Sunday, September 4, 2016


இன்று ஆசிரியர் தினம்

மிகவும் வறிய குடும்பத்தில் வறிய நிலையில் பிறந்த நான், தீக்கதிர் செய்தியாளராக, மொழிபெயர்ப்பாளராக கடந்த சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறேன் என்றால் அதற்கு முன்மாதிரியாக இருந்த சில ஆசிரியர்கள்தான் காரணம்.

நான் மிகவும் சாதாரண ஓர் உயர்தொடக்கப்பள்ளியில் படித்திருந்தபோதிலும், அங்கே பணியாற்றிய ஆசிரியர்கள் நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே வாய்ப்பாடு 1 முதல் 15 வரை (அப்போது மொத்தம் 16 வாய்ப்பாடு படிக்க வேண்டும்.) மனனமாக ஒப்புவிக்க வைத்தவர் ஓர் ஆசிரியர்.
ஆறாம் வகுப்பு படிக்கும்போதே (ஆங்கிலம் அப்போது ஆறாம் வகுப்பில்தான் ஆரம்பம்) ஆங்கில இலக்கணத்தை என் மூளையில் அற்புதமாகப் பதிவேற்றம் செய்தவர் ஆசிரியர் மறைந்தவிட்ட சி. முனியமுத்து. அதனைத் தொடர்ந்து அப்பள்ளியின்  தலைமை ஆசிரியர் சாமினாதன் மற்றும் மேலாளர் ராமதாஸ் ஆகியோர்.
பின்னர் ஒன்பதாம் வகுப்பிலிருந்து தஞ்சை தூயபேதுரு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது பள்ளி முதல்வராக இருந்த (எங்கள் பள்ளியில் மட்டும்தான் அப்போது முதல்வர்) ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பதை ஒரு கலையாகவே சொல்லிக்கொடுத்த, எஸ். ஆர். பாண்டியன் அவர்கள். கணிதத்தை வெகு அற்புதமாக நடத்திய சுந்தரய்யா பிலிப், ஆர். மோசஸ் சேவியர் ஆகியோர், தமிழில் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்கள் மத்தியிலும் இலக்கணக் குறிப்பில் 20க்கு 20 எடுக்க வைத்த மும்மொழி (தமிழ், இந்தி, ஆங்கிலம்)  வித்தகர் மகாலிங்க சர்மா இவர்கள் இல்லையேல் இந்த அளவிற்கு என்னால் உயர்ந்திருக்க முடியாது.
அடுத்த சுருக்கெழுத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தி, உறுதுணையாக இருந்த ஆசிரியத் தந்தை பி. டென்னிஸ் மற்றும் நான் நீதிமன்றத்தில் பணியாற்றிய சமயத்தில் எனக்குத் தலைமை எழுத்தராக வந்த முன்னாள் சுருக்கெழுத்தர் ராமன் ஆகியோர்.
இவர்கள் அனைவருக்கும்,
இதழியில் துறையில் எப்படிச் செயல்பட வேண்டும் என்று போதித்த ஆசிரியர் கே.முத்தையா, ஆசிரியர் வி. பரமேஸ்வரன் மற்றும் தற்போதைய ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோருக்கும்,
இவர்கள் வழியில் இன்றைக்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்

ச.வீரமணி.

No comments: