Friday, September 2, 2016

மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி


மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் மாபெரும்   வெற்றி
கொல்கத்தா, செப், 2-
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் அடக்குமுறை அச்சுறுத்தல்களை மீறி வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது,
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு வேலைநிறுத்தத்திற்கு எதிராக ஓர் யுத்தத்தையே பிரகடனம் செய்திருந்தது. மாநில அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மூன்று நாட்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என்றும் மிரட்டியிருந்தது. வேலைநிறுத்தத்திற்கு எதிராக ஊடகங்களிலும், தெருக்களிலும் அளவுக்குமீறி விளம்பரங்களும் செய்திருந்தது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய்  பொதுப் பணத்தை விரயம் செய்தது. வேலைநிறுத்த நாளன்று அனைத்துக் கடைகளும் திறந்திருக்க வேண்டும் என்று கடைக்காரர்களை திரிணாமுல் குண்டர்கள் கடந்த ஒருவாரமாகவே மிரட்டி வந்தார்கள். இன்றையதினம் கடையைத் திறக்கவில்லை என்றால் இனி எப்போதுமே கடையைத் திறக்க முடியாது என்றும் மிரட்டினார்கள். இதேபோன்றே போக்குவரத்துத் தொழிலாளர்களும், தனியார் பேருந்து, டாக்சி, ஆட்டோ தொழிலாளர்களும் மிரட்டப்பட்டார்கள்.ஹால்டியாவில் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக சூர்யகாந்த் மிஷ்ரா தலைமையேற்று வந்த பேரணி மீது  போலீசாரே தாக்குதல் நடத்தினர்.  மெடினிபூரில் 1ஆம் தேதி நடந்த பேரணியில் சிஐடியு தலைவரும் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினருமான தீபக் சர்க்கார், மாவட்ட செயலர் தருண் ராய் மற்றும் பலர் தாக்குதலுக்கு உள்ளாகி காயங்கள் அடைந்துள்ளார்கள். இதேபோன்று மாநிலத்தின் வேறு பல இடங்களிலும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
கொல்கத்தாவில் சூர்யகாந்த் மிஷ்ரா, பிமன் பாசு மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.  பல இடங்களில் பேரணிகளைத் தடுத்து நிறுத்திட போலீசார் முயன்றுள்ளனர். மாநிலம் முழுதும் 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். பல இடங்களில் போலீசாரின் அத்துமீறல் நடவடிக்கைகளைப் பார்த்தபின்னர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காது இருந்த தொழிலாளர்கள்கூட வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டுள்ளனர். 
 இவை அனைத்தையும் மீறி வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றது, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைத்து இடங்களிலும் செங்கொடிகளுடன் காணப்பட்டார்கள்.  வங்கி, இன்சூரன்ஸ், மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முழுமையாக ஸ்தம்பித்தன. சணல் ஆலைகளிலும் வேலை நிறுத்தம் முழு வெற்றி பெற்றது.
தேயிலை எஸ்டேட்டுகளும் முழுமையாக மூடப்பட்டன. பீடித் தொழிற்சாலை மூடப்பட்டது.
சில இடங்களில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றபோதிலும் வேலை எதுவும் நடைபெறவில்லை. கொல்கத்தா துறைமுகத்தில் 100 சதவீதம் வேலைநிறுத்தம் வெற்றி பெற்றிருக்கிறது. போலீசாரின் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் ஓடின. ஆயினும் பயணிகள் இல்லை. தனியார் பேருந்துகள் ஆரம்பத்தில் ஓடியபோதும் பயணிகள் யாரும் வராததால் பின்னர் அவை  விலக்கிக் கொள்ளப்பட்டன. 
‘கொல்கத்தா, ஜாதவ்பூர், பிரசிடென்சி பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டிருந்தன.

No comments: