Thursday, September 1, 2016

குஜராத் கோப்புகள் 2 தொடங்கிய முயற்சியும் துணைசேர்ந்த முகமூடியும்




எங்கள் ஊடகத்தின் மூத்த சகாக்கள் ஆழமாக விசாரணையை மேற்கொள்ள ஊக்குவித்தார்கள். அதிகார பீடங்களில் அமர்ந்திருந்தவர்களிடமிருந்து உண்மையை வெளிக்கொணர்வது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்திருந்தேன். 2002 கலவரத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களிடம் பேட்டிஎடுப்பதைத் தவிர்க்க முடிவு செய்தேன்.
அவர்களை ஏவிய காவல்துறை உயரதிகாரிகளையே சந்திக்க விரும்பினேன். பழம் தின்று கொட்டை போட்டவர்களான அந்த அதிகாரிகள் இந்திய உளவு நிறுவமான ‘ரா’ உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புள்ளவர்கள். அந்த முரட்டுத் தோல் அதிகாரிகளைப் பேச வைக்க மதிநுட்பம் வாய்ந்த புலனாய்வாளராகச் செயல்படும் திறன் தேவைப்பட்டது. அதற்காகத் திட்டமிடுவதும் நிறைவேற்றுவதும் முழுக்க என்னையே சார்ந்திருந்தது. உதவிக்காக எங்கள் அலுவலகத்திலிருந்துஇளநிலைப் பணியாளர் எவரையும் அழைத்துக் கொள்ள முடியாது.
அது மேற்கொண்டுள்ள பணிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். என் கட்டுரைகளை அனுப்பும் ஒவ்வொரு முறையும்,பத்திரிகையின் ஆசிரியர்கள் ஷோம சவுத்திரி, தருண் தேஜ்பால் இருவரும் ‘‘அற்புதம்... தொடர்க...’’, ‘‘திடுக்கிடும் விவரங்கள்’’ என்றெல்லாம் பதிலனுப்பி ஊக்குவித்தார்கள்தான். அதே வேளையில் இந்தப் போர்க்களத்தில் நான் ஒருத்தி மட்டுமே தனித்து நின்று வாள் சுழற்றும் நிலையில் இருந்தேன். என்னைத் தற்காத்துக் கொண்டே, எனது புலனாய்வு முடிவுகள் உண்மையின் அடிப்படையில் அமைவதையும் உறுதிப்படுத்திட வேண்டும்.2002ல் ரத்த ஆறு ஓடிய சமயத்தில் பணியிலிருந்த நேர்மையான அதிகாரிகள் பலர் அந்த அக்கிரமங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளாமல் ஒதுங்கியிருந்தது எனக்குத் தெரியும். அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் உதவ முடியுமென்று நான் அவர்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டியபோதெல்லாம் அவை இறுக மூடப்பட்டன. எனக்கிருந்த ஒரே வழி, உண்மையைக் கண்டறிவதற்காக ஒரு பத்திரிகையாளர் கடைசியாகக் கடைப்பிடிக்கும் உத்திதான் - மாறுவேடம் பூணுவது. நான் 26 வயதுப் பெண்.
அதுவும் ஒரு முஸ்லிம். இந்த அடையாளங்கள் குறித்து அதுவரை நான் பொருட்படுத்தியதில்லை. ஆனால், மதவாத அடிப்படையில் வெறித்தனமாக செயல்படுவோர் மிகுந்திருக்கிற ஒரு மாநிலத்தில், இத்தகைய ஒரு புலனாய்வுத் திட்டத்தை பகுத்தறிவுடன் வகுக்க வேண்டியவளானேன். என்னுடன் கல்லூரியில் படித்தவர்களில் சிலர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்தார்கள். இன்றைய புகழ்பெற்ற கதாநாயகி ரிச்சா சத்தா என் வகுப்புத் தோழி. அவர் ஒரு நேர்காணலில், தான் ஒரு படத்தில் செய்தியாளராக நடிப்பதாகவும், அதற்காகஎன்னை ஒரு முன்மாதிரியாகத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறியிருந்தார். அதேபோன்று மற்றொரு நடிகரும் எனக்கு நெருக்கமானவர். அவருடைய உதவியுடன், நான் அவரது ஒப்பனைக் கலைஞரைச் சந்தித்தேன்.
மும்பை புறநகரில் இருந்த ஸ்டுடியோ ஒன்றில் தேநீர் அருந்திக்கொண்டே, சரியான முறையில் செயற்கை கூந்தல் (விக்) வைத்துக் கொள்வதற்கான நுட்பங்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். கைதேர்ந்த அந்த ஒப்பனைக்கலைஞர் கொடுத்த விக்குகள் என்னை மாற்றிக் காண்பித்தன என்றாலும் அது அன்றாடவாழ்க்கையில் பொருந்தி வராது என்று கண்டறிந்தேன். எனவே விக் அணியும் யோசனையைக் கைவிட்டு வேறு அடையாளத்தை உருவாக்குவது பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்.மின்னஞ்சலில் வந்த ஒரு தகவல் அருமையான யோசனையைத் தந்தது. என்னோடு படித்தவர் ஒருவர்அனுப்பிய அந்த மின்னஞ்சலில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற அமெரிக்கன் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
‘யுரேகா’ என்று கத்த வேண்டும் போல இருந்தது. எனக்கொரு அடையாளம் கிடைத்துவிட்டது! அந்தக் கல்லூரியில் பயில்கிற இளம் இயக்குநர் நான்! குஜராத் பற்றியும் மோடி பற்றியும் ஒரு ஆவணத் திரைப்படம் தயாரிக்கப் போகிறேன்!அடுத்த சில நாட்கள் அந்தக் கல்லூரி தொடர்பான தகவல்களை ஆராய்ந்தேன். அதன் பழைய மாணவர்கள், அங்கு தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள், இன்ன பிற விவரங்களைத் தேடிப் படித்தேன்.இப்போது எனக்கொரு புதிய பெயரையே நான் சூட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. அந்தப் பெயர் இயல்பானதாக, பழம்பெருமை பேசக்கூடியதாக, ஏற்கத்தக்கதாக, வலுவானதாக இருக்க வேண்டும்.
எனது சினிமா பைத்தியம் இதற்கு உதவியது. தில்லியிலிருந்து மும்பைக்கு விமானத்தில் வந்தபோது நான் பார்த்த படம் ‘லஜ்ஜா’ -ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் மாதுரி தீட்சித், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்த அந்தப் படத்தின் சிறப்பு, பெண்களின் வலுவான பாத்திரப்படைப்பு. மைதிலி என்ற, சாதிய ஒடுக்குமுறைகளையும் ஆணாதிக்கக் கொடுமைகளையும் எதிர்கொண்ட பெண்ணாக நடித்திருந்தார் மனிஷா. மைதிலி என்பது ராமனின் மனைவி சீதையின் மற்றொரு பெயர். பிராமணராகவோ தலித்தாகவோ காட்டாத பொதுவான பெயரில், `மைதிலி தியாகி’ பிறந்தாள். ‘மைதிலி தியாகி, தன்னார்வத் திரைப்பட இயக்குநர், அமெரிக்கன் திரைப்படக் கல்லூரி’ என்று விசிட்டிங் கார்டு அச்சிட்டேன்.அடுத்து ஒரு திறமையான உதவியாளர் தேவைப்பட்டபோது, என் வாழ்க்கையில் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவனாக வந்தான் மைக் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது).
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மைக் இந்திய-பிரெஞ்சு மாணவர் பகிர்வுத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வந்திருந்தான். இந்திய ஊடகவியலாளர்களோடு பணியாற்றிக் கற்றுக்கொள்ள விரும்பிய அவனுடன் மின்னஞ்சலில் தொடர்புகொண்டேன். எனது புலனாய்வு பற்றிய முழு விவரங்களைத் துல்லியமாக அவனுக்கு நான் தெரிவிக்கவில்லை என்றாலும், சாத்தியமான அளவுக்கு அவனிடம் எனது திட்டம் குறித்து நேர்மையாகச் சொல்லிவிடுவது என முடிவு செய்தேன். என்னுடன் பணி செய்வது போல் நடிப்பதற்கு இந்தியரல்லாத ஒருவர் தேவைப்படுகிறார் என்றும், நான் மேற்கொண்டிருக்கிற மிக முக்கியமான புலனாய்வுத் திட்டத்தின் ஒரு பகுதி இது என்றும் அவனிடம் தெரிவித்தேன். ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டவனிடம், பணியின்போது சிக்கலான கேள்விகளைக் கேட்டு சங்கடத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்றேன். என் புதிய அடையாளத்தின் அங்கீகாரத்துக்கு அவன் ஒரு முகமூடி - அவ்வளவுதான்.
(தொடரும்)



No comments: