Saturday, June 24, 2017

இறந்த ஜுனைத் பெற்றோருக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆறுதல்புதுதில்லி, ஜூன் 24-
மதவெறியர்களால்  கொலை செய்யப்பட்ட ஜுனைத் பெற்றோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், முகமது சலீம், எம்.பி., ஹரியானா மாநில செயலாளர் சுரீந்தர் மாலிக், தில்லி மாநில செயற்குழு உறுப்பினர் ஆஷா ஷர்மா, சத்பீர் சிங் மற்றும் உள்ளூர் தலைவர்கள் ஆகியோரடங்கிய தூதுக்குழுவினர்,  இரு நாட்களுக்கு முன் தில்லி – மதுரா உள்ளூர் ரயிலில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு ஆளாகிக் கொல்லப்பட்ட ஜுனைத், காயங்கள்  அடைந்த ஷகீர் மற்றும், ஹசிம் ஆகியோரின் ஹரியானா மாநிலம் கந்தாவ்லி கிராமத்திற்குச் சென்றனர்.
கொலை செய்யப்பட்ட மற்றும் காயங்கள் உற்றவர்களின்  தந்தை ஜலாலுதீன் மற்றும் தாயர் சைரா ஆகியோரிடமும் மற்றும் அவர்தம் குடும்பத்தாரிடமும் தூதுக்குழுவின் ஆறுதல் கூறினார்கள்.
இறந்தவரின் தாயார் சைரா, தூதுக்குழுவினரிடம்,  பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் குழந்தைகளை படிக்க வைத்ததாகவும், இறந்த ஜுனைதா (வயது 15) சூரத்தில் மதர்சா பள்ளியில் சமீபத்தில்தான் படிப்பை முடித்து, தேர்வில் தேர்ச்சி அடைந்திருந்ததாகவும், இதனைக் கொண்டாடும் விதத்தில் அவர் தன் புதல்வர்களிடம் 1500 ரூபாய் கொடுத்து துணிமணிகள் வாங்கி வருமாறு கேட்டுக்கொண்டதாகவும் மிகுந்த துயரத்திற்கிடையே கூறினார். மேலும் தற்சமயம் தன் பையன்கள் ரம்சான் நோன்பு இருந்து வருவதால் தண்ணீர்கூட அருந்தாமல் பயணம் செய்து வந்துள்ளார்கள் என்றும் அந்த சமயத்தில்தான் அவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அழுதபடியே தெரிவித்தார்.
நடந்துள்ள இக்கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை அரசுத்தரப்பிலிருந்தோ அல்லது ஆளும் கட்சித்தரப்பிலிருந்தோ எவரொருவரும் இவர்களை வந்து சந்திக்கவில்லை என்பதையும் தூதுக்குழுவினர் கேட்டறிந்தனர்.  இறந்தவரின் தந்தையும் சகோதரர்களும் காவல்நிலையத்திற்கு பலமுறை அழைக்கப்பட்டு அவர்கள் சென்று வந்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ரயிலில் முஸ்லீம்கள் போன்று தலையில் குல்லாய் வைத்துக்கொண்டோ அல்லது தாடி வைத்துக்கொண்டோ எவரேனும் தில்லிக்குப் போய்வந்தால் அவர்களை ஒரு குழு வெறித்தனத்துடன் கெட்டவார்த்தைகளைக் கூறித் திட்டுவதனைக் குறியாகக் கொண்டுள்ளனர் என்று தூதுக்குழுவினரிடம் சொல்லப்பட்டது.
முஸ்லீம்கள் ரயில்பெட்டிகளுக்குள் நுழையும்போது அவர்களை வசைபாடக்கூடிய விதத்தில்  மைக்குகளில் ஒலிபரப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டது. இவ்வாறு முஸ்லீம்களைத் துன்புறுத்துவது வழக்கமாகியிருக்கிறது என்றும், எனவே முஸ்லீம்கள் பயந்து கொண்டே பயணம் செய்யும் நிலை உருவாகியுள்ளது என்றும் பலர் தூதுக்குழுவினரிடம் தெரிவித்தார்கள். பலதடவைகள் இவை தொடர்பாக காவல்துறையினரிடம் முறையீடுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அவர்களால் கண்டுகொள்ளப்படவில்லை.
இந்தக் குறிப்பிட்ட நிகழ்வும் முழுக்க முழுக்க மதவெறி அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. எப்படி ஆயுதந்தாங்கிய நபர்கள் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள் என்பது நம்முன் உள்ள கேள்வியாகும். தாக்கியவர்கள் அனைவருமே பெரிய பெரிய கத்திகளை வைத்திருந்திருக்கிறார்கள். இவ்வாறு தாக்குதல் தொடுத்தபோது அவர்கள் இதர பயணிகளையும் தங்களுடன் சேர்ந்துகொள்ளுமாறு அவர்கள் நிர்ப்பந்தித்திருக்கிறார்கள். கூட்டம் அதிகமாகவுள்ள ஒரு ரயிலில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது என்றால் நிச்சயமாக அந்தக் கயவர்களுக்கு ஆளும் கட்சியினரின் ஆதரவு இல்லாமல் இருக்க முடியாது என்பது தெளிவாகும்.
பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வை முஸ்லீம்கள் மத்தியில் ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக சங் பரிவாரக்கூட்டத்தினர் இத்தகைய சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள் என்றும், இதற்காக நச்சுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.  இவர்கள் முழக்கமான “எல்லோருடனும், எல்லோருடைய வளர்ச்சிக்காகவும்” என்பதன் எதார்த்தமான பொருள் இதுதான்.
இக்கொடூரமான கொலைபாதக சம்பவத்திற்குக் காரணமான கயவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், அக்கயவர்களுக்கு உள்ள அரசியல் தொடர்புகளையும் அடையாளங்காட்டிட வேண்டும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும், உள்ளூர் ரயில்களில் பயணிகளுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும் ஷகீர் மற்றும் ஹசீம் ஆகிய இருவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.
இதற்கு எதிராகவும், இதுபோன்ற இதர நிகழ்வுகளுக்கு எதிராகவும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன இயக்கங்களை நடத்திடும்.
இவ்வாறு  அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(ந.நி.)

Friday, June 23, 2017

முஸ்லீம் குடும்பத்தினர் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்


முஸ்லீம் குடும்பத்தினர் மீதான தாக்குதல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
புதுதில்லி, ஜூன் 24-
தில்லிக்கு அருகே உள்ளூர் ரயிலில் பயணம் செய்த முஸ்லீம் சகோதரர்கள் மீது இந்து மதவெறியர்கள் தாக்குதல் தொடுத்ததில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார், இருவர் காயங்கள் அடைந்துள்ளனர். இந்தக் கொடிய சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“ஜுனைத் (வயது 15), ஷகீர் (வயது 22) மற்றும் அவரது மூன்றாவது சகோதரர் ஹசீம் ஆகிய மூன்று முஸ்லீம் சகோதரர்களும் சூரத்தை சேர்ந்தவர்கள். தில்லி வந்து ஈத் பெருவிழாவிற்காக துணிகள் வாங்கிக்கொண்டு தங்கள் ஊருக்கு ரயிலில் திரும்பி இருக்கின்றனர். துக்ளகாபாத் ரயில் நிலையத்தில் ஏறிய சில மதவெறியர்கள் இவர்களை அசிங்கமானமுறையில் திட்டத் தொடங்கி இருக்கின்றனர். இதற்கு இவர்கள் ஆட்சேபம் தெரிவித்தபோது, இவர்களை மதவெறியுடன் கத்திக்கொண்டே கொடூரமானமுறையில் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் ஜுனைத் ரயிலிலேயே இறந்துவிட்டார். பின்னர் மதவெறியர்கள் ஷகீரின் தாடியைப் பிடித்து  இழுக்கத் தொடங்கி இருக்கின்றனர். அவரை மூன்று இடங்களில் கத்தியால் குத்தி இருக்கின்றனர். அடுத்து ரயில் பல்லாப்காரில் நின்ற  போது கடுமையாகத் தாக்குதல்களுக்கு உள்ளான இவர்களை ரயிலிலிருந்து இறங்குவதற்கும் அனுமதித்திடவில்லை.   பின்னர் அவர்களை ரயிலிலிருந்து வெளியே தூக்கி எறிந்திருக்கின்றனர். அதன் பின்னர் சிலர் அவர்களின் நிலைகண்டு அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.
பாஜக-ஆர்எஸ்எஸ்  ஆட்சி மதவெறியர்களின் கலக நடவடிக்கைகளுக்கு இட்டுச்சென்றுகொண்டிருக்கிறது என்பதையே மதவெறியுடன் நடந்துள்ள இக்குற்றச்செயல் காட்டுகிறது. முஸ்லீம்களுக்கு எதிராக இதுபோன்ற வன்முறை நிகழ்வுகள் ரயில்களில்  ஏற்கனவே நடந்திருக்கின்றன.  ஆயினும் அவ்வாறு குற்றநடவடிக்கைகளில்  ஈடுபட்டவர்களுக்கு எதிராக, நாட்டில் சட்டத்தின்  ஆட்சியை உயர்த்திப்பிடித்திட அரசாங்கம் முன்வரவில்லை. இவ்வாறு ஆட்சியாளர்கள் மதவெறி வெறுப்புக் குற்றங்கள் வளர்வதனை நேரடியாகவே ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தில்லியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள  தாக்குதல்களுக்கு உள்ளானவர்களையும் அவர்தம் குடும்பத்தாரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், முகமது சலீம்,எம்.பி., மற்றும் தில்லி மாநில செயற்குழு உறுப்பினர் ஆஷா ஷர்மா ஆகியோர் சந்தித்தனர். இந்த சம்பவம் குறித்து எதுவும் கூறாது கேளாக் காதினர் போன்று அமைதியுடன் இருந்திடும் ஆட்சியாளர்கள் இருப்பதும், குறிப்பாக பிரதமர் மற்றும் உள்துறை  அமைச்சர் இருப்பதும்,  பாதிப்புக்குள்ளான குடும்பத்தினரைச் சந்திக்கு இதுவரை ஓர் அதிகாரி கூட  வந்து விசாரிக்காததும் வெட்ககரமானதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.
இக்குற்றச்செயலில் ஈடுபட்ட மதவெறியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோருகிறது. இவ்வாறு நடைபெறும் மதவெறிக் குற்றங்களுக்கு எதிராக, அதுவும் பொது இடங்களில் நடைபெறுவதற்கு எதிராக உரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுவாக எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் கட்சி  அறைகூவி அழைக்கிறது.”
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.)

Tuesday, June 20, 2017

வராக்கடன் பாக்கிவைத்துள்ள கார்ப்பரேட்டுகளுக்கு மோடி அரசாங்கம் வரப்பிரசாதம்

இந்தியாவின் வங்கி அமைப்புமுறை ஒருகாலத்தில் மிகவும் சிறப்பாக இருந்தது. 2008ஆம் ஆண்டு, உலகம் முழுதும் நிதி நெருக்கடியால் சிக்கித்தவித்த காலத்தில்கூட இந்தியாவின் வங்கிகள் எவ்விதமான பிரச்சனைகளும் இன்றி, மிகவும் வலுவான நிலையிலேயே, நிலைத்து நின்றன. ஆனால் அவற்றின் இன்றைய நிலை, குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் நிலைமிகவும் பரிதாபமாகும். கார்ப்பரேட்டுகள் தாங்கள் வாங்கிய கடன்களை அவற்றிற்குத் திருப்பிச்செலுத்தாமல் அவற்றை செயல்படா சொத்துக்களாக (NPA—Non-performing Assets), வராக்கடன்களாக மாற்றியிருப்பதன் காரணமாக, மிகவும் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. இதுவங்கித்துறையின் எதிர்காலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
கடந்த மூன்றாண்டுகளில், மத்தியில் பாஜக தலைமையிலான மோடி ஆட்சியின்கீழ், வங்கிகளின் வராக்கடன்கள் மதிப்பு மும்மடங்கு ஆகியிருக்கிறது. 2.3 லட்சம் கோடி ரூபாய்களாக இருந்தது, 6.8 லட்சம் கோடி ரூபாய்களாக மாறியிருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் இன்றைய செயல்படா சொத்துக்களாக மாற்றப்பட்டுள்ள வராக்கடன்களின் மதிப்பு  அவை அளித்துள்ள கடன்களின் மதிப்பில் 11 சதவீதமாகும். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அவை அதிகமாகும்.
இந்தியாவில் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச்செலுத்தாது இருப்பதுதான் வங்கிகளின் செயல்படா சொத்துக்கள் பெருகியிருப்பதற்கு முக்கிய காரணமாகும். நாடாளுமன்றக் கணக்குக் குழுவின் தலைவரான கே.வி.தாமஸ் நாடாளுமன்றத்தில் அளித்த அறிக்கையின்படி, வங்கிகளின் செயல்படா சொத்துக்களில் 70 சதவீதம் விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களேயாகும்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இவ்வாறு செயல்படா சொத்துக்கள் உருவாவதற்கு முந்தைய ஐமுகூ அரசுதான் காரணம் என்று சொல்லி நழுவப்பார்த்தார். ஐமுகூ அரசு காலத்தில் கொடுக்கப்பட்ட கடன்கள்தான் இன்றைய அரசின் காலத்தில் செயல்படா சொத்துக்களாக மாறி இருக்கின்றன என்று கூறினார். ஐமுகூ அரசாங்கம், கார்ப்பரேட்டுகளிடம் மிகவும் தாராளமாக நடந்து கொண்டது என்பது உண்மைதான். ஆனால் பாஜக அரசாங்கம் அவர்களையும் மிஞ்சிவிட்டது.
இதன்காரணமாக இவ்வாறு கடன் வாங்கிவிட்டு கட்டாத கார்ப்பரேட்டுகளுக்கு மேலும் இதே வங்கிகளால் கடன்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு கடன் வாங்கிவிட்டு பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றிய பேர்வழிகளில் விஜய் மல்லய்யா மிகச் சரியான உதாரணமாகும்இதன் பின்னனில் மோடிக்கு மிகவும் வேண்டியவரான அதானியின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள நிறுவனங்கள்  பொதுத்துறை வங்கிகளுக்கு அளிக்கவேண்டிய தொகை இன்னமும் அதிகமாகும். சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாயை அதானி பொதுத்துறை வங்கிகளுக்கு அளித்திட வேண்டும்.  இந்தப் பேர்வழிக்குச் சொந்தமான விமானத்தில்தான் பிரதமர் மோடி உலகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
பாஜக அரசாங்கம் மத்தியில் அமைந்தபின்னர், அதானிக்குச் சொந்தமான இரு மின்சாரம் உற்பத்தி செய்திடும் நிறுவனங்களுக்கு பொதுத்தறை வங்கிகளிலிருந்து 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு கடன்கள் அளிக்கப்பட்டன. இந்த இரு நிறுவனங்களும் இந்தத் தொகைக்கான வட்டியைக் கட்டக்கூடிய அளவிற்குக்கூட உற்பத்தியை உருவாக்காத நிலையிலேயே இவ்வாறு கடன்கள் அளிக்கப்பட்டன. இவ்வாறு கடன் வழங்கும்போது, இந்நிறுவனங்கள் இதற்கு முன் வாங்கிய கடன் தொகையையும் இப்புதிய கடனுடன் சேர்த்து, இத்தொகையை மேலும் பத்தாண்டுகள் கழித்து வழங்கினால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனங்கள் இக்காலகட்டத்தில் இதற்கான வட்டியைக் கூட கட்ட வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்றே, மோடிக்கு மிகவும் வேண்டியவரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான நிறுவனமான ரிலயன்ஸ் கேஸ்  டிரான்ஸ்போர்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்திற்கான பழைய கடனையும் சேர்த்து புதிதாக 4,500 கோடி ரூபாய் புதுக்கடனாக அளிக்கப்பட்டு அதனைத்திருப்பிச் செலுத்தும் காலத்தையும் பத்தாண்டுக்கும் மேலாக நீட்டித்துள்ளது.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் அறிக்கையின்படி, இவ்வாறு செயல்படா சொத்துக்கள் மற்றும் வராக்கடன்களில் பெரும்பாலானவை ரிலையன்ஸ், அதானி மற்றும் வேதாந்தா ஆகிய கார்ப்பரேட்டுகளுக்குச் சொந்தமானவைகளாகும். வேதாந்தா என்பவரின் நிறுவனம்தான், ஒடிசாவில் விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை, தன்னுடைய தொழிற்சாலைகளை அமைப்பதற்காக பறித்துக்கொண்டதாகும்.  
இவ்வாறு இந்நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில் அதே நிறுவனங்களுக்கு இக்கடன்களோடு மேலும் கடன்கள் வழங்கப்பட்டு அவை மாற்றியமைக்கப்பட்டிருப்பதுடன், அவற்றைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தையும் நீட்டித்திருப்பதானது வரவிருக்கும் காலங்களில் இவ்வங்கிகள் மிகப்பெரிய அளவில் இழப்புகளைச் சந்திப்பதற்கு இட்டுச்செல்லும்.
சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துள்ள முகேஷ் அம்பானியின் கடன்களை அவர் திருப்பிச் செலுத்துவதற்கு காலக்கெடுவை நீட்டித்திடும் இதே அரசாங்கம், நாட்டில் வறட்சி மற்றும் பயிரிழப்பு ஆகியவற்றின் காரணங்களால் விவசாயிகள் செத்தாலும் அல்லது அவர்கள் தங்கள் நிலங்களை விற்றாலும் கவலையில்லை என்று கூறி அவர்கள் வாங்கிய கடன்களை மட்டும் தள்ளுபடி செய்ய மறுக்கிறது.
கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சியால் பாதிப்புக்கு உள்ளான தமிழ்நாட்டு விவசாயிகள், கடன் தள்ளுபடிக்காக பல மாதங்களாகப் போராடி வருகிறார்கள். மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளவே இல்லை. கடன்வலையில் கடுமையாகச் சிக்கிக்கொண்டு தவிக்கும் விவசாயிகளைக் காப்பாற்றிட மத்திய மோடி அரசாங்கம் சிறிதும் கவலைப்படவில்லை. விவசாயிகள் என்ன மத்திய அரசால் நிறைவேற்ற முடியாத அளவிற்கா கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலிருக்கும் விவசாயிகள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் பெயர்கள் பொதுவெளியில் தொங்க விடப்படுகின்றன. எவ்விதமான மன உறுத்தலுமின்றி அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்படுகின்றன. இவ்வாறு செய்ய முன்வந்துள்ள அரசாங்கமானது, கார்ப்பரேட்டுகளிடம் மட்டும் ஏன் அதனைச் செய்ய மறுக்கிறது? இவ்வாறு வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச்செலுத்தாத கார்ப்பரேட்டுகளின் பெயர்களை வெளியிடுங்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்கூட மத்திய அரசு அதனைச் செய்ய மறுக்கிறது.
வங்கிகள் என்பவை அரசாங்கத்திற்குச் சொந்தமானவை. எனவே மக்களுக்கும் அவை சொந்தமானவைகளாகும். அதன்காரணமாக வங்கிகளின் சேமிப்புகள் மக்களுக்குச் சொந்தமானவைகளாகும். வங்கிகளில் உள்ள சேமிப்புகளில் சுமார் 60 சதவீதம் சாமானிய மக்களால்  அளிக்கப்பட்டுள்ளவைகளாகும். 15 சதவீதம் அரசுத்துறை நிறுவனங்களால்  அளிக்கப்பட்டுள்ளன.
வங்கிகள் நஷ்டம் அடைகின்றன என்றால் மக்கள் நஷ்டம் அடைகிறார்கள் என்றே பொருளாகும்சேமிப்பாளர்கள் என்ற முறையிலும் அவற்றின் உரிமையாளர்கள் என்ற முறையிலும் நஷ்டம் அடைகிறார்கள்.  
இவ்வாறு பொதுப்பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு வாரிவழங்கிவிட்டு, இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள மோடியின் செல்லப்பிள்ளைகள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவரான வைரல் ஆச்சார்யா என்பவர் செயல்படா சொத்துக்கள் நெருக்கடிக்குத் தீர்வு பொதுத்துறை வங்கிகளை மறுபடியும் தனியாரிடம் தாரை வார்த்துவிட வேண்டுமாம். அதேபோன்று அரசு முதலீடுகளையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டுமாம். இந்திய ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் பட்டேல் கூற்றும் இதிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. செயல்படா சொத்துக்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய வங்கிகள் மூழ்கிவிட இயற்கையாகவே அனுமதித்துவிட வேண்டுமாம். 2008 உலக நிதி நெருக்கடியிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றியது நம் நாட்டின் பொதுத்துறை வங்கிகள்தான் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.
சரி, அப்படியே இந்தியாவில் வங்கிகளை விற்பதற்கு அரசு முன்வந்தால் அவற்றை வாங்கப்போவது யார்? பொதுத்துறை வங்கிகளுக்குத் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பித்தராமல், சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரைக்கும் கடன்பட்டிருக்கிற, இதே கார்ப்பரேட்டுகள்தான் வாங்க முன்வருவார்கள்.
நம் நாட்டில் ஆட்சியாளர்களையும் அதனை வழிநடத்திடும் அதிகாரவர்க்கத்தினரையும் சலுகைசார் முதலாளித்துவம் என்னும் புற்றுநோய்  நன்கு கவ்விப் பீடித்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சியம் தேவையில்லை.
இந்தியாவில் கார்ப்பரேட்டுகளுக்கு மோடி அரசாங்கத்தின் கடந்த மூன்றாண்டு கால ஆட்சியில் சலுகைகளுக்கு மேல் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. மோடி, இவ்வாறு தன்னை ஆட்சியில் அமர்த்திய கார்ப்பரேட்டுகளின்மணிப்பர்ஸ்களை நிரப்புவதற்குத் தவறவில்லை. இதற்குப் பிரதிபலனாக  இப்போது அதே கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிப்பதையும் சட்டப்படி செல்லத்தக்கதாக்கிவிட்டார்.

(தமிழில்: .வீரமணி)