Showing posts with label people's democracy editorial. Show all posts
Showing posts with label people's democracy editorial. Show all posts

Monday, June 6, 2022

மோடி ஆட்சியின் எட்டு ஆண்டுகள்: ஜனநாயகத்தின் மீது நடைபெறும் இரக்கமற்ற தொடர் தாக்குதல்கள்

 



 

மோடி அரசாங்கத்தின் எட்டாண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாஜக பதினைந்து நாட்களுக்குப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தின்போது அது பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, உணவு தானிய உற்பத்தி, சமூக நலத் திட்டங்கள் மற்றும் அயல்துறைக் கொள்கை  சம்பந்தமாக அரசாங்கத்தின் பல்வேறு சாதனைகளை உயர்த்திப்பிடித்திட கூறியிருக்கிறது. இவை அனைத்துமே பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு ஒழிச்சலின்றி  மேற்கொண்ட செயல்பாடுகளின் காரணமாகவே என்றும் பிரச்சாரத்தின்போது அது தம்பட்டம் அடிக்க முடிவு செய்திருக்கிறது. எனினும், இவர்கள் பட்டியலிட்டுள்ள சாதனைகளில் காணப்படாதிருப்பது என்னவென்றால், மோடி அரசாங்கம், குடிமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அரசமைப்புச்சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் (directive principles) குறிப்பிட்டுள்ள சமூக நீதி மற்றும் பொருளாதார நீதியை உத்தரவாதப்படுத்துவதற்கும் ஏற்றவிதத்தில்  ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் அது என்ன செய்தது என்பதேயாகும்.

 

ஜனநாயக நெறிமுறைகளை ஒழித்துக் கட்டும் செயல்கள்

இது வேண்டுமென்றேதான் விடுபட்டிருக்கிறது. ஏனெனில் மோடி அரசாங்கமானது கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயக அமைப்புக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் அளப்பரிய அளவில் தீங்கினை ஏற்படுத்தி இருக்கிறது. எட்டாண்டு கால மோடியின் ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சுருக்கிடவும், குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை வெட்டிக் குறைத்திடவும், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் இயங்கிடும் அனைத்து அமைப்புகளையும் சீர்குலைத்திடவும் படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக நாடாளுமன்றத்தை மதிப்பிழக்கச் செய்திடும் வேலையும்,  நாடாளுமன்ற நடைமுறைகளை இழிவுபடுத்திடும் வேலையும் மோடி அரசாங்கம் இரண்டாவது முறை பதவியேற்றபின்பு உக்கிரமடைந்துள்ளது. நாடாளுமன்றம் சென்ற ஆண்டில் நாற்பது நாட்களுக்கும் குறைவாகவே நடந்திருக்கிறது. கொண்டுவரப்பட்ட சட்ட முன்வடிவுகளின் மீது போதிய அளவிற்கு விவாதங்கள் நடைபெறவில்லை என்பது மட்டுமல்ல, சட்டமுன்வடிவு களை நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் நுண்ணாய்வுக்கு அனுப்பும் நடைமுறையே அநேகமாக ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டது.  ஐமுகூ அரசாங்கத்தின் காலத்தின் மக்களவை 60 முதல் 70 விழுக்காடு சட்டமுன்வடிவுகளை நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு அனுப்பி இருந்தது. அது மோடியின் முதல் முறை ஆட்சிக் காலத்தின்போது 27 விழுக்காடாகவும், இரண்டாவது முறை ஆட்சிக் காலத்தின்போது வெறும் 13 விழுக்காடாகவும் வீழ்ந்தது.  இத்துடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரச்சனைகளை எழுப்புவதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டதும், சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப் படுகையில் வாக்கெடுப்புக்கு விடுவதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டதும் சேர்ந்துகொண்டுள்ளன. மாநிலங்களவையில் மூன்று வேளாண் சட்டங்களும் அடாவடித்தனமாக நிறைவேற்றப்பட்ட வழிமுறையே இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.

 

அரசு விருப்பத்திற்கேற்ப செயல்படும் தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தின் நடைமுறை சுருக்கப்படுவதும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் நெரிக்கப்படுவதும், ஒட்டுமொத்த நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறையையே அரித்து வீழ்த்திக் கொண்டிருக்கிறது. நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல்கள் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையத்திற்கு கடிவாளமிடப்பட்டிருக்கிறது, நாளுக்குநாள் அது அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் ஓர் அமைப்பாக மாறிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. தேர்தல் பத்திரங்கள் விநியோகம், லஞ்ச ஊழலை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறது. இதன் வழியாக ஆளும் கட்சிக்கு நிதி திரட்டுவது என்பது உத்தரவாதப்படுத்தப்படுகிறது. அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் நிதி திரட்டுவதற்கான வாய்ப்பு வாசல்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

 

எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகள்

எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல்கள் இப்போது ஒன்றிய அரசாங்கத்தின் அமலாக்கத்துறை, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் போன்றவற்றின் மூலமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தாலும், அமலாக்கத் துறையினராலும், வருமான வரித் துறையினராலும் குறி வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.  தற்போது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி சுகாதார அமைச்சரும், மகாராஷ்டிர மாநில தேசிய வாதக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு கேபினட் அமைச்சரும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். டஜன்  கணக்கான எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றப் புலனாய்வுக் கழகத்தினராலும், அமலாக்கத் துறையினராலும் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எதிர்க் கட்சியினரின் குரல்வளையை நெரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இவ்வாறு நாணமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறையினரால் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கிறது.  

ஜனநாயக உரிமைகள் பறிப்பு

அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுப்பதும் குடிமை உரிமைகளை நசுக்குவதும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் மற்றும் தேசத் துரோகக் குற்றப்பிரிவு போன்ற கொடுங்கோன்மை சட்டங்களைப் பயன் படுத்துவதன் மூலமாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்திற்குச் சென்றிருக்கின்றன. 2014க்கும் 2020க்கும் இடையே, ஏழு ஆண்டுகளில், சுமார் 690 வழக்குகள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 10,552 பேர்கள்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டவர்களில், அரசியல் செயற்பாட்டாளர்கள், குடிமை உரிமைகள் வழக்கறிஞர்கள், இதழாளர்கள் மற்றும் எழுத்தாளர்களும் அடங்குவர். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124-ஏ என்னும் தேசத் துரோகக் குற்றப் பிரிவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவர்களுக்கு எதிராக ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப் பட்டது. 2014இலிருந்து 2021 வரையிலும் தேசத் துரோகக் குற்றப் பிரிவின்கீழ் 450க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதைத் தடுத்திட, மிரட்டல் உருட்டல்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதழாளர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதுடன், சில ஊடகங்களின் உடைமையாளர்கள் பொருளாதாரக் குற்றங்களுக்காகக் குறிவைக்கப்பட்டு, அது தொடர்புடைய ஏஜன்சிகள் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. கார்ப்பரேட் ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் ஆட்சியாளர்களின் ஊதுகுழல்களாக மாறி இருக்கின்றன.

 

மாநில உரிமைகள் மீது கைவைப்பு 

மோடி அரசாங்கத்தின் மத்தியத்துவப்படுத்தப்பட்ட எதேச்சதிகார நடைமுறையானது ஜனநாயக அமைப்பு முறையின் கூட்டாட்சி அம்சத்தையே காலில் போட்டு  மிதித்திருக்கிறது. மாநிலப் பட்டியலிலும், பொதுப் பட்டியலிலும் உள்ள பல துறைகளில் மாநிலங்களுக்கு இருந்து வந்த உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்றிய அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்கள் ஒன்றிய ஆட்சியின் கருவிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள், மாநில அரசாங்கங்களின் விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்,  சில சமயங்களில்  மாநில அரசாங்கங்களின் வேலைகளில் குறுக்கிடு கிறார்கள். ஜனநாயகத்திற்குப் பதிலாக இவர்கள் மாற்ற விரும்புவது, பெரும்பான்மையினரின் ஆட்சியாகும். நாடாளுமன்றத்திலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மையைப் பயன் படுத்திக்கொண்டு, மத மாற்றத் தடைச்சட்டம், கால் நடைகளை வெட்டுவதற்குத் தடை போன்ற சட்டங்களை சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவற்றையும் நிறை வேற்றியிருக்கிறார்கள். இச்சட்டங்கள் அனைத்துமே சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதைக் குறியாகக் கொண்டவைகளாகும். இத்தகைய சட்டங்கள் இந்துத்துவா அமைப்பினர்களால் சிறுபான்மையினத்தவர் மீது குரூரமானமுறையில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கெல்லாம் சட்டப்பூர்வமான பாதுகாப்பை அளித்து வருகின்றன. 

 

எதேச்சதிகார ஆட்சி திணிப்பு

இவை அனைத்தும் எதேச்சதிகார ஆட்சியை ஒருமுகப்படுத்தும் அடையாளங்களாகும். ஆயினும் நாட்டில் வெளியாகிக் கொண்டிருக்கும் முன்னணி செய்தித்தாள்களோ இவற்றை முழுமையாக வெளிச் சத்திற்குக் கொண்டுவரத் தயங்குகின்றன. இந்தியாவை, இந்துத்துவா எதேச்சதிகார அரசாக மாற்ற நடந்துகொண்டிருக்கும் எதார்த்த உண்மைகளை மிகவும் கவனத்துடன் மூடிமறைக்கின்றன. பாஜக அரசாங்கத்தின் எட்டு ஆண்டு கால ஆட்சியின் மையமான உண்மை என்பது, இந்தியாவை, ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலின்படி மாற்றியமைக்க இடைவிடாது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதேயாகும். இதனை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே இதுவரை இருந்துவந்த நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு, நீதித்துறையின் பங்களிப்பு, நிர்வாக அமைப்பு மற்றும் ஊடகங்கள் முதலானவை தங்களின் நயவஞ்சகமான எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு சேவகம் செய்யக்கூடிய விதத்தில் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  பொருளாதாரக் கொள்கையின் அனைத்து வரம்புகளும், இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணிக்கு முட்டுக்கொடுக்கும் விதத்தில் மாற்றி யமைக்கப்பட்டிருக்கின்றன. எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியின்கீழ் ஏதேனும் படிப்பினையைப் பெற்றிருக்கிறோம் என்றால் அது நாட்டின் ஜனநாயகமும் அடிப்படைப் பொருளாதார, சமூக மற்றும் குடிமக்களின் குடியுரிமைகளும் ஆள்வோரால் ஆபத்திற்குள்ளாகி இருக்கின்றனஎன்பதேயாகும்.

ஜூன் 1, 2022, தமிழில் : ச.வீரமணி

 

Thursday, May 12, 2022

இலங்கை நெருக்கடியும் மக்களின் போராட்டமும்

 


இலங்கை நெருக்கடியும் மக்களின் போராட்டமும்

(தமிழில்: ச.வீரமணி)

இலங்கையில் மே 9 அன்று நடைபெற்ற வன்முறை நிகழ்வுகள், நாடு மிகவும் ஆழமான பொருளாதார நெருக்கடியால் சீர்கேடு அடைந்துகொண்டிருந்த நிலையில் அதற்கு ஒரு கூர்மையான நிவாரணத்தை அளித்திருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடி இப்போது அரசியல் அமைப்பு முறை மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் முழுமையாகக் கவ்விப்பிடித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குப் பிரதான காரணமாக ராஜபக்சே குடும்பத்தின் ஆட்சி அமைந்திருக்கிறது. ஜனாதிபதியான கோட்டபய ராஜபக்சே தன்னுடைய நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி, தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆட்சிக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு முயற்சியாக தன் மூத்த சகோதரர் மகிந்தா ராஜபக்சேயை பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யக் கோரியிருக்கிறார். முன்னதாக, ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்திருந்தது. அதனைத்தொடர்ந்து மகிந்தா ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் செய்யப்பட்டிருந்தது.

ராஜபக்சே அரசு மேற்கொண்ட பேரழிவுதரத்தக்க முடிவுகள்தான் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும். வரிகளை வெட்டியது, வேளாண்மைக்குப் பயன்படுத்துவதற்கான ரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது, வெற்று ஆரவாரத் திட்டங்களுக்கு அதிக அளவில் முதலீடுகளைச் செய்தது,  எதேச்சாதிகார ராஜபக்சே ஆட்சி மேற்கொண்ட இந்நடவடிக்கைகள் அனைத்தும் அரசின் வருவாயைக் குறைத்தது, வேளாண் உற்பத்தியைச் சீர்குலைத்தது, கடன் சுமை அதிகரிப்புக்கு இட்டுச் சென்றது.

கோவிட் பெருந்தொற்று பொருளாதார நெருக்கடியை மேலும் விரைவுபடுத்துவதற்கே இட்டுச் சென்றது. இதன் காரணமாக சுற்றுலா முற்றிலுமாக நின்றதால் அந்நியச் செலாவணி வருமானங்களில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இத்துடன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இலங்கைத் தொழிலாளர்கள் பணம் அனுப்புவதும் நின்றுவிட்டது. 

பொருளாதாரம் நிலைகுலைந்ததைத் தொடர்ந்து, மக்கள் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் கிடைக்காமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். விலைவாசிகளும் பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு தாங்கமுடியாத அளவிற்கு நிலைமைகள் சென்றபின்னர் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் துவங்கிவிட்டார்கள். மார்ச் 31இலிருந்து கிளர்ச்சியாளர்கள் மத்திய கொழும்பு, காலிமுகத்திடல் பூங்கா பகுதியிலும், பிரதமரின் இல்லத்திற்கு வெளியேயும்  அணிதிரண்டு, முகாமிட்டிருக்கிறார்கள்.  அமைதியானமுறையில் நடந்து வந்த இந்தக் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தப் போராட்டமானது, ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என அனைத்துத்தரப்பினரின் ஆதரவையும் பெற்றிருக்கிறது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களின் இக்கிளர்ச்சி இயக்கத்தில் தொழிலாளர் வர்க்கம் முக்கியமான பங்களிப்பினைச் செய்திருக்கிறது. தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 28 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றார்கள். பின்னர் மீண்டும் மே 5 அன்று இரண்டாவது ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் மற்றும் ஹர்த்தால் நடைபெற்றன. இதிலும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர அலுவலர்கள் உட்பட ஏராளமானவர்கள் பெரிய அளவில் பங்கேற்றார்கள். இந்த வேலை நிறுத்தங்களின்போது ஜனாதிபதியும் அவருடைய அரசாங்கமும் ராஜினாமா செய்திட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டன. 

 இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டங்கள் வீறுகொண்டு நடைபெற்றதைத் தொடர்ந்து பீதியடைந்த ஜனாதிபதி கோட்டபயா, இரண்டாவது முறையாக ஒரு மாத கால அளவில், மீண்டும் அவசரநிலைப் பிரகடனம் செய்தார். ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. எனினும் போராட்டக்காரர்கைள் அதனை மீறினார்கள்.   உண்மையில் ஆட்சியாளர்கள் விழிபிதுங்கி நின்றனர். அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மே 9 அன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் என்பவவை, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டத்தை சீர்குலைப்பதற்காக, ராஜபக்சே தரப்பில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முயற்சியாகும்.

மகிந்த ராஜபக்சே, போராடுவோரின் கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்வதற்குப் பதிலாக, தன் கட்சி (எஸ்எல்பிபி) ஆதரவாளர்களை தன் இல்லத்திற்கு அழைத்து, அவர்கள் மத்தியில் ஆத்திரமூட்டும் விதத்தில் பேசிய பின்னர், அவருடைய ஆதரவாளர்கள் வெளியே வந்து, அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், அவர்களின் தற்காலிக பந்தல்களை நாசமாக்கி இருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து காலி ஃபேஸ் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த முகாம்கள் மீது தாக்குதல்கள் தொடுத்தனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தார்கள். அங்கே நின்றிருந்த காவல்துறையினர் இவர்களை அடக்குவதற்குத் தவறிவிட்டனர்.

ஆளும் கட்சித் தரப்பு ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய கேவலமான வன்முறை நடவடிக்கைகள்தான் கொழும்புவுக்கு வெளியிலும் போராட்ட உணர்வைக் கொண்டு சென்று, இதற்குப் பதிலடிகொடுக்கும் நிலையை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமரின் இல்லம், டெம்பிள் ட்ரீஸ் முன் (Temple Trees) கூடி, அதனைத் தாக்க முற்பட்டார்கள். இறுதியாக, பிரதமர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்ட மகிந்த ராஜபக்சேயும் அவருடைய குடும்பத்தினரும்  ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பிற்காகக் கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இதன் பின்னர் ராஜபக்சே குடும்பத்தினரின் அனைத்து வீடுகளும், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளும் குறிவைத்துத் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன.

இதற்கிடையில், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும், சமாஜி ஜன பாலவெகயா கூட்டணி (SJB alliance), ஜனாதிபதி கோட்டபயா தலைமையின்கீழ் அமையும் எவ்விதமான அனைத்துக் கட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்திலும் இணைய மாட்டோம் என அறிவித்தது. கோட்டபயாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். இடதுசாரிக் கட்சிகளும், ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) ஆகியவையும் புதிய தேர்தல்கள் நடைபெறும் வரையிலும் இடைக்கால ஜனாதிபதியும், இடைக்கால அரசாங்கமுமே வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

நாட்டில் அளவிடற்கரிய அதிகாரங்களைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி கோட்டபயா வெளியேற வேண்டும் என்று கோருவது நியாயமே. ஏனெனில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் குளறுபடிகளுக்குப் பிரதான காரணமே இவர்தான். இவரால் உருவாக்கப்பட்டதுதான் இப்போதிருந்துவரும்  எதேச்சாதிகார தேசியப் பாதுகாப்பு அரசு. பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும் பின்னிப்பிணைந்தவைகளாகும்.

ராஜபக்சே ஆட்சி அகற்றப்படுவதுடன், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளில் ஜனநாயக பூர்வமான முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி ஆட்சி ஒழித்துக்கட்டப்பட வேண்டும். மத்தியத்துவப்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்பு அரசும் கலைக்கப்பட வேண்டும். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக மக்கள் ஆதரவு வளர்ச்சிப் பாதைக்கான கொள்கை ஏற்படுத்தப்பட வேண்டும். ராஜபக்சே குலத்தினரின் மீதான மாயை காணாமல் போயிருப்பதன் காரணமாக அது சிங்கள பௌத்தமத தேசியவாதம் மங்குவதற்கும் இட்டுச் செல்வதுடன், அதற்குப் பதிலாக மொழி மற்றும் மத சிறுபான்மையினர் மீது ஜனநாயகபூர்வமான அணுகுமுறையுடன் கூடிய அனைத்து மக்களின் ஒற்றுமைக்கான அடித்தளம் அமைக்கப்படும் என நம்புவோம்.

இலங்கை அரசாங்கம், கடன் பெறுவதற்காக, சர்வதேச நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு சர்வதேச நிதியம் அளிக்கும் நிபந்தனைகள் என்பவை, சமூக நலத்திட்டங்களில் வெட்டு, சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் தனியார்மயத்தை மேலும் விரிவுபடுத்திட வேண்டும் என்பவைகளாகும். இப்போதுள்ள ஆட்சியாளர்கள் இவற்றுக்கு உட்படுவதைத் தவிர வேறு வழியில்லை.. ஆனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆழமான கட்டமைப்பு நெருக்கடிக்கு இது தீர்வாகாது.

இதற்கு எதிராக மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் விதத்திலும், நிதிமூலதனத்தின் இழிவுகளிலிருந்து இலங்கையைப் பாதுகாத்திடும் விதத்திலும் ஒரு மாற்றுப்பாதை அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இலங்கையில் உள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு ஓர் அபூர்வமான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.  அதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறைகளில் மறுகட்டமைப்பை ஏற்படுத்திடவும், அத்தகைய மாற்றத்திற்கான போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டிடவும் அவர்கள் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

(மே 11, 2022)

(நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி)

 

Friday, February 25, 2022

ஆளுநர்கள் நியமனம், பங்களிப்பு, மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்



ஆளுநர்கள் நியமனம், பங்களிப்பு, மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்

-தமிழில் : ச. வீரமணி

[ஆளுநர் பதவி தொடர்ந்து இருந்திட வேண்டும் எனக் கருதினால், பின் அது சர்க்காரியா ஆணையம் குறிப்பிட்டிருந்த அளவுகோல்களை நிறைவேற்றும் விதத்தில், மாநில முதலமைச்சரால் பரிந்துரைக்கப்படும் மூன்று புகழ்பெற்ற நபர்களிலிருந்து ஒருவர்  குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட வேண்டும்.”]

கேரள மாநில அரசாங்கம், ஆளுநர்கள் நியமனம் அல்லது ஆளுநர்களைத் திரும்ப அழைப்பது தொடர்பாக மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரம் அளித்திடும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்குத் திருத்தங்களை முன் மொழிந்து, ஒன்றிய அரசாங்கத்திற்கு எழுதியிருக்கி றது.  ஒன்றிய அரசுமாநிலங்கள் அரசு ஆகியவற்றிற்கி டையேயான உறவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்த நீதியரசர் புஞ்ச்சி (Justice Punchhi) ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இது செய்யப்பட்டி ருக்கிறது.  ஆளுநர்களின் பங்கு குறித்து மாற்றங்கள் தேவை என்று நீண்டகாலமாக உணரப்பட்டு வந்த தன் அடிப்படையைப் பிரதிபலிக்கும் வகையில் கேரள அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாடை கூறும் விதமாக இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில் இப்போது ஒன்றிய அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் ஒன்றிய அரசாங்கத்தின் ஓர் ஏஜண்டாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

156ஆவது பிரிவில்  திருத்தம் வேண்டும்

ஆளுநர் ஒருவர் தன்னுடைய அரசமைப்புச்சட்டக் கடமைகளைச் செய்கையில், அரசமைப்புச்சட்டத்தின் விதிமுறைகளை மீறுகிறார் என்று காணும்போது, அவரைத் திரும்ப அழைத்திடும் விதத்தில் மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளித்திட அரசமைப்புச் சட்டத்தின் 156ஆவது பிரிவில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று இக்கடிதத்தில் கேரள அரசாங்கம் மேலும் கேட்டிருக்கிறது. சமீப காலங்களில், மோடி 2014இல் பிரதமராக வந்த பின்பு, ஆளுநர்கள் நியமனம் என்பது ஒன்றிய  அரசாங்கத்தில் ஆட்சியில் உள்ள கட்சியின் தேவைக ளுக்குச் சேவகம் செய்யும் விதத்தில் மிகவும் வெட்கக்கேடான விதத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

ஆளுநர்களில் சிலர் ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்டவர்கள். மற்றவர்கள் ஆளும் கட்சியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று விரும்புகிற வர்களும், ஒன்றிய அரசின் ஆசைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல்வாதிகளாகவும் இருக்கிறார்கள். கேரளாவில், ஆளுநர் ஆரிப் முகமது கான், அரசமைப்புச்சட்ட நெறிமுறைகளையெல்லாம் கிடப்பில்போட்டுவிட்டு மிக மோசமான நிலைப்பாடு களை எடுத்துக் கொண்டிருக்கிறார். நடப்பு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஆளுநர் ஆரம்பத்தில் சட்டமன்றத்தில் உரைநிகழ்த்துவதற்காகக் கையெ ழுத்திட மறுத்துவிட்டார். எனினும், கடைசிக் கட்டத்தில் மனந்திருந்தி அரசமைப்புச்சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு முழு உரையையும் வாசித்தார். பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனங்களின்போதும் மாநி லப் பல்கலைக் கழகங்களின்  வேந்தர் என்ற முறையில் அவருடைய பங்கு  சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.   

கண்ணூர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மறு நியமனம் தொடர்பாக முதலில் அவர் ஓர் உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார். பின்னர் அது தொடர்பாக சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார். இப்போது அவை  கேரள உயர்நீதிமன்றத்தால் சரிசெய்யப்பட்டு, நியமனம்  செல்லத்தக்கது என்று கூறப்பட்டிருக்கிறது.

 

மாநில நிர்வாகத்தில் தலையிடும் போக்கு

பாஜக ஆட்சியில் இல்லாத வேறு சில மாநிலங்க ளிலும் ஆளுநர்கள் மிகவும் நாணமற்ற முறையிலும், ஒருதலைப்பட்சமாகவும் நடந்து கொண்டிருக்கி றார்கள். மேற்கு வங்க ஆளுநர், ஜகதீப் தன்கர், முதலமைச்சருக்கு எதிராகவும், மாநில அரசாங்கத் திற்கு எதிராகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வந்தார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங் கத்தின் துறைத் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கட்டளை பிறப்பிக்கும் பணிகளிலும் ஈடுபட்டார். மகாராஷ்டிராவில், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மாநில அரசாங்கத்தால் மாநில சட்டமன்ற மேல வைக்கு நியமனம் செய்யப்பட்ட 12 உறுப்பினர்க ளுக்கான பரிந்துரைகள் மீது முடிவெதுவும் எடுக்காது  அவற்றின் மீது உட்கார்ந்திருந்தார். பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் நியமனத்திலும் வேந்தர் என்ற அந்தஸ்தில் தன் இஷ்டத்திற்குத் தலையிட்டார். இவ்வாறு மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளுநர் தலை யிட்டதன் காரணமாக, சட்டமன்றத்தில் 2021 டிசம்பரில் மகாராஷ்டிரா பொதுப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நிறை வேற்றப்பட்டுள்ளன.  

இந்தத் திருத்தங்கள், ஆளுநரான வேந்தருக்கும் துணை வேந்தருக்கும் இடையே உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சரை இணை வேந்தராக நியமிக்கப்படுவதற்காகவும், துணை வேந்தர்கள் நியமனங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டன. இந்தத் திருத்தத்தின்மூலம் ஆளுநர், அவருக்கு அனுப்பப் படும் இரு நபர்களின் பெயர்களில் ஒருவரை அவர் ஒரு மாத காலத்திற்குள் தேர்ந்தெடுத்திட வேண்டும் என்று கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாட்டில், ஆளுநர் ஆர்.என்.ரவியும்கூட பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் சம்பந்தமாக நேரடியாகப் பிரச்சனைகளைக் கையாண்டு கொண்டிருக்கிறார். ‘நீட்தேர்வு சம்பந்தமாக, சட்ட மன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை நீண்டநாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்து விட்டு, திருப்பி அனுப்பியிருந்தார். பிரச்சனை என்ன வென்றால்,  ஒரு குறிப்பிட்ட ஆளுநர் அல்லது வேறொரு வர் தவறாக நடந்துகொள்கிறார் என்பதல்ல. அதற்கும் மேல்  ஆழமான அளவில் பிரச்சனைகள் இதில் அடங்கி யிருக்கிறது

 

ஒன்றிய அரசுக்கு கடமைப்பட்டவர்களாக...

ஆளுநர்களை நியமனம் செய்வது தொடர்பாக,  அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய நிலை,  அந்த நபர் ஒன்றிய அரசாங்கத்தால் நியமனம் செய்யப்படக் கூடிய நிலை இருந்து வருகிறது. இது தவிர்க்க முடியாத விதத்தில்  அந்தப் பதவியில் நியமனம் செய்யப்படும் நபர், முழுமையாக ஒன்றிய அரசின் பிரதிநிதியாகச் செயல்படுவதற்கு இட்டுச்செல்கிறது. இவ்வாறு ஒன்றிய அரசாங்கம் ஆளுநரை நியமனம் செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கும்வரை, ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுவது, அதற்காகப் பொது வாழ்வில் ஈடுபட்ட வல்லுநர்கள் அல்லது அரசியல்வாதி கள் அல்லாத சமூகச் செயற்பாட்டாளர்கள் போன்ற வர்களை அப்பதவிக்காகப் பரிந்துரைப்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது

உண்மையில், கடந்த கால அனுபவங்கள் நமக்குக் காட்டுவது என்னவென்றால், அரசியல்வாதிகள் அல்லாது ஓய்வுபெற்ற அதிகாரிகள், ஆளுநர் பொறுப்பு க்கு வந்திருந்தவர்கள், மிகவும் மோசமாகவே நடந்து கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் இந்தப்பதவி யில் வேலை எதுவும் இன்றி சம்பளம் மட்டும் வாங்குவதற்காக முற்றிலுமாக ஒன்றிய அரசாங்கத் திற்கே கடமைப்பட்டவர்களாக இருந்து வந்திருக்கி றார்கள்.

 

ஸ்ரீநகர் மாநாட்டு பரிந்துரை

அதனால்தான், ஒன்றிய அரசாங்கம்-மாநில அர சாங்கங்கள் உறவுகள் தொடர்பாக 1983இல் ஸ்ரீநகரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் , ஆளுநர் பதவிக்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்தினால் அனுப்பப்படும் நபர்களின் பட்டியலிலிருந்து ஒருவரைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுத்து நியமனம் செய்திட வேண்டும் என்று பரிந்துரைத்து அறிக்கை வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், நீதிபதி சர்க்கா ரியா ஆணையத்திற்கு அனுப்பியிருந்த முன்மொழிவி லும், புஞ்ச்சி ஆணையத்திற்கு அனுப்பியிருந்த முன் மொழிவிலும், இதையே கூறியிருந்தது. 2008 அக்டோப ரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, ஒன்றிய அரசாங்கம்-மாநில அரசாங்கங்கள் இடையே உறவுகளை மாற்றியமைப்பது தொடர்பான அணுகு முறை ஆவணம் (‘Approach Paper on Restruct uring of Centre-State Relations) ஒன்றை நிறை வேற்றியது. இந்த ஆவணத்தில் கூறப்பட்டிருப்பதாவது

ஒன்றிய அரசாங்கத்தால் மாநிலங்களுக்கு ஆளு நர்கள் நியமனம் செய்யப்படும் முறை காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது. இது கூட்டாட்சி ஜனநாயக அரசியலுக்கு உகந்ததல்ல. ஆளுநர் பதவி தொடர்ந்து இருந்திட வேண்டும் எனக் கருதினால், பின் அது சர்க்காரியா ஆணையம் குறிப்பிட்டிருந்த அளவுகோல்களை நிறைவேற்றும் விதத்தில், மாநில முதலமைச்சரால் பரிந்துரைக்கப்படும் மூன்று புகழ்பெற்ற நபர்களிலிருந்து ஒருவர்  குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட வேண்டும்.” இப்போதுள்ள ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் ஆளுநர் நியமனம் தொடர்பாகவோ மற்றும் அவரின் செயல்பாடுகள் தொடர்பாகவோ எவ்விதமான சீர்திருத்தத்திற்கும் சாத்தியம் இல்லை. என்ன செய்ய முடியும் என்றால் எதிர்க்கட்சி மாநில அரசாங்கங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக விழிப்புடன் இருந்திட வேண்டும். இத்துடன் மாநில சட்டமன்றங்கள், பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் போன்றவற்றில், சட்டத்தில் அளிக்கப் பட்டுள்ள விதிமுறைகளையும் வரம்புகளையும் ஆளுநர் மீறமுடியாத விதத்தில் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.   

பிப்ரவரி 23, 2022, 
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி