Friday, February 25, 2022

ஆளுநர்கள் நியமனம், பங்களிப்பு, மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்



ஆளுநர்கள் நியமனம், பங்களிப்பு, மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்

-தமிழில் : ச. வீரமணி

[ஆளுநர் பதவி தொடர்ந்து இருந்திட வேண்டும் எனக் கருதினால், பின் அது சர்க்காரியா ஆணையம் குறிப்பிட்டிருந்த அளவுகோல்களை நிறைவேற்றும் விதத்தில், மாநில முதலமைச்சரால் பரிந்துரைக்கப்படும் மூன்று புகழ்பெற்ற நபர்களிலிருந்து ஒருவர்  குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட வேண்டும்.”]

கேரள மாநில அரசாங்கம், ஆளுநர்கள் நியமனம் அல்லது ஆளுநர்களைத் திரும்ப அழைப்பது தொடர்பாக மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரம் அளித்திடும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்குத் திருத்தங்களை முன் மொழிந்து, ஒன்றிய அரசாங்கத்திற்கு எழுதியிருக்கி றது.  ஒன்றிய அரசுமாநிலங்கள் அரசு ஆகியவற்றிற்கி டையேயான உறவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்த நீதியரசர் புஞ்ச்சி (Justice Punchhi) ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இது செய்யப்பட்டி ருக்கிறது.  ஆளுநர்களின் பங்கு குறித்து மாற்றங்கள் தேவை என்று நீண்டகாலமாக உணரப்பட்டு வந்த தன் அடிப்படையைப் பிரதிபலிக்கும் வகையில் கேரள அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாடை கூறும் விதமாக இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில் இப்போது ஒன்றிய அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் ஒன்றிய அரசாங்கத்தின் ஓர் ஏஜண்டாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

156ஆவது பிரிவில்  திருத்தம் வேண்டும்

ஆளுநர் ஒருவர் தன்னுடைய அரசமைப்புச்சட்டக் கடமைகளைச் செய்கையில், அரசமைப்புச்சட்டத்தின் விதிமுறைகளை மீறுகிறார் என்று காணும்போது, அவரைத் திரும்ப அழைத்திடும் விதத்தில் மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளித்திட அரசமைப்புச் சட்டத்தின் 156ஆவது பிரிவில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று இக்கடிதத்தில் கேரள அரசாங்கம் மேலும் கேட்டிருக்கிறது. சமீப காலங்களில், மோடி 2014இல் பிரதமராக வந்த பின்பு, ஆளுநர்கள் நியமனம் என்பது ஒன்றிய  அரசாங்கத்தில் ஆட்சியில் உள்ள கட்சியின் தேவைக ளுக்குச் சேவகம் செய்யும் விதத்தில் மிகவும் வெட்கக்கேடான விதத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

ஆளுநர்களில் சிலர் ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்டவர்கள். மற்றவர்கள் ஆளும் கட்சியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று விரும்புகிற வர்களும், ஒன்றிய அரசின் ஆசைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல்வாதிகளாகவும் இருக்கிறார்கள். கேரளாவில், ஆளுநர் ஆரிப் முகமது கான், அரசமைப்புச்சட்ட நெறிமுறைகளையெல்லாம் கிடப்பில்போட்டுவிட்டு மிக மோசமான நிலைப்பாடு களை எடுத்துக் கொண்டிருக்கிறார். நடப்பு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஆளுநர் ஆரம்பத்தில் சட்டமன்றத்தில் உரைநிகழ்த்துவதற்காகக் கையெ ழுத்திட மறுத்துவிட்டார். எனினும், கடைசிக் கட்டத்தில் மனந்திருந்தி அரசமைப்புச்சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு முழு உரையையும் வாசித்தார். பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனங்களின்போதும் மாநி லப் பல்கலைக் கழகங்களின்  வேந்தர் என்ற முறையில் அவருடைய பங்கு  சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.   

கண்ணூர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மறு நியமனம் தொடர்பாக முதலில் அவர் ஓர் உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார். பின்னர் அது தொடர்பாக சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார். இப்போது அவை  கேரள உயர்நீதிமன்றத்தால் சரிசெய்யப்பட்டு, நியமனம்  செல்லத்தக்கது என்று கூறப்பட்டிருக்கிறது.

 

மாநில நிர்வாகத்தில் தலையிடும் போக்கு

பாஜக ஆட்சியில் இல்லாத வேறு சில மாநிலங்க ளிலும் ஆளுநர்கள் மிகவும் நாணமற்ற முறையிலும், ஒருதலைப்பட்சமாகவும் நடந்து கொண்டிருக்கி றார்கள். மேற்கு வங்க ஆளுநர், ஜகதீப் தன்கர், முதலமைச்சருக்கு எதிராகவும், மாநில அரசாங்கத் திற்கு எதிராகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வந்தார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங் கத்தின் துறைத் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கட்டளை பிறப்பிக்கும் பணிகளிலும் ஈடுபட்டார். மகாராஷ்டிராவில், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மாநில அரசாங்கத்தால் மாநில சட்டமன்ற மேல வைக்கு நியமனம் செய்யப்பட்ட 12 உறுப்பினர்க ளுக்கான பரிந்துரைகள் மீது முடிவெதுவும் எடுக்காது  அவற்றின் மீது உட்கார்ந்திருந்தார். பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் நியமனத்திலும் வேந்தர் என்ற அந்தஸ்தில் தன் இஷ்டத்திற்குத் தலையிட்டார். இவ்வாறு மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளுநர் தலை யிட்டதன் காரணமாக, சட்டமன்றத்தில் 2021 டிசம்பரில் மகாராஷ்டிரா பொதுப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நிறை வேற்றப்பட்டுள்ளன.  

இந்தத் திருத்தங்கள், ஆளுநரான வேந்தருக்கும் துணை வேந்தருக்கும் இடையே உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சரை இணை வேந்தராக நியமிக்கப்படுவதற்காகவும், துணை வேந்தர்கள் நியமனங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டன. இந்தத் திருத்தத்தின்மூலம் ஆளுநர், அவருக்கு அனுப்பப் படும் இரு நபர்களின் பெயர்களில் ஒருவரை அவர் ஒரு மாத காலத்திற்குள் தேர்ந்தெடுத்திட வேண்டும் என்று கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாட்டில், ஆளுநர் ஆர்.என்.ரவியும்கூட பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் சம்பந்தமாக நேரடியாகப் பிரச்சனைகளைக் கையாண்டு கொண்டிருக்கிறார். ‘நீட்தேர்வு சம்பந்தமாக, சட்ட மன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை நீண்டநாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்து விட்டு, திருப்பி அனுப்பியிருந்தார். பிரச்சனை என்ன வென்றால்,  ஒரு குறிப்பிட்ட ஆளுநர் அல்லது வேறொரு வர் தவறாக நடந்துகொள்கிறார் என்பதல்ல. அதற்கும் மேல்  ஆழமான அளவில் பிரச்சனைகள் இதில் அடங்கி யிருக்கிறது

 

ஒன்றிய அரசுக்கு கடமைப்பட்டவர்களாக...

ஆளுநர்களை நியமனம் செய்வது தொடர்பாக,  அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய நிலை,  அந்த நபர் ஒன்றிய அரசாங்கத்தால் நியமனம் செய்யப்படக் கூடிய நிலை இருந்து வருகிறது. இது தவிர்க்க முடியாத விதத்தில்  அந்தப் பதவியில் நியமனம் செய்யப்படும் நபர், முழுமையாக ஒன்றிய அரசின் பிரதிநிதியாகச் செயல்படுவதற்கு இட்டுச்செல்கிறது. இவ்வாறு ஒன்றிய அரசாங்கம் ஆளுநரை நியமனம் செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கும்வரை, ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுவது, அதற்காகப் பொது வாழ்வில் ஈடுபட்ட வல்லுநர்கள் அல்லது அரசியல்வாதி கள் அல்லாத சமூகச் செயற்பாட்டாளர்கள் போன்ற வர்களை அப்பதவிக்காகப் பரிந்துரைப்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது

உண்மையில், கடந்த கால அனுபவங்கள் நமக்குக் காட்டுவது என்னவென்றால், அரசியல்வாதிகள் அல்லாது ஓய்வுபெற்ற அதிகாரிகள், ஆளுநர் பொறுப்பு க்கு வந்திருந்தவர்கள், மிகவும் மோசமாகவே நடந்து கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் இந்தப்பதவி யில் வேலை எதுவும் இன்றி சம்பளம் மட்டும் வாங்குவதற்காக முற்றிலுமாக ஒன்றிய அரசாங்கத் திற்கே கடமைப்பட்டவர்களாக இருந்து வந்திருக்கி றார்கள்.

 

ஸ்ரீநகர் மாநாட்டு பரிந்துரை

அதனால்தான், ஒன்றிய அரசாங்கம்-மாநில அர சாங்கங்கள் உறவுகள் தொடர்பாக 1983இல் ஸ்ரீநகரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் , ஆளுநர் பதவிக்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்தினால் அனுப்பப்படும் நபர்களின் பட்டியலிலிருந்து ஒருவரைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுத்து நியமனம் செய்திட வேண்டும் என்று பரிந்துரைத்து அறிக்கை வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், நீதிபதி சர்க்கா ரியா ஆணையத்திற்கு அனுப்பியிருந்த முன்மொழிவி லும், புஞ்ச்சி ஆணையத்திற்கு அனுப்பியிருந்த முன் மொழிவிலும், இதையே கூறியிருந்தது. 2008 அக்டோப ரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, ஒன்றிய அரசாங்கம்-மாநில அரசாங்கங்கள் இடையே உறவுகளை மாற்றியமைப்பது தொடர்பான அணுகு முறை ஆவணம் (‘Approach Paper on Restruct uring of Centre-State Relations) ஒன்றை நிறை வேற்றியது. இந்த ஆவணத்தில் கூறப்பட்டிருப்பதாவது

ஒன்றிய அரசாங்கத்தால் மாநிலங்களுக்கு ஆளு நர்கள் நியமனம் செய்யப்படும் முறை காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது. இது கூட்டாட்சி ஜனநாயக அரசியலுக்கு உகந்ததல்ல. ஆளுநர் பதவி தொடர்ந்து இருந்திட வேண்டும் எனக் கருதினால், பின் அது சர்க்காரியா ஆணையம் குறிப்பிட்டிருந்த அளவுகோல்களை நிறைவேற்றும் விதத்தில், மாநில முதலமைச்சரால் பரிந்துரைக்கப்படும் மூன்று புகழ்பெற்ற நபர்களிலிருந்து ஒருவர்  குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட வேண்டும்.” இப்போதுள்ள ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் ஆளுநர் நியமனம் தொடர்பாகவோ மற்றும் அவரின் செயல்பாடுகள் தொடர்பாகவோ எவ்விதமான சீர்திருத்தத்திற்கும் சாத்தியம் இல்லை. என்ன செய்ய முடியும் என்றால் எதிர்க்கட்சி மாநில அரசாங்கங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக விழிப்புடன் இருந்திட வேண்டும். இத்துடன் மாநில சட்டமன்றங்கள், பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் போன்றவற்றில், சட்டத்தில் அளிக்கப் பட்டுள்ள விதிமுறைகளையும் வரம்புகளையும் ஆளுநர் மீறமுடியாத விதத்தில் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.   

பிப்ரவரி 23, 2022, 
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி