Wednesday, October 7, 2015

தசரத் தேவ் பிறந்தநாள் நூற்றாண்டு:அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டது--கவுதம் தாஸ் தசரத் தேவ் 

புதுதில்லியில், நாடாளுமன்ற மக்களவையில், நாடாளுமன்றத்தின் முதல் மக்களவைக்கு 1952இல் தேர்வுசெய்யப்பட்ட  உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும் விதத்தில், மேற்கு வங்கத்திலிருந்து இடதுசாரி எம்பியாகத் தேர்வுசெய்யப்பட்ட புகழ்பெற்ற விஞ்ஞானியான டாக்டர் மெக்னாத் ஷாஹா சிவப்பாகவும் அழகாகவும் இருந்த பழங்குடி இளைஞர் ஒருவரைச் சுட்டிக்காட்டி சபாநாயகரின் கவனத்தை ஈர்த்தார். அவர் தசரத் தேவ். திரிபுராவில் கிழக்கு திரிபுரா (பழங்குடியினர் தொகுதி)யிலிருந்துகம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். ஆனால், இப்போதும் அவர் காவல்துறையினரால், பிடியாணைகளுடன் (அரஸ்ட் வாரண்டுகளுடன்) வேட்டையாடப் பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் தலைமறைவாக இருக்கும் காலத்திலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.’’ இவ்வாறு கூறிய டாக்டர் ஷாஹா பின்னர் சபாநாயகர் பி.ஜி, மாவலங்காரிடம், தசரத் தேவுக்கு எதிராக உள்ள பிடியாணைகளை ரத்து செய்திட, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்  என்று உறுதி அளித்த சபாநாயகர் மாவலங்கார், பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் பார்த்து, தசரத்தேவ் மீதான பிடியாணைகளை ரத்து செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கட்டளையிட்டார். பிரதமர் ஜவஹர்லால் நேரு, தசரத்தேவ் மீதும் மற்றும் கண முக்தி பரிஷத் தலைவர்கள்மீதும் இருந்த பிடியாணைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று திரிபுரா மாநில அரசாங்கத்திற்கு கட்டளை பிறப்பித்தார். அதன்பின்னர்தான் பழங்குடியினர் பகுதிகளில் இருந்த ராணுவமும் போலீசும் விலக்கிக்கொள்ளப்பட்டன.  கணமுக்தி பரிஷத் தலைவர்கள் மீண்டும் சுதந்திரமாக இயங்கத் தொடங்கினார்கள். இவ்வாறு சுமார் ஐந்தாண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தசரத் தேவ் அதிலிருந்து வெளியே வந்தார்.
மன்னராட்சியின்கீழ் அடிமைகளாக நடத்தப்பட்ட பழங்குடியின மக்களை  அடிமைத்தளையிலிருந்து விடுவித்திடவும், பழங்குடியின மக்களுக்கும் இதர இனத்தினருக்கும் இடையே நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதிலும், தலைமைப்பாத்திரம் வகித்த மாபெரும் கம்யூனிஸ்ட்டாக தோழர் தசரத் தேவ் விளங்கினார்.
தோழர் தசரத் தேவ் 1916 பிப்ரவரி 2 அன்று திரிபுரா மாநிலத்தில் கோவாய் உட்கோட்டத்தின்கீழ் அம்புராவில் குக்கிராமம் ஒன்றில் ஏழை பழங்குடியின விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். 1943இல் அகர்தலாவில் உமாகந்தா பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்ச்சி அடைந்தார். பின்னர்  (தற்போது வங்கதேசத்தில் உள்ள) ஹபிகஞ்ச்சில் 1945இல் பட்டப்படிப்பை முடித்தார்.  பின்னர்  முதுகலைப்படிப்பைத் தொடர்வதற்காக  கொல்கத்தாவில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார்.  ஆயினும் அவர் சக நண்பர்கள் சிலர் திரிபுரா பழங்குடியினர் வாழும் கிராமங்களில் `மக்கள் எழுத்தறிவு இயக்கத்தைதொடங்கியதைத் தொடர்ந்து அவர் மீண்டும் திரிபுராவிற்கு அழைக்கப் பட்டார்.
மன்னராட்சியின்கீழ் கிராமத்தின் மகாஜனங்களால் காலங்காலமாய் எழுத்தறிவு மறுக்கப்பட்டு, அடிமைகளாய் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்களை இந்நிலையிலிருந்து மீட்பதற்காகவே இவ்வாறு `மக்கள் எழுத்தறிவு இயக்கம்தொடங்கப்பட்டது. 1945 டிசம்பர் 27 அன்று மக்கள் எழுத்தறிவு இயக்கம் (ஜனசிக்சா சமிதி) அமைக்கப்பட்டு,  தசரத் தேவ் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஓராண்டுக்குள்ளேயே மாநிலம் முழுவதும் 488 பள்ளிகள் இதன்கீழ் நிறுவப்பட்டன.  இவ்வியக்கத்தினை முளையிலேயே கிள்ளி எறிய மன்னராட்சி முயற்சிகளை மேற்கொண்டது. ஆயினும் அவர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை முறியடித்து, மக்கள் எழுத்தறிவு இயக்கம் தன் பயணத்தைத் தொடர்ந்தது.
மக்கள் எழுத்தறிவு இயக்கத் தலைவர்கள், நாட்கள் செல்லச் செல்ல, மாநிலத்தில் ஜனநாயகபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசாங்கம் அமைந்திட வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பத் தொடங்கினார்கள். இயற்கையாகவே இது மன்னராட்சியின் கோபத்திற்கு ஆளானது. எனவே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இவ்வியக்கத்தினை நசுக்கிட,  அடக்குமுறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கு மன்னராட்சியின் போலீசாரும், ராணுவத்தினரும் அனுப்பப்பட்டனர்.  கிராமம் கிராமமாக தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. உணவு தானியங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. எழுத்தறிவு இயக்கத் தலைவர்கள் வலைவீசித் தேடப்பட்டனர். கிராமத்தினர் எவரும் தங்கள் கிராமங்களை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மன்னராட்சியின் அடக்குமுறை வெறியாட்டங் களுக்குப் பயந்து ஆண்கள் காடுகளுக்குள் சென்று பதுங்கி வாழ்ந்தார்கள். பெண்களை போலீசாரும், ராணுவத்தினரும் மானபங்கப்படுத்தி, முரட்டுத்தனமாக இழுத்துச் சென்றார்கள்.
இத்தகைய மிகவும் கொடூரமான பின்னணியில்தான், மன்னராட்சியின் ஏவல்நாய்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக,  கண முக்தி பரிஷத் (GMP) அமைப்பு 1948இல் உருவாக்கப்பட்டது. இதே சமயத்தில் திரிபுராவை இந்தியாவுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கின.  1950இல் திரிபுரா மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, திரிபுரா எல்லை கவுன்சில் அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றிருந்தது. இவ்வாறு மன்னராட்சியின் கீழிருந்த நிர்வாகம் காங்கிரஸ் நிர்வாகமாக மாற்றப்பட்டது. எனினும் கண முக்தி பரிஷத் மீதான அணுகுமுறையில் ஆட்சியாளர்கள் எவ்விதமாற்றத்தையும் ஏற்படுத்திடவில்லை.  பழங்குடியின மக்கள் மீதான அடக்குமுறை காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்ந்தது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் முன்பைவிட மிகவும் மோசமானமுறையில் காட்டுமிராண்டித் தனமாக கிராமத்தினர்மீது அடக்குமுறையை அவர்கள் ஏவினார்கள். தசரத் தேவ் உட்பட கணமுக்தி பரிஷத் தலைவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு பத்தாயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.
1952இல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, கிழக்கு திரிபுரா தொகுதியிலிருந்து தசரத் தேவ் தலைமறைவாக இருந்து கொண்டே போட்டியிட்டார். தேர்தலில் பெரும் வித்தியாசத்துடன் வெற்றி பெற்ற தசரத் தேவ், தில்லியில் நாடாளுமன்றத்திற்குள் ரகசியமாகவே பிரவேசித்தார். அதன்பின் மக்களவையில் நடந்தவற்றைத்தான் முதல் பத்தியிலிலேயே தெரிவித்திருக்கிறோம்.
1950இல் தோழர் தசரத் தேவ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.  1951இல் நடைபெற்ற முதல் மாநாட்டில் மாநில செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.  பின்னர் 1952இல் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தல்வாதப் பிரிவினருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டபோது, தசரத் தேவ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டார்.  கட்சியின் மத்தியக்குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதிலிருந்து 1998இல் உடல் நலிவடைந்த சமயத்தில் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
திரிபுரா மாநிலத்தில்  பட்டினியால் வாடிக்கொண்டிருந்த மக்களுக்கு உணவுக்காகவும், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (இன்றைய வங்க தேசத்திலிருந்து) அகதிகளாக புலம்பெயர்ந்து வந்த மக்களுக்கு முறையான புனர்வாழ்வுக்காகவும், நடைபெற்ற அலை அலையான போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக 1978இல் நடைபெற்ற தேர்தலில் இடது முன்னணி அரசாங்கம் மாபெரும் வெற்றி பெற்றது. தசரத் தேவ், நிருபன் சக்ரவர்த்தி, பிரன் தத்தா ஆகியோர் அளப்பரிய தலைவர்களாக உருவானார்கள்.
இடது முன்னணி அரசாங்கம் அமைந்தபின், வரலாறு படைக்கக்கூடிய விதத்தில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தியது. இவற்றில் திரிபுரா மாநிலத்தின் இரண்டாவது மொழியாக கோக் பாரோக் என்னும் பழங்குடியின மொழியை அங்கீகரித்தது, கல்வி மற்றும் அரசின் வேலைவாய்ப்புகளில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடுகளைக் கறாராக அமல்படுத்தியது, கிராமப்புற ஏழைகளுக்கு `உணவுக்கான திட்டத்தைஅறிமுகப்படுத்தியது, மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருப்போருக்கு நில வரியை ரத்து செய்தது, பழங்குடியினரிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் பழங்குடியினருக்கே வழங்கியது, பழங்குடியினர் பகுதிகளில் சுயாட்சி கவுன்சில் அமைத்தது, ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தது, ஆகியவைகளாகும்.
இடது முன்னணியின் செல்வாக்கைச் சீர்குலைப்பதற்காக பிற்போக்கு சக்திகள் பழங்குடியினர் - பழங்குடியினரல்லாதவர்கள் இடையே மிகப்பெரிய அளவில் வகுப்புத்துவேஷத்தை உருவாக்கிட 1980 ஜூனில் வன்முறைகளைக் கட்டவிழ்த்தவிட்டன. தசரத் தேவைக் கொலை செய்திட வங்க வெறியர்களும், பழங்குடியின வெறியர்களும் தேடி அலைந்தனர். அவர் பல சமயங்களில் அவர்களிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.
1978 முதல் 1988 வரை திரிபுரா மாநில முதல்வராக நிருபன் சக்ரவர்த்தி இருந்த சமயத்தில் அவரது அமைச்சரவையில் தசரத் தேவ் கல்வி மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.  காங்கிரஸ் - திரிபுரா உபசாதி ஜூபசமிதி கூட்டணி ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார்.
தோழர் தசரத் தேவ் பழங்குடியினர் - பழங்குடியினரல்லாதவர் இடையே நல்லிணக்கத்தையும் நட்புறவையும் வலுப்படுத்துவதில் பாலமாக விளங்கினார். அவர் ஒருசிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, சிறந்த நாடாளுமன்றவாதியும், தலைசிறந்த நிர்வாகியுமாவார். அவரது முயற்சியின் காரணமாகத்தான் பேச்சு வழக்கில் மட்டும் இருந்த கோக் போராக் மொழிக்கு எழுத்துரு கண்டுபிடிக்கப்பட்டது.  அவரது திரிபுரா மக்கள் இயக்கம் - என் நினைவுகள்’’ (The history of mass movement in my memory)என்ற நூலும், “கணமுக்தி பரிஷத் வரலாறு’’ (History of Mukti Parishad) என்னும் நூலும் திரிபுரா மாநில வெகுஜன இயக்க வரலாற்றின் மதிப்பிடற்கரிய ஆவணங்களாகும்.
2015 பிப்ரவரி 2இலிருந்து தசரத்தேவ் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் திரிபுரா மாநிலம் முழுதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.  பிறந்த நாள் விழாக் குழு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவது என இலக்கு நிர்ணயத்திருந்தது, ஆனால் அதனை ஏற்கனவே விஞ்சி, ஒரு லட்சத்து 70 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது.
தோழர் தசரத் தேவ் வரலாறு படைத்திட்ட மக்கள் எழுத்தறிவு இயக்கத்தை  நிறுவனத் தலைவர்களில் ஒருவர் என்ற முறையிலும், திரிபுராவில் மன்னராட்சிக்கு முடிவுகட்டி ஜனநாயகஇயக்கம் அமைத்திட்டவர்களின் ஒருவர் என்ற முறையில் திரிபுரா மக்களால் மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவராலும் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
(தமிழில்: ச.வீரமணி)


Sunday, October 4, 2015

மலபார் கூட்டு கப்பற்படை பயிற்சிகள்: அமெரிக்க ராணுவத்தின் அங்கமாகும் இந்தியா
மலபார் கூட்டு கப்பற்படை பயிற்சிகள்: அமெரிக்க ராணுவத்தின் அங்கமாகும் இந்தியா
(மலபார் பயிற்சிகள் என்பது ஆசியாவில் அமெரிக்காமேற்கொண்டுவரும் ராணுவ போர்த்தந்திர நடவடிக்கைகளுடன் இந்தியா தன்னைமுழுமையாக இணைத்துக் கொண்டு விட்டது என்பதன் அடையாளமேயாகும். அமெரிக்காவுடன் இத்தகைய போர்த் தந்திர ராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதென்பது, இந்தியாவின் சுதந்திரமான மற்றும் சுயேச்சையான போர்த்தந்திர நடவடிக்கைகளுக்குத் தீங்கு பயப்பதாகும். ஆசியாவில் அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்தியா மாறி விடக்கூடாது.)
வரும் அக்டோபர் 14 மற்றும் 21 தேதிகளுக்கு இடையே, இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு கப்பல்படை பயிற்சி களில் ஈடுபடவுள்ளன. இதன் மூலம் இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு மேலும் கெட்டிப்படுத்தப்படுகிறது. மல பார் பயிற்சிகள் இந்திய - அமெரிக்க கப்பல்படைகளுக்கு இடையிலான கூட்டு கப்பல்படை பயிற்சிகளாக, 1992இல் தொடங்கியது. இக்கூட்டுப் பயிற்சிகள் பின்னர் இருநாடுகளின் விமானப் படைப்பிரிவுகளுக் கும், ராணுவப்படை (armies) பிரிவு களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. பின்னர் இந்தப் பயிற்சிகள்அனைத்தும் 2005ஜூன் மாதத்தில் கையெழுத்தான இந்திய - அமெரிக்க பாதுகாப்புக் கட்டமைப்புஒப்பந்தத்தின்படி (Indo-US defence framework agreement)விரிவுபடுத்தப்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட்டு விட்டன.
ஜப்பானும் கைகோர்க்கிறது
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மலபார் பயிற்சிகள் மிகவும் குறிப்பிடத் தக்கவைகளாகும். இந்தியப் பெருங் கடலில் இந்த ஆண்டு நடைபெறும் இப்பயிற்சிகளில் ஜப்பான் கப்பற்படையும் பங்கெடுத்துக் கொள்கிறது. இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் ஆகிய முத்தரப்பு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுப்படுத்தப் பட்டிருக்கின்றது என்பதையே இது பிரதிபலிக்கிறது.
உண்மையில், அமெரிக்காவுக்கும் இந்தியா வுக்கும் இடையிலிருந்து வந்த இரு தரப்பு நாடுகளுக்கு இடையிலான பயிற்சி களை மேம்படுத்தி, ஜப்பானையும், ஆஸ்திரேலியாவையும் இணைத்துக் கொள்ளு மாறு அமெரிக்கா வற்புறுத்திக்கொண்டு இருந்தது. இந்நான்கு நாடுகளையும் உள் ளடக்கிய கூட்டுப்பயிற்சியே தேவை என்றுஅமெரிக்கப் பாதுகாப்புத் துறை (US Defence Department) யின் ஆவணத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
சீனாவை அடக்கி வைக்க வேண்டும்என்பதற்காக, ஆசிய - பசிபிக் பிராந்தியத்திற்குள் அமெரிக்கா தன் வேலை களைச் செய்துகொண்டிருக்கிறது.ஆசியாவைத் தன் போர்த்தந்திர நட வடிக்கைகளுக்கு ஏற்றவிதத்தில் மாற்றிஅமைத்திட அமெரிக்கா மேற்கொண் டுள்ள அனைத்து வேலைகளுக்கும் நரேந்திர மோடி அரசாங்கம் முழுமை யாக ஒத்துழைப்பினை நல்கத் தொடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி யில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகையின்போது ஆசியா - பசிபிக் பிராந்தி யம் மற்றும் இந்தியப் பெருங்கடல் மீதானகூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத் திட்டபோதே இது தெளிவாகிவிட்டது. வெளிநாட்டு ராணுவப் பயிற்சிகளில் ஜப்பானும் இப்போது சேர்ந்து கொண்டி ருப்பதிலிருந்து, தெற்கு சீனக் கடலிலும் மற்றும் பிராந்தியத்திலும் சீனாவின் போக்குவரத்து குறித்து அச்சப்பட்டு, இந்தியாவுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப் படுத்திக் கொள்ள ஜப்பான் விரும்பு வதையே காட்டுகிறது.
ஏமனில் தாக்குதல் நடத்தியஅணுசக்தி விமானங்கள்
அமெரிக்கா இப்பயிற்சிகளுக்காக பல இடங்களில் தன்னுடைய தியோடர் ரூஸ்வெல்ட் எனப்படும் நிமிட்ஸ் வகைஅணுசக்தி விமானங்களை(a Nimitz class nuclear powered aircraft carrier, Theodore Roosevelt) நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த விமானங்கள் செர்பியா, இராக் மற்றும் சவூதி ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஏமனில் நடைபெற்ற ஆகாயவழித் தாக்குதல்களில்பயன்படுத்தப்பட்டவைகளாகும். அமெரிக்காவின் குறிக்கோள், தன்னுடைய ராணுவ நடவடிக்கை கள் அனைத்திற்கும் இத்தகைய கூட் டுப் பயிற்சிகளின் மூலமாக இரு நாட் டின் படைகளையும் பயன்படுத்திக் கொள்வதேயாகும். இவ்வாறு,மலபார் பயிற்சிகள்என்பது ஆசியாவில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் ராணுவ போர்த்தந் திர நடவடிக்கை களுடன் இந்தியா தன்னை முழுமையாகஇணைத்துக் கொண்டு விட்டது என்பதன் அடையாளமேயாகும். அமெரிக்காவுடன் இத்தகைய போர்த் தந்திர ராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதென்பது, இந்தியாவின் சுதந்திரமான மற்றும் சுயேச்சையான போர்த்தந்திர நடவடிக்கைகளுக்குத் தீங்கு பயப்பதாகும். ஆசியாவில் அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக் கைகளின் ஓர் அங்கமாக இந்தியா மாறி விடக் கூடாது. மலபார் பயிற்சிகளை அனைத்து தேசப்பற்று சக்திகளும் மற் றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் ஒன்றுபட்டுநின்று எதிர்த்திட முன்வர வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி

Thursday, October 1, 2015

சாவர்க்கரும் காந்தி கொலை வழக்கும்:-ஏ.ஜி. நூரணிசாவர்க்கரும் காந்தி கொலை வழக்கும்
-ஏ.ஜி. நூரணி
2012 ஜூலை 12 அன்று ஸ்வபன் தாஸ்குப்தா தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அனைவரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் ஓர் உண்மையை வெளிக்கொண்டு வந்தார். மொரார்ஜி தேசாயின் கூற்றின்படி, மகாத்மா காந்தியின் கொலையில் வி.டி. சாவர்க்கரும் உடந்தை என்று எல்.கே. அத்வானி தன்னிடம் கூறியதாக அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார். ஆயினும் அதனை வெளியிடாது அவர் தப்பிவிட்டார். மொரார்ஜி தேசாய் பம்பாய் மாகாணத்தின் உள்துறை அமைச்சராக இருந்தார்.  அப்போது அவர் உறுதிமொழி எடுக்கையில், இது தொடர்பான புலனாய்வுடன் எனக்குப் பரிச்சயம் இருந்தது என்று கூறியிருந்தார். அவருக்கு உண்மை தெரியும், அதேபோன்று பம்பாய் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவின்கீழ் இயங்கிய முதலாவது மற்றும் இரண்டாவது பிரிவுகளின் பொறுப்பாளராக இருந்த காவல்துறை துணை ஆணையர் ஜாம்ஷெட் நகர்வாலாவிற்கும் உண்மை  தெரியும். அவர் அரசியல் புலனாய்விற்குப் பொறுப்பானவராக இருந்தார். உள்துறை அமைச்சருக்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேல் 1948 பிப்ரவரி 27 அன்று பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் அவர், பாபுவின் படுகொலை வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் புலனாய்வின் முன்னேற்றம் குறித்து அநேகமாக நாள்தோறும் விவரங்களைக் கேட்டறிந்து வருகிறேன்.    சாவர்க்கர் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவந்த இந்து மகா சபையின்கீழ் வெறித்தனமான பிரிவுதான் இந்தச் சதிவேலையை ரகசியமாகத் திட்டமிட்டு செய்து முடித்தது என்று குறிப்பிட்டிருந்தார், (சர்தார் பட்டேல் கடிதப்போக்குவரத்து. தொகுதி 6, பக்கம் 56). அமைச்சரவையில் அங்கம் வகித்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, சாவர்க்கருக்கு ஆதரவாக பட்டேலிடம் கெஞ்சியதில் ஆச்சர்யப்படுவதற்கோ அதிர்ச்சியடைவதற்கோ எதுவுமில்லை, இக்கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்ட அன்றைய தினமே அவர் இந்து மகாசபையின் தலைவராகப் பதவியேற்றார். பட்டேல் மேலும், சாவர்க்கரைக் குறித்துக் கூற வேண்டுமானால்,  காந்தி கொலை வழக்கை விசாரித்து வரும் பம்பாய் அட்வகேட்-ஜெனரலும் இதர சட்ட  ஆலோசகர்களும் புலனாய்வு அதிகாரிகளும் நான் இங்கே வருவதற்கு முன் தில்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் என்னைச் சந்தித்தார்கள். நான் அவர்களிடம், சாவர்க்கரை வழக்கில் சேர்ப்பது தொடர்பான பிரச்சனையில் சட்டரீதியாகவும் நடுநிலை நோக்கோடும்தான் அணுகவேண்டுமே யொழிய, இவ்விஷயத்தில் அரசியல் சலுகைகளை இறக்குமதி செய்திடக்கூடாது என்று தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டேன். என் அறிவுரைகள் மிகவும் நிச்சயமானவை, எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி அவர்கள் அதன்கீழ் செயல்படுவார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.  சாவர்க்கர் இவ்வழக்கில் சேர்க்கப்பட வேண்டுமென்கிற முடிவிற்குத் தாங்கள் வருவீர்களானால், அதன் மீது நடவடிக்கைக்குச் செல்வதற்கு முன்னதாக, அது தொடர்பான ஆவணங்களை என் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் நான் அவர்களிடம் சொல்லி இருக்கிறேன். சட்டத்தின்படியும், நீதியின்படியும் அவர் குற்றம்புரிந்தவர் என்பதில் ஐயமில்லை. தண்டிக்கப்படுவாரா இல்லையா என்பது வேறு விஷயம்.
வெறுப்பை உமிழும் சூழ்நிலை
கிரிமினல் வழக்குகளுக்காக ஆஜராகும் ஓர் அனுபவமிக்க வழக்குரைஞர் என்ற முறையில், நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்படுவதற்கும், தார்மீகரீதியாக (‘‘அடிசயடடல’’) நிறுவப்படும் சாட்சியத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை பட்டேல் நன்கறிவார்,  மிகவும் பிடிவாதமாயிருக்கிற முகர்ஜிக்கு அவர் எழுதினார்: காந்திஜி கொலை வழக்கு விசாரணையிலிருப்பதால் இந்த சமயத்தில் நான் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபையைப் பொறுத்தவரை எதுவும் சொல்லக் கூடாது, சொல்லவும் விரும்பவில்லை. ஆயினும், இவ்விரு இயக்கங்களின் செயல்பாடுகளின் விளைவாக, அதிலும் குறிப்பாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செயல்பாட்டின் விளைவாக, நாட்டில் இத்தகைய கோர சம்பவம் உருவாவதற்கான ஒரு பயங்கரமான சூழல் உருவாக்கப்பட்டது என்று சொல்ல முடியும். இந்தச் சதியில் இந்து மகாசபையில் உள்ள தீவிரவாதப் பிரிவினர் இதில் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதில் என்னைப் பொறுத்தவரை எந்தச் சந்தேகமும் இல்லை,  ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் ஓர் அச்சுறுத்தலாக இருந்தது என்பது தெள்ளத்தெளிவான ஒன்று. தடை செய்யப்பட்டிருந்தபோதிலும் அவற்றின் நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்றே நம்முன் உள்ள அறிக்கைகள் காட்டுகின்றன.
உண்மையில், காலம் செல்லச் செல்ல, ஆர்எஸ்எஸ் அணியைச் சேர்ந்தவர்கள் மேலும் மேலும் திமிர்த்தனமாக தங்களுடைய இரகசிய நடவடிக்கைகளில் அதிக அளவில் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.(மேலே கூறிய தொகுப்பு, பக்கம் 323).
மொரார்ஜி வெளிப்படுத்தியிருக்கும் விஷயங்களில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை. இதைத்தான் 1969இல் மகாத்மா காந்தியின் வாழ்வும் மரணமும் என்ற நூலில் ராபர்ட் பைனே  சாவர்க்கர் குறித்து எழுதியிருக்கிறார், அதில் அவர், குற்றவாளிக் கூண்டில் அமர்ந்திருப்பவர்களில் அவர் ஒருவர் மட்டுமே தனக்கு அளிக்கப்பட்ட வேலையினை மிகவும் சிறப்பாகச் செய்தவர்போல் தோன்றுகிறார்.  உடல்நலிவால் சற்றே குன்றியுள்ள அவரது முகத்தில்  சவக்களை வீசிய போதிலும், ஏதோ உள்ளார்ந்தவகையில் அவருக்குள் ஒருவிதமான தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது, காந்தி படுகொலை செய்யப்பட்டபின் எட்டு மணி நேரத்திற்குள்ளாகவே அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதில் மிகவும் ஆச்சர்யப் படுவதற்குரிய விஷயம் என்னவெனில், அதற்கு முன்னரேயே  அவர் கைதுசெய்யப்படாததுதான். காரணம், சந்தேகத்திற்குரிய நபர்களில் பிரதானமானவராக இருந்தது அவர்தான்.  இக்குற்றம் குறித்து சந்தேகப்பட வேண்டியவர்களில் தவிர்க்கவியலா வகையில் இருந்த நபர் அவரே. அவர் அந்த சமயத்தில் லண்டனில் இருந்திருந்தாலும்கூட சந்தேகத்திற்குரிய நபராக அவர் இருந்தார். அரசுத்தரப்பு வழக்கானது நாதுராம் கோட்சே இக்கொலைக்கான சதித்திட்டத்தைத் தீட்டினார் என்று காட்டுவதற்கு சிரமப்படவில்லை. ஆயினும், சாவர்க்கரும் இக்குற்றச்சதிக்கு நேரடியாக உடந்தை என்பதை மெய்ப்பிப்பது அரசுத்தரப்பிற்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. படுகொலைக்கு முந்தைய மாதங்களில் அவர் உடல்நலிவுற்றிருந்தார் என்றும். அவர் ஒருசிலரையே பார்த்தார் என்றும். ஓராண்டு காலத்திற்கும் மேலாக அவர் கோட்சேயுடனோ நாராயண் டி. ஆப்டேயுடனோ தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர்தரப்பில் கூறப்பட்டது.
காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிப்பவனாக (informer) செயல்பட்ட திகம்பர் பாட்கே, படுகொலை நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ஜனவரி 17 அன்று, தான் கோட்சேயுடனும் ஆப்டேயுடனும் பம்பாயில் உள்ள  சாவர்க்கரின் வீட்டிற்கு காலை 9 மணி வாக்கில் சென்றதாகக் கூறியிருக்கிறான். அவன் மேலும், தான் கீழ்தளத்திலேயே காத்துக்கொண்டிருக்க, கோட்சேயும், ஆப்டேயும் தங்களுடைய அரசியல் தலைவரைக் கடைசியாகத் தரிசனம் செய்வதற்காகவும் இறுதி அறிவுரைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் சாவர்க்கர் தங்கியிருந்த மாடி அறைக்குச் சென்றதாகவும் கூறியிருக்கிறான்.  ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் கழித்து அவர்கள் இருவரும் சாவர்க்கருடன் இறங்கி வந்ததாகவும், சாவர்க்கர் வெற்றியுடன் திரும்பி வருக என்று கூறியதாகவும் சொல்லி இருக்கிறான். ... 1909இல் அவர் சர் கர்சான் வில்லியைக் கொலை செய்திட ஓர் இளம் இந்தியனுக்குக் கட்டளையிடும் அளவிற்கு முழுமையாக சக்தி படைத்தவராக இருந்திருந்தார். அவருடைய சுய சரிதையை எழுதிய தனஞ்சய் கீர், சாவர்க்கர் குறித்தும் அன்றைய காலகட்டம் குறித்தும் எழுதியிருப்பதில். அக்கொலையில் அவருக்கிருந்த முழுப் பொறுப்பினையும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் மதன்லால் திங்க்ராவிற்கு நிக்கல் முலாம் பூசிய ரிவால்வர் ஒன்றைத் தருகையில், இந்தத் தடவை நீ தோல்வியடைந்துவிட்டால் என் முகத்திலேயே முழிக்காதே என்று சீற்றத்துடன் கூறியிருக்கிறார். அவரது கட்டளைக்குக் குருட்டுத்தனமாகக் கீழ்ப்படிந்து.  வில்லிலிருந்து செல்லும் அம்பு போல திங்க்ரா செயல்பட்டிருக்கிறான். தான் இந்தியாவின் விடுதலை என்னும் பலிபீடத்தில் தன்னைத் தியாகம் செய்துகொள்வதாகத் தன்னைக் கருதிக் கொண்டான்.  அக்கொலை வழக்கு நடைபெற்ற சமயத்தில் விசாரணைக் காலம் முழுவதுமே தான் ஒரு தியாகம் செய்துவிட்டதைப்போன்ற மனப்பான்மையுடனேயே அவன் இருந்துவரவும் அவனது பெயர் பல நூறு ஆண்டுகளுக்கு நினைகூரப்படும் என்றும் சாவர்க்கர் அவனை ஊக்குவித்து வந்தார். லண்டன் காவல்துறையினர் இக்கொலைக் குற்றத்தில் சாவர்க்கருக்கும் பங்கு உண்டு என்று வலுவாக சந்தேகித்தனர். ஆனால் அவரைத் தண்டிக்கக்கூடிய அளவிற்குப் போதிய சாட்சியங்கள் இல்லை. இறுதியாக. ஏ.எம்.டி. ஜாக்சன் என்பவனைக் கொலை செய்த  நாசிக் சதி வழக்கில் அவரும் உடந்தை எனக் குற்றம்சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்டு, ஆயுள்முழுதும் நாடு கடத்தப்படும் தண்டனை (transportation for life) விதிக்கப்பட்டார்.


இந்தக் கொலை வழக்கின் நினைவுகள் செங்கோட்டையில் விசாரணை நடைபெறுகையில் ஆவிபோன்று சுற்றிக்கொண்டிருந்தபோதிலும். நீதிமன்றத்தில் ஒருபோதும் சுட்டிக்காட்டப் படவில்லை. அநேகமாக விசாரணையின்போது பொது மக்கள் அமர்ந்திருந்த பெஞ்சுகளில் இருந்த வயதான ஒருசிலரைத் தவிர மற்ற எவருக்கும் இது தெரியவும் தெரியாது. சாவர்க்கர் புரிந்த குற்றங்கள் வெகு காலத்திற்கு முன்பு நடைபெற்றதாலும். அவற்றை ஒருவர் பழைய செய்தித்தாள்களிலேயே பார்க்க முடியும் என்பதாலும் அவர் அவையில் கூடியிருந்த அனைவரின் மதிப்பையும் மரியாதையையும் பெற்றார். (பக்கங்கள் 616-7)
மேலும் மிகமுக்கியமான விஷயம் அவர்  இந்துத்வா என்ற கருத்தாக்கத்தின் சிற்பி என்ற முறையில் அவர் பலரால் பூஜிக்கப்படக்கூடிய நபராக மாறியிருந்தார். இந்துத்வா என்னும் கருத்தியலை அவர் 1923இல்தான் உருவாக்குகிறார். அவர் கூறும் இந்துத்வா கொள்கைக்கும் இந்துயிசத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது. அவர் ஓர் உறுதியான கடவுள் மறுப்பாளர் (confirmed atheist).  1975இல் நள்ளிரவில் சுதந்திரம் என்னும் நூல் வெளிவந்தது. லோரி கோலின்ஸ் - டொமினிக் லாப்பியர் ஆகியோரால் எழுதப்பட்ட அந்நூல் மிகவும் புகழ்பெற்றது, அந்நூல் காவல்துறையினரின் பதிவுருக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 1948 ஜனவரி 20 அன்று காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில்  மதன்லால் (மேற்கு பாகிஸ்தானிலிருந்து வந்த ஓர் அகதியே மதன்லால் கே.பாவா) துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு வெடித்தது. அதன் காரணமாக அங்கிருந்த அலாரம் கடிகாரங்கள் அனைத்தும் அடிக்கத்தொடங்கிவிட்டன. அவனுடைய கூட்டாளிகளான கோட்சேயும் மற்றவர்களும் உடனே பறந்தோடி விட்டார்கள்.


பம்பாய் மாகாணத்தின் உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய், விலைமதிப்பற்ற அந்தச் சிறிய தகவல் காகிதத்துடன் இந்த வழக்கின் விசாரணையை நகர்வாலாவிடம் ஒப்படைத்தார். ஒரு வாரத்துக்கு முன்புதான் காந்தியைக் கொல்லும் திட்டம் பற்றி மதன்லால் பெருமைப்பட்டுக்கொண்ட தகவல் ஒரு வட்டாரத்திலிருந்து தேசாய்க்குக் கிடைத்தது. மதன்லாலின் பிரதானக் கூட்டாளியின் பெயர் கார்காரே என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. இவன் அகமது நகரைச் சேர்ந்தவன்.   மறுநாள், மொரார்ஜிதேசாய், இவ்வழக்கை நகர்வாலாவிடம் ஒப்படைத்தார்.  நூலின் ஆசிரியர்கள் இவ்வாறு பதிவு செய்கிறார்கள்: அவனை அடையாளம் காணுமாறு காவல்துறையை நகர்வாலா முடுக்கிவிட்டார். காந்தியைக் கொல்ல முயற்சி செய்தவர்கள் உடனேயோ சற்றுத் தாமதமாகவோ, தென்னை மற்றும் பேரீச்சை மரங்கள் நிறைந்த கெலுக்சர் சாலை வீட்டுக்குச் சென்று இருப்பார்கள் என்பதில் அந்த இளம் அதிகாரிக்குக் கொஞ்சமும் சந்தேகம் இருக்கவில்லை. ஒரு வாரத்துக்கு முன் மதன்லால் பயணம் செய்த அடிப்படையில் சாவர்க்கரைக் கைது செய்ய அனுமதி அளிக்குமாறு தேசாயிடம் நகர்வாலா கேட்டுக் கொண்டார்.  நீங்கள் என்ன பைத்தியமா? இந்த மாகாணம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிவதை நான் விரும்புவேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கோபம் கொப்பளிக்கும் கேள்வியுடன் இந்தக் கோரிக்கையை தேசாய் நிராகரித்தார்.
சாவர்க்கரை சிறைச்சாலை அறைக்குள் அடைத்து வைக்க நகர்வாலாவால் முடியாமல் போனாலும் குறைந்தபட்சம் பிரிட்டிஷார் ஏற்படுத்தி இருந்த ஒரு சாதுர்யமான அமைப்பிடம் அவரை ஒப்படைக்க முடிந்தது. அதுதான் பம்பாய் சிஐடி துறையின் பெருமைமிகு கண்காணிப்புப் பிரிவு. (மேலே கண்ட நூல், தமிழாக்கம். பக்கம் 568)
சாவர்க்கர் காவல்துறையினரால் மிகவும் இரகசியமாகக் கண்காணிக்கப்பட்டார். ஜிம்மி நகர்வாலாவின் பம்பாய் விசாரணையிலும் முதல் 48 மணி நேரத்தில் புதிய தகவல் எதுவும் இல்லை. பம்பாய் கண்காணிப்புப் பிரிவு அதன் கண்காணிப்பை சாவர்க்கர் இல்ல வாயிலில் தொடர்ந்தது. ஆனால் அந்த சூழ்ச்சிக்காரத் தலைவர் மிகவும் திறமையாக, சதியில் அவரது பங்கு பற்றி எதையும் வெளிக்காட்டவில்லை. இருப்பினும் அந்த வீட்டிலிருந்து தீமையின் கதிர்கள் வெளிப்படுவதற்கான அறிகுறி தெரிந்தது. அந்த வீட்டுக்கு சாவர்க்கரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வந்து சென்று கொண்டிருப்பது நகர்வாலாவின் போலீஸ்கார புத்திக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏன், எப்படி என்று என்னைக் கேட்காதீர்கள். ஆனால் இன்னொரு முயற்சி நடக்கப்போகிறது என்பதை நான் சற்றுமுன் அறிந்தேன். ஏதோ ஒரு வகையில் அதற்கான சூழ்நிலை இங்கே இருப்பதாக நான் உணர்கிறேன். என்று அவர் சஞ்சீவியிடம் கூறினார். (மேலே கூறிய நூல்,தமிழாக்கம்584)
மொரார்ஜியின் தன்னடக்கமும், நீதிபதியின் அடக்கமும் ஆனால், மொரார்ஜி தேசாயினுடைய காலங்கடந்து வந்த விமர்சனங்குறித்து நிறையவே சொல்ல வேண்டும். காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது அவர் சாட்சியம் அளித்திருக்கிறார். தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் 1948 செப்டம்பர் 1 இதழில் நீதிபதி ஆத்மா அவர்களுக்கு அரசுத் தலைமை வழக்குரைஞர் அதற்கு முதல்நாளன்று அளித்திட்ட விண்ணப்பத்தினை வெளியிட்டிருந்தது. அதில் சாவர்க்கர் குறித்து இவ்வாறு குறிப்பிடப் பட்டிருக்கிறது: மாண்புமிகு மொரார்ஜி தேசாயைக் குறுக்கு விசாரணை செய்கையில், குற்றம்சாட்டப்பட்டிருந்த எதிரி வி,டி, சாவர்க்கரின் வழக்குரைஞர் மொரார்ஜிதேசாயிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டார்: சாவர்க்கரைப் பொறுத்தவரை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற பேராசிரியர் ஜெயின் வாக்குமூலத்தைத்தவிர சாவர்க்கர் குறித்து வேறு ஏதேனும் தகவல்கள் உங்களிடம் இருக்கிறதா?
அதற்கு மொரார்ஜி தேசாய்,  நான் அனைத்து உண்மைகளையும் இங்கே கொடுக்கவா? நான் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன். (சாவர்க்கரைச் சுட்டிக்காட்டி) அவர்தான் இதனைத் தீர்மானிக்க வேண்டும், என்று பதிலளிக்கிறார். பின்னர் சாவர்க்கரது வழக்குரைஞர் அதனைத் தவிர்த்துவிட்டார். பின்னர் அரசுத்தரப்பு வழக்குரைஞர் சாவர்க்கர் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்வி, அதற்கு சாட்சி அளித்த பதில், சாவர்க்கர் தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குமூலம் அனைத்தும் நடுவரால் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. ஆயினும் நடுவர் என்ன காரணத்தினாலோ அவற்றைப் பதிவு செய்யவில்லை. அவர் அவற்றைப் பதிவு செய்திருக்க வேண்டும். நீதித்துறை நடுவர் ஏன் பதிவு செய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்ள கடினமாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக மொரார்ஜி தேசாய் பம்பாய் சட்டமன்ற மேலவையில் 1948 ஏப்ரல் 8 அன்று. சாவர்க்கரின் கடந்த கால சேவைகள், இப்போது அவர் இழைத்திருக்கும் தீங்கினை மறைக்கின்றன, சாவர்க்கர் இப்போது புரிந்துள்ள தீங்கானது அவரது முந்தைய சேவைகளால் ஈடுசெய்யப்பட்டிருக்கின்றன, (“ளுயஎயசமயசள யீயளவ ளநசஎiஉநள யசந அடிசந வாயn டிககளநவ லெ வாந யீசநளநவே னளைளநசஎiஉந”) என்று கூறியபிறகும் நடுவர் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பது புரிந்துகொள்ள கடினமாகவே இருக்கிறது, இதுபோன்ற கொலை வழக்குகள் அனைத்திலும், கொலைக்குற்றத்தைப் புரிந்தவர்களில் ஒருவர் அப்ரூவர் ஆவதும் அவரது சாட்சியத்தை வைத்து குற்றத்தில் சம்பந்தப்பட்ட உயர் இடத்தில் இருப்பவர்களையும் பிணைப்பதும் வழக்கம்தான், இந்த வழக்கில் அவ்வாறு அப்ரூவர் ஆனவர் திகம்பர் பாட்கே. நீதிபதி ஆத்மா தன்னுடைய தீர்ப்புரையில் மிகவும் கவனத்துடன் பாட்கேயின் சாட்சியத்தை அலசி ஆராய்ந்திருக்கிறார். 1948 ஜூலை 20 முதல் 30 வரை அப்ரூவரின் விசாரணையும் குறுக்கு விசாரணையும் நடைபெற்றது. அவர் கிட்டத்தட்ட ஏழு நாட்கள் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். எனவே இந்த ஏழு நாட்களும் அவர் சாட்சியம் அளிக்கையில் அவர் நடந்தகொண்ட விதம் மிகவும் தெளிவாக இருந்தது. அவர் நடந்த விஷயங்களை  எவ்வித ஒளிவுமறைவுமின்றி மிகவும் தெளிவாகக் கூறினார். அவர் எந்தக் குறுக்கு விசாரணையையும் தவிர்த்திடவில்லை அல்லது மூடிமறைத்திட முயற்சிக்கவில்லை. ஒருவார காலத்திற்கு எவராலும் பொய்யாகப் புனையப்பட்ட சங்கதிகளைக் கோர்வையாகக் கூற முடியாது. அடிப்படை எதுவும் இல்லாமல் இருப்பின் இத்தகையதோர் கதையை மனனம் செய்து எவராலும் ஒப்பிக்க முடியாது.
... அப்ரூவர் தன்னுடைய சாட்சியத்தில் 1948 ஜனவரி 20 அன்று மெரினா ஓட்டலில் கைவெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதற்கான மருந்துகளைத் திணித்ததாகவும், எப்படித் திட்டத்தை நிறைவேற்றுவது என்று விவாதித்ததாகவும், ஒவ்வொருக்கும் உரிய உடைமைகளைப் பெற்றுக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் குற்றத்துடன் நேரடியாகப் பிணைக்கக்கூடிய விதத்தில் சாட்சியம் இல்லைதான். எனினும், சந்தர்ப்ப சாட்சியங்கள் அரசுத்தரப்பிற்கு ஆதரவாக மிகவும் பிரகாசமாய் இருக்கின்றன, நைன் சிங் அளித்துள்ள சாட்சியமும் அவரது சாட்சியத்திற்கு ஆதாரமாக இருக்கின்ற அரசுத்தரப்புச் சான்றாவணங்கள் 17 மற்றும் 24ம் அன்றைய தினம் அறை எண் 40இல் கூடுதலாக மூன்று டீ வரவழைக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
ஒரு சாட்சியத்தை மதிப்பிடும்போது முன்பு நடைபெற்ற நிகழ்வுகளுடன் பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளையும் பொருத்திப் பார்ப்பது அனைவருக்கும் தெரிந்து விதிதான். அப்ரூவர் அளித்துள்ள சாட்சியம் நடைபெற்ற நிகழ்வுகளுடனும் சுயேச்சையான சாட்சியங் களுடனும் முழுமையாக ஒத்துப்போகிறது. எனவே அப்ரூவரின் சாட்சியம் பொதுவாக அனைத்து சாட்சிகளின் சாட்சியத்துடனும் ஒத்துப்போவதால் மறுதலிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது விநாயக் டி, சாவர்க்கரை அடையாளப்படுத்துவது சம்பந்தமாக   அப்ரூவரின் சாட்சியத்தை முழுமையாக நான் ஏற்றுக்கொள்கிறேன். அப்ரூவர் தன்னுடைய சாட்சியத்தில் 1948 ஜனவரி14 அன்று நாதுராம் வி,கோட்சேயும், நாராயண் டி. ஆப்டேயும் தன்னை இந்து மகா சபை அலுவலகத்திலிலிருந்து,  உடைமைகளை ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டும் என்று கூறி சாவர்க்கரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறுகிறார். உடைமைகள் இருந்த பையைத் தான் வைத்துக்கொண்டதாகவும் பின்னர் நாதுராம் வி.கோட்சேயும், நாராயண் டி. ஆப்டேயும் தன்னை வெளியிலேயே நிற்க வைத்துவிட்டு, வீட்டின் உள்ளே சென்றதாகவும், நாதுராம் வி.கோட்சேயும், நாராயண் டி. ஆப்டேயும் 5 - 10 நிமிடங்கள் கழித்து உடைமைகள் இருந்த பையுடன் திரும்பி வந்ததாகவும் கூறுகிறார். அப்ரூவர் பின்னர் கூறுகிறார்: 1948 ஜனவரி 15 அன்று, தீக்சித்ஜி மஹாராஜ் கோவில் காம்பவுண்ட் சுவர் அருகே வரும்போது, நாராயண் டி ஆப்டே தன்னிடம்  காந்திஜியை முடித்துவிட வேண்டும் என்று சாவர்க்கர் கூறியதாகவும், அந்த வேலை அவர் தங்களிடம் ஒப்படைத் திருப்பதாகவும் கூறினார். அப்ரூவர் பின்னர் கூறும்போது 1948 ஜனவரி 17 அன்று நாதுராம் வி. கோட்சே நாம் அனைவரும் சென்று சாவர்க்கரைக் கடைசியாகத் தரிசனம் செய்து கொள்வோம் என்று ஆலோசனை கூறியதாகவும் கூறியிருக்கிறார். பின்னர் அவர்கள் அனைவரும் சாவர்க்கரின் இல்லத்திற்குச் சென்றனர்.  இல்லத்தின் கீழ்த்தளத்தில் தன்னைக் காத்திருக்குமாறு நாராயண் டி ஆப்டே கேட்டுக்கொண்டார். நாதுராம் வி. கோட்சேயும், நாராயண் டி ஆப்டேயும் முதல் தளத்திற்குச் சென்று, 5-10 நிமிடங்கள் கழித்து திரும்பி கீழே வந்தனர். அவர்களைத் தொடர்ந்து சாவர்க்கரும் வந்தார். சாவர்க்கர் நாதுராம் வி. கோட்சேயிடமும். நாராயண் டி ஆப்டேயிடமும் வெற்றியுடன் திரும்பவேண்டும் என்று கூறினார். காந்திஜியின் நூறாண்டு காலம் முடிந்துவிட்டது - இந்தத்தடவை அவர்களின் வேலை வெற்றிகரமாக முடியும் என்பதில் சந்தேகமே இல்லை என்று சாவர்க்கரின் இல்லத்திலிருந்து திரும்பும்போது நாராயண் டி ஆப்டே உய்த்துணர்ந்தார்.
விநாயக் டி சாவர்க்கருக்கு எதிரான அரசுத்தரப்பு வழக்கு முழுமையாக அப்ரூவரின் சாட்சியத்தை மட்டுமே நம்பி இருந்தது. அப்ரூவரின் சாட்சியத்தில் ஒரு பகுதி அரசுத் தரப்பில் விசாரிக்கப்பட்ட மிஸ் சாந்தாபாய் பி. மோடக் மற்றும் அய்டப்பா கே.கோட்டியான் ஆகியோருடைய சாட்சியங்களை ஒத்துரைத்திருக்கிறது என்று அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது, ஆயினும் நீதிமன்றம் அவற்றை முழுமையான அளவிற்கு ஏற்றுக்கொள்ளவில்லை.
நாதுராம் வி. கோட்சே. நாராயண் டி. ஆப்டே ஆகியோருக்கும் விநாயக் டி. சாவர்க்கருக்கும் இடையே சாவர்க்கரின் இல்லத்தில் முதல் தளத்தில் நடைபெற்ற சம்பாஷணை என்ன என்பது குறித்து எதுவும் பதிவுருக்களில் காட்டப்படவில்லை.  எனவே, சாவர்க்கர் அப்ரூவர் முன்னிலையில் நாதுராம் வி.கோட்சேயிடமும் நாராயண் டி ஆப்டேயிடமும் கூறிய வாசகங்கள் மகாத்மா காந்தியைப் படுகொலை செய்வது தொடர்பாகத்தான் என்று எடுத்துக்கொள்வதற்காக எந்தக் காரணமும் இல்லை என்று நீதிமன்றம் கருதியிருக்கிறது.  விநாயக் டி.சாவர்க்கருக்கு எதிராக அப்ரூவர் சொன்ன வாக்குமூலத்தை மட்டும் வைத்து முடிவுக்கு வருவது பாதுகாப்பானதல்ல. என்று நீதிமன்றம் கருதியுள்ளது. சாட்சியங்களின் தன்மையின்படி, நீதிபதியின் பகுப்பாய்வு நேர்மையானதே. பாட்கேயின் சாட்சியம், உண்மையான ஒன்று என்று நீதிபதி கண்டபோதிலும். அது மற்றெவராலும் ஒத்துரைக்கப்படாத நிலையில் அதனை மட்டும் கொண்டு சாவர்க்கரைத் தண்டிப்பது பாதுகாப்பற்ற ஒன்று என்று அவர் உணர்ந்திருக்கிறார். ஆயினும், அடுத்த அத்தியாயத்தில் (அத்தியாயம் 25). (ஏழு பக்கங்கள்தான் அதன்பின்னர் இருக்கிறது) பாட்கேயின் நம்பகத்தன்மை குறித்து அவர் குறிப்பிட்டிருக்கும் வாசகங்கள். அவரது சொந்த முடிவுகளையே மறுத்துப்பேசுகிறது. நீதிபதி அவர்கள் பாட்கே சாவர்க்கர் குறித்துக் கூறியவைகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள வில்லை. சாட்சிய சட்டத்தின்படி அவனது சாட்சியத்தை மட்டும் கொண்டு சாவர்க்கரை சிறைக்கு அனுப்புவது பாதுகாப்பற்ற செயல் என்று அவர் கருதினார்.  ஆயினும். சாவர்க்கரின் பங்கு குறித்து நீதிபதி கூறுவதாவது: விநாயக் டி. சாவர்க்கர் தன்னுடைய வாக்குமூலத்தில், காந்தியைக் கொல்லும் சதியில் தனக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்றும். நாதுராம் வி.கோட்சே மீதும் நாராயண் டி. ஆப்டே மீதும் தான் எவ்விதக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். விநாயக் டி. சாவர்க்கருக்கு எதிரான வழக்கிற்கு அரசுத்தரப்பு முழுமையாக அப்ரூவரின் சாட்சியத்தை,  மட்டுமே நம்பி இருக்கிறது.  விநாயக் டி.சாவர்க்கருக்கு எதிராக அப்ரூவர் கூறம் சாட்சியத்தை மட்டும் கொண்டு முடிவுக்கு வருவது பாதுகாப்பான ஒன்று அல்ல என்று ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். எனவே 20.1.1948 மற்றும் 30.1.1948 ஆகிய இரு நாட்களிலும் புது தில்லியில் நடைபெற்ற சம்பவங்களிலும் அவருக்குப் பங்கு உண்டு என்று  ஊகித்துக்கொள்ளவும் முடியாது.   கடைசி வாக்கியம் போகிறபோக்கில் கூறப்பட்ட ஒன்றேயாகும். பாட்கேயின் வாக்குமூலம் மிகவும் தெளிவாக 1948 ஜனவரி 20 அன்றும் ஜனவரி 30  அன்றும் நடைபெற்ற சம்பவங்களில் சாவர்க்கரின் பங்கினை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது. அவரது சாட்சியத்தினை எவரும் ஒத்துரைக்காமல் இருக்கலாம், ஆயினும் நம்பகத்தன்மையற்றது என்று கூற முடியாது. இவ்வாறு நீதிபதி கூறியிருப்பதானது அவர் பாட்கே சாட்சியத்தின் நம்பகத்தன்மை குறித்து கொண்டிருக்கும் தன் சொந்த முடிவுகளுக்கே முரணானது. ஒத்துரைக்கப்பட்ட சாட்சியங்கள், தாமதமாகவே கிடைத்தன
சாவர்க்கர் இறந்து ஓரிரு ஆண்டுகள் கழிந்தபின்னரே, காந்தி கொலை தொடர்பாக நடைபெற்ற நீதியரசர் ஜே.எல். கபூர் ஆணையத்தின் முன்பாக, சாவர்க்கரின் உதவியாளர்கள் சாட்சியமளிக்கையில் பாட்கேயின் சாட்சியத்தினை ஒத்துரைத்துப் போதுமான அளவிற்கு சாட்சியங்களை அளித்துள்ளார்கள். (நீதியரசர் கபூர் மிகவும் புகழ்பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியாவார்.) ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: வீ.டி. சாவர்க்கரின் பாதுகாவலர்களில் ஒருவனான அப்பா ராமச்சந்திரா காசர் என்பவனின் வாக்குமூலத்தின்படி, (மேற்படி வாக்குமூலம் பம்பாய் காவல்துறையினரால் 1948 மார்ச் 4 அன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது) 1946ஆம் ஆண்டிலேயே ஆப்டேயும் கோட்சேயும் சாவர்க்கரை அடிக்கடி சந்தித்தார்கள் என்றும், கார்கரேயும் சிலசமயங்களில் அவரைப் பார்க்க வருவார் என்றும் கூறியிருக்கிறார். ... 1947 ஆகஸ்டில் சாவர்க்கர் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பூனா சென்றபோது, கோட்சேயும் ஆப்டேயும் எப்போதும் அவருடனேயே இருந்தார்கள். இந்து மகா சபையின் எதிர்கால கொள்கை குறித்து அவரிடம் விவாதித்தார்கள். அவர், அவர்களிடம் தனக்கு வயதாகிக் கொண்டிருப்பதாகவும், அவர்கள்தான் தன்னுடைய வேலையைத் தொடர வேண்டும் என்றும் கூறினார். 1947 ஆகஸ்டு தொடக்கத்தில் 5ஆம் தேதியோ 6ஆம் தேதியோ, தில்லியில் ஓர் அகில இந்திய இந்து சிறப்புமாநாடு (கன்வென்ஷன்)  நடைபெற்றது. அதற்கு சாவர்க்கரும், கோட்சேயும், ஆப்டேயும் ஒரே விமானத்தில் சென்றார்கள். சிறப்பு மாநாட்டில் காங்கிரசின் கொள்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆகஸ்ட் 11 அன்று சாவர்க்கர். கோட்சே, ஆப்டே ஆகிய மூவரும் ஒரே விமானத்தில் பம்பாய்க்குத் திரும்பினார்கள். ... 1948 ஜனவரி 13 அல்லது 14ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு, கார்காரே ஒரு பஞ்சாபி இளைஞனுடன் சாவர்க்கரைச் சந்திக்க வந்தார். அவர்கள் சாவர்க்கருடன் 15 அல்லது 20 நிமிடங்கள் நேர்காணல் மேற்கொண்டார்கள். 15 அல்லது 16ஆம் தேதி ஆப்டேயும் கோட்சேயும் காலை 9.30 மணியளவில் சாவர்க்கருடன் நேர்காணல் கண்டார்கள். அதன்பின் ஒருவார காலத்தில், அநேகமாக 23 அல்லது 24ஆம் தேதியாக இருக்கலாம், ஆப்டேயும் கோட்சேயும் மீண்டும் வந்து சாவர்க்கரைச் சந்தித்தார்கள். இச்சந்திப்பு காலை 10 அல்லது 10.30 மணியளவில் சுமார் ஓர் அரை மணி நேரம் நடந்தது. ...
பம்பாய் காவல்துறையினரால் 1948 மார்ச் 4 அன்று சாவர்க்கரின் செயலாளராக இருந்த கஜணன் விஷ்ணு தாம்லே விசாரிக்கப்பட்டார். அக்ரானியைச் சேர்ந்த என்.டி. ஆப்டேயைக் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனக்குத் தெரியும் என்று அவர் கூறினார். ஆப்டே அகமதாபாத்தில் கைத்துப்பாக்கிக் கிளப் ஒன்றை ஆரம்பித்ததாகவும்,       யுத்த காலத்தின்போது ஆட்களைச் தேர்வு செய்யும் கௌரவ அதிகாரியாக இருந்தார் என்றும் அவர் கூறினார். ஆப்டே சாவர்க்கரின் இல்லத்திற்கு அடிக்கடி வருவார் என்றும், சில சமயங்களில் கோட்சேயுடனும் வருவார் என்றும் கூறினார். அக்ரானியில் ஆப்டேயும் கோட்சேயும் நடத்தி வந்த பத்திரிக்கைக்கு காப்புத்தொகை (செக்யூரிட்டி) கேட்கப்பட்டதால் அதற்காக 15 ஆயிரம் ரூபாய் சாவர்க்கர் கடனாகக் கொடுத்தார். அந்தப் பத்திரிக்கை நின்றுவிட்டது.  இந்து ராஷ்ட்ரா என்ற பெயருடன் ஒரு ஏடு துவங்கப்பட்டது. சாவர்க்கர் இந்த ஏட்டின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தார். ஆப்டேயும் கோட்சேயும் இதன் மேலாண் முகவர்கள் (மேனேஜிங் ஏஜண்டுகள்) ஆவார்கள். வி.ஆர். கார்காரே அகமதாபாத்தில் இருந்த இந்து மகா சபை ஊழியர்.  அவரையும் கடந்த 3 ஆண்டுகளாகத் தெரியும். அவரும் எப்போதாவது சாவர்க்கரைச் சந்திக்க வருவார். பாட்கேயையும் கடந்த மூன்று ஆண்டுகளாக அவருக்குத் தெரியும்.  அவரும் சாவர்க்கரைப் பார்க்க அடிக்கடி வருவது வழக்கம். 1948இன் முதல் வாரத்தில், கார்காரேயும் ஒரு பஞ்சாபி அகதி இளைஞனும் சாவர்க்கரைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் சாவர்க்கருடன் சுமார் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்கள் நேர் காணலை மேற்கொண்டார்கள். அவர்களில் எவரும் மீண்டும் சாவர்க்கரைப் பார்க்க வரவில்லை.  ஆப்டேயும் கோட்சேயும் 1948 ஜனவரி மத்தியவாக்கில் பின்னிரவில் சாவர்க்கரைப் பார்க்க வந்தார்கள். இவ்விரு சாட்சிகளின் வாக்குமூலங்களும் காட்டுவது என்னவெனில், ஆப்டேயும் கோட்சேயும் பம்பாயிலும் மாநாடுகளிலும் சாவர்க்கரை அடிக்கடிச் சந்தித்து வந்தார்கள் என்பதும். எல்லாக் கூட்டங்களிலும் சாவர்க்கருடன் அவர்களும் இருந்தார்கள் என்பதுமேயாகும். ... இந்த சாட்சியம் மேலும் காட்டுவது என்னவெனில் கார்காரேயும் சாவர்க்கருக்கு நன்கு அறிமுகமானவர் என்பதும். அவரும் சாவர்க்கரை வந்து அடிக்கடி சந்தித்தவர் என்பதுமாகும். பாட்கேயும் சாவர்க்கரை அடிக்கடி சந்திப்பது வழக்கம். டாக்டர் பார்குரே (ஞிக்ஷீ றிணீக்ஷீநீலீக்ஷீமீ )யும் அவரை சந்திப்பது உண்டு.  இவை அனைத்தும் காட்டுவது என்னவெனில், மகாத்மா காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று பின்னர் அறியப்பட்ட அனைவருமே சாவர்க்கருடன் ஏதோ ஒரு சமயத்தில் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதும் அவரிடம் அதிக நேரம் நேர்காணலை மேற்கொண்டிருந்தார்கள் என்பதுமேயாகும்.  கார்காரேயும் மதன்லாலும் அவர்கள் தில்லிக்குப் போவதற்கு முன்னர் சாவர்க்கரைச் சந்தித்திருக்கிறார்கள் என்பதும், வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் நிகழ்வதற்கு முன்பும். காந்திஜி கொலை செய்யப்படும் சம்பவம் நிகழ்வதற்கு முன்பும் ஆப்டேயும் கோட்சேயும் சாவர்க்கரைச் சந்தித்து. நீண்டநேரம் அவருடன் நேர்காணலை மேற்கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கவைகளாகும். 1946. 1947. 1948 ஆம் ஆண்டுகளில் சாவர்க்கரின் பொதுக் கூட்டங்கள் நடைபெற்ற இடங்களில் எல்லாம் கோட்சேயும் ஆப்டேயும் உடன் இருந்திருக்கிறார்கள் என்பது மிகவும் குறிப்பாகக் கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
சாவர்க்கரின் பாதுகாவலரும். செயலாளரும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டிருந்தார்களானால். சாவர்க்கரும் தண்டிக்கப்பட்டிருந்திருப்பார்.  1948 ஜனவரி 14 அன்றும் பின்னர் 17 அன்றும் கோட்சேயும் ஆப்டேயும் சாவர்க்கரைச் சந்தித்தார்கள் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.  சாவர்க்கரின் பாதுகாவலரான ஏ.ஆர். காசர், கபூர் ஆணையத்தின் முன் சாட்சியமளிக்கையில், வெடிகுண்டு சம்பவத்திற்குப் பின் தில்லியிலிருந்து திரும்பிய அவர்கள் இருவரும் ஜனவரி 23 அல்லது 24 தேதி வாக்கில் சாவர்க்கரைச் சந்தித்தார்கள் என்று தெளிவுபடத் தெரிவித்திருக்கிறார். சாவர்க்கரின் செயலாளரான ஜி.வி. காம்ப்ளே சாட்சியமளிக்கையில் ஆப்டேயும் கோட்சேயும்  ஜனவரி மத்தியவாக்கில் சாவர்க்கரை சந்தித்தார்கள் என்றும். அவரது தோட்டத்தில் அவருடன் உட்கார்ந்திருந்தார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இவை அனைத்து அம்சங்கள் குறித்தும் நீதியரசர் கபூர் முடிவுகளும் மிகவும் தெளிவாக இருக்கின்றன. நகர்வாலாவிடம் இருந்த பெற்ற தகவல்களைப் பட்டியலிட்டபின் அவர் மிகவும் தெளிவானமுறையில் கீழ்க்கண்டவாறு முடிவுக்கு வருகிறார்: என் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து உண்மைகளையும் ஒருங்கே அலசி ஆராயும்போது.  சாவர்க்கர் மற்றும் அவர்தம் குழுவினரால் கொலை மேற்கொள்வதற்கான குற்றமுறு சதி நடைபெற்றது என்பதைத்தவிர வேறு எவ்விதமாகவும் சிந்தித்துப் பார்ப்பது பழிகேடான ஒன்றேயாகும். நகர்வாலா, தன்னுடைய குற்ற அறிக்கை எண் 1இல். சாவர்க்கார் சதியின் பின்னணியில் இருந்தார் என்றும் தான் உடல் நலிவுற்றுவிட்டதுபோல் நடித்தார் என்றும் கூறியிருக்கிறார். படுகொலை நடைபெற்றபின்னர் அடுத்த நாள், அதாவது 1948 ஜனவரி 31 அன்று எழுதப்பட்ட நகர்வாலாவின் கடிதத்தில், தில்லிக்குப் புறப்படுவதற்கு முன்பு கோட்சேயும். ஆப்டேயும் சாவர்க்கரை 40 நிமிடங்கள் சந்தித்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.  இக்கூற்று காசரும். டாம்லேயும் கூறியவற்றை வலுப்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இவ்விருவரும் சாவர்க்கரின் இல்லத்திற்குச் செல்வதற்கு எந்தத் தடையும் எப்போதும் இருந்ததில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால். வழக்கமாகச் சந்திப்பதுடன். ஜனவரி 14 மற்றும் 17 ஆகிய நாட்களில் நடைபெற்ற கூட்டங்களின்போதும். கோட்சேயும் ஆப்டேயும் சாவர்க்கரை மீண்டும் சந்தித்தனர். அப்போது பாட்கே அவர்களுடன் இல்லை. (பக்கம் 132)
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காகவும். இந்து மகாசபைக்காகவும் ஆஜரான வழக்கறிஞரான பி.எல். இனாம்தார் சாவர்க்கர் விடுதலையானது குறித்து மிகவும் ஆச்சர்யப்பட்டு எழுதியுள்ளார். இப்போதும் என்னால் நினைவுகூற முடிகிறது, ஒருசமயம் நீதிபதி ஆத்மா சரண் என்னிடம் கூறியிருந்தார். என்னை நம்புங்கள், நீங்கள் என் முன் வைத்திருக்கிற வழக்கில் முழுமையான நீதியை வழங்குவேன் என்று கூறியிருந்தார். அதே ஆத்மா சரண்தானா இவர் என்று தீர்ப்பு வழங்கிய அன்று எனக்கு மிகவும் ஆச்சர்யத்துடன் என்னை நானே கேட்டுக்கொண்டேன். (1948-49 செங்கோட்டை விசாரணைக் கதை. பாபுலர் பிரகாஷன் 1979. பக்கம் 147).
சாவர்க்கர் அவரது விதி குறித்து எந்த அளவிற்கு மனஉலைவு கொண்டிருந்தார். உணர்ச்சிவசப்பட்டிருந்தார் என்பதனை இனாம்தார் குறிப்பிடுகிறார். பிப்ரவரி 22 அன்று பம்பாயில் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில் சாவர்க்கர் காவல்துறை ஆணையருக்கு எழுத்துபூர்வமான உறுதிமொழி ஒன்றினை எழுதிக்கொடுத்தார். நிபந்தனையின் பேரில் அரசாங்கம் என்னை விடுவிக்கும்பட்சத்தில், அரசாங்கம் குறிப்பிடும் கால அளவு எதுவாக இருந்தாலும் அதுவரை நான் வகுப்புவாத அல்லது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்வேன். (வழக்கில் எதிரித்தரப்புச் சான்றாவணம் 104ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது,) குற்றத்துடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாதவராயிருந்தால் நிச்சயமாக அவர் இவ்வாறு நடந்துகொண்டிருக்க மாட்டார்.  அவரது விடுதலை குறித்து மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை. ஆயினும், அவர் சிறையில் இருத்தி வைக்கப்பட்டிருந்த சமயத்தில்   பம்பாய் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் எம்.சி.சாக்ளா மற்றும் நீதியரசர் பி.பி. கஜேந்திரகட்கர் ஆகியோர் முன்பு 1950 ஜூலை 13 அன்று மற்றோர் உறுதிமொழி அவர் சார்பாக எழுதிக்கொடுக்கப்பட்டது: ஓராண்டு காலத்திற்கு அரசியல் நடவடிக்கை எதிலும் அவர் ஈடுபட மாட்டார். வீட்டிலேயேதான் அவர் இருப்பார். எவ்வளவு கேவலமான. இழிவான பிறவி!
முதன்முதலில் இவ்வாறு மிகவும் இழிவான முறையில் அவர் மன்னிப்பு எழுதிக்கொடுப்பது 1911இலேயே தொடங்கிவிட்டது. 1911 ஜூலை 4இல் அந்தமான் செல்லுலர் சிறையில் அவர் அடைக்கப்பட்டு ஆறு மாதங்கள் முடிவதற்கு முன்னாலேயே இவ்வாறு மன்னிப்பிக்கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார். இங்குதான் அத்வானி அவருக்காக ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று விரும்பினார்.    இரண்டாவதும், மூன்றாவதும் 1913 அக்டோபரிலும், நவம்பரிலும் வைஸ்ராயின் எக்சிகியூடிவ் கவுன்சிலில் உள்துறை உறுப்பினராக இருந்த சர் ரெஜினால்ட் கிராட்டாக் என்பவருக்கு எழுதியுள்ள கடிதங்கள். அவற்றில் அவர். இந்த அரசாங்கம் எப்படி நான் சேவகம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறதோ அவ்வாறு சேவகம் செய்ய நான் தயார். ... தாயுள்ளத்துடன் நடந்து கொள்ளும் அரசாங்கத்திற்கு வீணாய்ப் போன மகன் வேறு எப்படி கைமாறு செய்ய முடியும்? இதுதான் தேசிய ஹீரோ எழுதியுள்ள வாசகங்கள். நான்காவதாகவும், ஐந்தாவதாகவும் 1914இலும் 1917இலும் இதேபோன்று மன்னிப்பு கடிதங்களை சமர்ப்பித்திருக்கிறார். பின்னர் ஆறாவதாக 1920 மார்ச் 30இல் எழுதியிருக்கிறார். அது முழுமையாக ப்ரண்ட்லைன் ஏட்டில் வெளியிடப் பட்டிருக்கிறது. (2005 ஏப்ரல் 8 ப்ரண்ட்லைன் ஏட்டில் சாவர்க்கரின் கருணை மனு என்ற தலைப்பில் ஆசிரியரின் கட்டுரையைக் காண்க), ஏழாவது மன்னிப்புக் கடிதம் 1924இல் சமர்ப்பிக்கப் பட்டிருக்கிறது. (ப்ரண்ட்லைன். 1995 ஏப்ரல் 7). பின்னர் 1948இலும் 1950இலும் எட்டாவது. ஒன்பதாவது கடிதங்களை எழுதியிருக்கிறார்.  பிரிட்டிஷாரிடம் இதேபோன்று இவ்வளவு இழிவான முறையில் மன்னிப்புக் கடிதங்களை எழுதிக்கொடுத்த அரசியல் தலைவர் வேறெவரும் உண்டா?
காந்தியின் கொலை என்பது அவருடைய கொலைப்பட்டியலில் ஒன்றுதான். 1909இல் லண்டனில் சர்சான் விலி, 1910இல் நாசிக் கலெக்டர் ஏ.டி,எம். ஜாக்சன், 1931இல் பம்பாயின் பொறுப்பு கவர்னராக இருந்த எர்னஸ்ட் ஹாட்சான் என்பவனைக் கொலை செய்ய முயற்சி. இவ்வழக்குகள் ஒவ்வொன்றிலும் சாவர்க்கர் மற்றவர்களைத்தான் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி இருக்கிறார்.
1911 முதல் 1950 வரை தொடர்ந்து அவர் எழுதியுள்ள மன்னிப்புக் கடிதங்களை, அவரைப் போற்றிப் புகழ்பவர்கள் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் அவர் கடைப்பிடித்த இந்துத்வா கொள்கையை அவர்களும் கடைப்பிடிப்பதே அதற்குக் காரணமாகும்.
(நன்றி: ப்ரண்ட்லைன்.
தமிழில்: ச.வீரமணி)