Monday, February 2, 2015

ஒபாமாவின் இந்தியப் பயணம்: `அமெரிக்காவில் உற்பத்தி செய்தவற்றை’ இந்தியாவிற்குள் விற்பதில் வெற்றி

இந்தியாவின் 66ஆவது குடியரசு தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இப்போதைய மோடி அரசாங்கத்தின் அடிமை புத்தியை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, மிகவும் தள்ளாடித் தடுமாறிக் கொண்டி ருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை நிலைநிறுத்திட, இந்தியாவிலிருந்து என்னவெல்லாம் பெற வேண்டும் என்று விரும்பினாரோ அவை அனைத்தையுமே பெற்றுவிட்டார். 2008ஆம் ஆண்டு வால் ஸ்ட்ரீட் நிலைகுலைந்ததைத் தொடர்ந்து, உலக அளவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட உலக முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து அமெரிக்கா இன்னமும் முழுமையாக மீளவில்லை. அமெரிக்கப் பொருளாதாரம் இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவும் விதத்தில், இந்தியாவின் சந்தை களையும், அதன் வளங்களையும்  தங்கள் கொள்ளை லாப வேட்டைக்கு  அமெரிக்கா முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, மோடி அரசாங்கம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
ஒபாமா மேலும்உலக மேலாதிக்கத் திற்காக, தங்களுடைய ஏகாதிபத்திய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல, இந்தியாவைத் தங்கள் கட்டளை களுக்கு அடிபணிந்து நடந்திடும் ஒரு கூட்டாளியாக மாற்றுவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். குறிப்பாக, சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, தெற் காசிய பிராந்தியத்திலும், பசிபிக் கடல் மார்க்கத்திலும் தங்கள் ஆதிக்கத்தை விரிவாக்கக்கூடிய விதத்தில் முயற்சி களை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார். இந்த அடிப்படையில், ஒபாமா, தன்னு டைய நீண்டநாள் கூட்டாளியாக இருந்து மறைந்த சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் மரணத்திற்கு துக்கம் விசாரிப்பதற்காக தில்லியிலிருந்து, சவுதி அரேபியாவுக்குச் செல்வதற்கு முன்பு, அமெரிக்கா மட்டுமே இந்தியாவின் மிகச்சிறந்த பங்காளியாக’’ இருக்க முடியும்  என்று கூறிச் சென்றிருக்கிறார். 
ஆயினும், ஒபாமா இந்தியாவைவிட்டுப் புறப்படுவதற்குமுன், பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கத்திற்கு மிகவும் வலுவான முறையில் ஒரு குட்டு குட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். தில்லி யில் உள்ள சிரி ஃபோர்ட் அரங்கத்தில் அமெரிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த அரங்கக் கூட்டத்தில்”, ஒபாமா பேசுகையில், “மத அடிப்படையில் பிளவுபடாது இருக்கும்வரைதான் இந்தியா வெற்றிபெறும்,’’ என்று குறிப்பிட்டார்.  மோடி அரசாங்கத்தின் கீழ் மத சகிப்பின்மையும், வெறுப்பும் கட்டவிழ்த்து விடப்பட்டுள் ளதை ஒபாமா மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டதுடன், தன்னுடைய தாயகத்திற்குத் திரும்புவதற்கு முன், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, மார்ட்டின்லூதர் கிங் ஜூனியர் ஆகியோரையும் குறிப்பிட்டு, இந்தியாவின் பலம், அமெரிக்காவைப் போலவே, பல்வேறு வேற்றுமைகளையும் கொண்டாடுவதில் தான் இருக்கிறதேயொழிய, பரஸ்பரம் சகிப் பின்மையை ஊட்டி வளர்ப்பதில் இல்லை என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அதுமட்டுமல்ல, இந்திய அரசமைப் புச் சட்டத்தின் 25ஆவது பிரிவையும் நினைவுகூர்ந்து, இந்தியர்கள் அனைவருக்கும் தங்கள் மதம் குறித்து உரிமை கொண்டாடவோ, நடைமுறைப்படுத் தவோ, பிரச்சாரம் செய்திடவோ உரிமை உண்டு என்பதையும் வலியுறுத்தினார். அவர் மேலும், நம் இரு நாடுகளிலுமே மத சுதந்திரத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு, ஒவ்வொரு நபரின் பொறுப்புமாகும்என்றும் கூறினார். கூட்டத்தினரிடையே அவர் அமெரிக்காவில் அனைத்து இனத்தினருக்கும் இடையே சமத்துவம் மலர்ந்திட நடைபெற்ற நீண்ட நெடிய போராட்டங்களை நினைவுபடுத்திய தோடு, அமெரிக்காவில் அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் வாக்குரிமை மற்றும் தேர்தலில் பங்குபெறும் உரிமையையும் தான் பிறந்ததற்குப் பிறகு ஓராண்டு கழித்துப் பெற்றதை யும் நினைவு படுத்தினார். அவ்வாறு உரிமையை நாங்கள் பெற்றிருக்காவிட்டால், அமெரிக்க ஜனாதிபதியாக நான் இன்றைய தினம் இருக்க முடியாதுஎன்றும் தெரிவித்தார்.
ஆயினும், அவர் தங்கள் ராணுவத் தலையீடுகளின் மூலமாக பல நாடுகளின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அடாவடித்தனமாக மீறியதையோ, உலகம் முழுதும் பல நாடுகளில் அடிப்படை மனித உரிமைகளை மீறி எப்படி அரச பயங்கரவாதத்தைதிட்டமிட்ட முறையில் ஊட்டி வளர்த்தோம் என்பது குறித்தோ எதுவும் கூறாது மவுனமாக இருந்துவிட்டார். அமெரிக்காவின் அரச பயங்கரவாதம்தான் `தனிநபர் பயங்கர வாதத்தைமிகவும் அரக்கத்தனமான முறையில் ஊட்டி வளர்த்து செயல்பட வைத்தது,
அமெரிக்க ஜனாதிபதி இந்த மோடி அரசாங்கத்திடமிருந்து இந்தியச் சந்தைகளில் அமெரிக்க அணு உலைகளை விற்பதற்கும், அமெரிக்க ராணுவத் தளவாடங்களை மிகப் பெரிய அளவில் வாங்குவதற்கும், புதிய பசுமைப் பருவநிலைத் தொழில் நுட்பங்களை  விற்பதற்கும் பல்வேறு ஒப்பந்தங்களை பலவந்தமாய்ப் பறித்தெடுத்துக் கொண்டுவிட்டார். மேலும் கூடுதலாக, பிரதமர் மோடி, அறிவுச் சொத்துரிமை தொடர்பான இந்திய - அமெரிக்க  குழுவினரின் அனைத்து பரிந்துரை களையும் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்திருக்கிறார். இதன் பொருள், நாட்டில் பல அத்தியாவசியப் பொருள்கள், அதிலும் குறிப்பாக பெரும்பான்மை மக்களுக்கு மிகவும் அவசியமான மருந்துகள், இனி அநியாய விலையுள்ளதாக மாறிவிடும் என்பதும், அதன் மூலம் நாட்டு மக்களில் பெரும்பான்மை யோருக்கு அடிப்படை சுகாதார உரிமை மறுக்கப்படும் என்பதுமேயாகும்.
