Friday, February 29, 2008

விவசாயிகள் தனியாரிடம் வாங்கியுள்ள கடன்களும் ரத்து செய்யப்பட வேண்டும்:சீத்தாராம் யெச்சூரிபுதுடில்லி, பிப். 29-

நாடு முழுதும் கந்துவட்டி மற்றும் தனியாரிடம் மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்திட மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. வெள்ளியன்று காலை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 2008-2009க்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். மாலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை குறித்து சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

‘‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட்டாகும் இது. எனவே வரவிருக்கும் பொதுத்தேர்தலை மனதில் கொண்டு இது தயாரிக்கப்பட்டிருப்பது இயற்கையே. பட்ஜெட்டின் தொனி மற்றும் செல்திசை இதனை நன்றாகவே பிரதிபலிக்கிறது. இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் பட்ஜெட் தொடர்பாக ஒரு குறிப்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அக்குறிப்பில் கூறப்பட்ட சங்கதிகள் பட்ஜெட்டில் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறது. கண்டுகொள்ளப் பட்டிருக்கிறதுதானே யொழிய, அவை நிறைவேற்றப்பட்டது என்று நான் கூறுவதற் கில்லை. (The note given by the Left parties have been addressed. But they have not been met). சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

இதனை வரவேற்கிறோம். ஆனால் இது தொடர்பாக ஒன்றை நாம் அவசியம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அரசாங்க நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ள கடன்கள்தான் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு கடன்பெற்றிருக்கும் விவசாயிகள், மொத்த விவசாயிகளில் மூன்றில் ஒரு பங்கினர் ஆவார்கள். ஆனால் மூன்றில் இரு பங்கு விவசாயிகள் தனியாரிடமும் மற்றும் கந்து வட்டிக்காரர்களிடமும் கடுவெட்டிக்குக் கடன் பெற்று மீள அளிக்க முடியாமல் செத்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளில் இவர்கள்தான் கணிசமானவர்கள். அவ்வாறு தனியாரிடம் கடன் பெற்றவர்கள் குறித்து பட்ஜெட்டில் கண்டுகொள்ளப்படவே இல்லை. இவர்களை கந்துவட்டிக்காரர்களிடமிருந்து மீட்க வேண்டியது அவசியமாகும்.மேலும், வங்கிகள் அவ்வாறு சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும்போது, அத்தொகை குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவுமே கூறப்படவில்லை. எனவே வங்கிகள் அவ்வாறு தள்ளுபடி செய்யும்போது, அத்தொகைக்கு அரசாங்கம் பத்திரங்கள் வழங்குமாம். இது பல வங்கிகளை நலிவடைந்ததாக மாற்றிவிடக்கூடிய ஆபத்து உண்டு.

எனவே, இவ்வாறு கடன் ரத்து செய்யப்படும் தொகை குறித்து நிதிநிலை அறிக்கையிலேயே நிதி ஒதுக்கி இருக்க வேண்டும்.அடுத்ததாக வருமானவரி உச்ச வரம்பு சற்றே அதிகரிக்கப்பட்டிருப்பது, மத்தியதர வர்க்கத்தினருக்கு சற்றே நிவாரணம் அளித்திடும். இதுவும் வரவேற்கத்தக்க ஒரு நிவாரணமே. அடுத்து கல்வி, சுகாதாரம்ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவை போதுமானதல்ல. கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறையே 6 சதவீதமும் 3 சதவீதமும் செலவிடப்படும் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது ஒதுக்கியிருக்கும் தொகைக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை. அடுத்து பட்ஜெட் கண்டுகொள்ளாது மற்றொரு முக்கியமான விஷயம் பணவீக்கம் குறித்ததாகும். அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருப்பது குறித்து அது கண்டுகொள்ளவே இல்லை. இது மக்களின் வாழ்க்கையுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட விஷயமாகும். அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் நாள்தோறும் ஏறிக்கொண்டிருப்பதால் சாமானிய மக்கள் மிகவும் இன்னல்களுக்காளாகி இருக்கிறார்கள். பொது விநியோக முறையை வலுப்படுத்துவதன் மூலம் இவர்களுக்கு உரிய நிவாரணம் அளித்திட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டும். இதற்கு உணவு மான்யங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையும் உயர்த்தப்பட வேண்டும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த நாம் சென்ற ஆண்டு 5 மில்லியன் டன் கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை தொடர்கிறது. இவை குறித்தெல்லாம் பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை.

குறிப்பாக பொது விநியோக முறையை வலுப்படுத்துவது குறித்து எதுவும் இல்லை. பொது விநியோக முறையை வலுப்படுத்தாமல் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது. இவை குறித்தெல்லாம் பட்ஜெட் முழுமையாக உதாசீனம் செய்திருக்கிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

(தொகுப்பு: ச.வீரமணி)

Thursday, February 28, 2008

‘அவதிப்படும்’ இந்தியாவைக் கண்டுகொள்ளாத குடியரசுத்தலைவர் உரை

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்குச் சற்று முன்னதாக, குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பட்டீல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றியிருக்கும் தன் முதல் உரையில், அரசு மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் குறித்து மிகவும் அதிகமான அளவில் கூறியிருக்கிறார். அவரது உரையை ஒட்டுமொத்தமாக ஆராய்கையில், நாட்டின் பொருளாதார சூழ்நிலையின் உண்மையான இருப்பு நிலைக் குறிப்பை - உண்மையான நிலைமையினை - அது முன்வைப்பதாக இல்லை என்பதை உணர முடியும். பதிலாக, ‘‘அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நாட்டின் உள்ளடங்கலான வளர்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது’’ என்று கூறி, அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளையே சாதனைகளாகப் பட்டியலிட்டிருக்கிறார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ‘ஒளிர்கின்ற’ இந்தியாவுக்கும் ‘அவதிப்படும்’ இந்தியாவுக்கும் இடையில் உள்ள இடைவெளி நிரப்பப்பட வேண்டும் என்று இப் பகுதியின் வாயிலாக, பலமுறை வலியுறுத்தி இருக்கிறோம்.
துரதிர்ஷ்டவசமாக, குடியரசுத் தலைவர் உரை வெள்ளிடைமலை போன்ற இந்த உண்மையை அங்கீகரிக்கக்கூடிய வகையில் இல்லை. ‘‘வரலாற்றில் முதன்முறையாக, இந்தியப் பொருளாதாரம், வரிசையாகக் கடந்த நான்கு ஆண்டுகளாக, ஒவ்வோராண்டும் 9 சதவீத வளர்ச்சிக்கு மிக அருகாமையில் வளர்ந்திருக்கிறது’’ என்று ஒருபக்கத்தில் பீற்றிக்கொண்டாலும், மறுபக்கத்தில் நாட்டில் ஏதேனும் ஒரு பகுதியில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருவர் என்கிற வீதத்தில் கடன் தொல்லை தாங்காமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதையும், நாட்டு மக்களில் 78 சதவீத மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறும் நிலை தொடர்வதையும் நாணமற்ற முறையில் சொல்லாமல் விட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டு கால பொருளாதார நடவடிக்கைகளின் யதார்த்த நிலை என்பது இதுதான். இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது. ‘ஒளிர்கின்ற’ இந்தியாவின் சிறப்பம்சங்களை -- பங்குச்சந்தை குறியீட்டெண் திடீர் உயர்வு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அந்நியச் செலாவணி கையிருப்பு, உயரளவில் முதலீடு, சேமிப்பு விகிதம் 34 சதவீதத்திற்கும் மேலாக இருத்தல், 48 அமெரிக்க டாலர் பில்லியனர்கள் உருவாகி இருத்தல் - ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கும் அதே சமயத்தில், ‘அவதிப்படும்’ இந்தியாவின் பரிதாபகரமான நிலையை - அவரது உரை முற்றிலுமாக ஓரங்கட்டிவிட்டது. எல்லாவற்றையும் விட மோசம், தொடர்ந்து ஏறிவரும், குறிப்பாக அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி குறித்தும், அதன் விளைவாக சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் அரிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பது குறித்தும் எதுவுமே கூறப்படவில்லை.
இந்திய வேளாண்மையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தோ, விவசாயிகள் தற்கொலைகள் குறித்தோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. விவசாயிகளுக்கான கடன் கணிசமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி அனைவரையும் முட்டாளாக்கப் பார்க்கிறார்கள். உண்மையில் விவசாயிகளில் இன்னும் மூன்றில் இரண்டு பகுதியினர் கந்துவட்டிக்காரர்களின் கடன்வலையில் சிக்கி வெளி வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மையல்லவா? இவ்வாறு இவர்கள் கடன் வலையில் சிக்கியிருப்பதுதான் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு அடிப்படைக் காரணமாகும். இதுகுறித்தெல்லாம் குடியரசுத்தலைவர் உரையில் கண்டுகொள்ளப்படவே இல்லை. அதேபோன்று நம் நாட்டின் உணவுப்பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது குறித்தும் எதுவும் கூறப்படவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக உணவு தான்ய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த நம் நாட்டில் சென்ற ஆண்டு ஐந்து மில்லியன் டன்கள் கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும்கூட பொது விநியோக முறை தொடர்ந்து அரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. மத்திய அரசு மாநிலங்களுக்கு அளித்து வந்த உணவு தான்யங்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் எதிர்காலத்தில் சாமானிய மக்களின் வாழ்நிலை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்பதற்கான முன்னறிகுறிகளேயாகும்.
இந்தப் பகுதியில் நாம் முன்பே பலமுறை விவாதித்திருப்பதைப்போல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன் சமர்ப்பிக்கப்படவிருக்கும் கடைசி பட்ஜெட்டிலாவது, குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தில் அளித்துள்ள மக்கள் நலம் சார்ந்த உறுதிமொழிகளை அமல்படுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்திடும் என்று நம்புவோமாக.
குடியரசுத் தலைவர் தன்னுடைய உரையில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படவிருக்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டிருக்கிறார். ‘‘வானத்தில் பாதிப் பகுதி பெண்கள்’’ என்கிற மேற்கோளை குடியரசுத்தலைவர் பயன்படுத்தியிருந்தாலும், மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவு குறித்து குறிப்பிடுவதைத் தவிர்த்திருக்கிறார். ஐமுகூ அரசாங்கம் தன்னுடைய குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக நிலுவையில் உள்ள இச்சட்டமுன்வடிவை வெகுவிரைவில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருந்தபோதிலும், இன்னும் அது குறித்து சிந்திப்பதற்கான காலம் ஐமுகூ அரசாங்கத்திற்கு வரவில்லை.
ஆட்சியின் கடைசி ஆண்டான இப்போதாவது ஐமுகூ அரசாங்கம் இச்சட்டமுன்வடிவை நிறைவேற்ற முன்வர வேண்டும்.கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆகிய துறைகளில், குடியரசுத் தலைவர், பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக் குறியீடுகளைக் கணக்கிட்டிருக்கிறார். பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட ஒதுக்கீடுகள் இன்னும் ஐந்தாண்டு காலம் கழிந்தபிறகுதான் நடைமுறைக்கு வரும் என்பதைக் குடியரசுத்தலைவர் ஏனோ நாட்டிற்குச் சொல்ல முன்வரவில்லை. எனவே தற்சமயம் கடும் இன்னல்களுக்காளாகி இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உடனடி நிவாரணம் இவற்றால் கிடைக்காது என்பதை இவர் இவ்வாறு சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
மற்ற பல பிரச்சனைகள் குறித்து - அதாவது பூமி வெப்பமாதலிலிருந்து தொலைத் தகவல் தொடர்பு, ஆயுதப் படைகள், அயல்துறைக் கொள்கை வரை உரையாற்றிய குடியரசுத் தலைவர் அவர்கள் - மேலும், ‘‘ராணுவம் சாரா துறைகளில் அமெரிக்கா மற்றும் இதர நட்பு நாடுகளுடனான அணுசக்தி ஒத்துழைப்பு சாத்தியமாக மாறும்’’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்தப் பிரச்சனையில் இடதுசாரிக் கட்சிகள் மிகவும் தெள்ளத் தெளிவாகவும், எவ்வித ஊசலாட்டமுமின்றி இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து வருகின்றன.
இன்றைய நிலையில், ஐமுகூ - இடதுசாரிக் கட்சிகள் ‘‘அணுசக்தித் துறையில் பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து இந்திய அரசாங்கம் சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் விவாதிப்பதைத் தொடரலாம், பேச்சுவார்த்தையின் முடிவுகளை மீண்டும் அரசாங்கம் ஐமுகூ - இடதுசாரிக் கட்சிகளின் குழுவின் முன் சமர்ப்பித்திட வேண்டும், அக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை அடுத்தே அரசாங்கம் இப்பிரச்சனையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்’’ என்பதை ஐமுகூ அரசாங்கம் - இடதுசாரிக் கட்சிகள் ஒப்புக்கொண்டிருக்கின்றன. அதுவரை அரசாங்கம் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதில் இடதுசாரிக் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.
குடியரசுத் தலைவர் உரையின் தொனி மற்றும் அது செல்லும் திசைவழி என்பது, வரவிருக்கும் பொதுத்தேர்தலை அது கணக்கில் எடுத்துக்கொண்ட அளவிற்கு, ஆட்சியின் சாதனைகளையும் சோதனைகளையும் கூற வில்லை என்பதையே காட்டுகிறது. எது எப்படி இருந்தாலும், இடதுசாரிக் கட்சிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிர்ப்பந்தத்தைக் கொடுக்கக்கூடிய வகையில் வெகுஜனப் போராட்டங்களை வலுப்படுத்த உறுதிபூண்டிருக்கிறது.
(தமிழில்: ச. வீரமணி)

Tuesday, February 26, 2008

கொசாவோ: ஏகாதிபத்தியத்தின் ஏவலாட்சிசெர்பியாவின் ஒரு பகுதியாக இருந்த கொசாவோ, சுதந்திரம் அடைந்து விட்டதாக வந்துள்ள பிரகடனம், யுகோஸ்லேவியா சிதைவுறுவதில் கடைசிக் கட்டமாகும். இச்செயலை மேற்கத்திய வல்லரசுகள் இருபதாண்டுகளுக்கும் முன்பே தொடங்கின. 1991இல் ஸ்லோவேனியா மற்றும் குரோசியா சிதைவுண்டபோது அதனை அங்கீகரித்த மேற்கத்திய வல்லரசுகள் மேலும் ஒருபடி முன்னே சென்று போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா ஆகியவற்றையும் வெட்டி உருவாக்கின. செர்பியா மீது நேட்டோ படைகள் மிகப் பெரிய அளவில் வான்வெளி வழியாக குண்டுகளைப் பொழிந்து, ஸ்லோபோடான் மிலோசெவிக்கை ஆட்சியிலிருந்து அகற்றியதன் மூலம் இது மிகவும் எளிதாயிற்று. யுகோஸ்லேவியாவை அழிப்பது என்பது அமெரிக்க ஏகாதிபத்தியம், காஸ்பியன் எண்ணெய்ப் படுகையில் வள ஆதாரங்கள் நிரம்பிய பால்கன்ஸ் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியேயாகும். கொசாவன் உருவாகியிருப்பது கடைசியான நடவடிக்கையாகும்.

பதினாறாயிரத்திற்கும் அதிகமான நேட்டோ துருப்புகள் நிலைகொண்டுள்ள நிலையிலேயே கொசாவான் சுதந்திரம் அடைந்திருப்பதாக கொசாவான் நாடாளுமன்றம் பிரகடனம் செய்திருக்கிறது. கொசாவான் அரசை உருவாக்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கும் பணியில் நேட்டோ துருப்புகள் இறங்கியிருக்கின்றன. இச்செயலானது, 1999இல் செர்பியாவிற்கு எதிராக அமெரிக்கா - நேட்டோ யுத்தம் நடத்தியதற்குப்பின் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களுக்கும் சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானதாகும். அமெரிக்காவும் மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் 1990களின் முற்பகுதிகளில் தங்கள் அத்துமீறல் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காகவும், அதுநாள்வரை தங்கள் அதிகார வரம்பெல்லைக்குள் வராது, தற்சமயம் வந்துள்ள பகுதிகளுக்கும் தங்களுடைய நவீன தாராளமயக் கொள்கைகளைத் திணிப்பதற்காகவும் ஒரு புதிய கொள்கையை உருவாக்கி வெளியிட்டார்கள். இன மோதல்கள் மீது ‘‘மனிதாபிமான முறையில் தலையிடலாம்’’ என்று கூறி அனைத்து நாடுகளின் இறையாண்மையை மிதித்துச் சென்றன. அப்போது அமெரிக்க அரசின் செயலாளராக இருந்த மடிலென் ஆல்பிரைட், ‘‘நாடுகளின் இறையாண்மை’’ என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் சித்தாந்தம் என்றும் அதனை இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப குறைத்துச் சுருக்கிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். ‘‘மனிதாபிமானமுறையில் தலையிடலாம்’’ என்பதிலிருந்து ‘‘பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்’’ வரை, அமெரிக்க ஏகாதிபத்திய சிந்தனையாளர்கள், எந்த நாடுகளின் மீதும் ராணுவரீதியாகத் தலையிட்டு, ஏவலாட்சிகளை நிறுவிடலாம் என்று கூறத் தொடங்கிவிட்டார்கள்.

ஈராக் மீது ஆக்கிரமிப்பு, அதற்கு முன் வடக்கில் குர்திஷ் ஏவலாட்சி ஆகிய அனைத்தும் இவ்வாறு ஏகாதிபத்திய சிந்தனையாளர்களின் கொள்கைகளே.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் புதிய அரசை அங்கீகரித்திட தங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருக்கின்றன. பிரிட்டிஷ் தூதர் அப்பகுதிக்குச் சென்று தங்கள் ஆதரவைத் தெரிவித்த முதல் நபராவார். தனி வடக்கு அயர்லாந்துக்காகப் போராடும் ஐரிஷ் குடியரசுப் படையினருடன் பல ஆண்டு காலம், போராடிக் களைத்துப் போயிருக்கும் இதே பிரிட்டிஷ் அரசாங்கம்தான், இவ்வாறு தெரிவித்திருக்கிறது. ஆனால் ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகள் கொசாவோ சுதந்திரம் அடைவதற்கு ஆதரவாக ஒருமனதாக இல்லை.

கிரீஸ், ஸ்பெயின், சைப்ரஸ், ஸ்லோவேகியா, பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகியவை ‘கொசாவா சுதந்திரம் அடைவதை’ எதிர்ப்பதாகத் தெரிவித்திருக்கின்றன.செர்பியா மற்றும் ரஷ்யா, கொசாவிற்கு சுதந்திரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்திருக்கின்றன. இப்பிரச்சனையை பாதுகாப்பு கவுன்சிலுக்கும் கொண்டு சென்றிருக்கின்றன. இப்பிரச்சனை மீது சீனா தன் ‘‘ஆழ்ந்த கவலையைத்’’ தெரிவித்துள்ளது. ‘‘சர்வதேச உறவுகளைக் கட்டுப்படுத்தும் அடிப்படை நெறிமுறைகளையும், அதேபோல் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் பாத்திரத்தையும் இது கடுமையாகப் பாதிக்கும்’’ என்று சீன அயல்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தனி நாடு கோரிக்கைகளை எதிர்கொண்டுள்ள இந்தோனேசியா மற்றும் ஸ்ரீலங்கா போன்ற மற்ற ஆசிய நாடுகளும் இதனை எதிர்த்திருக்கின்றன. தேசிய சிறுபான்மை இனங்களை உள்ளடக்கியுள்ள பல நாடுகள் தனிநாடு கோரிக்கைகளை எதிர்கொண்டுள்ளன. இந்தியாவும் செர்பியா பிளவுபடுவதற்கு எதிராகத் தெளிவான அறிக்கையை வெளியிட முன்வர வேண்டும். ஆனால், அயல்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர், மிகவும் தெளிவற்றதோர் நிலைபாட்டினை எடுத்திருக்கிறார். இப்பிரச்சனை தொடர்பாகக் கூறுகையில், ‘‘கொசாவோவால் ஒருதலைப்பட்சமாக வெளியிடப்பட்டுள்ள சுதந்திரப் பிரகடனத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிரகடனத்தில் பல்வேறு சட்டப் பிரச்சனைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து உருவாகியுள்ள சூழ்நிலையை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறும் அதே சமயத்தில், ‘‘அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் எல்லைகள் அனைத்து நாடுகளாலும் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா எவ்வித முரண்பாடும் இல்லாத வகையில் உறுதியாக நிலை எடுத்துள்ளது’’ என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார். அப்படியாயின், அது செர்பியாவுக்கும் பொருந்தும் அல்லவா! பின் ஏன் இந்திய அரசு ‘‘ஆழமான சட்டப் பிரச்சனைகளை’’ ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லிப் பின்வாங்குகிறது?

சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எண்ணற்ற பிரிவினைக் கோரிக்கைகளை எதிர்கொண்ட இந்திய அரசு, ஒரு நாட்டின் இறையாண்மையை முற்றிலுமாக மீறியிருக்கக்கூடிய இச்செயல்பாட்டைத் ஐயத்திற்கிடமற்ற வகையில் ஆணித்தரமாகக் கண்டித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், ஐமுகூ அரசாங்கம் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதில் அமெரிக்காவுடன் மோதக்கூடிய நிலை ஏற்படும் எனில் அதிலிருந்து நழுவும் நிலைபாட்டினையே ஐமுகூ அரசு எடுத்து வருகிறது. ஒரு நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கக்கூடிய, சிறுபான்மை இனங்களைப் பாதிக்கக்கூடிய, சர்வதேச சட்டவிதிகளுக்குச் சவால் விடக்கூடிய இத்தகு பிரச்சனைகளிலாவது இந்தியா தன் நிலைபாட்டினை உரத்துப் பேசிட முன்வரவேண்டும்.

ஏகாதிபத்திய ஆணவத்தின் சமீபத்திய நடவடிக்கையாக, நேட்டோ படையினரின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள கொசாவோ, இப்பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டுவருவதற்கு உதவிடாது.

தமிழில்: ச. வீரமணி

Monday, February 25, 2008

இளைஞர்களுக்கான முதலீட்டை அதிகரித்திடக் கோரி-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாபெரும் பேரணி

புதுடில்லி, பிப். 25-
இளைஞர்களுக்கான முதலீட்டை அதிகரிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்த கொண்ட பேரணி - ஆர்ப்பாட்டம் புதுடில்லியில் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் காலக் கூட்டத் தொடர் புதுடில்லியில் திங்கள் அன்று தொடங்கியது. இதனை யொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி திங்களன்று காலை டில்லி ராம்லீலா மைதானத்திலிருந்து புறப்பட்டு நாடாளுமன்றம் நோக்கி வந்தது. பேரணியில் கேரளம், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், அர்யானா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இளைஞர்களும் இளம் பெண்களும் பெரும் திரளாகக் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தியாவின் எதிர்காலம் செம்மையாக அமைந்திட, இளைஞர்களுக்கான முதலீட்டை அதிகரிக்கக் கோரியும், வேலை நியமனத் தடை ஆணையை ரத்து செய்யக்கோரியும், அனைத்துக் காலியிடங்களையும் நிரப்பிடக்கோரியும், குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றிடக் கோரியும், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்தக் கோரியும், தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதச் சட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் அதிகரிக்கக்கோரியும், இத்திட்டத்தை நகர்ப்புறத்திற்கும் விரிவாக்கக் கோரியும் பேரணியில் முழக்கமிட்டு வந்தனர், பேரணி நாடாளுமன்ற வீதி வருகையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர் தபஸ் சின்கா, இந்திய மாணவர் சங்க பொதுச் செயலாளர் ராகேஷ் முதலானோர் உரையாற்றினார்கள்.
பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் பிரதமரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளடங்கிய மனுவைக் கொடுத்தனர்.
(தொகுப்பு:ச.வீரமணி)

Sunday, February 24, 2008

கியூபா புரட்சியின் செய்தியை நாடு முழுதும் கொண்டு செல்வோம்-சோம்நாத் சாட்டர்ஜி முழக்கம்


புதுடில்லி, பிப். 24-
கியூபா புரட்சியின் செய்தியை நாடு முழுதும் கொண்டு செல்ல உறுதியேற்போம் என்று நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி முழங்கினார்.
கியூபா புரட்சியின் 50ஆம் ஆண்டு விழா புதுடில்லியில் உள்ள கேரளா இல்லத்தில் ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது. கியூபா தூதரகம் மற்றும் கியூபா ஒருமைப்பாடு தேசியக் குழுவின் சார்பில் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சிக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செயலாளர் தேவராஜன் தலைமை வகித்தார். கியூபா ஒருமைப்பாடு தேசியக் குழுவின் அமைப்பாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான எம். விஜயராகவன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினரும் நாடாளுமன்ற மக்களவைத் தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜி பேசியதாவது:
‘‘கியூபா புரட்சியின் 50ஆவது ஆண்டு விழா நிகழ்வில் பங்கேற்பதில் உண்மையில் உள்ளம் மிகவும் கிளர்ச்சி கொள்கிறது. கியூபா எந்த சமயத்திலும் பிற்போக்கு சக்திகளுடன் சமரசம் செய்து கொண்ட தில்லை. வளர்ந்த நாடுகள் என்று சொல்லக்கூடிய பல நாடுகளில் இன்னமும் எழுத்தறிவின்மை நீடிக்கிறது, சுகாதார வசதிகள் மக்களுக்கு இன்னமும் முழுமையாகக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லமுடியாது. ஆனால் கியூபாவில் எழுதப்படிக்கத் தெரியாதவர் எவருமே கிடையாது, அதேபோல் பொது சுகாதாரத்தில் வளர்ந்த நாடுகளை விட மிகச்சிறந்த முறையில் முன்னணியில் இருக்கிறது.கியூபா ஒரு மிகச்சிறிய நாடுதான். ஆயினும் மாபெரும் புரட்சியை நடத்திய நாடு. இன்று அது மிகவும் வலுவான நிலையில் உள்ளது.
கியூபா புரட்சியின் ஐம்பதாம் ஆண்டு விழாவைக் கொண்டாடுவதன் மூலம் கியூபா புரட்சியின் செய்தியை, கியூபா விடுதலையின் செய்தியை, கியூபாவிற்கான ஒருமைப்பாட்டை, கியூபாவின் சோசலிசக் கலாச்சாரத்தை உலகம் முழுதும் கொண்டு செல்வோம். கியூபா புரட்சியின் நாயகர்களுக்கு நம் வீர வணக்கங்களை செலுத்திடுவோம். கியூபா புரட்சியில் தோழர் பிடல் காஸ்ட்ரோவின் பங்களிப்பை, தோழர் சேகுவேராவின் பங்களிப்பை, இதுபோன்று எண்ணற்ற புரட்சியாளர்களின் பங்களிப்பை என்றென்றும் நினைவில் கொள்வோம். அவை ஒளிவிளக்காகத் திகழ்ந்து நம்மை என்றென்றைக்கும் வழிநடத்தும்.
கியூபா புரட்சியானது, மக்களை அடிமைத்தளையிலிருந்து, சுரண்டலிலிருந்து, பஞ்சம் பசியிலிருந்து விடுவித்திருக்கிறது. எனவே, இதனை இந்த ஆண்டு முழுதும் நாடு முழுதும் தொடர்ந்து கொண்டாடுவது மிகவும் முக்கியம். எனவேதான் கியூபா ஒருங்கிணைப்புக் குழு இதனை ஆண்டு முழுதும் கொண்டாட திட்டங்கள் தீட்டி இருக்கிறது.
கியூபா புரட்சி, இன்றைய தினம் சமத்துவத்திற்காகப் பல்வேறு நாடுகளிலும் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒளிவிளக்காகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளிலும் பல்வேறு சுரண்டல்களுக்கும் எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு தோழர் பிடல் கேஸ்ட்ரோவும் மற்ற கியூபா புரட்சியாளர்களும் பல வழிகளிலும் உதவிக் கொண்டிருக்கிறார்கள். அங்கோலா, எத்தியோப்பியா, பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளில் போராடும் சக்திகளுக்கு கியூபா அளப்பரிய உதவிகளைச் செய்துள்ளது.
இந்திய மக்களும் 50ஆம் ஆண்டுகளுக்கு முன் 1959இல் கியூபாவில் நடைபெற்ற புரட்சியின் வீரஞ்செறிந்த நிகழ்வுகளுக்கு தங்கள் வீர வணக்கத்தைச் செலுத்திக் கொள்வார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.புரட்சிக்குப்பின் கியூபா எப்படித் தங்கள் நாட்டை புனரமைத்துள்ளது, சோசலிச சிந்தனைகளை உறுதியாகப் பற்றி நின்று முன்னேறியுள்ளது, சமத்துவ சமுதாயத்தை உண்மையானதாக மாற்றியிருக்கிறது என்பதை கியூபா புரட்சியின் 50-ஆம் ஆண்டு விழா நமக்கு அளித்திடும் செய்தியாகும். இதிலிருந்து நாம் படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சோம்நாத் சாட்டர்ஜி கூறினார். தொடர்ந்து கியூபா தூதர் மிகயீல் ராமிரெஸ் ராமோஸ், வெனிசுலா தூதர் அண்டோனியோ சாண்டரா கானிரெஸ், டொமினிகன் குடியரசின் தூதர் டாமன்பெர்ஸ் கேஸ்டலோனான்ஸ், அங்கோலா தூதர் தெபஸ்டா கெர்னாடி, கொலம்பியா தூதர் ஜூவான் ஆல்ஃப்ரட் பின்டோ சாவேட்ரா ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொதுச் செயலாளர் தபஸ் சின்கா நன்றி கூறினார்.
நிறைவாக கியூபா புரட்சியை வாழ்த்தி அங்கு வைக்கப்பட்டிருந்த கேன்வாஸ் துணியில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கையொப்பம் இட்டார், அவரைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் கையெழுத்திட்டனர்.
(தொகுப்பு: ச. வீரமணி)

Thursday, February 21, 2008

வயதானவர்களிடம் அன்பாக இருக்க இளைஞர்களைத் தூண்டினால்அதுவே நான் பெறும் மகத்தான வெகுமதி: நீல பத்மனாபன்

‘‘யதானவர்களிடம் அன்பாகவும் ஆதரவாகவும் நடந்து கொள்ள வேண்டும்’என்கிற உணர்வை இளைஞர்கள் மத்தியில் தூண்டினால் அதுவே ‘இலை உதிர் காலம்’ நாவல் எழுதியதால் எனக்குக் கிடைத்த மகத்தான வெகுமதி என்று நாவலாசிரியர் நீல பத்மனாபன் கூறினார்.

தலைநகரில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வியாழன் அன்று மாலை ‘இலை உதிர் காலம்’ நாவலுக்காக சாகித்திய அகடமி விருதினைப் பெற்ற நீல பத்மனாபனைப் பாராட்டி, சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் வரவேற்புரையாற்றினார். முதுபெரும் எழுத்தாளர் ஏ.ஆர். ராஜாமணி, சிற்பி பாலசுப்பிரமணியன், ஆர். விசுவநாதன், எதார்த்தா கி. பென்னேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய நீல பத்மனாபன் பேசியதாவது:
‘‘கலைத் திறன் என்பது பளிச் என்று சொல்லாமல் சற்று கலைத்தன்மையோடு நிற்க வேண்டும். படிக்கும்போது அந்த அனுபவம் ஊடாடி வர வேண்டும். சிற்பத்தை உருவாக்குவதற்கு, சிற்றுழி உதவுவதுபோல் படைப்பிலக்கியங்கள் உருவாக, வார்த்தைகள் பயன்படுகின்றன. படைப்பாளி, கூடிய மட்டும் தான் படைத்த படைப்பு குறித்து பேச விரும்புவதில்லை. படைத்த படைப்புகள் குறித்து கூடிய மட்டும் சொல்லாமல் விடுவது நல்லது என்பதே என் கருத்தாகும். இருந்தாலும் ஒரு சமூக ஜீவி என்ற முறையிலே, எந்த ஒரு எழுத்தாளரும் சமூகத்திலிருந்து விடுபட்டுப் போய்விட முடியாது. என்னுடைய வாழ்க்கை வேறு, எழுத்து வேறு என்பது கிடையாது. வாழ்க்கையில் நமக்கெல்லாம் பிறவிக் கடன்கள் என்று சில உண்டு. மனைவி, மக்களுடன் வாழ்வது. அவர்களை நல்ல முறையில் வளர்ப்பது. குழந்தைகள் சரியாக வாழ்வதற்கு வழிவகை செய்வது. இதுவே நம் பண்பாடு. இதையெல்லாம் மீறி தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது ஒரு துறையில், அது கலைத்துறையாக இருக்கலாம், அல்லது ஓவியத்திலே பிறவியிலிருந்தே ஓர் ஈடுபாடு இருக்கக்கூடும்.வாழ்க்கைக்காக ஏதாவது தொழில் செய்து கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்கள் பாடுவதில், இசைப்பதில், ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். வாழ்க்கையின் ஓட்டத்தில் அவற்றில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுவது உண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் சிறுவயதிலிருந்தே எழுதும் வழக்கம் வளர்ந்து வந்துகொண்டிருந்திருக்கிறது. எந்த மனிதனுக்கும் வாழ்க்கை முழுமையாக பூரணத்துவம் அடைந்தது கிடையாது. லட்சியக் கணவர், லட்சிய மனைவி, லட்சியத் தந்தை என்பது உண்மையான வாழ்க்கையில் கிடையாது. பல இடங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. இதனை என்னுடைய பல படைப்புகளில் பார்க்கலாம். இதையெல்லாம் மீறி என்னையும் மாற்றியமைத்த நாவல் என்னுடைய ‘கூண்டுக்குள் பட்சிகள்’ நாவல். அதனை எழுதுவதற்கு முன்பிருந்த ‘நான்’ அல்ல பின்னால் இருந்த ‘நான்’. பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்த நாவல், கூண்டுக்குள் பட்சிகள்.

இப்போது ‘இலையுதிர் காலம்’. வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சக நண்பர்களைப் பார்த்தேன். நான் சிறுவனாக இருக்கும்போதே, வயதானவர்களிடம் பாசத்துடன் இருப்பேன். ‘‘என்ன கிழவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறாய்?’’ என்று பலபேர் என்னிடம் கேட்பார்கள். உண்மையிலேயே அப்படி ஓர் ஈடுபாடு உண்டு. இதனை என்னுடைய படைப்புகளிலும் காணலாம். தொழுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்போன மருத்துவருக்கே தொழுநோய் வந்தால் எப்படி இருக்கும்? அதேபோல் வயதானவர்களிடம் அன்பு காட்டிய நானே கொஞ்சம் கொஞ்சமாக வயதானவனாக மாறியபோது, உடல்பூர்வமாக, உள்ளபூர்வமாக, நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதை நான் உணர்ந்தேன். என் சக நண்பர்கள் படும் அவஸ்தைகளை நேரடியாகப் பார்த்தேன். குழந்தைகளுக்குப் படிப்பு, கல்யாணம் என்று செய்தவர்கள் இப்போது அந்தக் குழந்தைகளுக்குப் பாரமாக மாறியிருக்கும் நிலை. தலைமுறைகள் மாறும்போது உலக வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள். இதனையே நாவலில் கொண்டு வந்துள்ளேன். ‘இலை உதிர்காலம்’ நாவலைப் படித்தபிறகு ஒருவர் வயதானவர்களிடம் கொஞ்சம் அன்பாகவும், ஆதரவாகவும் பழகவேண்டும் என்று தூண்டியது என்றால், இளைஞர்கள் முதியவர்களிடம் குற்றம் பாராட்டாமல் இருக்க வேண்டும் என்று தூண்டினால், சாகித்திய அகடமியில் எனக்குக் கிடைத்த வெகுமதியை விட அதனையே பெரிய வெகுமதியாக நான் கருதுவேன்.’’

இவ்வாறு நீல பத்மனாபன் கூறினார். பின்னர் சங்கத்தின் பொருளாளர் என். சந்தானம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை உலகநாதன் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்னதாக திரைப்பட இயக்குநர் வ. கௌதமன் சாகித்ய அகாதமிக்காக தயாரித்து இயக்கிய ‘நீலபத்மனாபனும் அவருடைய சித்திர எழுத்துக்களும்’ என்னும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

(தொகுப்பு: ச.வீரமணி)

Friday, February 15, 2008

மகாத்மா காந்தியும் மதச்சார்பின்மையும் -- வீ. சிவகாமியின் செல்விமகாத்மா காந்தி ஒரு மாபெரும் ஆளுமை. அவர் வலுவான மதநம்பிக்கை உடையவராக இருந்தாலும், மதப்பற்று, மதச்சார்பின்மை, வகுப்புவாதம் - இவை மூன்றிற்கும் உள்ள வேறுபாடுகளை நன்கு உணர்ந்திருந்தார். மதம் பெண்களுக்கு விதித்த தேவையற்ற கட்டுப்பாடுகளையும், தீண்டாமையையும், சாதி அடக்குமுறைகளையும் வன்மையாகக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல், அவற்றிற்கெதிரான போராட்டத்தையும் மக்களிடையே கொண்டு சென்றார். சமூக வாழ்க்கையின் எல்லா பரிமாணங்களிலும் பகுத்தறிவைப் பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அகிம்சையின் மூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று நம்பினார். மகாத்மா காந்தி இறந்து 59 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் மகாத்மா காந்தி என்கிற அரசியல்வாதியையும் அவரது ஆளுமையையும் பற்றிய பல பரிமாணங்கள் மக்களுக்கு தெரியாமலேயே உள்ளன. மகாத்மா காந்தி நாத்திகர் அல்ல. மதப்பற்று இல்லாதவரும் அல்ல. தான் சார்ந்த மதத்தின் மீது அவருக்குப் பற்று இருந்தது. கடவுள் பக்தி அதிகம் உடையவர். ஆனால் மதப்பற்றுக்கும், மதச்சார்பின்மைக்கும் உள்ள வேறுபாடுகளை நன்கு உணர்ந்தவர். மதவெறிக்கு எதிராகக் கடைசி வரைப் போராடியவர். மதச்சார்பின்மைக்காகவும் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் தன் இறுதி மூச்சுவரை போராடியவர் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு. ஆனால் மதவெறியர்கள் காந்தியின் மதநம்பிக்கையையும் அவரின் மதச்சார்பின்மையையும் தவறாகப் புரிந்து கொண்டு அவருக்கு எதிராகவே செயல்பட்டனர்.

மகாத்மா காந்தி எவ்வாறு மதநம்பிக்கையையும் மதச்சார்பின்மையையும் வேறுபடுத்திக் காட்டினார்? இந்தியாவிலும் வேறுசில நாடுகளிலும் மதச்சார்பின்மை என்பது நான்கு நெறிமுறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளது.1. மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி இவையனைத்திலும் மதம் ஊடுறுவக்கூடாது. 2. அரசு எல்லா மதங்களையும் நடுநிலையோடு பார்க்க வேண்டும். நாத்திகம் உட்பட எல்லா நம்பிக்கைகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும். 3. மதத்தின் அடிப்படையில் எந்தவொரு மனிதனையும் அரசு வேறுபடுத்தி பார்க்கக்கூடாது. மதத்தின் அடிப்படையில் எந்தவொரு சலுகையையும் அரசு விதிக்கக்கூடாது. 4. இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவை ஒருங்கிணைக்கவும் இந்திய மக்களை ஒன்றுபடுத்தவும் மதச்சார்பின்மை என்ற தத்துவம் கடைப்பிடிக்கப்பட்டது. மதச்சார்பின்மையின் மூலமே வேற்றுமையில் ஒற்றுமை காண முடியும். ஆனால், வகுப்புவாதமோ மக்களைப் பிளவுபடுத்தவும் பிரிவினைக்கும் வித்திட்டது. இந்த நான்கு நெறிமுறைகளையும் மகாத்மா காந்தி எவ்வாறு கடைப்பிடித்தார் என்பதை காண்போம்.

மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம் 1942ஆம் ஆண்டு தன்னுடைய பத்திரிகையில் காந்தி பின்வருமாறு எழுதுகிறார். “மதத்தின் பெயரால் ஒருமனிதனை இன்னொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்றவற்றில் மதம் ஊடுருவக் கூடாது. வருவாய், காவல்துறை, நீதி, உணவு, ஆரோக்கியம், சுகாதாரம், பொது இடங்களில் பழகுதல் போன்றவற்றில் ஒரு இந்துவின் தேவையும் ஒரு முஸ்லிமின் தேவையும் எவ்வாறு வேறுபட முடியும்? யதார்த்த வாழ்கையில் எத்தனை தனி மனிதர்கள் உள்ளனரோ அத்தனை மதம் உள்ளது. ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய கல்வி, சிந்தனை, அறிவு - இவற்றின்மூலம் தன்னுடைய மதத்தை எந்த அளவிற்கு கடைப்பிடிக்கவேண்டும்? எந்தக் கருத்துகளை ஏற்றுகொள்ளவேண்டும் என்று முடிவு செய்த பிறகே கடைப்பிடிக்கிறான். எனவே மதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். அரசியலிலோ சமூகத்திலோ மதம் ஊடுருவக் கூடாது.”

அரசின் முன் அனைத்து மதங்களும் சமமேஇரண்டாவது நெறிமுறையான “அரசு எல்லா மதங்களையும் நடுநிலையோடு பார்க்க வேண்டும். நாத்திகம் உட்பட எல்லா நம்பிக்கைகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும்,” என்ற வரையறையை மகாத்மா காந்தி 1931ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அடிப்படை உரிமைகளுக்கான தீர்மானமாக வெளியிட்டார். இந்த வரையறையைத்தான் அவர் அனைத்து மதங்களும் சமம் (சர்வதர்ம சம்பவ) என்று அடிக்கடி குறிப்பிடுவார். எல்லா மதங்களையும் மட்டுமல்ல நாத்திகத்தையும் அவர் சமமாகப் பாவித்தார். “ஆத்திகர்கள் ‘கடவுள் உண்மையானவர்’ என்று நம்புகின்றனர். நாத்திகர்கள் ‘உண்மையே கடவுள்’ என்று நம்புகின்றனர். ஆகையால் அவர்களுடைய நேர்மையை நான் மதிக்கிறேன்” என்றார் காந்தி. காந்தியின் நண்பர்களுள் ஒருவரான பேராசிரியர் கோரா என்பவர் நாத்திகர். அவருடைய மகளை ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கு நாத்திக முறைப்படி காந்தி தலைமையில் மணமுடிக்க விரும்பினார். மணமக்கள் உறுதிமொழி எடுக்கும்போது கடவுளின் பெயரால் அல்ல உண்மையின் பெயரால் இவ்விருவருக்கும் திருமணம் நடத்திவைக்க காந்தி ஒப்புகொண்டார். காந்திக்கு மிகப்பிரியமான இரண்டு நபர்கள் - மகாத்மா காந்தியின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலேவும் அரசியல் வாரிசான ஜவஹர்லால் நேருவும் நாத்திகர்களே. மத அடிப்படையில் வேறுபாடின்மை:“சட்டத்தின் முன் அனைவரும் சமம். மதம், சாதி, இனம், பால் இவற்றின் அடிப்படையில் எந்த வேறுபாடும் இந்தியாவில் கிடையாது. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மனசாட்சியின்படி நடந்துகொள்ளும் உரிமை வழங்கப்படும். தன் மனதிற்கு பிடித்த எந்த மதத்தையும் கடைப்பிடிக்கலாம் அல்லது மதப்பற்று அற்ற நாத்திகராகவும் இருக்கலாம்.” என்று கராச்சி தீர்மானத்தில் காந்திஜி மிகவும் தெளிவாகத் தெரிவித்திருந்தார். மதச்சார்பின்மை ஒன்றுபடுத்தும் சக்தி; வகுப்புவாதம் பிளவுபடுத்தும் சக்தி;1922ஆம் ஆண்டு “பேச்சு சுதந்திரமும் சங்கம் அமைக்கும் சுதந்திரமும் மக்களின் அடிப்படை உரிமை. அதைப் பெற்றால்தான் நம்முடைய இலக்கை நோக்கி நாம் செல்லமுடியும்,” என்று கூறும் காந்தி 1936ஆம் ஆண்டு “பேச்சு சுதந்திரம் மதவெறியை மக்களிடையே தூவுவதாக இருக்கக்கூடாது. தனிமனிதர்கள் - மதங்கள் - இனங்கள் இவற்றிற்கிடையே மதவெறி, இனவெறி, தீய எண்ணங்களைத் தூண்டும் பத்திரிகைகளைத் தடைசெய்யும் உரிமை எனக்கிருந்தால் அதனை உடனே செய்வேன். பேச்சு சுதந்திரம் என்பது மக்களின் மனதில் விஷத்தை தூவுவதற்காக அல்ல. சுதந்திர இந்தியாவில் இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு இடமளிக்க மாட்டோம்’’ என்று காந்தி கூறுகிறார். மதச்சார்பின்மையின் ஒவ்வொரு அங்கத்தையும் இவ்வாறு கடைப்பிடித்த காந்தியை ஏன் இந்து மதவெறியர்களும் முஸ்லிம் மதவெறியர்களும் வெறுத்தனர், மதநம்பிக்கையையும் மதச்சார்பின்மையையும் காந்தி எவ்வாறு வேறுபடுத்திக் காட்டினார் என்பதில் தெளிவின்மைதான் இதற்குக் காரணம். காந்தியைப் பொறுத்தவரை மதம் என்பது இந்துமதத்தையோ, முஸ்லிம் மதத்தையோ, புத்த மதத்தையோ குறிப்பிடுவது அல்ல. அவரைப் பொறுத்தவரை “மதம் என்பது அறம், நீதி, உண்மை, நேர்மை’’ என்பதாகும் . ‘‘பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அறம், நீதி, உண்மை, நேர்மை என்ற மதத்தைக் கடைபிடிக்கவேண்டும்’’ என்றார். ‘‘ ஏனென்றால் எல்லா மதங்களும் அவற்றைத்தான் போதிக்கின்றன. மதம் என்பது தர்மம். நான் தர்மம் என்கிற மத நம்பிக்கை உடையவன். உண்மையும் அன்புமே கடவுள்கள். நேர்மையும் நெறிமுறையும் தான் கடவுள். மனசாட்சிதான் கடவுள். வீரம்தான் கடவுள் நம்பிக்கை’’ என்றார். ‘‘மதம் என்று நான் குறிப்பிடுவது ஒருவரை ஒருவர் வெறுக்கவும் ஒருவரோடு ஒருவர் சண்டையிடவும் வைக்கும் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகள் நிறைந்த மதம் அல்ல. எல்லோரையும் தன் அன்பால் அரவணைக்கும் சகிப்புத்தன்மை என்பதே மதம். அப்படிப்பட்ட சகிப்புத்தன்மை என்ற மதத்தின் பல்வேறு கிளைகள்தான் இந்துமதம், முஸ்லிம் மதம், புத்த மதம், கிறித்துவ மதம் போன்றவை. அப்படிபட்ட சகிப்புத்தன்மை என்ற நெறியே அரசு கடைப்பிடிக்கும் மதமாக இருக்கவேண்டும்.” என்று பல இடங்களில் 1922 முதல் 1942 வரை கூறியுள்ளார். இப்படி மதத்தையும் தர்மத்தையும் அவர் ஒன்றாக பாவித்தார். ஆனால் தர்மம்தான் காந்தி குறிப்பிடும் மதம் என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை. பிரிவினைவாதமும் மதவெறியும் உச்சகட்டத்தில் இருந்த சமயத்தில் தன்னுடைய மதநம்பிக்கையை மக்கள் தவறாக புரிந்துகொண்டனர் என்பதை காந்தி உணர்ந்தார். எனவே 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பித்ததிலிருந்து “மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்றவற்றில் மதம் ஊடுருவக் கூடாது,” என்று பேசவும் எழுதவும் ஆரம்பித்தார். கல்வியில் மதம் திணிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தார். 1947ஆம் ஆண்டு ஜாஹிர் ஹூசேனிடம் பேசும்போது “மதத்தையும் கல்வியையும் ஒன்றுபடுத்தக்கூடாது. எந்தவிதமான மதபோதனையும் கல்வி நிறுவனங்களில் போதிக்கப்படக் கூடாது. அதன் விளையு விபரீதமாக இருக்கும். மதம் என்பது தனிமனித விவகாரம். மத நிறுவனங்கள் தங்கள் மதத்தை பற்றி தனிமனிதர்களுக்கு சொல்லிக்கொடுக்கட்டும். ஆனால் அரசு அந்த வேலையை செய்யக்கூடாது. தனிமனித மத நம்பிக்கையும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்காமல் இருக்கவேண்டும். எல்லா மதத்திற்கும் பொதுவான ஒழுக்க நெறிகளையும் சகிப்புத்தன்மையையும்தான் அரசு போதிக்கவேண்டும். ஏனென்றால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும். அடிப்படை மதத்தையும் தர்மத்தையும் ஒன்றுபடுத்தாதீர்கள்,” என்றார்.

1920களில் மதம் என்பது தர்மம்தான் என்று சொன்ன காந்தி 1947ல் மதத்தையும் தர்மத்தையும் ஒன்றுபடுத்தாதீர்கள் என்று ஏன் சொன்னார்? காந்தி இப்படி மாறி மாறி மதத்தையும் தர்மத்தையும் குழப்பிக்கொண்டாரா என்ற கேள்விக்கு அவருடைய சுயசரிதை பதிலளிக்கிறது. “சத்தியத்தை நோக்கிய என்னுடைய தேடலில் நான் பல விஷயங்களை உணர்ந்துகொண்டிருக்கிறேன். என்னுடைய பல கருத்துகளை மாற்றிக்கொண்டிருக்கிறேன். நான் இப்பொழுது பேசும் வார்தைகள் முன் பேசியவைகளுக்கு முரணாக இருந்திருந்தால் நான் கடைசியாக சொன்னவைகளையே எடுத்துகொள்ளவேண்டும். தனிமனிதனின் அறிவு பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டது. சத்தியத்தை நோக்கிய என்னுடைய தேடலில் என்னுடைய வார்த்தைகளையோ கருத்துக்களையோ மக்கள் புரிந்துகொள்ளவில்லையென்றால் மக்களால் புரிந்துகொள்ளக்கூடிய கருத்துக்களை நான் பரப்புவேன். நான் நல்ல மனநிலையில் உள்ளவன்தான், கிறுக்கன் அல்ல என்பதை நம்பினால், என்னுடைய அறிவு பரிமாணத்தை. அதன் பரிணாம வளர்ச்சியை புரிந்துகொள்ளுங்கள்,” என்று கூறுகிறார். மகாத்மாவின் இந்த சுயவிமர்சனம் அவருடைய மதம் குறித்த கோட்பாட்டை நமக்கு விளக்கும். 1920களில் தனிப்பட்ட மனிதனின் மதம் என்பது தர்மம்தான் என்று போதித்தார். ஆனால் அந்த போதனை மக்களிடையே தவறாக சென்றிருக்கிறது என்பதை காந்தி உணர்ந்தார். மக்கள் மதம் என்றால் இந்து மதத்தையும் முஸ்லிம் மதத்தையும்தான் நினைக்கின்றனர். தர்மம்தான் மதம் என்பதை மக்கள் உணர்ந்திருந்தால் நாடு பிரிவினைக்கு உட்பட்டிருக்காது என்பதைப் புரிந்துகொண்டார். எனவே மதமும் தர்மமும் ஒன்றுதான் என்று பேசுவதையும் எழுதுவதையும் தன்னுடைய தனிநபர் நம்பிக்கையாக எடுத்துக்கொண்டு அரசியலிலும் கல்வியிலும் மதம் புகக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அதேபோல் மகாத்மாவின் பேச்சுக்கள் புராணங்களையும் இதிகாசங்களையும் உள்ளடக்கியிருந்தது. சுயராஜ்யம் இராம இராஜ்யமாக இருக்கவேண்டும் என்று மகாத்மா காந்தி பேசுவார். இதனை பிரிவினைவாதிகள் மதவெறிக்கு ஆதரவாக திசைதிருப்பினர். இதற்குப் பதிலளிக்கையில் “இராம இராஜ்யம் என்ற என்னுடை சொல்லை மதவெறிக்கு ஆதரவாகத் திசைதிருப்பிவிடும் நண்பர்களை நான் கண்டிக்கிறேன். இராம இராஜ்யம் என்று நான் குறிப்பிடுவது இந்துக்களின் இராஜ்யத்தை அல்ல. இராம இராஜ்யம் நல்லாட்சியின் முன்னுதாரணம். இராம இராஜ்யம் என்பது உண்மை நேர்மை என்ற கடவுளின் இராஜ்யமாக இருக்கவேண்டும். எனக்கு இராமனும் ரஹிமும் ஒன்றுதான். நல்ல அரசாங்கம் என்பதை இராம இராஜ்யம் என்று சொன்னால் மக்கள் புரிந்துகொள்கிறார்கள். எல்லைப் பகுதிகளுக்குச் செல்கையில் நான் அதனை குதாய் இராஜ்யம் என்று சொல்வேன். கிறித்துவர்களிடம் பேசுகையில் பூமியில் தேவன் நடத்தும் ஆட்சி என்று குறிப்பிடுவேன். நான் சந்தர்ப்பவாதியல்ல. இந்தியாவில் சாதி மத பேதமற்ற, இருப்போர் இல்லாதோர் போன்ற வேறுபாடுகளற்ற, நீதி தவறாத, பேச்சுரிமையும் வழிபாட்டுரிமையும் கொண்ட மக்களாட்சி மலரவேண்டும். அதுதான் கடவுளின் ஆட்சி. அதுதான் சுயராஜ்யம் என்ற கருத்தை மதச்சார்பற்று பரப்பவேண்டும். இதுவே என் நோக்கம்,” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் மதவெறியர்கள் காந்தியை கடைசி வரைபுரிந்துகொள்ளவேயில்லை. மதச்சார்பின்மைக்கு ஆதரவாக தன்னுடைய கருத்துகளை விதைத்த காந்தி மதவெறியை முற்றிலும் எதிர்த்தார். எனவேதான் முஸ்லிம் மதவெறியர்கள் மட்டுமல்லாமல் இந்து மதவெறியர்களும் அவருடைய கருத்துகளை மக்களிடம் திரித்துக் கூறியுள்ளனர். வகுப்புவாதம் ஒரு பிரிவினைசக்தி என்பதை நன்றாக புரிந்துகொண்ட காந்தியால் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முடியவில்லை. வகுப்புவாதத்தை அடக்குவதற்காக காந்தி மதத்தலைவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் மதத்தலைவர்களின் செல்வாக்கை அதிகரித்தனவே தவிர வகுப்புவாதத்தைக் குறைக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையனை வெளியேற்றுவதற்காக அணி திரண்ட மக்கள் மதம் கடந்து ஒன்றுபடுவார்கள் என்று நம்பினார். பிரிவினையைத் தடுப்பதற்காக முகம்மது அலி ஜின்னா இந்தியாவின் பிரதமராக அரியணையேறட்டும் என்று முன்மொழிந்தார். காந்தியின் அகிம்சைத் தத்துவம் வகுப்புவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் தோற்றுப் போனது. ஏனென்றால் வகுப்புவாதமும் ஒரு தத்துவம். வகுப்புவாதத்தை தத்துவார்த்தரீதியில் எதிர்த்திட வேண்டும் என்பதை காந்தி உணரவில்லை. வகுப்புவாதத்தை அடக்குவதற்கு நலப்பணித்திட்டங்களும் சலுகைகளும் அறிவிப்பதென்பது தற்காலிக பயனையே தரும். நிரந்தரமாக வகுப்புவாதத்தை ஒழிக்கவேண்டுமென்றால் வகுப்புவாதம் என்பது தவறான தத்துவம் என்பதை உணர்த்தவேண்டும். இதனைத் தத்துவப் போராட்டத்தின் மூலம்தான் செய்யமுடியும் என்பதை அக்காலத் தலைவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவேதான் நாடு மதத்தின் அடிப்படையில் பிளவுபட்டது. இதனை, காந்தியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடைசி வரை அதன் வேதனையும் விரக்தியும் அவரிடம் மேலோங்கியிருந்தன. காந்தியின் மதச்சார்பின்மையைப் பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே ஒரு இந்து மதவெறியனால் காந்தி சுட்டுகொல்லப்பட்டார். காந்தி மதச்சார்பின்மைக்காகவே தன்னுடைய உயிரைத் தியாகம் செய்தார். காந்தியின் மதச்சார்பின்மை இந்தியாவை மதச்சார்பற்ற அரசாக மாற்றியது. பிரிவினை, பிரிவினை சார்ந்த கலவரம் இவற்றிற்கு மத்தியிலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் மதச்சார்பின்மையைத் தூக்கிப்பிடிக்க முடிந்தது. மதச்சார்பற்ற இந்தியராக வாழ்ந்து மத சகிப்புத்தன்மையைக் கடைபிடித்து எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களையும் இந்தியராக அரவணைத்து ஒற்றுமையாக வாழ்வதே மகாத்மாவிற்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்.

-- (வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஆற்றிய உரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)

Thursday, February 14, 2008

2008-09ஆம் ஆண்டு பட்ஜெட்: இப்போதாவது செயல்படுக
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் பிப்ரவரி 25 அன்று தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் தன்னுடைய முதல் உரையை நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு அமர்வில் ஆற்ற இருக்கிறார்.
‘‘தன்னுடைய அரசாங்கம்’’ முன்னுரிமை அளித்துள்ள திட்டங்களின் மீது அவர் கவனம் செலுத்துவார் என்பதில் ஐயமேதுமில்லை. குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் ‘‘ஆம் ஆத்மி’’ என்கிற ‘‘சாமானியர்கள்’’ சார்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் சொல்லியிருக்கும் வாக்குறுதிகள் அனைத்தும், அரசால் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை என்றாலும் இப்போதாவது நிறைவேற்றிட முன்வரும் என்று நாம் நம்புவோமாக. மேலும், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பு மற்றும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை தொடர்பாக பரவலாக எழுந்துள்ள ஐயுறவுகளைக் களைந்திடவும் அரசின் சார்பில் அவர் முன்வருவார் என்றும் நாம் நம்புவோமாக.
எது எப்படி இருந்தபோதிலும், குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றிட, ஐமுகூ அரசாங்கத்திற்கு இதுவே கடைசி வாய்ப்பாகும். ஐமுகூ அரசாங்கத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி பட்ஜெட்டாகும் இது.விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள துயாரார்ந்த விளைவுகளைச் சரி செய்திட தீவிரமான முறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். விவசாயத்துறையில் பொது முதலீட்டைக் கணிசமான அளவில் அதிகரிப்பதாக குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது எதிர்பார்த்த அளவிற்கு நடந்திடவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடராது தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால், கந்து வட்டிக்காரர்களின் வலையில் சிக்கி மீளமுடியாது மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் விவசாயிகளை அவர்களது வலைப்பின்னலிலிருந்து விடுவித்தாக வேண்டும். இதற்கு அரசு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடனுதவி அளிக்கப்பட வேண்டியது அவசியம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது, விவசாயத் துறையில் அரசு நிதிநிறுவனங்கள் மூலமான நிதி உதவியினை இருமடங்கிற்கும் மேல் உயர்த்தி இருக்கிறது என்பது உண்மைதான். ஆயினும், விவசாயிகளில் மூன்றில் இரண்டு பங்கினர், இன்னமும் கந்துவட்டிக்காரர்களின் வலையில்தான் சிக்கிக்கொண்டுள்ளனர் என்பதே நிதர்சன உண்மை. மேலும், விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் கடனுக்கு வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்று கோரினோம். அரசும் கடனுக்கான வட்டிவீதத்தை 11 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைத்திருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி அது 4 சதவீதமாகக் குறைக்கப்படவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்குப் பிரதான காரணம் அவர்கள் கடன் சுமைதான் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே, விவசாயிகளுக்கு அரசின் நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் மூலமாகக் குறைந்த வட்டி வீதத்தில் கடன் உதவி அளிப்பது மிகவும் முனைப்பான முறையில் அதிகரிக்கப்படாவிட்டால், விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமே இல்லை. இதற்குக் கிராமப்புற வங்கி அமைப்பு முறையைப் புரட்சிகரமான முறையில் விரிவாக்கி மாற்றி அமைத்திட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஐமுகூ அரசாங்கமோ, கிராமப்புற வங்கிகளை மேலும் பலவீனப்படுத்தக் கூடிய அளவிற்கு, முரணான திசைவழியில் பயணம் மேற்கொண்டிருக்கிறது. இதனைத் திருப்பிவிட வேண்டியது இன்றைய தேவையாகும்.
மேலும், விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கு, அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP-Minimum Support Price) உயர்த்துவதும் தேவையாகும். இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கு 1200இலிருந்து 1600 ரூபாய் வரை தரும் இந்திய அரசு, இந்திய விவசாயிகளுக்கு வெறும் 850 ரூபாய் மட்டுமே தருகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, இடதுசாரிக் கட்சிகள் நிர்ப்பந்தம் அளித்ததை அடுத்து, அதனை அரசு 1,000 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. ஆயினும், நெல்லைப் பொறுத்தவரை, நெல் விவசாயிகள் கோரிக்கையை செவிமடுத்து அவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் அளித்திட அரசு இதுவரை முன்வரவில்லை. குறைந்தபட்ச ஆதார விலையை நெல்லுக்கும் அதிகரித்திட வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை அளித்திடும் விவசாயப் பொருள்களின் பட்டியல் மேலும் விரிவாக்கப்பட வேண்டும்.
தொடரும் விவசாய நெருக்கடியைத் தடுத்து நிறுத்திட இந்நடவடிக்கைகள் அனைத்தும் அவசியம்.விவசாய நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என்று சொல்வது மனிதாபிமான அடிப்படையில் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. ஆனால், இதைவிட முக்கியமான விஷயம் என்னவெனில், இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் முறியடிக்கப்பட வேண்டும், அதற்கு விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை போக்கப்பட்டு, இந்திய விவசாயத் துறை மீண்டும் வலிவும் பொலிவும் பெற்றதாக மாற வேண்டும்.
விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிப்பதுடன், குறைந்த பட்ச பொது செயல் திட்டம் பல்வேறு சமூகத் துறைகளிலும் பொது செலவினங்களை அதிகரிக்க இருப்பதாகவும் உறுதிமொழி அளித்திருந்தது. கல்விக்கான செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் அதிகரிக்கப்படும் என்றும், பொது சுகாதாரத்திற்கான செலவினம் குறைந்தபட்சம் 3 சதவீதம் அதிகரிக்கப்படும் என்றும் உறுதி கூறியிருந்தது. ஆனால், எதுவுமே நடைபெறவில்லை.உண்மையில், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு கல்விக்கும், பொது சுகாதாரத்திற்கும் செலவழிப்பதற்கு அரசாங்கத்திடம் போதுமான வருவாய் இல்லை என்று இனியும் அரசு சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஏனெனில், அரசின் கடந்த நான்கு பட்ஜெட்டுகளிலும், சராசரியாக, அரசின் வருவாய் வளர்ந்துகொண்டுதான் வந்திருக்கிறது. தற்சமயம் அரசு எதிர்பார்த்த இலக்கைவிட குறைந்தபட்சம் 20 சதவீதத்திற்கும் அதிகமாகவே வருவாய் வந்திருக்கிறது. இந்த ஆண்டு, பட்ஜெட்டுக்கு முந்தைய மதிப்பீடுகளின்படி, அரசின் வருவாய் இலக்கு எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் 40 சதவீத அளவிற்கு இருந்திடும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே, பொது முதலீட்டை விரிவான முறையில் செய்திடுவதற்கு ஐமுகூ அரசாங்கத்திடம் வளமில்லை என்று சொல்ல முடியாது. ஏராளமான அளவிற்கு வாய்ப்பும் வளமும் பெற்றிருக்கிறது. பொதுப் பணிகளை விரிவாக்கி, இவ்வாய்ப்பு வளங்களை ஒழுங்காகப் பயன்படுத்துவதன் மூலமும், மிகப் பெரிய அளவில் வேலையில்லா இருக்கும் இளைஞர்களுக்கு வேலை அளிக்க முடியும். அது நம் பொருளாதாரத்தையும் மேம்படுத்தி, பல்வேறு வழிகளில் உயர் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். இவ்வாறு நம் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் ஏற்படும் விரிவாக்கமானது, ஒட்டுமொத்த உள்நாட்டுத் தேவையை உயர்த்தி, ஆக்கத் தொழில்துறை(Manufacturing Sector)யின் வளர்ச்சிக்கும் உந்துவிசையாக அமைந்திடும். இப்போது அதன் வளர்ச்சி என்பது சரிந்து கொண்டிருக்கிறது.
சென்ற ஆண்டு அரசு பொது முதலீட்டைச் செய்யாததைச் சுட்டிக்காட்டி நம் ஆழ்ந்த ஏமாற்றத்தினையும் அரசுக்குத் தெரிவித்திருந்தோம். இந்த ஆண்டும் அரசு அதே பாதையிலேயே செல்லலாம். காரணம், ஆளும் வர்க்கங்களின் நவீன-தாராளமயக் கொள்கை அடிப்படையில் உள்ள கண்ணோட்டம்தான், வரிவருவாயின் மூலம் கிடைத்துள்ள அபரிமிதமான உபரித் தொகையைப் பொது முதலீட்டுக்குப் பயன்படுத்தாதது மட்டுமல்ல, அரசு பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு மேலும் வரிச் சலுகைகளை அளித்து அவை நம் நாட்டிலிருந்து கொள்ளை லாபம் அடித்துச் செல்ல துணைபுரிந்து வருகிறது. விளைவு, பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கான வரி விகிதம், அரசு அறிவித்துள்ள வரிவிகிதத்தை விட கணிசமான அளவு குறைந்திருக்கிறது.
ஆட்சியாளர்களின் இத்தகு கொள்கைநிலைபாட்டினால் இரு விஷயங்கள் நடந்துள்ளன. ஒன்று, வரிச் சலுகைகள் மூலம், உயர் வருமானங்களின் பயன்கள், நாட்டின் பணக்காரர்களுக்கே மீண்டும் திரும்பிச் சென்றுள்ளன. இரண்டாவதாக, இத்தகைய வரிச் சலுகைகளின் விளைவாக, எதிர்காலத்தில் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாய்களும் இல்லாமல் போய்விடுகிறது. இவற்றால், ‘ஒளிர்கின்ற’ இந்தியனுக்கும் ‘அவதியுறுகின்ற’ இந்தியனுக்கும் இடையேயுள்ள இடைவெளி மேலும் விரிவடைந்திருக்கிறது.
ஆட்சியாளர்களின் இத்தகு நிலைபாடுதான், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டதின் அமலாக்கத்தை சுமார் மூன்றாண்டு காலத்திற்குத் தாமதப்படுத்தியது. அதேபோன்று, அரசாங்கம் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கழிந்த பின், தேவையான விதிமுறைகளை அரசிதழில் அறிவித்திட காலதாமதம் செய்ததன் காரணமாக, பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் இப்போதுதான் நடைமுறைப்படுத்த முடிந்திருக்கிறது.
நவீன தாராளமயக் கொள்கைகளின்பால் ஆட்சியாளர்களுக்கு இருக்கக்கூடிய பாசம்தான், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதைவிட, பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்திட ஊக்குவிக்க வேண்டுமென்கிற கொள்கை நிலைக்குத் துரதிர்ஷ்டவசமான முறையில் ஆட்சியாளர்களைத் தள்ளி இருக்கிறது. எனவேதான் குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மக்கள் நலஞ்சார்ந்த உறுதிமொழிகள் அனைத்தும் கடந்த நான்காண்டு காலமாக தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விடப்பட்டன.
இந்த ஆண்டு பட்ஜெட் ஐமுகூ அரசாங்கம், தான் போய்க்கொண்டிருக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்த இறுதியாக ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது. ஐமுகூ அரசாங்கம் பட்ஜெட்டில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து இடதுசாரிக் கட்சிகளும் ஒரு மனுவை அரசுக்கு அளித்திருக்கிறது. தற்சமயம் கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசி உயர்விலிருந்து ஏதேனும் நிவாரணம் கிடைத்திடலாம் என்று மக்கள் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதனை அடைந்திட வேண்டுமானால் ஊக வணிக சந்தையிலிருந்து அனைத்து அத்தியாவசியப் பொருள்களுக்கும் தடை விதித்திட வேண்டும். அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் பொது விநியோக முறையின் கீழான கடைகளில் விற்கப்பட்டு, பொது விநியோக முறை வலுப்படுத்தப்பட வேண்டும்.
இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் மறுத்துக் கொண்டிருக்கிறது. நாம் கொடுத்த நிர்ப்பந்தத்தின் காரணமாக, அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மட்டும் ஊக சந்தையிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் இது போதுமானதல்ல. பொது விநியோக முறையைப் பொறுத்தவரை, அரசு எதிர் திசையில்தான் சென்று கொண்டிருக்கிறது. பொது விநியோக முறைக்கு விடுவிக்கப்படவேண்டிய உணவு தான்யங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன. இது உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வைப் பொறுத்தவரை மிகவும் கேடுபயக்கக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும்.
எடுத்துக்காட்டாக, கேரளாவில், வறுமைக்கோட்டுக்கு மேலுள்ள ரேஷன் அட்டைதாரர்களான 49.4 லட்சம் பேருக்கு, மத்திய அரசு 1 லட்சத்து 13 ஆயிரத்து 420 டன்கள் அரிசி விடுவிப்பது இதுகாறும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அது 21 ஆயிரத்து 334 டன்களாக, கடுமையான முறையில் - அதாவது சுமார் 90 சதவீதம் வெட்டப்பட்டிருக்கிறது. கேரளாவில் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள ஒவ்வொரு அட்டைதாரருக்கும் கேரள அரசு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ அரிசி கொடுத்து வருகிறது. இதற்கு மாதத்திற்கு 1 லட்சத்து 79 ஆயிரத்து 900 டன்கள் அரிசி தேவை. ஆனால் மத்திய அரசே வெறும் 20 ஆயிரத்திற்கும் கொஞ்சம் அதிகமான அளவில் அரிசியை விடுவித்திருக்கிறது. பொது விநியோக முறையைச் சின்னாபின்னப்படுத்துவதற்கும், உணவுப் பாதுகாப்பை மேலும் இடருக்கு உட்படுத்துவதற்கும் இதைவிட சிறந்த வழி வேறெது இருக்க முடியும்? மேலும், இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும்.அரசு இத்தகைய போக்குகளை முழுமையாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அரசின் இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, விரிவான வலுவான போராட்டங்களைச் சந்திக்க அரசு தயாராக இருக்கட்டும்.
தமிழில்: ச. வீரமணி

Tuesday, February 12, 2008

புரட்சியாளர்களுக்கு எதிரான வழக்குகளில் - எதிர்வழக்கை எப்படி மேற்கொள்வது?-- பகத்சிங்


(1930 டிசம்பர் 23 அன்று பஞ்சாப் ஆளுநர், லாகூர் பல்கலைக் கழகக் கூடத்திலிருந்து, பல்கலைக்கழக பேருரையாற்றியபின் வெளியே வந்துகொண்டிருந்தபோது, ஹரி கிஷன்அவரை நோக்கிச் சுட்டார். ஒருவர் சம்பவயிடத்திலேயே இறந்தார். ஆளுநர் லேசான காயம் அடைந்தார். விசாரணையின்போது, ஹரி கிஷன் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், ஹரி கிஷனுக்கு ஆளுநரைக் கொல்லும் நோக்கம் எதுவும் இல்லை என்றும், அவர் ஒரு எச்சரிக்கை கொடுப்பதற்காகமட்டுமே அவ்வாறு செய்தார் என்றும் எதிர்நிலை எடுத்தார். பகத்சிங் இந்நிலையை எதிர்த்தார்.
புரட்சியாளர்களின் வழக்குகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று அவருடைய நண்பர்களில் ஒருவருக்கு இக் கடிதத்தை எழுதினார். இக்கடிதம், 1931 ஜூன் ‘பீப்பிள்’ (மக்கள்) இதழில் வெளிவந்தது.)
நான் இதற்கு முன் இது தொடர்பாக எழுதிய கடிதம் உரிய நேரத்தில் உரிய இடத்திற்குப் போய்ச்சேரவில்லை என்பதையும், அதனால் அக்கடிதம் பயன்படுத்தப்படாமல் போய்விட்டது அல்லது அக்கடிதம் என்ன நோக்கத்திற்காக எழுதப்பட்டதோ அது நிறைவேறாமல் போய்விட்டது என்பதையும் அறிந்து மிகவும் வருந்துகிறேன். எனவே, அரசியல் வழக்குகளில் பொதுவாகவும் புரட்சிகர வழக்குகளில் குறிப்பாகவும் எதிர்வழக்கை எப்படி நடத்துவது என்பது குறித்து எனது கருத்துக்களை நீ அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன். எனது முந்தைய கடிதத்தில், ஏற்கனவே விவாதிக்கப்பட்ட சில அம்சங்கள் நீங்கலாக மற்றொரு நோக்கத்திற்கும் இது பயன்படும். அதாவது, இந்த விளைவுகளுக்குப் பிறகும் நான் புத்திசாலியாக மாறவில்லை என்பதற்கான ஆவணச்சான்றாக இது இருக்கும். எது எப்படியானாலும் ஹரிகிஷன் வழக்கில் எதிர்வழக்கு எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த வழக்கறிஞர் யோசனையை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று நான் அக்கடிதத்தில் எழுதியிருந்தேன். ஆனால் உன்னுடைய மற்றும் என்னுடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அவ்வாறே செய்யப்பட்டு விட்டது. இருந்தபோதிலும், எதிர்காலத்தில், இதுபோன்ற சமயங்களில் நாம் நாம் எப்படி எதிர்வழக்காட வேண்டும் என்பது குறித்து, தீர்மானகரமானமுறையில் சில வரையறைகளை வகுத்திடலாம். அனைத்து அரசியல் கைதிகளும் எதிர்வழக்காடுவதற்கு ஆதரவாக நான் எப்போதும் இருந்ததில்லை என்பதை நீ அறிவாய். ஆனால் இதன் பொருள், உண்மை போராட்டத்தின் அழகு ஒட்டுமொத்தத்தில் சிதைக்கப்பட வேண்டும் என்று இதனை எடுத்துக்கொள்ளக்கூடாது. (இங்கு நான் ‘அழகு’ என்கிற சொல்லை அழகியல் பொருளில் பயன்படுத்தவில்லை, மாறாக ஒரு குறிப்பிட்டச் செயலைச் செய்வதற்கான நோக்கத்தைக் குறித்து அதனைப் பயன்படுத்தி இருக்கிறேன் என்பதை அருள்கூர்ந்து குறித்துக்கொள்க). அனைத்து அரசியல் கைதிகளும் எப்பொழுதும் தங்களுக்காக எதிர்வழக்காட வேண்டும் என்று நான் கூறும்பொழுது, சில வரம்புளை மனதிற்கொண்டே அதனைக் கூறுகிறேன்.
ஏதோவொரு விளைவை மனதிற் கொண்டுதான் ஒருவர் ஒரு செயலைச் செய்கிறார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவரது செயலின் அரசியல் முக்கியத்துவம் ஒரு சிறிதும் குறைக்கப்படக்கூடாது. செய்யப்பட்ட செயலைக் காட்டிலும் அச்செயலைச் செய்தவர், அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக ஆகிவிடக்கூடாது. இதனை உதாரணத்தின் மூலம் மேலும் விளக்குவோம். ஹரி கிஷன் ஆளுநரைச் சுடுவதற்காக வந்தார். அவரது செயலை அறநெறி நின்று நான் விவாதிக்க விரும்பவில்லை. அதனை அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே விவாதிக்க விரும்புகிறேன். அவர் கைது செய்யப்பட்டுவிட்டார். அவரது நடவடிக்கையின் விளைவாக துரதிஷ்டவசமாக யாரோ ஒரு காவல்துறை அலுவலர் இறந்துவிட்டார். இப்பொழுது எதிர்வழக்காடுவது பற்றிய கேள்வி எழுகிறது.
நல்லது. அதிர்ஷ்டவசமாக ஆளுநர் உயிர் தப்பியிருக்கும் பொழுது, அவரது வழக்கில் மிக அழகாக எதிர்வழக்கை நடத்தியிருக்க முடியும். அதாவது, கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததைப்போல, உண்மை விவரங்களை வாக்குமூலமாகக் கொடுத்திருக்கலாம். அது ஒன்றும் மோசமில்லை. அது சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளையும் நிறைவேற்றியதாக இருந்திருக்கும். காவல் உதவி ஆய்வாளரின் மரணம் குறித்து வழக்கறிஞர் எடுத்துவைத்த வியாக்கியானத்திலிருந்து அவரது அறிவுக்கூர்மையையும் வாதத்திறமையையும் அறியமுடிகிறது.
ஆளுநரைக் கொல்வது எதிரியின் நோக்கமல்ல, அவரை எச்சரிப்பதற்காகத்தான் அவ்வாறு செய்தார் என்று வாதிடுவதன் மூலம் அவர் அடைந்த ஆதாயம்தான் என்ன? இதுபோன்றதொரு தூண்டுரையை ஒரு கணமாவது நேர்மையான நபர் எவராலும் நினைத்தாவது பார்க்க முடியுமா? இதற்கு ஏதாவது சட்டரீதியான மதிப்புதான் உண்டா? முற்றிலுமாக இல்லை. பின், குறிப்பிட்ட இந்தச் செயலை மட்டுமல்ல, பொதுவாக இயக்கத்தின் அழகையும் அசிங்கப்படுத்துவதன் மூலம் அடைந்திட்ட பயன்தான் என்ன?
எச்சரிக்கைகளையும், வீணாகிப்போன எதிர்ப்பு நடவடிக்கைகளையும் எப்போதும் செய்துகொண்டேயிருக்க முடியாது. நெடுங்காலத்திற்கு முன்பே ஒருமுறை எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டது. புரட்சிகரக் கட்சியின் வலு அனுமதித்த அளவிற்கு, சரியான அளவில் புரட்சிகரப் போராட்டம் தொடங்கிவிட்டது.
வைஸ்ராயின் ரயில் நடவடிக்கை, சோதனை முயற்சியோ எச்சரிக்கையோ அல்ல. அதேபோன்று, ஹரி கிஷனின் நடவடிக்கை, அப்போராட்டத்தின் ஒரு பகுதியே அன்றி, அது ஓர் எச்சரிக்கை அல்ல. நடவடிக்கை தோல்வியடைந்த பின்னர், குற்றம்சாட்டப்பட்டவர் அத்தோல்வியை விளையாட்டு வீரனுக்குரிய உணர்வுடன் எடுத்துக்கொள்ளலாம். நோக்கம் நிறைவேறிவிட்டதையடுத்து, அதிர்ஷ்டவசமாக ஆளுநர் தப்பியதில் அவர் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். தனிநபர் எவரையும் கொல்வதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இறுதிப் போராட்டத்திற்கு இன்றியமையாத தேவைப்படும் சூழ்நிலையையும் மனப்பக்குவத்தையும் உருவாக்குவதால் இத்தகைய நடவடிக்கைள் அரசியல் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வளவு தான். மக்களின் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கும் தனிநபர் நடவடிக்கைகள் தேவை. நாம் சில சமயங்களில் அவற்றை ‘செயல் மூலம் பிரச்சாரமாக’ப் பயன்படுத்துகிறோம்.இவ்வாறு இவற்றைப் பரிசீலனை செய்த அடிப்படையில்தான் எதிர்வழக்கினை நடத்திட வேண்டும். எப்படி இருந்தாலும் வழக்கை நடத்திடும் அனைவருமே அதிகபட்சம் ஆதாயத்தையும் குறைந்தபட்சம் இழப்பையும் அடைவதற்கே எப்போதும் முயற்சிப்பார்கள், இதுவே பொதுவான நியதி. தனக்குக் கிடைக்கும் ஆதாயத்திற்கும் மேலாக பெரிய இழப்புகளைச் செய்திடக்கூடிய வகையில் எந்த ஒரு போர்த்தளபதியும் உத்திகளை வகுத்திட மாட்டார்.
ஹரி கிஷனின் மதிப்புமிக்க உயிரைக் காப்பாற்றுவதில் என்னைக் காட்டிலும் அதிக அக்கறையுள்ளவர் எவருமில்லை. ஆனால் அவருடைய உயிரை மதிப்புமிக்கதாக எது ஆக்கியதோ அந்த விஷயத்தையே புறந்தள்ளி விடக்கூடாது. என்ன விலை கொடுத்தாயினும் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது நமது கொள்கையல்ல. ‘சாய்வு நாற்காலி அரசியல்வாதி’களின் கொள்கையாக அது இருக்கலாம், ஆனால் அது நம் கொள்கை அல்ல. ஒரு வழக்கில் எதிர்வழக்கிடுவது பற்றிய கொள்கையின் பெரும்பகுதி குற்றம் சாட்டப்பட்டவரின் மனப்போக்கைச் சார்ந்ததே. ஆயினும், குற்றம்சாட்டப்பட்டவர், பயந்து ஒடுங்கிப்போகாதவராக மட்டுமல்ல, கொள்கையின்பால் மேலும் ஆர்வத்துடன் எப்போதும்போல் இருந்தாரானால், அப்போது அவர் எதற்காக அந்தக் குற்றச்செய்கையினைச் செய்திடத் துணிந்தாரோ, அதுவே முதன்மையாகக் கவனிக்கப்பட வேண்டும். அவரது சொந்தப்பிரச்சனைகள் எல்லாம் அப்புறம்தான்.
மீண்டும் ஒரு வகையான குழப்பம் ஏற்படலாம். சில நடவடிக்கைகள், உள்ளூர் வட்டாரத்தில் மிகப்பெரிதாக கருதப் பட்டாலுங்கூட அவற்றிற்குப் பொதுவான முக்கியத்துவம் எதுவும் இல்லாமல் இருக்கலாம். அவ்விடத்தில் பொறுப்பை ஒப்புக்கொள்வது குறித்து குற்றம் சாட்டப்பட்டவர் உணர்ச்சிவசப்பட்டு நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது. இதற்கு பிரபலமான நிர்மல் காந்த் ராய் வழக்கு விசாரணையே சிறந்த உதாரணமாக இருக்கும்.
ஆனால், இது போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், அரசியல் அம்சங்களைக் காட்டிலும் தனிப்பட்ட அம்சங்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கக் கூடாது. இந்த வழக்கு பற்றிய எனது வெளிப்படையான அபிப்ராயத்தை அறிந்து கொள்ள நீ விரும்பினால், நான் ஒளிவு மறைவின்றி உனக்குச் சொல்கிறேன். இது, போலித்தனமான சட்டத் தொழிலின் பலிபீடத்தில் செய்யப்பட்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்றின் அரசியல் படுகொலை என்று கூறுவதைத் தவிர வேறொன்றுமில்லை.
மேலும் ஒரு விஷயத்தை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த வழக்கின் கழுத்தை நெறித்துக் கொல்வதற்குப் பொறுப்பானவர்கள், இப்போது தங்களது பெருந்தவறை உணர்ந்தவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், அந்நிகழ்வுக்குப் பின்னர் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள அவர்களுக்குத் துணிவில்லை. அதனால் அவர்கள் நமது இளம் தோழரின் அற்புதமான மன உரத்தின் அழகையே சிறுமைப்படுத்த முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வழக்கைத் துணிவுடன் எதிர்கொள்வதற்கு அஞ்சி ஹரி கிஷன் பின்வாங்கிவிட்டார் என்று அவர்கள் சொல்லிக்கொண்டிருப்பதாக நான் கேள்விப்பட்டேன். இது மிகவும் வெட்கப்பட்டத்தக்க கடைந்தெடுத்த பொய்யாகும். அவரைப் போன்று அஞ்சா நெஞ்சம் கொண்ட இளைஞனை நான் இதுவரை சந்தித்ததே இல்லை.
மக்கள் நம் மீது கருணை உடையவர்களாக இருக்க வேண்டும். நாம் நெறிபிறழ்ந்தவர்களாக, தரம் தாழ்ந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டு நன்கு கவனித்துக்கொள்ளப்படுவதைவிட, கண்டு கொள்ளப்படாதவர்களாக இருப்பது நல்லது.
துன்பத்தில் வாடும் மனிதகுலத்தின் விடுதலை என்ற பொன்னான மார்க்கத்துக்காக, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்ய முன்வந்துள்ள இளைஞர்களின் வாழ்வை - ஏன், அவர்கள் மரணத்தைக்கூட - சுரண்டிப் பிழைக்கும் அளவிற்கு இழிவான அற்பர்களாக வழக்கறிஞர்கள் இருந்திடக் கூடாது. நான் உண்மையிலேயே.......*
இல்லாவிட்டால் மேற்சொன்ன வழக்கில் கொடுக்கப்பட்டது போன்று நம்பமுடியாத அளவிற்கு, ஒரு பெரும் தொகையைக் கட்டணமாக ஒரு வழக்கறிஞர் ஏன் கோர வேண்டும்?
ராஜத்துரோக வழக்குகளில் எந்த அளவிற்கு நம்மால் எதிர்வழக்காட முடியும் என்பது குறித்து, நான் உனக்குச் சொல்கிறேன். கடந்த ஆண்டு, சோசலிசக் கருத்துக்களைப் பேசியதற்காக ஒரு தோழர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அவர் குற்றச்சாட்டை மறுத்தபோது நாங்கள் அதிர்ந்துபோய்விட்டோம். இதுபோன்ற வழக்குகளில் நாம் பேச்சுரிமையை வலியுறுத்திக் கோரியிருக்க வேண்டும். ஆனால் அதுபோன்று எதிர்வழக்காட வேண்டும் என்று ஒருவர் அறிவுறுத்தப்பட்டால், அது இயக்கத்தின் நலன்களுக்கு முரணானதாக இருக்குமானால், அதனை மறுத்திட வேண்டும்.
இப்போது நடந்து வரும் இயக்கத்தைப் பொறுத்து, காங்கிரஸ் தன் உறுப்பினர்களை எதிர்வழக்காடாமல் சிறைக்குச் செல்ல அனுமதித்திருப்பதன்மூலம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு தவறு என்றே கூறுவேன்.எப்படியோ, நீ இந்தக் கடிதத்தையும் என்னுடைய முந்தைய கடிதத்தையும் இணைத்து வாசித்தாயானால், அரசியல் வழக்குகளில் எதிர்வழக்காடுவது எப்படி என்பது குறித்து என்னுடைய கருத்துக்களை மிகவும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.
ஹரி கிஷன் வழக்கில், என் கருத்துப்படி, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு கட்டாயம் செய்யப்பட வேண்டும். இதில் தவறக்கூடாது. அவரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட வேண்டும்.இந்தப்பொருள் குறித்து நான் சொல்ல விரும்பிய அனைத்தையும் இந்த இரண்டு கடிதங்களிலும் குறிப்பிட்டுவிட்டேன் என்றே நம்புகிறேன்.
*** *** ***-------------------------------------* இங்கே சில வார்த்தைகள் விடுபட்டிருக்கின்றன.
(தமிழில்: ச. வீரமணி)

Saturday, February 9, 2008

புதிய சுதந்திரப்போர் துவங்க வேண்டும் - நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்
மிகச் செறிவான மக்கள் போராட் டத்தினாலும், அரசியல் கோட்பாட்டி னாலும் உருவான சுதந்திர இந்தியாவில், மக்களின் சுயசார்புத்தன்மை என்பது சமதரும, மதச்சார்பற்ற, ஜனநாயக கொள்கைகளின் கலவையால் உரு வாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்ட கோபுரத்தின் கலசமாகும். நமது நாட்டின் நிர்வாகம் இந்த மூன்று அடிப்படைக் கொள்கைகளை உள்ளடக்கியதாகவும், கட்டுப்பட்டதாகவும், ஒளிவுமறைவற்ற தாகவும் உள்ளது.

நாம், இந்திய நாட்டு மக்கள் 100 கோடி பேர்களுக்கும் அதி கமாக வலிமையாக உள்ளோம். ஆனால் பன்னாட்டு நிறுவனங்களும், மாஃபியா கும்பல்களும், தங்குதடையின்றி நம் செல்வங்களைக் கொள்ளை அடித்துச் செல்லும் பில்லியனர்களும்தான் நம் நாட்டின் ஒட்டுமொத்த வளங்களின் மேல் வலிமையான ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

“நமது நாடு பல வளங்களை உள் ளடக்கிய வளமான நாடு: நமது கலாச்சாரம் மிகவும் மேன்மையானது: நம்மிடையே அதிசயக்கத்தக்க திறமைகள் பொதிந்து கிடக்கின்றன. நாம் எந்த ஒருதுருவ வல்லரசிற்கும் வால் பிடிக்கும் நாடு அல்ல. நாம் சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் அமெரிக்கா என்ற நால்வர் அணியின் பெருமை மிகு அங்கத்தினர்” - என்று சமீபத்தில் ஒரு மாநாட்டில் இத்தகையப் பார்வை முன்னிறுத்தப் பட்டது. ஆம், இந்தியா உலகத்திலுள்ள எந்த நாட்டின் கொள்கைகளையும் ஏற்று அதைச் சுற்றும் துணைக் கோள் அல்ல. நமது நாட்டின் பஞ்சசீலக் கொள்கையின் சூத்திரதாரி நாம்தான். நமது அடிமை இந்தியாவின் அவமானச் சின்னமான விவசாயிகளின் பின்தங்கிய பொருளா தாரத்தையும், நிலப்பண்ணை உரிமை முறையையும் எதிர்த்த இயக்கமாகத் தான் நமது சுதந்திரப் போர் அமைந்தது. வெறும் பிரிட்டிஷ் அடிமைத்தளையி லிருந்து விடுபடுவதற்கு மட்டும் நமது தலைவர்கள் போராடாத காரணத்தி னால்தான் கருணைமிக்க மனிதத்துவ மும், ஜனநாயகச் சமத்துவமும் நமது சமூக அரசியல் கலாச்சாரமாக உருவாகி யுள்ளது. ஆனால் இன்று இந்தியாவில் பெருகி வரும் அசுர பலமிக்க பன்னாட்டுக் கழ கங்களின் போக்குகளும், நிர்பந்தங் களும் நம்மை அச்சுறுத்தும் படியாக உள்ளன. இவர்கள் நம்நாட்டு மக்க ளுக்கு ஏற்படுத்தும் இடர்பாடுகளை மன உறுதியுடன் எதிர்கொள்ளாவிடில் நாம் அவர்களின் தயவில் வாழவேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதோடு, இந்தியக் குடியரசே ஏழை நாடாக மாறும் நிலைமைக்குத் தள்ளப்படும். இந்நிலை யைத் தவிர்ப்பதற்கு தொழிற்சாலை களும் நிறுவனங்களும் அரசுடைமை யாக இருக்க வேண்டும். நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதோடு, நிர்வாகத்தில் ஊழியர்களின் பங்கேற்பினை உத்தர வாதப்படுத்த வேண்டும். சமூகத் தேவையினை ஒட்டி சந்தைகள் இருக்க வேண்டும். நிலக் குவியலைத் தடுத்து நிறுத்துவதோடு, மாஃபியா கும்பல் களிடம் இருந்து “ரியல் எஸ்டேட்” (நிலப் பரிவர்த்தனை) விற்பனையை மீட்டெடுப் பதும் அவசியம். வர்த்தக ஊழலையும், தொழில் சட்டங்களை மீறுபவர்களையும் ஒழிக்க அரசின் முயற்சி தேவை. திட்ட மிட்ட பொருளாதார வளர்ச்சியும், சமூக ஒழுக்கமும் நல்ல சிந்தனையுள்ள சமூகமும் தான் இன்றைய உடனடி தேவை.நாம் நமது சுதந்திரப் போராட்டத்தின் நோக்கத்தைப் பற்றியும், உறுதியைப் பற்றியும் மக்களிடையே விழிப்புணர் வினை ஏற்படுத்த வேண்டும். சுதந்திரப் போராட்டம் என்பது, ஈவு இரக்கமற்ற அடிமைத்தனத்தை போக்கவும் பொரு ளாதார ஜனநாயகத்தை நிலைநாட்டவும் வீறு கொண்டு எழுந்தது. சுருங்கக் கூறின் நமது சுதந்திர இயக்கமானது, மிகப்பெரிய பணக்கார தொழிலதிபர் களை உருவாக்குவதற்காகவோ, நிலப் பண்ணை முறையினை வளர்ப்பதற்கோ, அழிவை உருவாக்கும் தொழில்நுட்ப அறிவை ஏற்படுத்துவதற்கோ, அல்லது அன்னிய நாட்டு மூலதனத்தை ரத்தின கம்பளமிட்டு வரவேற்பதற்கோ, சுங்கவரி இல்லாமல் தடையற்ற இறக்குமதி செய்வதற்காகவோ கட்டப்படவில்லை. இவையெல்லாம் நமது சுதேசியத்தை அழித்தொழித்துவிடும்.

இன்றைக்கு சமத்துவ சமூக அமைப்புதான் மிக மிக முக்கியத் தேவையாகும். “தனியொரு மனிதனுக்கு உண வில்லையெனில் ஜகத்தினை அழித் திடுவோம்” என்ற பாரதியின் குரல் சம தரும சமூக கட்டமைப்பை நோக்கியதுதான் என்பதை நாம் உணர வேண்டும்.நமது அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது, பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் வழிகாட்டலை மறந்துவிடக் கூடாது.

“நாம் ஜனநாயகம் என்று கூறும் பொழுது அது, பொருளா தார ஜனநாயகத்தையும் குறிக்கும். நான் சோசலிசம் சார்பாகத் தான் நிற்கிறேன். நமது இந்தியா சோஷலிசம் சார்பாகத் தான் நிற்கும். அத்தகைய இந்தியா ஒரு சோசலிச அரசை அமைக்கும்’ என்ற நேருவின் குரல் இன்னும் தேசமெங்கும் எதிரொலிக்கிறது. நேரு மட்டுமல்லாது, அரசியலில், ஒப்பற்றத் தலைவர்களான சுபாஷ் சந்திரபோஸ், இ.எம்.எஸ். நம்பூதிரி பாத், பி.சி.ஜோஷி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், டாக்டர் அம்பேத்கார் மற்றும் பிரிட்டிஷ் அறிஞர்களான பெர் னாட்ஷா, எச்.ஜி.வெல்ஸ், சிட்னி வெப், இவர்கள் எல்லோரும், சோஷலிசத்தை நேசித்தவர்கள். சுதந்திரப் போரின் தலைவர்களும், தோழர்களும் எதேச்சதிகாரத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்த உறுதியான கருத்துடையவர்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. காரல் மார்க்ஸின் கம்யூனிஸமும் பொருள்முதல்வாதமும்தான் சோஷலிசத்தின் அடிப்படை. சுதந்திரத்திற்காகப் போராடிய நமது மூதாதையர்கள் நமக்கு அளித்துச் சென்றுள்ள அளப்பரிய. சொத்தான அரசியல் அமைப்புச் சட்டம் பொருளாதார ஜனநாயகத்தை வலியுறுத்துகிறது. தனது சுதந்திர தின உரையில், நேரு, தனது உயர்ந்த லட்சியமும் அதுதான் என்று உறுதியளித்தார்.

ஆனால் இன்றைக்கு பல கோடி இந்திய ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இந்தியப் பொருளாதாரம் மாறி உள்ளது.பண்டித நேரு, இந்தியாவின் வளர்ச் சிக்கு அடிப்படைத் தேவையான திட்டக் கமிஷன், பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத்துறை தொழிற்கூடங்கள் மற்றும் நதிநீர் திட்டங்களை உருவாக்கிச் சென்றார். அவர் வழி வந்த இந்திராகாந்தி சற்று கூடுதலாக, கேந்திரமான துறை களை நாட்டுடைமை செய்தல், சொத்து குவிதலை தடுத்தல், நில உச்சவரம்பு சட்டம் அமலாக்கல் என பொருளாதார ஜனநாயகத்தை வலுப்படுத்தினார். இன்னும் ஒருபடி மேல் சென்று நமது அரசியல் அமைப்பினை ‘குடியாட்சி’ என்பதிலிருந்து ‘சமதரும குடியாட்சி’ என்று உயர்த்திய பெருமை இந்திரா காந்தியைச் சாரும். இன்றுவரை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளுநர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போது சமதரும குடியாட்சியை உயரப்பிடிப்பேன் எனச் சொல்லுகிறார்கள்.ஆனால், நாம் நமது வளங்களை யெல்லாம் பெருமுதலாளிகள் சுவீகரிப் பதற்காக அள்ளித் தெளிக்கும்வரை, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நமது ஏழைப் பங்காளிகள் உண்பதற்கு தோல் கூடக் கிடைக்கப்போவதில்லை. பொரு ளாதார வளர்ச்சியின் பழங்களை பெரும் முதலைகள் வசதியாக விழுங்கிவிட்டு, தோல்களை நம்மீது எறிகிறார்கள்.இந்திய நாட்டின் பெருமை மீட்டெ டுக்கப்பட வேண்டுமென்றால், சமதரும ஜனநாயகவாதிகள் தங்களது வேற்று மைகளையும் வித்தியாசத்தையும் கடந்து ஒன்றுபட வேண்டும். அவர்கள் ஒன்று படுவதன் மூலம்தான் நமது நாட்டின் வளங்கள் பாரபட்சமின்றி அனைவருக் கும் பகிர்ந்தளிக்கப்படுவதை உத்தர வாதப்படுத்த முடியும். நாம் அனைவரும் உண்டு, அனைவரும் உடுத்தி, இருக்கிற வேலையை அனைவரும் பகிர்ந்து செய்து எல்லா வளமோடும் பெருவாழ்வு வாழ அந்த ஒற்றுமை உரமாகும். நமது நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியை சாதாரண மனிதன் வளர்ச்சிக்கும், கல்வி மேம் பாட்டிற்கும், சமூகத்தில் கீழ்நிலையில் உள்ள மக்களின் தேவைக்கும் பயன் படுத்த வேண்டும்.

1991 முதல் அதாவது உலகமயக் கொள்கைகள் அமலாக்கத் தொடங்கி யதிலிருந்து, நமது பொருளாதாரம் அரசியல் அமைப்பு சட்ட விதிகளுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்குப் புறம் பாகவும், டாலர் தாகத்துடனும் செயல் படுத்தப்படுகிறது. ஐ.நா. பொதுச் செயலாளர் பொறுப்புக்குபோட்டியிட்ட சசி தரூர் கூற்றின்படி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சொத்து 200 பில்லியன் டாலர் உயர்கிறது; அன்னியச் செலா வணி கையிருப்பு 200 பில்லியன் டால ரைத் தாண்டியுள்ளது. இவ்வளவு இருந் தும் நமது டாலர் தாகம் தீராமல் நமது தங்கத்தினை லண்டன் சந்தையில் அட மானம் வைத்து டாலரைக் குடிக்கிறோம். உலக பில்லியனர்களில் 27 பேர் இந்தியர்கள், பெரும்பான்மையோர் இந்தியாவில் வசிக்கிறார்கள். நமது நாட்டின் 80 கோடி ஏழை மக்கள், மாதத் திற்கு 15 டாலருக்கும் குறைவான வரு மானம் உள்ளவர்களும் இவர்களோடு தான் வசிக்கிறார்கள்.

இன்றைக்கு உலகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளது. ஆனால் ஏழை மக்கள் இருந்த இடம் மாறாமல் அங்கேயே இருக்கிறார்கள். இத்தகைய துன்ப துயரங்களிலிருந்து விடுபடுவதற் கான எச்சரிக்கை மணிதான் தமது குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீலின் குடியரசு தின உரை!

உலகமயமாக்கலின் வளர்ச்சியும் பலன்களும் நாட்டில் உள்ள கோடானுகோடி ஏழை மக்களுக்கும் போய்ச்சேர வேண்டும் என்றும், நமது நாட்டின் உயர்ந்த வளர்ச்சி விகிதம் ஏழை குடிசையில் உள்ள சாமானிய மனிதனின் வாழ்க்கையும் வளர்ச்சியடைவதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி கூறியதுபோல் ஒவ்வொரு ஏழைப் பாட்டாளியின் கண்களின் கடைசி சொட்டுக் கண்ணீரும் துடைத்தெறியும் வரை நமது லட்சியம் உறங்கக்கூடாது.

நாம் நமது ஆட்சியாளர்களைப் பார்த்து சில கேள்விகளை முன்வைக்க வேண்டியுள்ளது. நமது நேரு கூறியது போல், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ‘நான் ஒரு சோஷலிஸ்ட்’ என்று உறுதிபட சொல்வாரா? இந்திராகாந்தி செய்தது போல் சோனியாகாந்தி நமது தேசியவாதம் என்பது சமதரும சோஷலிஸத்தைக் கட்டுவதுதான் என்று உறுதியேற்றுக் கொள்வாரா? நமது குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல், ‘இந்தியாவின் உயிர், சில நகரங்களில் இல்லை, கிராமங்களில் தான் வாழ்கிறது’ என்ற காந்தியின் உறுதியினை சுவீகரித்துக் கொள்வாரா?வானுயர்ந்தக் கட்டிடங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், அன்னிய மோகத்தால் தூண்டப்பட்ட சொகுசான ஆடம்பர வாழ்க்கை, தனியார்மயமாக் கல் மற்றும் எங்கெங்கும் நடக்கும் கொள்ளை, மலிந்து கிடக்கும் ஊழல் இவையனைத்தும் ஒன்று சேர்ந்து மீண்டும் காந்தியையும், நேருவையும், இந்திராகாந்தியையும் படுகொலை செய்துள்ளன. காந்தியத்துக்கு எதிரான உலகமயமாக்கல் கொள்கைகளும், தனியார்மயமாக்கல் கொள்கைகளும் உச்ச ஸ்தாயியில் உச்சரிக்கப்பட்டு, புதிய காலனியாதிக்கத்திற்கு பாதையை அகலத் திறந்துவிடப்படுகின்றன. நமது நாட்டின் உன்னத மூலதனம் என்பது மனிதநேயத்தை உருவாக்கு வதில்தான் வாழ்கிறது. மாறாக, ஊதாரித்தனமான ஆடம்பரத்திலோ அல்லது நட்சத்திர கலாச்சாரத்திலோ இல்லை- இவையெல்லாம் சுதந்திரத்திற்கும், சமத ருமத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், ஜனநாயக அரசியலுக்கும் சுயசார்புத் தன்மைக்கும் எதிரானவை. இந்திய மக்கள் புதிய சுதந்திரப் போரினைத் துவங்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

(கடந்த 5.2.08 அன்று ‘தி இந்து’வில் வந்த முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழாக்கம் : வெ.ராகுல்ஜி.

Friday, February 8, 2008

வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள் - நீதியரசர் கற்பக விநாயகம்புதுடில்லி, பிப். 9-

வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள் என்பது இன்றைய காலகட்டத்திலே மிகவும் தேவையான சொற்களாக மாறிவிட்டன என்று ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் கற்பக விநாயகம் கூறினார்.தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமையன்று மாலை ‘‘வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள்’’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் வரவேற்புரையாற்றினார். பின்னர் சிறப்புச் சொற்பொழிவாற்றியபோது நீதியரசர் கற்பக விநாயகம் பேசியதாவது:

‘‘இங்கே சிறப்புச் சொற்பொழிவாற்ற தில்லித் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் என்னைக் கேட்டுக்கொண்டபோது நான் சில தலைப்புகளைச் சொன்னேன். அதில் ‘‘வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள்’’ என்கிற தலைப்பை பொதுச்செயலாளர் இரா. முகுந்தன் தேர்ந்தெடுத்து அதிலேயே உரையாற்றும்படிக் கேட்டுக் கொண்டார். வாழ்க்கை ஒரு மலர்ச்சோலை என்று சொல்லாமல், வாழ்க்கை ஒரு சொர்க்கம் என்று சொல்லாமல், வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள் என்று ஏன் சொல்ல வேண்டும்? வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள் என்ற சொற்கள் விவேகானந்தர் சொன்ன சொற்கள். அதுவும் இங்கே பள்ளிக் குழந்தைகள் இருக்கிறபோது, இளைஞர்கள் இருக்கிறபோது இளைஞர்களை மிகவும் விரும்பிய விவேகானந்தர் கூறிய சொற்கள் அவை. இன்றைய உலகமய காலகட்டத்திலே மிகவும் தேவையான சொற்களாக அவை மாறிவிட்டன. வாழ்க்கை ஒரு சவால் சந்தியுங்கள், வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள், வாழ்க்கை ஒரு சோகம் - முறியடியுங்கள், வாழ்க்கை ஒரு பாடல் - இசைத்துப் பாருங்கள், வாழ்க்கை ஒரு பயணம் - முடித்து வையுங்கள், வாழ்க்கை ஒரு பரிசு - பெற்றுக்கொள்ளுங்கள், வாழ்க்கை ஒரு அழகு - ஆராதியுங்கள், வாழ்க்கை ஒரு கடமை - செய்து முடியுங்கள், வாழ்க்கை ஒரு லட்சியம் - அடைந்து விடுங்கள், வாழ்க்கை ஒரு சக்தி - உணர்ந்துகொள்ளுங்கள், வாழ்க்கை ஒரு சரித்திரம் - பகிர்ந்துகொள்ளுங்கள், வாழ்க்கை ஒரு வரலாறு - படைத்துவிடுங்கள், நீங்களே வரலாறாக மாறி வரலாற்றைப் படையுங்கள். இந்தச் சொற்கள் அத்தனையும் என்னுடைய சொற்கள் அல்ல. இவை அனைத்தும் விவேகானந்தர் கூறிய சொற்களாகும். நாம் ஏன் விவேகானந்தரை எண்ணிப் பார்க்க வேண்டும்? இன்றைய இளைஞர்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்? உலகமயக் கொள்கைகள் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்போது, மனிதாபிமானம் எங்கே இருக்கிறது என்று தேட வேண்டியதாக இருக்கிறது. மணி (money) தா, அபிமானம் தருகிறேன் என்ற நிலையிருக்கிறது. அடுத்தவரிடம் அன்பு பாராட்டுவது, அன்புசெலுத்துவது, திருப்தியாக இருப்பது, மகிழ்ச்சியாக இருப்பது, சுறுசுறுப்பாக இருப்பது அவசியம்.சுறுசுறுப்பான மனிதர்களைப் பார்க்கும்போது நமக்கும் சுறுசுறுப்பு வரும். மகிழ்ச்சியான மனிதர்களைப் பாருங்கள், நமக்கும் மகிழ்ச்சி வரும். இளைஞர்கள் என்பது வயதில் இல்லை, மனதில்தான் இருக்கிறது. இருபது வயது கிழவர்களும் உண்டு, 70 வயது இளைஞர்களும் உண்டு. வேலையை நினையுங்கள், துடிப்பாகச் செய்யுங்கள், அப்போதுதான் இளைஞர்களுடைய மனம் வரும். எதையாவது செய்து முடிக்க வேண்டும் என்ற ஆற்றல், ஆர்வம் இருக்க வேண்டும்.

If you engage yourself, your will become young age.

ஒருவரிடம் அன்பு செலுத்தி பாராட்டுவது என்பது, அவருக்கு வெள்ளித் தட்டில் தங்கக் கனியை அளிப்பது போலாகும். இந்த உற்சாகத்தை அடுத்தவருக்குக் கொடுங்கள். அதிலிருக்கிற இன்பம் வேறெதிலும் இல்லை. யார் இளைஞன்?

எவன் ஒருவன் தன் லட்சியத்தை நோக்கிய பயணத்தை நிறுத்தாதவனோ அவனே இளைஞன். லட்சியத்தை நோக்கி முன்னேறு, முன்னேறிக் கொண்டே இரு. அவ்வாறு முன்னேறிக்கொண்டிருப்பவனே இளைஞன்.

எவன் ஒருவன் லட்சியத்திற்காகப் போராடுகிறானோ, எவன் ஒருவன் அடுத்தவர் மகிழ்ச்சிக்காகப் போராடுகிறானோ அவனே இளைஞன். தன்னைத் தியாகப்படுத்திக் கொண்டு, அடுத்தவருக்காக வாழ்கிறவனே இளைஞன். உயர்ந்த எண்ணங்களுடன் வாழ்பவன், தன்னையும் உயர்த்திக் கொள்கிறான், அடுத்தவர்களையும் உயர்த்துகிறான். அப்படி நாம் வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பாருங்கள். ஒருவன் உயர்ந்தவன் என்று எதை வைத்துச் சொல்கிறோம். அவன் உயரத்தை வைத்து அல்ல. மரம் கூட உயர்ந்திருக்கிறது. மரங்களின் உயர்வு உயரத்தைப் பொறுத்தது அல்ல. அது மக்களுக்கு அளிக்கும் பழங்களைப் பொறுத்தது, பயன்பாட்டைப் பொறுத்தது. அதேபோன்று மனிதர்களுக்குப் பெருமை எப்படி வருகிறது? பதவியை வைத்தா? நாம் எந்தப் பதவியிலிருக்கிறோம் என்பது முக்கியமல்ல, அந்தப் பதவியிலிருந்து கொண்டு மனிதகுல முன்னேற்றத்திற்கு என்ன உதவி செய்கிறோம் என்பதைப் பொறுத்தே நமக்குப் பெருமை. இவ்வாறு நான் இந்த மனிதகுல முன்னேற்றத்திற்கு உருப்படியாக எதையேனும் செய்திருக்கிறேனா? நல்லவனா இருந்திருக்கிறேனா? வல்லவனாக இருந்திருக்கிறேனா? இத்தகைய கேள்விகளுக்குப் பதில் சொல்லி நம்மை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.நம்மில் பலர் நம் தலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மூளைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இதயத்திற்குக் கொடுப்பதில்லை. மனிதநேயத்திற்குக் கொடுப்பதில்லை. வாழ்க்கை என்றால் என்ன? What is LIFE. Live for love. Ignore bad habits. Fight against troubles. Enjoy the life. This is LIFE. அனைவரிடமும் அன்பு செலுத்து. தீயதைப் புறக்கணி. இன்னல்களுக்கு எதிராகப் போராடு. வாழ்க்கையை அனுபவி.

இதுதான் வாழ்க்கை. வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்க்கை அனுபவிப்பதற்கே. எழு, விழி, லட்சியம் நிறைவேறும் வரை துவண்டு விடாதே. Arise, awake and stop not till the goal is reached. இதுவே விவேகானந்தர் நமக்குச் சொல்லித்தந்துள்ள வாழ்க்கை.

வாழ்க்கை என்பது போராட்டம். போராட்டத்தின்போது பல்வேறு சோதனைகள் வரலாம், தோல்விகளும் வரலாம். அவற்றைக் கண்டு துவளாதீர்கள். இறுதி வெற்றி கிட்டும்வரை போராடுங்கள். வெற்றி பெற்ற பிறகு கிடையாது வாழ்க்கை. வெற்றிக்காகப் போராடுகிறோமே அதுதான் வாழ்க்கை. போராடுவதில் இருக்கிற சுவை வேறெதிலும் இல்லை.

இவ்வாறு நீதியரசர் கற்பக விநாயகம் பேசினார். பின்னர் திருக்குறள், பாரதியார், பாவை விழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தில்லித் தமிழ்க் கல்விக் கழக, தில்லி மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். துணைத் தலைவர் எஸ். துரை நன்றி கூறினார்.

(தொகுப்பு: ச. வீரமணி)

Thursday, February 7, 2008

பிராந்திய வெறி தன் கோர முகத்தை மீண்டும் தூக்குகிறது


தலையங்கம்:
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பிராந்திய வெறி தன் கோர முகத்தை மீண்டும் உயர்த்தியிருக்கிறது. தன்னுடைய சுயேட்சையான அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, தங்கள் மாமாவும் சிவசேனைத் தலைவருமான பால் தாக்கரேயிடமிருந்து பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்துள்ள ராஜ்தாக்கரே, தன்னுடைய மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா மூலமாக மாநிலத்தில் பிராந்திய வெறியைக் கிளப்பக்கூடிய பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார், மும்பையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வட இந்தியர்கள் மீது தாக்குதல்களை ஏவிவிட்டிருக்கிறார்.
1960களின் பிந்தைய ஆண்டுகளில், அரசியலில் தனக்கென்று ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, சிவசேனை மேற்கொண்ட நடவடிக்கைகளையே இது நினைவுபடுத்துகிறது. அப்போது சிவசேனைக் கட்சியானது, ‘மண்ணின் மைந்தர்கள்’ என்னும் முழக்கத்தை கையில் எடுத்துக் கொண்டு, ‘வேட்டி கட்டியவர்களை எல்லாம் விரட்டி அடியுங்கள்’ என்று கூக்குரலிட்டுக்கொண்டு, தென்னிந்தியர்களை எல்லாம் விரட்டி அடித்தது. சிவசேனை பின்னர், பிராந்திய வெறிப்போக்கைக் கைவிட்டு, படிப்படியாகப் பட்டம் பெற்று, இந்திய அரசியல் மற்றும் சமூகத்தின் மாபெரும் பிரிவினைக் கொள்கையாக உள்ள இந்துத்வாக் கொள்கையை ஆரத் தழுவிக்கொண்டது.
ஆயினும் ராஜ் தாக்கரே, தற்சமயம் சிவசேனாவின் ஆரம்ப கால பிற்போக்குப் பாரம்பர்யத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். மராத்திய பிராந்திய வெறித் தீயை விசிறி விடுவதன் மூலமாக, வட இந்தியர்களின் மீது - குறிப்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் மீது - மிகவும் கயமைத்தனமான முறையில் தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறார்கள். டாக்சிகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. இதனை அடுத்து டாக்சி யூனியன்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அச்சுறுத்தல்களை விடுத்திருக்கின்றன. போஜ்பூரி திரைப்படங்கள் காட்டப்பட்ட தியேட்டர்கள் எல்லாம் சூறையாடப்பட்டுள்ளன. மத்திய இரயில்வே அமைச்சர் லாலு தனியே அடையாளப்படுத்தப்பட்டு, ‘‘இரயில்வேயில் பீகாரிகளை மட்டுமே வேலைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்’’ என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தித் திரைப்பட உலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் கூட, கயவர்களின் தாக்குதல் இலக்கிலிருந்து, விட்டு வைக்கப்படவில்லை.பீகார் மக்கள் மீது மிகவும் கேவலமான முறையில் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்னவெனில், அவர்கள் தீபாவளிப் பண்டிகைக்கு ஆறு நாட்கள் கழித்து வரும் சாட் பண்டிகையை (chhat festival) வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்களாம். உண்மையில் அந்த சமயத்தில் மும்பையில் குறைந்த கூலியில் வெகுநேரம் வேலை செய்திடும் பீகாரித் தொழிலாளர்கள் கிடைக்காமல் போய்விடுவதுதான், இத்தகைய விரக்தியான வெளிப்பாட்டிற்குக் காரணமாகும். இந்தியா போன்ற சமூக, கலாச்சார, மொழி வேற்றுமைப் பண்புகள் வளமாக உள்ள ஒரு நாட்டில், பல்வேறு விதமான மக்கள் தங்களுடைய பாரம்பர்யப் பண்டிகைகளைக் கொண்டாடுவது இயற்கையே. அவர்களின் பண்டிகை கால உணர்வுகளுக்கு மையமாக இருப்பதே பாரம்பர்யக் கலாச்சாரங்கள்தான். எந்த ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது கலாச்சாரப் பிரிவினரும் மற்றொரு மொழி அல்லது கலாச்சாரப் பிரிவினர் மீது தங்கள் பண்டிகையைத்தான் கொண்டாட வேண்டும் என்று நிர்ப்பந்தத்தைத் திணிக்க முடியாது.
இத்தகைய பல்வேறு சமூக, கலாச்சார, மொழி வேற்றுமைப் பண்புகளினூடே ஒற்றுமையைக் காண்பதன் மூலம்தான் வலுவான இந்தியாவைக் கட்டிட முடியும். இந்த வேற்றுமைப் பண்புகளில் ஒரு சீரான தன்மையைத் திணிக்க முயன்றால், அது நாட்டின் ஒற்றுமையைத் தகர்ப்பதற்கே இட்டுச் செல்லும். இதைத்தான் தற்சமயம் மும்பையில் பிராந்திய வெறி சக்திகள் செய்து கொண்டிருக்கின்றன. நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிப் பாதுகாத்திட நினைக்கும் ஒவ்வொருவரும் இத்தகையப் பிரிவினை சக்திகளை ஓரங்கட்ட வேண்டியது அவசியம். நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வுகள் இந்தப் புரிதலுடனே அமைந்திருக்கிறது. அது, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வேலை செய்யும் உரிமையையும், குடியேறும் உரிமையையும் அளிக்கிறது. எனவே, மகாராஷ்ட்ராவில் சமீபத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பிராந்திய வெறியானது அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் சரி, சமுதாய நெறிமுறைகளின்படியும் சரி விரோதமானதாகும். முந்தைய ஆண்டுகளில் சிவசேனையின் வெறித்தனமான பிரச்சாரங்களால் பாதிக்கப்பட்ட, அதிலிருந்து தங்களை உருக்கு போன்று மாற்றிக்கொண்டுள்ள இன்றைய மும்பையினர், இப்போது ‘‘மும்பை மும்பையினருக்கே’’ என்ற முழக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் பொருள் உலக நாகரிகத்தின் மையமாக மாறியுள்ள மும்பை மாநகரத்தில் வாழும் அனைவரும் - அவர்கள் எந்த கலாச்சார, மத, மொழி அல்லது அடையாளத்தைக் கொண்டிருந்தாலும் சரி, அவர்களனைவரும் - மும்பையினரே. இத்தகைய உலக நாகரிகத்தின் பொது மையமான, இந்தியாவின் வணிகத் தலைநகரான, மும்பை மாநகரம்தான் பிராந்திய வெறியர்களால் இன்றைக்கு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. நவீன இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கருத்தாக்கத்தையே இது அச்சுறுத்தலுக் குள்ளாக்கியுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ முடியாது. இது துரதிர்ஷ்வசமானது மட்டுமல்ல, ஐயத்திற்கிடமற்ற வகையில் நாட்டின் ஒற்றுமைக்கு அழிவு உண்டாக்கக்கூடியதுமாகும். தேர்தல் ஆதாயத்திற்காகப் பல்வேறு வெறித்தனங்களையும் ஊட்டி வளர்த்திடும் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் இத்தகைய குறுகிய வழியைத் தேர்ந்தெடுக்கின்றன. நவீன இந்தியாவைப் பாதுகாத்திடவும், ஓர் ஆரோக்கியமான ஜனநாயக அரசியலமைப்பை வலுப்படுத்திடவும் வேண்டுமென்றால் இத்தகைய போக்குகளை ஆரம்பத்திலேயே முழுமையாகக் கிள்ளி எறிந்திட வேண்டும். நவீன-தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நாட்டில் மாநிலங்களுக்கிடையே பொருளாதார சமத்துவமின்மையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில் இது மேலும் அவசியமாகும். இத்தகைய ஏற்றத்தாழ்வான நிலைமையானது பின்தங்கிய பிராந்தியங்களிலிருந்து மக்களை நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும் வளர்ந்த மாநிலங்களை நோக்கி புலம்பெயரச் செய்கிறது. இத்தகைய செயல்பாடுகளானது ஒரு நீண்ட நெடிய காலகட்டத்தில், ஒரு சமச்சீரான பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை. மும்பையில் சமீபத்திய தாக்குதல்கள்போல் அல்லது தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் போல் அப்போது எழாது என்பதும் நிச்சயம். ஆயினும், அத்தகைய சமச் சீரான வளர்ச்சியை அரசின் உறுதியான தலையீட்டின் மூலம்தான் அமல்படுத்த முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நவீன தாராளமய பொருளாதார நிகழ்ச்சிநிரலைக் கட்டித் தழுவிக்கொண்டுள்ள இந்திய ஆளும் வர்க்கம் ‘சந்தையாகிய கடவுள் கிருபையே’ தேவை என்று கிடப்பதால், இதனைச் செய்யாமல் விட்டுவிட்டது. விளைவு, ஆட்சியாளர்கள் பொருளாதார செயல்பாடுகளிலிருந்து தங்களை விலக்கிக் கொள்வது அதிகரித்தவண்ணம் உள்ளது.பொருளாதார சமத்துவத்தை நோக்கி நாடு முன்னேற வேண்டும் என்று சொல்கிறபோது, இன்றைய சூழ்நிலையில், பிராந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்குறித்து கவலைப்படாமல் இருப்பதோ அல்லது ஏற்றத்தாழ்வுகளைக் காட்டி பிராந்திய வெறியைக் கிளப்புவதோ சரியல்ல என்பதும் அடிக்கோடிடப்பட வேண்டும். பொறுப்புமிக்க அனைத்து அரசியல் கட்சிகளும், மும்பையில் கிளறிவிடப்பட்டுள்ள பிராந்திய வெறி என்னும் தீயை அணைத்திடமுன்வர வேண்டும். இதனை நாடு முழுதும் பரப்பிட எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.
தமிழில்: ச. வீரமணி

விவசாயிகள் கடன் நிவாரண ஆணையம் அமைக்கப்பட வேண்டும்:பிரகாஷ்காரத்

புதுடில்லி, பிப்.7-

வரவிருக்கும் பட்ஜெட் உரையில் விவசாயிகள் கடன் நிவாரண ஆணையம் அமைப்பது குறித்து அரசின் முடிவு தெரிவிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார்.

இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் சார்பில் பத்திரிகையாளர்கள் கூட்டம் வியாழன் அன்று மாலை புதுடில்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் மற்றும் தேசிய செயலாளர் து. ராஜா, ஆர்.எஸ். பி. சார்பில் அபனிராய், பார்வர்ட் பிளாக் சார்பில் தேவபிரதா பிஸ்வாஸ் மற்றும் தேவராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அவ்வமயம் 2008-09ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டிற்காக இடதுசாரிக் கட்சிகள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை விளக்கி பிரகாஷ்காரத் கூறுகையிலேயே இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:‘‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்ததிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாகவே இடதுசாரிக் கட்சிகள் சார்பில் பட்ஜெட் குறித்து முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த ஆண்டும் அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பியிருக்கிறோம். சில முக்கியமான அம்சங்கள் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுவருவது இது சரியான தருணம் என்று கருதுகிறோம். சமர்ப்பிக்கப்படவிருக்கும் பட்ஜெட் நாடு எதிர்நோக்கியுள்ள உண்மையான மற்றும் அவசரமான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் அமைந்திட வேண்டும். விவசாய நெருக்கடியால் விளைந்துள்ள பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவற்றிற்குத் தீர்வு காணக்கூடிய வகையில் பட்ஜெட் அமைந்திட வேண்டும். மேலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் தன்னுடைய குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தில் அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றக்கூடிய வகையிலும் பட்ஜெட் அமைந்திட வேண்டும். குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிகளில் பல இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டு இந்த ஆண்டு அவற்றை நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் மற்றும் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் அரசு அளித்துள்ள உறுதிமொழிகளின் அடிப்படையில் எங்கள் முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி இருக்கிறோம்.

அடுத்ததாக, அரசு தன்னுடைய பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை எவ்வாறெல்லாம் ஒதுக்கிட வேண்டும் என்றும் நிதி வருவாயைப் பெருக்கிட அரசு எவ்விதங்களில் வரி விதிக்க வேண்டும் என்றும் சில யோசனைகளை அளித்திருக்கிறோம். குறிப்பாக விவசாயிகள்/விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தில் அறிவித்துள்ளபடி விவசாயத்திற்கான பொது முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். குறிப்பாக விவசாயிகளின் கடன்களிலிருந்து அவர்களை விடுவிக்க அரசு என்ன செய்ய இருக்கிறது என்பதை பட்ஜெட் அறிவித்திட வேண்டும். சிறிய நடுத்தர விவசாயிகள் கடன்களை ரத்து செய்திட வேண்டும். விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் அளித்திட்ட பரிந்துரையின் அடிப்படையில் தேசிய கடன் நிவாரண ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதற்கு கேரள அரசு கொண்டுவந்துள்ள கடன் நிவாரணச் சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டிடலாம். கேரளாவில் கந்துவட்டிக்காரர்களிடம் வாங்கியுள்ள கடன்களைக்கூட அரசே கட்டி, விவசாயிகளை கடன் வலையிலிருந்து விடுவித்திருக்கிறது. அதேபோன்று எதிர்காலத்தில் விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் பரிந்துரைத்திருப்பதுபோல் 4 சதவீத வட்டிவிகிதத்தில் கடன் கொடுத்திட அரசு முன்வர வேண்டும். விலைவாசி உயர்ந்திருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில், அரசு கொள்முதல் சமீப காலங்களில் முறையாக இல்லாததால் விவசாயிகளும் சாமானிய மக்களும் கடும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே அரசு கொள்முதலை மீண்டும் முறைப்படுத்தி, பொது விநியோக முறையையும் செம்மையாக்கிட வேண்டும். மீண்டும் பொது விநியோக முறையில் ஒரே சீரான முறையை (Universal Public Distribution System) கொண்டுவரப்பட வேண்டும். அதற்குத் தேவையான வகையில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனைத்திற்கும் மான்யங்கள் வழங்கிட வேண்டும்.குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் அளித்துள்ள உறுதிமொழிகள், கல்வி, சுகாதாரம், சச்சார் கமிட்டி பரிந்துரைகள், தேசிய கிராமப்புற உறுதித் திட்டம் ஆகிய அனைத்திற்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அடுத்ததாக, அரசு தேவையற்ற முறையில் பலருக்கு வரி விலக்கு அளித்திருக்கிறது. அவற்றை அரசு கைவிட வேண்டும். குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலத்தின்கீழ் பெரும் நிறுவனங்களுக்கு அளித்துள்ள வரிச்சலுகைகளை வாபஸ் பெற வேண்டும். அதற்கேற்ற வகையில் சிறப்புப் பொருளாதார மண்டனலச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். நீண்டகால மூலதன ஆதாய வரியை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். பத்திரம் பரிவர்த்தனை வரி விகிதமும் (Securities Transaction Tax) அதிகரிக்கப்பட வேண்டும். எங்கள் முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பிவிட்டோம். இவை அனைத்தையும் அரசும் நிதி அமைச்சரும் கணக்கில் எடுத்துக் கொண்டு பட்ஜெட் தயாரித்திட வேண்டும். இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.

இது தொடர்பாக நிதி அமைச்சரை சந்திப்பீர்களா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, கடந்த இரு ஆண்டுகளாக அந்த நடைமுறை கைவிடப்பட்டுவிட்டது என்றும் இந்த ஆண்டும் அவ்வாறு இருக்காதென்றே கருதுகிறோம் என்றும் பிரகாஷ் கூறினார்.Wednesday, February 6, 2008

இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி செய்யக்கூடாது - பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் டில்லியில் பேரணி

இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி செய்யக்கூடாது
பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் டில்லியில் பேரணி

புதுடில்லி, பிப்.6-

இலங்கை அரசுக்கு இந்தியா இராணுவ உதவி செய்யக்கூடாது என வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் புதுடில்லியில் புதனன்று காலை பேரணி - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர்கள் விடுதலை கே. ராசேந்திரன், கோவை கே. ராமகிருஷ்ணன் பேரணிக்குத் தலைமை வகித்தனர்.

பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் புதனன்று காலை புதுடில்லி, ஜந்தர்மந்தர் அருகிலிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற பேரணி - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர்களைப் படுகொலை செய்திடும் இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்யாதே, தமிழர் படுகொலைக்குத் துணை போகாதே என்று மத்திய அரசை வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது.

பேரணி - ஆர்ப்பாட்டத்திற்கு கொளத்தூர் மணி தலைமை வகித்தார். பேரணி - ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி பொதுச் செயலாளர்கள் கே. ராசேந்திரன், கோவை கே. ராமகிருஷ்ணன், துரைசாமி மற்றும் சரஸ்வதி முதலானோர் உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் பேசியதாவது:

‘‘இலங்கையில் நடைபெறும் யுத்தத்தால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கடும் துன்ப துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை பிரதான தீவுடன் இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலை கடந்த இரு ஆண்டுகளாக மூடப்பட்டு விட்டதால் தமிழ் மக்கள் சொல்லொணா துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அரசாங்கம் அத்தியாவசியப் பொருள்களையும் மருந்துப் பொருள்களையும் யாழ்ப்பாணத்திற்கும் மற்றும் தமிழர் வாழும் நகரங்களுக்கும் அனுப்புவதற்குத் தடை விதித்திருக்கிறது. யுத்த மரபுகள் அனைத்தையும் மீறி இலங்கை அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மீது குண்டுகளைப் போட்டு அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறது. அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கூட கொன்று வருகிறது. இந்தப் பின்னணியில் இந்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி செய்து வருவது இந்தியாவில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் கடும் மனவேதனையையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்திய அரசு, இலங்கைக்கு இராணுவ உதவி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.’’

இவ்வாறு அவர்கள் பேசினார்கள். ‘இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே’ என்று கையெழுத்து இயக்கத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொது மக்களிடம் பெற்றுள்ள பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட கையொப்பங்கள் அடங்கிய மகஜரை மாலையில் பிரதமரிடம் அளிக்க இருப்பதாகவும், மனு ஒன்றையும் பாதுகாப்பு அமைச்சரிடம் அளிக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.பேரணி நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்டது. பேரணி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல்நிலையம் அருகில் வருகையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

Monday, February 4, 2008

வரதட்சணை வரையறை குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு அநீதியானது-அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

வரதட்சணை வரையறை குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு அநீதியானதுஉச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும்அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவிப்பு

புதுடில்லி, பிப். 4-

மாப்பிள்ளை வீட்டாரால் திருமணத்திற்குப் பின் கேட்கப்படும் வழக்கமான வெகுமதிகள் வரதட்சணை என்கிற வரையறையின் கீழ் வராது என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதியானது, இதனை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்திட உள்ளோம் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் கூறினார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன், சங்கத்தின் சட்டத்துறை அமைப்பாளர், கீர்த்தி சிங், உதவி செயலாளர் ஆஷாலதா, புரவலர் பிரமிளா பாந்தே ன்று மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:
உச்சநீதிமன்றம், திருமணத்திற்குப் பின் மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் வெகுமதிகள் வரதட்சணை வரையறையின் கீழ் வராது என்று சமீபத்தில் அளித்துள்ள தீர்ப்பு அநீதியானது. திருமணத்திற்குப்பின் பெண் வீட்டாரிடம் இருந்து கேட்கப்படும் வெகுமதிகள் வரதட்சணை வரையறையின் கீழ் வராது என்று நீதிமன்றம் தீர்ப்பளிப்ப்து இது மூன்றாவது முறை. வரதட்சணை வரையறையை முழுதுமாக திரித்து இத்தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம். 1961ஆம் ஆண்டு வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் வரையறை (definition) தொடர்பான இரண்டாவது பிரிவின்கீழ், திருமணம் சம்பந்தமாக திருமணத்திற்கு முன்பும், திருமணத்தின்போதும், திருமணத்திற்குப் பின்பும் கொடுக்கப்படும் பணம் அல்லது ம்திப்புள்ள சொத்துக்கள் எதுவாக இருந்தாலும் வரதட்சணையாகும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கடந்த 25 ஆண்டு கால அனுபவம் என்னவெனில், வரதட்சணைக்காக பெண்களை இம்ஷிப்பது என்பது திருமணத்திற்குப் பின் வரும் பண்டிகைக் காலங்கள், பிள்ளைப்பேறு, ஆண்டுவிழாக்கள் மற்றும் இதுபோன்று பல நிகழ்வுகளின் சமயங்களில்தான். வரதட்சணைக்காகப் பெண்கள் தொடர்ந்து இம்ஷிக்கப்படுவதன் விளைவாகத்தான் வரதட்சணைச் சாவுகள், தற்கொலைகள் மற்றும் பெண்கள் சொல்லொணாத் துன்ப துயரங்களுக்கு ஆளாகின்றனர். நாட்டில் 7500க்கும் மேற்பட்ட வரதட்சணை சாவுகள், பல்லாயிரக்கணக்கான தற்கொலைகள், 40 ஆயிரத்திற்கும் அதிகமான துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகள் எந்த அளவிற்கு வரதட்சணைக் கொடுமைகள் நாட்டில் இருக்கின்றன என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. வரதட்சணை என்பது ஆண்-பெண் குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு முன்னுரிமை, பெண் மகவு கருவிலேயே சிதைக்கப்படுதல், பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுதுல் அனைத்துடனும் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். கடந்த பத்தாண்டுகளில் பெண் மகவு பிறப்பு குறைந்திருப்பதும், காணாமல் போக்கும் பெண் குழந்தைகள் அதிகரித்திருப்பதும் வரதட்சணைக் கொடுமையின் விளைவுகளே. இந்தியாவில் நாள்தோறும் ஏழாயிரத்திற்கும் அதிகமான பெண் சிசுக் கொலைகள் நடைபெறுவதாக யூனிசெப் நிறுவனம் அபாப அறிவிப்பை அளித்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது ஓர் ஆரோக்கியமற்ற அநீதியான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்றும் வரதட்சணைக் கொடுமை புரிவோரை சுதந்திரமாக உலாவவிடுவதற்கு வழி செய்திடும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருதுகிறது. எனவே உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்திட வேண்டும். இதற்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மறுஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திட உள்ளது. இவ்வாறு சுதா சுந்தரராமன் கூறினார்.

செய்தியாளர்கள் தீர்ப்பின் விவரங்கள் குறித்து எழுப்பிய சந்தேகங்களுக்கு சட்டத்துறை அமைப்பாளர் கீர்த்தி சிங் விளக்கமளித்தார்.

Sunday, February 3, 2008

ஜும்பா லஹிரி - புளிட்சர் பரிசு பெற்ற ஒரேயொரு தெற்காசிய எழுத்தாளர்-சிவ. வீர. வியட்நாம்


“திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது முதுமொழி. திரவியம் தேடுவதற்காக திரைகடலோடி சென்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. உலகமய காலகட்டத்தில் நாடுகளின் எல்லைதாண்டிய போக்குவரத்து, கலாச்சார பரிமாற்றம் போன்றவையெல்லாம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நிலை எப்படியுள்ளது? அவர்களுடைய ஆசைகள், கனவுகள், திருமண வாழ்க்கை, வெளிநாட்டுக் குடியுரிமை, குழந்தைகளின் எதிர்காலம் போன்றவை எப்படியுள்ளன? வெளிநாட்டு வாழ்க்கை என்பது சொர்க்கமா? நரகமா? அங்கு வாழும் நம் மக்கள், குறிப்பாக உயர் மத்தியதர அறிவுஜீவிகள் சொகுசாக வாழ்வதாக நமக்குத் தோன்றும். ஆனால் அவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்களா?
இவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட இலக்கிய இயக்கத்தை உருவாக்க வேண்டுமென்பது தற்போதைய இலக்கிய உலகம் எதிர்கொள்ளும் சவால். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பற்றிய இலக்கியத்திற்கு - கலாச்சார மோதல்கள், தனிமை, இடமாற்றம், சுய அடையாளம் இழத்தல், மாறுபட்ட திருமண வாழ்க்கை போன்ற பல்வேறு கருப்பொருள்கள் உள்ளன. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று கற்பனை செய்து எழுதுவதை விட ஒருவெளிநாட்டு வாழ் இந்தியரே எழுதும்போது அவர்களுடைய உண்மையான உணர்வுகள், ஆசாபாசங்கள், சிக்கல்கள், எதிர்கால வாழ்க்கை போன்றவற்றை உலக வாசகர்கள் நன்றாக உணரமுடியும். அப்படி , ஓர் எழுத்தாளராக உருவாகிக்கொண்டிருப்பவர்தான் ஆங்கில எழுத்தாளர் ஜும்பா லஹிரி.
இளம்பெண்ணான இவர் ஓர் அமெரிக்க வாழ் இந்தியர். இவர் 1967ம் ஆண்டு இலண்டனில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய வங்காளி. இவர் ஆங்கில இலக்கியம், படைப்பிலக்கியம், ஒப்பிலக்கியம் என்ற மூன்று துறைகளிலும் தனித்தனியாக எம்.ஏ. பட்டம் - அதாவது மூன்று முறை எம்.ஏ. பட்டம் பெற்று - மறுமலர்ச்சி இலக்கியத்தில் (ஷேக்ஸ்பியர் கால இலக்கியத்தில்) முனைவர் பட்டம் பெற்றவர். பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் படைப்பிலக்கியம் பற்றி போதித்து வரும் ஆசிரியர். பிறந்ததிலிருந்து அமெரிக்காவில் வாழ்ந்தாலும், தன்னுடைய குழந்தைகள் இந்தியர்களாகவே வளர வேண்டும் என்பதில் இவருடைய தாய் உறுதியாக இருந்தார், அதனால்தான் இவருக்கு சிறுவயதிலிருந்தே வங்கமொழியும் இந்திய பாரம்பரியமும் இந்திய வாழ்க்கைமுறையும் பயிற்றுவிக்கப்பட்டது. இவருடைய தந்தை ஒரு நூலகர். தாய் ஆசிரியர். இலக்கியமும் எழுத்தும் இவருக்கு சிறுவயதிலிருந்தே பொழுதுபோக்கு. ஆரம்ப காலத்தில் பல பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய ஜும்பா லஹிரி, தன்னுடைய சிறுகதைகளைத் தொகுத்து முதன் முதலாக “பிரச்சனைகளின் மொழிபெயர்ப்பாளர்” (இன்டர்பிரடர் ஆஃப் மலடிஸ் -Interpreter of Maladies) என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த முதல் புத்தகத்திற்கே இவருக்கு புளிட்சர் பரிசு கிடைத்தது. இந்தப் பரிசு அமெரிக்கவாழ் மக்களின் வாழ்க்கையை பற்றி மிகச்சிறந்த கதைகளை வெளியிடும் அமெரிக்கவாழ் எழுத்தாளருக்கு வழங்கப்படும் பரிசாகும்.
ஜும்பா லஹிரி இந்த விருதைப் பெற்ற ஒரேயொரு அமெரிக்க வாழ் தெற்காசிய எழுத்தாளர். ‘நியூயார்க்கர்’ என்னும் அமெரிக்கப் பத்திரிகை “40 வயதுக்குள் எழுத்தாளராகிய உலகின் மிகச் சிறந்த 20 எழுத்தாளர்களுள் ஒருவர்,” என்று ஜும்பாலஹிரி குறித்துக் குறிப்பிட்டுள்ளது.
இப்புத்தகம் உலகின் 29 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், குறிப்பாக அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் இந்தப் புத்தகத்தைப் படித்தால் போதும். எல்லாக் கதைகளுமே இந்த ஆசிரியரைப் போல் இந்தியாவை விட்டு சென்று வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இந்தியர்களைப் பற்றிய கதைகள்.
அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் படித்த மத்திய தர வர்க்க இந்தியர்களுக்கு வருமானத்திற்குக் குறைவில்லை. ஆனால் இந்த வருமானத்திற்காக அவர்களின் வாழ்க்கையின் போக்கு எப்படியெல்லாம் மாறிப்போகிறது, அவர்களுடைய சக மனித உறவுகள் எப்படியெல்லாம் கணித்துக் கூறமுடியாததாக உள்ளது என்பதை மையமாக வைத்துத் தன் கதைகளை படைத்தார் ஜும்பா லஹிரி.
இந்தக் கதைகளின் கருக்களாக புலம்பெயர்ந்த இந்தியர்களின் முதல் தலைமுறையும் இரண்டாம் தலைமுறையும் சந்திக்கும் சிக்கல்கள், இந்தியத் திருமண முறைக்கும் மேற்கத்திய வாழ்கை நிலைக்கும் உள்ள வேறுபாடுகள், குடும்பத்தில் கணவன்-மனைவி பாத்திரங்களில் ஏற்படும் வேறுபாடுகள் போன்றவை உள்ளன. இக்கதைக்கருக்களை மனித மனத்தின் ஆழமான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜும்பா லஹிரி படைத்துள்ளார்.
இந்தப் புத்தகத்தின் தலைப்பை பற்றி கூறுகையில் அவர் சொல்கிறார்: “பாஸ்டன் நகரில் நான் ஒரு ரஷ்யரைச் சந்தித்தேன். அவர் தான் மருத்துவமனையில் பணிபுரிவதாகக் கூறினார். ஆனால் உண்மையில் அவர் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். மருத்துவத் துறை சம்பந்தமாக எந்தப் படிப்புகளையும் அவர் படிக்கவில்லை. ஆனால் தினமும் மருத்துவமனைக்குச் செல்வார். அவருடைய வேலை என்ன என்று ஒரு நாள் கேட்டேன். அவர் சொன்னார் ‘நான் பிரச்சனைகளின் மொழிபெயர்ப்பாளன் என்று.’ எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு நாள் அவருடன் நானும் மருத்துவமனைக்குச் சென்றேன். அந்த மருத்துவமனையில் பல நோயாளிகள் ரஷ்யர்கள். ஆனால் மருத்துவர்கள் அனைவரும் ஆங்கிலம் மட்டும் தெரிந்த அமெரிக்கர்கள். இருவருக்கும் இடையில் மொழிப் பிரச்சனை. இந்தச் சூழ்நிலையில் அந்த நபர் ரஷ்ய நோயாளிகளின் வியாதியை மருத்துவருக்கும் மருத்துவரின் பரிசோதனையை ரஷ்ய நோயாளிகளுக்கும் மொழி பெயர்த்துச் சொன்னது மட்டுமல்லாமல், நோயாளிகளின் மன ஆறுதலுக்கு என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ அந்த ஆறுதல் வார்த்தைகளை மருத்துவர் கூறியதாக அவரே சொல்லிக்கொண்டிருந்தார். ‘ஒருவருடைய வியாதியை மட்டும் மருத்துவருக்குச் சொல்லும் மொழிபெயர்ப்பு, கணிதம் போடுவது போன்று நடுநிலையானது. ஆனால் அவர்களுக்கு மிக முக்கிய தேவை பேச்சுத் துணையும் ஆறுதல் வார்த்தைகளும்தான். நான் அவர்கள் நோய்களை மட்டுமல்ல பிரச்சனைகளையும் மொழிபெயர்க்கிறேன்’ என்றார் அந்த நண்பர். இந்த வார்த்தைகள் என் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தின. எழுத்தாளன் என்பவனும் பிரச்சனைகளின் மொழிபெயர்ப்பாளன்தான் என்று எனக்குத் தோன்றியது. அந்த வாக்கியத்தையே எனது புத்தகத்தின் தலைப்பாக்கியது மட்டுமல்லாமல், அந்த கதாபாத்திரத்தையும் என்னுடைய ஒரு கதையில் பதிவு செய்துள்ளேன்.”
இந்தப் புத்தகத்தின் மற்ற கதைகள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணவன்-மனைவி உறவு எப்படியுள்ளது என்பதைச் சித்தரிக்கின்றன. இதுகுறித்துப் பேசுகையில் ஜும்பா லஹிரி கூறுகிறார்: “இந்தியாவில் குடும்பங்களைக்கட்டிக் காப்பதில் கணவனின் பங்கு என்ன, மனைவியின் பங்கு என்ன என்பது பற்றி வரையறுக்கப்பட்டுள்ளது. வெளிவாழ்க்கையில் ஒரு கணவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும், வீட்டு வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் புலம் பெயர்ந்து வரும்போது இந்த வரையறைகள் மாறுகின்றன, சில சமயங்களில் தூக்கியெறியப்படுகின்றன. இந்தியக் கலாச்சாரத்தின்படி பெண் என்றால் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும், குழந்தைகளை வளர்க்க வேண்டும், வயோதிகர்களைக் கவனிக்க வேண்டும். அவள் வேலைக்குச் செல்பவளாக இருந்தால் மேற்கொண்ட வேலைகளோடு சம்பாதிக்கவும் வேண்டும். வேலைக்குச் செல்கிறாள் என்பதற்காக இந்தியச் சமூகம் அவளுடைய பொறுப்புக்களைக் குறைத்திடவில்லை. இந்தியாவின் வேலை நேரமும் அதற்கு ஏற்றதாக இருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் வேலை நேரம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாததாக உள்ளது. எனவே மனைவி வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் கணவர்கள் சமையல், குழந்தை வளர்ப்பு போன்ற பல்வேறு வேலைகளையும் மனிதாபிமான அடிப்படையில் பங்கிட்டுக் கொள்ளவேண்டும். யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல் நம் ஊரில் வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லா வேலைகளையும் செய்வார்கள் என்று விதண்டாவாதம் பேசிக்கொண்டிருந்தால், அந்தக் குடும்பம் வெளிநாட்டு வசதிக்காக வாழ்க்கையை தொலைத்த குடும்பம் ஆகிப்போகும். மேலும் வெளிநாடுகளில் வாழும் தம்பதியருக்கு வேறு சொந்த பந்தங்கள் கிடையாது. கலாச்சாரம், மொழி, நாடு கடந்த சக ஊழியர்கள், உண்மையான நண்பர்களும் குறைவு. வாழ்க்கைத் துணைதான் மிகச் சிறந்த நண்பராகவும் உறவினராகவும் விளங்க வேண்டும். பரஸ்பரம் புரிந்து கொள்ளுதலை ஒதுக்கிவிட்டு பொருளற்ற சாத்திரங்களையும் சம்பிரதாயங்களையும் பிடித்துகொண்டு வாழும் இந்திய ஆண்களின் திருமண வாழ்கை இதனால் இங்கே இனிப்பதில்லை. இந்தியப் பெண்களும் தற்போது பன்மடங்கு முன்னேறியிருக்கிறார்கள். முன்பெல்லாம் படித்த பெண்கள் கூட வன்முறையான கணவன் கிடைத்தால் விதியென்று ஏற்றுகொண்டிருந்தார்கள். அவர்களுடைய பொறுமையைத்தான் அந்த கால இலக்கியங்கள் போற்றியிருக்கின்றன. ஆனால் அவர்களுடைய உள்ளக் குமுறல்களையோ குடும்பம் என்ற நிறுவனத்திற்காக அவர்கள் செய்த தியாகங்களையோ யாரும் பெரிதாக எழுதிடவில்லை. ஆனால் தற்காலப் படித்த பெண்கள் ஆண்களின் அராஜகத்தை புரிந்துகொள்கின்றனர். குறிப்பாக வெளிநாடுகளில் திருமணம் செய்து கொள்ளும் இந்தியப் பெண்கள் நன்கு படித்தவர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு உடனே வேலையும் கிடைத்து விடுகிறது. ஆனால் வேலை நேரம் மிகக் கடுமையானது. இந்தச் சூழ்நிலையில் கணவன் நல்ல நண்பனாக நடந்துகொள்ளாவிட்டால் , திருமணம் என்பது புனிதம், உடைக்கமுடியாதது என்ற போதனைகள் தூக்கியெறியப்படுகின்றன. எனவே விவாகரத்துகளும் அதிகாமாகிறது. எந்த இந்திய பெண்ணும் முட்டாள்தனமான மேற்கத்திய கலாச்சாரத்தின் காரணங்களுக்காக விவாகரத்து செய்வதில்லை.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற இந்தியத் தத்துவம் கணவனின் கொடுமைகளையெல்லாம் ஒரு பெண் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று போதிக்கிறது. கொடுமை தாங்காமல் விவாகரத்து செய்தால் இந்திய சமுகம் அவளை வாழாவெட்டி என்றுஎள்ளி நகையாடுகிறது. இந்திய சாத்திரங்கள் அவள் தெருவில் சென்றால் அபசகுணம் என்று அறிவிக்கின்றன. ஆனால் இம்மாதிரியான கேலிகள் வெளிநாடுகளில் வாழும் பெண்களுக்குக் கிடையாது. எனவே விவாகரத்து செய்வதால் உறவு முறிகிறதே தவிர அந்த சமூகம் அவளை எள்ளி நகையாடுவதில்லை.”
இப்படிப்பட்ட வெளிநாட்டு பெண்களின் உணர்வுகள், கஷ்டங்கள் போன்றவற்றை நடுநிலையுடன் தன் கதைகளில் சித்தரித்துள்ளார் ஜும்பா லஹிரி. இவர் விவாகரத்துகளை நியாயப்படுத்தவும் இல்லை, குற்றம் கூறவும் இல்லை. வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண்களின் உண்மையான பிரச்சனைகளை அப்படியே தம் கதைகளில் படம் பிடித்திருக்கிறார். இவர் எழுதிய மற்றொரு பிரபலமான நாவல் “பெயரளவில்” (தி நேம் சேக்).
அதாவது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு எல்லாமே பெயரளவில் உள்ளது. இந்தியன் என்ற அடையாளமும் பெயரளவில் உள்ளது. வெளிநாட்டுக்காரன் என்ற அடையாளமும் பெயரளவில் உள்ளது என்கிறார் ஆசிரியர் ஜும்பா லஹிரி . இக்கதை இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் முப்பதாண்டு காலம் வாழ்ந்துவரும் ஒரு வங்காளி குடும்பத்தின் கதை. சுயவாழ்க்கை அனுபவங்களை மையமாக வைத்து ஜும்பா லஹிரி இந்த நாவலை படைத்துள்ளார். இந்தியாவில் 25-30 ஆண்டுகள் வாழ்ந்து கல்வி கற்று தொழில் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களின் வாழ்க்கை முறைக்கும் இந்தியப் பெற்றோருக்கு குழந்தையாக அமெரிக்காவிலேயே பிறந்து வளரும் தலைமுறையினரின் வாழ்க்கை முறைக்கும் உள்ள வேறுபாடுகள், அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை இந்தப் புத்தகம் விளக்குகிறது. இந்தியாவில் 25-30 ஆண்டுகள் வாழ்ந்த பின்பு வெளிநாடு செல்பவர்களுக்கு இந்தியா என்றால் என்ன, இந்திய வாழ்க்கைமுறை என்றால் என்னவென்று தெரியும். வெளிநாடுகளின் வாழும் அந்நிய வாழ்க்கை, தனிமை, எப்போது நாடு திரும்புவோம் என்ற ஏக்கம், கலாச்சார கர்வம், இந்திய இசை, இந்திய உணவுகள், இந்திய பொழுதுபோக்குகள்- போன்றவையே அவர்களுடைய சிந்தனையில் நிறைந்திருக்கும். எப்படியாவது தன் குழந்தைகளை, தன் கலாச்சாரத்தின்படி தன் மொழி பேசி, தன் நாட்டு உணவுகளை பழக்கப்படுத்தி வளர்த்துவிட வேண்டும் என்பது ஒவ்வொரு தாயின் ஆசையாகவும் இருக்கும். ஆனால் அங்கேயே பிறந்து வளரும் குழந்தைகளுக்கு இந்தியா என்றால் அவர்களுடைய பெற்றோரிடமிருந்து என்ன கற்கிறார்களோ அதுதான். ஏனென்றால் அவர்களுடைய இந்திய வாழ்க்கை விடுமுறையின்போது பாட்டனார் வீட்டுக்கு வருவதும் ஊர் சுற்றி பார்ப்பதும் மட்டும்தான். ஆனால் இந்திய சமூகம் என்றால் என்னவென்பது பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. இதனால் இரண்டாம் தலைமுறையினருக்கு அடையாள சிக்கல் ஏற்படுகிறது. ‘நீ யார்?’ என்ற கேள்விக்கு அவர்களுக்குப் பதில் தெரியாது. ‘நான் முழுமையான இந்தியன்’ என்று அவர்களால் சொல்லமுடியாது. ஏனெனில் அவர்கள் இந்தியாவில் வாழ்ந்ததில்லை. நான் அமெரிக்கன் என்றும் அவர்களால் சொல்லமுடியாது. அவர்களுடைய உணவு, உடை, பெயர், குடும்பம் அவர்களை அமெரிக்கர்களிடமிருந்து நன்றாகவே வேறுபடுத்திகாட்டும். எனவே தற்போது பலர் நான் அமெரிக்க-இந்தியன் என்று சொல்லி வருகின்றனர்.
எனவே இவர்களைப் பற்றி எழுதிய அமெரிக்க-இந்தியர் ஜும்பா லஹிரியின் புத்தகங்களுக்கு உலகளவில் பெரும் கிராக்கி உள்ளது. இவருடைய புத்தகங்களைப் படிக்கும்வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையையே இவர் எழுதியிருப்பதாக இவருக்குப் பாராட்டுக் கடிதங்கள்எழுதுகிறார்கள். இவரை, மாக்சிம் கார்க்கியைப் போல், அச்சிபியைப் போல் இலட்சிய எழுத்தாளர் வரிசையில் நிறுத்த முடியாது. இவர் வளர்ந்து வரும் எழுத்தாளராவார்.
இலக்கியம் என்பது வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி. அமெரிக்க-இந்தியர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கம் கண்ணாடியாக ஜும்பா லஹிரியின் எழுத்துக்கள் இருக்கின்றன. இந்த அமெரிக்க இந்தியர் ஓர் அமெரிக்க வாழ் கிரேக்கரை காதல் மணம் புரிந்துள்ளார். தற்போது இவருக்கு இரண்டு வயது மகன் உள்ளான். எல்லா வெளிநாட்டு வாழ் இந்தியர்களையும் போலவே, அவனுக்குத் தாய்மொழியான வங்காள மொழியையும் தந்தை மொழியான ஸ்பானிசையும் இப்போதிருந்தே கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
----