Wednesday, October 16, 2013

வகுப்புவாதங்கள்: மாறிவரும் வடிவங்களும் அவற்றின் எதிர்காலமும்:அய்ஜாஸ் அகமது


அய்ஜாஸ் அகமது
வகுப்புவாதங்கள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக இடது சாரிகளும் நிறையவே எழுதி இருக்கிறார்கள்.  குறிப்பிடத்தக்க வகுப்புவாத வன்முறை நிகழ்வு கள் குறித்தும், வகுப்புவாத அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் வரலாறுகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் பின்பற்றிய வகுப்புவாதக் கொள்கைகள் குறித்தும்  மிகவும் விரிவாகவே ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்பொருள் குறித்து நானும் மிகவும் விரிவாகவே எழுதியிருக்கிறேன்.  அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக இங்கே அடுக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் சில உண்மைகள் அவ்வப்போது நம் நெஞ்சில் வந்து மோதத்தான் செய்கின்றன.
வகுப்புவாதம், மதச்சார்பின்மை, தேசியம் அல்லது தேசியவாதம் போன்றவை குறித்து நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம்இது தொடர்பாக என் அடிப்படை நிலைப்பாட்டை மிகவும் கடுமையான வார்த்தைகளுடனேயே தொடங்கிட விரும்புகிறேன்.
அனைத்துவிதமான வகுப்புவாதங்களும் ஓர் ஆரோக்கியமான அரசியலில் தீர்க்கப்பட முடி யாத நோயல்ல. ஆர்எஸ்எஸ், சிவசேனை வகைய றாக்கள் பரப்பிடும் வகுப்புவாத வெறி உணர்வுகளுக்கு எதிராக அதைவிட அதிகமான அளவில் மதச்சார்பின்மை, நாட்டுப்பற்று உணர்ச்சிகளைக் கொடுப்பதன் மூலம் இந்நோயைக் குணப்படுத் திட முடியும்.  வகுப்புவாத நடவடிக்கைகள் என்று நாம் அழைத்திடும் -  தற்போது மக்கள்  பின்பற்றி வரும் - சில நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் மிகவும் சிக்கலான வரலாற்று வேர்களைக் கொண்டிருக்கின்றன.  இந்திய சமூகத்தின் கட்ட மைப்பிலும், நாள்தோறும் நாம் பின்பற்றும் நடைமுறை அரசியலிலும்  நன்கு ஆழமாக வேரூன்றி இருக்கின்றன.
நாம் பின்பற்றிவரும் தத்துவங்களை விமர்சனத்திற்குள்ளாக்குவது சந்தேகமற மிகவும் முக்கியமானதுதான். ஆனால், எண்ணற்றோர் உயிர்கள் சூறையாடப்படுவதற்குக் காரணமாக விளங்கும் வகுப்புவாத வன்முறை சம்பந்தமான உண்மைகளையும், விவரங்களையும்  திரட்டுவது  அதைவிட மிகவும்  முக்கியமானதாகும்.
அதுமட்டுமல்ல, வகுப்புவாத சிந்தனைகளும் நடைமுறைகளும் மிகவும் போற்றுதலுக்குரியவை என்றும், இவை நியாயமானவை மட்டுமல்ல, அவசியமானவையும், பயனளிக்கக் கூடியதும் என்றும் நாட்டில் உள்ள மக்களில் மிகப் பெரும் பாலானோர் நம்பிக்கொண்டும் இருக்கிறார்களே, இவர்களின் நம்பிக்கைகளை இவர்கள் மனம் கோணாதவாறு எவ்வாறு விமர்சிக்கப் போகிறோம் என்பது குறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.
நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. குஜராத் மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட நரேந்திர மோடி பாஜக சார்பில் இந்தியாவின் பிரதம வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதவெறி உணர்ச்சியை மக்கள் மத்தியில் கிளப்பி விசிறிவிடுவதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதற்குச் சரியான அடையாளம் நரேந்திர மோடி என்று நான் துணிந்து கூறுவேன்.
அவர் பிரதமராகிவிட்டால், வகுப்புவாதத் திற்கு எதிராக நாம் மேற்கொள்ளும் பயணம் மேலும் சிறிது காலத்திற்கு நீடித்திடும். இதனை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தோழர் ரோசா லுக்சம்பர்க் ஒருமுறை கூறுகையில்,முதலாளித்துவம், சோசலிசத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும் மாறாக காட்டுமிராண்டித் தனத்திற்கும் கூட இட்டுச் செல்லலாம் என்றும் சொன்னார். இந்தியாவில் மக்களின் நலன்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது கொள்ளை அடிக்கும் கும்பலின் தலைமையில் அமைந்துள்ள முதலாளித்துவத்திற்கு லுக்சம்பர்க்கின் கூற்று மிகவும் சரியாகவே பொருந்துகிறது. ஏனெனில், நம்நாட்டில் செயல்பட்டுவரும் வகுப்புவாதங்கள் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நன்கு வளர்வதுடன், ஒருபக்கம் இத்தகைய முதலாளித்துவக் கொள்ளைக் கும்பலை உருவாக்கிடவும், மிகப்பெரிய அளவில் மக்களை பலிகிடா ஆக்கிடவும் இட்டுச் செல்கின்றன.
இவ்வாறு ஓர் இனவெறியால் கொடுமைகளுக்கு ஆளாகி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மக்கள், தங்கள் சொத்து சுகங்களை மட்டுமல்ல, தங்கள் அறநெறிப் பண்புகளையும் தொலைத்துவிட்டு நிர்க்கதியாய் இருக்கக்கூடிய நிலையில் பாசிஸ்ட்டுகள் அவர்களை மிக எளிதாகத் தூண்டிவிட்டு, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள். 
"பாசிசம்" தலைதூக்குவது என்பது புரட்சியை நம்மால் கொண்டுவர முடியாமல் நாம் தோல்வி கண்டதற்கான தண்டனை என்று கிளாரா ஜெட்கின்  கூறினார். அது மிகவும் சரி யான கூற்று என்பதை வரலாறு மெய்ப்பித்திருக்கிறது.

முதலாவதாக, உலக அளவில் இடதுசாரி சக்திகள் தோற்கடிக்கப்பட்டிருப்பது, உலகின் பல பகுதிகளில் வலதுசாரி சக்திகள் வலுவடைவதற்கு இட்டுச் சென்றிருக்கின்றன. இதன் காரணமாக, (1) 1989க்கு முன் வலுவாக இருந்த சோசலிச முகாம் உலகின் பல பகுதிகளிலும் வலுவிழந்தது. இன்றைய தினம் உலகில் மிகச் சிறிய பூப்பந்தில் தான் ((global space)) மார்க்சிசமும், கம்யூனிசமும் கோலோச்சுகிறது. (2) அதிதீவிர முதலாளித்துவம் (extreme capitalism) என நான் அழைத்திடும்  நவீன தாராளமயம் உலகில் பல நாடுகளில் மிகவும் விரிவான முறையில் நுழைந்து வெற்றி பெற்றுள்ளது. உலக அளவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் பெரிய அளவில் தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பு என்பது ஏற்படவில்லை. (3)  ஆசிய மற்றும் ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள பல நாடுகள் நவீன தாராளமய உலகமயக் கொள்கைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்நாடுகளில் மேலோங்கியிருந்த தேசிய உணர்வு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு தற்போது முற்றிலுமாக இல்லாது ஒழிந்துவிட் டன. இதற்குச் சரியான எடுத்துக்காட்டு நரேந்திர மோடி. மதவெறியைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர் - நம்மால் இந்து மதவெறியன் என்றும் அவரது சகாக்களால் இந்து தேசியவாதி என்றும் அழைக்கப்படும் ஒருவர் - பிரதமராக முன்னிறுத்தப்படுவது சரியான எடுத்துக் காட்டாகும்.  
இன்றைய தினம் நாட்டில் உள்ள அம்பானிகளும், டாட்டாக்களும், உலகம் முழுவதும் விரவிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான இந்தியக் கோடீஸ்வரர்களும் நரேந்திர மோடியைச் சூழ்ந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இதற்குமுன் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பலரும் இப்போது அவரிடம் மன்னிப்பு கோரி அவரை வரவேற்று, அவருடன் கூடிக் கூலாவிக் கொண்டிருக்கின்றனர். எகிப்து நாட்டில் உள்ள முஸ்லீம் பிரதர்ஹூட் கட்சியின் தலைவரும் எகிப்தின் அதிபருமான மோர்சியைப் போன்று மோடி சிறப்பான முறையில்  சித்தரிக்கப்படுகிறார்.
கிளாரா ஜெட்கின் கூற்றின் அடிப்படையில் ஆராய்கையில் இந்தியாவில் இவ்வாறு பல்வேறு வகுப்புவாதங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இடதுசாரிகளின் தோல்வியேயாகும். வகுப்புவாதத்திற்கு உண்மையான மாற்று என்பது கம்யூனிசம் அல்லது சோசலிசமேயாகும். (The real alternative to communalism is communism or socialism). நிச்சயமாக மதச்சார் பின்மையோ (secularism) அல்லது தேசியவாதமோ (nationalism) கிடையாது. கடந்த கால் நூற்றாண்டில் இடதுசாரிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளராததன் காரணமாகத்தான் இத்தகைய மதவெறி, இனவெறி மற்றும் பிராந்திய வெறி சக்திகள் நாட்டின் பல பகுதிகளிலும் வளர்ந்துள்ளன.  நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் அயல்துறைக் கொள்கையைப் பொறுத்த அளவில் இத்தகைய சக்திகள் அவற்றுடன் முழுமையாகக் கருத்தொற்றுமை கொண்டு ஒத்துப்போகின்றன.
நாட்டில் இவ்வாறு பத்து விழுக்காட்டின் கட்சிகள் இருக்கின்றன என்பதே என் கருத்து. அவை ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சரி, அல்லது தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சரி, இவை மக்கள் தொகையில் உயர் பத்து விழுக்காட்டினர் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இத்தகைய சக்திகள் வளர்ந்துள்ள இடங்களில் இடதுசாரிகள் தேர்தல் களத்தில் கிட்டத்தட்ட மிகப்பெரிய அளவிற்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. வகுப்புவாத அரசியலைப் பொறுத்தவரை, இடதுசாரி அல்லாத அரசியல் கட்சிகளில் எந்தக் கட்சியும் பாஜகவுடன் தீவிரமாக ஒத்துப்போகாதவை அல்ல. ஒருசில கட்சிகள் காங்கிரசுடன் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் காங்கிரசும் பாஜகவும் ஆள்வதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதுதான். பாஜக, வகுப்பு வாதத் துருப்புச் சீட்டைத் திட்டமிட்டு பயன்படுத்தும் அளவிற்கு காங்கிரஸ் பயன்படுத்தவில்லை என்ற போதிலும், காங்கிரஸ் கட்சியும் தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்தத் தயங்குவதில்லை.
முன்னுரை
இவை அனைத்து குறித்தும் மீளவும் நாம் விவாதிப்போம். முதற்கண் வகுப்புவாதம், மதச் சார்பின்மை மற்றும் தேசியவாதம் என்று நாம் அடிக்கடி பயன்படுத்தும் மூன்று முக்கிய சொற் றொடர்கள் குறித்து வழக்கத்துக்கு மாறான வழிகளில் ஆய்வு செய்திடுவோம்.
வகுப்புவாதம் (Communalism), மதச்சார்பின்மை (Secularism) மற்றும் தேசியவாதம் (Nationalism) ஆகிய சொற்றொடர்களுக்கு ஆங்கில அகராதியில் இருக்கும் அர்த்தத்தில் நம் நாட்டில் அவை உபயோகப்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக வகுப்புவாதம் என்ற சொல் நம் நாட்டில் ஓர் இனம் அல்லது ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மற்ற இனத்தினர் மீது அல்லது மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்பை உமிழக்கூடிய சித்தாந்தத்தைப் பிரயோகிப்பதற்கும், வன்முறையை ஏவுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒருவகையிலான பாசிச வடிவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. வகுப்புக் கலவரம் என்ற நிகழ்வே உலகில் இந்தியாவில்தான் நடைபெறுகிறது.
உதாரணமாக, எகிப்தில் கிறித்துவ சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் நேரடியாகவே இஸ்லாமிஸ்ட் (Islamist), ஜிஹாதி (Jihadi), சலாஃபிஸ்ட் (Salafist) அல்லது வேறெந்த சொற்றொடர் மூலமோதான் அழைக்கிறார்கள். அவர்கள் அதனைத் வகுப்புவாரி (“communal”) தாக்குதல் என்று கூறுவதில்லை.
உண்மையிலேயே மிகவும் சரியாகச் சொல்வதென்றால், வரலாற்று ரீதியாக வகுப்புவாரி என்ற சொல் கம்யூனிஸ்ட் என்ற சொல்லிற்கு மிகவும் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தது.  இவ்விரு வார்த்தைகளுமே பொது, (‘common’), நெருங்கிய தொடர்பு கொண்டிரு (‘commune’), சமூகஇனம் (‘community’) என்ற பொருள்களுடன் தொடர்பு கொண்டிருந்தவைதான்.
உதாரணமாக, சமூகத்தினருக்கான சொத்து (‘communal’ property) என்பது தனிச் சொத் துரிமைக்கு (private property) எதிரான சொற்றொடராக இருந்தது.
நம் நாட்டில் மேலும் இரு சிக்கல்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று, பெரும்பான்மையினர் சமூகம், சிறு பான்மையினர் சமூகம் என்று பேசுவதில் எதுவும் சிரமம் இருப்பதில்லை. மிகவும் சரியாகச் சொல்வதென்றால், இந்து சமூகத்தினர், முஸ்லீம் சமூகத்தினர், சீக்கிய சமூகத்தினர் போன்று பேசுவதில் சிரமம் இல்லை. ஆனால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மற்ற சமூகத்தினர் மீது வகுப்புவாத உணர்வுடன் நடந்து கொள்ளாது, இந்தியாவின் பிரஜைகள் என்ற முறையில் மட்டுமே, அதாவது மதச்சார்பற்ற தேசிய இனத்தினர் (secular nationalists) என்ற உணர்வோடு மட்டும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே உண்மையில் நம்முடைய விருப்பமாகும். நாடும் அரசாங்கமும் மதச்சார்பற்ற அறநெறியை (secular moralism) உயர்த்திப் பிடித்திருப்பதால், மத ரீதியான வகுப்புவாத அடையாளம் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தனிநபர் பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கிறது. 
நாட்டில் உள்ள மக்களில் அறுதிப் பெரும்பான்மையினர், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பதைத் தவிர வேறெந்த பிரஜா உரிமையையும் அனுபவிக்காத சூழ்நிலையில், இம்மக்கள் மத்தியில் தேசிய உணர்வு குறித்த பிரச்சாரங்கள் (nationalist discourses) போய்ச் சேருவதை விட, அவர்களின் சொந்த மத நம்பிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் மிக எளிதாக அவர்களை சென்று அடைந்துவிடுகின்றன. அவை பிற மதத்தினருடனான உறவுகள் மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறு மக்கள் தங்கள் சொந்த மதத்தின் அடிப்படையில் தங்கள் சமூக மற்றும் பொருளி யல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், அத்தகைய மத அடையாளங்களுடைய  மோசமான பக்கத்தை எப்போது அவர்கள் மீறி வெளிவருவார்கள் என்பது குறித்து என்னால் தெளிவாகக் கணிக்க முடியவில்லை.
முஸ்லீமாக இருக்கும் ஒருவரால் தன்னுடைய மத அடையாளத்தைத் துறந்து, சிந்தனை செய்வது சாத்தியமா? வீரஞ்செறிந்த அளப்பரிய துணிவுள்ள ஒருசிலருக்கு வேண்டுமானால் அது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை முஸ்லீம்களுக்கு அது சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது.
அடுத்து, "இந்து சமூகத்தினர்" என்றும் "முஸ்லீம் சமூகத்தினர்" என்றும் கூறுவதுகூட கற்பனையான ஒன்று என்றே நான் கருதுகிறேன். ஒருசில மதம்சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களைத் தவிர காஷ்மீரில் உள்ள முஸ்லீம்களும் கேரளாவில் உள்ள முஸ்லீம்களும் தங்களுக்கு இடையே உறவுகளைப் பகிர்ந்து கொள்வார்களா என்பது சந்தேகமே.
அதேபோன்றுதான் நாகாலாந்தில் உள்ள கிறித்துவர்களுக்கும், கேரளாவில் உள்ள கிறித்துவர்களுக்கும் இடையே உள்ள உறவுமாகும். அதேபோன்றதுதான் இந்தியா முழுதும் உள்ள இந்துக்களும் தங்கள் பிராந்தியங்கள், சாதிகள், தொழில்களைக் கடந்து ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைப்பதும் மிகவும் அபத்தமான ஒன்றேயாகும்.
ஆயினும், நம்முடைய அரசியல் பிரச்சாரங்கள் அனைத்திலும், நாடு முழுவதுமுள்ள மதச் சமூகத்தினர் அனைவரும் ஒரேமாதிரிதான் என்கிற முறையிலேயே நம்முடைய அரசியல் பிரச்சாரங்களும், கொள்கைகளும் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய கற்பனையான அடையாளம், உண்மையான சமூகத்தினர் மீது அனைத்து மதங்களைச் சார்ந்த சுயநல அரசியல் வாதிகளாலும் மேலிருந்து திணிக்கப்படுகின்றன. அரசுகளும், முந்தைய காலனிய அரசு விரும்பியதைப்போலவே, வர்க்க அரசியலுக்குப் பதிலாக இத்தகைய இனம் சார்ந்த பிரதிநிதிகளையே விரும்புகின்றன.
இரண்டாவதாக, அனைத்து மத நம்பிக்கைகளும், அவை நம்பிக்கையாக இருந்தாலும் சரி அல்லது செயலாக இருந்தாலும் சரிவகுப்பு வாதத்தை நோக்கி இட்டுச் செல்வதில்லை. ஆனால் இந்தியாவில் அனைத்துவிதமான  வகுப்புவாதங்களும்  மத அடையாள உணர்வு டன், வேண்டுமென்றே தங்கள் அரசியல் ஆதா யங்களுக்காக அரசியலாக்கப்படுகின்றன. இதற்கு மதங்களையே குறை சொல்லக்கூடாது. ஆயினும், சில வகையான மத உணர்வுகள் மறுக்கமுடியாத விதத்தில் பிற மதத்தினர் மீது மதவெறித் தீயை உசுப்பிவிடும் விதத்தில் தூண்டப்படுகின்றன. உதிரிப்பாட்டாளியாக (lumpen proletariat) இருக்கிற ஒரு கரசேவகரை, மூளைச் சலவை செய்து, ராமபிரானின் ஜன்மபூமியை விடுவித்திட ஆயுதம் ஏந்து, ராமரின் படையில் அனுமானைப் போல பாபர் மசூதியின் குவிமாடத்தின் (dome) மீது தாவி ஏறி அதனைத் தகர்த்திடு, இந்துவாக இருந்து உன் வீரத்தைக் காண்பி என்று சொல்லும்போது அது அந்த கரசேவகருக்கு நியாயமாகவே தோன்றுகிறது.   இதற்கு மதம் பொறுப்பாகாது, அதேபோன்று இத்தகைய செயல் அப்பாவித்தனமான ஒன்றும் கிடையாது.
மதம், அரசியல் வாழ்க்கையின் அனைத்துவிதமான வடிவங்களிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டால், மதத்தால் வன்முறை நிகழ்வுகள் நடைபெறுவது என்பது மிகவும் குறைந்த அளவிலேயே இருந்திடும். மதவெறியைத் தூண்டிவிடுவது என்பதும் அநேகமாக இருக்காது.
அடுத்து, நாம் விவாதத்திற்காக எடுத்துக் கொண்டுள்ள மதச்சார்பின்மை (“secularism”) என்ற சொல்லிற்கு வருகிறேன். மதச்சார்பின்மை என்றால் அனைத்து மதங்களுக்கும் சம அளவில் மரியாதை செய்தல் என்பது மிகவும் விசித்திரமான இந்தியக் கண்டுபிடிப்பாகும், காலங்காலமாக இருந்து வந்த மத சகிப்புத்தன்மை என்பதைப் படிப்படியாக ஒழித்துக் கட்டுவதற்கான வேலையே இது. உண்மையிலேயே மத நம்பிக்கை உள்ள ஒருவனுக்கு அவனுடைய சொந்த மதம்தான் உயர்வானது. எனவே அவன் மற்ற மதங்களுக்கும் சமமாக மரியாதை கொடுப்பது என்பது சாத்தியமே இல்லை. மத நம்பிக்கையுள்ள ஒரு முஸ்லீமுக்கு, இந்து மதம் என்பது இயல்பாகவே மட்டமானது தான். அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறுவது, அரசின் விவகாரங்களை அமல்படுத்துவதில், லஞ்ச ஊழல் மிகுந்த தாராளமய ஜனநாயக அரசியலில், பெரும்பான்மையினர் மதத்தினரைப் பெரிய அளவிற்கு மரியாதை செலுத்துவதற்கே இட்டுச் செல்லும். ஏனெனில் எண்ணிக்கையில் அவர்கள் வாக்குகள்தான் அதிகம். பெரும்பான்மையினரின் பண பலமும், அதிகார பலமும்தான் ஆதிக்கம் செலுத்தும், பெரும்பான்மை மதத்தினரில் உள்ள மத்திய வர்க்கத்தினரின் மத்தியிலும் மூர்க்கத்தனமான முறையில் புதிய வகையிலான மதச் சிந்தனைகள் உருவாகி ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்தியாவில், எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மதச்சார்பின்மையைக் கடைப் பிடிப்பதாக அவை சொல்லிக்கொண்டாலும், பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்துக் களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. பாஜக விற்கும் காங்கிரசுக்கும் சற்றே வித்தியாசம் இருக் கும் எனில் அது அவர்கள் பின்பற்றும் தத்துவங்க ளால் அல்ல, மாறாக அவர்கள் சார்ந்திருக்கிற நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மக்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே அமைந்திருக்கும்.
இது தொடர்பாக, பெர்ரி ஆண்டர்சன்  குறிப்பிடுகையில்இந்திய அரசு ஒரு இந்து வகுப்புவாத அரசுதான் என்கிறார். அது மதச்சார்பின்மை என்கிற சொல்லை தன் தத்துவத்தை நியாயப்படுத்துவதற்கானதாக உபயோகித்துக் கொண்டிருக்கிறது என்கிறார். ஆயினும், இதனை நான் வேறு விதமாகக் கூற விரும்புகிறேன்.  இந்து மதம் குறித்து காந்தி, நேரு மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கம் வெவ்வேறான அளவுகோல்களை வைத்திருந்தன. அவற்றை ஒரேமாதிரி பார்ப்பதென்பது சரியல்ல. மேலும் இந்தியா என்பது பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு. இங்கே முஸ்லீம்கள் உட்பட அனைத்து வகையான மதத்தினரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதனை இந்து நாடு என்று இந்து மதவெறியர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்து மதத்தினர்தான் நாட்டில் பெரும்பான்மையினர் மற்றும் வல்லமைபடைத்தவர்கள். மற்ற அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைத்தால் கூட அவர்களை விடப் பெரும்பான்மையினராவார்கள்.
அல்லது, இதனை வேறுவிதமாகவும் கூறலாம். இந்தியாவில் மதவெறி வன்முறை நிகழ்வுகள் இல்லாதவரை அல்லது மிகமிகக் குறைவாக நிகழும் வரை அது பல்வேறு மதங்களுடன் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அவ்வாறு மிகவும் சிறிய அளவில் மத வன்முறை நிகழ்வுகள் நடைபெறுகையில், மற்ற வன்முறை நிகழ்வுகள் போன்றே அதுவும் ஒரு சட்டம் - ஒழுங்கு பிரச் சனைதான்.  மதச்சார்பின்மையை ஒரு நியாயமான தத்துவமாகக் கருதுவது எந்தவிதத்திலும் சரிதான்.
மதச்சார்பின்மை என்பது நவீனகால ஒழுக்கப் பண்பாகும். பண்டைக் காலங்களில் இது கிடையாது. அதாவது, அரசின் அதிகார வரம்புக்குள்ளிருந்து மதத்தை வெளியேற்றுதல் என்பதாகும். இது ஒரு ஐரோப்பிய ஒழுக்கப் பண்பாகும். இது தொடர்பாக மிக அதிக நாட்டுப்பற்றுடன் இதனை அணுகுவதற்கு முன்பு, மார்க்சிசமும் ஓர் ஐரோப்பிய ஒழுக்கப் பண்புதான் என்பதை நாம் நினைவில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும். இத்தகைய ஒழுக்கப் பண்புகள் அந்நாட்டின் வரலாற்றுத் தேவைகளின் அடிப்படையில் அங்கே உருவாயின என்பதையும், பின்னர் வரலாற்று நிலைகளின் காரணமாக படிப்படியாக அவை உலகம் முழுவதும் பரவின என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய முதலாளித்துவ வர்க்கம் நவீனத்துவத்தைக் கிரகித்துக் கொள்ளாமல் தன்னுடைய சமூகக் கண்ணோட்டத்தில் மிகவும் பிற்போக்குத் தனமாக இருந்ததால், நவீன மதச்சார்பின்மை ஒழுக்கப் பண்பினை சிதைத்து சின்னாபின்னமாக்கி, மதம் சார்ந்த சொற்றொடர்களுடன் மாற்றி வடிவமைத்துக் கொண்டது.
ஐரோப்பாவிலேயே பல நாடுகள் தற்போது கலாச்சாரக் கொந்தளிப்பில் சிக்கிக் கொண்டுள்ளன. ஏனெனில், பல்வேறு இனத்தைச் சேர்ந்த, பல்வேறு நிறத்தைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பாவிற்குள் குடியேறி வந்துள்ள நிலையில் அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாமல் அது திணறுகிறது.
மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதில் இந்தியா அளவிற்குக் கூட அமெரிக்கா இருக்கிறதா என்பது சந்தேகமே. இரு முதலாளித்துவ அரசுகள்தான் உண்மையில் முறையான மதச்சார் பின்மையை - அங்குள்ள முதலாளிகள் இளைஞர்களாக இருந்த காலத்தில் - பெற்றிருந்தன. அவை புரட்சிகர பிரான்சும் கேமாலிஸ்ட் துருக்கியும் மட்டுமேயாகும். அவைகூட இன்று அவ்வாறு உரிமை கொண்டாட முடியாது. ஆட்சி அதிகாரத்திலிருந்து மதச்சார்பின்மை அடிப்படையில் தேவாலயங்களைப் பிரித்த நாடுகள் என்று சொல்வது என்றால், மதம் ஒருவரின் தனிப்பட்டவரின் உரிமை, அதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன நாடுகள் என்றால் அவை கம்யூனிஸ்ட் நாடுகள் மட்டுமேயாகும்.
சோவியத் யூனியன் தகர்ந்த பின்பு, தேச அளவிலும் சர்வதேச அளவிலும் இயங்கும் மதவாத அமைப்புகள் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டதை நம்மால் பார்க்க முடிந்தது.  
இறுதியாக, இம்மூன்று சொற்களிலும் மிகவும் கடினமான வார்த்தை தேசியவாதம் என்னும் சொல்தான்.
ரஷ்யப் புரட்சியைத் தவிர, சீனா, கியூபா உட்பட மற்ற அனைத்து நாடுகளிலும் ஏற்பட்ட சமூகப் புரட்சிகளும் காலனிய மற்றும் அரைக் காலனிய நாடுகளில் நடைபெற்றவைகள்தான். எனவே, சோசலிசத்திற்கான இயக்கங்கள் தேச விடுதலைக்கான யுத்தங்களுடன் இணைக்கப்பட்டன. மேலும், மூன்றாம் உலக நாடுகளில் இருந்த மிகவும் முற்போக்கான முதலாளித்துவ அரசுகள் தேசப்பற்றுடன் கூடிய பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றின. பாண்டுங் திட்டக் காலத்தில் நேருவின் இந்தியா, நாசரின் எகிப்து மற்றும் பாதிஸ்ட் அரபு நாடுகளை இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். இப்போது வெனிசுலா, பொலிவியா மற்றும் ஈக்வேடார் நாடுகளை இவ்வாறு கூற முடியும்.  இவ்வரலாறுகள் நம்மை இன்றைய தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று உணர்வை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதுடன் பொருத்திப் பார்க்கும் போக்கிற்கும் இட்டுச் சென்றுள்ளது.
காலனிய நாடுகளில் உருவான தேசியவாத அல்லது நாட்டுப்பற்று சித்தாந்தம் காலனியத்திற்கு எதிரான ஒன்றுதான். ஆனால் இது பல சமயங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சித்தாந்தமாக தவறான முறையில் தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு காலனியத்திற்கு எதிராக உருவான பல இயக்கங்கள் சோசலிஸ்ட் உள்ளடக்கங்களைக் கொண்டவை என்று சொல்ல முடியாது. இத்தகைய இயக்கங்களில் பல ஏகாதிபத்திய மூலதனத்தின் நவீன காலனிய வடிவங்களுடன் மிக வேகமாகத் தங்களை இணைத்துக் கொண்டு, மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கின்றன.
ஆப்ரிக்காவில் உள்ள நாடுகள் பல இத்தகைய வரலாற்றால் நிரப்பப்பட்டுள்ளன. ஏன், நம் அண்டை நாடுகளாக உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் குறித்து கூறத் தேவையே இல்லை. இதில் மிகவும் சிக்கல் நிறைந்த வழக்குகள் எவை எனில், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக மூர்க்கமான முறையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தாலிபான்களாகும். ஆயினும் இவர்கள் மக்களுக்கான சோசலிச முற்போக்கு சக்தியாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய பாசிஸ்ட் இயக்கங்கள் அனைத்தும் நடைமுறையில் ஒரு விஷயத்தில் ஒத்துப்போயின. முழுமையான தேசியவாதம் என்று தங்களை அழைத்துக் கொண்ட அவைகள் வலதுசாரி தேசியவாதங்களின் அனைத்து விதமான நச்சுத்தன்மை வாய்ந்த வடிவங்களையும் தம்முள் கொண்டிருந்தன.  ஐரோப்பிய முதலாளித்துவத்தின் 19 ஆம் நூற்றாண்டுக் காலத்தில் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சித்தாந்தமாக தேசியவாதம் இருந்தது என்பது மட்டுமல்ல, அந்தக் காலகட்டத்தில் தான் ஐரோப்பாவில் தேசம் என்கிற வடிவம் உருவானது. இவ்வாறு கடுஞ்சிக்கல்கள் நிறைந்த நிலையில் தேசியவாதம் என்ற சொல்லை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதுடன் சமமாய்ப் பொருத்திப் பார்க்கக் கூடாது என்றே எனக்குத் தோன்றுகிறது.
தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று என்ற சொல்லின் பின்னணியில் எந்தவித வர்க்க உள்ளடக்கமும் இல்லை என்பதே என் சொந்தக்கருத்தாகும். எல்லா நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் தங்கள் வர்க்க உள்ளடக்கத்தை அவற்றின் மீது ஏற்றுகின்றன என்பதே என் கருத்தாகும்.
லெனின், தொழிலாளி வர்க்கத்தின் கட்சியின் தலைவர் என்ற முறையில் காலனிய நாடுகளில் இருந்த நிலைமைகளை ஆராய்ந்து அவற்றின் அடிப்படயில் தேசிய இனப்பிரச்சனைக்கு அதிக அழுத்தம் கொடுத்தார். காலனிய எதிர்ப்பு தேசியவாதத்தின் தலைமையை முதலாளித்துவ வர்க்கம் தமதாக்கிக் கொள்வதற்கு முன்பு தேசிய இனப்பிரச்சனை மீது மேலாதிக்கத்தை நிறுவிட விவசாய வர்க்கத்தின் கூட்டணியுடன் தொழிலாளி வர்க்கத்தால் சாத்தியமாகலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே லெனின் அவ்வாறு கூறினார்.
காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் தேசிய முதலாளிகளில் நாட்டுப்பற்று கொண்ட பிரிவினர் தலைமைப் பாத்திரம் வகிப்பதை ஏற்றுக் கொள்வது என்பது  விரும்பத்தக்க ஒன்று அல்ல. இது கம்யூனிய இயக்கத்தின் ஒரு பலவீனமேயாகும்.
தேசியவாத சித்தாந்தம் என்பது அடிப்படையில் தேசிய-அரசு (Nation-State) வடிவத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இணைக்கப்பட்டதாகும். தேசிய-அரசு என்ற வடிவம் இருக்கும் வரை, ஏதாவது ஒரு வகையிலான தேசியவாதம் ஒரு மெய்யான அவசியமாகும். நாஜி ஜெர்மனியின் பாசிஸ்ட் தேசியவாதம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய தேசியவாதம், வியட்நாம் அல்லது அங்கோலா போன்ற நாடுகளில் விடுதலை இயக்கங்களுக்குத் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சிகர தேசியவாதம், மதச்சார்பற்ற அரசு தேசியவாதம், ஈரான் நாட்டின் சமயகுரு மார்களின் தேசியவாதம் என்று எண்ணற்ற தேசியவாதங்கள்.
எங்கெல்லாம் தேசியவாதங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் தேசியவாதம் குறித்த பொருள் குறித்தும் எண்ணற்ற சண்டை சச்சரவுகளும் உண்டு. தேசியவாதத்தின் ஒரு வகை, மற்றோர் வகையால் தோற்கடிக்கப்பட்டு, மாற்றியமைக்கப்படுவதும் ஒரே நாட்டில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இப்போதெல்லாம், உலகில் பலநாடுகளில், நாட்டின் குணாம்சத்தை வடிவமைப்பதில் அந்நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள மதத்தையும் இணைத்துக் கொள்வது என்பதும் புதுப்பாணியாக மாறி இருக்கிறது. யூத சமயத்தை ஒரு நாட்டினர் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால், சில நாடுகளில் இஸ்லாமை தூக்கிப் பிடிக்கிறார்கள், இங்கே இந்துயிசத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். வேறொரு நாட்டில் கத்தோலிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.
ஒரு காரணத்திற்காகவே இவை அனைத்தையும் நான் கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஏகாதிபத்திய எதிர்ப்பு மட்டுமே இந்திய தேசியவாதத்திற்கான உண்மையான உள்ளடக்கமாக இருக்க முடியும் என்று நம்பக் கூடிய அளவிற்கு இடதுசாரிகளாகிய நீங்கள் ஏற்கனவே முடிவுக்கு வந்திருப்பீர்கள். நான் அவ்வாறுதான் நம்புகிறேன். ஏனெனில் நான் ஒரு மார்க்சிஸ்ட். துரதிர்ஷ்டவசமாக, மார்க்சிசம் நம் நாட்டில் மிகவும் சிறுபான்மையினர் மத்தியிலேயே இருந்து வருகிறது.
அதேசமயத்தில் இந்துத்துவா கொள்கையையும் புறத்தூண்டுதல் எதுவுமின்றி நகர்ப்புற, உயர்சாதி, மத்தியதர, சமூகத்தில் பத்தாம் பசலியாகவுள்ள இந்துக்கள் எவரும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. இந்தியாவில் இந்துக்கள்தான் அதிகம். எனவே இந்துக் கலாச்சாரத்தை தேசியக் கலாச்சாரமாக அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் நடை முறையில் அவ்வாறில்லை.
ஆர்எஸ்எஸ் இயக்கம் 1925 இல் துவக்கப்பட் டது. ஒவ்வோராண்டும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு உயர்ந்து வந்திருக்கிறது. ஆனாலும் 1948க்கும் 1962க்கும் இடையே மட்டும் விதிவிலக்காக அதன் உறுப்பினர் எண்ணிக்கை தேக்க நிலையில் இருந்தது. இவ்வாறு தேக்கநிலை ஏற்பட்டது என்பது காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கும், நேரு இறந்ததற்கும் இடையிலான காலகட்டம் என்பதை நீங்கள் நினைவுகூர முடியும். 1962 இல் இந்திய - சீன யுத்தம் துவங்கியபின் இதனை, இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளை அவமானப்படுத்திட, அவர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்திடமிகவும் விரிவான அளவில் பயன்படுத்திக் கொள்ளப்பட் டது. அதன் பின்னர் வலதுசாரிகளும் தங்களை ஸ்தாபன ரீதியாகத் திரட்டிக் கொள்ள முடிந்தது.
ஆயினும், 1948க்கும் 1962க்கும் இடையே ஆர்எஸ்எஸ் வளராமல் தேக்க நிலையில் இருந்ததற்கு மகாத்மா காந்தியின் படுகொலை ஒரு காரணியாக இருந்த போதிலும், அந்த சமயத்தில் காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் வழிவந்த ஜவஹர்லால் நேருவால் தலைமை தாங்கப்பட்ட அரசியல் மற்றும் கலாச்சார மூலதனம்தான் அதற்கு மிகவும் முக்கியமான காரணி என்பது என் கருத்தாகும். மேலும் அந்த சமயத்தில் நாடாளுமன்றத்தில் நேருவுக்கு எதிர்ப்பைப் பிரதானமாக வழங்கியது கம்யூனிஸ்ட்டுகளும், சோசலிஸ்ட்டுகளும்தான் என்பதையும் நாம் நினைவு கூர்தல் வேண்டும். இவ்வாறு அந்த சமயத்தில் ஒட்டுமொத்த இந்திய அரசியலுமே வகுப்புவாதத்தை எதிர்த்த அரசியல் சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் ஆளும் கட்சி மட்டுமல்ல, ஹாப்ஸ்வாம் ஒருமுறை சொன்னது போல அறிவிற் சிறந்த இடதுசாரிகளும் (“The Enlightenment Left”) பிரதான எதிர்க்கட்சி சக்திகளாக இருந்து மண்ணின் மாண்புகளை உயர்த்திப் பிடித்தார்கள். ஜவஹர்லால் நேரு முதலமைச்சர்களுடன் கொண்டிருந்த எண்ணற்ற கடிதப் போக்குவரத்துகளிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குள்ளும் வகுப்புவாதம் புரையோடிப் போயிருந்ததை அவர் கூர்மையாகக் கண்டறிந்திருந்தார் என்பதைக் காண முடியும்.
ஆயினும், அந்த சமயத்தில் இடதுசாரிகளின் மேலாதிக்கம் இருந்தது பற்றி நான்கு அம்சங்களைக் கூற வேண்டியது அவசியம். முதலாவது, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், காங்கிரசிலிருந்த வலதுசாரிகள் சூழ்ச்சி செய்தபோதிலும் கூட அவற்றைப் புறந்தள்ளிவிட்டு நாட்டில் பல மாநிலங்களில் ஆட்சியிலிருந்தாலும் சரி மற்றும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, இடதுசாரிகள்  வகுப்புவாதத்திற்கு எதிராக முன்னின்று போராடினார்கள்.
இரண்டாவதாக, முதலாளிகளுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் அளிக்கப்பட்ட போதிலும், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் துறைக்கு சேவகம் செய்யக் கூடிய விதத்தில் செயல்பட்ட அதே சமயத்தில், அவர்களின் அளவுக்கு மீறிய பேராசையை ஒரு சமயத்தில் தடுத்து நிறுத்தவும் முடிந்தது. இந்தியப் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டு நெருக்கடிக்கு உள்ளான போது இந்திராகாந்தியுடைய வங்கிகள் தேசியமய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மூன்றாவதாக, அந்த சமயத்தில்தான் இந்திய அரசு மிகவும் உறுதியுடன் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மிகவும் குளறுபடியாக இருந்த சமூக ஒழுங்கில் நவீன, மதச்சார்பற்ற, முற்போக்கு மாண்புகளை சமூகத்தில் ஆழப் பதித்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இவை அனைத்தையும் அப்போது வெளியான புதிய பாடப் புத்தகங்களில் காண முடியும். மேலும் ஆட்சியிலிருந்தவர்களால் மட்டுமல்ல, பிரதான எதிர்க்கட்சியினராலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அரசியல் பேச்சுக்கள் அமைந்திருந்தன. ஏற்கனவே காலனிய எதிர்ப்பு இயக்கத்தில் அரசியலாக்கப்பட்டிருந்த மக்கள் மத்தியில் இவை மேலும் பெரிய அளவில் பக்குவத்தை உருவாக்கின.
இறுதியாக, மதச்சார்பின்மை என்பது தனிப்பட்ட ஒன்றாக பார்க்கப்படவில்லை. மாறாக அது அனைத்து மாண்புகளின் தொகுப்பாகவும், கூட்டுச் செயல்பாடாகவும்  கருதப்பட்டது.
நாட்டில் வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் எழுதப்படிக்கத் தெரியாத தற்குறிகளான ஒரு சமூகத்தை நாம் கொண்டிருந்தோம். நாடு சுதந்திரம் பெற்றபின் அயல்துறைக் கொள்கையில் அணிசேராக் கொள்கையை உறுதிபட பற்றி நின்றோம். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தைப் பாதுகாத்தோம். பொருளாதார விவகாரங்களில் சோசலிச வளர்ச்சிப் (“socialistic development”) பாதை முக்கிய பங்கு வகித்தது. இவ்வாறு பல முற்போக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆட்சியாளர்கள் நடைமுறையில் செய்தார்களோ இல்லையோ வாக்குறுதிகள் தாராளமாகவே அளிக்கப்பட்டன. அத்தகைய வாக்குறுதிகளும் கூட மக்களின் அரசியல் செயல்பாட்டுக்கு சேவை செய்தன.
நேருவினுடைய ஆட்சிக்கு பிரதானமான எதிர்ப்பு என்பது வலதுசாரிகளிடமிருந்து கிடையாது, மாறாக இடதுசாரிகள்தான் பிரதானமான எதிர்ப்பினை மேற்கொண்டிருந்தார்கள். அவை மிகவும் ஆக்கபூர்வமானதாகவும், மதச்சார்பின்மை மாண்புடன் பின்னிப்பிணைந்த சோசலிச சமுதாயத்தை உருவாக்கும் விதத்தில் அது அமைந்திருந்தது.
இப்போது அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டுவிட்டன. இடதுசாரிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு.
நவீன தாராளமய மற்றும் வலதுசாரிகளின் கொள்கைகளில் மதச்சார்பின்மையின் மாண்பு எந்த அளவிற்கு பின்னிப் பிணைந்திருக்கிறது என்று கூறுவது மிகவும் கடினம். உலகின் பல பகுதிகளிலும் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன? அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக இருந்தாலும் சரி மற்றும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவுள்ள நாடுகளாக இருந்தாலும் சரி, நவீன தாராளமயக் கொள்கைகள் எந்த நாடுகளில் அமல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் வலதுசாரிகள் வெற்றிக் களிப்பில் மிதப்பதைப் பார்க்கலாம். இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா, என்ன?
வகுப்புவாதம் தொடர்பாக நான் இதுவரை மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளேன். 1993 இல் அயோத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சிகள் குறித்து (“On the Ruins of Ayodhya) ஒரு நூலும், அதன் பின்னர் பத்தாண்டுகள் கழித்து 2003 இல், குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் நடைபெற்ற சமயத்தில், இரு கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். ஆயினும் மதவெறியர்களைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு மாற்றம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை.
இப்போது கார்ப்பரேட்டு மூலதனம் ஒன்றாக இணைந்துமோடியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி இருக்கிறது. இதன் மூலம் அரசியல் பொருளாதாரத்தின் ஆட்சிப் பரப்பிற்குள் மூலதனத்தின் நவீன தாராளமய எதேச்சாதிகாரம், தத்துவார்த்த ரீதியாக வகுப்புவாத எதேச்சாதிகாரமும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கைகோர்த்துக் கொண்டுள்ளன.  
கார்ப்பரேட்டுகளும் அரசாங்கமும் ஒன்றாக இருந்த முசோலினியின் இத்தாலியப் பாசிசத்தின் வடிவம் குறித்து இங்கே நினைவுகூர்தல் நலம் பயக்கும். சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தியப் பின் நவீனத்துவம் குறித்த பிரச்சனையில், சுதந்திரத்திற்குப் பிந்தைய நாட்டின் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம் என்று கூறியிருந்தேன். 1947இலிருந்து 1975 வரை முதல் கட்டம். நேருவின் ஆட்சி தொடங்கி, இறுதியில் நெருக்கடிக்க ஆளாகி, அவசரநிலைக் காலத்தில் சிதைந்தது. அடுத்த இருபது ஆண்டுகள் இரண்டாவது கட்டமாகும். இக்கால கட்டம் பல்வேறு சிந்தனைகளைக் கொண்டவர்களை இணைத்த ஜேபி இயக்கத்தால் துவங்கப்பட்டு, அவசரநிலைக் காலத்திற்குப் பின் ஆட்சி செய்த ஜனதா அரசாங்கத்தின் காலம். இக்கால கட்டத்தில்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்திய அரசியலில் ஒரு மரியாதைக்குரிய மதித்துப் போற்றக்கூடிய ஓர் இயக்கமாகவும் சட்ட ரீதியாக இயங்கக் கூடிய ஓர் இயக்கமாகவும் மாற்றப்பட்டது. இதன் அரசியல் அங்கமான ஜனசங்கம் கட்சிக்கும் அதன் தலைவர்கள் வாஜ்பாபி மற்றும் அத்வானிக்கும் ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்திய அரசியலில் இது அவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஒட்டுமொத்தத்தில், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட முதலாளித்துவ அரசின் அரசியல் நெருக்கடி காரணமாக மேலும் தொடர்ந்து ஆட்சி செலுத்தும் வல்லமையை இழந்தது. ஆயினும் அதற்கு மாற்றாக வேறொருவரும் தோன்றவில்லை.
இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடி முடிவுக்கு வந்துஇரண்டாவது வாஜ்பாயி அரசாங்கம் 1998 இல் ஆட்சிக்கு வந்தது. இது புதியதொரு கட்டத்தைத் தொடங்கி வைத்தது. இடதுசாரிகள் அல்லாத அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி ஓர் அரசியல் கட்சிகளின் கூட்டணி உருவானது. இது முதலாளித்துவ ஆட்சிக்கு புதியதொரு ஸ்திரத்தன்மையைக் கொடுத்தது. எந்தக் கூட்டணியில் நின்று தேர்தலில் போட்டியிட்டாலும், வெற்றி பெற்ற பின் கூட்டணியை மாற்றிக் கொள்வது என்பதும் இக்காலகட்டத்தில் நடந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான் 1989இலிருந்து 1992 வரை மூன்றாண்டுகளில் சர்வதேச அளவிலும், தேச அளவிலும் முக்கிய சம்பவங்கள் பல நிகழ்ந்தன. சர்வதேச அளவில்  சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் வரலாற்றுச் சிறப்பு கொண்ட கம்யூனிஸ்ட் அமைப்பு முறை முடிவுக்கு வந்தது. அமெரிக்கா உலக மேலாதிக்கப் போலிஸ்காரனாக (Hegemon) உருவெடுத்தது. இதனுடன் போட்டிபோடக் கூடிய அளவிற்கு எவரும் இல்லை. இந்திய ஆளும் வர்க்கமும் அதன் அரசும் இப்போது வெளிப்படையாகவே புதிய ஏகாதிபத்திய வல்லரசுக்குப் பின்னால் எவ்விதமான கருத்து வேறுபாடுமின்றி அணிதிரண்டன.
நம் நாட்டிற்குள்ளும் நவீனதாராளமயக் கொள்கைகள் நரசிம்மராவ்-மன்மோகன்சிங் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் களமிறங்கின. வகுப்புவாதத்தின் அமைப்புகளுக்கும், காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கும் இடையே அதிகார பூர்வமாக அறிவிக்காமல் குறிப்பறிந்து ஒன்றாய் செயல்படும் விதத்தில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இதனை 1989 இல் சிலாநியாஸிலும், மிகவும் மோசமான முறையில் 1998 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் பார்க்க முடிந்தது. இக்கால கட்டம் 1998 இல் முடிவுக்கு வந்தது.
அதன்பின் புதிதாக பாஜக தலைமையிலான வலதுசாரிகளின் அரசாங்கம் அமைந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய ஆளும் வர்க்கத்தின் எண்ணப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டது. அது நாட்டிற்கு வெளியே ஏகாதிபத்தியத்துடன் மிகவும் நெருக்கமாகக் கூட்டணி வைத்துக் கொண்டது, நாட்டிற்கு உள்ளே நவீன தாராளமயக் கொள்கையை (இதனை நான் அதிதீவிர முதலாளித்துவம் என்று அழைப்பேன்) பின்பற்றியது.
ஆளும் வர்க்கத்துக்கு மதச்சார்பின்மை முகத்துடன் காங்கிரஸ் சேவகம் செய்தது, பாஜகவோ வகுப்புவாத முகத்துடன் சேவகம் செய்தது. பாஜக தன்னுடைய ஆட்சிக்கு வேறு பல கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து இருக்க வேண்டியிருந்ததால் அது தன்னுடைய சொந்தத் திட்டத்தின் ஆத்திரமூட்டல் அம்சங்களைச் சற்றே நிறுத்தி வைத்திருந்தது.
இப்போது மோடி, தன்னுடைய பிரதமர் பதவிக்கான கனவிற்கு இந்துத்துவாக் கொள்கையை இலக்காக முன்வைக்கவில்லை, மாறாக மன்மோகன்சிங்கிற்கு சேவை செய்த அதே வளர்ச்சிக் கொள்கையைத்தான் முன்வைத்திருக்கிறார்.
வகுப்புவாதப் பிரச்சனையைப் பொறுத்த வரை, அரசியல் அரங்கில் மிக முக்கியமான அம்சம், 1998க்குப் பின், பாஜகவுடன் இடதுசாரிகளைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏதோ ஒரு சமயத்தில் அல்லது பிறிதொரு சமயத்தில் உறவு கொண்டுள்ளன என்பதாகும்.
மக்கள் மத்தியில் மதவெறி சிந்தனைகளை வளர்த்தெடுப்பதென்பது இரு விதங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளும் மக்கள் மத்தியில் இவ்வேலையை மிகவும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கின்றன. கடந்த 80 ஆண்டுகளில் தங்கள் பக்கம் ஆதரவர்களை அதிக அளவில் இவர்கள் பெற்றுள்ளனர். கிராம்சி கூறியதைப்போல சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்கள் மத்தியில் நாள்தோறும் சிறுசிறு இயக்கங்கள் மூலம் இவர்கள் தங்கள் வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இப்போது இத்தகைய வேலைகளை தாங்கள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் ஆட்சியாளர்கள் மூலமாகவும், அதன் அரசியல் கட்சிகள், கல்வி நிறுவனங்கள், அடக்குமுறை கருவிகள் மற்றும் பல சமயங்களில் நீதித்துறை மூலமாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.
வகுப்புவாதம் குறித்த நம்முடைய ஆய்வுகள், சங்பரிவாரக் கூட்டத்தின் வேலைகள் குறித்தே அதிக அளவில் கவனம் செலுத்தி இருக்கின்றன. ஏனெனில் நாட்டில்  மிகவும் பெரிய அளவில் ஸ்தாபன ரீதியாக செயல்படும் வகுப்புவாத சக்தி இதுதான். ஆயினும் இது ஒன்று மட்டும் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. எடுத்துக்காட்டுக்காக நான் மேலும் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன். அவை முறையே முஸ்லீம் வகுப்புவாதம் மற்றும் சிவசேனை ஆகியவைகளாகும்.
பொதுவாக இந்திய முஸ்லீம்களைப் பொறுத்த வரை, ஒரு குறிப்பிடத்தக்க உண்மை என்னவெனில், நாடு சுதந்திரம் அடைந்த பின் முஸ்லீம்களுக்கு என்று அகில இந்திய அளவில் ஒரு கட்சி உருவாகவில்லை. வட்டார அளவிலும் மாநில அளவிலும் ஏராளமாக இருந்தாலும், அகில இந்திய அளவில் அப்படி ஒரு கட்சி இல்லை.
தேசிய அரசியலிலும், ஏன் மாநில அளவிலான அரசியலிலும் கூட, முஸ்லீம்களில் பெரும்பாலோர் ஒரு மதச்சார்பற்ற தேர்தல் மாற்றைத்தான் (secular electoral alternative) கோருகின்றனர். இதற்கு அவர்கள் மதச்சார்பின்மை கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக மதச்சார்பற்ற அரசு மூலம்தான் தாங்கள் பெரும் அளவில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோருக்கு மதச்சார்பின்மை என்பது இவ்வாறு சமூக நவீனமயத்தை (social modernization) அல்லது ஓர் அரசியல் கண்ணோட்டத்தை அல்லது ஒரு தத்துவார்த்த வாழ்நிலையை வெளிப்படுத்தும் ஒன்றாக மட்டுமல்ல, தங்கள் இனத்தின் நலனுக்கு மிகவும் உகந்த ஒன்றாகவும் இது இருப்பதால்தான் அவ்வாறு அவர்கள் கோருகிறார்கள்.
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில், முஸ்லீம் வகுப்புவாதத் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகரீதியாக பத்தாம் பசலித்தனமான சக்திகள் முஸ்லீம்கள் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய விதத்தில்தான் பொதுவாக இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பின்பு, வருமானம், கல்வியின் நிலைகள், காவல்துறை மற்றும் ராணுவம் போன்ற அரசு நிறுவனங்களில் வேலைக்கு எடுத்தல் என அனைத்திலும் முஸ்லீம்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையேயான இடைவெளி விரிவடைந்திருப்பதாகத்தான் அனைத்துப் புள்ளி விவரங்களும் கூறுகின்றன. அரசின் நிறுவனங்கள் அனைத்திலும் வகுப்புவாதமயப்படுத்தப்பட்டிருப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் நன்கு ஸ்தாபனப்படுத்தப்பட்ட வன்முறை அவர்களுக்கு எதிராக ஏவப்படுதலும், முஸ்லீம்கள் மத்தியில், எந்த நிமிடத்திலும் தாங்கள் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுத் தாக்கப்படலாம் என்கிற அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன.
காஷ்மீரில் அரசுப் பயங்கரவாதத்தை, ஜிகாத் பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்ல, சாமானிய மக்களின் கிளர்ச்சிகள் மற்றும் எழுச்சிகளுக்கு எதிராகவும் பயன்படுத்துவது மக்களை ஆட்சியாளர்களிடமிருந்து அந்நியப்படுத்தியுள்ளது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவுள்ள அந்த மாநிலத்தில் அவர்கள் சுயாட்சி கோருவது என்பதையே மதச்சார்பற்ற குடியரசு என்று சொல்லப்படுகின்ற ஆட்சியாளர்களால் ஏற்க முடியவில்லை. முஸ்லீம்களில் உயர்ந்தோர் குழாமைத் தவிர மற்ற சாமானிய முஸ்லீம்கள் அனைவரும் ஆட்சியாளர்களைத் தங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காது ஒதுக்கி வைத்திருப்பதாகவும், ஆடுமாடுகளைப் போலவே  சமூக ரீதியாக, கலாச்சார ரீதியாக, குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்படுவதாகவும் கருதுகிறார்கள்.
இத்தகைய நிலைமைகள் அவர்களை பிற்போக்கான முஸ்லீம் மதத் தலைவர்களிடமும், படுபிற்போக்கு முஸ்லீம் சிந்தனையாளர்களிடமும் மிக எளிதாகத் தள்ளிவிட்டுள்ளது. இவற்றின் விளைவுகளில் ஒன்று, இவர்களை மிகவும் பயபக்தி உடைய கடவுள் நம்பிக்கையாளர்களாக மாற்றி இருப்பதாகும். சாதி இந்துக்களில் உள்ள வளர்ச்சியைவிட இது அதிகம் என்றே கூறலாம். வகுப்புவாத சக்திகள் இவர்களை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. பயபக்தியுடன் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் படிப்படியாக அரசியலின் வகுப்புவாத வடிவங்களைப் போதிப்பதுடன் வன்முறையை ஏவிடும் வகுப்புவாதக் கட்டமைப்புகளுக்குள்ளும் அவர்களைத் தள்ளிவிடுகின்றன. 
பாபர் மசூதி இடிப்பு, அதனைத் தொடர்ந்து குறிப்பாக குஜராத்தில் முஸ்லீம் மக்கள் மீது நடந்த இனப்படுகொலைகள், நகர்ப்புற முஸ்லீம்களில் ஒரு சிலர் மத்தியில் இந்து வகுப்புவாத பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லீம் ஜிகாதி பயங்கரவாத அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கனவு காணத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு கனவு காண்பவர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு‍களில் உருவாகியுள்ள பற்பல ஜிகாதி குழுக்கள் உத்வேகம் அளிக்கின்றன.
இந்திய முஸ்லீம் சமூகத்தில் மதச்சார்பற்ற நீரோட்டத்துடன் எண்ணற்ற முஸ்லீம்கள் இருந்தபோதிலும், அவர்களது சுதந்திரமான எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஓர் அரசியல் ஸ்தாபனம் இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். இந்தியாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் இடையே முற்போக்கான முஸ்லீம் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் ஓர் அமைப்பு இல்லாததன் காரணமாக, இவர்களை இங்கே இருக்கின்ற பல்வேறான பிற்போக்கு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன.
விளைவு, முஸ்லீம்கள், முற்போக்கு மேடைகளில் அணிதிரட்டப்படுவதென்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றன. இவர்களில் பெரும்பாலோருக்கு, பாலஸ்தீனப் பிரச்சனை என்பது யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான மோதலாகத்தான் தெரிகிறதேயொழிய, அது காலனியாதிக்கத்தின் மிகக் கொடூரமான காட்டு மிராண்டித்தனமாகப்படவில்லை. ஆப்கானிஸ்தானத்திற்குள்ளோ அல்லது ஈராக்கிற்குள்ளோ ஊடுருவுதல் நடைபெறுவதை அவர்களால் மேற்கத்திய கிறித்தவர்கள் கிழக்கத்திய முஸ்லீம்கள் மீது தொடுத்திடும் இனப்படுகொலைகளாகத்தான் பார்க்கப்படுகிறதேயொழிய, நவீன ஏகாதிபத்தியத்தின் வரலாற்றின் அத்தியாயங்களாக அவர்களுக்குத் தெரியவில்லை.
சமீபத்தில் கூட, இந்திய முஸ்லீம்களில் பலதரப்பினர் வங்கதேச முஸ்லீம் லீகிற்கு ஆதரவாக சக்திமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதைப் பார்த்தோம். ஆனால் அவர்கள் ஷா பாக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் இப்போது கடவுள் பற்றுள்ளவர்களால் கடவுள் பற்றற்றவர்கள் கொல்லப்படுவது என்பதும் சன்னி குழுவினரால் ஷியா குழுவினரும், முற்போக்கான பெண்கள் பிற்போக்கான ஜிஹாதிகளால் கொல்லப்படுவது என்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பிற்போக்காளர்களால் கொல்லப்படுபவர்களுக்கு ஆதரவாக இந்திய முஸ்லீம்கள் மத்தியில் அர்த்தமுள்ள ஆதரவு இயக்கம் எதுவும் நடைபெறவில்லை.
நாட்டில் உள்ள முஸ்லீம்களில் உயர் அடுக்கில் உள்ளவர்கள் ஆட்சியாளர்களின் கொள்கைகள் சிலவற்றைக் குறித்து அவ்வப்போது எதிர்ப்பினையோ அல்லது விமர்சனங்களையோ காட்டுவார்கள். இது எதற்கு என்றால் அவர்கள் தங்களின் பேரம்பேசும் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காகத்தானேயொழியவேறெதற்காகவும் அல்ல. ஆனால், முஸ்லீம்களில் கீழடுக்கில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உதிரிப் பாட்டாளிகளாகவே (Lumpen-Proletariat), சிவசேனை மற்றும் சங்பரிவாரக் கூட்டத்தில் உள்ளவர்களைப் போலவே இருக்கிறார்கள். ஆனால் நாட்டில் எங்கு வன்முறை வெடித்தாலும், அந்த சமயங்களில் காவல்துறையினராலும் இதர பாதுகாப்புப் படையினராலும் கைது செய்யப்படும்போது, இந்துக்களுக்கு உள்ளதுபோன்ற அமைப்புகள் எதுவும்  இவர்களைக் காப்பாற்றுவதற்கு முன்வருவதில்லை.
பம்பாயில் சிவசேனை அமைப்பு இவ்வாறு உதிரிப் பாட்டாளிகளைக் கொண்டுதான் உருவானது. இவர்கள் உத்திகளை, தங்கள் எதிரிகளை மற்றும் வன்முறைகளை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள்? தங்களின் கீழ் திரண்ட உதிரிப் பாட்டாளிகளை வைத்து ஒரு பக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளையும், தொழிற்சங்கவாதிகளையும் வேட்டையாடினார்கள், மறுபக்கத்தில் தமிழர்களுக்கு எதிராகவும் வன்முறையை ஏவினார்கள். இவற்றிற்கு இந்துத்துவா வெறியர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.
பின்னர் பீகாரிகளுக்கு எதிரான இயக்கத்தை நடத்தியபோது இவர்கள் இந்து பீகாரி மற்றும் முஸ்லீம் பீகாரிகளுக்கு இடையே வித்தியாசம் எதையும் பார்க்கவில்லை. இங்கே நான் சிவசேனையைப் பற்றி ஆய்வு செய்திடவில்லை. எனினும் ஒருசில விஷயங்களைக் குறிப்பிட வேண்டியிருந்தது.
தாக்கரேயின் சித்தாந்தத்தின் முக்கிய கூறு என்னவெனில் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வது என்பதுதான். 
1966 இல் உருவான சிவசேனை 1980களில்தான் இந்துத்துவாவின் சித்தாந்தத்தை முழுமையாகத் தழுவிக் கொண்டது. ஒரு சமயத்தில், தாக்கரே அவசரநிலைப் பிரகடனத்தைக் கூட ஆதரித்தார், வடஇந்தியர்களுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற பிரச்சாரங்களின் போது அது இந்துக்களுக்கும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. அனைவருமே வெளியாட்கள் போன்று தான் சித்தரிக்கப்பட்டார்கள். இவர்கள் பம்பாயில் இருப்பதால்தான் மராத்தியர்களின் துன்பதுயரங்களுக்குக் காரணமாம். நாட்டின் நிதி மையமாக விளங்கும் பம்பாயில் சூறையாடும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட துன்ப துயரங்களுக்கெல்லாம் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்த, மிக அற்பக் கூலி பெற்ற வட இந்தியர்கள்தான் காரணமாம்.
சிவசேனை தன் கீழ்  இருந்த உதிரிப் பாட்டாளிகளைக் கொண்டு, வன்முறை வெறியாட்டங்களை  தமிழர்கள், முஸ்லீம்கள், பீகாரிகள்  என்று நடத்தியது. பின்னர் வங்காளிகள் மீது இவர்கள் எல்லாம் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. அவர்களின் சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்தார்கள், அவர்களின் சிறிய வியாபார நிறுவனங்களை எல்லாம் அபகரித்துக் கொண்டார்கள்.
தாக்கரே ஆரம்பத்தில் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாகத்தான் தன் வேலையைத் தொடங்கினார். பின்னர் சிவசேனையின் தலைவராக உயர்ந்தபின் அவர் இறக்கும் தருவாயில் அவரது சொத்தின் மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.
இவ்வாறு வகுப்புவாத வன்முறை என்பது ஸ்தாபன ரீதியாகக் குற்றங்கள் புரிவதற்கான வடிவங்களை எடுத்துக் கொள்கின்றன. இவ்வாறு கிரிமினலாகக் குற்றம் புரியும் அமைப்புகளோடு இவை சிண்டிகேட்டுகள் அமைத்துக் கொள்கின்றன. வகுப்புவாதத்தில் சரியான அம்சம் என்பது பொதுவாக இதுதான். சிவசேனையின் ஆட்கள் உதிரிப் பாட்டாளி வர்க்கத்திலிருந்தே பொறுக்கி எடுக்கப்பட்டார்கள்.
மரபு ரீதியான முடிவுரை கூறி இந்த உரையை நான் முடிக்க முயற்சிக்கப் போவதில்லை. ஆயினும், ஒருசில முக்கிய அம்சங்களை மட்டும் கூறி முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.
முதலாவதாக, இந்தியாவில் வகுப்புவாதக் கட்டமைப்பிற்கு உதிரிப்பாட்டாளிகள்தான் (lumpen proletariat and the lumpenised petty bourgeoisie) குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அது சங்பரிவாரக் கூட்டமாக இருந்தாலும் சரி, அல்லது முஸ்லீம்களாக இருந்தாலும் சரி அல்லது சிவசேனை போன்ற அமைப்புகளாக இருந்தாலும் சரி. ஏனெனில், நவீன தாராளமய கட்டத்தில் இந்திய முதலாளித்துவத்தின் கட்டமைப்பு அம்சம் அதுதான். நாட்டில் தொழிலாளர் வர்க்கச் சேனையை விட வேலையில்லாத இளைஞர்களின் சேனை மிகவும் பெரிதாக இருக்கிறது. இத்தகு நிலையில் சமூகத்தில் ஒரு முறையான தொழிலாளர் வர்க்கக் கலாச்சாரத்தை நிறுவுவது என்பது மிகவும் சிரமம். தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயே கூட உதிரிப் பாட்டாளிகளை உருவாக்கும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. முறையான ஊதியம் கிடையாது, எந்த நிமிடமும் வேலையைவிட்டு விரட்டி அடிக்கப்படலாம் என்ற நிலை. எல்லாவற்றையும் விட மோசம், வேலையில்லாதோர் பட்டாளம் மிகவும் பெரிது, நிரந்தரமானது.
ஆக்கபூர்வமான உழைப்பில் ஈடுபட்டிருப்பவரின் நிலையான வாழ்க்கை ஒருவருக்கு மதிப்பையும் மரியாதையையும் அளிக்கிறது அல்லது குறைந்தபட்சம் வாழ்வதற்கான அடிப்படை ஆதாரத்தை அளிக்கிறது. அவ்வாறு ஆக்கபூர்வமான உழைப்பில் ஈடுபடாதவர்களின் நிலை? காலப்போக்கில் மற்றவர்களைத் துன்புறுத்துவதைப் பற்றிக் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாது கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய நபர்களை வகுப்புவாதம் தன்னுடைய வன்முறைச் செயல்களுக்கு நன்கு பயன்படுத்திக் கொள்கிறது.
ஆக்கபூர்வமான உற்பத்தியில் ஈடுபட்டிருப்போர் வாழ்க்கை என்பது அவரைப் போலவே ஆக்கபூர்வமான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மற்றவர்களோடும் இணைந்து ஓர் இனமாக, ஒரு சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உதிரிப்பாட்டாளிகள் என்று சொல்லப்படுகிற ரவுடிகள், கிரிமினல்கள், திருடர்கள், பொறுக்கிகள் மற்றும் இதுபோன்று சமுதாயத்திற்குக் கேடு பயக்கும் தொழில்களில் ஈடுபட்டிருப்போர் வாழ்க்கை என்பது இயற்கையாகவே குறிப்பிட்ட குணாம்சங்களுடன் கூடிய எவ்விதமான  இனத்தையும் (The life of the lumpenproletariat is by its nature one that creates no community out of any shared conditions of labour) உருவாக்குவதில்லை, தற்காலிகமாக சேர்ந்து கொள்வார்கள், வேலை முடிந்தபின் கலைந்து சென்று விடுவார்கள். தொழிலாளர் வர்க்கக் குணம் பறிக்கப்பட்ட இவர்கள், சாதி, மதம் அல்லது வேறு எந்த விதத்திலாவது வெறியூட்டப்பட்டால் அதற்கு மிக எளிதாக மயங்கிவிடுவார்கள். வகுப்புவாத அரசியல் இத்தகைய உதிரிப் பாட்டாளிகளுக்கு வெகுவாகவே தீனி போடுகிறது.
இத்தகைய உதிரிப் பாட்டாளிகளை வகுப்பு வாத/பாசிஸ்ட் வகையிலான வன்முறை இயக்கங்கள் மிகவும் எளிதாக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
மிகவும் பொதுவாகக் கூறுவதென்றால், வகுப்புவாதத்தின் அனைத்து வடிவங்களும் நவீன தாராளமயம் அல்லது அதிதீவிர முதலாளித்துவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாகும். அதாவது, முதலாளித்துவத்தின் பணப் பேராசை பிடித்தலைகிற, கொள்ளையிடும் வடிவமாகும். அனைத்து முதலாளித்துவமும் கொள்ளையடிக்கும் குணம் கொண்டவைதான். ஒவ்வொன்றுக்கும் இடையே கொஞ்சம் கூட குறைச்சல் இருக்கலாம், அவ்வளவுதான்.
இத்தகைய முதலாளித்துவ மனப்பாங்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆயினும் நவீனதாராளமய தீவிரவாதம் தலை தூக்குவதற்கு முன் சில கட்டுப்பாடுகளுடன் இருந்தது. இப்போது அத்தகைய கட்டுப்பாடுகள் அனைத்தும் கைவிடப்பட்டுவிட்டன. அரசின் தலையீடு என்பதும் அநேகமாக இல்லை. எப்போதாவது மதவன்முறை வெறியாட்டங்கள் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையாக மாறும்போதுதான் அரசு தலையிடுகிறது. 
நாடு சுதந்திரம் பெற்ற பின் முதல் கட்டத்தின் போது, அரசு ஒரு முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசாக இருந்த போதிலும், ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தங்களுக்கு எல்லாம் இடம் தராது அதனை எதிர்த்து நின்று இந்தியப் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய முதலாளித்துவம் வலுவானதாகவும், அதிகம் கொள்ளையடிக்கக் கூடியதாகவும் மாறியதால், ஏகாதிபத்தியக் கொள்ளையர்களோடு கூடிக்குலாவுவது என்பதும் அதிகமாகியது. பொதுச் சொத்துக்களை தனியாரிடம் தாரைவார்க்கவும் முன்வந்தது. இந்தியப் பொருளாதாரத்தையும் மேலும்மேலும் அந்நியர்களுக்குத் திறந்துவிட வழிவகுத்தது.  இவற்றின் மூலமாக ஒரு சிலரை மட்டும் நிரந்தர வேலையில் வைத்துக் கொண்டு, மற்றவர்களை வேலையில்லாதோர் பட்டாளத்தில் தள்ளியது.
இவற்றின் மூலமாக அரசின் குணாம்சமும் அரசின் பங்கும் மிகவும் மோசமாக மாறியது. நாட்டிற்குள்ளே, இது ஒட்டுமொத்த இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல், அநேகமாக முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை மட்டுமே, அதிலும் குறிப்பாக கார்ப்பரேட்டுகள் நலன்களை மட்டுமே காக்கும் ஒன்றாக மாறியது. உலகப் பொருளாதாரத்துடனான உறவுகளைப் பொறுத்தவரை, அரசு, உலகத்தின் முன்னே இந்திய மக்கள் மற்றும் அவர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக, நவீன தாராளமயக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் இந்த அரசின் முக்கியமான வேலை என்பது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களையும் கட்டளைகளையும் இந்திய மக்களுக்கு கைமாற்றிக் கொடுப்பதாகும். இத்தகைய சூழ்நிலையில் அரசு மதச்சார்பற்ற தேசியம் (secular nationalism) என்னும் கொள்கையை - நம்முடைய காலனிய எதிர்ப்பு இயக்கங்களின்போது நமக்கு அடிப்படையாக அமைந்திருந்த கொள்கையை - நடைமுறையில் கைவிட்டாக வேண்டும்.  இந்த இடத்தில் வலுவாக உள்ள வலதுசாரிகள் இந்திய தேசியத்தை (Indian nationalism) மதரீதியான, அறிவு பெருகுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிற (obscurantist), உயர் பிராமணத்துவத்திற்கு வக்காலத்து வாங்குகிற மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத விதத்தில் மாற்றியமைக்கும் பணியை வேகம் வேகமாகச் செய்து வருகின்றன. நாட்டு மக்கள் இன ரீதியாக, பிராந்திய ரீதியாக, மத ரீதியாக மோதவிடப்பட்டு இந்திய மக்களின் ஒற்றுமை கூட  கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கின்றன.
நவீனதாராளமயக் கொள்கை கொடூரமான சுரண்டலுக்கு மட்டுமல்ல தொழிலாளர் வர்க்கத்தின் உணர்வுகளை மழுங்கடிக்கக் கூடிய விதத்தில் மிக அற்பக் கூலி தரும் ஒன்றாகவும் அமைந்துள்ளது. மக்களில் பெரும்பான்மையினருக்கு வேலை அளிப்பதற்கோ அல்லது பாதுகாப்பான வேலையை அளிப்பதற்கோ அது மறுக்கிறது.
இவ்வாறு இந்த அமைப்பு முறையானது சுரண்டல் தன்மை கொண்டது மட்டுமல்ல, சமூகத்தையே வேருடன் பிடுங்கி எறியக் கூடியதாகும். மக்களின் சமூக அமைப்பு முறையையும் குழி தோண்டிப் புதைக்கக் கூடியதாகும். இவ்வாறு அதிதீவிர முதலாளித்துவம் சமூகத்தையே அழுகச் செய்துவிட்டது. மக்களில் பெரும்பாலானவர்கள் மத்தியில் நஞ்சை விதைத்திருக்கிறது. ஏன், தொழிலாளர் வர்க்கத்தில் ஒருசில பிரிவினரிடம் கூட இதனை அது செய்திருக்கிறது.
வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அனைத்து வடிவங்களும் மிகவும் அவசியமானவைகளாகும். ஆயினும் அதே சமயத்தில்எவ்வளவு காலத்திற்கு மற்றும் எவ்வளவு கடுமையாக இப்போராட்டத்தை நடத்த வேண்டும் என்பது குறித்து எவ்விதமான மாயையும் நமக்கு இருக்கக் கூடாது.
வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது மதச்சார்பின்மைக்கு ஆதரவான தத்துவார்த்த போராட்டம் மட்டுமல்ல, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியுமாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், வகுப்புவாதத்திற்கு (Communalism) மாற்று, கம்யூனிசம் (Communism) அல்லது சோசலிசம்தான். இன்றைய தினம் நாட்டில் வகுப்புவாத சிந்தனைகள் மிகப்பெரிய அளவில் ஊட்டி வளர்க்கப்படுவதை முறியடிக்கக் கூடிய விதத்தில் மதச்சார்பின்மையையும் கம்யூனிஸ்ட்டுகளின் குணங்களில் ஒன்றாக முன்னெடுத்துச் சென்றிட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)