அதுமட்டுமல்ல, ஒபாமா-மோடி இடையே இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் ஊடகங்கள் புளகாங்கிதத்துடன் தெரிவித்துள்ளன. ஒபாமாவும் பிரதமர் மோடியும் கூட்டாக ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, ராணுவம் சாரா அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் நிலவிவந்த முட்டுக்கட்டை நீங்கி விட்டதாகத் திருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந் தத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்ச்சிப்போக்குகளின் காரணமாக ஐமுகூ-1 அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவினை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்டதும் இந்த ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்படும் ஆழமான பாதிப்புகளை அடிப்படையாக வைத்துத்தான், இவை இந்தியாவின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை நிலைப்பாடுகளை அமெரிக்காவின் அனைத்து கட்டளைகளுக்கும் அடிபணிந்து வளைந்து கொடுத்துப் போகக்கூடிய இளைய பங்காளியாக மாற்றுவ தற்கு இட்டுச் செல்லக்கூடிய அளவிற்கு நிர்ப்பந்தங்கள் கொடுக்கக்கூடியவைகளாகும். இந்தியாவின் பொருளாதாரத்தை அமெரிக்க நிறுவனங்களின் கொள்ளை லாப வேட்டைக்குத் திறந்து விடக்கூடிய விதத்தில் இந்தியாவை நிர்ப்பந்திக்கக்கூடியதாகும், மேலும் இந்தியாவை அமெரிக்காவின் ராணுவ மற்றும் கேந்திர வலைப்பின்னலுக்குள் ஈர்த்து, அதன் அனைத்து அடாவடி நடவடிக்கைகளுக்கும் கூட்டாளி யாக மாற்றுவதற்கும் இட்டுச் செல்லக்கூடியதாகும். தற்போது ஒபாமா விஜயத் தின்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தங்கள் இவ்வாறு நாம் ஊகித்த அனைத்து ஆழமான எதிர்மறை விளைவுகளையும் உறுதி செய்திருக் கின்றன.  இவை, நாட்டின் பொருளாதார சுயச்சார்பை எய்திட நாம் மேற்கொண்டு வந்த அனைத்து முயற்சிகளுக்கும், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளுடனும் நாம் இதுநாள்வரை பின்பற்றி வந்த பரஸ்பர அன்பு மற்றும் மரியாதைக்கும் எதிரானவைகளாகும். ஐமுகூ-1 மற்றும் 2 அரசாங்கங்கள் ஆட்சி புரிந்த சமயத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து எதிர்த்திட்ட பாஜக இப்போது மோடி தலைமையில் ஆட்சியில் அமர்ந்தபின் முன்னிலும் பன்மடங்கு வேகமாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுத்திருப்பது துரதிர்ஷ்ட வசமானதாகும்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படுவதற்காகக் கொண்டுவரப்பட்ட ராணுவம் சாரா அணுசக்தி பொறுப்புச் சட்டமுன்வடிவில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மூன்று முக்கியமான அம்சங்கள் குறித்து சச்சரவுகள்  இருந்தன. முதலாவது பிரச்சனை, அணு உலைகளில் துரதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்புகளில் அணு உலைகளை விநியோகம் செய்த அமெரிக்க நிறுவனத்தையும் இணைப்பதாகும். இந்தப் பிரச்சனையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் நடத்தப்பட்ட நீண்ட நெடிய போராட்டத் தில்இடதுசாரிக் கட்சிகளுடன் பாஜகவும் இணைந்து நின்றது. இப்போராட்டத்தின் விளைவாக மன்மோகன் சிங் அரசாங்கம் மேற்படி சட்டமுன்வடிவில் 17(பி) என்னும் பிரிவினை இணைத்தது. இதன் மூலம் அவ்வாறு துரதிர்ஷ்டவசமாக அணு உலை விபத்து ஏற்படின் அதனை விநியோகித் தவர்களுக்கும் பொறுப்பு நிச்சயிக்கப்பட்டது.  இதனை பெரிய அளவில் இயங்கும் அமெரிக்க நிறுவ னங்கள் ஏற்க மறுத்தன.  உற்பத்தி செய்கையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும்கூட, ஏற்க முடியாது என்றும், இவற்றை இயக்குபவர்தான் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன. இயக்குபவர் என்பதன் பொருள் இந்தியாவின் தரப்பில் மத்திய அரசுதான், அதன்கீழ் இயங்கும் அணுஎரிசக்தித் துறைதான் முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும் என்பதேயாகும். இது குறித்து மேற்படி சட்டத்தின் 6ஆவது பிரிவில் விவரமாகக் குறிப்பிட்டிருப்பதுடன்உச்சபட்ச வரம்பு 1500 கோடி ரூபாய் என்றும் நிர்ணயம் செய்திருக்கிறது.
இரண்டாவது பிரச்சனை, இந்தியாவிற்கு அளித்திடும் அணுசக்தி உபகர ணங்கள் அனைத்தையும் நம் நாட்டிற்குள் அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதற்காக துஷ்பிரயோகம் செய்யப்படாமல் இருக்கிறதா என்பதை உத்தரவாதம் செய்வதற்காக கண்காணிக்கும் வேலையையும் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தி, வலியு றுத்தி வந்தது. இப்போது, அமெரிக்க சர்வதேச அணுசக்தி ஏஜென்சி ஆய்வுகள் போதுமானவை என்று ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
மூன்றாவது பிரச்சனை, 46ஆவது பிரிவு சம்பந்தப்பட்டதாகும். இச்சட்டப் பிரிவு, அணு விபத்து ஏற்படின், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டரீதியாக வழக்கு தொடுப்பதற்கான உரிமையை அளிக்கிறது.   அணு விபத்தில் பாதிக்கப்படு பவர்கள், அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எதையும் எடுக்கமாட்டார்கள் என்று இந்தியா வின் அட்டர்னி ஜெனரல் ஓர் உறுதி மொழியை அளிப்பார் என்று இந்தியாவின் சார்பாக அமெரிக்காவிற்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. சட்டத்தின்கீழ் நிச்சயமாக இது நிலைக்கத்தக்கதல்ல. இந்த உறுதிமொழி எப்படி காரிய சாத்தியமாகும் என்பது இதுவரையிலும் புரியாத புதிராகவே நீடிக்கிறது.
தற்போது இரு அரசுகளுக்கும் இடை யேயான நன்னிலை உணர்வு எப்படி இருந்தபோதிலும், ஒபாமா - மோடி கூட்டு அறிக்கையில், “பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்; அனைவ ருக்கும் முன்னேற்றமே’’ என்று தெரிவித்திருப்பதுடன், ராணுவம் சாரா அணுசக்தி ஒப்பந்தம் குறித்து, அறிக்கையின் இறுதியில் ஒரு சிறிய பத்தி மட்டுமே (பத்தி 43) காணப்படுகிறது. அதில், “இருநாடுகளின் ராணுவம் சாரா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக, 2014 செப்டம்பரில் அமைக்கப்பட்ட இரு நாடுகளின் தொடர்புக்குழு டிசம்பரிலும், ஜனவரியிலும் மூன்று முறை கூடின. ராணுவம்சாரா அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக, ராணுவம் சாரா அணுசக்தி பொறுப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் குறித்த பிரச்சனைகள் மீது தொடர்புக் குழுவினரின் புரிந்துணர்வுகளை தலைவர்கள் வரவேற்றுள்ளார்கள்.  இந்தியாவில் அணுஎரிசக்தி பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் உருவாக் கப்பட்ட அணு உலைகளின் பங்களிப்பு மிகவிரைவில் மிகவும் மகிழ்வுடன் எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதற்குமேல் எவ்வித விவரங்களும் இல்லை.
