Saturday, September 10, 2016

குஜராத் கோப்புகள் 11 பயன்படுத்திய பின் பதுங்கிக்கொண்ட அரசாங்கம்


ராணா அய்யூப்
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குழு பொறுப்பதிகாரி ஜி.எல். சிங்கால் என்னுடன் பேசப்பேச மேலும் பல உண்மைகளை வெளிப்படுத்தினார்.
கேள்வி: உங்கள் சீனியர் ஒரு தலித், இல்லையா?
பதில்: இல்லை. ஆனால் நான் அவர்களுக்குத் தவிர்க்க முடியாதவனாக இருந்தேன். அவர்களுக்காக நடவடிக்கைகளை மேற்கொண்டேன். பல சமயங்களில் ஒரு கான்ஸ்டபிள் செய்யக்கூடியவேலைக்குக்கூட என்னை அனுப்புவார்கள்.
கேள்வி: நீங்களும் ஏதோ சில பிரச்சனைகளில் சிக்கியிருக்கிறீர்களாமே?
பதில்: 2004ல் நான்கு பேரை என்கவுண்ட்டர் செய்தோம். அவர்களில் இரண்டு பேர் பாகிஸ்தானியர்கள், இரண்டு பேர் மும்பையிலிருந்து வந்தவர்கள். அவர்களில் ஒரு பெண்ணும் உண்டு - இஸ்ரத் ஜஹான். நாடறிந்த வழக்காகிவிட்டது அது. அது உண்மையான என்கவுண்ட்டர்தானா என்று கண்டறிய உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
கேள்வி: அது போலி என்கவுண்ட்டரா? அதில் நீங்கள் ஏன் வருகிறீர்கள்?
பதில்: சில சிக்கலான பிரச்சனைகளை மாறுபட்ட முறையில்தான் கையாள வேண்டியிருக்கும். 9/11க்குப் பின் அமெரிக்கா என்ன செய்தது? சந்தேகத்துக்குரியவர்களை குவாண்டனாமோ முகாமில் வைத்து சித்ரவதை செய்யவில்லையா? எல்லோரும் அல்ல, ஒரு பத்து சதவீதம்பேர் சித்ரவதைக்கு உள்ளானார்கள். அவர்களில் எந்தக் குற்றமும் செய்யாதவர்களும் இருக்கத்தான்செய்தார்கள். ஆனாலும் தேசத்தைக் காப்பதற்காக அதைச் செய்ய வேண்டியதாகிறது.
கேள்வி: அந்த என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டவர்கள் லஸ்கர் பயங்கரவாதிகளா?
பதில்: ஆம்.
கேள்வி: அந்தப் பெண்ணுமா?
பதில்: இதோ பாருங்கள், அந்த நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டுவிட்டார். அவர் பயங்கரவாதியாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஒரு முகமூடியாகக் கூட பயன்படுத்தப்பட்டிருக்கலாம்...
கேள்வி: இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வன்சாரா, பாண்டியன், அமின், பர்மர்ஆகியோரும், வேறு சில அதிகாரிகளும் கீழடுக்கு சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்களே? அரசாங்கம் இவர்களைப் பயன்படுத்திக்கொண்டு பிறகு கைகழுவி விட்டுவிட்டது என்பதாகத்தான் இது இருக்கிறதா?
பதில்: நாங்கள் எல்லோருமே அப்படித்தான். அரசாங்கம் இப்படி நினைத்துச் செய்யவில்லைதான். ஆனால், அவர்கள் என்ன சொன்னாலும் நாங்கள் அதற்குக் கட்டுப்பட்டு, அவர்களின்தேவைகளை நிறைவேற்றத் தயாராக இருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு அரசு ஊழியர் என்ன செய்தாலும் அரசாங்கத்திற்காகத்தான் செய்கிறார். ஆனால்அதன் பிறகு அரசாங்கமும் சமுதாயமும் அவரை அங்கீகரிப்பதில்லை. வன்சாரா இந்த அரசாங்கத்திற்காக என்னவெல்லாம் செய்தார்! ஆனால் யாரும் அவர் பக்கம் நிற்கவில்லையே...
கேள்வி: உங்கள் ஆட்கள் அரசியல் அதிகாரத்தில் அமர்ந்திருப்போரின் கட்டளைப்படிதானே செயல்பட்டார்கள்? ஆனால், அவர்களை ஏன் இவர்கள் காப்பாற்றவில்லை?
பதில்: இந்த அமைப்புடன் ஒத்துப்போக வேண்டும் என்றால் சமரசம் செய்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
கேள்வி: ஆனால் பிரியதர்சி அரசாங்கத்திற்கு நெருக்கமானவராக இருக்கவில்லையே...
பதில்: அவர் அரசாங்கத்திற்கு நெருக்கமானவராகத்தான் இருந்தார். ஆனால், ஏதேனும் தப்பான செயலைச் செய்யச் சொன்னால் மறுத்து விடுவார்.
கேள்வி: அவரையும் பாண்டியனையும் ஒரு என்கவுண்ட்டரில் ஈடுபட அரசாங்கம் சொன்னதாகவும், தான் அதைச் செய்ய முடியாதென மறுத்துவிட்டதாகவும் பிரியதர்சி என்னிடம் கூறினார்.
பதில்: பாண்டியனும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
கேள்வி:: அவர் எப்படி உள்துறை அமைச்சருக்கு (அமித் ஷா) நெருக்கமானவரானார்?
பதில்: ஏடிஎஸ் பொறுப்புக்கு வருவதற்கு முன் அவர் உளவுத் துறையில் இருந்தார்.
கேள்வி: முதலமைச்சரும் உள்துறை அமைச்சரும் தங்களுக்கு வேண்டிய சில செயல்களைச் செய்ய வைத்தார்கள் என்று எனக்குத் தெரிகிறது...
பதில்: சில விஷயங்கள் நம் கைகளில் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் இந்த அமைப்புக்காகச் செயல்பட்டோம்.
கேள்வி: நீங்கள் இப்போதும் கண்காணிக்கப்படுகிறீர்களா, அல்லது உங்கள் வழக்கு முடிந்துவிட்டதா?
பதில்: வழக்கு சுறுசுறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது.
கேள்வி: அரசாங்கம் உங்களுக்கு உதவுகிறதா, இல்லையா?
பதில்: அதிகாரத்தில் காங்கிரஸ் இருந்தாலும் சரி, பாஜக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகள் என்றால் அரசியல் கட்சிகள்தான். எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் முதலில் தங்கள் நலன்களைக் காப்பாற்றிக்கொள்ளவே முயல்வார்கள். எங்களுடைய வழக்கில் உதவுகிறார்கள்தான். ஆனாலும் தங்களுக்கு எதுவும் வராமல் பார்த்துக்கொள்வார்கள்.
எங்கள் என்கவுண்ட்டர் வழக்குகளை விசாரிப்பவர்கள் யார் என்று பாருங்களேன். கர்னாயில் சிங், தில்லியில் ஸ்பெஷல் செல் காவல்துறை இணை ஆணையராக இருந்தவர். அவருடைய பதவிக்காலத்தில் நாற்பத்து நான்கு என்கவுண்ட்டர்கள் நடந்திருக்கின்றன. அவர்தான் இப்போது எங்களை விசாரிக்கிற எஸ்ஐடி தலைவர். அடுத்து, சதிஷ் வர்மா. தன்னை மனித உரிமைகளுக்காக நிற்கிற ஒரு சுத்தமான ஆள் என்று காட்டிக்கொள்கிறவர். அவர் பத்து என்கவுண்ட்டர்களைச் செய்திருக்கிறார்.
கேள்வி: இதற்கு என்னதான் முடிவு?
பதில்:பொறுத்திருந்து பார்ப்போம், எதுவும் வெளியில் வராது.
(தொடரும்)


No comments: