ராணா அய்யூப்
சிங்காலைச் சந்திக்கப் புறப்பட்டோம்.
அவர் சாதாரண போலீஸ் அதிகாரியல்ல; குஜராத்பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் குழு (ஏடிஎஸ்)
கண்காணிப்பாளர், பல என்கவுண்ட்டர்களை நடத்தியவர் என்று அவரைச் சந்திப்பதன் முக்கியத்துவத்தை
மைக்கிடம் கூறியிருந்தேன்.சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) புலனாய்வு தொடங்கியிருந்த
பின்னணியில் சிங்காலின்ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட நேரம் அது.
அவரும் தன்னை சந்திக்க வருகிறவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருந்தார். எஸ்ஐடி ஏற்கெனவே
இரண்டு இளநிலைஅதிகாரிகளைக் கைது செய்திருந்தது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற
பெயரால் ஓர் அப்பாவிப் பெண்ணை நாடகமாடிக் கொன்றுவிட்டார்கள் என்பதுதான் அவர்கள் மீதானகுற்றச்சாட்டு.
வளர்க்கப்பட்ட பகைமைச் சூழல்
இதற்கான பின்னணி குஜராத்திற்கு ஒன்றும் புதிதல்ல. மக்களிடையே ஒரு பகைமைச்
சூழல் ஏற்படுத்தப்பட்டிருந்தது. நிலைமை மேலும் மோசமாகக்கூடும் என்பது தெளிவாகத் தெரிந்தது.
முதலமைச்சர் நரேந்திர மோடி, குஜராத்தின் பெருமையை அந்நியர் படையெடுப்புகளிலிருந்து
பாதுகாக்க வந்த இந்துத் தலைவராகப் பார்க்கப்பட்டார். கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத்
தொடர்ந்து முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்படுவது தொடங்கியது. உயரதிகாரிகளே கூட அந்த
அக்கிரமங்களைச் செய்தார்கள் என்றாலும் புகார்கள் நிரூபிக்கப்படவில்லை. விசாரணைக் குழுக்கள்
அனைத்தும் அதிகாரிகளின் செயல்பாடு அல்லது செயலின்மை குறித்துக் கடும் விமர்சனங்களை
வெளிப்படுத்தியிருந்த போதிலும், அடிமட்டத்தில் இருந்த சிலரைத் தவிர, அதிகார பீடத்தில்
இருந்தவர்கள் பாதிப்பின்றி நீடித்தார்கள். இதனால் ஊக்கமடைந்தவர்களாக மேலும் மேலும்
என்கவுண்ட்டர்களை நிகழ்த்தினார்கள்.குஜராத் என்கவுண்ட்டர்கள் நிகழ்த்தப்பட்ட வடிவங்கள்
மிகக் கேவலமானவை. சமீர்கான் பர்தான், சாதிக் ஜமால், இஸ்ரத் ஜஹான், ஜாவீத், சொராபுதீன்,
துளசி ராம் பிரஜிபதி உள்ளிட்டோர்‘என்கவுண்ட்டர்களில்’ கொல்லப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தாலும்
குஜராத் உயர்நீதிமன்றத்தாலும் நேரடியாக மேற்பார்வையிடப்பட்டன. மேலோட்டமாகப் பார்த்தால்
கூட, அவை மிகுந்த கவனத்துடன் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொலைகளே என்பதைத் தெரிந்துகொள்ள
முடியும். 19 வயது இளம் பெண் இஸ்ரத் ஜஹான் கொல்லப்பட்ட விதம், கொடூரச் செயல்களின் வரிசையில்
முதலிடம் பிடிக்கத்தக்கது. அதனைச் செய்தவர் சிங்கால். வேறு சில என்கவுண்ட்டர்களிலும்அவருக்குப்
பங்குண்டு என்றாலும், அவற்றில், அவர் புலனாய்வுக்குக் குறுக்கே நின்றார் என்ற அளவிலேயே
குற்றச்சாட்டு இருந்தது.
வீர விருது
2002 அக்சர்தம் ஆலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலை மிகவும் வெற்றிகரமாகக்
கையாண்டது உள்ளிட்ட அவரது வெற்றிகரமான நடவடிக்கைகள் அவருக்கு குஜராத் அரசின் வீரச்செயல்
விருதினைப் பெற்றுத் தந்திருந்தன. அந்த வயதில் இத்தகைய அங்கீகாரத்தைப் பெறுவது அவ்வளவு
எளிதல்ல.அகமதாபாத்தில் சாஹிபாக் பகுதியிலிருந்த ஏடிஎஸ் அலுவலகத்திற்கு மைக்கும் நானும்
சென்றோம். கறாரான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டோம். பாதுகாப்புப் பணியிலிருந்தவர் எங்களைக்
கண்டதும் குழப்பமும் வியப்பும் அடைந்தார் போலும். அரைப் பாவாடையும் பலவண்ணத் தலைப்பாகையும்
அணிந்த ஒரு பெண், ஒரு வெளிநாட்டு இளைஞனோடு எதற்காக ஏடிஎஸ் பொறுப்பதிகாரியைச் சந்திக்க
வந்திருக்கிறாள்?சில நிமிடங்களில் ஒரு காவலர் அங்கே வந்து, அந்தப் பாதுகாவலரிடம் குஜராத்தியில்
கண்காணிப்பாளர் அனுமதியோடுதான் வந்திருக்கிறோம் என்பதைச் சொன்னார். மைக் வழக்கமான வசீகரப்
புன்னகையுடன் காணப்பட்டான். அவனுடைய வயதில் வேறு யாராகஇருந்தாலும் அந்த சூழ்நிலையில்
கொஞ்சம் நடுங்கிப் போயிருப்பார்கள். அவன் நல்ல புரிதலோடுதான் இருந்தான் என்றாலும்,
எங்கே தடுமாறிவிடுவானோ என்ற ஐயம் எனக்குக் கொஞ்சம் இருக்கவே செய்தது. எனினும், நான்
வியக்கும் விதத்தில் சிறப்பாகச் செயல்பட்டான் அவன்.வரவேற்பறைக்குள் நுழைந்தபோது மற்ற
சிந்தனைகள் மறைந்தன. சிங்காலைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த அதிகாரிகள் முதல் காவலர்கள்
வரையிலான காவல்துறையினர் சீருடையின்றி இருந்தனர். விளையாட்டு ஷூ அணிந்திருந்தனர். இவை
அவர்களை சாமானிய மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டின. டி.வி.யில் பாலிவுட் படம்
ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அது கோவிந்தா நடித்த படம். மைக் அதை ஆர்வத்துடன் கவனித்தான்.
காத்திருந்தவர்களில் சிலரையும்அந்தப் படம் ஈர்த்திருந்தது. ஒரு இளம் காவலர் மைக் அருகில்
வந்து அமர்ந்துகொண்டு, காவலர்கள்பாணியில் ‘வணக்கம்’ வைத்தான். தனக்குத் தெரிந்த அரைகுறை
ஆங்கிலத்தில் பேசினான். மைக் எந்த நாட்டுக்காரன், இங்கே என்ன சாப்பாடு பிடித்திருக்கிறது
என்பது முதல் இரு நாடுகள் பற்றியதகவல்கள் வரையில் அவர்களுடைய உரையாடலில் இடம்பெற்றன.
மைக் தன்னை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். கொஞ்சமும் நடுக்கமோ, மிகையான ஆர்வமோ
அவனிடமிருந்து வெளிப்படவில்லை.
முன் தயாரிப்பு
அப்போது அங்கே வந்தார் ஆர்டர்லி. ‘மைதிலி தியாகி, ஐயா உங்களை அழைக்கிறார்’
என்றுகூறினார். சந்திப்பு நாடகத்தின் முதல் காட்சி தொடங்குகிறது. நாற்பதுகளின் முற்பகுதியில்
இருந்தகிரிஷ் சிங்கால், நன்கு உடையணிந்துகொண்டு, புன்முறுவலுடன் பழகுவதற்கு இனியவராகவே
காணப்பட்டார். அவரது கை விரல்களில் பாதி சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. தன் மடிக்கணினியில்
ஏதோ ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தார். மேசையில் ஓஷோ புத்தகங்கள் இருந்தன.
‘நீங்கள் ஓஷோவைப் பின்பற்றுபவரா என்று இருக்கையில் உட்கார்ந்து கொண்டே அவரிடம் கேட்டேன்.
என்னுடைய டைரியை கவனமாக மேசை மீது வைத்தேன். ரகசியமாக வீடியோ கேமரா பொருத்தப்பட்ட டைரி
அது. உணர்ச்சிவசப்படக்கூடியவரான சிங்கால், பேசுகிறபோது முக்கியமானது எதையாவது சொல்லிவிட்டால்
பதிவு செய்யத் தவறிவிடக்கூடாது என்ற எண்ணத்தால் இந்த முன்னேற்பாட்டுடன்தான் வந்திருந்தேன்.(தொடரும்)
No comments:
Post a Comment