ராணுவம்சாரா அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பான சட்டமுன்வடிவு 2010இல் தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் அமெரிக்காவின் பொறுப்பு குறித்து சேர்க்க வேண்டும் என்று இடதுசாரிகள் முன்மொழிந்த திருத்தத்தை அப்போதைய பாஜக முழுமையாக ஆதரித்தது. மக்களவையில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, இன்றைய அயல்துறை விவகாரங்களுக்கான அமைச்சர், இப்பிரச்சனை மீது மன்மோகன்சிங் அரசாங்கத்தைக் கடுமையாகக் குறை கூறினார். பிரதமர் தன் சொந்த கவுரவத்திற்காக நாட்டின் இறையாண்மைக்கு இரண்டகம் செய்துவிட்டார்,’’ என்று குறிப்பிட்டார். அதேபோன்று, அப்போது மாநிலங்களவையில் பாஜகவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரும், இன்றைய நிதியமைச்சரும், (அவர் ஒரு வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது) இந்தச் சட்டமுன்வடிவின் 46ஆவது பிரிவு விபத்தில் பாதிக்கப்படும் நபர் பெரிய அளவில் இழப்பீடு கோரி நீதிமன்றங்களை அணுகுவதற்கு வகை செய்கிறது’’ என்று அழுத்தமாகக் கூறினார். இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை என்றும் இதனை எவரும் மறுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.  மோடி அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், 2014 செப்டம்பர் 8 அன்று அயல்துறை விவகாரங்களுக்கான அமைச்சர், “போபால் துயரம் போன்று அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவங்கள் நடந்துள்ளன. அதனால்தான் அணுசக்தி பொறுப்புச் சட்டத்தில் அவற்றை விநியோகிப்பவர்களுக்குப் பொறுப்பு ஏற்கனவே சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனைத் திருத்தி சட்டமுன்வடிவு எதனையும் நாங்கள் நிறைவேற்ற மாட்டோம்.  ... அதிபர் ஒபாமா முன்னிலையில் எங்கள் நிலையை நாங்கள் மீளவும் வலியுறுத்துவோம் என்றே நான் நினைக்கிறேன். இந்தத் தடவை ஒரு வலுவான அரசாங்கம் ஒபாமாவிடம் பேசிக்கொண்டு இருக்கும். அது அனைத்து வித்தியாசங்களையும் சரிசெய்திடும்,’’ என்றார்.  இவர் கூறிய இந்த வலுவான அரசாங்கம்’’தான் இப்போது அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டதாகத் தோன்றுகிறது.
மோடி அரசாங்கம், அமெரிக்கா உற்பத்தி செய்த அணுஉலைகளின் காரணமாக விபத்த ஏற்பட்டால், அதன் பொறுப்புகளிலிருந்து அமெரிக்கா தப்பித்துக் கொள்வதற்குத் தேவையான சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்துவிட்டதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏதேனும் விபத்து ஏற்படின் அதற்கான பொறுப்புகளை இந்தியாவின் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 750 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலும், அரசாங்கத்தின் பொறுப்புகள் 1500 கோடி ரூபாய் வரைக்கும் நீட்டிக்கக்கூடிய விதத்திலும் சட்டத்தின் 17(பி) பிரிவு மாற்றியமைக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  இதற்கான இன்சூரன்ஸ் பிரிமியம் தொகைகளைக்கூட இந்தியாவே அளித்திட இருக்கிறது. இதன் பொருள் என்ன? ஏற்கனவே இச்சட்டத்தின்படி இழப்பீட்டிற்கான உச்சவரம்புத் தொகை 1500 கோடி ரூபாய் என்றும் அதனை அணுஉலைகளை இயக்குபவர் -  அதாவது இந்திய அரசு - ஏற்க வேண்டும் என்றும் இருந்ததுஅமெரிக்கா அளித்திட்ட உபகரணங்கள்தான் விபத்திற்குக் காரணம் எனில், பின் இந்த இன்சூரன்ஸ் பாலிசிக்கான உச்சவரம்பை  மேலும் 1500 கோடி ரூபாய்க்கு உயர்த்துவதற்கு வகைசெய்யப்பட்டிருக்கிறது.  இவ்வாறு விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான முழுப் பொறுப்பும் இந்திய அரசாங்கத்திற்கும், மக்களின் வரிப்பணத்தால் இயங்கி வருகின்ற இந்தியாவில் உள்ள பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குமே பொறுப்பு என்கிற முறையில் அனைத்தும் மாற்றப்பட்டுவிட்டன.  அமெரிக்க கார்ப்பரேட்டுகள் அனைத்துவிதமான பொறுப்பு களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.  விபத்து, அமெரிக்கா அளித்த குறைபாடுகளுடன் கூடியதான அணுஉலைகளால்தான் ஏற்பட்டது என்றாலும்கூட இனி அமெரிக்க நிறுவனங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது.
இவ்வாறு, இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் தொடர்பாக இருந்துவந்த பிரச்சனைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது’’ என்பதன் பொருள் இந்தியா, அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்துவிட்டது என்பதேயாகும்.  1979இல் அமெரிக்காவின் மூன்று மைல் தீவு விபத்து (three-mile island accident)க்குப் பின்னர் அமெரிக்காஅணு உலைகள் எதற்கும் ஆர்டர்கள் தராததன் காரணமாக தவித்துக் கொண்டிருந்த ஜிஇ-ஹிடாச்சி, வெஸ்டிங்ஹவுஸ் (GE-Hitachi, Westinghouse) போன்ற அமெரிக்க கார்ப்பரேட்டுகள் இப்போதைய ஏற்பாட்டை’’ நன்கு பயன்படுத்திக்கொள்வார்கள். உலகப் பொருளாதார நெருக்கடி தொடர்வதன் மத்தியில்இந்திய அரசு மற்றும் இந்திய மக்களின் வரிப் பணத்தின் மூலமாக, அமெரிக்கா  தன் பொருளாதாரத்தை மீட்டுக் கொள்வதற்கும் இது உதவும்.
இந்தியா, “தூய்மையான எரிசக்தி’’ நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்ற பெயரில் இத்தகைய மோசமான நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான சாக்குப் போக்குகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கூட்டு ஊடகவியலாளர் கூட்டத்தின்போது ஒரு செய்தியாளர், “பருவநிலை மாற்றம் (climate change) குறித்து அமெரிக்கா-சீனா ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதால், அதேபோன்றதொரு ஒப்பந்தத்தை இந்தியாவும் மேற்கொள்ளவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறதா,’’ என்று கேட்டபோது, பிரதமர் மோடி, அமெரிக்காவிடமிருந்தோ அல்லது சீனாவிடமிருந்தோ எவ்விதமான நிர்ப்பந்தமும் இல்லை என்றும், மாறாக தூய்மையான எரிசக்தியை நோக்கி முன்னேற வேண்டும் என்று இந்தியாவின் எதிர்கால சந்ததியினரிடமிருந்துதான் நிர்ப்பந்தம் வந்திருக்கிறது என்றும் பதிலளித்திருக்கிறார்.  அமெரிக்கா-சீனா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா   2030ஆம் ஆண்டு வாக்கில் தலைக்கு 12 டன்கள் கார்பன் உமிழப்படுவதை (carbon emission) குறைத்துக்கொள்வதாக (தற்போது அது தலைக்கு 16.4 டன்கள் என்ற அளவில் இருந்துவருகிறது) ஒப்புக்கொண்டுள்ள அதே சமயத்தில், சீனா தற்போதுள்ள தலைக்கு 7.1 என்றிருப்பதை 12க்கு மேல் செல்லாமல் பார்த்துக்கொள்வதாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுபோன்று எந்தவொரு உறுதிமொழியையும் அமெரிக்காவிடமிருந்து பெறாமல், கார்பன் உமிழ்தலைக் குறைப்பது தொடர்பாக அமெரிக்கா பிறப்பித்துள்ள கட்டளையை இந்தியா அடிபணிந்து ஏற்றுக் கொண்டிருக்கிறது. உண்மையில் உலக அளவில் மொத்தம் உமிழப்படும் கார்பனில் நம் நாட்டில் உமிழப்படுவது வெறும் 2.2 சதவீதம்தான். ஆனால் அதேசமயத்தில் அமெரிக்காவில் இது 29.3 சதவீதமாகும்.  இவ்வாறு ஒப்புக் கொண்டிருப்பதற்காக, இந்தியா அமெரிக்க நிறுவனங் களிடமிருந்து மிகவும் அதிக விலை கொடுத்து `பசுமைத் தொழில்நுட்பங்களையும் (`green technologies’) வாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறு செய்வதன்மூலமும் அமெரிக்காவின் பொருளாதாரம் மீட்சி பெற இந்தியா உதவி இருக்கிறது.
கார்பன் உமிழ்தல் தொடர்பாக ஒருதலைப்பட்சமாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளபோதிலும், அணுசக்தியைப் பொறுத்தவரை இந்தியா, அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கவிருக்கும் அணு உலைகள்  இன்றையதினம் உலகில் எந்த நாட்டிலும் உபயோகப் படுத்தப்படவில்லை. எனவே, அவற்றின் நம்பகத்தன்மை குறித்தும், அவற்றினால் இழப்பு ஏற்படக்கூடிய நிலை குறித்தும் மதிப்பீடு செய்திட சாத்தியக்கூறுகளே  இல்லை.   மேலும் அமெரிக்க அணுஉலைகளால்  ஒரு மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான செலவுத்தொகை சுமார் 20 முதல் 25 கோடி ரூபாய்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் சமீபத்திய கார்பன் உமிழ்தல் வரையறைத் தொழில்நுட்பங்களுடன் கூடிய அனல் மின் திட்டங்கள் (thermal power projects with the latest carbon emission limiting technologies)மூலம் இதற்கான செலவுத் தொகை வெறும் 5 முதல் 7 கோடி ரூபாய்கள் மட்டுமேயாகும்.  நம்முடைய வாய்ப்பு வளங்களை நாம் முழுமையாகப் பயன்படுத்தினோமானால் அனல் மின்திட்டங்கள் மூலம் மின் உற்பத்தியை மேலும் குறைந்தசெலவில் நம்மால் செய்திட முடியும். தூய்மையான எரிசக்தி’’க்காக கூடுதல் செலவு செய்ய மோடி அரசாங்கம் விரும்பியபோதிலும், அந்நிய அணு உலைகளை நாம் வாங்க வேண்டியது தேவையா?
அணு சக்தி முறைப்படுத்தல் வாரியத்தின் (Atomic Energy Regulation Board) முன்னாள் தலைவர் டாக்டர் ஏ. கோபாலகிருஷ்ணன், 700 மெகா வாட் அழுத்தம் அளிக்கப்பட்ட கனநீர் உலைகள் (700 ஆறு pressurised heavy water reactors)  நாம் உருவாக்கி இருக்கிறோம் என்றும், அவற்றை 900 முதல் 1000 மெகா வாட் அளவிற்கு விரிவாக்கிட முடியும் என்றும் இவற்றின் செலவு இறக்குமதி செய்யப்படும் உலைகளை விட 30 - 50 சதவீதம் வரைக்கும் குறையும் என்றும் வாதிடுகிறார்.  இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட,’’ (“Made in India”) பொருள்களை வாங்கி ஊக்குவிப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, இதனை நம் செலவில், நம் வரிப்பணத்தின் மூலம்நம் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்பதற்காகசெய்து கொண்டிருக்கிறது.  
மேலும், நம் நாட்டிலேயே அணுசக்தி தொழில்நுட்பங்களை மிகப் பெரிய அளவிற்கு வளர்த்து முன்னெடுத்துச் செல்ல முடியும், மிக அதிக விலை கொடுத்து தோரியம் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, நம் நாட்டில் கிடைக்கக்கூடிய இயற்கையான யுரேனியத்தை செறிவூட்டுவதன் மூலமும்செலவிடப்பட்ட எரிபொருள்களிலிருந்து புளுடோனியம் வடித்தெடுத்தல் மூலமும் மீளவும் பயன்படுத்தி, இதனைச் செய்திட முடியும்.  இ.என்.ஆர். (ENR) என்று அழைக்கப்படும் இத்தகைய தொழில்நுட்பங்கள் இந்தியாவில் பயன்படுத்துவது சாத்தியமே. அணு ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடுகள் இந்தியாவை ஒதுக்கி வைத்திருந்ததிலிருந்து ஒரு முறிவினை ஏற்படுத்திக் கொண்டு நாம் இதில் முன்னேற முடியும். (2008 செப்டம்பரில்) நாடாளுமன்றத்தில்  பிரதமர் மன்மோகன் சிங் இந்தத் தொழில்நுட்பங்கள் இப்போது நமக்குக் கிடைப்பதற்கான உறுதிமொழியை அளித்தார். ஆயினும், அதனைத்தொடர்ந்து இரு மாதத்திற்குள், அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் காரணமாக, அணு விநியோகக் குழு (Nuclear Suppliers Group) இ.என்.ஆர். தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்குக் கிடைக்கமுடியாதபடி தங்களுடைய விதிகளை மாற்றியமைத்துக்கொண்டு விட்டது. இதுதான் அமெரிக்காவின் இழி நடைமுறையாகும்.
அதிபர் ஒபாமா இந்தியாவிற்குக் கடன்கள் மற்றும் முதலீடுகள் என்ற பெயரில்  4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாகத்தர ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அவரைப் பாராட்டி, பாராட்டுப்பத்திரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை கவனத்திற்கொள்ளாத பல துறைகளிலும்’’ வர்த்தகத்தைப் பெருக்கிட முடியும் என்றும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.   இந்த 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எதற்காக அவர் கொடுக்கிறார் என்பதைச் சற்றே நுணுகி ஆராய்வோம். அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கி 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க உற்பத்திப்பொருள்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நிதி உதவி அளித்திடும். அமெரிக்க ஓவர்சீஸ் பிரைவேட் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் இந்தியக் கிராமப்புறங்களில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமெரிக்கத் தொழில்நுட்பங்களை வாங்குவதற்காக 1 பில்லியன் டாலர்கள் கடன் வழங்கும்.  அமெரிக்க வர்த்தக மற்றும் வளர்ச்சி ஏஜன்சி (US Trade and Development Agency)  மரபுசாரா எரிசக்தித்துறையில் இந்தியா புதிய அமெரிக்கத் தொழில்நுட்பங்களை வாங்குவதற்காக 2 பில்லியன் டாலர்கள் அளித்திடும். வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், இந்த 4 பில்லியன் அமெரிக்க டாலர்களும் இந்தியாவிற்குள் அமெரிக்கப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கான ஓர் ஏற்பாடுதான்.  
இவ்வாறு, அணுசக்தி, பருவநிலை  தொழில்நுட்பங்கள் மற்றும் ராணுவம் சம்பந்தமான உற்பத்தி (இதற்காக அடுத்து பத்தாண்டுகளுக்கான இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் புதிப்பிக்கப்பட்டிருக்கிறது) ஆகியவற்றில் இந்திய சந்தைக்குள் அமெரிக்க நிறுவனங்கள் நுழைவதற்கு பிரதமர் மோடி மிக விரிவான அளவில் வசதி செய்து கொடுத்திருக்கிறார். இதன் மூலமாக நலிவடைந்துள்ள அமெரிக்கப் பொருளாதாரம் அதிலிருந்து மீள்வதற்குப் பெரிய அளவில் பங்களிப்பினைச் செய்திருக்கிறார். மேலும் கூடுதலாக, தெற்காசியா மற்றும் பசிபிக் பெருங்கடல் பிராந்தியங்களில் அமெரிக்கா  மேற்கொள்ளும் அனைத்து ராணுவ மற்றும் போர்த்தந்திர நடவடிக்கைகளிலும் அமெரிக்காவின்  கட்டளைகள் அனைத்தையும் தலையாட்டி ஏற்றுக்கொள்ளக்கூடிய   இளைய பங்காளியாகவும் இந்தியாவை மாற்றி இருக்கிறார்.
பிரதமர் மோடியின் இந்தியாவில் உற்பத்தி (செய்தது) செய்க’’ என்னும் கோஷம் இவ்வாறு நாட்டு மக்களைத் திசைதிருப்பும் வேலையேயாகும். எதார்த்தத்தில், இது அமெரிக்காவில் உற்பத்தி செய்த’’ பொருள்களை விற்பதற்கான ஒன்றேயாகும். இத்தகைய பிரச்சாரங்கள் இந்த மோடி அரசாங்கத்தின் அபிலாசைகளை மூடிமறைத்து, இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமைக்கூட்டாளியாக மாற்றுவதற்கான முகமூடியே யாகும்.
(ஜனவரி 28, 2015)
தமிழில்: ச.வீரமணி