Monday, September 5, 2016

அரசமைப்புச் சட்டத்தை மீறிய செயல்




ஹரியான சட்டமன்றப் பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் தொடக்க நாளன்று பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு சமண முனிவர் பிரசங்கம் செய்திருக்கிறார். இது அரசமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற நெறிமுறைகளை மீறிய, இதற்குமுன் நடைபெறாத செயலாகும்.
இவ்வாறு ஒரு சமண முனிவரான, ரத்தன் சகாகிரி, என்கிற நிர்வாண சாமியாரை  அழைத்து உரையாற்றச்  செய்திருப்பதன் மூலம், பாஜக முதல்வர் எம்.எல். கட்டார் அரசியலிலிருந்து மதத்தைத் தனியே பிரித்திட வேண்டும் என்ற அரசின்  நியதியான, மதச்சார்பற்ற குணாம்சத்தின் மூலாதாரத்தின்மீதே தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்.
ஆளுநரும், முதல்வரும் அமர்கின்ற இருக்கைகளுக்கும் மேலாக ஒரு மேடை அமைக்கப்பட்டு, அங்கிருந்து அந்த சமண நிர்வாண சாமியார் உரையாற்றி இருக்கிறார். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தின் கட்டளைப்படி செயல்படுபவர்களைவிடமதத்தலைவர் உயர்வானவர் என்று காட்டக்கூடிய விதத்தில் அவரது உயர்நிலை அமைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு உரைநிகழ்த்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சாமியார், ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள நபர் ஆவார்.  ஆர்எஸ்எஸ் அவரைக் கவுரவித்து, 2013 அக்டோபரில் ஜெய்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிறுவன நாள் கொண்டாட்டங்களின்போது  "தேசியத் துறவி" என்று பட்டம் வழங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஒரு மதத்தலைவர் சட்டமன்றக் கூட்டத்தொடரைத் துவக்கி வைத்திருப்பது தவறானது மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பதுடன், ரத்தன் சகர்ஜி பேசிய பேச்சின் சாராம்சமும் பல்வேறு விதங்களிலும் ஆட்சேபணைக்குரியவைகளாகும்.  அவர் பேசும்போது,  "அரசியலில் மதம் தூய்மைப்படுத்துவதற்குத்தானேயொழிய, காவிமயப்படுத்துவதற்கு அல்ல," என்று கூறியிருப்பதன் மூலம், அரசியலுடன் மதத்தை கலக்க வேண்டியதன் அவசியத்தைப் போதித்திருக்கிறார். மேலும், தர்மம் என்பது கணவன் என்றும், அரசியல் என்பது மனைவி என்றும் கூறி, மனைவியின் கடமை கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதேயாகும் என்றும்,  கூறி  பெண்கள் குறித்த ஆணாதிக்க மனோபாவத்தையும்  வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் ஒரு சமணமதத்துறவி என்பது இங்கே பிரச்சனை அல்ல. எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர் எந்தவிதமான ஆன்மீகத் தலைவராக இருந்தாலும், நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களுக்குள் வந்து தங்கள் கருத்துக்களைக் கூற அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அனுமதி கிடையாது. அந்த சமண முனி பேச்சைத் துவங்குவதற்கு முன் காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய லோக் தள் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவரை வரவேற்றிருப்பதும் அரசியல் கட்சிகளின் மத்தியில் மதச்சார்பின்மை மாண்புகள் எந்த அளவிற்கு அரிக்கப்பட்டுவிட்டன என்பதற்கு மிகவும் மோசமான எடுத்துக்காட்டாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹரியானா மாநில செயலாளர் மட்டுமே அரசியலில் மதத்தைக் கலந்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இது அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளை மீறிய செயல் என்றும்  பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மதபோதனை மேற்கொள்வதற்கு சட்டமன்றக் கூட்டத்தொடர் இதற்குமுன்னெப்போதும் அனுமதிக்கப்பட்டது கிடையாது.  அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்  கொள்கை சட்டமன்றப் பேரவையின் சபாநாயகராலும், முதலமைச்சராலும் உயர்த்திப்பிடிக்கப்பட்டாக வேண்டும். ஏனெனில் இவர்கள் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள். இவ்வாறு சட்டமன்றத்தில் மத போதனை செய்திட இவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் இவர்கள் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தினை மீறிய செயலை இவர்கள் புரிந்திருக்கிறார்கள்.
இந்தியா என்பது இந்து ராஷ்ட்ரம் என்கிற ஆர்எஸ்எஸ்-இன் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் காலில் போட்டு மிதிப்பதற்கு. அரசமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி புரிவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ள பாஜகவை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக வரம்புமீறி நடந்து கொண்டிருக்கிற ஹரியானா முதலமைச்சர் பதில் சொல்லியாக வேண்டும்.
(தமிழில்: ச. வீரமணி)

No comments: