Tuesday, September 6, 2016

குஜராத் கோப்புகள் 7 என் கவுண்ட்டர் அதிகாரியுடன் கிடைத்த அப்பாயின்ட்மென்ட்


ராணா அய்யூப்
மறுநாள் காலை நான் தொலைபேசியில் உரையாடத் திட்டமிட்டிருந்தவர் ஜி.எல். சிங்கால்.2004 ஜூன் 15ல் இஸ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரை, இரண்டு அதிகாரிகளோடுசேர்ந்து சுட்டுக்கொன்றவர் அவர். அந்த என்கவுண்ட்டர் தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் நியமித்திருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது விசாரணையை முடுக்கிவிட்டிருந்தது.என்கவுண்ட்டர் நடந்த மறுநாள் காலையில், காவல்துறை உயரதிகாரியும் பயங்கரவாத எதிர்ப்புநடவடிக்கைக் குழுவின் தலைவருமான டி.ஜி. வன்சாரா செய்தியாளர் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தார்.
இஸ்ரத் ஜஹான் பயங்கரவாத இயக்கமான லஸ்கர்-இ-தொய்பா அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவள், முதலமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்காகஅனுப்பப்பட்டவள் என்று முத்திரை குத்தப்பட்டது.வன்சாரா ஒரே நாளில் ஒரு ‘ஹீரோ’ நிலைக்கு உயர்த்தப்பட்டார். அவருடன் இணைந்து இந்தப்பெருமையைப் பெற்ற மற்ற உயரதிகாரிகள் என்.கே. அமின், தருண் பேரட், கிரிஷ் லக்ஷ்மன் சிங்கால்ஆகியோராவர்.
நாட்டை உலுக்கிய அறிக்கை
இஸ்ரத்தின் பெற்றோர் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள். உச்சநீதிமன்ற ஆணைப்படிகுஜராத் உயர்நீதிமன்றம் ஒரு நீதித்துறை குழுவை நியமித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி தமங் தலைமையிலான அந்தக் குழு 2008ல் அளித்த அறிக்கை நாட்டையே உலுக்கியது. "இஸ்ரத் ஜஹான்மீதான தாக்குதல் ஒரு போலி என்கவுண்ட்டர்" என்று கூறிய அந்த அறிக்கை, மேல் விசாரணைக்குப்பரிந்துரைத்தது. ஆனால் மாநில அரசு வழக்கைக் கிடப்பில் போட்டது.
இஸ்ரத் குடும்பத்தார் உயர்நீதிமன்றத்தைஅணுகினர். அதன் பின்னர்தான் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குழு அமைக்கப் பட்டது.2013ல் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்தியப் புலனாய்வுத் துறைக் குழு (சிபிஐ டீம்) புலனாய்வை மேற்கொண்டது. நடத்தப்பட்ட என்கவுண்ட்டர் போலியானது என்ற முடிவுக்கு வந்தசிபிஐ குழு, அதை நடத்திய உயரதிகாரிகளை குற்றம் சாட்டப்பட்டவர்களாகப் பட்டியலிட்டது. உச்சநீதிமன்றத்தின் கட்டளைப்படி அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) 2010ல் புலன் விசாரணையைத் தொடங்கியிருந்த நேரத்தில்தான் நான் சிங்காலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.சிங்கால் வீட்டில் தொலைபேசி ஒலித்தது. அவரே எடுத்துப் பேசினார்.
வெளிநாட்டவருக்கான ஆங்கிலத்தில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அப்பாயிண்ட்மென்ட் கேட்டேன். சிறிது நேரம்மவுனமாக இருந்த அவர், வேறொரு நாளில் தொடர்பு கொள்ளுமாறு சொல்லிவிட்டு முடித்துக்கொண்டார். என்னுடைய உண்மையான புலனாய்வை இவரிடமிருந்துதான் தொடங்கத் திட்டமிட்டிருந்தேன். அவரோ இப்படிச் சொல்லிவிட்டார். என்ன செய்வது?
