Showing posts with label Prakash karat. Show all posts
Showing posts with label Prakash karat. Show all posts

Thursday, August 8, 2019

ஜம்மு-காஷ்மீர் சிதைக்கப்பட்டிருத்தல்: ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித்தத்துவத்தின் மீதான எதேச்சாதிகாரத் தாக்குதல்




-பிரகாஷ் காரத்
மோடி அரசாங்கம், அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராகவும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும் மின்னல்வேகத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. மோடி-அமித்ஷா ஆகிய இரட்டையரின் பெரும் ஆதரவுடன் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு அறுத்தெரியப்பட்டு, அதன் துணை ஷரத்தாக இருந்த 35-ஏ பிரிவு செல்லாததாக்கப்பட்டிருக்கிறது. அம்மாநிலத்தை ஒழித்துக்கட்டியிருப்பதன் மூலமும் அதனை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியவிதத்தில் இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியிருப்பதன் மூலமும் அவர்கள் மிகவும் நாணமற்றமுறையில் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள்.
இவை அனைத்தும், ஜம்மு-காஷ்மீர் மக்களை அடைத்து வைத்துவிட்டு, வலுக்கட்டாயமாக, மிகவும் வஞ்சமான முறையில் செய்யப்பட்டிருக்கின்றன. அங்கே குடியரசுத்தலைவர் ஆணை, அரசமைப்புச் சட்ட 370ஆவது பிரிவை நீக்குவது தொடர்பான தீர்மானங்களும், சட்டமுன்வடிவுகளும் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சின்னாபின்னமாகப் பிரித்திருப்பதும் – ஆகிய அனைத்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது மிகவும் சூழ்ச்சியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு மோசடியாகும்.
இதுவரையிலும் இந்திய ஒன்றியத்தில் 29 மாநிலங்கள் இருந்தன. இப்போது ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் இந்த எண்ணிக்கை 28ஆகக் குறைந்துவிட்டது. இத்தகைய நிகழ்வு, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாக ஒன்று.  பாஜக அரசாங்கம், இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தின் 3ஆவது பிரிவை மீறியிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவானது,  அரசமைப்புச் சட்டத்தின் ஓர் அடிப்படைக் கூறாகும். இது, முன்னமே இருக்கிற ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றவோ அல்லது புதியதாக உருவாக்கவோ வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களை அறிந்துகொள்ளாமல், செய்திட முடியாது. இவ்வாறு அம்மாநிலத்தின் உரிமைகளில் கூச்சநாச்சமற்ற முறையில் தாக்குதல் தொடுத்திருப்பதையும், அதன்மூலம் கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைத் திருப்பதையும் இதற்குமுன் நாம் பார்த்ததே கிடையாது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்திடும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு, அரசியல் நிர்ணய சபையால் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவானது, இந்திய ஒன்றியத்தில் உள்ள இதர மாநிலங்களிலிருந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வித்தியாசமான முறையில் சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. அதன்படி அம்மாநிலமே தனக்கான அரசமைப்புச் சட்டத்தைத் தன்னுடைய அரசியல் நிர்ணயசபை மூலமாகத் தானே இயற்றிக்கொள்ளும்.  இதன்மூலமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கும், அதன் சட்டமன்றத்திற்கும் விரிவான அளவில் சுயாட்சி வழங்கப்பட்டிருந்தது.  அவற்றின்படி இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் தங்கள் மாநிலத்திற்கு ஏற்புடையதா என்று அவர்கள் தீர்மானித்துக் கொள்ள முடியும்.
அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின் பின்னணி
சுதந்திரத்திற்கு முன் மன்னராட்சியின் கீழிருந்த ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சுதந்திரத்திற்குப்பின் இப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள காஷ்மீரையும் உள்ளடக்கியதாக இருந்தது. அப்போது அம்மாநிலத்தில் மகாராஜாவாக இருந்த ஹரிசிங் தன் மாநிலத்தை, இந்தியாவுடன் இணைப்பதற்கு விரும்ப வில்லை. அவர் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைத் தனித்தே ஒரு சுதந்திர நாடாகவே வைத்திருக்க விரும்பினார். எனவே, 1947 ஆகஸ்ட் 15 அன்று இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அப்போது, ஷேக் அப்துல்லா தலைமையில் இயங்கிவந்த தேசிய மாநாட்டுக் கட்சி, நிலப்பிரபுத்துவ மன்னராட்சிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தது. இது, அப்போது மன்னர் சமஸ்தானங்களில் நடைபெற்றுவந்த நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தது.
அந்த சமயத்தில் பாகிஸ்தானிலிருந்து பலர் ஊடுருவி வந்தபோது, அதிலும் பிரதானமாக வட மேற்கு முன்னணி மாகாணத்திலிருந்த பதன்கள் ஸ்ரீநகர் எல்லைக்கு வந்தடைந்த போதுதான், மகாராஜா காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத் திட ஒப்புக்கொண்டார். அதன்பின்னர் அத்தகையதொரு ஒப்பந்தம் 1947 அக்டோபர் 26 அன்று கையெழுத்தானது. காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்த மக்கள், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமையில் அணிதிரண்டு, ஊடுருவியவர் களுக்கு எதிராகப் போராடினார்கள். இந்திய ராணுவம், விமானம் வழியே ஸ்ரீநகருக்குள் இறங்கி, ஊடுருவியவர்களை விரட்டி அடித்தது.
இந்தப் பின்னணியில்தான், அரசமைப்புச் சட்டத்தின் வரைவை உருவாக்கிக் கொண்டிருந்த அரசியல் நிர்ணயசபை, அதில் 370ஆவது பிரிவையும் உருவாக்கி இணைத்தது. 370ஆவது பிரிவு, இந்திய அரசுக்கும் காஷ்மீர் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே உருவான உடன்படிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. காஷ்மீரிகள் (Kashmiriyat) என்கிற தங்கள் சொந்த அடையாளங்களுடனேயே இந்திய ஒன்றியத்தில் வாழ்வதற்கான காஷ்மீர் மக்களின் அபிலாசைகளை அது உள்ளடக்கி இருந்தது.
இந்திய நாட்டிற்கு, இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், ஒரு நாடு மத அடிப்படையில் இரண்டாகத் துண்டாடப்பட்ட சமயத்தில், ஒன்று முஸ்லீம் நாடாகவும் மற்றொன்று மதச்சார்பற்ற நாடாகவும் துண்டாடப்பட்டசமயத்தில், பெரும்பான்மையினர் முஸ்லீம்களாக உள்ள ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், முஸ்லீம் நாடான பாகிஸ்தானுடன் இணைவதை நிராகரித்துவிட்டு, மதச்சார்பற்ற இந்தியாவுடன் இணைந்ததேயாகும். நாடு பிளவுண்டபோது, வட மேற்கு இந்தியா கலவரங்களால் பாதிக்கப்பட்ட சமயத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு அமைதி மற்றும் மதநல்லிணக்கத்தின் புகலிடமாகத் திகழ்ந்தது.
370ஆவது பிரிவு படிப்படியாக சீர்குலைக்கப்பட்டது
காஷ்மீர் மக்களுக்கு 370ஆவது பிரிவின்கீழ் அளித்த உறுதிமொழியிலிருந்து ஆட்சியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நழுவியதே காஷ்மீர் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமாகும். 1953க்குப்பின் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசாங்கங்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவின்கீழ்  அளிக்கப்பட்டிருந்த சுயாட்சியை அரித்துத் தேய்ப்பதற்கான நடவடிக்கைகளில் படிப்படியாக இறங்கின. காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சுயாட்சியை மறுப்பதும், மத்தியத்துவத்தை நோக்கிக் காயை நகர்த்துவதற்கான நடவடிக்கைகளும் 60களிலும், 70களிலும் 80களிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. அம்மாநிலத்தின் சுயாட்சியின் பெரும்பாலான அம்சங்களை ஒழித்துக்கட்டக்கூடிய விதத்தில் 370ஆவது பிரிவு படிப்படியாகச் சீர்குலைக்கப்பட்டது. 1954இல் ஜம்மு-காஷ்மீருக்கு என்று தனி அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபின்னர், 2010 வரையிலும் 42 உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்து அம்மாநிலத்தில் தலையிட்டிருக்கிறது. இவை, 370ஆவது பிரிவு ஏற்படுத்தப்பட்ட சமயத்தில் இருந்த காஷ்மீர் நிலைமையிலிருந்து மிகவும் விரிவான அளவிற்கு மத்திய ஆட்சியாளர்களின் தலையீட்டை அதிகப்படுத்தியது. மத்திய ஆட்சியாளர்கள் அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவின் உண்மையான சாரத்தை எப்படியெல்லாம் உருக்குலைத்துச் சிதைத்து வந்திருக்கிறார்கள் என்பதை சட்ட வல்லுநர் ஏ.ஜி. நூரனி அவர்கள் மிகவும் செம்மையாக ஆவணப்படுத்தி இருக்கிறார். இயற்றப்பட்ட 97 சட்டங்களில், 94 சட்டங்கள் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கும் பிரயோகிக்கக் கூடியவைகளாகும்.
அந்நியப்படுதலும் தீவிரவாதம் தலைதூக்குதலும்
காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சி அரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கே ஜனநாயகமும் ஜனநாயக உரிமைகளும் படிப்படியாக நசுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டன. தேர்தல்கள் மத்திய ஆட்சியாளர்களின் ஆசிர்வாதத்துடன் வெளிப்படையாகவே மோசடியாக நடத்தப்பட்டன. இதனை 1987 தேர்தலில் அப்பட்டமாகவே காண முடிந்தது.   இந்தப் பின்னணியில்தான் அங்கே மக்கள் அந்நியப்படுவதற்கான அடையாளங்கள் வளர்ந்தன. இது பலரை தீவிரவாதத்தின் பக்கமும், விடுதலை (‘Azadi’) என்னும் முழக்கத்துடன் ஆயுதப் போராட்டம் மேற்கொள்வதற்கும் தள்ளியது. இவ்வாறு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி உணர்வை, இஸ்புல் முஜாஹிதீன் போன்ற பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய சக்திகளும், பின்னர் மிகவும் தீவிரவாத இயக்கங்களான ஜைய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத குழுக்களும் பயன்படுத்திக் கொள்ளத் துவங்கின.
ஆரம்ப காலத்திலிருந்தே, மன்னராட்சிக்கு எதிராக தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையில் நடைபெற்ற இயக்கத்திற்கு எதிராகவே இந்து வகுப்புவாத சக்திகள் இருந்தன.  ஜனசங்கத்திற்கு முன்பிருந்த பிரஜா பரிஷத், உண்மையில், மகாராஜாவை ஆதரித்து வந்தது. ஜன சங்கமும், இந்து மகாசபையும் 370ஆவது பிரிவையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு எவ்விதமான சுயாட்சி அளிப்பதையும் முழுமையாக எதிர்த்து வந்தன. இந்துத்துவா சித்தாந்தத்தின் கீழ் இயங்கிடும் ஆர்எஸ்எஸ் ஆதரவு ஜன சங்கமும் பின்னர் பாஜகவும் 370ஆவது பிரிவை உறுதியாக எதிர்த்தே வந்தன.  அவர்களுடைய சித்தாந்தம் என்பது வலிமையான மத்தியத்துவப்படுத்தப்பட்ட இந்தியா என்பதேயாகும். மேலும், காஷ்மீர் மக்கள் மீது அவர்கள் பகைமை கொள்வதற்கு மற்றுமொரு முக்கியகாரணம், அப்பகுதி முஸ்லீம்கள் ஆதிக்கத்தின்கீழ் உள்ள பகுதியாக இருப்பதுமாகும்.
ஜம்மு-காஷ்மீர் சிதைக்கப்பட்டது இந்துத்துவாவின் சூழ்ச்சியே
 எல்லைகளுக்கு அப்பாலிருக்கின்ற இஸ்லாமிய ஆட்சியாளர்கள் விரும்புவதைப்போலவே, இந்துத்துவா வாதிகளும், ஆர்எஸ்எஸ்-உம், மத அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரித்திடவே விரும்பி இருக்கிறார்கள்.  அதாவது, இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஜம்முவைத் தனியாகவும், முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் காஷ்மீர் பள்ளத்தாக்கைத் தனியாகவும், புத்திஸ்டுகள் சற்றே பெரும்பான்மையுடன் இருக்கின்ற லடாக் பகுதியைத் தனியாகவும் பிரிக்கவே விரும்பினார்கள். இம்மூன்று பிரிவினரும் சேர்ந்து ஒன்றாக இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆட்சியாளர்களுக்கு வெறுக்கத்தக்க ஒன்றாகவே இருந்து வந்தது.
ஆர்எஸ்எஸ்-பாஜகவின் கூற்றுப்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கு என்பது பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் நன்கு வளர்வதற்கான மண் என்றே நம்பின. ஏனெனில் அங்கே உள்ள மக்களின் மதச் சேர்மானம் அப்படி இருப்பதாக அவை கருதின. அவர்களிடம் ஊறிப்போயிருக்கின்ற முஸ்லீம் எதிர்ப்பு கண்ணோட்டமானது, காஷ்மீர் மக்களுக்கு எவ்விதமான ஜனநாயக உரிமைகளையும் அளிப்பதற்கு எதிரான விதத்திலேயே அமைந்திருந்தது. 370ஆவது பிரிவை ரத்து செய்வதை அவர்கள் நியாயப்படுத்தியதற்குக் காரணம், அதன்பின்னர் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களைத் தங்களுடைய ராணுவத்தின் மூலம் நசுக்கிவிடலாம் என்பதேயாகும்.  
 ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி-அமித் ஷா இரட்டையரைப் பொறுத்தவரை, காஷ்மீர் என்பது அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், அங்குள்ள மக்களோ முஸ்லீம்களாக இருப்பதால் அந்நியர்களாகக் கருதப்பட வேண்டியவர்களாவார்கள்.
ஆர்எஸ்எஸ்/பாஜக, ஜம்மு மக்களுக்கும், காஷ்மீர் மக்களுக்கும் இடையே மதவேற்றுமையை அதிகப்படுத்திட தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2014இல் மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் இதற்கான முயற்சிகளில் வெறித்தனம் அதிகரித்தது. மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான கிளர்ச்சிகள் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரின் மூலம் மிகவும் வெறித்தனமாக நசுக்கப்பட்டன. சாமானிய மக்களை தீவிரவாதிகளைப்போலக் கருதி அவர்கள்மீது ராணுவம்/துணை ராணுவப் படையினர் தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்தன. அனைத்துவிதமான அரசியல் பேச்சுவார்த்தைகளையும் நிராகரித்திடும் போக்கு காஷ்மீர் மாநிலத்தில் நிலைமைகளை மிகவும் மோசமாக்கி இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்வது என்பது அதிகரித்தவண்ணம் இருக்கிறது.   இதன்காரணமாக பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் கொல்லப்படுவது என்பதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
மாபெரும் சிறைக்கூடம்
பாஜக ஆட்சியாளர்களுக்கு, காஷ்மீர் மக்கள் மீது இருக்கின்ற வெறுப்பை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சிதைப்பதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்படும் சமயத்தில், மாநிலத்திற்குள் பாதுகாப்புப் படையினரைக் குவித்ததில் நன்கு வெளிப்பட்டது. கூடுதல் மத்திய துணை ராணுவப்படையினர் பல்லாயிரக் கணக்கானோர், மற்றும் ராணுவத்துருப்புகள் பல்லாயிரக் கணக்கானோர் மாநிலம் முழுவதும்  வான்வழியாக இறக்கப்பட்டு, குவிக்கப்பட்டனர்.  பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். தகவல்களை மக்கள் தெரிந்தகொள்ளக்கூடாது என்பதற்காக இணையம் மற்றும் மொபைல்போன்கள் சேவைகள் முடக்கப்பட்டன. அமர்நாத் யாத்ரிகர்களின் யாத்திரை திரும்பப்பெறப்பட்டது. சுற்றுலாப்பயணிகள் திரும்ப அழைக்கப்பட்டனர்.  காஷ்மீர் மாநிலமே மாபெரும் சிறைக்கூடாமாக மாறியது. காஷ்மீர் மாநிலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் சமயத்தில் அந்தச் சட்டத்தால் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய மக்களிடம் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்று பாருங்கள்!
போலிப் பகட்டு வாதங்கள்
370ஆவது பிரிவை ரத்துசெய்வதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைத்த வாதங்கள், இந்துத்துவா முகாம்களில் அடிக்கடிக் கூறப்படும் பட்டுத்தேய்ந்த பழகிப்போன வாதங்களேயாகும்.
370ஆவது பிரிவு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைப்பதற்குத் தடையாக இருந்தது என்று அவர் கூறியிருக்கிறார். உண்மையில், காஷ்மீர் மக்கள், அவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் விரும்பியேதான் இந்திய ஒன்றியத்துடன் சேர்ந்தார்கள்.   இந்த உறுதிமொழிகள் பின்னர் 370ஆவது பிரிவில் சேர்க்கப்பட்டன. இவ்வாறு காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவுடன் இணைவதற்கு அரசமைப்புச்சட்டத்தின்கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஊட்டி வளர்ப்பதாகக் கூறியிருக்கிறார். உண்மை என்னவென்றால், காஷ்மீர் மக்களுக்கு 370ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்ட சுயாட்சிக்கான உறுதிமொழிகள் அரிக்கப்பட்டதன் விளைவாகவே அம்மக்கள் மத்தியில் அதிருப்தியும் இந்தியாவிடமிருந்து அந்நியப்படும் சிந்தனையும் அதிகரித்து, அவை பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கும், பாகிஸ்தான் உதவியுடனும் உடந்தையாக இருப்பதன் மூலமும் பயங்கரவாதத்தின் வளர்ச்சிக்கும் இட்டுச் சென்றன.  அம்மாநிலத்தில் சுயாட்சியையும் மறுக்கப்பட்டுள்ள ஜனநாயகத்தையும் மீளவும் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே அம்மக்கள் மத்தியில் அந்நியப்படுதலை சமாளித்திட முடியும்.
அமித் ஷா, காஷ்மீர் மாநிலத்தில் வளர்ச்சியின்மைக்கும், (development) பொருளாதார வளர்ச்சி (economic growth) இன்மைக்கும்  370ஆவது பிரிவையே குற்றம் சாட்டி இருக்கிறார். கடந்த முப்பதாண்டுகளாக அம்மாநிலத்தில் தலைதூக்கிய தீவிரவாதமும், சங்கடமான சூழ்நிலைமையும்தான் வளர்ச்சிப் பணிகளையும், பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை யும் முடக்கின. அங்கே ஓர் அரசியல் தீர்வினைக் கண்டு, அமைதியையும் இயல்புவாழ்க்கையையும் திரும்பக் கொண்டுவராமல், அமித் ஷா கூறுவதுபோல் அங்கே வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் தனியார் முதலீடு பீறியடித்திடும் என்று நினைப்பதெல்லாம் பகல்கனவேயாகும்.
இறுதியாக, அமித் ஷா, மாநிலத்தில் மிகவும் விரிவான அளவிற்கு ஊழலும் பொது நிதி சூறையாடலும் ஏற்பட்டிருப்பதற்கும் 370ஆவது பிரிவைக் குறை கூறியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் ஊழல் தலைவிரித்தாடுவதும், கூலிக்கு மாரடிக்கும் நிர்வாகம் இருப்பதும் உண்மைதான். ஆனாலும், இதற்கும் காரணங்கள் என்னவென்றால், அங்கே சரியானமுறையில் ஜனநாயக நடைமுறைகள் இல்லாததும், நிர்வாகத்தினர் தங்களுக்கு மேல் உள்ளவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்கிற நிர்வாக அமைப்புமுறை மிகவும் பலவீனமாக இருப்பதுமேயாகும்.
ஜம்மு-காஷ்மீர் வெகு காலமாகவே  போலீஸார் ஆளும் மாநிலமாகவே (police state) இருந்து வருகிறது. நீண்டகாலமாகவே மத்திய ஆட்சியின் கீழ்தான் இருந்திருக்கிறது. (ஒட்டுமொத்தத்தில் சுமார் பத்தாண்டு காலம் மத்திய ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.) இவ்வாறு அம்மாநிலத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதற்குக் காரணம், மத்திய அரசின் கீழான அதிகாரவர்க்கமும், பாதுகாப்புத்துறை நிர்வாகமும் அவர்களுக்கு உடந்தையாயிருக்கின்ற அரசியல்வாதிகளுமே காரணமாகும். ஏனெனில் இவர்கள் பெரிதாக எவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
மோடி அரசாங்கத்தின் போலி வாதங்கள் 
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மோடி அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற சதி எதேச்சாதிகார ஆட்சியே நடக்கிறது என்பதற்கான நேரறிகுறியாகும். அரசமைப்புச் சட்டத்தின் மற்றுமொரு பிரிவை – அதாவது 367ஆவது பிரிவை – மாற்றுவதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் குடியரசுத் தலைவர் உத்தரவு ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு மாற்றியமைத்த பின்னர், அதனை 370ஆவது பிரிவின் சாரத்தை நீக்குவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருக்கிறது. இத்தகையதொரு ஏற்பாட்டின்படி, மாநில சட்டமன்றத்தின் இசைவு பெறவேண்டும் என்பது ஆளுநரால் பறித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஏனெனில் அந்த மாநிலம் குடியரசுத்தலைவரின் ஆட்சியின் கீழ் இப்போது இருந்து வருகிறது.
ஆளும் கட்சியினரின் சூழ்ச்சித்தந்திரங்களும், மோடி அரசாங்கத்தின் எதிர்க்கட்சியினரை மிரட்டிப் பணியவைக்கிற அதிகாரங்களும் இதில் நன்கு செயல்பட்டிருக்கின்றன.  பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர்சிபி, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பல கட்சிகள், தங்கள் தலையில் மண்ணைவாரிப் போடக்கூடிய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு,  பாஜகவிற்கு ஆதரவாக அணிதிரண்டதிலிருந்து இதனைக் காண முடியும். ‘தன்னுடைய காலை வெட்டுவதற்குத் தன்னுடைய கோடாலியையே பயன்படுத்தியதைப்போல’  என்கிற இந்தி பழமொழியையே இவர்களின் செய்கை காட்டுகிறது.
காஷ்மீரில் 370ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்ட சுயாட்சியை அங்கே அளிக்காமல் அதனை அரித்துவீழ்த்தியதில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பங்கு உண்டு.  நாடாளுமன்றத்தில் பாஜகவின் நடவடிக்கைக்கு எதிராக வலுவான முறையில் அதனால் எதிர்ப்பினைப் பதிவு செய்திட முடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.  
நீண்ட போராட்டம் எதிர்நோக்கி இருக்கிறது
குடியரசுத் தலைவர் உத்தரவுக்கும் இந்தச் சட்டமுன்வடிவுக் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கும் எதிராக நீதித்துறையில் மேல்முறையீடுகள் செய்யப்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால், காஷ்மீர் மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளுக்குத் துரோகம் இழைத்ததற்கு எதிராக நீண்ட போராட்டம் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டம் ஜம்மு-காஷ்மீருக்கானது மட்டும் அல்ல. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்திடுவதற்காகவும், நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்குமான ஒரு போராட்டமுமாகும். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்ட சுயாட்சியைப் பாதுகாத்திட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. சுயாட்சியை அளிப்பதற்கான அதிகாரங்களையும், 370ஆவது பிரிவின்கீழான அதிகாரங்களையும் அரித்து வீழ்த்திவந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. பாஜகவின் நிலைப்பாட்டிற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்மாநிலத்தில் அதிகபட்சம் சுயாட்சி அளித்திட வேண்டும் என்றும், மேலும் அம்மாநிலத்தின் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்கும் தனித்தனியே பிராந்திய அளவிலான சுயாட்சி அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்திருக்கிறது. தீவிரவாதிகளின் ஆயுத வன்முறைகளையும், எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளையும் எதிர்த்துமுறியடித்திட வேண்டும் கூறுகிற அதே சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அம்மாநிலத்தில் இயங்கிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுடனும் ஓர் அரசியல் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்து வந்திருக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இணைத்திடும் பாஜக அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு, மக்களில் பல பிரிவினர் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.  பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றால் எழுந்துள்ள பிரச்சனைக்கு இது முடிவு கட்டுவதற்கான உறுதியான வழி என்று அவர்களால் பார்க்கப்படுகிறது. இவ்வாறுதான் மோடி அரசாங்கத்தின் சார்பில் அதிகாரபூர்வமானமுறையில் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் ஏற்படக்கூடிய நீண்டகால பாதிப்புகள் குறித்து மக்கள் முன் வைக்கப்படவில்லை.
இந்தப் பணியை இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள்தான் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பர்ய கலாச்சாரத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாத்திடுவதற்கான போராட்டத்தை, இந்துத்துவா எதேச்சாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்துடனும், நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடனும் இணைத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
(தமிழில்: ச. வீரமணி)




Saturday, November 26, 2016

பிடல் காஸ்ட்ரோ, சாசுவதமான புரட்சியாளர்: பிரகாஷ் காரத்



பிடல் காஸ்ட்ரேதா தன்னுடைய 90ஆவது முதிர்ந்த வயதில் இறந்திருக்கிறார். ஆனால், உலகத்தின் கண்களில்  அவரது சித்திரம் என்றென்றும் இளமையாகவும், கியூப புரட்சியின் ஒளிவீசும் தலைவராகவும்தான் நீடித்து நிலைத்து நின்றுகொண்டிருக்கிறது. பிடல், 32ஆவது வயதில் தன்னுடைய புரட்சியாளர்களுடன் ஆட்சியைக் கைப்பற்றினார்.
மிகவும் வெறுக்கத்தக்க பாடிஸ்டா ஆட்சியைத் தூக்கி எறிந்ததன் மூலம், உலகில் மேற்கத்திய அரை உருண்டையில் முதல் சோசலிஸ்ட் புரட்சியை தோழர் பிடல் நிறுவினார். தோழர் பிடலின் வீரமிக்க தலைமையின்கீழ், கியூபா, அரைக் காலனிய நுகத்தடிகளிலிருந்தும், அமெரிக்காவின் `மஃபியா` கூட்டத்திடமிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு முன்னேறியது. அரசாங்கத்திற்குத் தலைமையேற்றிருந்த பிடல், கியூபாவை ஒரு மகத்தான சோசலிச சமூகமாக உருவாக்கினார். 
தோழர் காஸ்ட்ரோவும், அவரது புரட்சிகர அரசாங்கமும் சோசலிசம் என்றால் என்ன  என்பதை உலகுக்குக் காட்டினார்கள். அதாவது, கல்லாமையை இல்லாமையாக்கியது, அனைவருக்கும் கல்வி அளித்தது, வளர்ந்த முதலாளித்துவ நாட்டில் உள்ள மக்களைக் காட்டிலும் சிறந்த விதத்தில் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை, அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு சம உரிமை, தோட்டத் தொழிலாளர்களாக இருந்த அடிமைகள் அனைவரையும் விடுவித்து ஓர் இன சமத்துவ அமைப்பு ஆகியவற்றை உருவாக்கினார். 
கியூபா என்னும் ஒரு சிறிய தீவில் சோசலிசம் கட்டி எழுப்பப்படுவதை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு  சகித்துக்கொள்ளவே முடியாத ஒன்றாக இருந்தது. கடந்த ஐம்பது ஆண்டு காலமாக பிடல் காஸ்ட்ரோ சோசலிஸ்ட் கியூபாவை அழித்திட மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற சதிகளையும் முறியடித்தார்.  சிஐஏ அவரைப் படுகொலை செய்திட மேற்கொண்ட நூற்றுக்கணக்கான முயற்சிகள் குறித்து சமீபத்தில் வெளி உலகுக்குத் தெரிய வந்திருக்கிறது.
லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனைத்துப் புரட்சிகர மற்றும் முற்போக்கு இயக்கங்களுக்கும் கியூபா புரட்சி ஒரு கலங்கரை விளக்காகத் திகழ்ந்தது. அந்நாடுகள் அனைத்திலும் இடதுசாரிதகள் முன்னேறுவதற்கு உத்வேகத்தை ஊட்டியது.  பிடல் காஸ்ட்ரோவும், அவரது நெருங்கிய சக போராளியான சேகுவேராவும் இளம் சந்ததியினருக்கு புரட்சிகர சின்னங்களாக மாறி இருக்கிறார்கள். லெனினுக்கு அடுத்தபடியாக வேறெந்தவொரு கம்யூனிஸ்ட் தலைவரும் பிடல் அளவிற்கு சர்வதேசப் புகழை (internationalist vision)எட்டியதில்லை. புரட்சிகர கியூபா, உலகம் முழுதும் நடைபெற்ற புரட்சிகரப் போராட்டங்களுக்கு, குறிப்பாக லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் நடைபெற்ற போராட்டங்களுக்கு  அனைத்துவிதமான உதவிகளையும் அளித்து வந்தது.
தென் ஆப்ரிக்காவில் இனவெறி ஆட்சியாளர்களுக்கு உதவி வந்த எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு எதிராகப் போராடிவந்த அங்கோலா மற்றும் மொசாம்பிக் ஆயுதப்படையினருக்கு உதவிட கியூபா ஆயுதப்படையினரை பிடல் அனுப்பி வைத்தார். கியூபா மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  சர்வதேச அளவிலான சேவையின்மூலம் புதிதாக உருவான எண்ணற்ற நாடுகளில் உள்ள மக்கள் பயன் அடைந்தார்கள். 
தோழர் பிடல் காஸ்ட்ரோ மார்ச்சியத் தத்துவத்தையும் நடைமுறையையும் மிகச் சரியாக இணைத்திட்ட ஒரு மார்க்சிய சிற்பியாக வரலாற்றில் இடம் பெறுவார். மாசேதுங் மற்றும் ஹோசிமின் போன்று பின்தங்கியிருந்த நாடுகளில் உள்ள துல்லியமான நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சியத்தை பிடல் பொருத்தி, சோசலிசப் பாதையை நோக்கி முன்னெடுத்துச் சென்றார். இது மூன்றாம் உலக நாடுகளில் வியக்கத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.  
என் தலைமைமுறையைச் சார்ந்த மக்களுக்கு, தோழர் பிடல் புரட்சியின் உயிரோட்டமான சின்னமாகத் திகழ்கின்றார். நான் அவரை முதன்முதலாக 1978இல் ஹவானாவில் நடைபெற்ற உலக இளைஞர் திருவிழாவில் பார்த்தேன், அவரது பேச்சைக் கேட்டேன். அந்த சர்வதேச நிகழ்வின்போது உலகம் முழுதுமிருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்திருந்தார்கள். பின்னர் 20 ஆண்டுகள் கழித்து, 1998இல் நான் சே குவேராவின் தியாகத்தின் 30ஆம் ஆண்டு விழா சாந்தா கிளாராவில் நடைபெற்றபோது, அதில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தபோது அவரைப் பார்த்தேன். அந்த சமயத்தில் தோழர் பிடல் ஆற்றிய உரை இப்போதும் என் நினைவில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. கியூபா புரட்சி குறித்து ஓர் ஆய்வினையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுதும் நடைபெற்று வரும் போராட்டங்களையும் அப்பேச்சில் அவர் அடிக்கோடிட்டிருந்தார். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கியூபா கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய உறவுகளைப் பேணிப் பாதுகாத்து வந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகள் கியூபா புரட்சியினால் எப்போதும் உத்வேகம் பெற்று வந்திருக்கிறார்கள். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின்னர், அமெரிக்கா கியூபாவிற்கு எதிராகத் தன்னுடைய பொருளாதாரத் தடையை இறுக்கிப்பிடித்தபோது,  கியூபா மிகவும் மோசமான பொருளாதார இக்கட்டில் இருந்தது. அந்த சமயத்தில் தோழர் ஹ்ர்கிசன் சிங் சுர்ஜித் தலைமையில், இந்தியாவிலிருந்து, கோதுமை அனுப்பிட ஒருமைப்பாட்டுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக, 1992 டிசம்பரில் 10 லட்சம் டன் கோதுமை அனுப்பி வைக்கப்பட்டது.  பிடல் ஹவானா துறைமுகத்திற்கு வந்து சுர்ஜித் முன்னிலையில் கோதுமை ஏற்றி வந்த கப்பலை பெற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் பிடல் பேசுகையில், “10.105 டன் கோதுமையும், மருந்துப் பொருள்களும் என்பதன் பொருள் ஓர் அடையாளத்தைவிட அதிகமானதாகும். இந்த 10,105 டன் ஒருமைப்பாடும், 10,105 டன் தார்மீக ஆதரவும் எங்களை மேலும் அதிக அளவிலான சர்வதேசவாதியாகவும், மேலும் அதிக அளவிலான நாட்டுப்பற்றாளர்களாகவும். மேலும் அதிக அளவிலான புரட்சியாளர்களாகவும், நம்முடைய உன்னதமான லட்சியத்தினைக் காப்பாற்றுவதற்கான உறுதிபடைத்தவர்களாகவும் மாற்றிடும்” என்றார்.
அமெரிக்கா ஏற்படுத்தி இருந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான  பொருளாதாரத் தடைக்குப்பின்னர், கியூபா முதலாளித்துவத்தின் சுரண்டல் அமைப்பை நிராகரித்து, சோசலிச அமைப்புடன் ஓர் உன்னதமான நாடாக சுதந்திரமான நாடாக உயர்ந்து நிற்கிறது. இது பிடலின் புரட்சிகர பாரம்பர்யமாகும்.
(தமிழில்: ச.வீரமணி)
 

Tuesday, November 8, 2016

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு துவக்க விழா--பிரகாஷ் காரத் உரை


நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு துவக்க விழா

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான என். சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், கல்வியாளர் டாக்டர் வே. வசந்தி தேவி, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thursday, November 3, 2016

நாட்டிலுள்ள நிலைமை அறிவிக்கப்படாத அவசரநிலையைப் பிரதிபலிக்கிறது பிரகாஷ்காரத் கண்டனம்



புதுதில்லி, நவ. 4-
நாட்டிலுள்ள நிலைமை அறிவிக்கப்படாத அவசரநிலையைப் பிரதிபலிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார்.
ஜேஎன்யு மாணவர் நஜீப் காணாமல் போய் இருபது நாட்களுக்கும் மேலாகிவிட்டது. அவரைக் கண்டுபிடிப்பதற்கு ஜேஎன்யு நிர்வாகமோ, தில்லி காவல்துறையோ உருப்படியாக முயற்சிகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. எனவே இதனைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜேஎன்யு வளாகத்தில் வியாழன் அன்று கண்டனக் கூட்டம் நடத்தினார்கள், இதில் பங்கேற்று உரையாற்றும்போது பிரகாஷ் காரத் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசியதாவது:
"அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டிருந்த அந்தக்காலத்திலும்கூட, காவல்துறையினர்  ஜேஎன்யு  வளாகத்திற்குள் நுழைந்தபோது, மாணவர்கள் சரண் அடைந்திடவில்லை. இத்தகைய சோதனைக் காலங்களில் ஜேஎன்யு மாணவர் பேரவைக்கு அனைத்து மாணவர்களும் ஒன்றுபட்டு நின்று ஆதரித்திட வேண்டும். 
மத்திய ஆட்சியாளர்கள் ஜனநாயக சிந்தனைகளை நசுக்கி, இந்த பல்கலைக்கழகத்தின் மாண்புகளையே அழித்து ஒழித்துவிடவேண்டும் என்று விரும்புகிறார்கள்.  அதனை ஒருபோதும் அனுமதித்திட முடியாது."
இவ்வாறு பிரகாஷ்காரத் பேசினார்.
அரவிந்த் கேஜரிவால்
கூட்டத்தில் பங்கேற்ற தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:
"மக்களின் அதிகாரத்தால் மட்டுமே காணாமல் போன நஜீம் அகமதை மீண்டும் கொண்டுவர முடியும். நஜீம் அகமதுவுக்காக இங்கே நடைபெறும் கூட்டம் போன்று வளாகத்திற்கு வெளியிலேயும் நடத்திட வேண்டும். 
இந்தியா கேட் முன்பு நான் அனைவரும் மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து அமர்ந்திடுவோம். நாடு முழுதுமிருந்து மாணவர் அமைப்புகளின் சார்பில் தூதுக்குழுவினரை அழைத்திடுவோம். நஜீப் அகமது திரும்ப வராவிட்டால், இளைஞர்களின் வாக்கு இனி நமக்குக் கிடைக்காது என்று மத்திய அரசை உணரச் செய்திடுவோம்.
நஜீப் அகமது காணாமல் போயுள்ள விவகாரத்தில் ஏபிவிபி-க்கு பின்னே ஆர்எஸ்எஸ் இயக்கம் இருப்பதால், தில்லி காவல்துறை உருப்படியான விசாரணை எதையும் செய்திடாது. ஏபிவிபி மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட ஜேஎன்யு துணை வேந்தரும் பயப்படுகிறார். அவ்வாறு அவர் செய்தாரானால் தானும் காணாமல் போய்விடுவோமோ என்று அவர் பயப்படுகிறார்.
ஆர்எஸ்எஸ்க்கு எதிராகவோ, ஏபிவிபிக்கு எதிராகவோ அல்லது பாஜகவிற்கு எதிராகவோ எவரேனும் குரல் எழுப்பினால், அவர்கள் தேச விரோதி என்று முத்திரை குத்தப்படுவார்கள் அல்லது காணாமல் போவார்கள். 
நஜீப் மட்டும் அம்பானியின் மகனாக இருந்திருந்தால் மோடிஜி இந்நேரம் அவரைப் பார்ப்பதற்காகப் பறந்து வந்திருப்பார். ... ஆனால் இது எல்லாம் அவர் கவனத்தை ஈர்க்காது.
பாஜக இந்துக்களுக்கான ஒரு கட்சியும் இல்லை, முஸ்லீம்களுக்கான ஒரு கட்சியும் இல்லை. அதிகாரத்திற்காகத் தன் சொந்தத் தந்தையைக் கூட விற்க அவர்கள் தயங்க மாட்டார்கள். குஜராத்தில் கடந்த 40 ஆண்டு காலமாக ஆட்சியில் அவர்களை அமர வைத்த பத்திதார்களைக் கூட அவர்கள் தாக்கினார்கள். தலித்துகளைத் தாக்கினார்கள். முன்னாள் ராணுவ வீரர் இறந்ததற்காகத் துக்கம் அனுசரிக்கும் அவரது குடும்பத்தாரையும் தாக்கினார்கள்."
இவ்வாறு அரவிந்த் கேஜரிவால் பேசினார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர், மணிசங்கர் ஐயர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)யைச் சேர்ந்த கவிதா கிருஷ்ணன், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கே.சி. தியாகி, ஆகியோருடன், ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டுக்கறி வைத்திருந்தது தொடர்பாக காவல்நிலையத்தில் லாக்கப்பில் இருந்த  மினாஜ் அன்சாரியின் குடும்பத்தைச் சேர்ந்தவரும் உரையாற்றினார்கள். 
கூட்டத்தில் பங்கேற்ற நஜீப்பின் தாயார், "என் மகன் காணாமல் போய் 20 நாட்களாகிவிட்டதே, எங்கே என் மகன்? ஏன், எவராலேயுமே என் மகனைக் கண்டுபிடித்துத் தர முடியவில்லை?" என்று கோரி கதறியழுத காட்சி கூட்டத்திலிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
(ந.நி.)
(படம் இணைத்திருக்கிறேன். )
படக்குறிப்பு: ஜேஎன்யு வளாகத்தில் பிரகாஷ்காரத் உரையாற்றுகிறார். சசி தரூர், நஜீப் தாயார் மற்றும் சகோதரி உடன் உள்ளனர். 

Tuesday, September 6, 2016

அமெரிக்காவின் அடி வருடியா இந்தியா? : பிரகாஷ் காரத்



பிரகாஷ் காரத்


(கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு (எல்எஸ்ஏ) ஒப்பந்தம் என்பது அதில் கையெழுத்திடுகிற நாட்டின் ராணுவ வசதிகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள சட்டரீதியான அங்கீகாரத்தை அளிக்கிறது. அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதற்கான சேவை மற்றும் பொருள்களுக்கு ஒரு தொகையையும் அளிப்பதற்கு வகை செய்கிறது.)
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தமது அமெரிக்கப்பயணத்தின்போது, அந்நாட்டுடன் கடல்வழி மற்றும் வான்வழி ராணுவ நடவடிக்கைகளுக்காக ஒப்பந்தம் (Logistics Agreement) செய்து கொண்டிருப்பதானது இதுவரை இல்லாத ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஓர் அந்நிய ராணுவப் படை, அதுவும் ஓர் ஏகாதிபத்திய நாட்டின் மிகவும்வலுமிக்க ராணுவம், இப்போது இந்தியாவின் கடல்வழி மற்றும் வான்வழி தளங்களில் வந்து, தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ள வழி வகுத்துத்தரப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா, தன்னுடன் ராணுவக் கூட்டணி அல்லது நெருக்கமாக ராணுவ ஒத்துழைப்பு வைத்துக்கொண்டுள்ள நாடுகளுடன் இதுபோன்று கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தங்களை (LSA-Logistics Support Agreement) ஏற்படுத்திக் கொள்கிறது. இது, நேட்டோ அல்லாத நாடுகளைக் கையாள்வதற்காக அமெரிக்கா, ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தமாகும். உண்மையில் இது ‘நேட்டோ பரஸ்பர ஆதரவு சட்டத்தின்’ கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘கையகப்படுத்தல் மற்றும் பரஸ்பர சேவை ஒப்பந்தங்கள்’ (ACSA-Acquisition and Cross Service Agreements) என்பதன் மற்றொரு பெயரேயாகும். ஆசியாவில் பிலிப்பைன்ஸ் போன்றநாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. தெற்கு ஆசியாவில் இலங்கை சமீபத்தில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. பாகிஸ்தான் செய்து கொண்டிருந்த ஒப்பந்தம் 2012இல் காலாவதியாகிவிட்டது.
நமது ராணுவத்திற்கு விலை
கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு(எல்எஸ்ஏ) ஒப்பந்தம் என்பது அதில் கையெழுத்திடுகிற நாட்டின் ராணுவ வசதிகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள சட்டரீதியான அங்கீகாரத்தை அளிக்கிறது. அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதற்கான சேவை மற்றும் பொருள்களுக்கு ஒருதொகையையும் அளிப்பதற்கு வகை செய்கிறது. அமெரிக்கா தனது தாக்குதல்நடவடிக்கைகளை உலகின் பல பகுதிகளில் மேற்கொள்ள தனது சொந்த ராணுவதளங்களை மட்டுமே சார்ந்திருக்கவில்லை; இதுபோன்ற எல்எஸ்ஏ பாணிஒப்பந்தங்கள் மூலமாக உலகின் அனைத்துப்பகுதிகளிலும் பிற நாடுகளின் ராணுவங்களைப் பயன்படுத்தி மிக விரைந்துதாக்குதல் தொடுப்பதற்கான ஏற்பாட்டையும் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் இதுபோன்றதொரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள அமெரிக்கா வெகுநீண்டகாலமாகவே முயற்சித்து வந்தது. 2015 ஜூன் மாதத்தில் மேலும் பத்தாண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட்ட அமெரிக்கா - இந்தியா பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் (US-India Defence Framework Agreement) வரம்பெல்லை இதற்கு வகைசெய்கிறது. எல்எஸ்ஏ-இன் உண்மையான உள்நோக்கத்தை இந்தியாவில் மூடிமறைப்பதற்காக, ஒரு வித்தியாசமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கையெழுத்தாகி இருக்கிற ஒப்பந்தத்திற்கு கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் ((LEMOA-Logistics Exchange Memorandum of Agreement) என்று மேற்பூச்சாக ஒரு பெயரிடப்பட்டிருக்கிறது.
மக்களைக் குழப்பி, குளிர் காயும் நோக்கம்
இந்த ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கம் மக்களுக்குப் புரியாமல் குழப்பவேண்டும் என்று மோடி அரசு திட்டமிட்டேசெயல்படுகிறது. இரு நாடுகளின் ராணுவமும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய ஒரு முக்கியமான நடவடிக்கை இதுவாகும். இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஓர்அறிக்கையில் இது, நம்முடைய அதிகாரப்பூர்வமான துறைமுகங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல், கூட்டு ராணுவப்பயிற்சிகள் மற்றும் மனிதாபிமானமுறையிலான உதவிகள் மற்றும் பேரிடர்காலத்தில் தேவையான நிவாரண முயற்சிகளுக்கு உதவிடக்கூடிய விதத்திலான, வெறுமனே ஒரு ‘வசதி செய்துதரும் ஒப்பந்தம்’ மட்டுமே’’என்று கூறியிருக்கிறது.
ஆயினும் உலகம் முழுவதும், கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தங்களை அமெரிக்கா தன்னுடைய ராணுவத் தளங்களின் வலைப்பின்னலை விரிவாக கெட்டிப்படுத்திக்கொள்ளக்கூடிய விதத்தில்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.இத்தகைய கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தத்தின் மூலமாக, அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படை இந்திய ராணுவ வசதிகளை, தங்கள் விமானங்கள் மற்றும் கப்பல்களில் எரிபொருள்களை நிரப்பிக் கொள்ளவும், உபகரணங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் நேரடியாக கையாளும்.
தற்போது மோடி அரசாங்கம் அமெரிக்காவின் நீண்டகால சூழ்ச்சித் திட்டத்துடன் உடன்பாடு செய்துகொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் அவர்கள் எரிபொருள் நிரப்ப வேண்டும்அல்லது போர் விமானம் தரையிறங்கவேண்டும் எனக்கேட்டால். அதைத்சீர்தூக்கிப்பார்த்து கடல்வழி மற்றும்வான்வழி ஆதரவுநடவடிக்கைகள் அளிக்கப்படும் என்று மத்திய அரசின் தரப்பில் கூறப்பட்டிருப்பது வெறும் சம்பிரதாயமான ஒன்றேயாகும். இதுபோன்றதொரு ஒப்பந்தம் இதற்கு முன் இல்லாத சமயத்திலேயேகூட, இந்தியா, அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்கி, இந்திய ராணுவ தளங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்து வந்திருக்கிறது. 1991ல் இராக்கில் குண்டுகளைப் போட்டுவந்த அமெரிக்க விமானப்படை விமானங்கள் இந்திய விமானப்படைத் தளங்களில் எரிபொருள் நிரப்பிக்கொள்ள அப்போதைய சந்திரசேகர் அரசாங்கம் அனுமதித்தது.
2001இல் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பின், அமெரிக்கா, ஆப்கானிஸ்தானத்தில் தாக்குதலைத் தொடுக்கத் தீர்மானித்தசமயத்தில், அமெரிக்க ராணுவம் இந்திய ராணுவத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய், அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷுக்கு எழுதியிருந்தார். அந்த சமயத்தில் அமெரிக்கா, பாகிஸ்தானின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்தி வந்ததால் இந்தியாஉதவ வந்ததை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
எனவே, இன்றைக்கு மனோகர் பாரிக்கர் கையெழுத்திட்டுள்ள கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தம் என்பது பேரிடர் மற்றும் மனிதாபிமான நிவாரண உதவிநடவடிக்கைகளுக்கு மட்டுமானது அல்ல; அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன், தன்னுடைய ஆசிய -பசிபிக் ராணுவச் சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கு இந்தியாவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும். சீனா மற்றும் மத்திய ஆசியா உட்பட ஆசியா முழுவதும் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்கிக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளும். ஆசியாவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் மிகப் பெரிய அளவில் ராணுவப் படையைக் கொண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவிற்கு வாய்ப்பு கிடைத்திருப்பது என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை மாபெரும் ஆதாயமாகும்.
முழுமையான ராணுவக் கூட்டாளி
இந்தியாவை தனது மாபெரும் ராணுவக் கூட்டாளி என்று அமெரிக்கா நாமகரணம் சூட்டியிருப்பதைத் தொடர்ந்து மோடி அரசாங்கம் ரொம்பவும்தான் சிலிர்த்துப்போயிருக்கிறது. இந்தப் பட்டம்மோடி, வாஷிங்டனுக்குச் சென்றிருந்தபோது அளிக்கப்பட்டது. கடல்வழி மற்றும்வான்வழி ஆதரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம் அதனை மெய்ப்பித்திட இந்தியா இப்போது மிகவும் விருப்பத்துடன் காத்திருக்கிறது. இதன்மூலம் இந்தியா அமெரிக்கா வின் முழுமையான ராணுவக் கூட்டாளியாகவே மாறியிருக்கிறது.
சென்ற ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வந்திருந்தபோது கையெழுத்தான ஆசிய - பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டு தொலைநோக்கு அறிக்கை (Joint Vision Statement for the Asia Pacific and Indian Ocean region)யில் கூறப்பட்டிருந்த அமெரிக்கா - ஆசிய - பசிபிக் நீண்டகால ராணுவ சூழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இது மாறி இருக்கிறது,ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகியமூன்று நாடுகளுக்கு இடையே முத்தரப்புபாதுகாப்புக் கூட்டணி அமைத்துக்கொள்வதற்கு இந்தியா இணங்கி இருப்பதிலிருந்து, அமெரிக்காவின் ராணுவ சூழ்ச்சிக்கூட்டணியின் ஓர் அங்கமாக மாற இந்தியாவிருப்பம் தெரிவித்திருப்பது நன்கு தெரிகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தென்சீனக் கடலில் பயிற்சிக்காக இந்தியா கடற்படையின் நான்கு கப்பல்களை அனுப்பியிருந்தது. இது, இந்தியாவானது அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் சேர்ந்துசீனாவிற்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கையாகவே அடையாளப்படுத்தப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர், இந்தஒப்பந்தத்தை விமர்சிப்பவர்கள் ‘வேண்டுமென்றே குழப்புகிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். எல்எஸ்ஏ எனப்படும் கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தம் என்பது, இந்தியாவில் அமெரிக்க தளங்கள் நிறுவப்படுவதற்கானது அல்ல என்பதும், மாறாக இந்திய ராணுவத் தளங்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒன்று என்பதும் நம் அனைவருக்கும் நன்கு தெரியும். இதேபோல் இந்தியாவும் அமெரிக்காவின் ராணுவத்தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்வதும் வேடிக்கையான ஒன்று.
இந்தியக் கடற்படை கப்பல்கள் எதற்காக அமெரிக்க கடற்படைத் தளங்களான சாண்டியாகோ, குவாம் அல்லது ஒக்கினாவா ஆகிய இடங்களுக்குச் செல்லப் போகின்றன?இதனையொட்டி வேறு சில ஒப்பந்தங்களிலும் மோடி அரசாங்கம் கையெழுத்திட இருக்கிறது. தொலைத்தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்(CISMOA-Communication and Information Security Memorandum of Agreement) மற்றும் அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA-Basic Exchange and Cooperation Agreement) ஆகிய இரு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருக்கிறது. இப்போது இந்தியாவிற்கு ராணுவத்தளவாடங்களை பெரிய அளவிற்கு விற்பனை செய்து வருவது அமெரிக்காதான். இவ்விரண்டு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிவிட்டால், இந்திய - அமெரிக்கபாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் முழுமையாக செயல்படத் தொடங்கிவிடும்.
சமரசத்திற்குள்ளாகும் இறையாண்மை
கடல்வழி மற்றும் வான்வழி ஆதரவு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதைத் தொடர்ந்து மோடி அரசாங்கம் நாட்டின்இறையாண்மையை சமரசத்திற்குள்ளாக்கி இருக்கிறது. இதுநாள்வரையிலும் இந்தியா எந்தவொரு நாட்டுடனும் ராணுவக் கூட்டணியை வைத்துக் கொள்ளாமல், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்து வந்தது.
இப்போது நாட்டின் நலன்களுக்கு மிகவும் அடிப்படையாக விளங்கும் சுயேச்சையான ராணுவத் தந்திரச் செயல்பாடுகளை, இந்த ஒப்பந்தத்தின் மூலம் மோடி அரசாங்கம் அமெரிக்காவின் காலடிகளில் சரணாகதி ஆக்கிவிட்டது.இப்படியாக, இந்தியாவின் அயல்துறைக் கொள்கையும், நீண்டகால ராணுவரீதியான பாதுகாப்புக் கண்ணோட்டமும் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுவிட்டன.
இது, இப்போது பிரதமர் மோடி வெனிசுலாவில் காரகாசில் செப்டம்பர் மூன்றாம்வாரத்தில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்கிற முடிவின் மூலம் தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது.அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் இதற்கு முன் இடைக்கால அரசின் பிரதமராக இருந்த சரண் சிங் மட்டும்தான் பங்கேற்காமல் இருந்தார்.
அதற்கு அடுத்து இப்போது அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்காத முதல் இந்தியப் பிரதமர் மோடிதான். இது தெரிவித்திடும் செய்தி மிகவும் தெளிவானது: இந்தியா என்பது இனிவருங்காலங்களில் அணிசேரா நாடல்ல, அது அமெரிக்காவின் அடிவருடியாக (subordinate ally) மாறி விட்டது என்பதே அந்த செய்தியாகும்.
(தமிழில்: ச.வீரமணி)



Tuesday, January 12, 2016

மக்கள் மனங்களை வெல்வோம்...:பிரகாஷ் காரத்


(“எப்போதும் மக்களுடன் வாழ், மக்களை நேசி, மக்களிடமிருந்து கற்றுக்கொள், அதன்பின்னர் அவர்கள் பிரச்சனைகளுக்காக உரிய போராட்ட வடிவங்களுடன் மக்களிடம் செல்’’ என்கிற பழைய கம்யூனிஸ்ட் பாணியை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யால் கொல்கத்தாவில் நடத்தப்பட்ட ஸ்தாபனம் தொடர்பான சிறப்பு மாநாடு (பிளீனம்), கட்சியை சுயேச்சை யாக வலுப்படுத்திடவும், அதன் வெகுஜனத் தளத்தை விரிவாக்கிடவும் மேற் கொள்ளப்பட வேண்டிய ஸ்தாபன நட வடிக்கைகள் மீது கவனம் செலுத்தியது. 2015 ஏப்ரலில் நடைபெற்ற கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டின் தொடர்ச்சிதான் இந்த சிறப்பு மாநாடு. கட்சியின் கொள்கைகளை உருவாக்கும் உச்ச பட்ச அமைப்பான கட்சி காங்கிரஸ், ஓர் இடதுசாரி ஜனநாயக முன்னணியை, ஓர்உண்மையான அரசியல் மாற்றாக உருவாக்கக்கூடிய விதத்தில், கட்சியின் வலுவைவிரிவாக்குவதற்கான முக்கியத்து வத்திற்கு அழுத்தம் கொடுத்து அரசியல் நிலைப்பாட்டை வடித்தெடுத்தது. கட்சியின் அகில இந்திய மாநாடு, கட்சிஎதிர்நோக்கியுள்ள அரசியல் சவால்கள் குறித்து முழுமையாக விவாதித்தது.
நாட்டின் அரசியலில் ஒரு வலதுசாரி திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. மோடி அரசாங்கம் அமைந்ததற்குப்பின், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அரக்கத் தனமான முறையில் பின்பற்றுவதன் மூலமும், மதச் சிறுபான்மையினர் மீது மதவெறித் தாக்குதல்களைத் தொடுப்பதன்மூலமும் ஒரு வலதுசாரித் தாக்குதல் கட்ட விழ்த்து விடப்பட்டிருக்கிறது. இவ்வாறான இவ்விரண்டு தாக்குதல்களையும் எதிர்த்து முறியடித்திட, ஓர் இடதுசாரி ஜனநாயக மாற்று மேடையை உருவாக்கிஅதன் மூலம் வலுவான இயக்கங்களையும்போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வதற்கான பணிகள் வகுக்கப்பட்டுள் ளன. எனவே, பிளீனம் இப்பணிகளை மேற்கொள்ளக்கூடிய முறையில் திட்டமிடவும், கட்சி ஸ்தாபனத்தை அனைத்து மட்டங்களிலும் புதுப்பித்திடவும் வேண்டி யிருந்தது.
இத்துடன் மிகவும் முக்கியமான பணியாக பிளீனம் எடுத்துக்கொண்டது, கட்சி உறுப்பினர்களின் தரத்தை அரசியல்ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும், ஸ்தாபனரீதியாகவும் எப்படி முன்னேற்றுவது என்பதாகும். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில் கட்சிஉறுப்பினர்களும் அதன் முன்னணி ஊழியர்களும்தான் ஸ்தாபனத்தின் முது கெலும்பாகும். அவர்கள் அரசியல்ரீதியாக உணர்வுமிக்கவர்களாகவும், அர்ப்பணிப்பு உடையவர்களாகவும், தியாகசீலர் களாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.
இதனைஎய்திட வேண்டுமெனில், கட்சி உறுப்பினர்களில் தொழிலாளர் வர்க்கத்தினரை மட்டுமல்லாமல் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் கொண்டுவரவேண்டும். இவ்வாறு, முதன்முறையாக, கட்சி உறுப்பினர்களாக அதிக அளவில் பெண்களைச் சேர்ப்பதற்கு ஒரு குறியீடு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. தற்சமயம், கட்சி உறுப் பினர்களில் பெண்கள் 15.5 சதவீதமாகும். இது அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 சதவீதமாக அதிகரிக்கப்படும். கட்சியின் தரத்தை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றொரு வழி, தொழிலாளர் வர்க்கம், ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் களிலிருந்து வரும் முன்னணி ஊழியர் களை, கட்சியின் உயர் கமிட்டிகளுக்கு உயர்த்துவதை உத்தரவாதம் செய்வதாகும். இத்துடன், தலித்துகள், ஆதிவாசி கள் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட இதர பிரிவினர்களிலிருந்தும் முன்னணி ஊழி யர்களை மேம்படுத்துவதற்கு திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொள்வதாகும். கட்சியின் தலித் உறுப்பினர்களுக்குப் பஞ்சமில்லை.
கட்சியின் மொத்த உறுப்பினர் களில் தற்சமயம் 20.3 சதவீதம் பேர் தலித் துகளாவர். ஆனால் அவர்களின் எண்ணிக் கை மத்திய மற்றும் உயர் கமிட்டிகளில் ஒப்பீட்டளவில் குறைவு. எனவே, சமூகரீதியாக புறக்கணிக்கப்பட்ட பிரிவினரி லிருந்து முன்னணி ஊழியர்களை மேம் படுத்துவதற்கு, உணர்வுப் பூர்வமாகத் திட்டமிட வேண்டியது அவசியத்தேவை.கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த தாராளமயம் மற்றும் உலகமயக் கொள்கைகளுக்குப்பின்னர் சமூகப் பொரு ளாதார நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங் களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்இடதுசாரிகளும் பொதுவாகப் பின்தங்கி விட்டனர். குறிப்பாக இந்த மாற்றங்களின் விளைவாக மத்திய தர வர்க்கத்தினரும் இளைஞர்களும் கடுமையாகப் பாதிப்புக்குஉள்ளானார்கள். தாராளமயக் கொள்கை கள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, இதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று மத்தியத்தர வர்க்கத்தி னருக்கும் இளைஞர்களுக்கும் இடது சாரிகள் வேண்டுகோள் விடுத்தார்கள்.
ஆனால் அந்த வேண்டுகோள் எடுபட வில்லை. இதற்கு இரு காரணங்களைக் கூறலாம். முதலாவதாக, மத்திய தரவர்க்கத்தினருக்குள்ளேயே வித்தியா சங்கள் எழுந்துள்ளன. அதிக வருமானம் பெறக்கூடிய உயர்நிலையை எட்டியுள்ள மத்தியத்தர வர்க்கத்தினரின் வாழ்நிலை சமூகத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களின் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக மாறியிருக்கிறது. நவீன தாராளமய முதலாளித்துவம் தங்களுக்குப் பயன் அளித்திருப்பதாகவே அவர்கள் பார்க் கிறார்கள். எனவே, இடதுசாரிகளின் கொள்கைகளோ, திட்டங்களோ அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத வைகளாக மாறிவிட்டன. இரண்டாவதாக, மத்தியதர வர்க்கத்தினரின் இதர பிரிவினரின் வாழ்க்கையிலும் பெரிய அளவிற்குமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இடதுசாரி களால் அவற்றின்மீது முறையாக கவனம் செலுத்தப்படவில்லை. இடதுசாரி அமைப்புகள் பழைய பிரச்சனைகளின் மீது, பழையபாணியிலேயே இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மாறியுள்ள சூழ் நிலையில் புதிய பாணியை உருவாக்கிக் கொண்டு அவர்கள் பிரச்சனைகளைக் கையில் எடுத்துக்கொள்ளவில்லை. அவ்வாறே இளைஞர்களைப் பொறுத்தும்,இடதுசாரிகள் தங்கள் கொள்கைகளையும் திட்டங்களையும் மாற்றி அமைத்துக் கொண்டு, அவர்களின் ஆசை அபிலா சைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்துள்ள இடங்களில் அது வெற்றி பெற்றிருக் கிறது. ஆனால் பொதுவாக இவர்களின்பிரச்சனைகளும் பெரும்பாலான பகுதி களில் கண்டுகொள்ளப்படாமல் விடப் பட்டிருக்கின்றன. பிளீனம் இவ்வாறு மத்தியத்தர வர்க்கத்தினர் மற்றும் இளைஞர்களின் இப்பிரச்சனைகளை எல்லாம் ஆழமாகப்பரிசீலித்தது. நகர்ப்புற மத்தியத்தர வர்க்கங்களின் மத்தியில் வேலைகளைமுடுக்கிவிட துல்லியமான நடவடிக்கை கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.
கட்சியின் இளைஞர்கள் எண்ணிக்கை (31 வயதுக்குக் குறைவாக உள்ளவர்கள்) 20 சதவீதத்தினைச் சுற்றியே இருந்து கொண்டிருக்கிறது. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் இளைஞர்களையும், பெண்களையும் தெரிவுசெய்து மேம்படுத் திட உரிய வழிகாட்டுதல்கள் பிளீனத்தில் வரையப்பட்டிருக்கின்றன. பிளீனத்தில் மிகவும் முக்கியமானமுழக்கம் ஒன்று முன்வைக்கப்பட்டிருக் கிறது. அது, மக்களுடன் உயிர்த்துடிப்புடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாகும். இது ஆங்கிலத் தில் மாஸ் லைன் (mass line) என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்புவரை,தேர்தல் சமயங்களில் மட்டுமே மக்களுடன் அவ்வாறான தொடர்புகளை நாம் கொண் டிருந்தோம். “எப்போதும் மக்களுடன் வாழ், மக்களை நேசி, மக்களிடமிருந்து கற்றுக்கொள், அதன்பின்னர் அவர்கள் பிரச்சனைகளுக்காக உரிய போராட்ட வடிவங் களுடன் மக்களிடம் செல்’’ என்கிற பழையகம்யூனிஸ்ட் பாணியை மீண்டும் ஏற்படுத் திக் கொள்ள வேண்டியிருக்கிறது. எங்கே உள்கட்சி ஜனநாயகம் வீர்யத்து டன் இருக்கிறதோ அங்குதான் கட்சியைத் தரமானதாக மேம்படுத்திட முடியும். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டு மல்ல, கட்சி அடிப்படையிலான நாடாளு மன்ற ஜனநாயக அமைப்பிற்கும் முக்கியமாகும். நவீனதாராளமய அரசியல் ஜனநாயகமுறையை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது, கட்சிகளுக்குள் ஏற்கனவே இதனை மிகவும் சுருக்கிவிட்டது. பல கட்சிகள் ஒரேதலைவரைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கின் றன அல்லது குடும்ப எண்டர்பிரைசஸ்-ஆக மாற்றப்பட்டிருக்கின்றன. கம்யூ னிஸ்ட் கட்சி கட்டுப்பாடான கட்சியாக இருந்த போதிலும், கட்சிக்குள் ஜனநாய கம் இல்லை என்கிற கருத்துப் பரவலாக இருக்கிறது. உண்மையில், ஜனநாயக மத்தியத்துவத்தை நடைமுறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்கட்சி ஜனநாயகத்தைச் சிறந்தமுறையில் பின் பற்றி வருகிறது. உள்கட்சி ஜனநாயகத் தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய சில போக்குகளை பிளீனம் சுட்டிக்காட்டியது, அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளையும் பிளீனம் பரிந்துரைத்திருக்கிறது.வகுப்புவாதத்தை எதிர்த்துமுறியடிப் பது என்பது தேர்தல்களில் பாஜகவைத் தோற்கடிப்பது என்ற ஒரு தவறான அபிப்பிராயம் இருக்கிறது. தேர்தல் போராட்டம் மட்டுமே மதவெறி சக்திகளை பலவீனப்படுத்தி, தனிமைப்படுத்திவிடாது. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் பல்வேறு விதமான பரிவாரங்களும் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் மத்தியிலும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. பாஜக தேர்தலில் தோல்வி அடைவதுமட்டுமே மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டு வரும் மதவெறி நஞ்சை அகற்றுவதற்குப் போதுமானதல்ல. இந்துத்வா சக்திகளை யும் மற்றும் வகுப்புவாதத்தின் பல்வேறு வடிவங்களையும் எதிர்த்து முறியடித்திட சித்தாந்தப் போராட்டங்களை நடத்த வேண்டியது முக்கியமாகும். மதவெறிக்கு எதிராக உறுதியுடன் போராடும் ஒரு கட்சி என்ற முறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் மத்தியில் சித்தாந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு என்றே வலுவான ஓர் அமைப்பைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். எனவே, மதவெறிக்கு எதிராகவும், மதச்சார்பற்ற, ஜனநாயக மாண்புகளைப் புகுத்திடக்கூடிய விதத்தில் சமூக, கலாச்சார மற்றும் கல்வித்துறைகளில் தலையிட்டு சமூக, கலாச்சார மற்றும் கல்வித்துறை களில் தலையிடவும் வேண்டி அறிவுஜீவி கள் மற்றும் கலாச்சார ஸ்தாபனங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான மேடையை உருவாக்குவதற்கான வழிவகைகளைக் கண்டறிவது குறித்தும் பிளீனம் விவாதித் தது. பிளீனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஸ்தாபனரீதியான கடமைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமல்படுத்துவ தன் மூலம், நாட்டில் ஒரு வலுவான இடதுமற்றும் ஜனநாயக மாற்றை நோக்கி முன்னேறுவதைத் தீர்மானித்திடும்.
 நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தில்லிப் பதிப்பு, 7-1-2016
தமிழில்: .வீரமணி