுடன் இதுபோன்று கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தங்களை (LSA-Logistics Support Agreement) ஏற்படுத்திக் கொள்கிறது. இது, நேட்டோ அல்லாத நாடுகளைக் கையாள்வதற்காக அமெரிக்கா, ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தமாகும். உண்மையில் இது ‘நேட்டோ பரஸ்பர ஆதரவு சட்டத்தின்’ கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘கையகப்படுத்தல் மற்றும் பரஸ்பர சேவை ஒப்பந்தங்கள்’ (ACSA-Acquisition and Cross Service Agreements) என்பதன் மற்றொரு பெயரேயாகும். ஆசியாவில் பிலிப்பைன்ஸ் போன்றநாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. தெற்கு ஆசியாவில் இலங்கை சமீபத்தில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. பாகிஸ்தான் செய்து கொண்டிருந்த ஒப்பந்தம் 2012இல் காலாவதியாகிவிட்டது.
நமது ராணுவத்திற்கு விலை
கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு(எல்எஸ்ஏ) ஒப்பந்தம் என்பது அதில் கையெழுத்திடுகிற நாட்டின் ராணுவ வசதிகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள சட்டரீதியான அங்கீகாரத்தை அளிக்கிறது. அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதற்கான சேவை மற்றும் பொருள்களுக்கு ஒருதொகையையும் அளிப்பதற்கு வகை செய்கிறது. அமெரிக்கா தனது தாக்குதல்நடவடிக்கைகளை உலகின் பல பகுதிகளில் மேற்கொள்ள தனது சொந்த ராணுவதளங்களை மட்டுமே சார்ந்திருக்கவில்லை; இதுபோன்ற எல்எஸ்ஏ பாணிஒப்பந்தங்கள் மூலமாக உலகின் அனைத்துப்பகுதிகளிலும் பிற நாடுகளின் ராணுவங்களைப் பயன்படுத்தி மிக விரைந்துதாக்குதல் தொடுப்பதற்கான ஏற்பாட்டையும் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் இதுபோன்றதொரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள அமெரிக்கா வெகுநீண்டகாலமாகவே முயற்சித்து வந்தது. 2015 ஜூன் மாதத்தில் மேலும் பத்தாண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட்ட அமெரிக்கா - இந்தியா பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் (US-India Defence Framework Agreement) வரம்பெல்லை இதற்கு வகைசெய்கிறது. எல்எஸ்ஏ-இன் உண்மையான உள்நோக்கத்தை இந்தியாவில் மூடிமறைப்பதற்காக, ஒரு வித்தியாசமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கையெழுத்தாகி இருக்கிற ஒப்பந்தத்திற்கு கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் ((LEMOA-Logistics Exchange Memorandum of Agreement) என்று மேற்பூச்சாக ஒரு பெயரிடப்பட்டிருக்கிறது.
மக்களைக் குழப்பி, குளிர் காயும் நோக்கம்
இந்த ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கம் மக்களுக்குப் புரியாமல் குழப்பவேண்டும் என்று மோடி அரசு திட்டமிட்டேசெயல்படுகிறது. இரு நாடுகளின் ராணுவமும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய ஒரு முக்கியமான நடவடிக்கை இதுவாகும். இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஓர்அறிக்கையில் இது, நம்முடைய அதிகாரப்பூர்வமான துறைமுகங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல், கூட்டு ராணுவப்பயிற்சிகள் மற்றும் மனிதாபிமானமுறையிலான உதவிகள் மற்றும் பேரிடர்காலத்தில் தேவையான நிவாரண முயற்சிகளுக்கு உதவிடக்கூடிய விதத்திலான, வெறுமனே ஒரு ‘வசதி செய்துதரும் ஒப்பந்தம்’ மட்டுமே’’என்று கூறியிருக்கிறது.
ஆயினும் உலகம் முழுவதும், கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தங்களை அமெரிக்கா தன்னுடைய ராணுவத் தளங்களின் வலைப்பின்னலை விரிவாக கெட்டிப்படுத்திக்கொள்ளக்கூடிய விதத்தில்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.இத்தகைய கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தத்தின் மூலமாக, அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படை இந்திய ராணுவ வசதிகளை, தங்கள் விமானங்கள் மற்றும் கப்பல்களில் எரிபொருள்களை நிரப்பிக் கொள்ளவும், உபகரணங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் நேரடியாக கையாளும்.
தற்போது மோடி அரசாங்கம் அமெரிக்காவின் நீண்டகால சூழ்ச்சித் திட்டத்துடன் உடன்பாடு செய்துகொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் அவர்கள் எரிபொருள் நிரப்ப வேண்டும்அல்லது போர் விமானம் தரையிறங்கவேண்டும் எனக்கேட்டால். அதைத்சீர்தூக்கிப்பார்த்து கடல்வழி மற்றும்வான்வழி ஆதரவுநடவடிக்கைகள் அளிக்கப்படும் என்று மத்திய அரசின் தரப்பில் கூறப்பட்டிருப்பது வெறும் சம்பிரதாயமான ஒன்றேயாகும். இதுபோன்றதொரு ஒப்பந்தம் இதற்கு முன் இல்லாத சமயத்திலேயேகூட, இந்தியா, அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்கி, இந்திய ராணுவ தளங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்து வந்திருக்கிறது. 1991ல் இராக்கில் குண்டுகளைப் போட்டுவந்த அமெரிக்க விமானப்படை விமானங்கள் இந்திய விமானப்படைத் தளங்களில் எரிபொருள் நிரப்பிக்கொள்ள அப்போதைய சந்திரசேகர் அரசாங்கம் அனுமதித்தது.
2001இல் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பின், அமெரிக்கா, ஆப்கானிஸ்தானத்தில் தாக்குதலைத் தொடுக்கத் தீர்மானித்தசமயத்தில், அமெரிக்க ராணுவம் இந்திய ராணுவத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய், அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷுக்கு எழுதியிருந்தார். அந்த சமயத்தில் அமெரிக்கா, பாகிஸ்தானின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்தி வந்ததால் இந்தியாஉதவ வந்ததை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
எனவே, இன்றைக்கு மனோகர் பாரிக்கர் கையெழுத்திட்டுள்ள கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தம் என்பது பேரிடர் மற்றும் மனிதாபிமான நிவாரண உதவிநடவடிக்கைகளுக்கு மட்டுமானது அல்ல; அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன், தன்னுடைய ஆசிய -பசிபிக் ராணுவச் சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கு இந்தியாவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும். சீனா மற்றும் மத்திய ஆசியா உட்பட ஆசியா முழுவதும் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்கிக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளும். ஆசியாவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் மிகப் பெரிய அளவில் ராணுவப் படையைக் கொண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவிற்கு வாய்ப்பு கிடைத்திருப்பது என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை மாபெரும் ஆதாயமாகும்.
முழுமையான ராணுவக் கூட்டாளி
இந்தியாவை தனது மாபெரும் ராணுவக் கூட்டாளி என்று அமெரிக்கா நாமகரணம் சூட்டியிருப்பதைத் தொடர்ந்து மோடி அரசாங்கம் ரொம்பவும்தான் சிலிர்த்துப்போயிருக்கிறது. இந்தப் பட்டம்மோடி, வாஷிங்டனுக்குச் சென்றிருந்தபோது அளிக்கப்பட்டது. கடல்வழி மற்றும்வான்வழி ஆதரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம் அதனை மெய்ப்பித்திட இந்தியா இப்போது மிகவும் விருப்பத்துடன் காத்திருக்கிறது. இதன்மூலம் இந்தியா அமெரிக்கா வின் முழுமையான ராணுவக் கூட்டாளியாகவே மாறியிருக்கிறது.
சென்ற ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வந்திருந்தபோது கையெழுத்தான ஆசிய - பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டு தொலைநோக்கு அறிக்கை (Joint Vision Statement for the Asia Pacific and Indian Ocean region)யில் கூறப்பட்டிருந்த அமெரிக்கா - ஆசிய - பசிபிக் நீண்டகால ராணுவ சூழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இது மாறி இருக்கிறது,ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகியமூன்று நாடுகளுக்கு இடையே முத்தரப்புபாதுகாப்புக் கூட்டணி அமைத்துக்கொள்வதற்கு இந்தியா இணங்கி இருப்பதிலிருந்து, அமெரிக்காவின் ராணுவ சூழ்ச்சிக்கூட்டணியின் ஓர் அங்கமாக மாற இந்தியாவிருப்பம் தெரிவித்திருப்பது நன்கு தெரிகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தென்சீனக் கடலில் பயிற்சிக்காக இந்தியா கடற்படையின் நான்கு கப்பல்களை அனுப்பியிருந்தது. இது, இந்தியாவானது அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் சேர்ந்துசீனாவிற்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கையாகவே அடையாளப்படுத்தப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர், இந்தஒப்பந்தத்தை விமர்சிப்பவர்கள் ‘வேண்டுமென்றே குழப்புகிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். எல்எஸ்ஏ எனப்படும் கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தம் என்பது, இந்தியாவில் அமெரிக்க தளங்கள் நிறுவப்படுவதற்கானது அல்ல என்பதும், மாறாக இந்திய ராணுவத் தளங்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒன்று என்பதும் நம் அனைவருக்கும் நன்கு தெரியும். இதேபோல் இந்தியாவும் அமெரிக்காவின் ராணுவத்தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்வதும் வேடிக்கையான ஒன்று.
இந்தியக் கடற்படை கப்பல்கள் எதற்காக அமெரிக்க கடற்படைத் தளங்களான சாண்டியாகோ, குவாம் அல்லது ஒக்கினாவா ஆகிய இடங்களுக்குச் செல்லப் போகின்றன?இதனையொட்டி வேறு சில ஒப்பந்தங்களிலும் மோடி அரசாங்கம் கையெழுத்திட இருக்கிறது. தொலைத்தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்(CISMOA-Communication and Information Security Memorandum of Agreement) மற்றும் அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA-Basic Exchange and Cooperation Agreement) ஆகிய இரு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருக்கிறது. இப்போது இந்தியாவிற்கு ராணுவத்தளவாடங்களை பெரிய அளவிற்கு விற்பனை செய்து வருவது அமெரிக்காதான். இவ்விரண்டு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிவிட்டால், இந்திய - அமெரிக்கபாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் முழுமையாக செயல்படத் தொடங்கிவிடும்.
சமரசத்திற்குள்ளாகும் இறையாண்மை
கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதைத் தொடர்ந்து மோடி அரசாங்கம் நாட்டின்இறையாண்மையை சமரசத்திற்குள்ளாக்கி இருக்கிறது. இதுநாள்வரையிலும் இந்தியா எந்தவொரு நாட்டுடனும் ராணுவக் கூட்டணியை வைத்துக் கொள்ளாமல், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்து வந்தது.
இப்போது நாட்டின் நலன்களுக்கு மிகவும் அடிப்படையாக விளங்கும் சுயேச்சையான ராணுவத் தந்திரச் செயல்பாடுகளை, இந்த ஒப்பந்தத்தின் மூலம் மோடி அரசாங்கம் அமெரிக்காவின் காலடிகளில் சரணாகதி ஆக்கிவிட்டது.இப்படியாக, இந்தியாவின் அயல்துறைக் கொள்கையும், நீண்டகால ராணுவரீதியான பாதுகாப்புக் கண்ணோட்டமும் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுவிட்டன.
இது, இப்போது பிரதமர் மோடி வெனிசுலாவில் காரகாசில் செப்டம்பர் மூன்றாம்வாரத்தில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்கிற முடிவின் மூலம் தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது.அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் இதற்கு முன் இடைக்கால அரசின் பிரதமராக இருந்த சரண் சிங் மட்டும்தான் பங்கேற்காமல் இருந்தார்.
அதற்கு அடுத்து இப்போது அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்காத முதல் இந்தியப் பிரதமர் மோடிதான். இது தெரிவித்திடும் செய்தி மிகவும் தெளிவானது: இந்தியா என்பது இனிவருங்காலங்களில் அணிசேரா நாடல்ல, அது அமெரிக்காவின் அடிவருடியாக (subordinate ally) மாறி விட்டது என்பதே அந்த செய்தியாகும்.
(தமிழில்: ச.வீரமணி)குஜராத் கோப்புகள் 7 என் கவுண்ட்டர் அதிகாரியுடன் கிடைத்த அப்பாயின்ட்மென்ட்


ராணா அய்யூப்
மறுநாள் காலை நான் தொலைபேசியில் உரையாடத் திட்டமிட்டிருந்தவர் ஜி.எல். சிங்கால்.2004 ஜூன் 15ல் இஸ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரை, இரண்டு அதிகாரிகளோடுசேர்ந்து சுட்டுக்கொன்றவர் அவர். அந்த என்கவுண்ட்டர் தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் நியமித்திருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது விசாரணையை முடுக்கிவிட்டிருந்தது.என்கவுண்ட்டர் நடந்த மறுநாள் காலையில், காவல்துறை உயரதிகாரியும் பயங்கரவாத எதிர்ப்புநடவடிக்கைக் குழுவின் தலைவருமான டி.ஜி. வன்சாரா செய்தியாளர் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தார்.
இஸ்ரத் ஜஹான் பயங்கரவாத இயக்கமான லஸ்கர்-இ-தொய்பா அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவள், முதலமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்காகஅனுப்பப்பட்டவள் என்று முத்திரை குத்தப்பட்டது.வன்சாரா ஒரே நாளில் ஒரு ‘ஹீரோ’ நிலைக்கு உயர்த்தப்பட்டார். அவருடன் இணைந்து இந்தப்பெருமையைப் பெற்ற மற்ற உயரதிகாரிகள் என்.கே. அமின், தருண் பேரட், கிரிஷ் லக்ஷ்மன் சிங்கால்ஆகியோராவர்.
நாட்டை உலுக்கிய அறிக்கை
இஸ்ரத்தின் பெற்றோர் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள். உச்சநீதிமன்ற ஆணைப்படிகுஜராத் உயர்நீதிமன்றம் ஒரு நீதித்துறை குழுவை நியமித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி தமங் தலைமையிலான அந்தக் குழு 2008ல் அளித்த அறிக்கை நாட்டையே உலுக்கியது. "இஸ்ரத் ஜஹான்மீதான தாக்குதல் ஒரு போலி என்கவுண்ட்டர்" என்று கூறிய அந்த அறிக்கை, மேல் விசாரணைக்குப்பரிந்துரைத்தது. ஆனால் மாநில அரசு வழக்கைக் கிடப்பில் போட்டது.
இஸ்ரத் குடும்பத்தார் உயர்நீதிமன்றத்தைஅணுகினர். அதன் பின்னர்தான் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குழு அமைக்கப் பட்டது.2013ல் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்தியப் புலனாய்வுத் துறைக் குழு (சிபிஐ டீம்) புலனாய்வை மேற்கொண்டது. நடத்தப்பட்ட என்கவுண்ட்டர் போலியானது என்ற முடிவுக்கு வந்தசிபிஐ குழு, அதை நடத்திய உயரதிகாரிகளை குற்றம் சாட்டப்பட்டவர்களாகப் பட்டியலிட்டது. உச்சநீதிமன்றத்தின் கட்டளைப்படி அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) 2010ல் புலன் விசாரணையைத் தொடங்கியிருந்த நேரத்தில்தான் நான் சிங்காலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.சிங்கால் வீட்டில் தொலைபேசி ஒலித்தது. அவரே எடுத்துப் பேசினார்.
வெளிநாட்டவருக்கான ஆங்கிலத்தில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அப்பாயிண்ட்மென்ட் கேட்டேன். சிறிது நேரம்மவுனமாக இருந்த அவர், வேறொரு நாளில் தொடர்பு கொள்ளுமாறு சொல்லிவிட்டு முடித்துக்கொண்டார். என்னுடைய உண்மையான புலனாய்வை இவரிடமிருந்துதான் தொடங்கத் திட்டமிட்டிருந்தேன். அவரோ இப்படிச் சொல்லிவிட்டார். என்ன செய்வது?
அழுத்தத்தை மறக்கடித்த கலைக்கூடம்
காலைப் பத்திரிகைகளில் சிங்காலை எஸ்ஐடி கைது செய்வது தவிர்க்க முடியாதது என்பதுபோல் செய்தி வந்திருந்தது. இத்தகைய பதற்றமான நிலையில் சிங்கால் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வழிகளைத்தான் யோசித்துக்கொண்டு இருப்பாரேயன்றி, வெளிநாட்டிலிருந்து வந்துள்ள ஒரு வெளிநாட்டு சினிமாக்காரருக்கு பேட்டியளிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார் என்பதுபுரிந்தது.
என்னோடு வரவேண்டிய வேலை எதுவும் இல்லை என்று நான் சொன்னதில் மகிழ்ச்சியடைந்தமைக், விடுதியிலிருந்த கிரீன்லாந்து நாட்டுப் பெண்ணும், நாங்கள் பானி என்று அழைத்தவளுமாகிய தனது தோழியுடன் வெளியே கிளம்பினான்.அன்று மாலை நான் கேமரா கலைஞனான நண்பன் அஜய் அழைத்திருந்தபடி, கலைக்கூடத்தில்அவனுடைய நண்பரின் புகைப்படக் கண்காட்சிக்குச் சென்றேன். அஜய் என்னை ஒவ்வொருவருக்கும்அறிமுகப்படுத்தினான். அவர்கள் என்னிடம் ‘உங்கள் படத்திற்கு கேமராவை இயக்குவது யார்’,‘என்ன கேமரா பயன்படுத்துகிறீர்கள்’ என்று கேட்டார்கள். இத்தகைய கேள்விகளை எதிர்பார்த்தேசென்றிருந்ததால் எல்லோருக்கும் அமைதியாகப் பதிலளித்தேன்.
கல்லூரி மாணவர்கள் குழு ஒன்றும் வந்திருந்தது. ஒருவன் கிட்டார் வாசித்துக்கொண்டிருந்தான். சிலர் தனித்தனியாகவும் சிலர் இணைகளாகவும் அமர்ந்திருந்தார்கள். கலைக்கூடத்தில் அந்தநேரத்தில் நான் எனது புலனாய்வு, காவல்துறை அதிகாரிகள், என்னுடைய சினிமா முகமூடி,எனக்குள் ஏற்பட்டிருந்த ஒருவித உதறல்..... அனைத்தையும் மறந்தேன். நானும் கலைத்துறை மாணவர்களில் ஒருத்தியானேன்.
எதிர்பாரா அழைப்பு
எனது குடும்பத்தாருடன் சில நாட்களாக எதுவுமே பேசவில்லை என்ற நினைப்பு வந்தது.விடுதிக்குப் பக்கத்தில் இருந்த இணையத் தொடர்பு மையத்திலிருந்துதான், அதுவும் எப்போதாவதுதான், அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன்.
அமித் ஷா விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததிலிருந்தே அவர்களுக்கு என்னைப்பற்றிய கவலை கூடுதலாக இருந்தது.தனது வண்டியில் அழைத்து வந்த அஜய்யிடம், விடுதிக்கு அருகிலிருந்த வணிக வளாகத்தில்,சில பொருட்களை வாங்குவதற்காக இறக்கிவிடச் சொன்னேன். சில பொருள்களை வாங்கியபடி,அருகிலிருந்த பொதுத் தொலைபேசி நிலையத்திற்குள் சென்றேன். குடும்பத்தினருடன் தொடர்புகொள்ளப் பாதுகாப்பான இடம் அது.எனக்கு எப்போதும் ஊக்கமளிக்கும் அம்மாதான் முதலில் பேசினார்.
நான் விரைவில் திரும்பிவந்துவிட வேண்டுமென்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார். குடும்பத்தாருடன் கூட தொடர்புகொள்ள முடியாமல், இது என்ன வாழ்க்கை என்ற சிந்தனை எனக்கும் ஏற்படவே செய்தது.அடுத்த நாள் காலையில் மீண்டும் சிங்காலுக்கு, எதிர்பார்ப்பின்றி, போன் செய்தேன். இம்முறைஅவர் தன்னைச் சந்திக்க வரலாம் என்றார். நடக்குமோ நடக்காதோ என்று மிரட்டிக் கொண்டிருந்த என் புலனாய்வுப் பயணம் தொடங்கியேவிட்டது.
(தொடரும்)7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் அரசு ஊழியர் சங்க அமைப்புகள் வலியுறுத்தல்

7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்
அரசு ஊழியர் சங்க அமைப்புகள் வலியுறுத்தல்
புதுதில்லி. செப். 6-
மத்திய அரசு 7ஆவது ஊதியக்குழு அளித்திட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் படிகள் (allowances) தொடர்பான பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று அரசு ஊழியர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
மத்திய அரசு 7ஆவது ஊதியக்குழு கூறியிருந்த படிகள் தொடர்பாக ஒரு குழு அமைத்திருந்தது. அது சென்ற வியாழன் அன்று கூடியது. மத்திய அரசு நிதி (செலவினங்கள்) செயலாளர் தலைமை வகித்தார். மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
‘கூட்டம் துவங்கிய உடனேயே சங்கங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசு தான் உறுதி அளித்தபடி உயர்மட்டக்குழு அமைக்காததற்கு தங்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். ஜூலைமாதம் நடைபெற்ற கூட்டத்தின்போது மத்திய அமைச்சர்கள் குழு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பல்வேறு காரணிகள் குறித்து குழு அமைக்கப்படும் என்று அரசுத்தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆயினும் இதுநாள்வரையில் அவ்வாறு ஒரு குழு அமைக்கப்படவே இல்லை. ஊழியர் சங்கங்கள், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். 18 ஆயிரம் ரூபாய் என்று ஊதியக்குழு பரிந்துரைத்திருப்பதை அவர்கள் ஏற்க வில்லை.  
மேலும் ஊதியக்குழு படிகள் (allowances) தொடர்பாக அளித்துள்ள பரிந்துரைகளை 2016 ஜனவரி 1 முதல் அமல்படுத்திட உடனடியாகத் தீர்மானித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
வீட்டு வாடகைப்படி அடிப்படை சம்பளத்தில் 10 முதல் 30 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அவர்கள்  கோரியிருக்கிறார்கள். இது ஊழியர்கள் பணியாற்றும் நகரத்திற்கேற்ப அமைந்திட வேண்டும், மேலும் குழந்தைகளின் கல்விப்படி மூவாயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும், விடுதி மான்யத் தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும், இவ்வாறு வழங்கப்படும் படிகள் அனைத்திற்கும் வரி விலக்கு அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
குழந்தைகளுக்கான கல்விப் படிகளில் முதுகலை மற்றும் தொழிற்கல்விப் படிப்புகளும் சேர்க்கப்பட வேண்டும் என்றும், வடகிழக்குப் பிராந்தியத்தில் சிறப்பு பணிப்படி (special duty allowanhce) உயர்த்தப்பட வேண்டும் என்றும் கோருகின்றனர்.
நிலையான மருத்துவப் படி (fixed medical allowance) 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். கூடுதல்நேர பணிப் படி (overtime allowance) , சிறிய குடும்ப படி (small family allowance) மற்றும் உடைப்படி (dress allowance)  ஆகியவை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
ரத்து செய்யப்பட்டிருக்கிற பல்வேறு துறை படிகளும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
(ந,நி,) 


விசுவாசம் வானத்திலிருந்து வருவது அல்ல, அதற்குப் பேச்சுவார்த்தைகள் தேவை: சீத்தாராம் யெச்சூரி விளக்கம்


விசுவாசம் வானத்திலிருந்து வருவது அல்ல, அதற்குப் பேச்சுவார்த்தைகள் தேவை
சீத்தாராம் யெச்சூரி விளக்கம்
புதுதில்லி.செப்.6-
பிரதமர் மோடி காஷ்மீர் மக்கள் மத்தியில் விசுவாசத்தை உருவாக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். விசுவாசம் என்பது வானத்திலிருந்து வருவது அல்ல, அதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
காஷ்மீர் சென்று வந்த அனைத்துக்கட்சித் தூதுக்குழு குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் செய்தியாளர் சௌபத்ரா சட்டர்ஜி, சீத்தாராம் யெச்சூரியைப் பேட்டி கண்டு அது இன்றைய (6-9-2016) இதழில் வெளிவந்திருக்கிறது, அதன் விவரங்கள் வருமாறு:
கேள்வி: அனைத்துக் கட்சித் தூதுக்குழுவின் முக்கியமான சாதனைகள் என்ன?
சீத்தாராம் யெச்சூரி: இரண்டு மாதங்களுக்கு முன் நாங்கள் போகவில்லை. அதன்மூலம் பொன்னான நேரம் மற்றும் உயிர்களை நாம் பலிகொடுத்துள்ளோம். இதற்கு முன் நடைபெற்ற கூட்டங்களின் அறிக்கைகளின் அடிப்படையிலும், அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளின் அடிப்படையிலும்  பிரச்சனைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்கக்கூடிய விதத்தில் உண்மையான தயாரிப்புப் பணிகளை அரசாங்கம் செய்திடவில்லை. முக்கியமான பிரச்சனைகளைத் தெரிவு செய்திருந்தோமானால், மேலும் அர்த்தமுள்ளவகையில் மத்தியஸ்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும். இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்தர்கள் எவரும் இல்லை.
கேள்வி: ஹரியத் தலைவர் எஸ்ஏஎஸ் கிலானி தூதுக்குழுவினரை சந்திக்க மறுத்தது தோல்விதான்,  இல்லையா?
சீத்தாராம் யெச்சூரி: இல்லவே இல்லை. ஹரியத் தலைவர்கள் ஐவரில் நான்கு பேரை நாங்கள் சந்தித்திருக்கிறோம்.  காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, அரசியல் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு எதிராகத் தீர்மானித்திருப்பதாக எங்கள் கூட்டத்தின்போது ஹரியத் தலைவர்களில் ஒருவரான மீர்வாயிஸ் உமர் பரூக் எங்களிடம் கூறினார். அதற்கு நான் அவரிடம், உங்களுடன் நான் முழுமையாக ஒத்துப்போகிறேன். ஆனால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு உங்களுக்கு உதவுவதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம், என்று கூறினேன். கிலானி எங்களை சந்திக்கவில்லை. ஆனாலும், காஷ்மீர் மக்களிடம்,
இந்தியாவில் இயங்கும் அரசியல் கட்சிகளில் ஒரு பிரிவினர் உங்கள் வலியை நன்கு உணர்கிறோம்,என்றும், உங்களுடன் பேச விரும்புகிறோம் என்றும் எங்கள் செய்தியை தெரிவித்துவிட்டு வந்திருக்கிறோம்.
கேள்வி: காஷ்மீர் பிரச்சனையைக் கையாள்வதில் என்னவிதமான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்கிறீர்கள்?
சீத்தாராம் யெச்சூரி: காஷ்மீர் பிரச்சனையை ஒட்டுமொத்தமாக மறு ஆய்வு செய்திட வேண்டும். இந்தியாவில் எவ்வளவோ விஷயங்கள் மாறி இருக்கின்றன. காஷ்மீர் பிரச்சனையை ஆய்வுக்கு உட்படுத்தும் சமயத்தில் இவை அனைத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பொது வாக்கெடுப்பு போன்ற விஷயங்கள் கைவிடப்பட வேண்டும். முக்கியமாக, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு அரிக்கப்பட்டிருப்பது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அதனை மீளவும் சரி செய்திட வேண்டும். நம் பிரதமர் காஷ்மீர் மக்களிடையே விசுவாசத்தை உருவாக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஆனால் விசுவாசம் என்பது வானத்திலிருந்து வருவது அல்ல. அதனை காஷ்மீர் மக்களிடையே பேசுவதன் மூலமாகத்தான் உருவாக்க முடியும். அதேபோன்று, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளும் தொடர வேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்,

 (ச.வீரமணி)

Monday, September 5, 2016

அரசமைப்புச் சட்டத்தை மீறிய செயல்
ஹரியான சட்டமன்றப் பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் தொடக்க நாளன்று பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு சமண முனிவர் பிரசங்கம் செய்திருக்கிறார். இது அரசமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற நெறிமுறைகளை மீறிய, இதற்குமுன் நடைபெறாத செயலாகும்.
இவ்வாறு ஒரு சமண முனிவரான, ரத்தன் சகாகிரி, என்கிற நிர்வாண சாமியாரை  அழைத்து உரையாற்றச்  செய்திருப்பதன் மூலம், பாஜக முதல்வர் எம்.எல். கட்டார் அரசியலிலிருந்து மதத்தைத் தனியே பிரித்திட வேண்டும் என்ற அரசின்  நியதியான, மதச்சார்பற்ற குணாம்சத்தின் மூலாதாரத்தின்மீதே தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்.
ஆளுநரும், முதல்வரும் அமர்கின்ற இருக்கைகளுக்கும் மேலாக ஒரு மேடை அமைக்கப்பட்டு, அங்கிருந்து அந்த சமண நிர்வாண சாமியார் உரையாற்றி இருக்கிறார். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தின் கட்டளைப்படி செயல்படுபவர்களைவிடமதத்தலைவர் உயர்வானவர் என்று காட்டக்கூடிய விதத்தில் அவரது உயர்நிலை அமைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு உரைநிகழ்த்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சாமியார், ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள நபர் ஆவார்.  ஆர்எஸ்எஸ் அவரைக் கவுரவித்து, 2013 அக்டோபரில் ஜெய்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிறுவன நாள் கொண்டாட்டங்களின்போது  "தேசியத் துறவி" என்று பட்டம் வழங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஒரு மதத்தலைவர் சட்டமன்றக் கூட்டத்தொடரைத் துவக்கி வைத்திருப்பது தவறானது மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பதுடன், ரத்தன் சகர்ஜி பேசிய பேச்சின் சாராம்சமும் பல்வேறு விதங்களிலும் ஆட்சேபணைக்குரியவைகளாகும்.  அவர் பேசும்போது,  "அரசியலில் மதம் தூய்மைப்படுத்துவதற்குத்தானேயொழிய, காவிமயப்படுத்துவதற்கு அல்ல," என்று கூறியிருப்பதன் மூலம், அரசியலுடன் மதத்தை கலக்க வேண்டியதன் அவசியத்தைப் போதித்திருக்கிறார். மேலும், தர்மம் என்பது கணவன் என்றும், அரசியல் என்பது மனைவி என்றும் கூறி, மனைவியின் கடமை கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதேயாகும் என்றும்,  கூறி  பெண்கள் குறித்த ஆணாதிக்க மனோபாவத்தையும்  வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் ஒரு சமணமதத்துறவி என்பது இங்கே பிரச்சனை அல்ல. எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர் எந்தவிதமான ஆன்மீகத் தலைவராக இருந்தாலும், நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களுக்குள் வந்து தங்கள் கருத்துக்களைக் கூற அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அனுமதி கிடையாது. அந்த சமண முனி பேச்சைத் துவங்குவதற்கு முன் காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய லோக் தள் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவரை வரவேற்றிருப்பதும் அரசியல் கட்சிகளின் மத்தியில் மதச்சார்பின்மை மாண்புகள் எந்த அளவிற்கு அரிக்கப்பட்டுவிட்டன என்பதற்கு மிகவும் மோசமான எடுத்துக்காட்டாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹரியானா மாநில செயலாளர் மட்டுமே அரசியலில் மதத்தைக் கலந்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இது அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளை மீறிய செயல் என்றும்  பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மதபோதனை மேற்கொள்வதற்கு சட்டமன்றக் கூட்டத்தொடர் இதற்குமுன்னெப்போதும் அனுமதிக்கப்பட்டது கிடையாது.  அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்  கொள்கை சட்டமன்றப் பேரவையின் சபாநாயகராலும், முதலமைச்சராலும் உயர்த்திப்பிடிக்கப்பட்டாக வேண்டும். ஏனெனில் இவர்கள் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள். இவ்வாறு சட்டமன்றத்தில் மத போதனை செய்திட இவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் இவர்கள் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தினை மீறிய செயலை இவர்கள் புரிந்திருக்கிறார்கள்.
இந்தியா என்பது இந்து ராஷ்ட்ரம் என்கிற ஆர்எஸ்எஸ்-இன் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் காலில் போட்டு மிதிப்பதற்கு. அரசமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி புரிவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ள பாஜகவை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக வரம்புமீறி நடந்து கொண்டிருக்கிற ஹரியானா முதலமைச்சர் பதில் சொல்லியாக வேண்டும்.
(தமிழில்: ச. வீரமணி)

காஷ்மீர் சென்றுள்ள அனைத்துக் கட்சித் தூதுக்குழு அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்தது


காஷ்மீர் சென்றுள்ள அனைத்துக் கட்சித் தூதுக்குழு
அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்தது
புதுதில்லி/ஸ்ரீநகர், செப். 5-
காஷ்மீர் சென்றுள்ள அனைத்துக் கட்சித் தூதுக்குழுவினர் அனைத்துத்தரப்பு அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் பல்வேறுவிதமானவர்களையும் சந்தித்தனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
காஷ்மீர் சென்றுள்ள முப்பது உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சித் தூதுக்குழு ஸ்ரீநகரில் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களையும், சிவில் சமூகப் பிரமுகர்கள், பிரஜைகள், ஆசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் பலரையும் சந்தித்தது. நாங்கள் ஆளுநர் என்.என். வோராவை மாலையில் சந்தித்தோம். அவர்கள் அனைவருமே எங்களிடம் மாநிலத்தில் நிலவும் பல்வேறுவிதமான சூழ்நிலைகள் குறித்தும் தங்கள் கருத்துக்களையும் எங்களிடம் விவரித்தார்கள்.
ஐக்கிய ஜனதா தளத்தைச் சார்ந்த சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சார்ந்த ஜேபி யாதவ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த து. ராஜா மற்றும் நான் மாநிலத்தில் இயங்கும் அனைத்துவிதமான அரசியல் சக்திகளுடனும் பேச்சுவார்த்தையைத் தொடங்கிட வேண்டும் என்று தீர்மானித்தோம்.  அதன் ஒரு பகுதியாக ஐந்து ஹரியத் தலைவர்களைச் சந்திக்கச் சென்றோம். அவர்களின் நான்கு பேர், யாசின் மாலிக், பேராசிரியர் அப்துல் கனி பட், மிர்வாய்ஸ் ஒமர் பரூக் மற்றும் சபீர் ஷா எங்களைச் சந்தித்தனர். ஆயினும் அவர்கள் எங்களுடன் அரசியல் பிரச்சனைகளை விவாதிக்க மறுத்துவிட்டார்கள். அனைத்துக் கட்சித் தூதுக்குழுவினரிடம் அவ்வாறு விவாதிக்கக்கூடாது என்று  ஹரியத் கூட்டாக தீர்மானித்திருப்பதாக எங்களிடம் தெரிவித்தார்கள்.
நாங்கள், காஷ்மீர் மக்களுக்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவும், அவர்களின் துன்ப துயரங்களில் பங்குகொள்வதற்காகவும், அதற்கு முற்றுப்புள்ளி காண வேண்டும் என்பதற்காகவும் வந்திருக்கிறோம் என்று அவர்களிடம் கூறினோம்.
மேலும் நாங்கள், இதனை பரஸ்பரம் அரசியல் பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே நடந்திடும் என்றும், இந்தக் கணத்தில் இல்லாவிட்டாலும் பிறிதொருமுறை பேச முன்வர வேண்டும் என்றும் அனைத்துத்தரப்பினரிடமும் தெரிவித்தோம்.
முதலில் பேசி இப்போதுள்ள இப்போதுள்ள பிரச்சனைக்கு தீர்வுகாண முயலுவது முக்கியம் என்றும், பின்னர் பெரிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதை நோக்கி முன்னேறுவோம் என்றும் அவர்களிடம் கூறினோம்.
சையது அலி ஷா கிலானி வீட்டிற்கு நாங்கள் சென்றிருந்தபோது, அவர் எங்களை சந்திக்க வில்லை. ஆனால், அவர், ஹரியத் பேசக்கூடாது என்று தீர்மானித்திருப்பதாக எங்களிடம் கூறினார்.
இவ்வாறு அனைத்துத்தரப்பைச் சேர்ந்தவர்களிடமும் எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறோம். ஏனெனில் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வுகாண முடியும் என்று மாநிலத்தில் உள்ள அனைத்துத்தரப்பினரிடமும் கோரிக்கைகளை வைத்துள்ளோம்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
(ந,நி.)