Saturday, September 3, 2016

காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழு நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைகளை துவக்குக: சீத்தாராம் யெச்சூரி




புதுதில்லி, செப். 3-ஐம்பது நாட்களுக்கு மேலாக பதற்றத்தின் பிடியில் இருக்கும் காஷ்மீருக்கு அனைத்துக் கட்சிக் குழு ஞாயிறன்று செல்கிறது. இக்குழு செல்வதைத் தொடர்ந்து காஷ்மீரின் அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தைகளை துவக்க வேண்டுமென்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பாக தலையிட்டு தீர்வுகாண அரசை நிர்ப்பந்திக்கும் நோக்கில் அனைத்துக் கட்சி தூதுக்குழு ஒன்று ஞாயிறன்று காஷ்மீர் செல்கிறது. இதில் இடதுசாரிக் கட்சிகள் ஆற்ற வேண்டிய பங்கு தொடர்பாக, சனிக்கிழமையன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா ஆகியோரும் மற்றும் பல்வேறு அறிஞர் பெருமக்களும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.இதனைத் தொடர்ந்து இக்கூட்ட முடிவுகளை விளக்கி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சீத்தாராம் யெச்சூரியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியும் கலந்து கொண்டனர்.அப்போது சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண அங்கே அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும் தூதுக்குழு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
இரண்டு மாதங்கள் கடந்தபின் இப்போது அரசு அதற்கு முன்வந்திருக்கிறது.கடந்த இரண்டு மாதங்களாகவே காஷ்மீர் மிகவும் மோசமான கொதிநிலையில் இருந்து வருகிறது. ஹிஸ்புல்கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதிலிருந்தே மக்கள் வீதிகளில்இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2 மாதங்களில் 59 பேர்கொல்லப்பட்டதாகவும், சில ஆயிரம் பேர் காயம் , அடைந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் 2 பேர் கொல்லப் பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. எமக்குக் கிடைத்துள்ள தகவலின்படிஇறந்தவர்கள் 70 பேர் ஆவர்.
அங்கே போராட்டத்தை மிகவும் தீவிரமாக நடத்திக் கொண்டிருப்பவர்கள் இளைஞர்கள். தற்சமயம் இந்தியாவுக்கும் காஷ்மீர் மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகி இருக்கிறது. காஷ்மீர் பிரச்சனையை மிகவும் ஆழமான முறையில் அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டிய சூழ்நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.
இடதுசாரிகளின் நிலைப்பாடு
ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையைப் பொறுத்தவரை இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு என்னவெனில் காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதாகும். கடந்த சில ஆண்டுகளாக இதில் அரசுத்தரப்பில் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை மீண்டும் வழங்கிட வேண்டும். 1948இல்காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோது அதற்கு அளித்த உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும்,
5 முக்கிய அம்சங்கள்
காஷ்மீர் பிரச்சனைக்கு மிக முக்கியமாக ஐந்து அம்சங்களில் முடிவு எடுக்கவேண்டியது அவசியம் என்று இடதுசாரிக் கட்சிகள் கருதுகின்றன.முதலாவதாக, பெல்லட் குண்டுகள் சுடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதைப் பொறுத்தவரை உள்துறை அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். மாற்று ஏற்பாடு செய்ய இருப்பதாகக் கூறியிருக்கிறார். மிளகு மற்றும் மிளகாய் கலந்த தூள் வீசப்படும் என்று கூறியிருக்கிறார். என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.இரண்டாவதாக, ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம், மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.மூன்றாவதாக, பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அனைத்து அத்துமீறல்கள் தொடர்பாகவும் நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும்.நான்காவதாக. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப் பட வேண்டும்.ஐந்தாவதாக, பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும், ஸ்ரீநகரில் ஐஐஎம், ஐஐடி திறக்கப்பட வேண்டும்,
அனைவருடனும் நிபந்தனையின்றி பேச்சு நடத்துக!
அடுத்ததாக அனைத்து அரசியல்கட்சிகள் மற்றும் அரசியல் சக்திகளுடனும் எவ்வித முன் நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். 2010இல் இதுபோன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது என்பதை நினைவுகூர்ந்திட வேண்டும். காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண 370ஆவது பிரிவு உளப்பூர்வமாக அமல்படுத்தப்பட வேண்டும். மாநிலத்தின் மூன்று பகுதிகளான ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய பிராந்தியங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும். அடுத்து பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும், அங்கிருந்து எல்லை தாண்டிய அத்துமீறல்கள் வரலாம். ஆனாலும் பாகிஸ்தானுடன் பேச வேண்டியதும் அவசியமாகும்.காஷ்மீர் மக்கள் குறித்து நாட்டின் இதர பகுதி மக்களிடம் தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. காஷ்மீரிகள் அனைவருமே பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்பதுபோன்று சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். காஷ்மீர் இளைஞர்கள் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதலுக்கு உள்ளாவது தடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.சுதாகர் ரெட்டி கூறுகையில், தூதுக்குழுவினர் காஷ்மீர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது, காஷ்மீர் மக்களின் நம்பிக்கைகளைப் பெறக்கூடிய விதத் தில் அமைந்திட வேண்டும் என்றும் இறுதி அரசியல் தீர்வுக்குவழிவகைகள் கண்டிட வேண்டும் என்றும் கூறினார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது து.ராஜா மற்றும் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஹன்னன்முல்லா ஆகியோர் உடன் இருந்தனர். (ந.நி.)



No comments: