Wednesday, December 22, 2021

ஒரு ஜனநாயக நாட்டில் சுதந்திரமான நீதித்துறை மிகவும் முக்கியமாகும்

 


ஒரு ஜனநாயக நாட்டில் சுதந்திரமான நீதித்துறை மிகவும் முக்கியமாகும்

மாநிலங்களவையில் ஜான் பிரிட்டாஸ் சங்கநாதம்

புதுதில்லி-

ஒரு ஜனநாயக நாட்டில் சுதந்திரமான நீதித்துறை என்பது மிகவும் முக்கியமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று மாநிலங்களவையில் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊதியங்கள் திருத்தச் சட்டமுன்வடிவின்மீது விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று ஜான் பிரிட்டாஸ் தன் முதல் பேச்சில் (maiden speech) பேசியதாவது:

தலைவர் அவர்களே, முதலில் ஓராண்டு காலமாக நடைபெற்ற வரலாறு படைத்திட்ட விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த விவசாயிகளுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறேன். அதேபோன்று, நாகாலாந்து மாநிலத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கும், ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தளபதி பிபின் ராவத் மற்றும் இதரர்களுக்கும் என் அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்ததாக, இந்த அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 12 சக உறுப்பினர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒருமைப்பாடு தெரிவிப்பதற்கும் அருள்கூர்ந்து என்னை அனுமதிக்கும்படித் தலைவர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் அனைவரும் மிகவும் ஜனநாயக விரோதமான முறையில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் அவைக்குக் கொண்டுவருவதற்கு, அவைத் தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  

நான் இந்த அவைக்கு புதிய உறுப்பினராக இருந்தபோதிலும், இது என்னுடைய முதல் பேச்சாக (maiden speech) இருந்தபோதிலும், இதனை நான் ஏன் கூறுகிறேன்? ஏனெனில் நான் 1988இலிருந்தே நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக இருந்திருக்கிறேன். (ஊடகவியலாளர்கள் அமரும் இருக்கையைச் சுட்டிக்காட்டி) நான் அங்கே அமர்ந்து அவை நடவடிக்கைகளைக் கவனித்து வந்திருக்கிறேன். அவையில் பல அமளிகளைப் பார்த்திருக்கிறேன். நம் மாநிலங்களவைத் தலைவர்களின் உணர்ச்சிமிகு உரைகள் பலவற்றைக் கேட்டிருக்கிறேன். சங்கர் தயாள் சர்மா ஜி ஒருமுறை கண்ணீர் விட்டுக் கதறியதைப் பார்த்திருக்கிறேன். அவ்வாறு அவர் கண்ணீர்விட்டுக் கதறக் காரணமாக இருந்த உறுப்பினர்களில் ஒருவர் மக்களவையில் உறுப்பினராக இருந்தார். அப்போது அவர் பெயர் கூட குறிப்பிடப்பட்டது. எனினும், எவரும் இடைநீக்கம் செய்யப்படவில்லை.

ஆனால், இப்போது பெயர் குறிப்பிடப்படாமலேயே எங்கள் தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  

அடுத்ததாக, இந்தச் சட்டமுன்வடிவிற்கு வருகிறேன். நாம் மிகவும் குறிப்பிட்டுக்கூற விரும்புவது நீதித்துறையின் சுதந்திரமாகும். இந்தச் சட்டமுன்வடிவின் நோக்கம், நீதிபதிகளின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கானது என்று சட்ட அமைச்சர் தெளிவாகக் கூறியிருக்கிறார். இதனை நான் முழுமையாக வரவேற்கிறேன். ஆனாலும், இதுபோன்ற விஷயங்களைத் தீர்மானிக்கும்போது ஓர் ஆழமான இடைவெளி (serious lacuna) இருப்பதை மாண்புமிகு சட்ட அமைச்சர் புரிந்துகொண்டிருக்கிறாரா? நீதிபதிகளின் நியமனத்தைப் பொறுத்தவரை நமக்கு எவ்விதமான பங்கும் கிடையாது. இதுபோன்ற நிலைமை உலகில் வேறெங்கும் இருக்கிறதா? கிடையாது. நீதிபதிகளே, நீதிபதிகளை நியமனம் செய்யும் முறையைக் கேள்விப்பட்டதே இல்லை. இந்த ‘விசித்திரமான’ நிலை குறித்து சட்ட அமைச்சர் ஓர் உறுதியான பார்வையைக் கொண்டிருக்கவில்லை.  ‘விசித்திரமான’ நிலை என்பதை நான் அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

மக்களவையில் இந்தச் சட்டமுன்வடிவு விவாதத்திற்கு வந்தபோது அவர் அளித்திட்ட பதிலைப் பார்த்தேன். அங்கே, நீதித்துறை, அரசாங்கம், நாடாளுமன்றம்/சட்டமன்றம், வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய நீதித்துறை நியமன ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்திருந்தது. மக்களும் தங்களுக்கு நீதி வழங்குபவரின் தகுதி, திறமை, நேர்மை குறித்து தெரிந்து கொள்ளட்டுமே. நீதிபதிகள் தேர்ந்தெடுக்கும் முறையில் மர்மம், ரகசியம், இருள்சூழ்ந்த நிலை இருக்க வேண்டுமா, என்ன? இதுபோன்ற நிலைமை உலகில் வேறெந்த நாட்டிலாவது உண்டா? இந்தியாவில் மட்டும்தான் இதுபோன்ற நிலை. இது தொடர்பாக சட்ட அமைச்சர் எதுவுமே கூறவில்லை. நீதித்துறையின் சுதந்திரத்தை சிதைத்திடும் இந்த முறை குறித்து அவர் எதுவுமே தன் பதிலில் கூறவில்லை. இந்த முறை ஒட்டு மொத்த நாட்டையும் பாதிக்கிறது, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கிறது.

நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையில் நாம் ஓர் அனுசரணையான போக்கை, கொடுக்கல் வாங்கல் போக்கைக் கடைப்பிடிக்கிறோமா? ஒரு சிறுகுழு (oligarchy) நீதிபரிபாலனம் செய்யும் முறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோமா? வழக்கறிஞர்கள் சங்கத்தில் ஏராளமான அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் இது குறித்து எதுவும் கூறுவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் பிரச்சனை குறித்து நம்மைவிட அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

நீதிபதிகளின் குடும்பங்களிலிருந்து வந்து நேர்மையான நீதி வழங்கிய எண்ணற்ற நீதிபதிகளும் உண்டு. நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதெல்லாம் விதிவிலக்குகள். உயர்நீதிமன்ற இணைய தளத்தில் ஒரு நீதிபதியின் தன் விவரம் குறித்துப் படிப்பதற்கு என்னை அனுமதிக்க வேண்டும். அவர் பெயரை நான் குறிப்பிட வில்லை. அவருடைய தாய்வழித் தாத்தா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர். அவருடைய மாமா உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, இவ்வாறு அது நீண்டு போய்க்கொண்டிருக்கிறது.

இங்கே நாம் வம்சாவழியினரின் ஆட்சி குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் உள்ள வம்சாவழியினர் குறித்து பாஜக உறுப்பினர்கள் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசுகிறார்கள். ஆனால் நீதிபதிகள் நியமனம் என்பது மிகவும் தெளிவான முறையில் வம்சாவழியாக வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து நாம் ஏன் மவுனம் கடைப்பிடிக்கிறோம்?

இவ்வாறு அரசிடம் இருந்து வந்த முன்மொழிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இதன்மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் ஒரு பண்டமாற்று முறையைக் (barter) கடைப்பிடிக்கிறது என நான் குற்றஞ்சாட்டுகிறேன். இந்த அரசாங்கம் அவர்களுக்குப் பொருந்தாத நபர்களின் நியமனங்களை வெற்றிகரமானமுறையில் நீக்கிவிட்டது. மாண்புமிகு சட்ட அமைச்சர் அவர்களே, நான் என்ன பேசிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் எவர் பெயரையாவது பரிந்துரைத்தால், அவர் தங்களுக்குப் பொருத்தமானவர் அல்ல என அரசாங்கம் நினைத்தால் அதனை ஏற்றுக்கொள்ளாது. சில நீதிபதிகள் எவ்விதக் காரணங்களுமே கூறாது தண்டிக்கும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

சில தலைமை நீதிபதிகள் அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக, மதச்சார்பின்மைக்கு எதிராக வெளிப்படையாகவே பேசுகிறார்கள். ஒருவரை நீதிபதியாக்குவதற்கு எவ்விதமான வயது உச்சவரம்பும் கிடையாது. சிலர் வயதைக் கூறி நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர், இரவோடிரவாக நியமனம் செய்யப் பட்டிருக்கிறார்கள். நான் பெயர்களைக் கூற விரும்பவில்லை.   

நம் அரசமைப்புச்சட்டத்தின்படி, உயர்நீதிமன்றங்களும், உயர்நீதிமன்ற நீதிபதிகளும் எவருக்கும் கீழானவர்கள் (subordinate) அல்ல. உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் அரசமைப்புச் சட்டத்தின்கீழான மன்றங்கள். ஆனால், உச்சநீதிமன்ற கொலிஜியம், உயர்நீதிமன்றங்களைத் தங்களுக்குக் கீழான நிறுவனங்களாக மாற்றியிருக்கின்றன.

சில புள்ளிவிவரங்களை உங்கள்முன் அளிக்க விரும்புகிறேன். டிசம்பர் 2 அன்று, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் என் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கொலிஜியம்களிலிருந்து அனுப்பப்பட்ட முன்மொழிவுகள் பல மட்டங்களில் நிலுவையில் இருக்கின்றன என்று கூறியிருந்தார். அதாவது, நீதித்துறை சம்பந்தப்பட்ட துறையில் 75 பெயர்கள் நிலுவையில் இருக்கின்றன. அதேபோன்று உச்சநீதிமன்ற கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட 35 முன்மொழிவுகள் துறையின்கீழ் நிலுவையில் இருக்கின்றன. மூன்று முன்மொழிவுகள் பிரதமர் அலுவலகத்தில் நிலுவையில் இருக்கின்றன. 13 முன்மொழிவுகள் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அது நீளுகிறது. இவ்வாறாக உயர்நீதிமன்றங்களாலும், உச்சநீதிமன்றத்தாலும் அனுப்பப்பட்ட நீளமான பட்டியல்கள் நிலுவையில் இருந்து வருகின்றன.  இதுதொடர்பாக மேலும் எதுவும் கூற நான் விரும்பவில்லை.

இவ்வாறு நிலுவையில் இருப்பதால் மக்கள் ஏராளமாகச் சந்தேகப்படுகிறார்கள். நீங்கள் வெளிப்படையான முறையைக் கொண்டிருக்க வேண்டும்.

உயர்நீதிமன்றங்கள் தற்போது தாங்கள் பெற்றிருக்க வேண்டிய நீதிபதிகளின் எண்ணிக்கையில் வெறும் 59 சதவீதத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நீதிபதிகள் ஓய்வு பெற்றபின்பு மீண்டும் நியமனம் செய்யப்படலாமா என்பது குறித்து அரசியல் நிர்ணய சபையில் பலர் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர். நீதிபதிகள் ஓய்வுபெற்றபின் வேறு பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுவதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கு எதிராகப் பலர் தங்கள் நிலைப்பாட்டினைப் பதிவு செய்திருக்கிறார்கள். பேராசிரியர் கே.டி. ஷா, ஓய்வுபெற்றபின்பு நீதிபதிகளுக்கு மறு நியமனம் அளிக்கக்கூடாது என்று வாதிட்டிருக்கிறார்.

பேராசிரியர் சிப்பன் லால் சக்சேனா, கூறியதை மேற்கோள் காட்டுகிறேன். “ஓய்வுபெற்றபின்பு வேறு உயர் பதவிகளுக்கு நியமனம் செய்யப்படலாம் என்கிற தூண்டுதல் இருக்குமாயின் இதனை ஆட்சியிலுள்ளவர்கள் துஷ்பிரயோகம் செய்வதற்கு வாய்ப்பளித்துவிடும். இந்த நிபந்தனையை நீக்காவிட்டால், ஆட்சியில் உள்ளவர்கள் அல்லது ஆட்சியில் உள்ள எந்தவொரு கட்சியாவது இதனைப் பயன்படுத்திக்கொள்ளும். இது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும்.

நம்முடைய முன்னாள் சட்ட அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி இது தொடர்பாக என்ன கூறியிருக்கிறார்? “சில சமயங்களில், ஓய்வு பெறுவதற்கு முன்பு சில நீதிபதிகள் நடந்துகொள்ளும் விதம், அவர்கள் ஓய்வு பெற்றபின் சில பதவிகளில் அமர்த்துவதற்கான ஆவலால் செல்வாக்கு செலுத்துகிறது,” என்று அருண்ஜெட்லி கூறியிருக்கிறார். அருண் ஜெட்லி இத்துடன் நின்றுவிடவில்லை. அவர் மேலும், “இருவிதமான நீதிபதிகள் இருக்கின்றனர். ஒன்று, சட்டத்தைத் தெரிந்துள்ள நீதிபதிகள். மற்றொன்று, சட்ட அமைச்சரைத் தெரிந்துள்ள நீதிபதிகள். நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்யும் முறையைக் கொண்டிருப்பது உலகிலேயே நம் நம் நாட்டில் மட்டும்தான். ஓய்வு பெறும்வயது வந்தபின்னரும்கூட, நீதிபதிகள் ஓய்வு பெற விரும்புவதில்லை,” என்று கூறியிருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் ஒரு சில தீர்ப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியிலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும் உள்ள வேதனையை வெளிப்படுத்த நான் தயங்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ரபேல் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழக இயக்குநர் அலோக் வர்மா அதிகாரங்கள் இரவோடிரவாக அவரிடமிருந்து பறிக்கப்பட்டன. அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது பிரிவு, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் கூறுகிறது. இதுதான் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பாகும்.

ஒருநாள், இந்திய மாநிலம் ஒன்று, ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டபோது, இந்த அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மீதே மரண அடி கொடுக்கப்பட்டது. இது குறித்து உச்சநீதிமன்றம் இதுவரை எதுவுமே கூறாதிருப்பது, ஏன்?

நான் அயோத்தி தீர்ப்பு குறித்து எதுவும் கூறப்போவதில்லை. அநாமதேய தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக தங்களுக்கு ஆழமான கருத்துக்கள் இருப்பதாக ஓர் உறுதிவாக்குமூலத்தை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தது. நன்கொடைகளின் வெளிப்படைத்தன்மையைப் பொறுத்தவரையில் இது ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கை என்று தேர்தல் பத்திரங்களைக் குறிப்பிட்டிருந்தது. நீதிபதிகள்  அதனை மறந்துவிட்டார்கள். இது தொடர்பான வழக்கைக் கையாண்ட நீதிபதியின் நேர்காணலை நான் பார்த்திருக்கிறேன். அவர், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு குறித்து ஞாபகம் இல்லை என்று கூறியிருந்தார். அந்த நீதிபதி யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் இந்த அவையின் ஓர் அங்கமாக இருக்க விரும்பவில்லை.

மாண்புமிகு உறுப்பினர் நிதின் கட்காரி கூட, ஒரு நீதிபதி ஓய்வு பெற்றபின் இரண்டு ஆண்டுகள் ஓய்வு கொடுத்துவிட்டுப் பிறகுதான் அவரை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த அரசாங்கம் தங்கள் அமைச்சர்கள் நிதின் கட்காரி, அருண் ஜெட்லி கூறியதைக்கூட கேட்க ஏன் மறந்துவிட்டது?

இப்போதுள்ள நீதிபதிகள் நியமன முறையானது, ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு மட்டும் சலுகைகள் அளிக்கிறது. ஒரு புதிய வர்க்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். நான் புரிந்துகொள்கிறேன். நீதிபதிகளின் குடும்பங்களிலிருந்து புத்திசாலித்தனமான நீதிபதிகள் வந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை இருந்துவந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் 47 பேர்களில் 14 பேர் பிராமணர்கள். 1950இலிருந்து 1970 வரை உச்சநீதிமன்றத்தின் அதிகபட்ச நீதிபதிகள் எண்ணிக்கை 14இல் 11 பேர் பிராமணர்கள். 1971-89இல்…(குறுக்கீடு)

1980 வரை உச்சநீதிமன்றத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒருவர் கூட நியமனம் செய்யப்படவில்லை.

நீதித்துறை செயல்பாடு என்பதும் ஜனநாயகபூர்வமானதாக இருக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில், நீதித்துறையின் சுதந்திரம் மிகவும் முக்கியமாகும்.

இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் பேசினார்.

(ச.வீ

 

Friday, December 17, 2021

மகளிரின் மண வயதை 21ஆக உயர்த்தியதை ரத்து செய்திட வேண்டும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கை

 


மகளிரின் மண வயதை 21ஆக உயர்த்தியதை ரத்து செய்திட வேண்டும்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கை

புதுதில்லி, டிச.17-

ஒன்றிய அரசாங்கம், மகளிரின் மண வயதை 18 வயதிலிருந்து 21ஆக உயர்த்தியிருப்பதை ரத்துசெய்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரியுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே மற்றும் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கீர்த்தி சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மகளிரின் மண வயதை 18இலிருந்து 21ஆக உயர்த்தியிருக்கும் ஒன்றிய அமைச்சரவையின் முடிவுடன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முற்றிலுமாக ஒத்துப்போகவில்லை.  பெண்களின் மேம்பாட்டிற்காகவும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்காகவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளபோதிலும், பெண்களின் மிகவும் அடிப்படைத் தேவைகளான ஊட்டச்சத்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பை அளிப்பதில் ஒன்றிய அரசாங்கம் தோல்வியடைந்துள்ள நிலையில் இந்நடவடிக்கை முழுமையாக பயனற்றதாகும்.

உண்மையில் இது எதிர்விளைவையே ஏற்படுத்திடும். பெண்களின் திருமண வயதை உயர்த்தியிருப்பதன் மூலம் பெண்கள் தங்கள் கணவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். தாங்கள் விரும்பும் நபரைத் திருமணம் செய்துகொள்வது முன்பே இமாலயப் பிரச்சனையாக மாறியுள்ள நிலையில், இவ்வாறு வயதை உயர்த்தியிருப்பது அவர்களின் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவதற்கான வழியாகவும் செயல்படும்.

இளம் நபர்களிடையே ஒருமித்த பாலியல் செயல்பாடு என்பது கிரிமினல் குற்றமாகக் கருதப்படுவதால், பெண்களைக் கடத்தல், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தல் மற்றும் 2006ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் பல குற்றங்களைப் புரிவதற்கும், இவ்வாறு இணைந்தவர்களைப் பிரித்து வைப்பதற்கும், ஆண்களைச் சிறையில் அடைப்பதற்கும் இட்டுச்சென்றுள்ளதாகவும் பல ஆய்வுகள் காட்டுகின்றன, நம் அனுபவங்களிலிருந்தும் அதனை நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். எனவே ஒன்றிய அரசு எடுத்துள்ள இந்நடவடிக்கை பெண்களுக்கு அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உரிமைகளான அந்தரங்கம் (privacy) மற்றும் சுயேச்சையான முடிவுகள் எடுப்பதற்கான உரிமைகளில் பாதிப்புகளை ஏற்படுத்திடும்.

அதேபோன்றே இவ்வாறு மகளிரின் மண வயதை உயர்த்தியிருப்பது அவர்களுக்கிடையே பாலின சமத்துவத்தை ஏற்படுத்திடும் என்பதும் தவறேயாகும். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், திருமணம் செய்து கொள்ளும் ஆண்களின் வயதை 18ஆகக் குறைத்திட வேண்டும் என்று ஏற்கனவே கேட்டு வந்திருக்கிறது. அதாவது, எப்போது ஒருவர் வாக்களிப்பதற்கான உரிமையைப் பதினெட்டு வயதில் பெற்றுவிட்டாரோ அப்போதே அவர் தான் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதற்கான தகுதியையும் பெற்றுவிடுகிறார். 18ஆவது சட்ட ஆணையமும் திருமண வயது ஆண்களுக்கும் 18 என நிர்ணயித்து சமத்துவத்தைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. இது, பையனை பல்வேறு குற்றத் தண்டனைகளுக்கு ஆளாவதிலிருந்து தடுத்திடும்.

ஒன்றிய அரசாங்கம் தன் கீழ் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் (ICDS), கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு முதலானவற்றிற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்துவரும் நிலையில், இவ்வாறு பெண்களின் திருமண வயதை உயர்த்தியிருப்பது திசை திருப்பும் உத்தியேயாகும் என்பது தெளிவாகத்     தெரிகிறது.

நாங்கள் மேலே குறிப்பிட்டதுபோன்று பெண்களின் ஊட்டச்சத்து நிலை அவர்கள் பிறந்த காலத்திலிருந்து, அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்காக அரசு நிர்ணயிக்கும் 21 வயது வரையிலும் போதுமான அளவிற்கு இல்லாது மிகவும் குறைவாகவே இருந்து வரும் நிலையில்,  அவர்கள் திருமணம் செய்வார்களானால், அதன்பின் அவர்களுக்குக் குழந்தை பிறந்தால், தாய் மற்றும் சேய் ஆகிய இருவரின் சுகாதாரம் அல்லது இறப்பு விகிதத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்திட முடியாது.

எனவே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மகளிரின் மண வயதை 21ஆக உயர்த்திடும் முடிவை ஒன்றிய அரசாங்கம் ரத்து செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

(ந.நி.)

 

Sunday, December 12, 2021

நான் ஒரு ‘மல்ட்டிபிள் மைலோமா’ நோயாளி. -ச.வீரமணி

 

நான் ஒரு ‘மல்ட்டிபிள் மைலோமா’ நோயாளி.

-ச.வீரமணி

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன், 2017 ஆகஸ்டில் நான் புதுதில்லியில் இருந்தபோது வீடு மாறினோம். புதிதாகக் குடியேறி வீட்டில் அலமாரிகளில் புத்தகங்களை எடுத்து அடுக்கியபோது, முதுகைப் பிடித்துக் கொண்டது. இரவு படுத்துவிட்டு காலையில் எழும்போது எழ முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டேன். அதேபோன்று கஷ்டப்பட்டு எழுந்தபின் சிறிதுநேரம் படுக்கையிலேயே ஓய்வு எடுத்த பின்புதான் இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.

இதேபோன்று ஒருசில நாட்கள் படுத்தால் எழமுடியவில்லை. எழுந்தால் படுக்க முடியவில்லை. இப்படி இருந்தநிலையில், வீர. வியட்நாம், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொழிமாற்று வல்லுநராகப் பணிபுரியும் என் மகள், என்னை நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே வரும் ஆர்த்தோ மருத்துவர் உட்பட அனைத்து மருத்துவர்களிடம் சிகிச்சைக்காகக் காண்பித்தார். அவர்கள் என் உடல்நலம் குறித்து அனைத்துப் பரிசோதனைகளையும் செய்துவிட்டு, எனக்கு வந்திருக்கும் பிரச்சனை ஆர்த்தோ பிரச்சனை அல்ல, அது ஒரு மாதத்தில் சரியாகிவிடும். வேறு ஏதோ பிரச்சனை. அநேகமாக புற்றுநோயாகக் கூட இருக்கக்கூடும். எதற்கும் புற்றுநோய் மருத்துவர்களிடம் காட்டுங்கள் என்று கூறிவிட்டார்கள்.

இதன்பிறகு, தில்லியில் மிகவும் புகழ்பெற்ற தனியார்மருத்துவமனை ஒன்றிற்குச் சென்று காட்டியபோது அவர்கள் சில பரிசோதனைகள் எடுத்துவிட்டு, இவருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருக்கிறது, அதற்கு உடனடியாக மருத்துவம் பார்க்க வேண்டும், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள், இதற்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள், அடுத்து இரு மாதங்கள் கழித்து, இவருக்கு வந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையைத் தொடர வேண்டும், அதற்கு 50 அல்லது 60 லட்சம் ரூபாய் செலவாகும். அவ்வாறு செலவு செய்தீர்களானாலும் 6 மாதங்கள்தான் உயிரோடு இருப்பார் என்று கூறிய மருத்துவர், என் மகள் கொண்டுவந்திருந்த, நாடாளுமன்றத்தில் மருத்துவர்கள் பார்த்த சிஜிஎச்எஸ் (CGHS) மருந்துச்சீட்டைப் பார்த்தபின் மிகவும் பதறிப்போய், நீங்கள் எல்லாம் ஏன் இங்கே வருகிறீர்கள், பின்னர் எங்கள் சிகிச்சை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கா? என்ற விதத்தில் புலம்ப ஆரம்பித்துவிட்டார். எங்களுடன் வந்திருந்த நண்பர் ஒருவருக்கு அந்த மருத்துவமனையின் கருப்புப் பக்கங்கள் குறித்து நன்கு தெரியும். அவர், பணம் கொண்டுவரவில்லை, நாளை வருகிறோம் என்று மருத்துவரிடம் கூறிவிட்டு, வீட்டிற்கு வந்துவிட்டோம்.

பிறகு மற்றொரு மருத்துவரிடம் ஆலோசனை செய்தபோது, அவர் என்னுடைய அனைத்துப் பரிசோதனை அறிக்கைகளையும் பார்த்துவிட்டு, இவருக்கு வந்திருக்கும் நோய் சீரியசான ஒன்றுதான் என்ற போதிலும், அவசரப்பட்டு கண்ட மருத்துவமனைகளில் காட்டாதீர்கள், இவருக்கு சிகிச்சை செய்வதற்குச் சிறந்த இடம் எய்ம்ஸ் மருத்துவமனைதான். எப்பாடுபட்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையில் காட்டுங்கள் என்று கூறிவிட்டார்.

(டாக்டர் லலித் குமார்)


பின்னர் நாங்கள் 2017 அக்டோபர் 16  (திங்கள் கிழமை) அன்று மாலை 4 மணியளவில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இன்ஸ்டிட்யூட் ரோட்டரி கான்சர் மருத்துவமனையில், துறைத் தலைவர், டாக்டர் லலித் குமார் அவர்களைச் சந்தித்தோம். அதற்கு முன்பே அவர் வெள்ளிக்கிழமையன்று நாங்கள் அனுப்பியிருந்த என் உடல்நிலை சம்பந்தமான பரிசோதனை அறிக்கைகள் அனைத்தையும் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்திருந்தார். நாங்கள் கொண்டுசென்று பரிசோதனை அறிக்கைகளையும், எக்ஸ்ரே படங்களையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, எனக்கு வந்திருக்கும் நோய் என்பது ‘மல்ட்டிபில் மைலோமோ’ என்கிற எலும்பு புற்றுநோயாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டுவிட்டு, அதனை உறுதிப்படுத்துவதற்காக, ‘போன் மாரோ’ (‘bone morrow test’) எடுத்துவர எழுதிக்கொடுத்தார். எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே ஒரு டெஸ்ட்டும், அவர் பரிந்துரைப்படி தனியார் ஒருவரிடமும் அதே டெஸ்ட்டும் எடுத்து இரு அறிக்கைகளையும் ஆய்வு செய்தார். இரண்டிலிருந்தும் எனக்கு மல்ட்டிபில் மைலோமா என்னும் புற்றுநோய் பீடிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்தார்.

மல்டிபில் மைலோமா என்றால் என்ன?

மல்டிபில் மைலோமா என்பது மனிதரின் உடம்பில் உள்ள எலும்புகளின் செல்களில் வரக்கூடிய புற்றுநோய் ஆகும். மனித உடல் செல்களால் ஆனவை. ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் தேவைப்படும் செல்களுக்கான கட்டுப்பாடுகளை மீறி அங்கே செல்கள் வளருமானால் புற்றுநோய் உண்டாகிறது.

எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்களில் உண்டாகும் புற்று நோயை மல்ட்டிபிள் மைலோமா என்கிறார்கள். இதனைக் கண்டறிய இடுப்பில் உள்ள எலும்பு மஜ்ஜையில் இருந்து ரத்தத்தை எடுத்து சோதனை செய்கிறார்கள். இதற்கு ‘போன் மாரோ டெஸ்ட்’ (‘bone morrow’) என்று பெயர். இதனை எனக்கு வலது பக்கம் இடுப்பில் எலும்பு மஜ்ஜையில் கடையாணி போன்று ஒரு பெரிய ஊசியைக் குத்தி, எலும்பு மஜ்ஜையிலிருந்து ரத்தத்தை எடுத்து சோதனை செய்தார்கள்.

ஒரு மர அலமாரி கரையான்களால் அரிக்கப்படுவதை ஆரம்பத்திலேயே கவனித்து, மருந்து அடித்துவிட்டோமானால் அந்த அலமாரியைக் காப்பாற்றிவிட முடியும். அதேபோன்று மனித உடலிலும் செல்கள் அரிக்கப்படுவதை ஆரம்பத்திலேயே கவனித்து அவற்றை அழிக்க மருந்து உட்கொண்டோமானால் அவற்றை அழித்துவிட முடியும்.

இன்றையதினம் புற்றுநோயின் பல வகைகளுக்கு மருந்துகள் வந்துவிட்டன. எனினும் புற்று நோய் ஸ்டேஜ் - 1, புற்றுநோய் ஸ்டேஜ் -2, புற்றுநோய் ஸ்டேஜ் 3, புற்றுநோய் ஸ்டேஜ் - 4 என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள். ஸ்டேஜ் 4 அநேகமாக கைவிடப்பட்ட வழக்குகளாகும். ஸ்டேஜ் 3 அளவிற்கு வயதானவர்கள் வந்துவிட்டால் அவர்களைக் காப்பாற்றுவது கடினம். ஸ்டேஜ் 1 மற்றும் ஸ்டேஜ் 2 அளவிற்கு இருப்பவர்களைக் காப்பாற்றிவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எனக்கு ‘போன் மாரோ டெஸ்ட்‘ எடுத்தபின், அதனை ஆய்வுசெய்தபோது, எனக்கு சுமார் 20 சதவீத அளவிற்குப் பாதிப்பு இருந்தது தெரியவந்த்து. நான் புற்றுநோயாளிகளின் வகையில் இரண்டாவது கட்டத்தை அடைந்திருந்தேன். இதனை என்னிடம் தெரிவிக்க வேண்டாம் என்று டாக்டர் லலித்குமார் அவர்கள் என் மகளிடம் தெரிவித்திருந்திருக்கிறார். மேலும் அவர் என்னிடம், என்னைப் பொறுத்தவரை, நான் 85 சதவீத நோயாளிகளைக் காப்பாற்றி இருக்கிறேன். நான் கொடுக்கும் மருந்துகளை ஒழுங்காக உட்கொண்டீர்களானால், அவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள், என்று எனக்கு நம்பிக்கை அளித்து, நான் உட்கொள்வதற்கான மருந்துகளையும், ஒவ்வொரு வாரமும் ஊசி மூலம் போட்டுக்கொள்ள வேண்டிய மருந்தையும் எழுதிக் கொடுத்தார்.

இதில் மிகவும் முக்கியமானது போர்டிசோமிப் 2 mg (Bortezomib 2mg SC diluted in 1.5 ml) normal saline) என்னும் மருந்தாகும். இதனை ஊசி மூலம் போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த ஊசியின் விலை 12,500 ரூபாய்க்கும் மேலாகும். இதனை எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மருத்துவமனையில் வாங்கினால் 90 சதவீதம் தள்ளுபடி அந்த சமயத்தில் அளிக்கப்பட்டது.  இதே ஊசி மருந்தைத்தான் இந்தியாவில் இந்த நோய்க்காக எங்கே சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் போட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இதனை ஒருவர் தனியார் மருத்துவமனையில் போட்டுக்கொண்டார் என்றால் இந்த ஊசி மற்றும் மருந்தை அவர் 12 ஆயிரத்து 500 ரூபாய் + வரி ஆகியவற்றைச் செலுத்தி தனியார் மருத்துவமனை நடத்திடும் கடையில்தான் வாங்க வேண்டும். எனக்குத் தனியார் மருத்துவமனையில் ஊசி போட மறுத்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

இத்துடன் முதுகில் வலி இருந்த இடத்தில் உள்ளுக்குள் இருந்த எலும்பு பாகத்தை சரி செய்வதற்காக ஒரு தோலால் ஆகிய சட்டை ஒன்றையும் தைத்துப் போட்டுக்கொண்டேன். கிட்டத்தட்ட ஓராண்டு காலம் இதனைப் பயன்படுத்தினேன். வீட்டிலேயே நடப்பதற்குத் துணையாக ஊன்றுகோல் ஒன்றையும் பயன்படுத்தி வந்தேன். இதுவும் சுமார் ஓராண்டு காலம் தொடர்ந்தது.

இவ்வாறு இந்த ஊசியை 16 வாரங்கள் போட்டுக்கொண்டேன். அந்த சமயத்தில் உடலில் உள்ள எலும்புகள் மிகவும் தேய்ந்து இருந்ததன் காரணமாக அவற்றின் வளர்ச்சிக்காக மேலும் சில மருந்துகளையும் டாக்டர் எழுதிக் கொடுத்திருந்தார்.

2017 அக்டோபர் 20 தொடங்கிய மருத்துவ சிகிச்சையை டாக்டர் அறிவுரையின்படி நாள்தோறும் மாத்திரை மருந்துகளை உட்கொண்டும், வாரம் ஒருமுறை அந்த ஊசியைப் போட்டுக்கொண்டும் இருந்தேன். அடுத்து மூன்று வாரங்கள் கழித்து, நவம்பர் 6இல் டாக்டரைச் சந்தித்தபோது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டார். உங்களைச் சந்தித்த அன்றே 90 சதவீதம் சரியாகிவிட்டது என்றும், இப்போது 95 சதவீதம் சரியாகிவிட்டது போல் உணர்கிறேன் என்றும் கூறினேன். டாக்டரும் அவருக்குத் துணையாக இருந்த உதவி மருத்துவரும் சிரித்துவிட்டனர். உதவி மருத்துவர் ‘நன்றி’ என்று தமிழில் கூறினார். உடனே இயல்பாக கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டு, நீங்கள் தமிழரா? என்றேன். இல்லை. நான் பாண்டிச்சேரியில் ஜிப்மர்-இல்தான் படித்தேன். என்றார். அன்றைய தினமும் டாக்டர் எனக்கு அளித்திருந்த அதே மருந்துகளைத் தொடருங்கள் என்று எழுதிக்கொடுத்தார். அதற்கு அடுத்து, மூன்று வாரங்கள் கழித்து, நவம்பர் 27 அன்று டாக்டரைச் சந்தித்தேன்.

இவ்வாறு ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் ரத்தத்தில் எந்த அளவிற்கு மைலோமா தொற்று இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கிறார்கள். அதனைப் பெற்றுப் பரிசீலித்துத்தான் அடுத்து மருந்தினைத் தொடர்கிறார்கள். உடலில் மருந்துகள் நன்கு வேலை செய்வதை உறுதிப்படுத்திக் கொண்டுதான் சிகிச்சையைத் தொடர்கிறார்கள்.

இவ்வாறாக சிகிச்சையைத் தொடர்ந்து, வாரம் ஓர் ஊசி என்கிற முறையில் 16 வாரங்களுக்கு ஊசியைப் போட்டுக்கொண்டபின், மீண்டும் ஒருமுறை ‘போன் மாரோ டெஸ்ட்’ (bone morrow test) எடுத்து ஆராய்ந்தார்கள். இப்போது மல்ட்டிபிள் மைலோமாவின் அளவு 20 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைந்திருந்தது.

இதனைப் பரிசீலனை செய்தபின், டாக்டர் அவர்கள், அப்படியெனில் ஊசி - மருந்தை மேலும் எட்டு வாரங்களுக்குத் தொடருங்கள் என்று கூறினார். அதன்படி எட்டு வாரங்கள் மீண்டும் அந்த ஊசியைப் போட்டுக் கொண்டேன். அடுத்து ஒரு ‘போன் மாரோ டெஸ்ட்’ (bone morrow test) எடுக்கப்பட்டது. இப்போது எட்டு சதவீதம் என்பது 2 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

இதனைக் கண்ணுற்றபின் டாக்டர் கூறிய வார்த்தைகள், நான் உங்களைக் காப்பாற்றிவிட்டேன்,”” என்பதாகும். பின்னர், இதேபோன்று ஊசி - மருந்தை செலுத்தி வாழ்நாள் முழுவதும் இருந்துவிடுகிறீர்களா, அல்லது ‘stem cell transplantation’ செய்துகொள்கிறீர்களா? என்று கேட்டார். மேலும், Stem cell transplantation செய்து கொள்வது என்றால் மருத்துவமனையில் உள்நோயாளியாக 25 நாட்கள் இருந்திட வேண்டும் என்றும், சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் என்றும் கூறினார்.

இதற்கு நான், டாக்டர், நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதற்கு நான் கட்டுப்படுகிறேன்,”” என்று பதிலுரைத்தேன். டாக்டர் சிரித்துக்கொண்டே, stem cell transplantation செய்துவிடுவோம். இப்போது bed எதுவும் காலியாகவில்லை. சுமார் இரண்டு மாதம் ஆகும். அதற்குள் ஊருக்குப் போய்விட்டு வந்துவிடுங்கள். அதன்பின் எப்போது bed காலியாகிறதோ அப்போது சொல்வேன், உடனே வந்து சேர்ந்துவிடுங்கள் என்று கூறினார்.

இதுவரை மேற்கொண்ட சிகிச்சைகள் ஓர் அனுபவம் என்றால், ‘stem cell transplantation’ செய்து கொண்டது ஒருவித அனுபவமாகும்.

அடுத்து அது எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

Stem cell transplantation

2017 அக்டோபர் 16 அன்று ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சிகிச்சையைத்துவங்கியபின்னர், சுமார் பத்து மாதங்கள் கழித்து 2018 ஆகஸ்ட் 27 அன்று ‘ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளான்டேஷனுக்காக’ மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டேன். எனக்கு உடன் உறை உதவியாளராக என் வாழ்க்கைத்துணைவியார், இரா. சிவகாமசுந்தரியும், வெளியில் ஓடியாடி வேலை செய்யும் உதவியாளராக என் மகள், வீர.வியட்நாமும் இருந்தார்கள். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அன்றே மார்பின் இடது பக்கத்தில் இரு துளைகள் போடப்பட்டு, இரு ரப்பர் குழாய்கள் சொருகப்பட்டுவிட்டன.

இதயம் மற்றும் பற்கள் நல்ல நிலையில் இருக்கிறதா என சோதித்துப் பார்க்கப்பட்டு அவை நல்ல நிலையில் இருப்பதாக சான்றிதழ்கள் பெற்றபின்னர்தான் நான் ‘ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளாண்டேஷனுக்காக’ அனுமதிக்கப்பட்டேன். உள்நோயாளியாக சேர்ந்த இரண்டாவது நாள், என் உடலில் இருந்த ரத்தம் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு, புதிதாக ரத்தம் செலுத்தப்பட்டது. இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்ட ரத்தத்திலிருந்து ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளாண்டேஷனுக்காக எனக்கு செலுத்தப்படவேண்டிய பிளாஸ்மாவில் மூன்றில் ஒரு பங்கு என் ரத்தத்திலேயே இருந்தது. பின் இரு நண்பர்கள் மூலமாக மேலும் இரு பங்கு பிளாஸ்மா சேர்த்து, எனக்கு ‘ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளாண்டேசன்’ செய்யப்பட்டது.

இதனை டாக்டர் நரேஷ் என்பவர்தான் எனக்குச் செய்தார். அவர் செய்தபோது, எப்படிக் குழந்தைகளுக்கு ஊசி போடும்போது, செவிலியர்கள் அந்தக் குழந்தையிடம் ஏதேனும் கேள்விகள் கேட்டுக்கொண்டே அந்த வலியை அது உணராத விதத்தில் ஊசியை ஏற்றுவார்களோ, அதேபோன்றே டாக்டர் நரேஷ் என்னிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளாண்டேசன் செய்தார். சுமார் 20 நிமிடங்கள்தான். அனைத்து பிளாஸ்மா செல்களும் மார்பில் செருகப்பட்டிருந்த குழாய் மூலம் என் உடலுக்குள் சென்றுவிட்டது. பின்னர் டாக்டர் நரேஷ், ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளாண்டேசன் ஓவர் என்று சொல்லிக்கொண்டு விடைபெற்றுச் சென்றார்.

மாலையில் ஆறு மணிக்குப்பிறகு, டாக்டர் லலித் என்னைப் பார்க்க வந்தபோது, நான் எழுந்து நின்று அவரை வரவேற்றபோது, அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் ஒரு ரோல் மாடல் பேஷண்ட்”” என்று என்னைப் பாராட்டிவிட்டு, இவர் குறித்து மற்ற நோயாளிகளிடமும் சொல்லுங்கள் என்று, கூட வந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கூறிவிட்டுச் சென்றார்.

அதன்பின் சுமார் பத்து நாட்கள் மருத்துவமனையில் மிகவும் கவனமாக நான் பார்த்துக் கொள்ளப்பட்ட பின், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டேன். எனினும் அதன்பின் சுமார் நான்கு மாத காலம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் அவரைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் என் உதவியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அதேபோன்றே நான் 120 நாட்கள் வைக்கப்பட்டிருந்து, அதன்பின் மீண்டும் மருத்துவரைச் சந்தித்தேன்.

இவ்வாறு எனக்கு, 2017 அக்டோபர் 16 தொடங்கிய ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையுடனான பயணம் கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்கிறது. மாதம் ஒரு முறை டாக்டரைப் பார்த்து வந்த நான், பிறகு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, பின்னர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று மாற்றப்பட்டிருக்கிறது. இடையில் ஏதேனும் பாதிப்பு என்றால் போய்ப் பார்க்கலாம் என்றாலும் கடந்த மூன்றாண்டுகளில் அதுபோன்றதொரு நிலைமை எனக்கு ஏற்படவில்லை.

இடையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வீட்டை விட்டே வெளியே வராது இருந்ததன் காரணமாக, சற்றே எடை கூடிவிட்டது, தொப்பை அதிகமாகிவிட்டது. இதனைக் குறைக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். மற்றபடி என் எழுத்துப் பணிக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

நான் முழுமையாகக் குணப்படுத்தப்பட்டதாகக் கூறியபோதிலும், நான் உயிருடன் இருக்கும்வரை ஒரு ‘மல்ட்டிபிள் மைலோமா’ நோயாளி என்ற ரீதியில்தான் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையால் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறேன்.

நான் வெளியில் பார்ப்பதற்கு நோயற்றவன் போலக் காட்சியளித்தாலும், நான் ஒரு நோயாளிதான். அதுவும் மல்ட்டிபிள் மைலோமா நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவன்தான். இதனை எப்போதும் கவனத்தில் கொண்டே நான் இனிவருங்காலங்களில் செயல்பட வேண்டும்.

வாகனங்கள் எதையும் ஓட்டக்கூடாது. இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்தும்கூட பயணம் செய்யக்கூடாது. தேவையானால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனெனில் உள்ளே உள்ள எலும்புகள், மற்றவர்களுக்கு இருப்பதுபோன்று வலுவானதாக எனக்கு இருக்காது என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். திடீரென்று குனியக் கூடாது. நாள்தோறும் குறைந்தது ஒரு மணி நேரம் நடக்க வேண்டும். எளிய உடற்பயிற்சிகள் செய்திட வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதுபோல் சிவற்றைக் கட்டாயமாக செய்துவந்தால், சமூகத்திற்கு மேலும் சில நாட்களுக்குப் பயனுள்ள விதத்தில் வாழலாம்.

அடுத்து, நான் எழுதுவதை நான் சார்ந்திருக்கும் தீக்கதிர் நாளிதழில் பார்க்கும் நம் தோழர்கள் பலருக்கு எனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்தோ, நோயின் தன்மை குறித்தோ அநேகமாகத் தெரியாது.

தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மாநிலங்களவை உரைகளைத் தொகுத்து பாரதி புத்தகலாயம் மூலம் வெளியிட ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தபோதுதான் நோய்வாய்ப்பட்டேன். அதன் வெளியீட்டு விழாவிற்குத் தோழர் பாரதி நாகராஜனும் என்னை அழைத்திருந்தார். ஆயினும் அப்போதுதான் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடங்கி இருந்தேன்.

நோயின் தன்மை அறிந்து அதிக செலவு பிடித்திருக்கும் என்பதை ஊகித்துக்கொண்ட சில நண்பர்களும், தோழர்களும் ஏதேனும் பொருள் உதவி தேவையா என்று கேட்டார்கள். என் மகள்களும், என் வாழ்க்கைத் துணைவியாரும் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதாலும், நானும் மாநில அரசு ஓய்வூதியன் என்ற முறையில் ஓய்வூதியம் பெற்று வந்ததாலும், தீக்கதிரிலும் ஒரு தொகை மாதந்தோறும் எனக்குக் கொடுத்து வந்ததாலும், பாரதி நாகராஜனும் மொழிபெயர்ப்பு மற்றும் தட்டச்சுப் பணிக்காக அவ்வப்போது கணிசமான நிதி கொடுத்து உதவி வருவதாலும், உதவ முன்வந்ததற்கு நன்றி தெரிவித்துவிட்டு, அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டேன்.

‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மருத்துவர் டாக்டர் லலித் குமார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உற்ற துணையாக இருந்தபோதிலும், தஞ்சையில் என்மீது மிகவும் பற்று வைத்திருக்கக்கூடிய மருத்துவர் சு. நரேந்திரன் அவர்களும், சரியான முறையில் என்னை வழிநடத்தி வந்தார். அதேபோன்று தோழர் கல்யாணத்தின் மகனும் தற்போது தஞ்சை மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய்ப்பிரிவு மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் பாரதி ராஜா அவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் பணியாற்றி வந்த காலத்திலிருந்தே ‘எனக்கு என்ன செய்ய வேண்டும்’ என்பதை அவ்வப்போது தெரிவித்து வந்தார்.

‘மல்ட்டிபிள் மைலோமா’ என்பது உலகம் முழுவதும் உள்ள ஒரு நோய்தான். ஆயினும் தமிழகத்தில் அதன் பெயர் அவ்வளவாகத் தெரியவில்லை. அதற்கான மருத்துவமும் முறையாகச் செய்யப்படுகிறதா என்றும் தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக நான் தில்லியில் இருந்ததால், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் மிகச்சிறந்த டாக்டரிடம் மிகச்சிறந்த முறையில் சிகிச்சையை எடுத்துக் கொண்டேன். தமிழகத்தில் இருந்திருந்தால் என்னவாகியிருப்பேன் என்று தெரியவில்லை.

‘மல்ட்டிபிள் மைலோமா’ என்னும் புற்று நோய் ஓர் உயிர்க்கொல்லி நோய் என்று அனைவருக்கும் தெரியும். இதனை அறிந்தவர்களில், சிறுவர்கள் அல்லது இங்கிதம் தெரியாத சிலர் ‘நீங்கள் எப்போது சாவீர்கள்?’ என்றுகூடக் கேட்கலாம். அவர்களுக்கும் சிரித்துக்கொண்டே பதில் சொல்லக்கூடிய பக்குவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு நோய் குணமடைய வேண்டும் என்றால், நான்கு அம்சங்களை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது, நோயாளி, மருத்துவர், மருந்து மற்றும் நோயாளிக்குத் துணை புரிபவர் என்று பொருள்படும் விதத்தில்,

உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வானென்று

அப்பால் நாற்கூற்றே மருந்து

என்று கூறுகிறார்.

மல்ட்டிபிள் மைலோமா நோயாளியான என்னை நல்ல மருத்துவர் டாக்டர் லலித் குமார், எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள், உரிய மருந்துகள் மற்றும் என்னைக் கவனித்துக்கொண்டுவரும் என் குடும்பத்தார் ஆகியவர்களின் உதவியால் மற்றவர்களைப் போல நானும் வெளித்தோற்றத்திற்கு மாறியிருக்கிறேன்.

மருத்துவரின் அறிவுரைகளின்படி எச்சரிக்கையாக இருந்தால் மேலும் சில ஆண்டுகள் இப்பூலகில் நீடிக்கமுடியும் என நம்புகிறேன்.

மருத்துவர் பணி என்பது நோயுற்று நம்மை நோக்கி வரும் மக்களுக்குத் தொண்டாட்டும் மகத்தான பணியாகும். அதிலும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும், ஊழியர்களும் நோயாளிகளிடம் பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காது, அர்ப்பணிப்பு உணர்வுடன் ஊழியம் செய்வதைப் பார்க்கும்போது இனிய அதிர்ச்சி ஏற்படும்.

டாக்டர் லலித்குமார் ஒவ்வொரு நாளும் காலை பத்து மணி முதல் மாலை 6 மணி வரை தன்னுடன் உள்ள இளநிலை மருத்துவர்களுடன் சேர்ந்து நூறு நோயாளிகளுக்கு சிகிச்சை செய்கிறார்.  பின்னர் எட்டு மணி வரையிலும் உள்நோயாளிகளைப் பார்க்கச் செல்கிறார். இவ்வாறு எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருமே மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அதனால்தான் தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவையில் உரையாற்றும்போது எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களையும், ஊழியர்களையும் மிகவும் புகழ்ந்துரைத்தார்.

..

 

 

Sunday, December 5, 2021

வேளாண் சட்டங்கள் ரத்து ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி -சீத்தாராம் யெச்சூரி

 


வேளாண் சட்டங்கள் ரத்து

ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி

-சீத்தாராம் யெச்சூரி

[இடதுசாரிக் கட்சிகள், அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக உறுதியுடனும் உரக்கவும் விமர்சனம் செய்து வந்தன. இடதுசாரிக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் மீதான விவாதம் நடைபெற்ற சமயத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தனர். அதேபோன்று, இவ்வாறான இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் விளைவாகத்தான், 2013 நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் மக்கள் ஆதரவு சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இடதுசாரிக் கட்சிகள், நவீன தாராளமய சீர்திருத்தங்களின் தாக்கம் குறித்து, குறிப்பாக விவசாயத்தின்மீது அது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விளைவுகள் குறித்து, மக்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றனர்.

ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் தலைகீழ் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும், அது ஓர் அரசியல் சந்தர்ப்பவாதமே என்றும் விவரித்திருக்கிறார். அவரது நேர்காணலின் சாராம்சம் வருமாறு:]

கேள்வி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சம்பந்தமாக பிரதமரின் அறிவிப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: தொடர்ந்து ஓராண்டு காலமாக வரலாறு படைத்திடும் விதத்தில் அமைதியாகப் போராடிவந்த நம் விவசாயிகளுக்கு இது ஒரு மகத்தான வெற்றியாகும்.  மிகவும் வீறாப்புடன் இருந்து வந்த மோடி அரசாங்கம் தன் வீறாப்புத்தனத்தை விட்டுக்கொடுத்து இறங்கிவரக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்டம் ஒன்றிய அரசாங்கத்தாலும், மாநிலங்களில் உள்ள பாஜக-வின் அரசாங்கங்களாலும், விவசாயிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்துவிதமான அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும், தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றி பெற்றிருக்கிறது. தில்லியின் கடுங்குளிரிலும்  போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளுக்கு எதிராக ஆட்சியாளர்கள் வாட்டர் கேனன்கள் மூலமாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். விவசாயிகள் போராடுவதற்காக தில்லியை நோக்கி வருவதைத் தடுப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளங்களை ஏற்படுத்தினார்கள்.  பல இடங்களில் போராடும் விவசாயிகள் குண்டாந்தடிகளால் அடித்து நொறுக்கப்பட்டனர். அவர்களைத் தில்லிக்குள் வரவிடாதவாறு கைது செய்தனர். போராடும் விவசாயிகளை, காலிஸ்தானிகள் என்றும், தேச விரோத பயங்கரவாதிகள் என்றும், பிரிவினை வாதிகள் கும்பல் என்று பொருள்படும் துக்டே துக்டே கும்பல் என்றும் முத்திரை குத்தினர். மோடி மிகவும் கீழ்த்தரமான முறையில் “போராட்டத்தால் ஜீவிப்பவர்கள்” (Andolan Jeevis”) என்று கிண்டலடித்தார். இவ்வாறு இவர்கள் எடுத்த நடவடிக்கைள் அனைத்தையும் முறியடித்து, தில்லியின் எல்லையில் போராடிய விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அனைத்துத்தரப்பு மக்களின் ஆதரவும் நாளுக்குநாள் அதிகரித்தது. இவ்வாறான மக்களின் ஆதரவு நாடு முழுதும் எதிரொலித்தது. மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களிலும் இது எதிரொலித்தது.

பாஜக-வினர் வரவிருக்கும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயமும் இவ்வாறு வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற்றதற்கான ஒரு காரணிதான். உண்மையில், அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை நேர்மையற்ற ஒன்றாகவும், முழுமையான தேர்தல் சந்தர்ப்பவாதம் என்றும்தான் பார்க்க வேண்டும். ஆயினும், இவ்வாறு பாஜக மேற்கொண்ட முடிவானது அக்கட்சிக்கு ஆதாயம் அளிக்குமா என்பது சந்தேகமே.  விவசாயிகளின் அமைதியான போராட்டம் நாளுக்கு நாள் வீர்யம் அடைந்துகொண்டிருந்ததும், விவசாயிகளின் உறுதியும்தான் அரசாங்கத்தைப் பணிய வைத்து, வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தித்திருக்கிறது. இந்த வெற்றி, ஜனநாயகத்திற்கான வெற்றி, ஜனநாயக உரிமைகளுக்கான வெற்றி, குடிமை உரிமைகளுக்கான வெற்றியாகும். அமைதியாகப் போராடுபவர்கள் மீது ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரத் தாக்குதல்களும், பாசிஸ்ட் தாக்குதல்களும் அதிவேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையிலும், அரசமைப்புச்சட்டத்தில் உத்தரவாதமளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ள நிலையிலும் இது நடந்திருக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

கேள்வி: வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், கார்ப்பரேட்டுகளின் ஏகபோகங்களுக்காகவும் கொண்டுவரப்பட்டன என்று நம்பப்படுகிறது. நாட்டின் சொத்துக்கள் தனியார் கார்ப்பரேட்டுகளிடமும், தனியார் ஏகபோகங்களிடமும் தாரைவார்ப்பதற்கு எதிராக இடதுசாரிக்கட்சிகள் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். அவை எதற்கும் அசைந்துகொடுக்காத அரசாங்கம், இப்போது விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டத்தினை அடுத்து, வளைந்து கொடுத்திருக்கிறது. விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டம், ஜனநாயக இயக்கங்களுக்கு நம்பிக்கையை அளித்திருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்களா?

சீத்தாராம் யெச்சூரி: நிச்சயமாக. மோடி அரசாங்கம் பின்வாங்கியிருப்பது, ஜனநாயக இயக்கங்களை மேலும் வலுப்படுத்திட வேண்டும் என்பதற்கான சமிக்ஞையேயாகும். இது, இதர ஜனநாயகப் போராட்டங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திடும்.

இந்த வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், உலக அளவில் வேளாண் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்காகவும் கொண்டுவரப்பட்டதுதான். இந்தியாவின் பொருளாதார இறையாண்மையை சரண் செய்யும் விதத்தில் மோடி அரக்கத்தனமாகப் பின்பற்றும் நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கைகளின் ஒரு பகுதியேயாகும். இந்தச் சட்டங்களின் நோக்கம், வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்துதலும், கார்ப்பரேட்மயப்படுத்துதலுமேயாகும். அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தை ஒழித்துக்கட்டியதற்குக் காரணம், வேளாண் விளைபொருள்களை பதுக்கல் பேர்வழிகள் பதுக்கிவைத்து, செயற்கைமுறையில் பற்றாக்குறை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவேயாகும். பணவீக்கத்தை ஏற்படுத்தி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வகை செய்வதென்பது, நிச்சயமாக மக்களைப் பட்டினிக் கொடுமைக்குத் தள்ளிவிடும் சூழ்நிலைக்குக் கொண்டுசெல்லும். இவற்றின் விளைவாக இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களைக் பட்டினிச் சாவுகளிலிருந்து பாதுகாப்பது போன்ற நிலைமைகள் ஆபத்திற்கு உள்ளாகும். ஏற்கனவே, இந்தியா, உலக பசி-பட்டினி அட்டவணையில் தொடர்ந்து சரிந்துகொண்டிருக்கிறது. நிச்சயமாக இந்நிலைமை மேலும் மோசமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் பொதுத்துறை நிறுவனங்களையும், கனிம வளங்களையும், நாட்டின் செல்வாதாரங்களையும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு எதிராக எண்ணற்றப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்குவது தொடர்கின்றன.  துறைவாரியாக பெரிய அளவிலான வேலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் மகாசம்மேளனம் அறைகூவல்கள் விடுத்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர இடதுசாரிக் கட்சிகளும் இத்தகைய தொழிற்சங்களின் நடவடிக்கைகளுக்கு எப்போதும் ஆதரவும் ஒருமைப்பாடும் அளித்து வருகின்றன. இத்தகைய போராட்டங்கள், இனிவருங் காலங்களில் மேலும் மேலும் வலுப்பெறும்.

விவசாயிகள் போராட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவெனில், இப்போராட்டங்களில் தொழிலாளர் வர்க்கமும், விவசாயத் தொழிலாளர்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி யமையாகும். போராட்டங்களின்போது விவசாயிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் காட்டிய ஒற்றுமை, மதச்சார்பின்மை ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை வலுப்படுத்துவதற்கு ஒரு நெம்புகோளாகவும் திகழும்.  

கேள்வி: வேளாண் சட்டங்களை ரத்து செய்ததற்கான காரணம், பஞ்சாப் மற்றும் ஹர்யானா மாநிலங்களில் உள்ள பணக்கார விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற்காகத்தான் என்று நாட்டில் ஒரு பிரிவினர் நம்புகிறார்களே. இது தொடர்பாக உங்கள் புரிதல் என்ன?

சீத்தாராம் யெச்சூரி: இது ஒரு கற்பனையான நம்பிக்கை. உண்மையில் வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள துஷ்பிரச்சாரம். சந்தைப்படுத்தலும், கார்ப்பரேட்மயப்படுத்தலும் ஒட்டுமொத்த விவசாயிகளையும், விவசாயத்தையும் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. நாட்டிலுள்ள விவசாயிகளில் 85 சதவீதத்தினர், இரண்டு ஏக்கர் நிலத்திற்கும் கீழே உள்ள விவசாயிகள்தான். இவர்கள் சிறுகுறு விவசாயிகளாவர். மோடி அரசாங்கம் கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் இவர்களின் நிலங்களைக் கார்ப்பரேட்டுகள் விழுங்குவதற்கு வகை செய்தது. விளைவாக சிறுகுறு விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து,  தாங்கள் இதுகாறும் அனுபவித்துவந்த தங்கள் சொந்த நிலங்களிலேயே விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.

இன்றைய தினம் குறைந்தபட்ச ஆதார விலை ஒருசில மாநிலங்களில் மட்டுமே வலுவாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் ஒருசில விளைபொருள்களுக்கு மட்டுமேயாகும். குறைந்தபட்ச ஆதார விலையில் அனைத்து விளைபொருள்களையும் விற்பதற்கு சட்ட உத்தரவாதம் வேண்டும் என்கிற கோரிக்கை அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கக்கூடியதாகும். அதனால்தான் இந்தக்கோரிக்கையை பணக்கார விவசாயிகள், சிறுகுறு விவசாயிகள், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உயர்சாதி விவசாயிகள், இந்து-முஸ்லீம் விவசாயிகள் என அனைவரும் ஒன்றுபட்டு ஆதரித்து, வரலாறு படைத்திட்ட போராட்டத்தை நடத்தினார்கள். கார்ப்பரேட்டுகள் இந்திய விவசாயத்தையும் அதன் உற்பத்தியையும் கையகப்படுத்திட மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக இவ்வாறு விவசாயிகள் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றுபட்டு நின்று, போராடி, வெற்றிபெற்றுள்ளார்கள்.

கேள்வி: வேளாண் சட்டங்களை ரத்து செய்தது, பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னடைவு என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறதே, இந்த வாதத்தில் ஏதேனும் தகுநிலை (merit) இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

சீத்தாராம் யெச்சூரி: இந்த வாதத்தில் நிச்சயமாக எவ்விதமான தகுநிலை(merit)யும் கிடையாது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு முக்கிய காரணம், பெரும்பான்மையான மக்களின் கைகளில் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்திருப்பதேயாகும். இது பொருளாதாரத்தின் உள்நாட்டுத் தேவையை மந்தமாக்குகிறது. இதன் காரணமாக பல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன, பல மூடப்பட்டும் விட்டன. ஏனெனில் இவை உற்பத்தி செய்த பொருள்களை வாங்குபவர்கள் இல்லை.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தின்போது, இந்தப் பிரச்சனை, மேலும் மோசமாகியது. இந்த நிலையில் ஒன்றிய அரசாங்கம், பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் வரிச் சலுகைகளை வாரி வழங்கிய அதே சமயத்தில், சாமானிய மக்களை விலைவாசி உயர்வின் மூலமாகவும், குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களை நாள்தோறும் உயர்த்துவதன் மூலமாகவும், ஒட்டுமொத்த பணவீக்கத்தை ஏற்படுத்தியது. இது, மக்களின் வாங்கும் சக்தியை மேலும் மோசமாக்கியது. தாங்கள் ஜீவித்திருப்பதற்குத் தேவையான பொருள்களைத் தவிர வேறெதையும் வாங்கிட அவர்களால் இயலவில்லை.

ஆட்சியாளர்கள் கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேலும் மோசமாக்கின. ஏனெனில், நாம் முன்பே விவாதித்ததுபோன்று, விவசாயிகளின் வருமானம் மேலும் மோசமாகி, அவர்கள் நுகர்பொருள்கள் வாங்குவதற்கான சக்தியற்று இருந்திடுவார்கள். நாட்டில் பெரிய அளவிற்கு சந்தை என்பது கிராமப்புற இந்தியாவில்தான் இருக்கிறது. அங்கே வாழும் மக்கள், பணக்கார விவசாயியிலிருந்து சிறுகுறு விவசாயிகள் வரை,  பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பரிதவித்துக்கொண்டிருக்கும் நிலையில், நம் பொருளாதாரத்தில் மக்களின் தேவை என்பது மேலும் சுருங்கிவிடும். இது நடப்பு பொருளாதார மந்தத்தை மேலும் ஆழப்படுத்திடும்.

ஏதேனும் நடக்கும் என்றால் அது, வேளாண் சட்டங்களை ரத்து செய்ததன் மூலம், மக்களின் வாங்கும் சக்தி மேலும் வீழ்ச்சியடைவது தடுத்து நிறுத்தப்பட்டு, அதன்மூலம் உள்நாட்டுத் தேவை வீழ்ச்சியடைவது ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கட்டுப்படுத்தப்படும் என்பதேயாகும்.

கேள்வி: விவசாயிகள் இயக்கத்தில் எண்ணற்ற விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து வந்துகொண்டிருப்பதைப் பார்த்தோம். இத்தகைய ஒருமைப்பாடு நீடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இது மேலும் ஒன்றுபடுவதற்கும் நீடிப்பதற்கும் இடதுசாரிகளின் பங்கு எவ்விதத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மேலும் பல பொதுவான மற்றும் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டங்களில் பல்வேறு விவசாய சங்கங்களின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் ஏற்பட்டன. நவம்பர் 22 அன்று லக்னோவில் நடைபெற்ற விவசாயிகள் மகா பஞ்சாயத்தைப் பார்க்கும்போது, விவசாயிகளின் மத்தியில் இத்தகைய ஒற்றுமை மேலும் மேலும் வலுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றே தெரிகிறது.

நான் முன்பே கூறியதுபோல, விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களுக்கிடையே போராட்டங்களில் காட்டிய ஒற்றுமையின் பலம், எதிர்வருங்காலங்களில் தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) என்ற பெயரில் தொழிலாளர் நலச்சட்டங்கள் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றப்பட்டிருப்பதை எதிர்த்தும், நாட்டின் சொத்துக்கள் தனியார்மயம் மூலமாகச் சூறையாடப்படுவதை எதிர்த்தும் நடைபெறும் போராட்டங்களுடன் ஒரு பொதுவான போராட்டத்திற்கு இட்டுச்செல்லும். நடைபெற்ற போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தியாகிகளாகியிருக்கிறார்கள் என்பதே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் வலுவினை உயர்த்திப்பிடிக்கிறது.

விவசாயிகள் இறந்ததற்கு வருத்தம்கூட தெரிவிக்க மோடி முன்வராத நிலையில், அவர்களுக்காக எவ்விதமான இழப்பீடும் வழங்குவார் என நாம் எதிர்பார்க்க முடியாது. இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளின் குணாம்சம் வரவிருக்கும் காலங்களில் போராடும் மக்கள் மத்தியில் மேலும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்திடும்.

நேர்காணல் கண்டவர்: டி.கே.ராஜலக்ஷ்மி,

தமிழில்: ச.வீரமணி

நன்றி: ஃப்ரண்ட்லைன்