Friday, September 2, 2016

இப்போதும் காஷ்மீர் மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை


 (ஆகஸ்ட் 5 அன்று புட்காமைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உமர் சூசுப் பெல்லட்
குண்டுத் தாக்குதலில் இடது கண் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் காட்சி)

நான் ஐஸ்கிரீம் சாப்பிட்டு ரொம்ப நாட்களாயிற்று,’ என்று ஐந்து வயதேயான அஃப்சா கூறினான். அவர்களுடைய வீட்டிற்கு வெளியே பெல்லட் துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததால், அவன் தன் அம்மாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருந்தான். உள்ளூர் மக்களுக்கு எதிராக துணை ராணுவப் படையினர் தங்கள் தாக்குதலை மூர்க்கமாகத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சமயத்தில் மக்கள் தங்கள் பணிகளை மாலை 6 மணிக்கெல்லாம் முடித்துக் கொள்வார்கள். 6 மணிக்கு மேல் மின் விளக்குகளையும் அணைத்து விடுவார்கள். இருட்டிலேயே ஒருவருக்கொருவர் கிசுகிசு குரலில் பேசிக் கொள்வார்கள்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி ஜூலை 8 அன்று கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் கொதிநிலையில் இருந்து வந்தது.
ஊரடங்கு உத்தரவு 51 நாட்களுக்குப் பின்னர் ஆகஸ்ட் 29 அன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. காஷ்மீரின் ஒட்டுமொத்த வரலாற்றில் இவ்வாறு நீண்ட நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது இதுதான் முதல் முறையாகும். இந்தத் தடவை ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சி என்பது தலைநகருக்கு வெகு தொலைவில் உள்ள குக்கிராமங்களிலும் நடந்திருக்கிறது. முன்பெல்லாம் கிளர்ச்சி குறித்து அம்மக்கள் காதால் கேட்பதுதான். இப்போதுதான் அவர்களும் நேரடியாகப் பங்கேற்றிருக்கிறார்கள்.
இந்தியா, பாகிஸ்தான், ஹூரியத்
ஊரடங்கு உத்தரவு கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தபோதிலும், அவ்வப்போது சில இடங்களில் அது தளர்த்தப்பட அனுமதிக்கப்படும். ஹூரியத் தலைமையின் முன்மொழிவிற்கிணங்க அது மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஒவ்வொரு நாளும், மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அதன்பிறகு, கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் திறந்திருக்கும். ஆனாலும், திடீரென்று இந்திய துணை ராணுவப் படையினரின் கொடி அணி வகுப்பு மேற்கொள்ளப்பட்டு, அதனைத் தொடர்ந்து தாக்குதல்களும் மேற்கொள்ளப்படும். துணை ராணுவத்தினர் கண்ணாடி ஜன்னல்களை எல்லாம் அடித்து நொறுக்கி, மக்களை நோக்கி திட்டிக்கொண்டே செல்வார்கள். அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அனைத்துக் கடைகளின் ஷட்டர்களும் இறக்கி, கடைகள் மூடப்பட்டுவிடும். வீதிகளில் மயான அமைதி மீண்டும் தொடங்கிவிடும். சில சந்துகளிலிருந்து திடீரென்று விடுதலை முழக்கங்கள் எழும். துணை ராணுவத்தினரையும், மீண்டும் ஆத்திரமூட்டும் செயல்களில் இறங்குவார்கள். துணை ராணுவத்தினரும் நேரடியாக துப்பாக்கியால் சுடுவார்கள். வீடுகள் அனைத்தும் இருட்டாகிவிடும். இருட்டறைகளில் உள்ள மக்கள் தங்களுடைய மொபைல் போன் வெளிச்சத்தில்தான் இயங்கிக் கொண்டிருப்பார்கள். மத்திய துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு சத்தமும், அவர்கள் கடைகளின் ஷட்டர்களில் குண்டாந்தடியால் தட்டிக்கொண்டே செல்வதும் இரவு முழுவதும் தொடரும். இவ்வாறு மக்களின் அமைதியின்மைக்கு முடிவே இல்லாமல் இருந்தது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சமயத்தில் காஷ்மீரில் சுமார் 6,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. காஷ்மீர் மக்களில் பெரும்பாலானவர்கள், நடந்து வரும் சம்பவங்களுக்கு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையுமே குறை கூறினார்கள். இந்த நெருக்கடிக்கு ஹூரியத் தலைமையையும் அவர்கள் குறைகூறினார்கள்.
ஸ்ரீநகரில் மிகவும் புகழ்பெற்ற மருத்துவராக செயல்படும் டாக்டர் டார் என்பவர், நிலைமைகள் குறித்து மிகவும் நேர்மையாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். அவர், ஆவேசமடைந்த சில இளைஞர்கள் பாகிஸ்தான் கொடியைக் காண்பித்தது என்பது காஷ்மீர் கலாச்சாரத்திற்கே இழுக்கு என்றார். காஷ்மீரில் உள்ள பலரும் இதேபோன்ற கருத்துக்களையே கொண்டிருந்தார்கள்.
பிரச்சனைக்கு முக்கியக் காரணம், புர்ஹான் வானி கொல்லப்பட்டதுதான். அவரை அவ்வாறு கொல்லாமல் கைது செய்திருந்தார்கள் என்றால் இந்த அளவுக்கு பிரச்சனை வந்திருக்காது என்று ஸ்டேட் பேங்க் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் தன் பெயரைப் போட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் இதனைத் தெரிவித்தார்.
காஷ்மீர் பிரச்சனை கொழுந்துவிட்டெரிவதற்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே காரணம் என்றும் தங்கள் சொந்த நலன்களுக்காக இப்பிரச்சனையை கொதி நிலையில் இவ்விரு நாடுகளும் வைத்திருக்கின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.
தூக்கமும் இல்லை 
அமைதியும் இல்லை
ஊரடங்கு உத்தரவு சமயத்தில் மனித உரிமை மீறல்களும் ஏராளமாக நடந்திருக்கின்றன. பெல்லட் குண்டுகளை வீசுவதில் மிகவும் பிரசித்திபெற்ற சிஆர்பிஎப்யியைச் சேர்ந்த ஒருவர், தனக்கு மிகவும் அலுத்துவிட்டதாகத் தெரிவித்தார். இதன் காரணமாக தூக்கமும் இல்லை, அமைதியும் இல்லை, மாறாக பயம்தான் இருக்கிறது. பெல்லட் குண்டுகள் கொண்ட துப்பாக்கிகளை தரையில்தான் சுட வேண்டும் என்றும் அது அங்கிருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்று கும்பலைத் தாக்கும் என்றும் சொல்லப்பட்டாலும், உண்மையில் பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் அவ்வாறு சொல்லவில்லை.
காஷ்மீரில் உள்ள மக்கள், முதலில் நகரிலிருந்து துணை ராணுவப்படையினர் வெளியேற வேண்டும் என்று விரும்புகின்றார்கள். இவர்கள் வெளியேறிவிட்டால், கல்லெறிபவர்கள் குறி வைப்பதற்கு ஆட்கள் இல்லாமல் போய் விடும் என்றார்கள். நடந்துள்ள சம்பவங்கள் இளம் தலைமுறையினரிடையே இந்தியாவிற்கு எதிராக வெறுப்பையே ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாபாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது காஷ்மீர் இளைஞர்களில் அதிகமானவர்கள் பாகிஸ்தானைத்தான் ஆதரித்தார்கள். இந்திய அரசாங்கத்திற்கு எதிராகத் தங்களிடம் இருக்கும் கோபத்தை இவர்கள் அப்படித்தான் காட்டினார்கள்.
பள்ளிக்குழந்தைகள் கூட நெருக்கடி குறித்து விவாதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் விடுதலை முழக்கம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய எதிர்ப்பு உணர்வு மேலோங்கி இருக்கிறது. உள்ளூரைச் சேர்ந்த வேலையில்லா இளைஞன் ஒருவர், கிளர்ச்சிகளில் வழக்கமாகப் பங்கேற்பவர், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நாட்டில் வாழ்வதைவிட சாவது மேல் என்று கூறினார்.
ஆயினும், காஷ்மீரில் உள்ள பலர் ஓர் அமைதித் தீர்வு ஏற்படும், இயல்பு வாழ்க்கைத் திரும்பிவிடும் என்று இப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
ஷோம் பாசு
(நன்றி: தி ஒயர், இணைய இதழ்)
(
தமிழில்: . வீரமணி)



No comments: