Tuesday, May 31, 2016

பகாசுரன் - மூன்றாம் நாள்மூன்றாம் நாள்

ஏற்கனவே மாலை நேரமாகிவிட்டது. பையன்கள் லீச்சி பழங்களைச் சாப்பிடுவதில் மிகவும் மும்முரமாக இருந்தார்கள். அந்தப் பழத்தின் முள்தோலை உரித்து ஒவ்வொரு பழமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில், சேகர் வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருக்கும் சத்தத்தைக் கேட்டு, அவர்கள் தங்கள் தலையைத் தூக்கி சேகரைப் பார்த்து சிரித்தனர். பதிலுக்கு, அவரும் தன் புருவங்களை உயர்த்தி அவர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, வீட்டிற்குள் உடைமாற்றுவதற்காகச் சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்தபோது, அன்றைய பகல் பொழுதின்போது விபத்து நடந்த இடத்தில் மலர் விற்பனையாளர் ஒருவரைத் தாங்கள் பார்த்தது ரவிக்கு நினைவு வந்தது. அதுகுறித்து சேகரிடம் சொல்வதற்காகக் காத்திருந்தான்.
சேகர் ஓய்வாக வந்து அமர்ந்தபின், ரவி, ‘‘மாமா, மதியம் நாங்கள் ஒரு மலர்க்கொத்து விற்பனையாளரைச் சந்தித்தோம். அவர் உங்களை ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்,’’ என்றான். அவ்வமயம் தேநீர் கோப்பைகளை எடுத்து வந்த ரேகா, ‘‘ஓ, அது தன்வீராக இருக்கவேண்டும்,’’ என்றார். ‘‘ஆம், அம்மா’’ என்று அபியும் உறுதிப்படுத்தினான்.
‘‘ஓ, தன்வீரா?’’ சிரித்துக்கொண்டே சேகர் கூறினார்: ‘‘அந்த சமயத்தில் அவன் ஓர் அற்புதமான வேலையைச் செய்தான். மிகவும் ஏழையான அவனை அரசு அதிகாரிகள் எப்படியெல்லாம் அலைக்கழித்தார்கள். அப்போது அவன் கன்னாட்பிளேசில் தன்னுடைய மலர்க் கடையுடன் ஒரு சிறிய சிற்றுண்டி சாலையையும் நடத்தி வந்தான். அப்போது அவனை ஒருவர் இருவர் அல்ல, ஏராளமானோர், அநேகமாக எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களும் பிடுங்கி எடுத்துவிட்டார்கள்.’’ பிரதீப் ஒன்றும் புரியாமல் சேகரைப் பார்த்தபோது, சேகர் அவர்களுக்கு தன்வீரின் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
அன்றைய தினம் போலீசுக்கு மற்றும் ஒரு மிகப்பெரிய தினமாகும். அன்றைய தினம் போலீசாரின் லாக்கப்பில் பதினேழு அதிகாரிகள் ஒன்றாக உட்கார்ந்திருந்தார்கள்.  அது வருந்தத்தக்க தினம் என்று சொல்லக்கூடிய அதே சமயத்தில் திருப்தி தந்த நிகழ்வுமாகும். அவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் எப்படி இருந்திருக்கும் என்றும் அவர்களுக்குள் எந்தவிதத்தில் பேசிக்கொண்டிருந்திருப்பார்கள் என்றும் சற்றே கற்பனை செய்து பாருங்கள்.
தன்வீர் தன் சிற்றுண்டி சாலையை மிகச் சிறிய அளவில் தொடங்கியபோது, அவனுக்கு அதற்கான உரிமம் வழங்கப்பட வில்லை. இதற்காக அவன் அதிகாரிகளை எத்தனையோ தடவை சந்தித்துக் கேட்டபோதும், அவனுக்கு உரிமம் தரப்படவில்லை.
ஒருநாள் அவன் ஒரு முறையீட்டுடன் வந்தான். ‘‘ஐயா, பிரகாஷ் என்பவர் நகராட்சியில் அமலாக்கப்பிரிவு ஆய்வாளராக மிகவும் வல்லமையுடன் இருக்கிறார். அவர் என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார். ஒருபக்கம் என்னுடைய சிற்றுண்டி சாலையை நடத்துவதற்கான உரிமத்தை எனக்கு அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். மறுபக்கம், அதனை உரிமம் இல்லாமல் நடத்திட ஒவ்வொரு மாதமும் மூவாயிரம் ரூபாய் தருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு என்னால் தர முடியாது.’’
அவனிடம் கேட்கப்பட்டது. ‘‘முழு உண்மையையும் சொல்லிவிடு. ஒரேயொரு அதிகாரி மட்டும் உன்னிடம் லஞ்சம் கேட்பது என்பது சாத்தியமே இல்லை. மேலும் பலர் இருக்க வேண்டுமே,’’ என்று கேட்டோம். பின்னர் அவன் ஒரு நீண்ட பட்டியலுடன் வந்தான். பின்னர் எங்களிடம், ‘‘என்னுடைய சம்பாத்தியத்தில் 90 சதவீதம் இவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கே போய்விடுகிறது, ஐயா’’ என்றான்.
பின்னர் தன்வீர் ரகசியமான முறையில் என்னென்ன செய்ய வேண்டும் என்று சில அறிவுரைகள் கூறப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவனைப் பார்க்க வருகிறவர்கள் அனைவரையும் ரகசியமாக வீடியோ மற்றும் ஆடியோ மூலம் பதிவு செய்திடவும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சமயத்தில் தன்வீர் மிக அற்புதமாகச் செயல்பட்டான். அவனைப் பார்க்க வந்த ஒவ்வொருவரையும் அவர்கள் பேசியவற்றையும் அவர்களுக்குத் தெரியாமல் தன்வீர் பதிவுசெய்தான்.
இதில் பிரதான கயவன் பிரகாஷ் ஆகும். அவன் மிகவும் வல்லமை மிக்க  அதிகாரி. மற்றும் அவனுக்கு மேல்மட்டத்தில் நல்ல தொடர்பு இருந்தது,  தன்வீர் முதலில் மற்றொரு ஆய்வாளரிடம் பேசிய உரையைத்தான் பதிவு செய்தான். அந்த ஆய்வாளர், ‘‘பிரகாஷ் கொடுத்த வேலையை முதலில் செய்துவிடு,’’ என்றார். அதற்குத் தன்வீர், ‘‘நான் இந்த மாதம் 10ஆம் தேதிதான் பணம் கொடுத்தேன்,’’ என்றான். அதற்கு அந்த ஆய்வாளர் ‘‘அது சென்ற மாதத்திற்கானது. இந்த மாதத்திற்கான தொகையை பிரகாஷிடம் அடுத்த ஓரிரு நாட்களில் கொடுத்துவிடு,’’ என்கிறார். பின்னர், தன்வீரை எச்சரிக்கும் விதத்தில், ‘‘இதில் ஏதேனும் குளறுபடி நடைபெற்றால், பிரகாஷிடமிருந்து ஒரு செய்தி போனால் போதும். உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது,’’ என்கிறார். பின்னர் மேலும், ‘‘எனவே, முதலில் அவரது வேலையைச் செய்துவிடு,’’ என்று அந்த ஆய்வாளர் அவனுக்கு அறிவுரை நல்குகிறார்.
மற்றொடு பதிவு தன்வீர் பிரகாஷுடன் பேசுவதாகும். பிரகாஷ் அவரிடம், ‘‘இந்த மாதத்திற்கான தொகையை திங்கள் கிழமை கொடுத்துவிடு. அதனைத் தொடர்ந்து எதிர்காலத்தில் இத்தொகையை நீ யாரிடம் கொடுக்க வேண்டும் என்று பின்னால் சொல்கிறேன்,’’ என்று கூறுகிறார்.
அதேபோன்று, பின்னர் இரு கான்ஸ்டபிள்கள் தன்வீரிடம் பேசுவதைப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஒரு கான்ஸ்டபிள், தன்வீரிடம், ‘‘முதலில் எங்களுக்குக் கொடுத்துவிடு. பின்னர் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிசருக்குக் கொடு. அதன் பின்னர் டிவிஷன் ஆபிசர். கடைசியாக ஹெட் கான்ஸ்டபிளுக்குக் கொடு. இப்படித்தான் இந்தக் கடையை நீ நடத்திட முடியும்.’’
அடுத்து, இவ்வாறு இரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட, மற்றொரு பதிவில், தன்வீரிடம் 500 ரூபாய் தொகையை ஒரு அஸிஸ்டண்ட் லேபர் கமிஷனர் வாங்க மறுக்கிறார். அவர் அவனிடம்,  ‘‘இந்தத் தொகை யாருக்கு வேண்டும்? என்னை என்ன பியூன் என்று நினைத்தாயா? இதை நீயே வைத்துக்கொள்,’’ என்கிறார். 
இவ்வாறு அவன் இரகசியமாகப் பதிவு செய்து வைத்திருக்கும் ஒலிநாடா தொடர்கிறது. போலீஸ், தொழிலாளர் துறை, சுகாதாரத் துறை, துப்புரவுத்துறை, குடிநீர் விநியோகத்துறை, புதுதில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அமலாக்கப்பிரிவினர் என அனைத்துத் துறையினரும் அவனிடம் வந்து மாமூல் கேட்பது அல்லது மாதாந்திர மாமூலைப் பெற்றுச் செல்வது மற்றும் அவ்வாறு மாமூல் தராவிட்டால் அவன் கடை என்னாகும் என்றும் அவன் கடையில் உள்ள சாமான்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுவிடும் என்றும் அவனை மிரட்டுவது பின்னர் மிகப் பெரிய தொகை கொடுத்தால்தான் மீண்டும் அவை திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அவனிடம் கூறுவது - என அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
பிரதீப் பொறுமையிழந்து கேட்டான்: ‘‘கடைசியாக என்ன நடவடிக்கை எடுத்தீங்க?’’
சேகர், ‘‘மிகவும் தெளிவான முறையில் எங்களுக்கு சாட்சியங்கள் கிடைத்துவிட்டதால், ஒரே நாளில் 17 அதிகாரிகளையும் கைது செய்தோம். இவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஊடகங்கள் நன்கு வெளிக் கொணர்ந்தன. இது புதுதில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் நிர்வாகத்தையே ஓர் உலுக்கு உலுக்கியது.’’ பின்னர் சிரித்துக்கொண்டே, ‘‘கடைசியில் வேறு வழியின்றி இக்கூட்டத்தின் தலைவன், அவர்களது அரசியல்வாதி தலைவரிடம் உதவிக்காக ஓடினான். பின்னர் அவர்கள் மேற்கொண்ட கூத்துகள் அனைத்தையும் டிவியில் பல்வேறு அலைவரிசைகளில் நாங்கள் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோம்,’’ என்றார்.
பின்னர் அபி, ஓர் இளைஞனை ஒரு டிராபிக் போலீஸ்காரர் மிரட்டிக்கொண்டிருந்ததை, தன்வீர் பார்த்து விட்டுத் தங்களிடம் கூறியதை அவரிடம் கூறினான்.  அந்தப் போலீஸ்காரன் அந்த இளைஞனிடம், ‘‘நீ பயங்கரவாதிபோலத் தெரிகிறது,’’ என்று கூறியதாக ரவி சேகரிடம் கூறினான். சேகர் சிரித்துக்கொண்டார். பின்னர் அந்தப் பையன்களிடம் ‘‘வெளியே சென்று வந்தீர்களே, பயணம் எப்படி இருந்தது’’ என்று விசாரித்தார். ரவி, ‘‘மிக நன்றாக இருந்தது. கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மட்டும்  மேடு பள்ளமாக இருந்ததால் பயணம் கொஞ்சம் சிரமமாக இருந்தது,’’ என்றான்.
……
அடுத்த நாள், காலை, பிரதீப் தன்னுடைய படுக்கையின் மீது மிகவும் சோம்பலுடன் உட்கார்ந்திருந்தான். அந்த சமயத்தில் மயில்களின் அகவல்கள் அவனை எழுந்து உட்கார வைத்தன. பின்னர் அவன் அபியையும், ரவியையும் பார்த்தான். அவர்கள் இன்னமும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். அப்போது நாய்க்குட்டிகள் உள்ளே நுழைந்ததைப் பார்த்து, ‘‘ஹல்லோ, நண்பர்களே,’’ என்று அழைத்தான். அவனிடம் வந்து சற்றே வால்களை ஆட்டிவிட்டு, பின்னர் அவை அபியிடம் சென்றன. அவைகள் மிகவும் அன்புடன் வால்களை வேகமாக ஆட்டிக்கொண்டே, மிகவும் மெதுவாகக் குரைத்து அபியை எழுப்பின. அபி எழுந்திரிக்கவில்லை. மிகவும் குண்டாக இருக்கும் புஜ்ஜி அவன் கைகளை நக்கியது. தூங்கி வழிந்து கொண்டே அவன் திரும்பிப் படுத்தான். பின்னர் புஜ்ஜி தன்னுடைய முன்னங் கால்களால் அவனது தோள்களில் பிராண்டியது. அபி எழுந்துவிட்டான். அவற்றின் தலையில் செல்லமாகத் தட்டி, ‘‘ஹை, புஜ்ஜி, ஹை, ஃப்ரூட்டி’’ என்று அழைத்தான். பாப்லு படுக்கையில் படுத்துக்கொண்டே நெளிந்து காண்பித்தது. பின்னர் அபியின் முகத்தை நக்கத் தொடங்கியது. அபி அதனை மிக நெருக்கமாக வைத்துக்கொண்டு, தட்டிக்கொடுத்தான்.
அவற்றைப் பார்த்துக்கொண்டே, பிரதீப், ‘‘அபி, நாம் வாக்கிங் போகும்போது அவற்றையும் ஏன் அழைத்துச் செல்லக்கூடாது?’’ என்று கேட்டான்.
மகிழ்ச்சியுடன், அபியும் அதற்கு ஒப்புக்கொண்டான். ‘‘நல்ல யோசனை. அப்படியென்றால் நாம் அனைவரும் அதற்கு தயாராகி விடுவோம்.’’ படுக்கையிலிருந்து துள்ளிக்குதித்து எழுந்த அபி, தன் செல்ல நாய்க்குட்டிகளிடம், ‘‘ஸ்ஸ்ஸ், கொஞ்சம் பொறுங்க. நாங்கள் உங்களை வெளியே அழைத்துச்செல்கிறோம்,’’ என்று கூறிக்கொண்டே, ரவியை எழுப்பினான்.
அவர்கள் அனைவரும், ஒவ்வொரு நாய்க்குட்டியின் நாய்வாரையும் ஒவ்வொருவரும் தனித்தனியே பிடித்துக் கொண்டு வெளியே சென்றார்கள். பாப்லு, பிரதீப்பை ஒவ்வொரு விளக்குக் கம்பத்திடமும் நிற்க வைத்துவிட்டு, தன் கால்களை உயர்த்தி,  கொஞ்சம் சிறுநீர் கழித்துவிட்டுத்தான், தொடர்ந்து நடந்துவரும்.
இவ்வாறு ஒரு விளக்குக் கம்பத்தின் அருகில் நிற்கும்போது, பிரதீப், ‘‘அபி, தில்லியில் கடுங் குளிர்காலத்தில், இவற்றுடன் எப்படி சமாளிக்கிறீர்கள்?’’ ‘‘ஹே. குளிர்காலங்களில் அவை மிகவும் சந்தோஷமாக இருக்கும். அவை, தங்களுக்குள் ஒன்றுக்கொன்று கட்டிப்பிடித்து முரட்டுத்தனமாகத் தள்ளிக்கொண்டு வெப்பம் தரும் ஹீட்டர் முன் அமர்ந்து கொண்டிருக்கும். இரவுகளில் மிருதுவான துணிகளால் தயார்செய்யப்பட்ட தங்கள் படுக்கைகளில் சொகுசாக அமர்ந்துகொண்டிருக்கும்.  காலையில் விடிந்ததும், அவர்களுக்கான வண்ணநிற கம்பளி ஜாக்கெட்டுகளை அணிவிக்க வரும்போது சந்தோஷமாக அனுமதித்திடும்.  மேலும், அவை எங்களுடன் வெளியே வரும்போது, தாங்கள் அணிந்திருக்கும் உடைகளை மிகவும் பெருமையுடன் மற்ற நாய்களிடம் காட்டிக்கொண்டு வரும்.’’  அபி, மேலும் சிரித்துக்கொண்டே, ‘‘அவை தங்களுக்குள் ஒன்றையொன்று `பவ்-வவ்’ என்று குரைத்துக்கொண்டு, வாழ்த்திக்கொள்ளும்,’’ என்று கூறி அவை  எப்படிக் குரைக்கும் என்று செய்தும் காட்டினான். பிரதாப்பும், ரவியும் இதனைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தனர்.  
அவர்கள் வாக்கிங் செல்வதைத் தொடர்ந்ததால், அபி அவர்களிடம் தொடர்ந்து, ‘‘குளிர்காலம் நன்றாகத்தான் இருக்கும். இருந்தாலும் இவற்றைப் பாதுகாப்பது என்பதுதான் மிகப்பெரிய பிரச்சனை. இடி இடித்தாலோ அல்லது மக்கள் பட்டாசுகளை வெடித்தாலோ இவை பயந்துபோய், கட்டிலுக்குக் கீழே வந்து படுத்துக்கொள்ளும். வெளியே வரவே வராது. மிகவும் பயந்தாங்கொள்ளிகள். அவை  நடுங்கிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில், அவற்றின் காதுகளை அடைத்தும் அவற்றுக்கு தைரியம் கொடுத்தும் அவற்றை சகஜ நிலைக்குக் கொண்டு வருவோம்.’’ பிரதீப் நாய்க்குட்டிகளை மிகவும் செல்லமாகப் பார்த்துக்கொண்டே, ‘‘அடடே,’’ என்று மிகவும் பரிதாபப்பட்டான்.
திரும்புகையில், அவர்கள் தங்கள் மூக்கில் ஏற்பட்ட நெடியினால் கடுமையாகத் தும்மினார்கள். பின்னர் தங்களை சரிப்படுத்திக்கொண்டு, காலை உணவை உட்கொண்டார்கள். பின்னர், 11 மணியளவில் புஜ்ஜியும், பப்லுவும் ஒரு சோபாவிலிருந்து இன்னொரு சோபாவிற்கு என்று விளையாடிக்  கொண்டிருக்கையில், அவர்கள் வீட்டிற்கு வெளியே வந்து தங்களுடைய காரில் ஏறிக்கொண்டார்கள். அபி, டிரைவரிடம், காஷ்மீரி கேட், தர்யா கஞ்ச், இந்தியா கேட், ஐஎன்ஏ மார்க்கெட், கரோல் பாக் பின்னர் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று கூறினான்.
ஐ.ட்டி.ஓ. அருகில் அவர்கள் வருகையில் சாலையின் இரு மருங்கிலும் ஏராளமான வாகனங்கள் போகவர இயலாமல் போக்குவரத்து நெருக்கடியுடன் இருப்பதைப் பிரதீப்பும் ரவியும் பார்த்தார்கள். போபாலில், இவ்வளவு வாகனங்களை அவர்கள் பார்த்ததே இல்லை. இதை ரவி, அபியிடமும் கூறினான். டிராபிக் கான்ஸ்டபிள்கள் புகைமண்டலத்துடன் வந்த காற்றை சுவாசித்துக் கொண்டும், சுட்டெரிக்கும் வெயிலில் வியர்வையால் நனைந்து கொண்டும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ‘‘அவர்களின் வேலை மிகவும் சிரமமான ஒன்று, இல்லையா?’’ என்று ரவி கூறினான். ‘‘உண்மைதான். அவர்களின் பணி, நன்றி பாராட்டா பணி. ஒரு சிறிய தவறை அவர்கள் செய்தாலும்கூட, மக்கள் அவர்கள்மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கிவிடுவார்கள்,’’ என்று அபி கூறினான். ‘‘இவ்வாறு சில போலீஸ்காரர்கள் கடினமாக வேலை செய்யும் அதே சமயத்தில், சில போலீஸ்காரர்கள் மிகவும் சொகுசான முறையில் அப்பாவி மக்களிடமிருந்து பணத்தைக் கறந்து கொண்டிருக்கிறார்கள்,’’ என்று ரவி நினைத்தான். முதல்நாள் இரவு அவன் மாமா, ஒரு வரதட்சணை தொடர்பான சம்பவம் குறித்து அவர்களுக்குச் சொல்லியது அப்போது அவனுக்கு நினைவுக்கு வந்தது. டிராபிக் கான்ஸ்டபிள்கள் மிகவும் சிரமப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்ததால், அவன், தன் மாமா கூறியதை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தான்:
வரதட்சணை ஒழிப்புப் பிரிவிற்கு வந்து ஒரு பெண் தன்னுடைய கணவர் குறித்தும் அவர்தம் குடும்பத்தினர் குறித்தும் முறையிட்டிருக்கிறார். அவர் கணவரின் குடும்பத்தினர் மிகவும் ஏழைகள். அவர்கள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமென்று அதிகாரியால் அழைக்கப்பட்டார்கள்.
மிகவும் வெட்கத்துடன் தலைகுனிந்து தரையில் அமர்ந்திருந்த அவர்களைப்பார்த்து, போலீஸ் அதிகாரியும், அவருக்குக்கீழ் பணியாற்றும் ஒரு ஹெட் கான்ஸ்டபிள், ஒரு பெண் கான்டஸ்பிள் ஆகியோரும் இந்த விஷயம் எவ்வளவு சீரியசானது என்றும், எவ்வளவு ஆண்டு காலம் நீங்கள் எல்லாம் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் விளக்க முயற்சித்தார்கள். கீழே உட்கார்ந் திருந்தவர்களில் வயதானவனாக இருந்தவன் கூறினான்: ‘‘ஐயா, நாங்கள் எல்லாம் மிகவும் ஏழைகள். உண்மையில், இது பொய்ப் புகாராகும். துரதிர்ஷ்டவசமாக, என்னுடைய மருமகள் இன்னொரு ஆளுடன் சோரம் போனாள். இதை நாங்கள் ஆட்சேபித்ததால் இந்தப் பொய்ப் புகாருடன் உங்களிடம் வந்திருக்கிறாள்,’’ என்றான். உடனே போலீஸ் அதிகாரி அவன் வாயை மூடச் சொல்லிவிட்டு, இவர்கள் மீது வழக்குப் போட்டு, உங்களைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டிப்பான குரலில் எச்சரித்தார். ஹெட் கான்ஸ்டபிளும், பெண் கான்ஸ்டபிளும் இவர்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல் நடித்துக்கொண்டு,  அதிகாரியை பகைத்துக்கொள்ளாதீர்கள் என்று அறிவுரை கூறினார்கள். அவர் ஏதாவது கேட்டால், கொடுத்துவிட்டு, தப்பித்துப்போய்விடுங்கள் என்றார்கள். மேலும் கொஞ்சம் மிரட்டலுக்குப்பின் மற்றும் மேலும் கொஞ்சம் தூண்டுதலுக்குப்பின்னர், அவர்கள் 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு எதுவும் போடுவதில்லை என்றும் முடிவானது.
ஆனால், விரைவில் அவர்கள் மீது வழக்கு பதிவாகி இருக்கிறது என்று தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அக்குடும்பத்தினர் அந்த அதிகாரியைப் போய்ப்பார்த்து கோபமுடன் கேட்டிருக்கின்றனர். ஆனால் அந்த அதிகாரியோ எவ்வித மனக்கிலேசமும் இன்றி இவர்களைப் பார்த்துக் கோபப்படுவதுபோல் காட்டிக்கொண்டு, இன்னும் சில ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் வழக்கை மேலும் வலுவானதாக மாற்றி, மைனர் குழந்தைகளை எல்லாம் சிறையில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இதனால் மிகவும் பயந்துபோன அவர்கள் கடைசியாக எங்களிடம் வந்து மனு கொடுத்தார்கள். அதன் அடிப்படையில் நாங்கள் ஒரு திட்டம் தீட்டினோம்.
அந்த அதிகாரியுடனும், அவருக்குக் கீழ் வேலை பார்ப்போருடனும் இவர்கள் பேசும் அனைத்தையும் ரகசியமாக வீடியோ/ஆடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்தோம்.  அவர்கள் கோரிக்கை, இதற்கு முன் அவர்கள் பெற்ற தொகை, அவர்களுக்குள் அதனைப் பங்கிட்டுக் கொண்டமை அனைத்தையும் அவர்கள் பேசுவதன் வாயிலாகவே பதிவு செய்தோம். இப்போது புதிதாக அவர்கள் கேட்கும் தொகையையும், மைனர் குழந்தைகளைக் கைது செய்வதாக மிரட்டியதையும்கூட பதிவு செய்தோம். புகார் கொடுத்திருந்த அந்தப் பெரியவரின் மருமகளுக்கு மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பது போலீசாருக்குத் தெரியும் என்பதையும், அப்படித் தெரிந்தும்கூட பெரியவர்கள்மீது பொய் வழக்குப் போட்டிருப்பதையும் பதிவு செய்தோம்.
பின்னர் அவர்கள் இரண்டாவது தடவை லஞ்சத்தைப் பெறும்போது அவர்களை பொறி வைத்துப் பிடிக்கவும் திட்டமிட்டோம். இறுதியாக, அவர்கள் அனைவரும் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு, அவர்கள் மீது இலஞ்சம் மற்றும் பலவந்தமாய் பணம் பறித்த குற்றங்களுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அவர்கள் கார் தொடர்ந்து சென்றது. ஆனால், விரைவில் அவர்கள் மற்றொரு போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டார்கள். மீண்டும் அங்கே டிராபிக் போலீசார் நெரிசலை சமாளிக்கப் போராடிக்கொண்டிருந்தார்கள். ரவி மிகவும் நிலைகொள்ளாமல் பதட்டத்துடன் இருப்பதையும், அபி என்ன செய்வதென்று தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்ட பிரதீப் ஒரு ஜோக்  சொல்லி இறுக்கமாக இருந்த அந்த சூழலைத் தணிப்பதற்கு முயற்சித்தான்:
ரோந்து வந்து கொண்டிருந்த ஒரு போலீஸ் வேன், கார் ஒன்று சாலையில் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்தது. பின்னர் வேனில் இருந்த ஹெட் கான்ஸ்டபிள் ஆரன் அடித்து அந்தக் காரை நிறுத்தி, காரை ஓட்டிவந்த இளைஞனிடம், குடித்திருக்கிறானா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக,  ஊதிக் காட்டச் சொன்னார். அதற்கு அவன், ‘‘என்னால் முடியாது. நான் ஒரு ஆஸ்த்மா பேஷண்ட். அவ்வாறு ஊதினால் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும்,’’ என்றான். பின்னர் கான்ஸ்டபிள், ‘‘ஓ.கே. அப்படியானால் உன்னுடைய ரத்தத்தை சோதிக்க வேண்டும்,’’ என்றார். அதற்கு அவன், ‘‘அதுவும் முடியாது. ஏனென்றால் எனக்கு ரத்தசோகை வியாதி உண்டு. எங்கேனும் காயம்பட்டு என் தோல் திறந்தால், ரத்தம் வடிந்துகொண்டே இருக்கம். அதனை நிறுத்த முடியாது. அது என் இறப்புக்குக் கூட இட்டுச் செல்லலாம்,’’ என்றான். பின்னர், ஹெட் கான்ஸ்டபிள், ‘‘அப்படியா, அப்படியென்றால் உன்னுடைய சிறுநீர் மாதிரியாவது எடுத்துக் கொடு,’’ என்றார். ‘‘மன்னித்துக் கொள்ளுங்கள், சார், எனக்கு சர்க்கரை நோயும் உண்டு. அவ்வாறு தேவையில்லாமல் சிறுநீர் கழித்தால் அது என் சர்க்கரை அளவைக் குறைத்துவிடும்,’’ என்றான். ‘‘ஓ,அப்படியென்றால் இந்த நேர்க்கோட்டில் எனக்கு நேராக நடந்து காண்பி,’’ என்றார். ‘‘அதுவும் என்னால் முடியாது,’’ என்றான். ‘‘ஏன் முடியாது?’’ என்று மிகவும் நொந்துபோய் ஹெட் கான்ஸ்டபிள் கேட்டார். ‘‘ஏன் என்றால், அந்த முட்டாள்தனமான கோடு நிற்காமல் நகர்ந்து கொண்டே இருக்கும்,’’ என்றான். ஆத்திரமடைந்த ஏட்டையா, அவனைப் பிடித்து, ‘‘நான் இப்போது அந்தக் கோட்டை நகராமல் பார்த்துக்கொள்கிறேன், இப்போது நீ நடந்து காட்டு,’’ என்றார். ‘‘என்னால் அதைச் செய்ய முடியாது,’’ என்றான். ‘‘ ஏன்?’’ ‘‘ஏனென்றால் நான் குடித்திருக்கிறேன்,’’ என்று கடைசியாக அவன் ஒப்புக்கொண்டான்.
இதனைக் கேட்டு எல்லோரும் சிரித்துவிட்டனர்.அந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசலும் சரியாகிவிட்டதால் அவர்களும் சகஜ நிலைமைக்குத் திரும்பினார்கள். கார் தன் பயணத்தைத் தொடர்ந்தது.
பின்னர்,  மெட்ரோ அல்லது மேம்பாலம் கட்டும் பணிகள் பல இடங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், பல இடங்களில் அவர்களது கார் நிறுத்தப்பட வேண்டியிருந்தது. பல இடங்களிலும் மிக மோசமான முறையில் போக்குவரத்து நெரிசல் இருந்தது. அதேமாதிரியான ஒவ்வொரு இடத்திலும் அவர்களது கார் அங்குலம் அங்குலமாகத்தான் நகர்ந்தது.  கார் டிரைவர்கள் ஒவ்வொருவருமே தங்கள் காரின் ஆரனை அடித்தனர்.  அது அனைவரின் நிலைமைகளையும் மேலும் அருவருப்புக் குள்ளாக்கியது.  கார்கள் வெளியிடும் புகையால் காற்றும் மாசு அடைந்தது.
ஒரு சமயம், அவர்கள் முன் சென்று கொண்டிருந்த காரின் பின்பக்கத்தில், பைத்தியக்காரத்தனமான வாசகம் ஒன்று எழுதப்பட்டிருந்தது.  ‘‘நான் விலங்குகளை விரும்புகிறேன் - அவையின் ருசியே அலாதிதான்,’’ என்று எழுதப்பட்டிருந்தது. அபி அதைப்பார்த்தவுடன், ‘‘மேனகா காந்தி இதைப் பார்க்கணும்,’’ என்றான். மற்றொரு இடத்தில் போக்குவரத்து நிறுத்தங்களில் விற்பனையாளர்கள் தேங்காய் சில்லுகளை விற்பதைப் பார்த்தார்கள்.  டிரைவர் இவர்களிடம், ‘‘இவர்கள்  எல்லாம் நகரின் சுடுகாடுகளில் இறந்தோருக்கு காணிக்கையாக அளிக்கப்படும் தேங்காய்களை எல்லாம்  அடிமாட்டு விலைக்கு வாங்கிக்கொண்டு வந்து, இவ்வாறு விற்பனை செய்வார்கள்,’’ என்றான். அபி இதைக்கேட்டு கொஞ்சமும் அதிர்ச்சியடையவில்லை. ஆயினும் மற்றொரு சந்திப்பில், செல்லோபேன் தாள்களால் சுற்றி ஒட்டப்பட்ட புத்தகங்களையும், சஞ்சிகைகளையும் கைகளில் வைத்துக்கொண்டு சிறுவர்கள் விற்பனைசெய்வதைப் பார்த்தார்கள்.  இன்னும் சிலர் கார் ஸ்கிரீன்கள்களைக் கைகளில் வைத்துக்கொண்டு கார்களில் வருவோரை வாங்குமாறு நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் கார்களில் குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் வந்து ஏர் இந்தியா சின்னம் வரைந்த விளையாட்டு விமானப் பொம்மைகளைக் காட்டி விற்க முயன்றுகொண்டிருந்தார்கள். சிறுவர்கள் ஆர்வமாக இருப்பதைப் பார்த்து, அவர்களது பெற்றோர்கள் அவர்களை கோபத்துடன் அடக்க முயற்சித்தார்கள்.  
ஓரிடத்தில் நன்கு வழித்து சவரம்செய்யப்பட்ட அரவாணிகள், பெண்களின் உடைகளில்--பல்வேறு வண்ணங்களில் புடவைகள் மற்றும் சுடிதார் அணிந்தும், தங்கள் முகங்களில் பவுடரை அப்பிக்கொண்டும், கவரிங் நகைகளை அணிந்துகொண்டும், ஆடிக்கொண்டு பிச்சை எடுத்துக்  கொண்டும் இருந்தார்கள். அவர்களை உன்னிப்பாகப் பார்த்த ரவி அவர்களின் அவல நிலையைக்கண்டு ஆச்சர்யப்பட்டான். அவர்கள் வேடிக்கையான முறையில் கைகளைத் தட்டிக்கொண்டு, ஆண்களின் குரலில்,  கார்களில்  செல்வோரிடம் கட்டாயப்படுத்தி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  காசு கொடுக்காதவர்களை அல்லது கொஞ்சமாகக் காசு கொடுப்பவர்களைக் கடுமையான முறையில் வசைச் சொற்களால் அர்ச்னை செய்து கொண்டிருந்தார்கள். ‘‘அவர்களைப் பாருங்கள். அவர்கள் பெண்களும் அல்ல, ஆண்களும் அல்ல. எந்தப் பாலினத்திற்கும் உட்படாதவர்கள்.  எவரும் வேலைக்கு வைத்துக் கொள்ளாததால், இவ்வாறு பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளபபட்டிருக்கிறார்கள். அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.  உண்மையிலேயே நான் இவர்களுக்காக மிகவும் வருந்துகிறேன்.  அவர்களும் மனிதப் பிறவிகள்தானே. சமூகம்தான் அவர்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.  சமுதாயத்தின் நாகரிகத்தைக் காக்கக்கூடிய விதத்தில் அது நடந்துகொள்ள வேண்டும்,’’ என்று ரவி அபியிடம் கூறினான். ‘‘அவர்கள் பிச்சை எடுப்பதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் அதுமாதிரியான உணர்வுதான் வரும்,’’ என்று ரவி கூறியதை அபி ஆமோதித்தான்.
அவர்கள் அடிக்கடி, பிச்சைக்காரர்களை எதிர்கொண்டார்கள்.   சிலருக்குக் கைகள் இல்லை, சிலருக்குக் கால்கள் இல்லை, சிலருக்கு உடம்பு முறுக்கிக்கொண்டிருக்கும். இவை இயற்கையாகவும் இருக்கலாம் அல்லது செயற்கையாகவும் இருக்கலாம் அல்லது நடிப்பாகவும்கூட இருக்கலாம். சிலருக்கு கைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. மிகவும் கிழிந்த ஆடைகளுடன் அவர்கள் பழைய தகரக் குவளைகளை வைத்துக்கொண்டு பிச்சை கேட்டு யாசித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வயதான கிழவன், மிகவும் மோசமாக இருமிக்கொண்டே, இவர்களை நோக்கி பிச்சை எடுப்பதற்காக வந்தான்.  சின்ன குழந்தைகள், தங்கள் முதுகில் அதைவிடச் சிறிய குழந்தைகளை சுமந்து கொண்டு, பிச்சை கேட்டு வந்ததையும் பார்த்தார்கள். அதேபோன்று மிகவும் எண்ணெய்க்கறை படிந்த உடைகளுடன், எண்ணெய்க்கறை படிந்த பெண்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, கிழிந்த துணிகளுடனும், அழுக்கடைந்த, நன்கு சீவப்படாத தலைமுடிகளுடனும், ஒவ்வொரு வாகனத்தின் கதவுகளையும் தட்டி பிச்சை கேட்டுக்கொண்டு வந்தார்கள்.
ஒரு பக்கத்தில் ஆந்தை விழி கொண்ட தொழுநோயாளி ஒருவனை அவர்கள் பார்த்தார்கள். புருவமே இல்லாது, கண் இமைகளும் கண்ணிமைகளின் ஓரங்களும் உருக்குலைந்து, தன்னுடைய விரல்களற்ற கைகளினால் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அந்துப்பூச்சிகளால் அரிக்கப்பெற்ற கம்பளியுடன் தரையையொட்டி ஊர்ந்துசெல்லும் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, வாகனங்களின் ஊடேயுள்ள குறுகிய இடைவெளியில் மிகவும் சாதுர்யமாகப் புகுந்து வந்து அவன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். காரின் ஓரத்தில் அமர்ந்திருந்த பையன்களுக்கு வாகனத்தை ஓட்டிவரும் கவனக் குறைவான டிரைவர் எவனாவது அவன்மீது மோதி விடுவானோ என்று நினைத்தார்கள்.
பிரதீப் அபியிடம் இந்தப் பிச்சைக்காரர்கள் குறித்து முன்மாதிரியான மாநகரம் என்று சொல்லப்படக்கூடிய தில்லி மாநகர அரசாங்கம் ஏன் கவலைப்படவில்லை என்று மிகவும் ஆர்வத்துடன் கேட்டான். மிகவும் நகைச்சுவையுடன் அபி, ‘‘ஒருவேளை இவர்கள் மூலமாக நம்முடைய சாதனைகளை உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காண்பிக்க அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கலாம்,’’ என்று கூறினான். இவன் கூறியதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்கும்போது, அபி, ‘‘இது நமக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் அவர்களுடைய வேதனையைச் சற்றே நினைத்துப் பாருங்கள்.  கொஞ்ச காலத்திற்கு முன்பு பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியானதை நீங்கள் எல்லாம் பார்த்திருக்கலாம். அதாவது சமூக நலத்துறையைச் சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்ட செய்தியை நீங்கள் பார்த்திருக்கலாம்.  இவ்வாறான ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள், பெண்கள்,  பொருட்பெண்டிர், தொழுநோயாளிகள் போன்றோருக்கு உணவு, உடை மற்றும் இதர தேவைகளை அளிப்பதற்கு ஆதரவுக்கரம் நீட்டுவதற்கென்று இருப்பதாகக்கூறும் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஒப்பந்தக்காரர் ஒருவருடன் ரகசியமாகக் கைதுகோர்த்துக்  கொண்டு அவர்களுக்குப் போய்ச்சேர வேண்டிய அனைத்தையும் தாங்களே விழுங்கி ஏப்பம் விட்ட செய்திதான் அது.  இவ்வாறு ஆதரவற்றவர்கள் அனைவருக்கும் தேவையான பொருள்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் அந்த ஒப்பந்தக் காரரிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஒப்பந்தக்காரர் என்ன செய்தார் தெரியுமா? பொருள்கள் அனைத்தின் விலைகளையும் உயர்த்திக் காண்பித்தும், தரமற்ற பொருள்களை விநியோகித்தும், சமயங்களில் பொருள்களே விநியோகிக்காமல் விநியோகித்தது போல கணக்கு எழுதியும் துறை அதிகாரிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டான். இவ்வாறு அவன் பெறும் தொகையில் கணிசமான பங்கு அனைத்து அதிகாரிகளுக்கும் போய்ச்சேர்ந்துவிடும்.  பல ஆண்டு காலமாக நடந்து வந்த இந்த மாபெரும் மோசடி கடைசியில் வெளி வந்தது. இவர்களைக் கூண்டோடு கைது செய்யும்போது இவர்கள் அனைவரும் டிவி கேமராக்கள் முன் தங்கள் முகங்களைக் காட்டக் கூச்சப்பட்டது இப்போதும் எனக்கு நன்கு நினைவுக்கு வருகிறது.’’
அதேசமயத்தில், சிக்னல் பச்சை விளக்கிற்கு மாறியது. அதன் பிறகும்கூட அவர்களால் காரை வேகமாக ஓட்ட முடியவில்லை. போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சாலைகளின் குறுக்கும் மறுக்கமாய் செல்பவர்கள், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்கள், சைக்கிளில் செல்வோர், கட்டை வண்டி ஓட்டுநர்கள் என அனைவருமே சாலையைக் கடக்க முந்திக்கொண்டிருந்தார்கள். போக்குவரத்து விதிகளைப் பற்றி எவருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இவர்கள் பயணித்த கார் வேகம் எடுக்க முயன்றபோது திடீரென்று ஒரு கூட்டம் சாலையைக் கடந்தது. அக்கூட்டம் தங்கள் கைகளால் வாகனங்களை நிறுத்துமாறு சைகை செய்துகொண்டே, சாலையைக் கடந்தது. இவ்வாறு சாலையைக் கடக்கும் ஒவ்வொருவரும்  என்னவோ தாங்களே போக்குவரத்து போலீசார் என்ற நினைத்துக் கொண்டார்கள்.  ஓட்டுநருக்கு   காரை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. பின்னர், மக்கள் கூட்டம் சாலையை விரைந்து கடந்தது. ஓட்டுநர் மட்டும் நிறுத்தாமல் இருந்திருந்தால் நிச்சயம் விபத்து ஏற்பட்டிருந்திருக்கும்.   ரவி இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அபியிடம் கேட்டான்: ‘‘தில்லி என்ன, நவீன நகரமா? அல்லது நாகரிகமற்ற நாட்டுப்புறத்தார் நகரமா?’’ அபிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
பின்னர், அவர்கள் தங்கள் காரை எடுக்கவிடாத வகையில் மற்றொரு தடையும் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தது. ஒரு முக்கிய பிரமுகரின் வருகைக்காக, போக்குவரத்து திடீரென்று நிறுத்திவைக்கப்பட்டது. அவர்கள் மிகவும் பொறுமையின்றி காத்துக் கொண்டிருந்தார்கள்.  மக்கள் தங்களுக்குள் முணுமுணுப்பது நன்கு கேட்டது. கால் மணிநேரம் ஆகியிருக்கும். அப்படியும் அந்த முக்கிய பிரமுகர் வரவில்லை. அவர் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இவ்வாறு காத்திருந்த வண்டிகளில் ஓர் ஆம்புலன்சும் நின்று கொண்டிருந்தது. அவ்வாறு நின்றுகொண்டிருந்த ஆம்புலன்சைக் காட்டிக்கொண்டே அபி, அவர்களிடம், ‘‘இப்படித்தான் முன்பொரு தடவை, ஒருவனை மிகவும் ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஓர் ஆம்புலன்சில் எடுத்து வந்தார்கள். இதே மாதிரி வழியில் அந்த ஆம்புலன்ஸ் நிற்கவேண்டியதாயிற்று. கடைசியில் நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தபோது அவன் இறந்திருந்தான்.  பின்னர் இந்த செய்தி செய்தித்தாள்களில் வெளியானபோது, எந்த முக்கியமான பிரமுகருக்காக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததோ அதே பிரமுகர் இறந்த நோயாளியின் மரணத்திற்கு ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்திருந்தார். ஆனால்,  அதேபோன்று சில நாட்கள் கழித்து மீண்டும் அதே மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. அப்போதும் அவர் அதேபோன்று வருத்தம் தெரிவித்தார், ’’ என்று கூறினான்.  இவற்றையெல்லாம் கேட்டபோது ரவிக்கும் பிரதீப்புக்கும் பெரும் அதிர்ச்சி. உலர்ந்துபோன தங்கள் உதடுகளைச் சரிசெய்து கொண்டார்கள். கடைசியில், காதைச் செவிடாக்கும் விதத்தில் போலீஸ் வாகனங்களின் அலறலுடன் அந்தப் பிரமுகரின் வாகனம் சாலையைக் கடந்தது. அதன் பின்னர இவர்களுடைய வாகனமும் செல்ல அனுமதிக்கப்பட்டது.
நீண்ட மேம்பாலங்களில் செல்லும்போது மிகவும் வேகமாகச் சென்றுவிட்டார்கள். கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடங்களில் ஏற்பட்ட மந்த நிலையை அப்போது சரி செய்துவிட்டார்கள். அபி அவர்களிடம், ‘‘இந்தக் கட்டுமானப் பணிகள் எல்லாம் முடிந்தபின்னர், எதிர்காலத்தில் போக்குவரத்து மிக எளிதாகிவிடலாம். ஆயினும், யாருக்குத் தெரியும்? அந்த சமயத்தில் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாகிவிடலாம். அவற்றையும் கணக்கிட்டு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இதற்குத் திட்டமிடலில் மிகப்பெரிய எதிர்பார்ப்புத் தேவைப்படுகிறது, இல்லையா?’’ ரவி, அபி கூறியதற்கு ஆம் என்கிற முறையில் தலையசைத்தான்.
பின்னர் சிறிது நேரத்தில், அவர்கள் மறுபடியும் ஒரு போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார்கள். அவர்கள் காரிலிருந்து  இறங்கி,  உண்மையில் என்ன நடந்தது என்று பார்ப்பதற்காக, நின்றுகொண்டிருந்த வாகனங்களின் வழியே நடந்து சென்றார்கள். அங்கே மிகவும் கொடூரமான விதத்தில் ஒரு விபத்து நடந்திருந்ததைப் பார்த்தார்கள். தனியார் பேருந்து ஒன்று, மற்றொரு பேருந்தை மிகவும் முரட்டுத்தனமாக முந்த முயற்சித்தபோது, பயணி ஒருவர்மீது ஏறி அவரை  கொன்று போட்டிருந்தது. அவரது உடல் முழுமையாக நசுங்கிக் கிடந்தது, ரத்தம் அந்த உடலைச் சுற்றிலும் சிதறிக் கிடந்தது. இறந்தவரின் முகம் அடையாளம் காணமுடியாத அளவுக்கு சிதைந்திருந்தது. சிலர், இவ்வாறு தனியார் பேருந்துகளை அனுமதித்துள்ள ஆட்சியாளர்களைக் கோபத்துடன் கடுமையாகத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.   விபத்து குறித்துப் பதிவு செய்து கொள்வதற்கும், தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்து கொடுப்பதற்காகவும்  அங்கே நின்றுகொண்டிருந்த ஒவ்வொரு வரும் போக்குவரத்துப் போலீசாரின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் அவர்கள் தங்கள் காரை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கையில், பிரதீப், ‘‘ஒரு சமயம் ஒரு விபத்திற்குள்ளான குழந்தை ஒன்று தன் கை வெட்டப்பட்டுவிட்டதே என்று கத்திக்கொண்டிருந்தபோது, மிகவும் அப்பாவியான அக்குழந்தையின் அம்மா, ‘‘சத்தம் போடாதே, அமைதியாய் இரு. அங்கே பார் ஒருவர் குரல்வளையே துண்டாகிக் கிடக்கிறது. அப்படியும் அவர் எவ்வளவு அமைதியாகப் படுத்திருக்கிறார்.’’
தங்கள் காரில் அவர்கள் ஏறியபின், அபி அவர்களிடம்,  ‘‘இந்த புளூ லைன் தனியார்ப் பேரூந்துகள், நகரின் உண்மையான எமன்கள்.  இவற்றின் உரிமையாளர்களில் பலர் போலீஸ்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளாவார்கள்.  இவ்வாகனங்களை முழுமையாக அனைத்து ஆய்வுகளுக்கும் உட்படுத்தாமலேயே இவற்றுக்கான அனைத்து விதமான வாகன சான்றிதழ்களையும் வாங்கிவிடுவார்கள்.’’ ‘‘அது எப்படி?’’ என்று பிரதீப் கேட்டான். அபி விளக்கினான்:
ஊடகம் ஒன்று ரகசியமாக இவர்களது தில்லு முல்லுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வரையில், போக்குவரத்துத் துறையில் எவ்வாறு உரிமங்கள் வழங்கப் படுகின்றன என்பது குறித்து பொது மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. இத்துறையில் நடைபெறும் ஊழல் நடவடிக்கைகள் குறித்து அங்குலம் அங்குலமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. உங்கள் ஓட்டுநர் உரிமம் உங்கள் வீடு தேடி வர வேண்டுமா? மிகவும் எளிது.  போக்குவரத்துத்துறை அலுவலகங்களில் சுற்றித்திரியும் தரகர்களைப் பிடித்தால் போதுமானது. அவர்களுக்குக் கமிஷன் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்ட ஊடகக் காட்சிகள், தரகர்கள் எப்படியெல்லாம் பணம் மற்றும் படிவங்களை வாங்கிக் கொள்கிறார்கள், டிரைவிங் ஸ்கூல் நடத்தும் பேர்வழிகள் உரிமம் வேண்டுவோருக்கும், தரகருக்கும் இடையே இடைத்தரகர்களாகச் செயல்படுகிறார்கள், பின்னர் தரகர்கள் எப்படி போக்குவரத்துத்துறை அதிகாரிகளை அணுகி காரியங்களைக் கச்சிதமாக முடிக்கிறார்கள் என்கிற அனைத்தும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஓட்டுநர் உரிமம் பெற வரக்கூடியவர்களிடம் ஆய்வுகள் எப்படி நடத்தப்படுகின்றன என்றும் வீடியோவில் பதிவு செய்திருந்தார்கள். மிகவும் வேடிக்கையாக அவை இருந்தன. டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர் அருகே அமர்ந்திருக்க, ஆய்வுக்கு வந்த நபர் காரை ஓட்டுவார். ஓர் அடி கூட வாகனம் நகர்ந்திருக்காது. ஓ.கே. சொல்லிவிட்டு, அடுத்தவரை ஓட்டச் சொல்வார். அவரும்  சடங்குபோன்று அதையே செய்வார். இவ்வாறே அனைவரும் வந்து செல்வார்கள். இதனைப் பார்க்கும் எவருக்கும் எவ்வளவு மோசமாக ஆய்வு நடக்கிறது என்பது தெரியவரும். விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு இதுதான் காரணம் என்று மக்களுக்குத் தெரியவரும்போது அவர்களை அது மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.  எந்தவித ஆய்வும் மேற் கொள்ளப்படாமலேயே வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிடுகின்றன. ஓ, இது எவ்வளவு பெரிய ஆபத்து! இந்த ஊழலை வெளிக்கொண்டுவந்து, திரும்பத்திரும்ப ஒளிபரப்பி வந்த ஊடகத்தினரையும், லஞ்ச ஒழிப்புத்துறையினரையும் உண்மையில் மக்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். அவர்கள் காட்டிய ஒவ்வொன்றும் வேடிக்கையாக இருந்தபோதிலும் அனைத்தும் உண்மையில் நிகழ்பவைகளாகும்.
விரைவில், விபத்து நடந்த இடத்திற்கு, போலீஸ் வேன்கள் வந்தன. உள்ளூர் போலீசாரும் அந்த இடத்திற்கு விரைந்தார்கள். மிகப்பெரிய எண்ணிக்கையில் போக்குவரத்துப் போலீசாரும் வந்தார்கள். அதன்பின்னர் அங்கே இயல்புநிலைமை திரும்பியது.
அந்த சமயத்தில், அபி காரில் இருப்பதைப் பார்த்த ஒருவர், ‘‘ஹல்லோ’’ என்று சொல்லிக்கொண்டே அபி அருகில் வந்து, ‘‘உங்கள் அப்பா நலமா?’’ என்று முகமன் விசாரித்தார். மேலும் அவர், ‘‘அவர் எனக்கு செய்திருக்கிற உதவிக்காக, உங்கள் அப்பாவை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. நான் அப்பாவை மிகவும் கேட்டதாகச் சொல்லுங்கள்,’’ என்று கூறிவிட்டு மற்றொன்றையும் அவர் கூறினார். ‘‘இன்னொரு விஷயம் தம்பி, ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளில் வந்த ஓர் இளைஞனை நிறுத்தி, தடம் மாறி வந்துவிட்டதாகக் கூறியதுடன், அதுமட்டுமல்லாமல் வேறு பல குற்றங்கள் செய்ததாகவும் கூறிவிட்டு, ஐநூறு ரூபாய் தனக்குத் தந்துவிட்டால் வழக்கு எதுவும் இல்லாமல் போக அனுமதிப்பதாகவும் கூறினார். அந்த இளைஞன் மிகவும் கோபத்துடன் தன்னுடைய மொபைல் போனில் இது குறித்த சேகர் சாரிடம் பேசிவிட்டுத் தருகிறேன் என்று சொன்னான். அவ்வளவுதான், அந்தப் போலீஸ்காரனுக்கு உடல் முழுதும் வியர்த்துப்போய்விட்டது. தன்னை மன்னித்துவிடுமாறு அந்த இளைஞனிடம்  சொன்னான். அதுமட்டுமல்ல, அந்த இளைஞன் புறப்பட்டபோது அவனுக்கு `சல்யூட்’ அடித்து அனுப்பி வைத்தான். லஞ்சப்பேர்வழிகள் மத்தியில் உங்க அப்பா ஒரு சிம்மசொப்பனமாகத்தான் திகழ்கிறார்,’’ என்றார். பின்னர் அவர் சிரித்துக்கொண்டே, ‘‘இதைப்பற்றியும் அப்பாவிடம் சொல்லுங்கள்,’’ என்றார். ‘‘நிச்சயமா சொல்கிறேன்,’’  என்று அபி சொன்னபின் அவர் சென்றுவிட்டார். பின்னர் அபி, ரவியிடம் பிரதீப்பிடமும், ‘‘அவர் பெயர் தன்வீர். அவர் ஒரு மலர்கள் விற்பனை செய்பவர். அவருக்கு உதவுவதற்காக அப்பா, ரகசியமாக வீடியோ -  ஆடியோ பதிவுகளை மேற்கொண்டபோது அவர் அடிக்கடி நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்,’’ என்றான்.
அந்த சமயத்தில், போலீஸ்காரர்கள் தங்களுடைய கடமையைச் செய்துகொண்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் காரும் சற்றே மெதுவாக வந்து பின்னர் வேகம் எடுத்தது.
இறுதியாக, அவர்கள் கரோல் பாக் போய்ச்சேர்ந்தபோது, ரவி, அபியிடம், ‘‘நாம் ஏன் இங்கே கொஞ்சம் கடைகளைச் சுற்றிப்பார்த்துவிட்டுப் போகக்கூடாது?’’ என்று கேட்டான். அதற்கு அபி, ‘‘இந்த நேரத்திலா? ஓ, காரை நிறுத்துவதற்கு இடத்தைக் கண்டுபிடிக்க டிரைவர் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். கடைகளுக்குச் செல்ல வேண்டும் என்பதில் நீ உறுதியாக இருக்கும்பட்சத்தில், வீட்டிற்குச் சென்று காரை நிறுத்திவிட்டு, மீண்டும் மெட்ரோவில் இங்கே வருவோம்,’’ என்றான். எனவே, ரிஸ்க் எதுவும் எடுக்காது, அவர்கள் அனைவரும் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டனர். பின்னர் தாமதமாக உணவு அருந்துவிட்டு, சற்றே ஓய்வெடுத்துக் கொண்டார்கள்.
……
தேநீரை அருந்தியவண்ணம் சிரித்துக்கொண்டே சேகர் அவர்களைப் பார்த்து, ‘‘அப்படியென்றால், இன்றைக்கு உங்கள் பயணம் மிகவும் அதிரச்செய்யக்கூடிய அளவிற்கு இருந்தது என்று சொல்லுங்கள்,’’ என்றார். ‘‘ஆம், மாமா.  வரும் வழியில், அபி எங்களுக்கு உரிமங்கள் வழங்குவதில் நடைபெற்று வந்த மோசடிகள் குறித்தும் கூறினான்,’’ என்று பிரதீப் கூறினான். சேகர் தலையாட்டிக்கொண்டே, ‘‘அந்த மோசடியை வெளிக்கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட ரகசிய வீடியோ - ஆடியோ பதிவுகள் அதில் நடந்துவந்த அத்தனைக் கேலிக்கூத்துக்களையும் வெட்ட வெளிச்சமாக்குவதற்கு உதவின.’’ அவர்கள் மேலும் இது தொடர்பாக விசாரித்தபோது, சேகர் அது தொடர்பான மேலும் சில உரையாடல்களை இவர்களுக்குச் சுருக்கமாகக் கூறினார்.
ரகசியமாகப் படம் எடுத்துக்கொண்டிருந்த இடத்தில் தன்னுடைய போலீஸ் ஸ்டேசன் அதிகாரியால் போக்குவரத்துச் சுற்றுக்காக நியமிக்கப்பட்ட இடத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்த கான்ஸ்டபிள்,  அந்தப் போலீஸ் நிலைய அதிகாரியுடன் பேசுகிறார். ‘‘நான் பல லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதாக அவரிடம் சொன்னேன், ஐயா. நான் சரியாகக் கொடுத்திருக்க மாட்டேன் என்ற சந்தேகத்துடன், அவர் விவரங்களைக் கேட்டார். நான் ஒவ்வொரு மாதமும் 40 ஆயிரம் ரூபாய் வீதம் 19 மாதங்களுக்கு இதற்கு முன் கொடுத்திருப்ப தாகவும் இதையும் சேர்த்தால் 8 லட்சம் ரூபாய் என்றும் தெரிவித்தேன், ஐயா.’’ இது ஒரு பதிவு. இதேபோன்று மற்றொரு  பதிவில் சில தரகர்கள், தங்கள் தரகர்கூட்டத் தலைவனிடம் உரையாடுவது பதிவாகி இருந்தது. ‘‘உங்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் ஒவ்வொரு வழக்கிலும் 200 ரூபாய் மட்டுமே மற்ற தரகர்களிடமிருந்து பெறுகிறார் என்று கேள்விப்பட்டோம்.  ஆனால், நீங்கள் எங்களிடமிருந்து 500 ரூபாய் வசூல் செய்கிறீர்களே,’’ என்று கேட்டிருந்தார்கள். இதற்கு அந்தத் தரகர்கூட்டத் தலைவன் ‘‘நானே அவனிடம் ஒரு வழக்குக்கு 500 ரூபாய் வீதம்தான் கொடுத்து வருகிறேன்,’’ என்றும், ‘‘எனக்கும் மேலே உள்ள அதிகாரி தொகையைக் குறைக்க முடியாது என்று கறாராக இருப்பதால், என்னாலும் குறைத்துக்கொள்ள முடியாது. எங்கள் மேலதிகாரிக்குத்தான் கணிசமான தொகை போய்ச் சேருகிறது,’’ என்கிறார்.
இதுபோன்று ரகசியமாக இவர்களின் உரையாடல்களைப் பதிவு செய்திருக்கவில்லை என்றால், இந்த அளவிற்கு சாட்சியம் கிடைத்திருக்காது என்று அவர் கடைசியாகக் கூறினார்.
இவை அனைத்தையும் கேட்டபின்பு, பிரதீப் அவரிடம், ‘‘மாமா, நாங்கள் வரும் வழியில் நிறைய பிச்சைக்காரர்களைப் பார்த்தோம்,’’ என்றான்.  அவர்கள் குறித்து அவன் வர்ணிக்கத் தொடங்கியபோது, ரேகா அவனிடம், ‘‘சாலைகளில் சின்னக் குழந்தைகள் ஆக்ரோபேடிக்ஸ் பயிற்சிகள் செய்வதைப் பார்த்திருக்கிறாயா?’’ என்று கேட்டார்.
‘‘இல்லை மாமி.’’
‘‘ஓ, அது ஒரு மிகவும் பரிதாபகரமான விஷயம். மிகவும் அழுக்கடைந்த துணிகளைக் கட்டிக்கொண்டிருக்கும் அவைகள், சாலைகளில் தங்களுடைய ஆக்ரோபேடிக்ஸ் திறமைகளைக் காட்டிக்கொண்டிருக்கும் -- வட்டமாக உடலை வளைத்துக் கொண்டு சுற்றுவது, வளையத்திற்குள் பாய்ந்து வெளியே வருவது, வளையத்திற்குள் உடலை இரண்டாக மடக்குவது - இப்படிச் செய்துகொண்டே இருக்கும். பின்னர் அருகே நிற்கும் கார்களை நோக்கி வந்து பிச்சை கேட்கும்.’’
‘‘நாங்க அவர்களைப் பார்க்காமல் வந்துவிட்டோமே, மாமி.’’
‘‘இந்த மாதிரி செய்கிற குழந்தைகள் எல்லாம் கடத்திவரப்பட்டவை என்றும், அவ்வாறு கடத்தி வந்தவர்கள் இந்தப் பிள்ளைகளுக்கு இவ்வாறு பயிற்சி அளித்து பிச்சை எடுக்க விடுவதாகக் கேள்விப்பட்டோம். அது உண்மையா, சேகர்?’’ என்று சுமன் கேட்டார்.
‘‘முற்றிலும் உண்மை. இதில் எள்ளளவும் சந்தேகமே வேண்டாம். இவ்வாறு பிச்சைக்காரர்களை உருவாக்குவதற்காக ஒரு கூட்டமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது,’’ என்று சேகர் உறுதிப்படுத்தினார்.
அவரைப் பார்த்துக்கொண்டே பிரதீப்,  ‘‘இதையெல்லாம் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது. சமூக நலத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் எப்படியெல்லாம் ஒப்பந்தக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு கொள்ளையடித்தார்கள் என்பதை அபி எங்களுக்குச் சொன்னான். ஆனால், மாமா, இவ்வாறு அயோக்கியர்கள் பலர் கைது செய்யப்பட்ட பின்னரும்கூட, இவ்வளவு பிச்சைக்காரர்கள் சாலையில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறதே,’’ என்று கேட்டான்.
சேகர் பெருமூச்சுவிட்டுக்கொண்டே, ‘‘சில சமயங்களில், போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்துப்பிடித்து, சமூக நலத்துறையால் நடத்தப்பட்டவரும்  பிச்சைக்காரர்கள் இல்லங் களில் சேர்த்து விடுவார்கள். ஆனால், மீண்டும் அவர்களை இதேபோன்று தெருக்களில் பார்க்கலாம். இதைக்கண்டு அதிர்ச்சியடையாதீங்க. பிச்சைக்காரர் இல்லங்களில் இருப்பவர்கள் அவர்களை இவ்வாறு பிச்சை எடுக்க அனுமதித்து அனுப்பி விடுவார்கள். ஆயினும்  அவர்கள் அங்கேயே இல்லத்திலேயே இருப்பதாகத்தான்  அவர்களது பதிவேடுகள் காட்டும். இவ்வாறு பிச்சைக்காரர்கள் சுதந்திரம் பெற்று, தங்கள் வருமானங்களை சந்தோஷமாக இல்லங்களின் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்வார்கள். எப்படி அக்பரின் அமைச்சரவையில் இருந்த ஒருவன் யமுனை நதியின் படகோட்டிகளிடம் வசூல் செய்தானோ அதேபோன்றே இத்தகைய பேர்வழிகளும்  தாங்கள் சம்பாதித்திட பல்வேறு வழிகளை மிகவும் திறமையாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.’’ பையன்கள் சிரித்ததைப் பார்த்து அவரும் சிரித்துக்கொண்டே, மேலும், ‘‘துரதிர்ஷ்டவசமாக இத்தகைய பேர்வழிகளுக்கு உயர்மட்டத்தில் இருக்கிற அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அரவணைப்பும் உண்டு.  உங்களுக்குத் தெரியுமா? இந்த ஒப்பந்தக்காரர் மீதும் அவருக்குத் துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் வழக்கு தொடுக்க நாங்க மிகவும் சிரமப்பட்டோம்.’’
மிகவும் சீரியசாகிவிட்ட ரவி, ‘‘நீங்க சொல்வதைப் பார்த்தால் தில்லியில், தரகுத்தொழில்தான் மிகவும் பிரகாசமான தொழில் போலத் தெரிகிறதே,’’ என்றான். சேகர் அவன் கூறுவதை ஆமோதிக்கும் விதத்தில்:
இங்கே தரகர்கள் கொழிக்கிறார்கள். பல அரசுத் துறைகளில் அனைத்தையும் தீர்மானிப்பது தரகர்கள்தான்.   அது சுகாதார நலம் தொடர்பானதாக இருந்தாலும் சரி, அல்லது கல்வி சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி, அல்லது ஏழைகளுக்கான சமூகநலத் திட்டம் என அரசுத் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் சரி, பயனடைய வேண்டியது யார் என்று அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். பணக்காரர்களை ‘‘ஏழைகள்’’ என்று அவர்களால் மிக எளிதாக ஆக்கிவிட முடியும். அதன்மூலம் ஏழைகளுக்குச் செல்ல வேண்டிய சலுகைகள் அனைத்தையும் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ள முடியும்.  உரிய கமிஷன் அளிக்காவிட்டால், உண்மையிலேயே எந்த ஏழைகளுக்கு அவை போக வேண்டுமோ அவர்களுக்குப் போகாமலேயே இவர்களால் தடுத்து நிறுத்திடவும் முடியும்.
இந்த சமயத்தில் சூடான பகோடா வந்தது. அதில் ஒரு துண்டை எடுத்து மென்று கொண்டே, பிரதீப், ‘‘அவர்கள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்வதற்கான அதிகாரிகளா? அல்லது  வழிப்பறிக்கொள்ளைக்காரர்களா?’’
சேகர், ‘‘நன்றாகச் சொன்னாய். ஒவ்வொரு அமைப்பிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள். அற்ப விஷயங்களுக்குக்கூட கொள்ளையடிக்கிற பகாசுரன்களும் இருக்கிறார்கள். ஒரு சேரியில் ஒருதடவை என்ன நடந்தது என்பதை உங்களுக்குச் சொன்னால் அதை நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள்.’’ பையன்கள் அனைவருமே அவர் சொல்லப்போவதைக் கவனத்துடன் கேட்டதால், அந்த நிகழ்வை அவர் விவரித்தார்.
எங்களிடம் வேலை பார்த்த கேசுவல் டிரைவர், அசோக் என்பவன், தன் குடும்பத்தாருடன் தில்லியில் உள்ள எண்ணற்ற சேரிகளில் ஒரு சேரியில் குடியிருந்து வந்தான். ஒருநாள், அவன் வீட்டுக் கூரைக்கு மேல் தேவையற்று வளர்ந்திருந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினான். அப்போது அந்தப்பக்கம் வந்த போலீஸ்காரன் ஒருவன், அதனைப் பார்த்துவிட்டான்.
தன்னிடம் இருந்த குண்டாந்தடியைத் தரையில் தட்டி, ‘‘ஏய், எப்படிடா நீ இந்த மரக்கிளையை வெட்டலாம். வனத்துறையிடம் இருந்து அனுமதி பெற்றிருக்கிறாயா?’’ என்று கேட்டான்.
அசோக், நடுநடுங்கிக்கொண்டே கீழே வந்து, ‘‘இல்லைங்க ஏட்டய்யா, நான் எந்த அனுமதியும் வாங்க வில்லை. வீட்டுக் கூரைமேல் வந்த மரக்கிளைகளை மட்டுமே செதுக்கி அப்புறப்படுத்தினேன்,’’ என்றான்.
அதற்கு அந்த போலீஸ்காரன், ‘‘அப்போதும்கூட நீ குற்றம்தான் செய்திருக்கிறாய். இதற்காக உன்மீது வழக்கு தொடுக்கப் போகிறேன்.’’
அசோக் அவனிடம், ‘‘ ஏட்டய்யா, எங்க வீட்டுக் கூரை மேலே வந்த மரக்கிளைகளை செதுக்கியது, மரத்தையே வெட்டியதாக எப்படி ஆகும்? உண்மையில் அந்த மரக்கிளைகள் எங்க குடிசைக்கே சேதத்தை ஏற்படுத்திவிட்டது.’’
போலீஸ்காரனின் முகம் கோபத்தால் சிவந்தது. ‘‘எங்களுக்கே புத்தி சொல்கிறாயா? என்னுடன் ஸ்டேஷனுக்கு வா. நாங்கள் யார் என்று அப்போதுதான் உனக்குத் தெரியும்.’’
மிகவும் குழம்பி, செயலற்றுப்போன அந்த ஏழை டிரைவர் பின்னர் தன்னுடைய உறவினர் சுரேந்தரிடம் பேசினான். அவன் விரைந்தோடி வந்தான்.
சுரேந்தரும் போலீஸ்காரர்களிடம் எவ்வளவோ சமாதானமாகச் சொல்லிப்பார்த்தான். ஆனால்  அவர்கள் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்கவே அவர்கள் தயாராக இல்லை. மிகவும் முரட்டுத்தனமாக அவர்களிடம், ‘‘எந்தவிதமான போலீஸ் நடவடிக்கையும் வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால், எங்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கொண்டுவந்து கொடுங்கள், உங்களை வழக்கு எதுவும் போடாமல் விட்டுவிடுகிறோம்,’’ என்று அறிவுரை வழங்கினார்கள். இதைக்கேட்டதும் அவர்கள் திகைத்துப் போய் விட்டார்கள். இனி இவர்களிடம் வாதம் செய்து எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட உலக அனுபவம் நிறைந்த சுரேந்தர் பணத்தைப் புரட்டுவதற்கு ஒரு நாள் கால அவகாசம் தருமாறும் நாளை எங்கள் வீட்டுக்கு வந்து பணத்தைக் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டான். அவர்களும் சரி என்று அவர்களை அனுப்பிவிட்டார்கள்.
அதேசமயத்தில், அவர்கள் போலீஸ்காரர்களுக்கு எதிராக  ஒரு முறையீடு தயார் செய்து எங்களிடம் கொண்டு வந்து தந்தார்கள். நாங்கள் அவர்களிடம் கேமரா ஒன்றை மறைத்து வைத்துக்கொள்ளுமாறும், அவர்களுடன் பேசத் தொடங்கியவுடன் அதனை அதில் உங்கள் பேச்சு வார்த்தைகளைப் பதிவு செய்யத் தொடங்கி விடுமாறும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தோம்.   மேலும் அவர்களிடம் எப்படியெல்லாம் பேச வேண்டும் என்றும் சொல்லி அனுப்பி வைத்தோம். ஏனெனில் அப்போதுதான் முறையான சாட்சியம் கிடைத்திடும்.
போலீஸ்காரர்கள் உரிய நேரத்தில் அவர்கள் வீட்டுக்குப்போய் சேர்ந்தார்கள். டிரைவர் அவர்களை வரவேற்று அவர்களுக்கு தேநீர், சமோசா கொடுத்து உபசரித்த அதே சமயத்தில், சுரேந்தர் அவர்களிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான்.
சுரேந்தர், ஹெட் கான்ஸ்டபிளிடம், ‘‘ஏட்டய்யா, பத்தாயிரம் ரூபாய் புரட்டுவது என்பது எங்களுக்கு ரொம்ப சிரமமா இருக்கு. இந்த அற்ப விஷயத்துக்கு இவ்வளவு பெரிய தொகையா? இதை நீங்க குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.’’
அதற்கு ஹெட்-கான்ஸ்டபிள், ‘‘ஏய், என்ன பத்தாயிரம்? இல்லாவிடில் அவன் ஜெயிலுக்குத்தான் போகணும். அவன் ஏழை என்பதால்தான் நாங்கள் இவ்வளவு குறைச்சலாகக் கேட்டோம். இதேமாதிரி வேறெங்காவது நடந்திருந்தால் முப்பதாயிரம் ரூபாய் தீட்டியிருப்போம்,’’ என்று பதிலளித்தார்.
அவரைப்பார்த்து கும்பிட்டுக்கொண்டே, சுரேந்தர் மீண்டும், ‘‘ஏட்டய்யா, அவன் ரொம்பவும் ஏழை. ஒரு கேசுவல் டிரைவராகத்தான் வேலை பார்க்கிறான். அந்தத் தொகையை ஐயாயிரமா குறைத்துக் கொள்ளுங்கள்,’’ என்று கெஞ்சினான். பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த அசோக்கும், இவ்வாறு கெஞ்சத் தொடங்கினான். அவன் மிகவும் தலைவணங்கி, ‘‘எங்கள் மீது கருணை காட்டுங்கள், ஏட்டய்யா,’’ என்றான்.
அங்கே நின்றுகொண்டிருந்த கான்ஸ்டபிள், ‘‘இங்கே பாருங்க, இந்தத் தொகை எங்களுக்கு மட்டும் என்று நினைக்கிறீங்களா? இதில் எங்கள் பங்கு ஐயாயிரம் ரூபாய் மட்டும்தான். மீதித்தொகையை போலீஸ்நிலைய அதிகாரியிடம் கொடுக்க வேண்டியதாகும். எனவே, இதை நாங்கள் குறைக்க முடியாது. எங்களை நம்பு. இதில் நாங்க ரொம்ப நேர்மையா இருப்போம்,’’ என்றான்.
தன்னுடைய வேண்டுதல்கள் எல்லாம் வீணாகப்போய்விட்டதுபோல நடித்துக்கொண்டே சுரேந்தர், அவர்கள் கேட்ட தொகைக்குக் கடைசியாக ஒத்துக்கொள்வதுபோல, சுரேந்தர், ‘‘ஓ.கே. ஏட்டய்யா, உங்கள் ஐயாயிரம் ரூபாய் தயாராய் இருக்கிறது. போலீஸ் ஸ்டேசன் அதிகாரிக்குத் தர வேண்டிய தொகையைப் பொறுத்தவரை, நான் அவரிடம் பேச அனுமதி கொடுங்கள். நானே அவரிடம் கெஞ்சிப்பார்க்கிறேன்,’’ என்றான். தங்களுக்குப் பணம் உறுதியானதைத் தொடர்ந்து ஹெட்கான்ஸ்டபிளும் சற்றே தாராளமனதுடன், சுரேந்தரிடம், ‘‘முயற்சித்துப் பார்,’’ என்று சொல்லி  நிலைய அதிகாரியின் தொலைபேசி எண்ணைக் கொடுத்தார்.
பின்னர், சுரேந்தர், நிலைய அதிகாரியுடன் தொலைபேசியில் பேசுவதையும் பதிவு செய்து கொண்டான். 
சுரேந்தர், போலீஸ் ஸ்டேசன் அதிகாரியிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, ‘‘ஐயா, என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்னுடைய தம்பி ஒரு மாதத்திற்கு முன்பு தாக்கப்பட்டான். அவனுக்கு கொடுங்காயம் இருப்பதாக மருத்துவக் குறிப்புகள் தெரிவித்த போதிலும் அவனைத் தாக்கியவர்களுக்கு எதிராக ஒரு வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. அது தொடர்பாக பல முறை நான் உங்களை சந்தித்திருக்கிறேன்.’’
நிலைய அதிகாரி, ‘‘ஆம், எனக்கு ஞாபகம் இருக்கிறது. என்னால் என்ன செய்ய முடியும்?  எனினும் நான் பார்க்கிறேன்,’’ என்றார்.
சுரேந்தர் தொடர்ந்தான்: ‘‘ஐயா, உங்க போலீஸ்காரங்க இன்னும் அந்த வழக்கில் எவரையும் கைது செய்யவில்லை. அதுபோகட்டும், ரோந்துசுற்றுகிற உங்க போலீஸ்காரர் ஒருவர் இங்கே ஓர் அற்ப விஷயத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்போறேன் என்று சொல்லி எங்களை மிரட்டிக்கொண்டிருக்கிறார்.  எங்கள் வீட்டிலிருந்த மரக் கிளைகளை செதுக்கி ஒழுங்குபடுத்தினோம். உண்மையில், அந்த மரக்கிளைகள் எங்கள் உறவினர் ஒருவரின் வீட்டுக் குடிசையை நாசப்படுத்தி விட்டது. எங்களுக்கு நீதியே கிடைக்காதா, ஐயா?’’
‘‘அது ஒரு பெரிய குற்றம் என்று உனக்குத் தெரியாதா?’’ என்று நிலைய அதிகாரி இவனை மிரட்டினார்.
சுரேந்தர் பின்னர் மிகவும் பவ்யமாக, ‘‘சரி, ஐயா, நீங்கள் கூறுவது தொடர்பாக தகராறு எதுவும் செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், உங்கள் போலீஸ்காரர்கள் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க பத்தாயிரம் ரூபாய் கேட்கிறார்கள். அதில் ஐயாயிரம் ரூபாய் உங்களுக்கு என்கிறார்கள். நான் அவங்களிடம், உங்கள் பங்குத்தொகை குறித்து உங்களிடம் நான் பேசிக்கொள்கிறேன்  என்று கேட்டதற்கு, அவர்கள் `சரி’ என்று சொல்லி உங்களிடம் பேசச் சொன்னார்கள். அதுதான் இப்ப உங்களிடம் பேசிக்கிட்டிருக்கிறேன்.’’
‘‘அப்படியா? நான் பார்க்கிறேன்.’’ என்று ஸ்டேஷன் அதிகாரி அமைதியாகச் சொன்னார்.
அடுத்த நாள், வாக்களிக்கப்பட்ட பணத்தைப் பெற்றுக்கொள்ள வந்தபோது, அவர்கள் அனைவரும் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு, கைது செய்யப் பட்டார்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது, ஸ்டேஷன் அதிகாரி இந்த விஷயத்தில் தலையிடாததுபோல் தோன்றுகிறது. ஆயினும், அவர் ஒரு நேர்மையான அதிகாரியாக இருந்திருந்தால், இந்தப் போலீஸ்காரர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்திருப்பார். தனக்குக் கீழ் பணியாற்றும் ஆட்கள், இவ்வாறு சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்டும் காணாதிருந்ததால் அவரும் இதற்கு உடந்தை என்ற அடிப்படையில் அவர்மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.’’
அபி குறுக்கிட்டான். ‘‘அப்பா, என்னை எப்போதும் தொந்தரவு செய்கிற விஷயம் என்னவென்றால், ஒருவன் அயோக்கியத்தனமான காரியங்களில் ஈடுபடுகிறபோது, அவனுக்கு மேலே இருக்கிறவர்களும் அவனைப் பாதுகாப்பதிலேயே கண்ணும்கருத்தமாக இருக்கிறார்களே. இது ஏதோ நிறுவனமயப்படுத்தப்பட்ட கும்பலின் வேலை போலவே இருக்கிறதே. இது மிகவும் கேலித்தனமாக இல்லையா?’’ என்றான்.
சேகர், இதற்கு, ‘‘நீ சொல்வது மிகவும் சரி, அபி. எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஆனாலும், உனக்குத் தெரியுமா? பல சமயங்களில் இந்தப் பகாசுரன்கள் தங்கள் கும்பலைச் சேர்ந்தவர்களுக்குள்ளேயே கைவைத்து விடுவார்கள்,’’ என்று கூறி மற்றொரு சம்பவத்தைக் கூறத் தொடங்கினார்.
ஒரு சமயம் இரு அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையே ஒரு பொது சுவரைப் பிரித்துக்கொள்வது தொடர்பாக ஒரு சிறிய தகராறு ஏற்பட்டது. இதனைத் தீர்த்துக்கொள்வதற்காக அவர்கள் ஓர் உரிமையியல் நீதிமன்றத்தை நாடினார்கள். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக அறிவிப்புகள் அனுப்பிய அதே சமயத்தில், பதிவுத் துறைக்கும் ஓர் உறுதிவாக்குமூலத்தைத் தாக்கல் செய்திடக்கோரி அறிவிப்பு அனுப்பியது. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்கள் அலுவலகத்தில் உள்ள பதிவுருக்களின் அடிப்படையில் அந்தச் சுவர் யாருக்குச் சொந்தம் என்பதை உறுதிப்படுத்துவதுதான். ஆனால், பதிவாளர் தாவாவுக்குக் காரணமான இரு வீட்டுக்காரர் களுக்கும் தான் இடத்தைப் பார்க்க வரப்போவதாகச் சொல்லி அனுப்பி இருக்கிறார்.  பதிவாளருடைய வருகைக்கான உட்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவர்கள் எங்களிடம் யோசனை கேட்டு வந்தார்கள்.
நாங்கள் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டிக் கொடுத்து அனுப்பினோம். அவ்வாறு பதிவாளர் வரும்போது அவருடன் நடைபெறும் உரையாடல்களை ரகசியமாக வீடியோ மற்றும் ஆடியோ மூலம் பதிவு செய்திடவும் ஏற்பாடுகள் செய்து கொண்டனர். பின்னர் பதிவாளர் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
பதிவாளர் கூட்டமாக வருவதைப்பார்த்து அவர்கள் திடுக்கிட்டார்கள். முதலில் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, தன்னுடன் வந்திருக்கும் அனைவரும் பதிவாளர்கள்தான் என்றும் அவர்கள் இதர பகுதிகளில் பணியாற்றுபவர்கள் என்றும் அறிமுகப்படுத்தினார். பலபேர் வந்திருப்பது வீட்டுக்காரரையும் அவரது குடும்பத் தினரையும் சற்றே அச்சுறுத்தியபோதிலும், தனக்குக் கிடைத்த வாய்ப்புக்காக வீட்டுக்காரர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். வந்திருந்த பதிவாளர்கள் அனைவருமே போலித்தனமான வாதங்கள் பலவற்றைக் கூறினார்கள். ஆயினும், வீட்டுக்காரர் மிகவும் தயக்கத்துடன் இருப்பதைப் பார்த்தபின்னர், கடைசியாக அவர்கள், தங்களால் தாங்கள் உரியமுறையில் கவனிக்கப்பட்டால்,  தாங்கள் நீதிமன்றத்திற்குத் தங்களுக்கு சாதகமாக அறிக்கை அனுப்பிவிடுவதாகக்கூறினார்கள்.  வீட்டுக்காரரும் அதற்கு புத்திசாலித்தனமாக ஒப்புக்கொண்டு, அதற்குக் கொஞ்சம் கால அவகாசம் கேட்டார்.
பதிவுசெய்யப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோப் பதிவுகள், ஒரு சாமானியனை அச்சுறுத்திப் பணம் பறித்திட இந்த ஓநாய்கள் எப்படியெல்லாம் நாடகமாடியுள்ளன என்பதைப் புலப்படுத்தின. மறுநாள் லஞ்சம் பெறும்போது அவர்கள் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார்கள்.
ரேகா, டின்னர் தயாராகிவிட்டது என்று சொன்னதை அடுத்து அவர்கள் சாப்பிடுவதற்காக எழுந்து சென்றார்கள்.
உணவருந்திக்கொண்டிருந்த சமயத்தில் தன்வீர், ‘‘அவன் ஒரு பயங்கரவாதி’’  என்று சொன்ன வார்த்தைகளை ரவி, திரும்பத்திரும்ப நினைத்துப்பார்த்தான். சேகரை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்துக்கொண்டே, உள்ளுக்குள்,
‘‘மாமா மனதில் ஊழலுக்கு எதிரான கோபம் எப்போதும் நிறைந்திருக்கும் போலத் தெரிகிறதே, எப்படி இவருக்கு இத்தகைய சிந்தனை வந்தது? ஊழல் பேர்வழிகளைத் தன் வலையில் சிக்க வைத்திட எவ்வாறெல்லாம் நடந்துகொள்கிறார்? இதன் பின்னால் ஏதேனும் ரகசியம் இருந்திட வேண்டும்’’ என்று அவன் மனம் அசைபோடுகிறது.  கடைசியாக, தன்னை மேலும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவரிடம் கேட்டே விட்டான்.  ‘‘மாமா, ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று உங்களைத் தள்ளியது எது?’’ என்று கேட்டான். முகம் மலர சிரித்த முகத்துடன் சேகர், ‘‘ஊழலும் பன்றிகளும்,’’ என்று இரு பக்கங்களிலும் வேடிக்கையாய் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னார்.
‘‘என்ன? ஊழலும் பன்றிகளுமா? இது இரண்டுக்கும் இடையே என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று எங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.’’ பிரதீப் மிகவும் குழம்பிப் போய்விட்டான். முகத்திலிருந்த மலர்ச்சி குறையாமலேயே சேகர் விளக்கினார்:
வாழ்க்கையில், நாம் அனைவருமே சில செல்வாக்குகளுக்கு, ஆட்பட்டுவிடுவோம். நானும் அது போன்றே சில செல்வாக்குகளுக்கு அடிமையாகிவிட்டேன்.   அதிர்ஷ்டவசமாக அவை நல்லவைகளாக அமைந்து விட்டன.
நான் சிறுவனாக இருந்தபோது, என் அப்பா என் மனதில் லஞ்ச ஊழலும் மோசமான வழியில் சம்பாதிக்கும் பணமும் மனித மலத்திற்குச் சமமானவைகள் என்று என் மனதிற்குள் நன்கு பதிய வைத்துவிட்டார். பன்றிகள்தான் அவற்றை உண்ணும். கடினமாக உழைத்து அதன்மூலம் வரும் ஊதியத்தைக்கொண்டு மட்டுமே வாழ்ந்திடு, அப்போது மட்டுமே சந்தோஷமாக இருந்திட முடியும் என்று எப்போதும் எனக்கு அறிவுறுத்தி வந்தார். இத்தகையதொரு தந்தையைப் பெற்றதன்மூலம் உண்மையிலேயே நான் மிகவும் அதிர்ஷ்டசாலிதான். குழந்தைப்பருவத்தில் நாம் என்ன கற்றுக் கொள்கிறோமோ, எதை நாம் ஆழமாக உள்வாங்கிக்கொள்கிறோமோ, அவற்றை நாம் சாதாரணமாக மறந்துவிட மாட்டோம். ‘‘லஞ்சஊழலையும் பன்றிகளையும்’’ ஒப்பிட்டு அவர் கூறிய அறிவுரை, மோசமான வழியில் வரக்கூடிய பணத்தை வெறுக்கக்கூடிய விதத்தில், என் மனதில் ஆழமாகவே பதிந்துவிட்டது. இது எந்த அளவிற்குச் சென்றது என்றால், என்னுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் இவ்வாறு மோசமான வழிகளில் பணம் சம்பாதிப்பதைப் பார்க்கும்போது அவர்களையும் பன்றிகளே என்று கருதி வெறுக்கக்கூடிய அளவிற்கு என் மனம் மாறிவிட்டது.
பின்னர், நான் பணியில் சேர்ந்தபோது, என்னுடைய புத்திசாலித்தனமான மூத்த அதிகாரி ஒருவர் நான் இரு வார்த்தைகளை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். ‘‘நீதி வழங்கு’’ என்பதே அந்த இரு சொற்கள்.  சமன்செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபாற் கோடாமை சான்றோர்க்கு அணி. நீதித் தராசு ஒரு பக்கம் சாய்ந்தால், நீங்கள் அநீதி இழைத்த வராகிறீர்கள்.  லஞ்சஊழல் என்பது நீதித்தராசை ஒரு பக்கம் சாய்த்திடும் வேலையைத்தான் செய்கிறது. அந்த வார்த்தைகளே என்னை மிகவும் எளிதாக நிலைநிறுத்தின. இதன் விளைவாக எது வந்தாலும் சரி. ஊழல் பேர்வழிகளுடன் எக்காரணம் கொண்டும் நான் சமரசம் செய்து கொண்டதில்லை.
பிரதீப் முதலில் மிகவும் மதிநுட்பத்துடன், ‘‘மாமா, உண்மையிலேயே நீங்கள்தான் செல்வ வளம் மிக்கவராவீர்கள். உங்களிடம் உள்ள இந்த குணத்தை எவராலும் பறித்துவிட முடியாது. அந்த அளவிற்கு நீங்கள் செல்வ வளம் மிக்கவராவீர்கள். மிகவும் உயர்ந்து நிற்கிறீர்கள்,’’ என்று கூறிவிட்டு, பின்னர் குறும்புத்தனமாக, ‘‘ஆனாலும் மாமா, நீங்கள் எப்படி இன்னமும் சின்ன பையனாட்டமே இருக்கீங்க,’’ என்று கேட்டான். சுமன் உடனே குறுக்கிட்டு, ‘‘முட்டாள், பெரியவங்ககிட்டே எப்படி பேசறதுன்னு முதலில் கற்றுக்கொள்’’ என்றார். ‘‘இல்லை, அம்மா. மாமாவை புண்படுத்தணும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. நான் மாமாவை ரொம்பவே மதிக்கிறேன். நான் சொல்ல வந்ததன் பொருள் என்னவென்றால், இப்படி உயர்ந்த எண்ணங்களைக்கொண்டிருப்பவர்கூட, ஒரு சிறிய இளைஞனைப்போல இருக்கிறாரே, என்பதுதான். மாமா இந்த விதத்தில் மாபெரும் மனிதராவார்.’’
தன்னுடைய மருமகப்பிள்ளைகளின் பாராட்டுக் களை ஏற்றுக்கொண்டதுபோல் சேகர் தலையசைத்தபோது, சுமன், அவரிடம், ‘‘சேகர், நீ இவ்வாறு உயர் குறிக் கோளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாய். ஆனால் நான் உன்னிடம் ஒன்றைக் கேட்கவேண்டும் என்று விரும்பினேன். உன்னுடைய வழக்குகள் பற்றி செய்தித் தாள்களில் படிக்கும்போதெல்லாம் அல்லது தொலைக் காட்சி அலைவரிசைகளில் அவற்றைப் பார்க்கும் போதெல்லாம், எங்கே அந்தக் கயவர்களால் உனக்கு ஏதேனும் துன்பம் நேரிட்டுவிடுமோ என்று பயந்து  கொண்டே இருப்பேன்,’’ என்றார். 
ரேகாவும் ஒரு புகாருடன் குறுக்கிட்டு, ‘‘ஆமாம், ஆமாம். நீங்க அவரிடம் கேளுங்க. நான் இதுமாதிரி கேட்டு, கேட்ட அலுத்தப்போய்விட்டேன். எப்போது நான் இதைக் கிளப்பினாலும், அவரிடமிருந்து வரும் பதில் என்ன தெரியுமா? ‘‘எவனும் இவ்வுலகில் பத்து தடவை சாவதில்லை.’’
சேகர் சிரித்துக்கொண்டே கூறினார்: ‘‘நான் இதுவரை என் நேர்மைத்தன்மையைத் தக்க வைத்துக் கொண்டு வந்துவிட்டேன். மிகவும் ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள் மற்றும் கொலைபாதக கிரிமினல்களுக்கு எதிராகவெல்லாம் நடவடிக்கை எடுத்திருக்கிறேன். ஆனால் அதுமாதிரி எந்த ஆபத்தும் எனக்கு வந்ததில்லை. எவ்விதமான அச்சுறுத்தல்களையும் நான் எதிர்கொண்டதுமில்லை. சட்டரீதியாக நாம் செய்வது சரி என்கிறபட்சத்தில், நம்மைத் தொடுவதற்கு எவனுக்கும் தைர்யம் கிடையாது. மேலும், எப்போதும் நான் அவர்களைத் திருத்துவதற்காகத்தான் வேலை செய்கிறேன் என்பதும் ஒவ்வொருவருக்கும் தெரியும். அரசியல்வாதிகளிடமிருந்தும் எவ்வித ஆபத்தும் வந்ததில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? என்னைத் தங்களுடைய பகுதியிலிருந்து மாற்றுவார்கள். ஆனால், இதை யார் பொருட்படுத்தப்போகிறார்கள்? ஆனாலும் ஒரு பிரச்சனை எப்போதும் உண்டு. அது நமக்கும் மேலே உள்ளவர் ஊழல்பேர்வழியாக இருக்கும்போது. எங்கே தேவையில்லாமல் நாமும் வழக்குகளில் சிக்கிக் கொள்வோமோ என்று பயந்து  என் சம்பந்தப்பட்ட கோப்புகளில் என்னைப்பற்றி மோசமாக எழுத முயற்சிப்பார்கள்.    நல்லவேளை, அப்படி யாரும் இதுவரை என்னைப்பற்றி மோசமாக எழுதியதில்லை. ஒருவேளை அவர்களும் என்னை நினைத்து பயந்து கொண்டிருந் திருக்கலாம்.  என்னைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அவசியத் தேவை என்னவெனில் குடும்பத்தில் முழுமையான ஆதரவு.  இந்த விதத்திலும் நான் அதிர்ஷ்டசாலிதான் என்று மிகவும் பெருமையுடன்  என்னால் சொல்ல முடியும். ரேகாவும் அபியும் எப்போதும் என் பக்கமே நின்றுள்ளார்கள். இதைவிட மனிதனுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும்?’’ சுமனும், அவரது மகன்களும் அவர்களுடைய சிரித்த முகங்களை நேசத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததால், அபி, அவர்களிடம், ‘‘நாங்கள் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தின் அங்கமாக மாறியுள்ள எங்கள் செல்ல நாய்க்குட்டிகளும்தான் எப்போதும் அவரை மகிழ்ச்சியுடன் செயலாற்றத் தூண்டிக் கொண்டே இருக்கும்,’’ என்றான். இதனை சேகரும் சேராவும் ஒப்புக்கொள்ளும் விதத்தில் தலையாட்டினார்கள். 
‘‘சேகர், எனக்கு ஒரு சந்தேகம். நீ, உன்னுடைய வேலையுடன் முற்றிலுமாக முழுகிப்போயிருக்கிறாய்.  உன்னுடைய ஓய்வுகாலத்திற்குப் பின் இது உனக்கு சிரமத்தைக் கொடுக்கலாமோ? என்ன ரேகா?’’ என்று கூறி சுமன் ரேகாவைப் பார்த்தார். ‘‘நீ சொல்வது சரிதான், சுமன். ஆனால், வேலைசெய்து கொண்டிருந்தவங்க ஓய்வுபெற்று வீட்டுக்கு வந்ததுட்டாங் கன்னா, வீட்டிலிருப்பவர்களுக்கு ஓய்வு இருக்காது,’’ என்று ரேகா சிரித்துக்கொண்டே கூறினார். சேகரும் சிரித்துக்கொண்டே, ‘‘நானும் ஒப்புக்கொள்கிறேன். எந்த விவாதமாக இருந்தாலும் ரேகா சொல்வதுதான் இறுதி. அதன்பின்னர் நான் ஏதாவது சொன்னால் அது புது விவாதம் துவங்குவதற்கு ஆரம்பாக அமைந்துவிடும்,’’ என்றார். ரேகாவும் சேகரை, நாணத்துடன் பார்த்துக்கொண்டே, ‘‘நான் சொன்னது சரிதானே, சுமன்? ஒரு மனுஷன்னா, அவன் தன்னுடைய தவறுகளை மறந்திடணும். ஒரே விஷயத்தை இரண்டு பேரும் நினைத்துக்கொண்டிருப்பதில் பயனேதும் இல்லை.’’ சேகர் சிரித்துக்கொண்டே அன்புடன் ரேகாவைப் பார்த்தான். அவ்வாறு மகிழ்ச்சியில் திளைத்த தம்பதிகளைப் பார்த்து சுமனும் சந்தோஷப்பட்டார்.
அவர்கள் அனைவரும் தங்கள் கைகளைக் கழுவுவதற்காக எழுந்ததால், பையன்களும் மறுநாள் மெட்ரோவில் பயணம் செய்திடவும், இந்தியா கேட் சென்றிடவும் திட்டமிட்டார்கள்.
பையன்கள் அனைவரும் கம்பளி விரிப்புகளை எடுத்துவருவதைப் பார்த்த நாய்க்குட்டிகளும் துள்ளிக்குதித்துக் கொண்டு ஓடிவந்தன. அவர்கள் சோபாக்கள் மீது கம்பளி விரிப்புகளைப் பரப்பிய மறுகணமே அவை தத்தமது இடங்களில் சென்று படுத்துக்கொண்டன.
பிறகு, விரைவில், பையன்களும் ஆழ்ந்து தூங்கினார்கள்.
…..