அழுத்தத்தை மறக்கடித்த கலைக்கூடம்
காலைப் பத்திரிகைகளில் சிங்காலை எஸ்ஐடி கைது செய்வது தவிர்க்க முடியாதது என்பதுபோல் செய்தி வந்திருந்தது. இத்தகைய பதற்றமான நிலையில் சிங்கால் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வழிகளைத்தான் யோசித்துக்கொண்டு இருப்பாரேயன்றி, வெளிநாட்டிலிருந்து வந்துள்ள ஒரு வெளிநாட்டு சினிமாக்காரருக்கு பேட்டியளிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார் என்பதுபுரிந்தது.
என்னோடு வரவேண்டிய வேலை எதுவும் இல்லை என்று நான் சொன்னதில் மகிழ்ச்சியடைந்தமைக், விடுதியிலிருந்த கிரீன்லாந்து நாட்டுப் பெண்ணும், நாங்கள் பானி என்று அழைத்தவளுமாகிய தனது தோழியுடன் வெளியே கிளம்பினான்.அன்று மாலை நான் கேமரா கலைஞனான நண்பன் அஜய் அழைத்திருந்தபடி, கலைக்கூடத்தில்அவனுடைய நண்பரின் புகைப்படக் கண்காட்சிக்குச் சென்றேன். அஜய் என்னை ஒவ்வொருவருக்கும்அறிமுகப்படுத்தினான். அவர்கள் என்னிடம் ‘உங்கள் படத்திற்கு கேமராவை இயக்குவது யார்’,‘என்ன கேமரா பயன்படுத்துகிறீர்கள்’ என்று கேட்டார்கள். இத்தகைய கேள்விகளை எதிர்பார்த்தேசென்றிருந்ததால் எல்லோருக்கும் அமைதியாகப் பதிலளித்தேன்.
கல்லூரி மாணவர்கள் குழு ஒன்றும் வந்திருந்தது. ஒருவன் கிட்டார் வாசித்துக்கொண்டிருந்தான். சிலர் தனித்தனியாகவும் சிலர் இணைகளாகவும் அமர்ந்திருந்தார்கள். கலைக்கூடத்தில் அந்தநேரத்தில் நான் எனது புலனாய்வு, காவல்துறை அதிகாரிகள், என்னுடைய சினிமா முகமூடி,எனக்குள் ஏற்பட்டிருந்த ஒருவித உதறல்..... அனைத்தையும் மறந்தேன். நானும் கலைத்துறை மாணவர்களில் ஒருத்தியானேன்.
எதிர்பாரா அழைப்பு
எனது குடும்பத்தாருடன் சில நாட்களாக எதுவுமே பேசவில்லை என்ற நினைப்பு வந்தது.விடுதிக்குப் பக்கத்தில் இருந்த இணையத் தொடர்பு மையத்திலிருந்துதான், அதுவும் எப்போதாவதுதான், அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன்.
அமித் ஷா விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததிலிருந்தே அவர்களுக்கு என்னைப்பற்றிய கவலை கூடுதலாக இருந்தது.தனது வண்டியில் அழைத்து வந்த அஜய்யிடம், விடுதிக்கு அருகிலிருந்த வணிக வளாகத்தில்,சில பொருட்களை வாங்குவதற்காக இறக்கிவிடச் சொன்னேன். சில பொருள்களை வாங்கியபடி,அருகிலிருந்த பொதுத் தொலைபேசி நிலையத்திற்குள் சென்றேன். குடும்பத்தினருடன் தொடர்புகொள்ளப் பாதுகாப்பான இடம் அது.எனக்கு எப்போதும் ஊக்கமளிக்கும் அம்மாதான் முதலில் பேசினார்.
நான் விரைவில் திரும்பிவந்துவிட வேண்டுமென்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார். குடும்பத்தாருடன் கூட தொடர்புகொள்ள முடியாமல், இது என்ன வாழ்க்கை என்ற சிந்தனை எனக்கும் ஏற்படவே செய்தது.அடுத்த நாள் காலையில் மீண்டும் சிங்காலுக்கு, எதிர்பார்ப்பின்றி, போன் செய்தேன். இம்முறைஅவர் தன்னைச் சந்திக்க வரலாம் என்றார். நடக்குமோ நடக்காதோ என்று மிரட்டிக் கொண்டிருந்த என் புலனாய்வுப் பயணம் தொடங்கியேவிட்டது.
(தொடரும்)



No comments: