Sunday, September 11, 2016

ஜேஎன்யு மாணவர்கள் சரியான முறையில் பதிலடி தந்திருக்கிறார்கள்: சீத்தராம் யெச்சூரி


ஜேஎன்யு மாணவர்கள் சரியான முறையில் பதிலடி தந்திருக்கிறார்கள்: சீத்தராம் யெச்சூரி
புதுதில்லி, செப். 12-
ஆர்எஸ்எஸ்-பாஜக  தங்கள் மீது மேற்கொண்ட பாசிசத் தாக்குதலுக்கு ஜேஎன்யு மாணவர்கள் மிகச் சரியான முறையில் பதிலடி தந்திருக்கிறார்கள் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர் அணி மகத்தான முறையில் வெற்றிவாகை சூடியுள்ளது, இது தொடர்பாக சீத்தாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
"ஆர்எஸ்எஸ்-பாஜகவின் தாக்குதலுக்கு மிகச் சரியான முறையில் பதில் கூறப்பட்டிருக்கிறது, இவ்வாறான பதில் ஜேஎன்யூ மாணவர்களிடமிருந்து வந்திருக்கிறது. செவ்வணக்கம் தோழர்களே. நாங்கள் அனைவரும் உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறோம்.
இந்த ஆண்டின் பிப்ரவரியில்தான் ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறாக்கள் ஜேஎன்யு மீதான தாக்குதலுக்குக் கவனம் செலுத்தத் தீர்மானித்தது. அவர்கள், ஜேஎன்யுவைத் தங்களுக்கு எதிரான ஓர் அடையாளமாகப் பார்த்தார்கள்.
போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சில தொலைக்காட்சி அலைவரிசைகளில்  காட்டப்பட்டதை அடுத்து, ஜேஎன்யு மாணவர்கள் மீது தேசவிரோதக் குற்றச்சாட்டுகளில் தொடங்கி, நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே கும்பல்களால் வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படுவது வரை அது தொடர்ந்தது. இவ்வாறு ஜேஎன்யு மாணவர்கள்  மிகவும் பயங்கரமான தாக்குதலுக்கு ஆளானார்கள்.
இவ்வாறு இவர்களைத் தாக்கியவர்களுக்கு மத்திய அமைச்சர்கள், ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள், சமயங்களில் காவல்துறையினரும் ஆதரவாக நின்றார்கள். இவற்றுடன் ஆளும் கட்சியினரின் பணபலம் புகுந்து விளையாடியதையும் மறந்துவிட முடியாது. ஆயினும் ஜேஎன்யு மாணவர்கள் இவை அனைத்திற்கும் வளைந்து கொடுக்கவில்லை.  நான் படித்த பல்கலைக்கழகம் தொடர்ந்து அதன் மாணவர்களுக்கு இவ்வாறான உயர்ந்த மாண்புகளை ஊட்டி வளர்த்து வருவதற்காக என்னால் அதிக அளவில் பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
பாஜக-ஆர்எஸ்எஸ் வகையறாக்களால் ஜேஎன்யு குறிப்பாக குறி வைக்கப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு. உண்மையில், ஜேஎன்யு, நாம் வாழும் நாட்டின் பல்வேறு விதமான மக்களின் ஒரு நுட்பமான மாதிரியாகும். இங்கே நாட்டின் அனைத்து முனைகளிலிருந்தும் வந்துள்ள மாணவர்களைப் பார்க்க முடியும், பல்வேறு இனத்தினர் – பிற்படுத்தப்பட்டவர்கள், அடக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலையில் வாழக்கூடியவர்கள் – என அனைத்துத்தரப்புப் பிரிவுகளில் இருந்தும் வந்துள்ள மாணவர்களைப் பார்க்க முடியும். அதுமட்டுமல்லாமல் இங்கே பெண்களும் அவர்களுடன் இணைந்து, அனைத்து மாணவர்களும் சரிநிகர் சமானமான நிலையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்க முடியும்.  இதுதான் நாம் விரும்பும் உண்மையான இந்தியாவாகும்.  சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும், அனைத்து மக்களுக்கும் அனைத்து வாய்ப்புகளும் சமமான முறையில் கிட்ட வேண்டும் என்றும் நாம் ஆசைப்படுகிறோமே அதன் ஒரு மாதிரி இங்கே இருக்கிறது. அவர்களின் அபிலாசைகள் அவர்கள் ஏற்றுள்ள முற்போக்குக் கொள்கைகளின் விளைவாக விளைந்துள்ளவைகளாகும். இவர்களின் கொள்கையின்படி பாலின அடிப்படையிலோ, சாதி அல்லது மதத்தின் அடிப்படையிலோ வித்தியாசங்கள் கிடையாது. மாறாக, தாங்கள் கனவு காணும் இந்தியாவைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இவ்வாறான இவர்களது அபிலாசைகள்தான் பாஜக-ஆர்எஸ்எஸ் வகையறாக்களை நடுங்க வைத்திருக்கிறது.
ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் ஒரு போர்க்களத்தில் மட்டுமே நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்.  ஆர்எஸ்எஸ்-பாஜகவிற்கு எதிராகவும் அதன் நச்சுத்தன்மை கொண்ட சித்தாந்தத்திற்கு எதிராகவுமான யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு முன் இதுபோன்று எண்ணற்ற போர்க்களங்களில் நாம் வெற்றி பெற வேண்டி இருக்கிறது. அத்தகையதோர் போராட்டத்திற்கு நம்மை மேலும் தீவிரமாக அர்ப்பணித்துக் கொள்வதற்கான வாய்ப்பாக இந்த வெற்றியை நாம் பயன்படுத்திக் கொள்வோம்.
1977 ஏப்ரலில் நான் ஜேஎன்யு மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்டபோது வெற்றி பெற முடியாததுபோலவே தோன்றியது. ஆயினும் வெற்றிபெற்றபின்னர் நான் மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கையில், இந்த வெற்றிக்காக ஜேஎன்யு மாணவர்களுக்கு வெறுமனே நன்றி கூறினால் மட்டும் போதாது, இடதுசாரிகள் மீதும், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்கான அவர்களுடைய போராட்டத்திலும் அவர்கள் நம்பிக்கையை வைத்திருப்பதற்காகவும், நாம் அவர்களுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம் என்று கூறினேன். இன்று மீண்டும் அவர்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். செவ் வணக்கம்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
(ந.நி.)


No comments: