Tuesday, December 31, 2013

ஏகாதிபத்திய எதிர்ப்பு வலுப்படவேண்டும் : சீத்தாராம் யெச்சூரி

முதலாளித்துவப் பொருளாதாரம், 2008ல் உலகப் பொருளாதாரத்தைப் பீடித்தநெருக்கடியிலிருந்து மீண்டுவிட பகீரதப்பிரயத்தனம் செய்தபோதிலும், அது தன்னு டைய நெருக்கடியிலிருந்து மீளமுடியாமல் 2013லும் தொடர்ந்து தள்ளாடிக் கொண்டும், தடுமாறிக் கொண்டும்தான் இருந்தது. சோசலிச சீனத்தைத் தவிர, இந்தியா உட் பட பொருளாதார ரீதியாக வளர்ந்து வந்தமற்ற அனைத்து நாடுகளும் 2008ல் நெருக்கடிக்குத் தாக்குப் பிடித்த போதிலும், பின்னர் தொடர்ந்து அதனைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தள்ளாடத் தொடங்கிவிட்டன. உலகப் பொருளாதார நெருக்கடி 2013ல் ஐந்தாவது கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.
இந் நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அதுமேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் புதிய நெருக்கடிக்கான விதைகளையே விதைத்துள்ளது. எவ்விதக் கட்டுப்பாடுமில்லாது இருந்து வந்த ஏகாதிபத்திய உலக மயம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குஉலகில் சமத்துவமின்மையை உருவாக்கிய தாலும், உலகில் பெரும்பான்மையான மக்க ளின் வாங்கும் சக்தியையும் வீழ்ச்சியுற வைத்ததாலும், பொருளாதார வளர்ச்சியில் நெருக்கடி யை ஏற் படுத்தியது. இதிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என்பதற்காக அது மலிவான’’ அல்லது எளிய’’ (`cheap’ or `sub-prime’) தவணைகளில் கடன்களை அளித்தது. இது உலகில் உற்பத்தி வளர்ச்சிக்குப் பாய்ச்சலை ஏற்படுத்தும் என்றும், அதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த தேவைகளையும் தாங்கிப் பிடித்திடலாம் என்றும் முதலாளித்துவம் நம்பியது. ஆனால் கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டதால், 2008 பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்து பல பன்னாட்டு நிதிநிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்பட்டது. இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக முதலாளித்துவ நாடுகளில் ஆட்சி புரிந்த அரசுகள் முதலாளிகளுக்கு முழுமையான அளவில் நிதியை வாரி வழங்கின. அவ்வாறு செய்ததன் மூலம் கார்ப்பரேட்டுகளின் திவால் நிலைமைகள் அரசின் திவால் நிலைமைகளாக மாறின.
இதனை அடுத்து, அரசாங்கங்கள் தங்கள் திவால்தன்மையைச் சரிக்கட்டுவதற்காக, தாங்கள் சமூகநலத்திட்டங்களுக்காக ஒதுக்கி வைத்த தொகைகளையும், தொழி லாளர்களின் ஊதியங்களையும் வெட்டிக் குறைத்தன, புதிதாக எவரையும் வேலைக்கு எடுக்க வில்லை, ஊழியர்களின் வேலை நேரங்களையும் அதிகரித்தன. ஓய்வூதியம் மற்றும் இதர உதவித் திட்டங்களையும் தயவு தாட்சண்யமின்றி வெட்டியுள்ளன. இவ்வாறு இவை மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகப் பொருளாதார நெருக்கடியில் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது இவற்றின் விளைவாக மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறுகியதால், அது பொருளாதார நிலைமை மேலும் சுருங்குவதற்கு இட்டுச் சென்றுள்ளது. நாம் 2014ல் அடி எடுத்து வைக்கக்கூடிய இன்றைய நிலையில், உலகப் பொருளாதாரம் இந்நெருக்கடி வலைக்குள் சுற்றி வளைக்கப்பட்டு மேலும் ஆழமாகச் சிக்கும் நிலைக்கு அநேகமாகத் தள்ளப்படலாம். முதலாளித்துவ அமைப்புக் குள்ளேயே மேற்கொள்ளப்படும் எந்தவித சீர்திருத்தமும் மக்களுக்கு நிவாரணத்தை வழங்கிட முடியாது என்பதை இது மேலும்உறுதிப்படுத்தி இருக்கிறது. முதலாளித்துவத் திற்கு அரசியல் மாற்றாக விளங்கக் கூடியமாற்று சமூக - பொருளாதார அமைப்பு முறை தான் இந்நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்றி அவர்களுக்கு நிவாரணத்தை அளித்திட முடியும்.
எனவே 2014ஆம் ஆண்டில் உலகின் பல நாடுகளில் மக்கள் தங்கள் சமூக மாற்றத்திற்கான போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்வார்கள் என்பது திண்ணம்.பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இவ்வாறு மக்கள் உலகம் முழுதும் சக்தி மிக்க போராட்டங்களை நடத்தினார்கள். குறிப்பாக, ஐரோப்பிய நாட்டு மக்கள், அதிலும் குறிப்பாக கிரீஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி நாட்டு மக்கள் வீரம் செறிந்த போராட்டங்கள் பலவற்றை நடத்தியதைப் பார்த்தோம். மக்கள் மத்தியில் இவ்வாறு கோபாவேசம் மிகவும் ஆக்ரோஷமாக வளர்ந்தோங்கி இருந்ததன் காரணமாக, அந்நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் அரசாங்கங்கள் பல மண்ணைக் கவ்வின. இவ்வாறு மக்கள் மத்தியில் கோபம் இருந்த போதிலும், உலகம் முழுதும் அரசியலில் வலதுசாரிப்பக்கம் சாய்மானம் நிகழ்ந்திருப்பதும் நடந்திருக்கிறது. எனினும், அதே சமயத்தில் ஜப்பான், போர்ச்சுக்கல், செக் குடியரசு, சிலி போன்ற நாடுகளில் நடைபெற்றது தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதாயம் அடைந்துள்ளதையும் பார்க்க முடிகிறது.
ஏகாதிபத்தியம் தனக்கேற்பட்ட நெருக்கடியின் சுமைகளை மூன்றாம் உலக நாடுகளின் மீது ஏற்ற மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக அந்நாடுகளில் நடைபெற்ற போராட்டங் களும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களைக் கூறிட லாம். இந்நாடுகளில் அமைந்துள்ள முற் போக்கான ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நவீன தாராளமய எதிர்ப்பு அரசாங்கங்கள், இந்தியா போன்ற நவீன தாராளமய பொருளா தார சீர்திருத்தங்களை எவ்விதக் கூச்ச நாச்சமு மின்றித் தழுவிக் கொண்ட மூன்றாம் உலக நாடுகளைப் போல் அல்லாமல், மக்களுக்கு நிவாரணம் அளித்திட மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியமானது, வெனிசுலாவில் சாவேஸ் மரணத்திற்குப் பின் அத் துணைக்கண்டத்திலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அணுகுமுறை கைவிடப்படலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக சாவேஸுக்குப் பின் பொறுப்புக்கு வந்த மதுரோ மார்ச்சில் நடைபெற்ற தேர்தலில் மிகக் குறுகிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் இதில் மிக நம்பிக்கையுடன் இருந்தது. ஆயினும், டிசம்பரில் நடைபெற்ற நகராட்சிகளுக்கான தேர்தல்களில் சாவேஸின் சோசலிஸ்ட் கட்சி மகத்தான வெற்றி பெற்று, மக்கள் தொடர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் மனோபாவத்துடனேயே இருப்பதை உறுதிப் படுத்தினார்கள். முதலாளித்துவத்திற்கு மாற்று நவீன தாராளமயம் அல்ல, மாறாக சோசலிசம்தான் என்பதை உலகுக்குப் பறைசாற்றும் வண்ணம், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்று வரும் முற்போக்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன
. இவ்வாறு, நவீன தாராளமய ஏகாதிபத்தியம் விளைவித்துள்ள துன்ப துயரங்களுக்கு எதிராக போராடிக் கொண் டிருக்கும் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும் மாமருந்தாக, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் முற்போக்கு நடவடிக்கைகளில் 2014ஆம் ஆண்டு திகழும் என்பதும் திண்ணம்.இத்தகைய சூழ்நிலைகளில், அமெரிக்கஏகாதிபத்தியம் தன்னுடைய உலகளாவிய மேலாதிக்கத்தை ஒருமுனைப் படுத்துவதற்காக, உலகைத் தன்னுடைய ஒருதுருவ உலகாக உருவாக்கிட மேற் கொண்டிடும் முயற்சிகள், அதற்கு அவ் வளவு எளிதானவைகளாக இல்லாமல் மிகவும் கடினமாகிவிட்டன. அது, இந்தத் தடவை சிரியாவிற்கு எதிராக மற்றொரு ஏகாதிபத்திய ராணுவ ஆக்கிரமிப்பைக் கட்ட விழ்த்துவிட முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், இதில் ஐ.நா.வை ஈடுபடுத்த அமெரிக்க மேற்கொண்ட முயற்சிகளை ரஷ்யாவும் சீனாவும் தங்கள் ரத்து அதி காரத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாகத் தகர்த்துவிட்டன. இராக்கில் ராணுவ ஆக்கிர மிப்பை மேற்கொண்டதுபோலவே ஈரானிலும் மேற்கொள்ள அமெரிக்காவிற்கு நமைச்சல் எடுத்தபோதிலும், அதனால் அதில் வெற்றிபெற முடியவில்லை.
அமெரிக்க ஏகாதிபத் தியம் இப்பிராந்தியத்தில் பதற்றம் இல்லாதவாறு அமையக்கூடிய விதத்தில், ஈரானுடன் ஒருவிதமான ஒப்பந்தத்தை செய்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.இருந்தபோதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம், மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள சுதந்திர நாடுகளின் உள்விவகாரங்களில் தன்னுடைய கிரிமினல் தனமான தலையீடுகளைத் தொடர்கிறது. ``அரபு வசந்தம்’’ போன்று மெய்யான ஜனநாயகங்களுக்காக இந்நாடுகளில் இயக்கங்கள் நடைபெற்றபோதிலும், இந்நாடுகள் பலநெருக்கடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. எகிப்தில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், முஸ்லீம் கட்சியின் செல்வாக்கின் கீழ் அடிப்படைவாதத்தை மேம்படுத்த முயன்ற தால், அதற்கு எதிராக ராணுவம் தலையிட வேண்டியிருந்தது. அமெரிக்காவால் தூண்டப்பட்ட சிரியா மீதான உள்நாட்டு யுத்தம் லெபனான் போன்ற அண்டை நாடு களுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவாக, இராக்கில் பல்வேறு குழுக்கள் சண்டையிட்டுக்கொள்வதன்மூலம் பெரும்பான் மையான அப்பாவி மக்கள் பலியாகிக் கொண் டிருக்கிறார்கள். அதேபோன்று துனீசியா, லிபியா ஆகிய நாடுகளிலும் கிளர்ச்சிகள் நீடிக்கின்றன. சூடான் இரு நாடுகளாகப் பிரிந் திருக்கிறது. சோமாலியாவில் மிகவும் பயங்கரமானமுறையில் மோதல் தொடர்கிறது. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்கத்தை விரிவாக்கிடுவதற் காக அனைத்து நாடுகளிலும் தலையிட்டுக் கொண்டிருப்பது தொடர்கிறது. அமெரிக்காவின் இத்தகைய மேலாதிக்க முயற்சிகளை புவிவெப்பமயமாதல் மற்றும் உலக வர்த்தக அமைப்பின்கீழ் விவசாயம் தொடர்பான ஒப்பந்தம் ஆகியவை குறித்த சர்வதேச பேச்சுவார்த்தைகளின்போதும் பார்க்க முடிகிறது. சமீபத்தில் முதலாவது நிகழ்ச்சிநிரல் தொடர்பாக வார்சா விலும், இரண்டாவது நிகழ்ச்சிநிரல் தொடர்பாக பாலியிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின்போது, வளர்ந்த (முதலாளித் துவ) நாடுகள் பொருளாதாரத்தில் மீட்சிஅடைவதற்கு சாதகமான நிலைமை களை உருவாக்கக்கூடிய விதத்தில் வளர்முக நாடுகளை மிரட்டிப் பணியவைத் திடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதைப் பார்த்தோம்.
துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய ஏகாதிபத்தியவாதிகளின் முயற்சிகளை எதிர்த்து நின்று வளர்முக நாடுகளின் பக்கம் அணிகோர்த்து நிற்பதற்குப் பதிலாக, அவர்களுடன் இணைந்துநின்று வளர்முக நாடுகளின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, இந்தியா ஏகாதிபத்தியத் தின் இத்தகைய நிர்ப்பந்தங்களுக்கு அடி பணிந்து போவது என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அமெரிக் காவால் இந்தியத் தூதரக அதிகாரிஒருவர் மிகவும் முரட்டுத்தனமாக நடத்தப் பட்டிருக்கும் நிகழ்ச்சியிலிருந்தாவது, இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாகக் குறைத்திருப்பவர்கள் தங்கள் கண்களைத் திறந்துகொள்ள முன்வர வேண்டும். ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக இந்தியாவை மாற்றியுள்ள இந் திய அரசாங்கத்தின் கொள்கையை மாற்றி அமைத்திட அரசாங்கத்தின் மீது வலுவான முறையில் நிர்ப்பந்தத்தை அளித்திட, 2014ஆம்ஆண்டில், நாட்டு மக்கள் முன்வர வேண்டும்.
ஏகாதிபத்தியம் தன்னுடைய நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, நம் நாட்டைச் சுற்றிலும் உள்ள அண்டை நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவ தற்கு மிகவும் ஆர்வம் காட்டிக் கொண் டிருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில் இது மிகவும் முக்கியமாகும். சமீபத்திய தேர் தல் களுக்குப்பின் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்றதன்மை, வங்க தேசத் தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில் அடிப்படைவாத சக்திகள் உருவாக்கியுள்ள உள்நாட்டுப் பதற்ற நிலைமை, இந்தியாவிற்கு உண்மையான ஆபத்தாக இருக்கக்கூடிய விதத்தில் பாகிஸ்தானுக்குள் ஆப் கானிஸ்தானுடைய தலிபான் பயங்கரவாதம் பொங்கிவழிந்துகொண்டிருப்பது, மாலத் தீவில் உள்ள அரசியல் ஸ்திரமற்றதன்மை, இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர் களுக்கும் இடையே தொடரும் இனப் பதற்ற நிலைமை - இவை அனைத்துமே அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்க முயற்சிகளை பிரயோகிப்பதற்கு வளமான சூழ்நிலைகளாகும். இந்நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையை உறுதியுடன் எடுக்கக்கூடிய விதத்தில் 2014ஆம் ஆண்டில் இந்தியா வலுப்படுத்தப்பட வேண்டும்.
மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்திய அரசை இந்நிலைக்குப் பணிய வைக்க முடியும்.எனவே, 2014ஆம் ஆண்டு இந்திய மக்களைப் பொறுத்தவரை, நாட்டு மக்க ளில் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திட வலுவான முறையில் மக்களைத் திரட்டுவதற்கான ஆண்டாகும். அதே சமயத்தில், சர்வதேச வளர்ச்சிப் போக்குகளின் எதிர்மறை அம்சங்கள் நம் நாட்டின்மீது விழாத விதத்தில், மிகவும் உறுதியான முறையில் நவீன தாராளமய எதிர்ப்பு/ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையினைப் பின்பற்றி, நாட்டைப் பாதுகாத்திடவும் வேண்டும். இதனை அடையக் கூடியவிதத்தில் வளர்முக நாடுகளுடன் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத் திட வேண்டும்.2013ஆம் ஆண்டு, உலகம் முழுதும் உள்ள மக்களின் விடுதலைக்காகவும், மனித குலத்தின் பொன்னான மார்க்கத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் மனிதரான நெல்சன் மாண்டேலாவின் மரணத்துடன் முடிந்திருக்கிறது.
இன ஒடுக்கல் முறையிலிருந்து விடுதலை பெறுவதற்காகத் தென்ஆப்பிரிக்க மக்கள் நடத்திய போராட்டத் திற்குத் தலைமை தாங்கியபோது அவர் விடுத்த எழுச்சிமிகு அறைகூவல்: உலகம் முழுதும் உள்ள மனிதகுலம் முழுமையாக அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறும் வரை - போராட்டம் தொடரும்.’’ முற்போக்கு உலகத்துடன் நாமும் இணைந்து நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தியபோது, அவர் விடுத்துச்சென்றுள்ள அறைகூவலை முன்னெடுத்துச் செல்வதற்கான நம் தீர் மானத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வோம், 2014ல் மக்கள் போராட்டங்களை வலுப் படுத்திடுவோம்.
(தமிழில்: ச.வீரமணி)


Friday, December 27, 2013

ஊனமுற்றோர் உரிமைகளுக்காகப் போராடும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தோர்

அன்பார்ந்த நண்பர்களே.
27/12/13 அன்று புதுதில்லியில் மனதை மிகவும் நெகிழ வைத்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றிற்கு சென்றிருந்தேன். ஊனமுற்றோர் உரிமைகளுக்காகப் போராடும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தோர் சார்பில் அச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,

புகைப்படத்தில் உள்ளோர் இடமிருந்து வலமாக மூளைவளர்ச்சி சிதைந்தோருக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மேரி பரூவா (Activist for Autism children), ஊனமுற்றோரின் திறமைகளை வளர்த்தெடுப்பற்கான குழுவின் செயலாளர் (AADI (Action for Ability, Development and Inclusion) ஷ்யாமளா, ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாவேத் அபிதி,ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் தேசிய செயலாளர் முரளீதரன், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ். நாராயணன் மற்றும் பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் தீபேந்திரா மோனோசா ஆகியோர் படத்தில் உள்ளனர். அனைவரும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உரையாற்றினார்கள். நாராயணன் உரையை கைவிரல்கள் மூலம் அடையாளம் காட்டும் மொழிபெயர்ப்பாளர் மொழியாக்கம் செய்தார்.   அதேபோன்று அனைவரது உரையையும் நாராயணனும் மொழிபெயர்ப்பாளரின் உதவிகொண்டு கேட்டார்.

(ச,வீரமணி)

ஊனமுற்றோர் உரிமைக்கான புதிய சட்டமுன்வடிவு டிசம்பர் 31 மாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை மெழுகுவர்த்தி ஏந்தி நாடு முழுதும் போராட்டம்
அன்பார்ந்த நண்பர்களே.
இன்றைய தினம் (27/12/13) புதுதில்லியில் மனதை மிகவும் நெகிழ வைத்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றிற்கு சென்றிருந்தேன். ஊனமுற்றோர் உரிமைகளுக்காகப் போராடும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தோர் சார்பில் அச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,

புகைப்படத்தில் உள்ளோர் இடமிருந்து வலமாக மூளைவளர்ச்சி சிதைந்தோருக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மேரி பரூவா (Activist for Autism children), ஊனமுற்றோரின் திறமைகளை வளர்த்தெடுப்பற்கான குழுவின் செயலாளர் (AADI (Action for Ability, Development and Inclusion) ஷ்யாமளா, ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாவேத் அபிதி,ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் தேசிய செயலாளர் முரளீதரன், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ். நாராயணன் மற்றும் பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் தீபேந்திரா மோனோசா ஆகியோர் படத்தில் உள்ளனர். அனைவரும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உரையாற்றினார்கள். நாராயணன் உரையை கைவிரல்கள் மூலம் அடையாளம் காட்டும் மொழிபெயர்ப்பாளர் மொழியாக்கம் செய்தார்.   அதேபோன்று அனைவரது உரையையும் நாராயணனும் மொழிபெயர்ப்பாளரின் உதவிகொண்டு கேட்டார்.) இது தொடர்பாக நான் எங்கள் தீக்கதிர் நாளிதழுக்கு அனுப்பிய செய்தியை இத்துடன் இணைத்திருக்கிறேன், மேலும் முரளீதரன் மற்றும் ஏ,எஸ்.நாராயணன் ஆகியோர் ஆற்றிய உரைகளையும் யூ-ட்யூப் மூலம் பதிவேற்றம் செய்திருக்கிறேன், அவற்றை என்னுடைய இடுகையான இலக்கியா (http://illakkia.blogspot.com)விலும். முகநூலிலும் பார்க்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்,

ஊனமுற்றோர் உரிமைக்கான புதிய சட்டமுன்வடிவு
டிசம்பர் 31 மாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை
மெழுகுவர்த்தி ஏந்தி நாடு முழுதும் போராட்டம்
புதுதில்லி, டிச.27-
ஊனமுற்றோர் உரிமைகளுக்கான புதிய சட்டமுன்வடிவை பிப்ரவரியில் கூடும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது நிறைவேற்ற வலியுறுத்தி, டிசம்பர் 31 மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை புதுதில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் இல்லம் முன்பும் மற்றும் அனைத்து மாநிலத் தலைநகர்களிலும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திட ஊனமுற்றோர்களுக்கான அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பாக ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் தேசிய செயலாளர் முரளீதரன் மற்றும் ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாவேத் அபிதி ஆகியோர் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வெள்ளியன்று மதியம் தில்லி, பெண்கள் பத்திரிகையாளர் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அவர்கள் கூறியதாவது:
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 2007ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான கன்வென்ஷன் அளித்துள்ள விதிகளை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்துள்ளது.
ஊனமுற்றோருக்கு உரிமைகள் வழங்கும் மிக முக்கியமான இந்தச் சட்டமுன்வடிவிற்கு நான்கு ஆண்டுகள் கழித்து டிசம்பர் 13 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  குளிர்காலக் கூட்டத்தொடரின் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டது. ஆயினும் என்ன காரணத்தாலோ குளிர்காலக் கூட்டத்தொடர் லோக்பால் சட்டமுன்வடிவை நிறைவேற்றியவுடனேயே காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. ஊனமுற்றோருக்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படவே இல்லை.
எனவே 2014 பொதுத்தேர்தலுக்கு முன் பிப்ரவரியில் குறுகிய காலமே நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இச்சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.  இச்சட்டமுன்வடிவின்மீது விவாதம் நடைபெற்று அது நிறைவேற்றப்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். ஒருவேளை கால அவகாசம் இல்லையெனில், விவாதமின்றியாவது இது நிறைவேற்றப்பட்டாக வேண்டும் என்று கோருகிறோம்.
இதனை வலியுறுத்தி, வரவிருக்கும் டிசம்பர் 31 மாலை 5 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை புதுதில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் இல்லத்தின் முன்பும், மற்றும் பல்வேறு மாநிலத் தலைநகர்களின்முன்பும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தவுள்ளோம்.
அரசு செவிசாய்த்து பிப்ரவரியில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இச்சட்டமுன்வடிவு கொண்டுவந்து நிறைவேற்றப்படாவிட்டால் எங்கள் போராட்டத்தை ஜனநாயக ரீதியில் மேலும் வலுவாக எடுத்துச்செல்லத் திட்டமிட்டுள்ளோம்.
எங்கள் கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தோம். எங்கள் வேண்டுகோளுக்கு செவிமடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் அவர்கள் மட்டும்தான் நாளை சனிக்கிழமையன்று மதியம் 12 மணிக்கு எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கித்தந்திருக்கிறார். அவரை நாங்கள் சந்திக்க இருக்கிறோம். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தமிழகத்தில் சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் தர்மாபுரம் பகுதியில் டிசம்பர் 31 மாலை 5 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தீர்மானித்திருப்பதாக அச்சங்கத்தின் செயலாளர் நம்புராஜன் தெரிவித்துள்ளார்.

(ச,வீரமணி)

Monday, December 23, 2013

நடந்து முடிந்த சட்.டமன்றத் தேர்தல்கள் சொல்லும் செய்தி

சமீபத்தில் ஐந்து மாநில சட்டமன்றப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல்கள் ஒரு தெளிவான தீர்ப்பை அளித்திருக்கின்றன. நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை எவ்விதத் தயவுதாட்சண்யமுமின்றி மக்கள் நிராகரித்திருக்கிறார்கள் என்பதே அந்த செய்தியாகும். வட கிழக்கு மாநிலங்களில்  ஒன்றான மிகவும் சிறிய அளவிலான மிசோரத்தில் மட்டும் விதிவிலக்காக காங்கிரஸ் தன்னுடைய பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.  
ராஜஸ்தானிலும் தில்லியிலும் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசாங்கங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் துடைத்தெறியப்பட்டுள்ளன. ராஜஸ்தானில், 21 இடங்களை மட்டுமே, அதாவது மொத்த இடங்களில் பத்து சதவீதத்திற்குக் கொஞ்சம் கூடுதலாக, காங்கிரஸ் பெற்றிருக்கிறது. தில்லியில் வெறும் எட்டு இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்திருக்கிறது. மொத்த இடங்களில் இது 11 சதவீதமேயாகும்.
மத்தியப் பிரதேசத்திலும், சட்டீஸ்காரிலும் பாஜக மூன்றாவது தடவையாக ஆட்சி அமைக்கிறது. இவ்விரு மாநிலங்களிலும், பாஜக கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில், 13  அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. பத்தாயிரம் மக்களை விரட்டி அடித்துவிட்டு அவர்களுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கம்பெனிகளுக்கு இனாமாக அளிக்கப்பட்டன. சாமானிய மக்களின் வாழ்நிலைமை, குறிப்பாக பழங்குடியினர் நிலைமை, மிகவும் மோசமான முறையில் சீரழிந்திருக்கிறது. ஆயினும், ஆட்சியாளர்களுக்கு எதிராக அம்மாநிலங்களில் மக்கள் மத்தியில் நிலவிவரும் அபரிமிதமான அதிருப்தியை ஒன்றுபடுத்தி ஓர் எதிர்ப்பினை நல்கி அதனை முறியடித்திட காங்கிரஸ் கட்சி பரிதாபமானமுறையில்  தோல்வியே அடைந்திருக்கிறது. பாஜகவுக்கு மாற்றாக காங்கிரசைத் தேர்ந்தெடுக்க மக்கள் மறுத்துவிட்டார்கள். ஏனெனில், அதன் யோக்கியதையும், அதன் நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு இல்லை. மாறாக, மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமானது, அனைத்துப் பொருள்களின் விலைகளும் மட்டுமீறிய அளவில் உயர்த்தி இருப்பதாலும்முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய அளவில் ஊழல் சகதியில் திளைத்துக் கொண்டிருப்பதாலும் மக்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.  இதே நிலைமைதான் சட்டீஸ்காரிலும் இருக்கிறது.
இந்த நான்கு மாநிலங்களிலும் வெகு காலமாகவே பாஜக-வும் காங்கிரசும்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு எதிராக மிகவும் வலுவான முறையில் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை பாஜக இத்தேர்தல்களில் நன்கு அறுவடை செய்துகொண்டுவிட்டது.
ஆயினும் தில்லியைப் பொறுத்தவரை, ஒரு புதிய அம்சம் உருவாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி முழுமையாகத் துடைத்தெறியப்பட்டபோதிலும், பாஜக தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்றிட முடியவில்லை. இதற்குக் காரணம் சாமானியன் என்று பொருள்படும் ஆம் ஆத்மி கட்சி 30 சதவீத வாக்குகளைப் பெற்று 28 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாகும். ஏஏபி எனப்படும் ஆம் ஆத்மி கட்சி மத்தியத் தர வர்க்கத்திடமும், நகர்ப்புற ஏழைகள் மற்றும் தலித்துகளில் கணிசமான பகுதியினரிடமிருந்து ஆதரவினைப் பெற்றிருப்பதே இவ்வெற்றிக்குக் காரணமாகும். தில்லி தேர்தல் முடிவுகள் காட்டுவது என்ன? எங்கெல்லாம் காங்கிரசுக்கும், பாஜகவிற்கும்  பயனளிக்கக்கூடிய விதத்தில் ஒரு மாற்று இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் அதனை ஆதரிப்பார்கள் என்பதேயாகும். ஏஏபி கட்சியின்  அரசியல் தீர்மானம் என்ன, அது தன் ஆதரவு தளத்தை எப்படி ஒருமுகப்படுத்த இருக்கிறது என்பது குறித்தெல்லாம் இனிவருங்காலங்களில்தான் தெரிய இருக்கின்றன.
ஊடகங்கள், நடந்துமுடிந்த இத்தேர்தல்களை, மக்களவைத் தேர்தலுக்கான ஒரு ’’அரை இறுதி’’ (“ளநஅi-iயேட”) என்று வர்ணித்துள்ளன.  சில நோக்கர்கள், பாஜக-வால் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள தேசிய அளவிலான சிந்தனைப்போக்கு என்று கூட சித்தரித்திருக்கிறார்கள். இத்தகைய கருத்துக்கள் மிகவும் எளிமைப் படுத்தப்பட்டவை மட்டுமல்ல, பிழையானவை களுமாகும்.    இந்தத் தேர்தல்கள், பொதுத் தேர்தலுக்கான ஓர் ’’அரை இறுதி’’ அல்ல என்பதை முதலிலேயே சொல்லிக் கொள்கிறோம். தேர்தல் நடைபெற்ற நான்கு மாநிலங்களில் மக்களவைக்கான இடங்கள் வெறும் 72 தான். அதாவது மொத்த மக்களவை இடங்களில் வெறும் 13 சதவீதம் மட்டுமேயாகும். எனவே இவற்றை வைத்து தேசிய அளவிலான சிந்தனைப் போக்கை மதிப்பிடுவது என்பது பிழையானதும் தவறானதுமாகும். 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களின்போதுகூட பாஜக இந்த 72 இடங்களில் பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்தது. ஆயினும் அப்போதும் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல்களில் தோல்வியே அடைந்தது.
மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு எதிரான சிந்தனைப்போக்கு வலுவாக இருக்கிறது என்று நிச்சயமாகக் கூற முடியும். காங்கிரஸ் அல்லது பாஜக என்று நிலவுகிற இந்த நான்கு மாநிலங்கள் போல் அல்லாது மற்ற மாநிலங்களில் இத்தகைய நிலைமை கிடையாது. அங்கெல்லாம் போட்டி என்பது காங்கிரசுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் அல்லது  இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையிலானதாகும். சில மாநிலங்களில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இம்மாநிலங்களில் பெரும்பாலானவற்றில், காங்கிரசுக்கு எதிரான மக்கள் சிந்தனையோட்டத்தால் ஆதாயம் அடைவது பாஜக-வாக  இருக்க முடியாது, மாறாக காங்கிரஸ் அல்லாத மற்றும் பாஜக அல்லாத கட்சிகள்தான். காங்கிரசுக்கு எதிராக மிகவும் உக்கிரமானமுறையில் வாக்களித்துள்ள மக்கள் அவ்வாறு வாக்களித்ததற்கான காரணம், காங்கிரசின் கொள்கைகளை எதிர்த்துத்தான். இக்கொள்கைகள்தான் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் போன்றவற்றால் அவர்களது வாழ்வில் சொல்லொண்ணாத் துன்ப துயரங்களைக் கொண்டுவந்துள்ளன. இவற்றுக்கு மாற்றாக பாஜகவிடமும் எந்தக் கொள்கையும் கிடையாது. தேவை என்னவெனில், மாற்றுக் கொள்கைகளை அடிப்படையாக் கொண்ட ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக மாற்றேயாகும்.
(தமிழில்: ச.வீரமணி)
  


லோக்பால் சட்டமுன்வடிவு: ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்

இறுதியாக, லோக்பால் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் நாட்டின் மேல்மட்டங்களில் நிலவும் ஊழலை எதிர்கொள்வதற்கான ஓர் அமைப்பு நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட முன்வடிவானது,  இச்சட்டமுன்வடிவில் மேற்கொள்ளப் பட வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட மாநிலங்களவை தேர்வுக்குழு அளித்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இணைக்கப்பட்டு, மாநிலங்களவையில் சட்டமுன்வடிவு நிறைவேறி அதன்பின்னர் மக்களவையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, கடைசியில் லோக்பால் நாட்டின் சட்டமாக மாறி இருக்கிறது.இவ்வாறு இந்தச் சட்டம் நிறைவேறு வதற்கு 45 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. 1968-ல் மறைந்த மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்திருந்த நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் இத்தகையதோர் அமைப்பு அவசியம் என்று முதன்முதலாக பரிந்துரைத்திருந்தது.
அதிலிருந்தே இது தொடர்பாக இதுவரை எட்டு வரைவு சட்டமுன்வடிவுகள் நாடாளுமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்டன. ஆயினும் சச்சரவுக்குரிய முக்கியமான அம்சங்கள் பலகுறித்து உடன்பாடு ஏற்படாததால் இது சட்டமாவதற்கான சாத்தியம் இல்லாமல் போயிற்று. இந்த வரிசையில் இந்தக்கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவானது ஒன்பதாவது சட்ட முன்வடிவாகும். லோக்பால் போன்றதொரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோரியதில் கடந்த முப்பதாண்டு காலமாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் இருந்துவந்தது. போபர்ஸ் ஊழல்கள் நாட்டையே குலுக்கிய சமயத்தில் அதனைத் தொடர்ந்து ஆட்சியே மாறிய சமயத்தில், நாட்டின் மேல்மட்டங்களில் நிலவும் ஊழலை வலுவான முறையில் தடுக்கும் விதத்திலும், வர்த்தகர்கள்-அதிகாரவர்க்கம்-அரசியல்வாதிகளுக்கு இடையே வலுவாகவுள்ள புனிதமற்ற இணைப்புச் சங்கிலியை உடைக்கும் விதத்திலும் வலுவான சட்டம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
அப்போது 1989-ல் ஆட்சியிலிருந்த வி.பி. சிங் தலைமையிலான அரசாங்கம் தான் பிழைத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தேவைப்பட்டதால், மார்க்சிஸ்ட் கட்சி இதுபோன்றதொரு சட்டமுன்வடிவை நிறை வேற்ற வலியுறுத்தியது. அதன்பின்னர் இரு சமயங்களில், 1996இலும் 1997இலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியி லிருந்து ஆதரவு அளிக்கவில்லை என்றால் ஆட்சியில் நீடித்திருக்க முடியாது என்கிற மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், ஐக்கிய முன்னணி அரசாங்கம், லோக்பால் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவந்தது. எனினும் அது சட்டமாக நிறைவேறவில்லை. மீண்டும், 2004-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன் ஐமுகூ-1 அரசாங்கம் அமைந்தசமயத்தில் உருவான பொது குறைந்தபட்ச திட்டத்தில் லோக்பால் நிறுவப்படும் என்கிற லட்சியம் சேர்க்கப்பட்டது. அப்போது உருவாக்கப்பட்ட சட்டமுன்வடிவுதான் தற்போது இறுதி யாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இவ் வாறு லோக்பால் அமைப்பும், மாநில அளவில் லோக் அயுக்தா அமைப்பும் அமைக்கப்படுவதற்கான சட்டமுன்வடிவு நிறை வேறிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இடைவிடாது உறுதியாகப் போராடி வந்துள்ளது. உயர்மட்டத்தில் நிலவும் ஊழ லுக்கு எதிராக பல அமைப்புகள் போராடி வந்த போதிலும் அவ்வாறு அமைக்கப்படவிருக்கும் புலனாய்வு அமைப்பான, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ-இன்) சுயாட்சித்தன்மை மற்றும் அதிகார வரம்பெல்லை ஆகியவை குறித்து இந்தச்சட்ட முன்வடிவில் மிகப்பெரிய அளவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் குறிப்பிடத் தக்க அளவில் உள்ள சில குறைபாடுகளையும் எதிர்காலத்தில் சரிசெய்திட வேண்டியது அவசியம்.ஒட்டுமொத்தத்தில் ஊழலுக்கு எதிராக நாம் மேற்கொண்ட போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால், லோக்பால் அமைக்கப்படுவதுடன் மேலும் பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அதனுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டி இருப்பதை, திரும்பத்திரும்ப வலியுறுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
1988ஆம் ஆண்டு லஞ்சஊழல் தடுப்புச் சட்டத்திலும் ஊழலின் வரையறையை மேலும் விரிவானதாக மாற்றக்கூடிய விதத் தில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகருதுகிறது. தற்போதுள்ள சட்ட வரையறைஎன்பது மிகவும் குறுகிய ஒன்றாக, அதிகாரத் தில் உள்ளோர் சொந்த ஆதாயத்திற்காக அல்லது வளத்திற்காகத் துஷ்பிரயோகம் செய்வது என்பதுடன் சுருக்கிக் கொள்கிறது. பல வழக்குகளில், அதிகாரத்தில் உள்ளோர் தங்கள் அதிகாரத்தை தனியார் நிறுவனங்கள் ஆதாயம் அடைய துஷ்பிரயோகம் செய் கிறார்கள். தற்போதுள்ள 1988 லஞ்சஊழல் தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நபர்’’ என்ற வரையறையின்கீழ் நிறுவனங்கள் வராததால் இவ்வாறு அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வோர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை. மேலும் பல சமயங்களில் அதிகாரத்திலுள்ளோர் செய்யும் களவுகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். எனினும் அவர்களின் நடவடிக்கைகளின் காரணமாக பொது கஜானாவிற்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற் படுவதைப் பார்க்கிறோம்.
உதாரணமாக பொதுத்துறை நிறுவனங்கள் பல அடிமாட்டு விலைக்குத் தனியாருக்கு விற்கப்பட்டிருக் கின்றன. இதற்கு அதிகாரத்திலுள்ளோர் தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்திருப்பதுதான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. எனவே வேண்டும் என்றே எந்த நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வரம்புமீறிய முறையில் ஆதாயம் எதையும் கொடுப்பவர் அல்லது பொது ஊழியர் எவரிடமிருந்தாவது சட்டவிதிமுறைகளை மீறி வரம்பு மீறிய ஆதாயம் அடைபவர்’’ என்று சேர்த்து லஞ்ச ஊழலுக்கான வரையறையை விரிவாக்க வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக ஊழல் தடுப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்காகத் தனி சட்டமுன்வடிவு ஒன்று இரு அவைகளிலும் கொண்டுவருவதற்காக, இரு அவைகளின் நிகழ்ச்சி நிரலிலும் சேர்க் கப்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் உறுதி தரப்பட்ட அதே சமயத்தில், அப்படியானால் அதனை லோக்பால் சட்டமுன்வடிவிலும் இணைத்து, அரசிடமிருந்து ஒப்பந்தம் அல்லது டெண்டர் ஏலத்தைப் பெற்றிட ஊழல்வழிகளில் ஈடுபடும் அனைத்துத் தனியார் நிறுவனங்களையும் அதன் செயல் எல்லை வரையறைக்குள் ஏன் கொண்டுவரக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக ஒரு துல்லியமான திருத்தத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்மொழிந்தோம். ஆயினும் நாடாளுமன்றத்தில் பெரும் பான்மையாக உள்ள இரு கட்சிகளும் - காங்கிரசும் பாஜகவும் - அவர்களுக்கு நிதிஉதவி செய்வோரை, அவர்களுக்குப் படியளப் போரைப் பாதுகாப்பதற்காக - கைகோர்த்து நின்று - இதனைத் தோற்கடித்துவிட்டது.
ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் பக்கத்தை, அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களை லோக்பால் சட்டத்தின் வரையறைக் குள் கொண்டு வராதவரை, அவ்வாறு கொண்டு வந்து அவை அரசியல் கட்சிகளுக்கு அள்ளித் தருவதை ஒழித்துக்கட்டாத வரை, ஊழலை நிச்சயமாக ஒழித்திட முடியாது. உண்மையில், லோக்பால் சட்டம் கொண்டுவருவதுடன், தேர்தல்களில் அபரிமிதமான முறையில்பணபலமும், புஜபலமும் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தக்கூடிய விதத்தில் தீவிரமானமுறையில் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வராதவரை, ஊழலை வலுவானமுறையில் ஒழித்துக்கட்ட முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாதிட்டது.மேலும் தற்சமயம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்பதை ஆய்வு செய்திடும் முறை மிகவும் பலவீனமாகவும், அதிருப்தி அளிக்கக்கூடிய விதத்திலுமே இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்த வரை, அரசியலமைப்புச் சட்டத்தின் 105 ஆவது பிரிவு, பேச்சு மற்றும் வாக்களிக்கும் சுதந்திரம் தொடர்பாக அவர்களுக்குப் பாது காப்பை அளிக்கிறது.
இவ்வாறு இவர்களுக்கு அளிக்கப்பட்ட பேச்சு சுதந்திரமும், வாக்களிக்கும் சுதந்திரமும் ஊழலுக்கு வழிவகுக்காமல் இருக்கிறதா என்பதை உத்தரவாதப் படுத்தக்கூடிய விதத்தில் இன்றைய தினம் எதுவும் இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் வேலைகள் குறித்து ஆய்வு செய்த தேசிய ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 105ஆவது பிரி விற்குத் திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் இதனைச் செய்திட முடியும். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் (வாக்களித்தல், பேசுதல் போன்ற) செய்கைகள் மூலம் எவ்வகையிலாவது ஊழல் நடவடிக்கை எதிலாவது ஈடுபட்டார் எனில் அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய விதத்தில் அவரது செய்கையை ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரக்கூடிய விதத்தில் ஒரு சட்டம் தேவைப்படுகிறது. ஐமுகூ-1 அரசாங்கம் ஆட்சி புரிந்த காலத்தில், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை அரசு தன்னிச்சையாக நிறைவேற்ற முடிவு செய்ததை அடுத்து, அதற்கு ஆதரவு அளித்து வந்த இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதற்குப்பின்னர், 2008-ல் மக்களவையில் அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட சமயத்தில் ஆட்சி யிலிருந்து தப்பிப்பிழைப்பதற்காக ஐமுகூ-1அரசாங்கம் ``காசு கொடுத்து வாக்கு’’வாங்குவதற்காக எந்த அளவிற்கு இழிசெயல்களில் ஈடுபட்டதென்பதையெல்லாம் நாடு நன்கறியும்.
எனவே இதுபோன்றதொரு சட்டம் இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியமாக மாறி இருக்கிறது.அதேபோன்று ஊழலை வெளிச்சத் திற்குக் கொண்டுவருவோரை பாதுகாப்பது என்பதும் இன்றையதினம் மிகவும் அத்தியாவசியமாகி இருக்கிறது. ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவோரைக் கண்காணித்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கான ஒரு சட்டமுன்வடிவையும் லோக்பால் சட்டத்துடன் சேர்த்தே கொண்டு வந்திருக்க முடியும். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக லோக்பால் சட்டமுன்வடிவுடன் அதனையும் சேர்த்து எடுத்துக் கொள்ளப்பட முடியவில்லை. லோக்பால் சட்டமுன்வடிவை அவசரத்துடன் நிறைவேற்ற வேண்டிய தேவை இருந்தது. அதேபோன்று, 2010ஆம் ஆண்டு பொது நலன் பகிரங்கப்படுத்தல் (தகவல் பாதுகாப்பு) சட்டமுன்வடிவையும் வலுப்படுத்தி விரைந்து நிறைவேற்றிட வேண்டும். ஒரு வலுவான மற்றும் திறம்பட இயங்கக்கூடிய லோக்பால் நிறுவப்படுவதுடன், ஊழலை உண்மையிலேயே ஒழிக்க வேண்டும் என்று அரசு கருதுமானால், கீழ்க்கண்டவாறு ஆறு பரிந்துரைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கிறது
(1) இதன் வரையறைக்குள் வரக்கூடிய விதத்தில் நீதித்துறையின் நடத்தைகளையும் கொண்டுவந்திட வகை செய்யும் விதத்தில் தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
(2) பொதுமக்கள் குறைபாடுகளைக் களைவதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரஜைகள் சாசனத்தை பாதுகாக்க ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
(3) ஊழலில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் விதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 105ஆவது பிரிவு திருத்தப்பட வேண்டும்.
(4) தேர்தல்களில் கிரிமினல்களின் பண பல அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
(5) மாநில அளவில் பணியாற்றும் பொது ஊழியர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடிய விதத்தில் மாநில அளவில் உருவாக்கப்படும் லோக் அயுக்தாக்கள் அமைந்திட வேண்டும்.
(6) வரி ஏய்ப்போரால் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
எனவே, லோக்பால் சட்டத்தை நாடாளுமன்றம் இறுதியாக நிறைவேற்றி இருக்கும் அதே சமயத்தில், அரசாங்கத்தின் உயர்பீடங்களில் நாளும் அதிகரித்து வரும் ஊழல்களை ஒழித்துக்கட்ட வேண்டுமானால் மேலே கூறியவாறு மேலும் பல சட்டங்களை கொண்டுவர வேண்டியது அவசியம்.
ஆயினும், நாட்டில் அங்கிங்கெனாத படி எங்கும் பிரகாசமாய் புரையோடிப் போயிருக்கின்ற ஊழல் என்னும் கொள்ளைநோயை ஒழித்துக்கட்டுவது என்பது இதற் கெதிராக சமூகத்தின் சமூக உணர்வு மட்டத்தையும் ஒட்டுமொத்தமாக உயர்த்துவதன்மூலமே சாத்தியமாக்கிட முடியும். இதற்கு நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளின் அறநெறிப்பண்பும் உயர்ந்த அளவில் இருந்திட வேண்டும். ஆனால் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளில் இடதுசாரிக் கட்சிகள் தவிர மற்ற கட்சிகளில் பெரும்பாலானவற்றிடம் இதனைக் காண முடியவில்லை. நாட்டிலுள்ள இரு பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் ஊழல் புரிவதில் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுவதை நாம் பார்க்கிறோம். எனவே ஊழல் சேற்றில் உழலும் அரசியல் கட்சிகளிடமிருந்து நம் சமூகத்தைக் கழுவித் தூய்மைப்படுத்தக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் மாற்றே இன்றைய அவசியத் தேவையாகும்.
(தமிழில்: ச.வீரமணி)