Tuesday, July 2, 2019

ஆசிரியர் பணியிடங்களுக்கான சட்டமுன்வடிவு துரோணரின் மனோபாவத்தின்கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது இனியும் நாங்கள் ஏகலைவன்களாக இருக்கமாட்டோம் மக்களவையில் ஆ.ராசா பேச்சு



ஆசிரியர் பணியிடங்களுக்கான சட்டமுன்வடிவு
துரோணரின் மனோபாவத்தின்கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது
இனியும் நாங்கள் ஏகலைவன்களாக இருக்கமாட்டோம்
மக்களவையில் ஆ.ராசா பேச்சு
புதுதில்லி, ஜூலை 2-
இந்தச் சட்டமுன்வடிவு துரோணரின் மனோபாவத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனை நாங்கள் ஏற்க முடியாது. இனியும் நாங்கள் ஏகலைவன்களாக இருக்கமாட்டோம் என்று மக்களவை திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசினார்.
2019ஆம் ஆண்டு மத்தியக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு) சட்டமுன்வடிவு திங்கள் அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இதன்மீதான விவாதத்தில் பங்கேற்று திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசியதாவது:

இந்தச் சட்டமுன்வடிவில் ஒரு பகுதியை ஆதரிக்கிறேன். இதற்குக் காரணம்  பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியிருக்கிறவர்கள் சம்பந்தமாகவும் திமுகவின் கொள்கையில் ஒரு சிலவற்றை இது கூறுவதால் இதன் ஒரு பகுதியை ஆதரிக்கிறேன். எனினும், இந்தச் சட்டமுன்வடிவு பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்தது தொடர்பாக மேல்முறையீடுகள் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவைகளில் உள்ளதால், அவற்றில் தீர்ப்பு வரும்வரை நாங்கள் இதனை எதிர்க்கிறோம்.
இந்தச் சட்டமுன்வடிவு ஒன்று தெரிவுக்குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும் அல்லது இது இரு பகுதிகளாகப் பிரிக்கப்படவேண்டும். முதல் பகுதியில், இந்தச்சட்டமுன்வடிவில் கூறியுள்ளபடி, சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.  இது ஏன்? அதற்கான காரணத்தை விளக்குகிறேன்.
சென்ற மக்களவையில் இது நிறைவேற்றப்பட்டபோது நாங்கள் அதனை பகுதியாக இல்லை.  ஆனாலும், இந்தச் சட்டமுன்வடிவானது, பழைய அரசமைப்புத்திருத்தச் சட்டமுன்வடிவுகளின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். இது தொடர்பாக வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் இருப்பதால் இவற்றின்மீது சிலவற்றைக் கூறுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
இந்தச் சட்டமுன்வடிவின் நோக்கங்களும், காரணங்களும் என்பதன் கீழ் பத்து சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டமுன்வடிவு என்ன? அது இரு பகுதிகளைக் கொண்டது. அந்தச் சட்டமுன்வடிவின் நோக்கங்களும், காரணங்களும் கூறுவதாவது: தற்சமயம், பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினர் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதிலிருந்தும், பொதுத்துறை வேலைகளிலும் தங்கள் பொருளாதார நலிந்த பிரிவின்காரணமாக  ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அந்தச் சட்டமுன்வடிவின் இரண்டாவது அம்சம்: அரசமைப்புச் சட்டத்தின் 46ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றும் விதத்தில், பொருளாதாரரீதியாக நலிவடைந்தவர்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசாங்கம் மற்றும் பொது வேலைவாய்ப்புகளிலும் நியாயமானதொரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு இரு காரணங்கள் கூறப்பட்டிருக்கிறது. முதலாவது, பொருளாதாரரீதியாக ஏழைகளுக்கு போதிய வாய்ப்பு இல்லை. இரண்டாவது அரசமைப்புச்சட்டத்தின் 46ஆவது பிரிவு இவ்வாறு சட்டத்திருத்தம் கொண்டுவர வகைசெய்கிறது. எனவே இந்தச் சட்டமுன்வடிவு கொண்டுவந்ததாகக் கூறப்பட்டது.
இட ஒதுக்கீடு ஒன்றும் புதிதல்ல
மாண்புமிகு உறுப்பினர்களே, நம் நாட்டில் இட ஒதுக்கீடு என்பது ஒன்றும் புதிதல்ல. 2,500 ஆண்டுகளுக்கு முன்பே அது இங்கே இடம் பெற்றிருக்கிறது. அது எப்படி என்று ஒருவர் ஆச்சர்யப்படக்கூடும். அப்போதிருந்த இடஒதுக்கீடு என்பது ஒருவிதமான மனிதாபிமானமற்ற ஒன்று. ஜனநாயகபூர்பமற்ற ஒன்று. நான் இதனை மேலும் விளக்குகிறேன்.
சமூகம் நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள். இவர்களிலும் வராதவர்கள் சாதியற்ற, தலித்துகள். நாட்டின் அனைத்துத் தொழில்களும் மேற்கண்ட நான்கு வர்ணத்தாராலும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அது ஒருவிதமான இட ஒதுக்கீடாகும். அந்த இடஒதுக்கீடு மனிதகுலத்திற்கு எதிரானது, மனிதாபிமானமற்றது மற்றும் ஜனநாயகபூர்வமற்றதாகும். (anti-human, inhuman and undemocratic)
இப்போது, நம் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் நான் என்ன கூறுகிறோம்? இந்திய மக்களாகிய நாம் இந்தியாவிற்கு என்று ஒரு இறையாண்மைகொண்ட சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை நிறுவிக்கொண்டிருக்கிறோம், என்று கூறுகிறோம்.  இவ்வாறு ஓர் அரசமைப்புச்சட்டத்தை நமக்கு நாமே உருவாக்கிக்கொண்டபின்பு நாம் ஏற்படுத்தியுள்ள இடஒதுக்கீடு என்பது, மனிதாபிமானமிக்கதும், ஜனநாயகபூர்வமானதுமாகும்.  
எனவேதான் இடஒதுக்கீடு என்பது நமக்கு ஒன்றும் புதிய ஒன்று அல்ல என்று கூறுகிறேன். ஒரே வித்தியாசம், முன்பிருந்தது மனிதாபிமானமற்றது, ஜனநாயகவிரோதமானது. இப்போதுள்ளது மனிதாபிமானத்துடன் ஜனநாயக பூர்வமானது.
திமுக உறுப்பினன் என்ற முறையில் இப்புதிய இட ஒதுக்கீடு கொண்டுவரப்படுவதற்கு எங்கள் தலைவர்கள் டாக்டர் கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் முதலானவர்கள் முன்னோடிகளாக இருந்தார்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமைகொள்கிறேன். அரசமைப்புச்சட்டம் 1951இல் சட்டமாவதற்கு முன்பே அவர்கள் இதனை வலியுறுத்தி வந்தார்கள்.
அரசமைப்புச்சட்டத்திற்கான முதல் திருத்தம், 1951இல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் திராவிட இயக்கத்தின் முன்முயற்சி காரணமாக அத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கும் முன்னர் 1927இல் எங்கள் திராவிடர்களின் அரசாங்கம் அமைந்திருந்த சமயத்தில் சமூக ரீதியாகவும், கல்விரீதியாகவும் பின்தங்கி இருந்தவர்களுக்காகவும், முஸ்லீம்கள் உட்பட தலித்துகளுக்காகவும் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. வேறெவரும் இதனைக் கனவுகூட காணவில்லை. எனவே இந்தவகையில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.
மாண்புமிகு தலைவர் அவர்களே, அரசமைப்புச்சட்டத்தின் செல்லுபடிநிலை (validity) உயர்த்திப்பிடிக்கப்பட வேண்டும்.
நான்  ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதைப்போல இந்தச்சட்டமுன்வடிவு இரு பகுதிகளைக் கொண்டது. முதலாவது, பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினர்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பது. இரண்டாவது, அரசமைப்புச் சட்டத்தின் 46ஆவது பிரிவு தொர்பானது.
அரசமைப்புச்சட்டத்தின் 46ஆவது பிரிவு என்ன கூறுகிறது? அது, அரசு, மக்களில் நலிவடைந்த பிரிவினரின், குறிப்பாக, தலித்துகள், பழங்குடியினரின், கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்திட சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்களை சமூக அநீதியிலிருந்தும், சுரண்டலின் அனைத்துவிதமான வடிவங்களிலிருந்தும் பாதுகாத்திட வேண்டும், என்றும் கூறுகிறது.  
இந்தப்பிரிவில் ‘பொருளாதார நலன்கள்’ என்கிற சொற்றொடர், புனையப்பட்டுள்ளது. அதேசமயத்தில் அரசமைப்புச்சட்டத்தின் 15 மற்றும் 16 ஆகியவை சமூக ரீதியாகவும் கல்விரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர் (socially and educationally backward classes) என்று கூறி அவர்கள் கல்வி நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிறது. அரசமைப்புச் சட்டம் ‘வகுப்பு’ (class) என்கிற அதே சமயத்தில் இப்போது இங்கே கொண்டுவரப்பட்டிருக்கிற சட்டமுன்வடிவு ‘பிரிவு’ (section) என்கிறது. வகுப்பிற்கும் பிரிவிற்கும் வித்தியாசம் உண்டு.
எனவே, சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது புதிதாக பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினர் என்று சேர்த்திருக்கிறார்கள்.
நாங்கள் பொருள்தாரரீதியாக நலிவடைந்தபிரிவினருக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட வேண்டும், அதிக கடன் வழங்கிட வேண்டும். பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கான கல்விக் கட்டணங்கள் முழுமையாக விரிவுபடுத்தப்பட வேண்டும்.
இப்போது பத்து சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்திருப்பதன் மூலம், தலித்/பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களான ஒடுக்கப்பட்டவர்களுக்கும், அடக்கப்பட்டவர்களுக்கும்  அளிக்கப்பட்டிருந்த சமூக நீதிக்குள் அத்துமீறல் நடந்திருப்பதாக நான் கருதுகிறேன்.
இவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் இட ஒதுக்கீடு என்பது கருணையின் அடிப்படையிலானதல்ல. அது அவர்களின் உரிமை. இது பிரிட்டிஷ் அரசாங்கக் காலத்திலேயே கொண்வரப்பட்டு நிலைநிறுத்தப்பட்ட ஒன்று. 1880களிலிருந்தே இது உருவாகி வளர்ந்து வந்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களை நான் உங்களுக்கு அளித்திட முடியும். பிற்பட்ட வகுப்பினர் என்கிற சொற்றொடர் 1880களிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. பின்னர் 1985இல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பள்ளிக்கூடங்களில் கல்வி உதவித்தொகை அளிக்க வகை செய்யப்பட்டது. இவர்களில் பெரும்பகுதியினர் தீண்டத்தகாதவர்கள். இது சென்னை ராஜதானியில் நடந்தது. 1917இல் கோலாபூர் மகாராஜா மாண்டேகு செம்ஸ்போர்ட் நலனில் அக்கறை காட்டினார். அதில் பொருளாதாரரீதியாக பிற்படுத்தப்பட்டவர் என்ற சொற்றொடர் கிடையாது.
1918இல் மைசூர் மகாராஜா பொது நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களை சேர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய ஒரு குழுவை அமைத்தார். 1920இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒரு கூட்டு தெரிவுக் குழு அந்த அறிக்கையை ஆய்வு செய்து, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாரின் முன்னேற்றத்திற்கு கல்வியின் அவசியம் குறித்து அழுத்தம் தந்தது. 1921இல் பிராமணர்கள் தவிர இதர அனைத்து வகுப்பாரும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று லண்டனில் கூடிய தேர்வு வாரியம் வரையறை செய்தது.
1928இல் ஹார்டாக் குழு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றால் கல்விரீதியாக பிற்படுத்தப்பட்ட சாதியினர் அல்லது வகுப்பினர் என்றும் இதில் அடக்கப்பட்ட வகுப்பினர், தொல் பழங்குடியினர், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் கிரிமினல் பழங்குடியினரும் அடங்குவர் என்று வரையறுத்தது.
அதன்பின் எண்ணற்ற குழுக்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்தும் தலித்துகள் பழங்குடியினர் குறித்தும் பல்வேறு வரையறைகளை  அளித்துள்ளன. 1947க்குப்பின்னர் அரசியல் நிர்ணயசபை விவாதம் தொடங்கியபோது, என்ன நடந்தது? சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்று டி.டி.கிருஷ்ணமாச்சாரி கூறினார். இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் டாக்டர் அம்பேத்கர், இரண்டு அம்சங்கள் தொடர்பாக வரைவுக் குழு தன் பரிந்துரைகளை அளித்திட வேண்டும் என்றார். முதலாவதாக,  அனைவருக்குமான வாய்ப்புகளில் சமத்துவம் வேண்டும். இரண்டாவதாக, இதுநாள்வரையிலும் நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத இனத்தினருக்கு ஆதரவைக ஏதேனும் செய்தாக வேண்டும். டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு டாக்டர் அம்பேத்கர் இவ்வாறு பதிலளித்தார். ஏன் இவை அனைத்தையும் சுருக்கமாக நான் இங்கே குறிப்பிடுகிறேன்? ஏனெனில் இதன் ஆணிவேர் 1880இலேயே ஊன்றப்பட்டுவிட்டது. முதல் திருத்தம் 1951இல் மேற்கொள்ளப்பட்டது. சென்ற மக்களவைக் கூட்டத்தொடர் வரையிலும், பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்திலிருந்தே, எங்குமே, பொருளாதாரரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பார், அரசமைப்புச் சட்டத்திலோ அல்லது அடக்கப்பட்ட வகுப்பாருக்கான இட ஒதுக்கீட்டுக்கான  அரசாங்கத்தின் ஆணை எதிலுமோ  இடம் பெறவில்லை.
திடீரெனறு, அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை நீங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள். இதில் பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்று அளித்திருக்கிறீர்கள். அதனால்தான் இதனை தெரிவுக்குழுவிற்கு அனுப்பிட வேண்டும் என்கிறோம்.
இதுதொடர்பான மேல்முறையீடுகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன. அதுவரையிலும், 10 சதவீத இடஒதுக்கீடு கிடப்பில் போடப்பட வேண்டும்.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவந்திருக்கிறீர்கள். இது தொடர்பாக என்ன ஆய்வு மேற்கொண்டீர்கள்? அரசமைப்புச் சட்டத்தின் 14ஆவது பிரிவின்கீழ் இதனை நியாயப்படுத்த முடியுமா? இது தவறான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா (abuse) அல்லது தகாதமுறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா (misuse) என நான் அறிய விரும்புகிறேன்.
முந்தைய ஐமுகூ அரசாங்கம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.ஆர். சின்ஹோ (Sinho) தலைமையில் ஓர் ஆணையம் அமைத்து,  பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கு அரசமைப்புச்சட்டத்தின்கீழ்  10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு செய்திடுமாறு கேட்டுக்கொண்டது. மேற்படி ஆணையம், மாநிலங்கள் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு நலத் திட்டங்களை மட்டும் விரிவுபடுத்திட பரிந்துரைத்திருந்தது.
இந்தியச் சூழ்நிலையில் இடஒதுக்கீடு என்பது சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பாரை மேலே தூக்கிவிடுவதற்கானதோர் ஆக்கபூர்வமான நடவடிக்கையாகும்.  பொருளாதாரரீதியான பிற்போக்கு நிலை, கல்வி நிறுவனங்களிலும் வேலைகளிலும் இட ஒதுக்கீட்டுக்கான அளவீடாக (criteria) இருக்க முடியாது. இவ்வாறு ஐமுகூ அரசாங்கம் நியமித்த ஆணையம் கூறியிருக்கிறது.
அரசாங்கம் ஓர் ஆணையத்தை அமைக்கிறது. அந்த ஆணையம் மிகவும் தெளிவாக ஓர் அறிக்கையை மிகவும் ஆணித்தரமாக அளிக்கிறது. அந்த அறிக்கையை நீங்கள் தள்ளுபடி செய்கிறீர்கள். அதற்கு முற்றிலும் விரோதமானமுறையில் சதியாலோசனையுடன் ஒரு சட்டமுன்வடிவைக் கொண்டுவருகிறீர்கள். சதியாலோசனை என்று நான் கூறுவதற்குக் காரணம் இந்தச் சட்டமுன்வடிவின் நகல்களை சுற்றுக்கே விடவில்லை. நாடாளுமன்றத்த்ன் அலுவல் ஆய்வுப் பட்டியலிலும் இது இடம் பெறவில்லை. அவ்வாறு பட்டியலிடாமலேயே, அரசமைப்புத் திருத்தச் சட்டமுன்வடிவைக் கொண்டுவருவதென்பது அரசுத்தரப்பில் வெட்கக்கேடான விஷயமாகும்.
அரசமைப்புத் திருத்தச்சட்டம் அலுவல் ஆய்வுப் பட்டியலில் (List of Business) பட்டியலிடப்படாமல், முதல் தடவையாக அரங்கேறி இருக்கிறது. இவ்வாறு இந்தச் சட்டமுன்வடிவை இந்த அரசு கொண்டுவந்திருக்கும் விதம் மிகவும் மர்மமாய் (fishy) மாறி இருக்கிறது. அதனால்தான் இதனைத் தெரிவுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தச் சட்டமுன்வடிவை இந்த அரசு கொண்டுவந்துள்ள விதம் சந்தேகத்திற்கு மிகவும் இடமளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது.
எனவே, மேலே கூறிய காரணங்களின் அடிப்படையில், பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கு  10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை எதிர்க்கிறேன்.
இனியும் நாங்கள் ஏகலைவன்களாகவே இருப்போம் என்று நினைக்காதீர்கள்.  துரோணரின் மனோபாவத்தை நீங்கள் கொண்டிருப்பது மாற்றப்பட வேண்டும். இனியும் நாங்கள் ஏகலைவன்கள் இல்லை என்பதை நாங்கள் நிரூபிப்போம்.
இவ்வாறு ஆ.ராசா பேசினார்.
(ந.நி.)