Friday, December 29, 2017

2018ஆம் ஆண்டிற்கான உறுதிமொழி

நடந்து முடிந்த 2017ஆம் ஆண்டைத் திரும்பிப் பார்க்கும்போது, நாட்டின் நிலைமையில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அம்சத்தை அனைவரும் குறித்துக் கொள்ள வேண்டும். நடந்த முடிந்த ஆண்டில் பிற்போக்கு சக்திகளின் ஆட்டங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன. ஆயினும் ஆண்டின் கடைசிக் காலாண்டில் வலதுசாரித் தாக்குதலுக்கு எதிராகப் போராடி வந்த சக்திகளும் தங்களை ஒருமுகப்படுத்தி, முன்னுக்கு வந்திருக்கின்றன.
மக்கள் 2017ஆம் ஆண்டில் தங்கள் மீது வலதுசாரிகள் ஏவிய தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  மோடியின் ஆட்சியின் கீழ், இந்துத்துவா சக்திகள் மிகவும் தைரியம் பெற்றிருக்கின்றன. பசுப் பாதுகாப்புப் படை என்ற பெயரில் அவர்கள் மேற்கொண்ட வன்முறை வெறியாட்டத்திற்கு ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் என்னும் ஊரில் பெஹ்லுகான் என்பவரைக் கொலை செய்தது ஓர் எடுத்துக் காட்டாகும்.  முஸ்லீம்களுக்கு எதிரான இவர்களுடைய வெறுப்புப் பிரச்சாரம் ஜுனைத், அஃப்ரசல் போன்று எண்ணற்றோர் உயிரைப் பலிகொண்டிருக்கிறது.  இந்துத்துவா சக்திகள், நாட்டில் எவ்வகையான திரைப்படங்கள் வெளியாக வேண்டும், எவ்விதமான புத்தகங்கள் படிக்கப்பட வேண்டும், பல்கலைக் கழகங்களில் என்ன மாதிரியான பாடத்திட்டங்கள் போதிக்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கக்கூடிய அளவிற்குச் சென்றிருக்கின்றன.
அரசியல்ரீதியாக, 2017ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக அபரிமிதமான வெற்றியைப் பெற்றதுடன் துவங்கியது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக ஆதித்யநாத் அமர்த்தப்பட்டதென்பது,  வெறிபிடித்த வலதுசாரி மதவெறி அரசியல் துவக்கப்பட்டுவிட்டது என்பதற்கான சமிக்ஞையாகும். தேர்தலில் பெரும்பான்மை பெறாத கோவா மற்றும் மணிப்பூரிலும்கூட அது எப்படியோ அரசாங்கங்களை அமைத்துவிட்டது. இமாசலப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. குஜராத்தை அது தக்க வைத்துக்கொண்டிருந்தபோதிலும் கூட, அங்கே அது கடும் எதிர்ப்பினைச் சந்தித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சி, அகாலி தளம்-பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க முடிந்திருக்கிறது.
பொருளாதார ரீதியாகப் பார்த்தோமானால், 2016ஆம் ஆண்டின் இறுதியில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஆட்சியாளர்கள் பிறப்பித்த அறிவிப்பின் தாக்கம் 2017ஆம் ஆண்டிலும் தொடர்ந்ததைப் பார்க்க முடிந்தது. சிறு தொழில் பிரிவினரையும், அதிலும் குறிப்பாக முறைசாராத் தொழில் பிரிவினரையும் அது கடுமையாகப் பாதித்து, ஏராளமானவர்களை வேலையிழக்கச் செய்துவிட்டது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்னும் ஜிஎஸ்டி அமலாக்கம் மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றியிருப்பதுடன், சிறிய வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது.
விவசாய நெருக்கடியின் தாக்கமும் நாட்டின் பல பகுதிகளிலும் விவசாயிகளால் மிகவும் கடுமையாக உணரப்பட்டிருக்கிறது. பொருளாதார மந்தம் பொருளாதாரத்தின் பல துறைகளிலும் வேலையிழப்புக்கு இட்டுச் சென்றிருக்கிறது. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், வேலை வாய்ப்பு முன்னணியில் மோடி அரசாங்கத்தின் படுதோல்வியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்துடன் அத்தியாவசியப் பொருள்களின் விலைஉயர்வும் சேர்ந்து கொண்டு மக்களை மிகவும் மோசமான விதத்தில் பாதித்திருக்கிறது.
பாஜக அரசாங்கமானது பொதுத்துறையையும் மற்றும் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளையும் தனியாரிடம் தாரைவார்ப்பதற்கான கொள்கைகளை மிகவும் அரக்கத்தனமான முறையில் உந்தித்தள்ளிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று பொதுக் கல்வியையும், பொது சுகாதாரத் திட்டங்களையும் தனியாரிடம் மிகப்பெரிய அளவில் தாரை வார்த்திடவும் திட்டங்கள் தீட்டி இருக்கிறது.  இப்போது நாடாளுமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள நிதித் தீர்மானம் மற்றும் சேமிப்புக் காப்பீடு சட்டமுன்வடிவு (FRDI- The Financial Resolution & Deposit Insurance Bill),  கார்ப்பரேட்டுகளுக்கும், பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் ஊதாரித்தனமான முறையில் கடன்களை அள்ளிக்கொடுத்துவிட்டுத் திரும்பப் பெற முடியாது, அவற்றை செயல்படா சொத்துக்கள் (NPA-Non-performing assets) என்று மாற்றிவிட்டு, தத்தளித்துக் கொண்டிருக்கும் வங்கிகளைத் தூக்கி நிறுத்துவதற்காக,  வங்கிகளில் சேமிப்பாக வைத்துள்ள மக்களின் சேமிப்புத்தொகைகளைக் கையகப்படுத்திட வகை செய்கிறது.
ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் மாநிலங்கள் மற்றும் அரசமைப்புச்சட்ட அமைப்புகளின் அதிகாரங்களையும் அரித்துவீழ்த்திட நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை எவர் எதிர்த்தாலும் அவரை தேச விரோதி என்று முத்திரை குத்துகிறது. 2017ஆம் ஆண்டு மோடி ஆட்சியின் எதேச்சாதிகார கோர முகத்தைக் கண்கூசச்செய்யும் அளவிற்குப் பார்த்தது.
டொனால்டு டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக மாறியபின்னர், இந்தியாவை அமெரிக்காவின் அடிவருடியாக மாற்றுவதற்கான வேலைகளை மோடி அரசாங்கம் முடுக்கிவிட்டிருக்கிறது. டிரம்ப் ஆட்சியின் கீழ் அமெரிக்காவின் அயல்துறைக் கொள்கையில் எவரும் ஊகிக்கமுடியாத அளவிற்கு மாற்றங்கள் ஏற்படுவதன்காரணமாக, அமெரிக்காவுடன் கூட்டணி வைத்திருப்பது நம் நாட்டின் நலன்களுக்குக் குந்தகம் விளைவித்திடும் விரும்பத்தகாத நிலைமைகளை உருவாக்கிடும். இதற்குச் சமீபத்திய உதாரணம், அமெரிக்கா, இஸ்ரேலின் தலைநகர் ஜெருசேலம் என்று அறிவித்ததில் இந்தியா மேற்கொண்ட நிலைப்பாடாகும். ஆரம்பத்தில் அமெரிக்காவின் அறிவிப்பை விமர்சனம் செய்வதற்கே மறுத்துவிட்டு, பின்னர் ஐ.நா.மன்றத்தில் எப்படி அது தன் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது என்பதைப் பார்த்தோம்.
ஒட்டுமொத்தமாகச் சொல்வதென்றால், ஆண்டின் இறுதியில் நாட்டிற்குள் உள்ள நிலைமை, மக்களின் வாழ்வாதாரங்களின் மீதும் குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் சுற்றி சுற்றித் தாக்குதல் தொடுக்கப்படுவது தொடர்வதைப் பார்க்கிறோம். எனினும், இது சித்திரத்தின் ஒரு பக்கம்தான். 2017ஆம் ஆண்டு சித்திரத்தின் மறு பக்கம் என்பது, மத்திய அரசாங்கம் மற்றும் பாஜகவின் மாநில அரசாங்கங்களின் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்களும் ஒன்றுபட்டு போராட்டங்களை மேற்கொண்டு அவற்றுக்கு எதிராக ஓர் உறுதியான எதிர்ப்பினை அளித்து வருவது அதிகரித்துக் கொண்டிருப்பதாகும்.
இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை மகாராஷ்ட்ரம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களாகும். குறிப்பாக மகாராஷ்ட்ராவிலும் ராஜஸ்தானிலும் அனைத்துத்தரப்பு விவசாயிகளையும் அணிதிரட்டி நடைபெற்ற போராட்டங்களின் காரணமாக அங்கே ஆட்சியில் உள்ளவர்கள், விவசாயிகளின் ஒருசில கோரிக்கைகளை ஏற்கச் செய்வதற்கு இட்டுச்சென்றது. நவம்பர் 20 அன்று தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரே மேடையின் கீழ் விவசாயிகளின் நாடாளுமன்றத்தை (kisan parliament) நடத்தியதைப் பார்த்தோம்.
தொழிலாளி வர்க்கம் 2016 செப்டம்பர் 2 அன்று பொது வேலை நிறுத்தத்தை நடத்தியதும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 9 முதல் 11 வரை தில்லியில் நடத்திய மாபெரும் முற்றுகைப் போராட்டமும், பெரிய அளவிலான ஒன்றுபட்ட தொழிற்சங்க நடவடிக்கையாகும்.  மூன்று நாட்கள் நடைபெற்ற இம்மாபெரும் தர்ணா போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றார்கள்.
மேலும், 2017இல் இந்துத்துவா வெறிக் கொள்கைகளைத் திணித்திட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும், எதேச்சாதிகார தாக்குதல்களுக்கு எதிராகவும், மத்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தியதையும் பார்த்தோம். இந்துத்துவா தீவிரவாதிகள் கௌரி லங்கேஷ் அவர்களை கொன்றதற்கு எதிராக நாடு முழுதும் விரிவான அளவில் எதிர்ப்பியக்கங்கள் நடைபெற்றன.
2017இல் பாஜக அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு மக்கள் பிரிவினர் மத்தியிலும் அதிருப்தி அதிகரித்திருப்பதையும் பார்த்தோம்.  இதன் காரணமாக கடந்த மூன்றாண்டுகளில் பாஜகவின் அரசியல் முன்னேற்றம் என்பது தடுத்து நிறுத்தப்படுவது தொடங்கி இருக்கிறது. குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருப்பினும் 1995க்குப்பின் அது,  குறைந்த அளவிற்கே இடங்கள் பெற்றிருப்பது என்பதானது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் அடையாளமேயாகும்.
இவை அனைத்தும் நமக்கு 2018 குறித்து அறிவித்திடும் எச்சரிக்கைகள் என்ன?  நாட்டிலுள்ள நிலைமைகள் ஆட்சியாளர்கள் சிறுபான்மையினர் மீது ஏவிவரும் தாக்குதல்களுக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் விரிவான அளவில் மக்கள் ஒற்றுமையைக் கட்டி எழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் மேலும் உக்கிரமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.
இத்தகைய ஒன்றுபட்ட போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் மூலமாகத்தான் ஓர் இடதுசாரி மற்றும் ஜனநாயகத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். இத்தகையதொரு திட்டம்தான் பாஜக அரசாங்கத்தின் நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கு நம்பகமான மாற்றாக அமைந்திட முடியும். இந்தப் பின்னணியில், கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி மற்றும் திரிபுராவில் இடது முன்னணி அரசாங்கங்களின் கொள்கைகளும், செயல்பாடுகளும் முக்கியமான பங்களிப்புகளைச் செய்து வருகின்றன.
நாட்டில் இடது மற்றும் ஜனநாயக சக்திகளின் முன்னால் இருக்கின்ற மாபெரும் பணி என்பது மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் மற்றும் இந்துத்துவா மதவெறிக்கு எதிராகவும் போராட்டங்களை முடுக்கிவிடுவதேயாகும். இப்பிரச்சனைகளின் மீது மக்களின் ஒற்றுமையை ஒன்றிணைப்பதன் மூலம் பாஜகவைத் தோற்கடிப்பதற்கான மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் விரிவான ஒற்றுமை வளர்ந்தோங்கும். 2018ஆம் ஆண்டு நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழியாக இது அமைந்திடட்டும்.
(டிசம்பர் 27, 2017)
(தமிழில்: ச. வீரமணி)

Monday, December 25, 2017

மனுஸ்மிருதியை எரித்த மாணவர்கள் மீது பாஜகவினர் தாக்குதல்


கரீம்நகர் (தெலங்கானா), டிச.26-

மனுஸ்மிரிதியின் நகல்களை எரித்த  மாணவர்களை, பாஜகவினர் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தெலங்கானா மாநிலம், கரீம்நகரில் அமைந்துள்ள சதவாகனா பல்கலைக் கழகத்தில் நடந்துள்ளது.

இது தொடர்பாக ஸ்க்ரோல்(scroll) இணைய இதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தெலங்கானா சதவாகனா பல்கலைக் கழகத்தில் திங்கள் அன்று முற்போக்கு ஜனநாயக மாணவர் அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் மனுஸ்மிருதி சாதியப் பாகுபாடுகளை நியாயப்படுத்துகிறது என்று கூறி அதனை எரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யைச் சேர்ந்த எட்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள், தலித் மாணவர்களைக் கற்களை வீசியும் கம்பால் அடித்தும் தாக்கியிருக்கின்றனர். தலித் மாணவர்கள் தாங்கள் இந்தத் தினத்தை “மனுஸ்மிருதி எரிப்பு தினமாக” அனுசரித்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறிய அதே சமயத்தில், பாஜகவினர் இவர்கள் “தேசவிரோத முழக்கமிட்டனர், எனவே தாக்கினோம்” என்ற கூறிக்கொண்டிருக்கின்றனர். பின்னர் காவல்துறையினரும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக என்று கூறி, தலித் மாணவர்கள் மீது குண்டாந்தடிகளால் தாக்குதல் தொடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தலித் மாணவர்கள், தங்களைத் தாக்கியவர்கள் வெளியாட்கள் என்றும், ஆனால் காவல்துறையினர் அவர்களையும் மாணவர்கள்தான் என்று கூறிக்கொண்டிருக்கிறதென்றும் கூறினார்கள். காவல்துறையினர் இது தொடர்பாக இரு தரப்பிலும் சுமார் 22 பேரைக் கைது செய்து காவல்நிலையத்தில் இருத்தி வைத்திருக்கிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஜுபக்கா ஸ்ரீனிவாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒவ்வோராண்டும் செய்வதைப்போலவே இந்த ஆண்டும் வழக்கமாக மனுஸ்மிருதியை எரித்திட திட்டமிட்டோம். சுமார் 10.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்றது. எங்களைத் தாக்கிய இந்த ஆட்கள் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. அவர்கள் பல்கலைக் கழக வளாகத்திற்குள் திடீரென்று நுழைந்து எங்களைத் தாக்கினார்கள்,” என்றார்.

மேலும் அவர், “பல்கலைக் கழக வளாகத்திற்குள் இவ்வாறு தாக்குதல் சம்பவம் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இவ்வாறு மனுஸ்மிருதியை எரிப்பதை இதற்கு முன் ஏபிவிபி ஆட்சேபித்ததே இல்லை. மனு ஸ்மிருதியை எரித்த மாணவர்கள் முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கம், தலித் மாணவர் சங்கம் மற்றும் வித்யார்த்தி தெலங்கானா வித்யார்த்தி வேதிகாமற்றும் பகுஜன் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களாகும்,” என்றும் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் பாஜகவைச் சேர்ந்த பண்டி சஞ்சய் என்கிற பாஜகவின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், சம்பவம் பல்கலைக் கழக வளாகத்திற்கு வெளியே நடந்ததாகவும், அவர்கள் தேசத்திற்கு எதிராகவும், இந்துயிசத்திற்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ்-க்கு எதிராகவும் முழக்கமிட்டதால் தலையிட்டோம் என்றும் கூறியுள்ளார். மேலும் தலித் மாணவர்கள்தான் முதலில் பாஜகவினரைத் தாக்கினர் என்றும் கூறினார். ஆனால் காவல்துறையினர் பதிவு செய்துள்ள காணொளிக் காட்சிகள், வன்முறையில் ஈடுபட்டவர்கள் காவிக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை அப்பட்டமாகக் காண்பிக்கிறது.


(ச.வீ.)

Sunday, December 24, 2017

நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி தலைவர்களுக்கு சீத்தாராம் யெச்சூரி வாழ்த்து





நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் மாகாணங்களுக்கான தேர்தல்களில் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த  மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-உம், நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்)-உம் கூட்டணி அமைத்து, கூட்டாட்சி முறையில் நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான தேர்தல்களில்  மாபெரும் வெற்றி பெற்றிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார்.
நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த  மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தலைவரான கே.பி. ஓலிக்கு அவர் எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:
“நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான தேர்தல்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிருப்பதற்கு என்னுடைய புரட்சி வாழ்த்துக்களையும், நெஞ்சம் நிறைந்த பாராட்டுதல்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு இன்னமும் முறையாக வரவில்லை என்றபோதிலும், நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) மற்றும் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) ஆகிய இரண்டும் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடுத்திட்ட முக்கியமானஅரசியல் நடவடிக்கை என்பது நாடு முழுதும் எதிரொலிக்கக்கூடிய விதத்தில் நேபாள மக்கள் மத்தியில் மகத்தான நம்பிக்கையை வென்றிருக்கிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கியிருக்கிறது.
நேபாள கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் மொத்தம் 275 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் 165 இடங்களுக்குத் தொகுதி வாரியாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். 110 இடங்களுக்கு கட்சிகள் இவ்விடங்களில் பெற்ற மொத்த வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் (இதற்கெனத் தனி வாக்கெடுப்பு நடைபெற்றது) பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில்  நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) 80 இடங்களையும், நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) 36 இடங்களையும் (ஆக மொத்தம் 116 இடங்களை)  வென்றுள்ளன.  கட்சிகள் பிரதிநிதித்துவ அடிப்படையில் பெற்றுள்ள வாக்குகள் சதவீதத்தின் அடிப்படையில், (இதன் முடிவு இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும்) நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி(யுஎம்எல்) 41 இடங்களையும், நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) 17 இடங்களையும் (ஆக மொத்தம் 58 இடங்களைப்) பெற்றிருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில், இடதுசாரிக் கூட்டணி 174 இடங்களைப் பெற்றிருக்கிறது. இது மொத்த இடங்களில் 63.3 சதவீதமாகும். மூன்றில் இரண்டு பங்கிற்குச் சிறிது குறைவு. மாகாணங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில், மொத்தம் உள்ள ஏழு மாகாணங்களில்  இடதுசாரிக் கூட்டணி ஆறு மாகாணங்களில் பெரும்பான்மை பெற்றிருக்கிறது.
இத்தேர்தல் முடிவுகள் நேபாளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கான காலம் தொடங்கிவிட்டது என்று கட்டியங்கூறுகின்றன. கடந்த பத்தாண்டுகளாக நேபாளத்தில் அரசாட்சியிலிருந்து குடியரசாக மாறுவதற்காக நடைபெற்ற இடைமாறுபாட்டுக் காலம் இப்போது முழுமை பெற்றுவிட்டதாகவும் உறுதியானமுறையில் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டதாகவும் நான் உறுதியாக நம்புகிறேன்.  நேபாளக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சம் நேபாளத்தில் மட்டுமல்ல தெற்காசியா முழுவதுமே ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி மீது ஒரு நீண்ட நெடிய செல்வாக்கினைச் செலுத்திடும்.
நேபாள மக்களும் இந்திய மக்களும் பலவகைகளிலும் பிணைக்கப்பட்டவர்கள் என்று நான் எப்போதுமே கூறி வந்திருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கே பெரிய அண்ணனோ அல்லது சின்னத் தம்பியோ கிடையாது. இருவருமே இரட்டைச் சகோதரர்கள்தான். ஒவ்வொருவரும் மற்றவரின் வெற்றிகளைக் கொண்டாடுவோம். அதேபோன்று  ஒருவருக்கு நெருக்கடி வருமானால் மற்றவர் அந்தத் துயரத்தைப் பகிர்ந்து கொள்வோம். நேபாளத்தில் அமையவிருக்கும் புதிய அரசாங்கம் இருநாட்டு மக்களுக்கும் இடையேயான இத்தகைய நட்புறவையும் சகோதரத்துவத்தையும் மேலும்  வலுப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
உங்கள் வெற்றியைக் கொண்டாடுவதிலும், உங்கள் வெற்றிக்காக கழிபேருவகை அடைவதிலும் இந்தியாவில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தன்னை இணைத்துக் கொள்கிறது.  
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்)-இன் அனைத்து உறுப்பினர்களுக்கும் மற்றும் நேபாள மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்திடும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
வரலாறுச்சிறப்புமிக்க இவ்விடைநிலை மாறுபாட்டுக்குப்பிறகு, நேபாளத்தை ஒரு வலுவான மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக உருவாக்கிடவும், நேபாள மக்களின் முன்னேற்றம் மற்றும் வளமான வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு வேண்டிய அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்துவைத்திடவும் வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார்.
நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) தலைவருக்கு வாழ்த்து
இதேபோன்று நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) தலைவர் பிரசந்தா புஷ்பகமால் தாகலுக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நேபாளத்தில் சமீபத்தில் நடைபெற்றுமுடிந்த கூட்டாட்சி அடிப்படையிலான நாடாளுமன்ற மற்றும் மாகாணங்களுக்கான தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் என்னுடைய புரட்சி வாழ்த்துக்களையும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுதல்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்), நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) ஆகிய இரண்டும் கூட்டணி அமைத்ததனால் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்றிருப்பதானது, நேபாளத்தை அரசாட்சியிலிருந்து குடியரசாக மாற்றும் இடைநிலைக் காலத்தை உறுதியாக கம்யூனிஸ்ட் கூட்டணி எடுத்துச் செல்லும் என்கிற நம்பிக்கையை அபரிமிதமான முறையில் வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெள்ளத்தெளிவாக்கி இருக்கிறது.   
இக்கூட்டணி மொத்தம் உள்ள ஏழு மாகாணங்களுக்கான சட்டமன்றங்களில் ஆறில் பெரும்பான்மையை வென்றிருப்பதையும் மேலும் மெய்ப்பித்திருக்கிறது.
புதிய அரசாங்கம் அமைந்தபிறகு, நேபாளத்தை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக மாற்றும் இடைநிலைக் காலம் செய்துமுடித்திடும் என்று நான் உளப்பூர்வமாக நம்புகிறேன். அதேபோன்று நேபாள மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதற்கான முக்கியமான பிரச்சனைகளையும் இந்த அரசாங்கம் தீர்த்து அவர்களுக்கு முன்னேற்றத்தையும் வளமான வாழ்க்கையையும் ஏற்படுத்திடும் என்றும் நம்புகிறேன்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) அனைத்து உறுப்பினர்களுக்கும் மற்றும் நேபாள மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்திடும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார்.

(ச.வீரமணி)







Friday, December 22, 2017

நேபாளம் வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம்


தலையங்கம்
நேபாளத்தில் நேபாளம் கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும், நேபாளம் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சியும் இணைந்த கூட்டணிக்கு நடைபெற்ற கூட்டாட்சி மற்றும் மாகாணங்களுக்கான தேர்தல்களில்  மாபெரும் வெற்றி கிடைத்திருப்பது, நேபாளத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் வளர்ச்சிப் போக்காகும். இவ்வெற்றியானது தெற்காசியா முழுவதுமே அது எதிரொலித்திடும்.
கம்யூனிஸ்ட் கூட்டணி, 2015 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒரு தீர்மானகரமான பெரும்பான்மையை வென்றிருக்கிறது.  2008இல் புதிய அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்ட பின்னர், கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்போடு ஏராளமான அரசாங்கங்கள் ஆட்சியிலிருந்திருக்கின்றன. ஆனால், இப்போதுதான் முதன்முறையாக முழுமையாக ஓர் இடதுசாரி அரசாங்கம் அமைய இருக்கிறது. நேபாளத்தின் இரு பெரிய இடதுசாரிக் கட்சிகளான, நேபாளம் கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும், நேபாளம் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சியும் [CPN (UML) மற்றும் CPN (MC)] கூட்டணி அமைத்ததன் மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.  இவ்விரு கட்சிகளுமே, தேர்தலுக்காக கூட்டணியை அறிவித்த சமயத்திலேயே, தேர்தலுக்குப்பின்னர் இரு கட்சிகளும் இணைந்து ஒரே கட்சியாக சங்கமித்திட  தங்கள் விழைவினை வெளிப்படுத்தி இருந்தன.
நேபாள கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் மொத்தம் 275 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் 165 இடங்களுக்குத் தொகுதி வாரியாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். 110 இடங்களுக்கு கட்சிகள் இவ்விடங்களில் பெற்ற மொத்த வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் (இதற்கெனத் தனி வாக்கெடுப்பு நடைபெற்றது) பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில்  நேபாளம் கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி 80 இடங்களையும், நேபாளம் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சி 36 இடங்களையும் (ஆக மொத்தம் 116 இடங்களை)  வென்றுள்ளன.  கட்சிகள் பிரதிநிதித்துவ அடிப்படையில் பெற்றுள்ள வாக்குகள் சதவீதத்தின் அடிப்படையில், (இதன் முடிவு இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும்) நேபாளம் கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி 41 இடங்களையும், நேபாளம் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சி 17 இடங்களையும் (ஆக மொத்தம் 58 இடங்களை) பெற்றிருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில், இடதுசாரிக் கூட்டணி 175 இடங்களைப் பெற்றிருக்கிறது. இது மொத்த இடங்களில் 63.3 சதவீதமாகும். மூன்றில் இரண்டு பங்கிற்குச் சிறிது குறைவு. மற்றொரு பெரிய கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமானமுறையில் நேரடித் தொகுதிகளுக்கான தேர்தலில் 23 இடங்களையும், பிரதிநிதித்துவ அடிப்படையிலான தேர்தலில் 40 இடங்களையும் பெற்றிருக்கிறது. மாகாணங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில், மொத்தம் உள்ள ஏழு மாகாணங்களில்  இடதுசாரிக் கூட்டணி ஆறு மாகாணங்களில் பெரும்பான்மை பெற்றிருக்கிறது.
இவ்வாறு, மக்கள் கம்யூனிஸ்ட் கூட்டணி மீது முழுமையாக நம்பிக்கைவைத்து அதற்கு எவ்விதப் பிசிறும் இல்லாத வகையில் வெற்றிவாகையைச் சூடியிருக்கின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலின்போது இருந்த நிலைமைக்கு முற்றிலும் மாறுபட்டநிலையில் இப்போது இந்தத் தேர்தல் வெற்றியின்மூலம் ஓர் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இருக்கின்றனர். பொறுப்பேற்கவுள்ள புதிய அரசாங்கமானது, (நேபாளம் கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் தலைவர் கே.பி. ஓலி தலைமையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது) எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறது.   மக்களின் ஆசை அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய விதத்தில் அவர்களுக்குச் சிறந்ததோர் வாழ்க்கையினை அளித்திட வேண்டும். பூகம்பம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் புனர்வாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளை நிறைவு செய்திட வேண்டும். புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள குடியரசு அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளபடி ஜனநாயக அமைப்புகளையும் அவற்றின் மாண்புகளையும் வலுப்படுத்திட வேண்டும். இவற்றை நிறைவேற்றக்கூடிய விதத்தில், இடதுசாரிக் கூட்டணி அரசாங்கத்திற்கு, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான ஓர் இடதுசாரித் திட்டத்தை அமல்படுத்திட ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நேபாளத்தில், இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றிருப்பதானது மோடி அரசாங்கத்திற்கு ஒருவிதமான சங்கடத்தையும், நெருடலையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் ஆட்சி புரிபவர்கள் எப்போதுமே நேபாளத்தைத் தங்கள் செல்வாக்கிற்குள் ஓர் இளைய பங்காளியாகவே வைத்துக்கொள்ள  வேண்டும் என்று விரும்பி வந்திருக்கிறார்கள். 2015 செப்டம்பர் – டிசம்பருக்கிடையே நேபாளத்தில் மாதேசி கிளர்ச்சி நடைபெற்ற சமயத்தில் மோடி அரசாங்கம் அதற்கு உடந்தையாயிருந்து, பொருளாதார முட்டுக்கட்டையை ஏற்படுத்திய மிகவும் மோசமான ‘பெரிய அண்ணன்’ அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. நேபாள மக்கள், பூகம்பம் ஏற்பட்டு அவதிப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், மோடி அரசாங்கம் எரிபொருள் உட்பட  அத்தியாவசியப் பொருள்கள் எதையும் அனுப்பாது, அங்கே தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதன் காரணமாக சொல்லொண்ணா சிரமங்களுக்கும் வறிய நிலைக்கும் தள்ளப்பட்டார்கள்.  அப்போது நேபாளத்தில் பிரதமராக இருந்த கே.பி. ஓலி, மோடி அரசாங்கத்தின் நிலைப்பாட்டால் தாங்கள் அவமதிக்கப்பட்டதாகவும், மிகக் கேவலமான முறையில் புண்படுத்தப்பட்டதாகவும் கருதியது இயற்கையேயாகும்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய அரசியல் வளர்ச்சிப்போக்கை அடுத்து, இந்தியா, நேபாளம் குறித்த தன்னுடைய அணுகுமுறையை மறுஆய்வுக்கு உட்படுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும். நேபாளத்தின் உள்விவகாரங்களில் தலையிடாது சமத்துவ அடிப்படையில் மிகவும் நெருக்கமான முறையில் உளவுகளை ஏற்படுத்திக்கொள்ள மோடி அரசாங்கம முன்வர வேண்டும்.
நேபாளத்திற்கு இந்தியாவும் சீனாவும் இரு பெரிய அண்டை நாடுகளாகும். நேபாளம், இந்தியா – சீனா ஆகிய இரு நாடுகளுடனும் மிகவும் நேசபூர்வமான முறையில் உறவுகளை வளப்படுத்திக்கொள்ள விரும்பும் எதார்த்த நிலையை  மோடி அரசாங்கம் அங்கீகரித்திட வேண்டும். தெற்காசியாவில் உள்ள இதர நாடுகளைப் போலவே நேபாளமும் சீனா கொண்டுவந்துள்ள ஒரு மண்டலம் மற்றும் ஒருபாதையின் (Belt and Road Initiative)  நெடுகிலுள்ள நாடுகளுடன் ஒத்துழைப்பு நல்கிட விரும்புகிறது. நேபாளம், சுயேச்சையான அயல்துறைக் கொள்கையை மேற்கொள்ள உறுதிபூண்டிருப்பதை  இந்தியா சந்தேகக் கண்கொண்டு பார்க்கக்கூடாது. மாறாக, நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே வரலாற்றுரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஆண்டாண்டு காலமாக இயற்கையாகவே இருந்துவரும் ஒற்றுமையுணர்வை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் செயல்பட வேண்டும். இந்தியா, நேபாளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிடவும், நம் பொதுவான கலாச்சாரப் பாரம்பர்யத்தை மேலும் கட்டி எழுப்பிடவும் ஆக்கபூர்வமான முறையில் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
இந்தியாவில் செயல்படும் இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு, நேபாளத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் வெற்றி என்பது பெரிய அளவில் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. நேபாள கம்யூனிஸ்ட்டுகளுக்கு அவர்கள் மேற்கொள்ளவுள்ள புதிய முயற்சிகளுக்கு நாம் நம் ஒருமைப்பாட்டையும் முழு ஆதரவையும் விரிவுபடுத்திக்கொள்கிறோம்.
(டிசம்பர் 20, 2017)
தமிழில்: ச. வீரமணி
   


Monday, December 11, 2017

பெண் விடுதலைக்கான பாதையை அமைத்துத்தந்தது ரஷ்யப்புரட்சி -ஜெயதி கோஷ்


(ரஷ்யப் புரட்சிக்கு முன்பாக நடைபெற்ற மக்கள் எழுச்சியின்போது, பெண்களின் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்க அளவில் இருந்ததோடு, புரட்சிக்குப் பின்னர் உருவான சோவியத் அரசில் பெண்களின் மனோபாவம் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதிலும் மிக முக்கிய பாத்திரம் வகித்தது.)
ரஷ்யப் பெண்களின் பங்களிப்புகள் மற்றும் தியாகங்கள் இல்லாமல் ரஷ்யப் புரட்சி கிடையாது என்று சொன்னால் அது மிகையல்ல, உண்மை. பிப்ரவரி புரட்சி (உண்மையில் அது சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் வெகுஎழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான பெண்கள் “ரொட்டி வேண்டும், அமைதி வேண்டும்” என்ற முழக்கத்துடன் மேற்கொண்ட பிரம்மாண்டமான பேரணியுடன்தான் துவங்கியது. இயக்கத்திற்குள் பல்வேறு சமூகத்திலிருந்தும் பெண்களை அணிதிரட்டிக் கொண்டுவருவதற்கு இப்பேரணி ஓர் உந்துசக்தியாகத் திகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக 1917இன் முந்தைய மாதங்களில் ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சி வீழ்வதற்கும், பின்னர் அமைந்த ஒழுங்கற்ற மற்றும் தாறுமாறான கெரன்சி அரசாங்கமும் அதற்குப் பின்னர் போல்ஷ்விக் புரட்சி நவம்பரிலும்  ஏற்படுவதற்கும் இட்டுச் சென்றது.
பெண்கள் அரசியலில் தலையிடுவது என்பது புதிது. எனவே எதிர்பாராததும் கூட. புரட்சிக்கு முந்தைய ரஷ்யா என்பது ஓர் ஆணாதிக்க, ஒரு வகையான நிலப்பிரபுத்துவ சமுதாயமேயாகும். புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் பெண்களின் நிலைமை என்பது இதர ஐரோப்பிய நாடுகளிலிருந்ததைவிட மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. உரிமைகள் ஏதுமற்று, சமூகக் கட்டுப்பாடுகள் மிகுந்தவர்களாகவே அவர்கள் இருந்துவந்தார்கள். பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகம் எதிலும்  அவர்கள் இருக்க முடியாது. உண்மையில் சமூகத்தின் முன் எந்தக் கருத்தையும் கூறுவதற்கு அவர்களுக்கு உரிமையும் கிடையாது. பொதுவாக வீட்டு வேலைகளைச் செய்வதற்கு மட்டுமே அவர்கள் இருத்தி வைக்கப்பட்டார்கள். மிகவும் கீழான நிலையிலும் இழிந்த நிலையிலும் அவர்கள் வாழ்க்கை இருந்து வந்தது. அவர்களுக்கு  சொத்துரிமை கிடையாது. பொதுவாக அவர்களால் சுயமாகச் சம்பாதித்திட முடியாது. 19வது நூற்றாண்டின் முடிவில் ரஷ்யப் பெண்களில் 13 சதவீதத்தினர் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
எனினும், 19ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில், நகரப் பகுதிகளில் தொழிற்சாலைகள் விரிவுபடுத்தப்பட்ட சமயத்தில், ஏழைப் பெண்களுக்கு வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அவர்கள் கிராமப்புறங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து இப்பணிகளை மேற்கொண்ட இளம்பெண்களாக இருந்தார்கள். அவர்களின் வேலை தன்மை என்பது மிகவும் கடினமானதாகும். அவர்களுக்கு அளித்த ஊதியம் என்பதும் மிகவும் சொற்பம். ஆயினும், தங்களாலும் வீட்டிற்கு வெளியே வந்து, வேலைகளைச் செய்ய முடியும் என்பதையும், வீடுகளில் எவ்வித வருமானமும் இல்லாது எவரையாவது “சார்ந்திருப்பவர்களாக” இருந்ததைவிட, ஓரளவுக்கு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்பதையும் அவர்களுக்கு அது அளித்தது.
வெரா ஜாசுலிச் (Vera Zasulich), மரியா ஸ்பிரிடோனோவா (Maria Spiridonova)
முதல் பெண் புரட்சியாளர்கள்
அதே சமயத்தில், 1860இன் பிந்தைய ஆண்டுகளிலிருந்து, 1870 வரை, உயர் மற்றும் நடுத்தர வர்க்கப்பெண்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அன்றைக்கிருந்த சமூக அரசியல் ஆண்களுக்கு மட்டுமே இருந்த நிலைமைகளிலிருந்து தங்களுக்கும் நிவாரணம் கோரி  உயர்குடி குடும்பங்களிலிருந்த படித்த பெண்கள் அப்போது துளிர்விட்ட சமூக ஜனநாயக இயக்கங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். பெண்களின் கல்வி மற்றும் பெண்களுக்கான வாக்குரிமைக்கான பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டதுடன் சமூக மாற்றத்திற்கான கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன. இவை, “பெண்களின் பிரச்சனைகள்” குறித்து அதிகக் கவனம் செலுத்தவும் இட்டுச் சென்றது. 
வெரா ஜாசுலிச் (Vera Zasulich), மரியா ஸ்பிரிடோனோவா (Maria Spiridonova) மற்றும் வெரா ஃபிக்னர் (Vera Figner) ஆகியோர் ரஷ்யாவில் உயர்கல்வியைத் தொடர அனுமதிக்காததால், வெளிநாடுகளில் உயர்கல்வியைக் கற்றவர்கள். இவர்கள் பின்னர் புரட்சியாளர்களாக மாறினார்கள். வெரா பிக்னர், ஒரு புரட்சியாளரின் நினைவுக்குறிப்புகள் (Memoirs of a Revolutionist) என்ற பெயரில் ஒரு சுயசரிதையை எழுதியிருக்கிறார். நரோட்னயா வோல்யா (Narodnaya Volya) என்னும் பயங்கரவாதக் குழுவில் உறுப்பினராக இருந்த இவர், 1881இல் ஜார் மன்னனான அலெக்சாண்டர் 2 கொல்லப்பட்டதை ஆரவாரத்துடன் வரவேற்றிருக்கிறார்.
காதரின் பிரவ்ஸ்கோவ்ஸ்கயா போன்ற இதரர்களும் அராஜகவாதி (anarchist) பீட்டர் குரோபோட்கின் என்பவரின் செல்வாக்கினால் நரோத்னிக்குகளாக மாறினார்கள்.  காதரின் பிரவ்ஸ்கோவ்ஸ்கயா அரசியல் மாற்றம் அமைதி வழியிலேயே வர வேண்டும் என்று கூறிவந்தபோதிலும், ஜாரிஸ்ட் ரஷ்யாவில் சைபீரியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார். இவர் பின்னர் போல்ஷ்விக் ஆட்சிக்காலத்தின்போது போல்ஷ்விக் ஆட்சியைக் கடுமையாக எதிர்த்ததால், பிரேக் நகருக்கு நாடு கடத்தப்பட்டார். எனினும் மிகவும் கொந்தளிப்பாக இருந்த அன்றைய ரஷ்யாவில் காதரின் பிரவ்ஸ்கோவ்ஸ்கயா மற்றும் இதர நரோத்னிக் பெண்கள், பெண்களின் மனோபாவம் மற்றும் அபிலாசைகளை மாற்றியமைத்ததில் முக்கிய பங்களித்தவர்கள் ஆவார்கள்.
நடேஷ்தா குரூப்ஸ்காயா (Nadezhda Krupskaya) (லெனின் மனைவி), அலெக்சாண்ட்ரா கொலண்டாய் (Alexandra Kollontai), யெலினா ஸ்டாசோவா(Yelena Stassova), இனெஸ்ஸா ஆர்மந்த்(Inessa Armand) மற்றும் கொங்கோரிடியா சமியோலோவா (Konkordia Samiolova) போன்ற பலர் பெண் சமத்துவத்திற்கான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு, போல்ஷ்விக் தலைமையின் மிக முக்கியமான தலைவர்களாக உருவானார்கள். 1917 புரட்சிக்கு முந்தைய பத்தாண்டுகள் என்பது இத்தகைய போர்க்குணம் மிக்க பெண்களுக்கும் பெண்ணியவாதிகளான “பூர்ஷ்வா பெண்களுக்கும்” இடையேயான பதட்டத்துடனே காணப்பட்டது. ஏனெனில் “பூர்ஷ்வா பெண்கள்”, போல்ஷ்விக்குகளைக் கண்டு அஞ்சினார்கள். போல்ஷ்விக் பெண்களோ, பெண் விடுதலைக்கான போராட்டம் என்பது வர்க்கப் போராட்டத்தைவிட தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்திடுமோ என்று அஞ்சினார்கள். போல்ஷ்விக் பெண்கள் மத்தியில், “பெண்கள் பிரச்சனை” என்பது, ஜாரிஸ்ட் ரஷ்யாவைத் தூக்கி எறிவது என்கிற தொழிலாளர் வர்க்கத்திற்கான லட்சியங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதிலும், சோசலிசத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய விதத்திலும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். இதன்மூலம் மட்டுமே பாலின சமத்துவத்தைக் கொண்டுவர முடியும் என அவர்கள் நம்பினார்கள்.  உண்மையில், 1914இல் போல்ஷ்விக் பெண்கள் உழைக்கும் பெண்கள் என்று பொருள்படும் ரபோட்னிட்சா (Rabotnitsa) என்னும் ஏட்டைக் கொண்டு வந்தார்கள். இதில் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக “பெண்ணியப் பிரச்சனைகளைத்“ தவிர்த்தார்கள். ஆயினும் இந்த ஏடு ஏழு இதழ்கள்தான் வெளிவந்தது. பின்னர் புரட்சிக்குப்பின்னர்தான் இது மீண்டும் வெளிவந்தது.   
ஆயினும் இந்தத் தலைவர்கள் எல்லாரும் புரட்சிக்கு இட்டுச்சென்ற மாபெரும் மக்கள் எழுச்சியில் பங்கேற்ற வீரப்பெண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவேயாகும்.  அலெக்சாண்ட்ரா கொலண்டாய்   இவ்வீராங்கனைகளைப் பற்றி தன் நினைவுக்குறிப்பில் பின்வருமாறு கூறுகிறார்:
“ஒருவர் கடந்த  காலத்தைத் திரும்பிப் பார்த்தோமானால், அக்டோபர் புரட்சியில் பங்கேற்ற பெண்களை உன்னிப்பாகப்பார்த்தார்களென்றால், அவர்களில் பெரும்பான்மையினர் மிகவும் வறிய நிலையில் வாழ்பவர்களாக, பட்டினி கிடந்து வருபவர்களாக இருப்பதைப் பார்க்க முடியும். …அவர்கள் தலையில் குளிருக்காக அணிந்திருக்கும் குல்லாய்கள் கிழிந்து காணப்படுவதைக் காண முடியும். (பலருக்கு அதற்குக்கூட வழியில்லாமல் சிவப்புக் கைக்குட்டையை அணிந்திருப்பார்கள்.) கிழிந்த ஆடைகள், ஒட்டுப்போட்ட குளிர்கால ஜாக்கெட், …இளம் பெண்கள் மற்றும் வயதான பெண்கள், பெண் தொழிலாளர்கள் மற்றும் வீரர்களின் மனைவிமார்கள், விவசாயப் பெண்கள், நகர்ப்புறங்களிலிருந்து வந்துள்ள குடும்பத் தலைவிகள் எனப் பார்க்க முடியும். அந்தக் காலத்தில், மிகவும் அபூர்வமாகத்தான், அலுவலக ஊழியர்களும், வேலை பார்க்கும் பெண்களும், படித்த பெண்களும், நாரீமணிகளும் பங்கேற்றார்கள். ஆனால் பின்னர், அக்டோபர் புரட்சியின்போது செங்கொடியை ஏந்தி வந்த அறிவுஜீவிகளில் – ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் பல்கலைக் கழக இளம் மாணவிகள், பெண் மருத்துவர்கள் -- மிகவும் உற்சாகத்துடன், சுயநலமின்றி, அதே சமயத்தில் லட்சிய வேட்கையோடு கலந்துகொண்டார்கள். அவர்கள் எங்கே அனுப்பப்பட்டார்களோ, அங்கே சென்றார்கள். போர்முனைக்குச் செல்ல வேண்டும் என்கிறீர்களா? வீரர்களின் தொப்பியை அணிந்துகொண்டு, செஞ்சேனை வீரர்களாக மாறினார்கள். அவர்கள் கைகளில் சிவப்புப் பட்டையை அணிவிப்பீர்களேயானால், பின்னர் அவர்கள் போர்முனையில் காயம்பட்டுக் கிடக்கும் செஞ்சேனை வீரர்களுக்கு முதலதவி செய்திட விரைந்து சென்றார்கள். படைகளின் தகவல் தொடர்பு மையங்களில் பணியாற்றினார்கள். இவ்வளவையும் மிகவும் உற்சாகத்துடனும், விரைவில் பெருஞ்சிறப்புவாய்ந்தவை நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் செய்தார்கள். நாங்கள் அனைவருமே புரட்சியை மேற்கொண்டுள்ள வர்க்க சக்கரத்தின் ஒரு சிறிய பல் என்ற உணர்வுடன் இருந்தோம்.”

இத்தகைய குறிப்பிடத்தக்க பெண்களின் படைதான் 1917இல் நடைபெற்ற மக்கள் எழுச்சியின்போது மாபெரும் தாக்கத்தை அளித்தது.  ஜூலையில் பெண்களுக்கு வாக்குரிமையும், பொது நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் நவம்பரில் அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நடைபெற்றபோது, வாக்களித்தவர்களில் பல பகுதிகளில் ஆண்களை விட பெண்களே அதிகமாகும். போல்ஷ்விக்குகள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், புரட்சியின் சமத்துவ சிந்தனைகள், தவிர்க்கமுடியாத விதத்தில், புதிதாகத் துளிர்விட்ட சோவியத் அரசின் மனோபாவம் மற்றும் கொள்கைகளில் பெண்களுக்கான முக்கியத்துவத்துடன், அவர்களுக்கு சமூகத்தில் இருந்துவந்த ஒடுக்குமுறை மற்றும் சமத்துவமின்மையிலிருந்து விடுதலை அளிக்கக்கூடியதாக  வளர்ந்தது.   
பூர்ஷ்வா தலைமையானது, சோசலிசத்தின் கீழ் பெண்களின் விடுதலைக்கான அவசியத் தேவையை தெள்ளத்தெளிவாக அங்கீகரித்தது. மாமேதை லெனின் இதுகுறித்துக் கூறியதாவது: “மனிதகுலத்தின் சரிபாதியாக இருக்கக்கூடிய பெண்கள், முதலாளித்துவத்தின் கீழ் இரட்டிப்பு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். உழைக்கும் பெண்களும், விவசாயப் பெண்களும் மூலதனத்தால் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஆனால், இதற்கும் மேலாக, பல முன்னேறிய பூர்ஷ்வா குடியரசு நாடுகளில்கூட, பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான உரிமைகள் மறுக்கப்பட்டே இருந்துவருகிறார்கள். அங்கேயுள்ள சட்டங்கள் பெண்களுக்கு ஆண்களுக்கிணையாக உரிமைகளை வழங்கிடவில்லை. இரண்டாவதாக, (இதுதான் மிகவும் முக்கியமானது) அவர்கள் வீட்டுவேலைகளுடன் பிணைக்கப்பட்டு (“household bondage”) இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து வீட்டு அடிமைகளாக (“household slaves”) இருந்து வருகிறார்கள். மிகவும் அழுக்கடைந்த சமையலறைகளில் திரும்பத்திரும்ப அரைத்தமாவையே அரைத்திடும் விதத்தில் உற்சாகமற்ற வேலைகளை, கடினமான வேலைகளை அதீதமாக செய்துகொண்டிருக்கிறார்கள்.”
பெண்களின் உரிமைகளை அரசு அங்கீகரித்தது
பெண்கள் பெரும் எண்ணிக்கையில் ஊதியத்துடன் வேலை பார்க்க வந்ததானது இத்தகைய அடிமைத்தளையிலிருந்து பெண்களை விடுவித்திட உதவியதைப் பார்க்க முடிந்தது. பெண்களின் பொருளாதார சுயாட்சியை வலுப்படுத்தும் விதத்தில் எண்ணற்ற சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. சொத்து உறவுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. திருமணத்திற்குப்பின்னர் பெண்கள் இயங்குவதிலிருந்த தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன. நிலம் வைத்துக் கொள்வதற்கும், ஆண் – பெண் இருவருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டன. குடும்பப் பொறுப்புகளிலும் பாலின சமத்துவத்துடன் செயல்பட்டனர். புதிய சட்டங்களின் மூலமாக சமூக மாற்றங்களும் கட்டாயப்படுத்தப்பட்டன. மதச்சார்பற்ற முறையிலேயே திருமணங்கள் நடைபெற்றன. திருமணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. விவாகரத்து எளிதாக்கப்பட்டது. பெண்கள் கருத்தடை செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். மணமான பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும், மணமாகாத பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் இடையே சட்டபூர்வமாக எந்தப் பாகுபாடும் கிடையாது. ஊதியத்துடன் கூடிய மகப்பேறு மருத்துவ விடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மருத்துவமனைகளில் அதிக அளவில் மகப்பேறு வார்டுகள் அமைக்கப்பட்டன. இவை அனைத்தும் பெண்களின் வாழ்க்கையில் மாபெரும் முன்னேற்றங்களைக் கொண்டு வந்தன. அந்தக் காலத்தில்  ஐரோப்பாவில் வேறெந்த நாட்டிலும் இந்த அளவிற்குப் பெண்களுக்கு உரிமைகளோ அங்கீகாரமோ அளிக்கப்பட்டதாகச் சொல்ல முடியாது.
புரட்சிக்குப் பிந்தைய பத்தாண்டுகளில் பெண்கள் பலமுனைகளிலும் முன்னேறினார்கள். புதிதாக விடுதலை பெற்ற பெண்கள் மத்தியிலிருந்து படைப்பிலக்கியவாதிகள் உருவானார்கள். தங்களுக்குக் கிடைத்த புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் பல துறைகளிலும் தங்கள் சொந்த முயற்சிகள் மற்றும் அரசியல் ஈடுபாட்டுடன் முன்னேறினார்கள்.
சோவியத் யூனியன் சிதைந்தபிறது, சோசலிச அமைப்பில் கிடைத்த பயன்கள் பல பெண்களிடமிருந்து பறிபோயின. அவர்கள் பெற்று வந்த ஊதியமும் சந்தைப் பொருளாதார சமூகத்தில் மிகமோசமான அளவிற்குக் குறைந்தது.

கடந்த நூறாண்டு கால அனுபவம் காட்டுவது என்னவெனில், பாலின சமத்துவத்தை நோக்கி முன்னேறுவது என்பது,அதன்மூலம் பெண்கள் விடுதலை பெற்று, அதிகாரம் படைத்தவர்களாக மாறுவது என்பது, ஒரு நீண்ட நெடிய சிக்கலான மற்றும் ஏற்ற இறக்கங்கள் கொண்ட பாதையாகும் என்பதேயாகும். முன்னேறிய சமூகத்திலேயே கூட இத்தகைய ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். ஆனாலும், ரஷ்யப் புரட்சிக்குப்பின்னர் பெண்கள் அடைந்த முன்னேற்றங்கள் என்பதும் அவர்கள் படைத்த சாதனைகள் என்பதும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதுடன் நம் போராட்டப் பாதையில் நமக்கு என்றென்றும் ஒளிவிளக்காக அமைந்திடும் என்பதில் ஐயமில்லை.
(நன்றி: ப்ரண்ட்லைன்)

(தமிழில்: ச. வீரமணி)

Friday, December 1, 2017

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25ஆம் ஆண்டு தினம்

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25ஆம் ஆண்டு தினம்
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
வரும் டிசம்பர் 6, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது. இது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான தினமாகும்.  இடிக்கப்பட்டது ஏதோ 16ஆம் நூற்றாண்டு கட்டப்பட்ட மசூதி மட்டுமல்ல, அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் நம் நாட்டின் மதச்சார்பற்ற குடியரசின் மாண்புகளுக்கும் நேரடியாக விடப்பட்டுள்ள சவாலுமாகும்.
1992  டிசம்பர் 6 ஆம் நாளை இந்துத்துவா சக்திகள் தங்களுடைய அரசியல் அதிகாரத்திற்காக   துவங்கிய நாளாகவும் பார்த்திடலாம். 25 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த சக்திகள் தில்லியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்றன.
அந்த சமயத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையிலான மதவெறியர்கள் மேற்கொண்ட கபடத்தனமான நடவடிக்கைகள் என்ன? தாங்கள் அயோத்தியில் கர சேவகர்கள் மூலமாக மேற்கொள்ளும் எந்தவிதமான நடவடிக்கையும் அங்கேயுள்ள மசூதியின் கட்டமைப்பிற்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று உச்சநீதிமன்றத்திற்கு உறுதிமொழி அளித்திருந்தனர். அந்த உறுதிமொழிக்கு அவர்கள் துரோகம் இழைத்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங், எண்ணற்ற வாக்குறுதிகளை நீதிமன்றத்திற்கு அளித்திருந்தார்.  “இப்போதுள்ள நிலை எந்தவிதத்திலும் மாற்றியமைத்திட எங்கள் அரசாங்கம் அனுமதிக்காது” என்று அவர் கூறினார்.  அந்த சமயத்தில் மதவெறியர்களின் நடவடிக்கைகளை உய்த்துணர்ந்திருந்ததன் காரணமாக, அவசர அவசரமாக தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டவேண்டும் என்று அழைப்பாணை அனுப்பப்பட்டு,   பாஜக தலைவர்களின் பங்கேற்பு இன்றி ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானமானது,   அரசமைப்புச் சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் உயர்த்திப்பிடித்திட, தேவையான நடவடிக்கைகளை அனைத்தையும் எடுத்திட, பிரதமருக்கு அதிகாரம் அளித்தது.
மசூதியைச் சுற்றி தடையாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், அதனைச் சற்றும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான கர சேவகர்கள், சம்பவத்தின் முன்தினம் அங்கே திரண்டனர்.  மசூதிக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக,  அந்தசமயத்தில் 20 ஆயிரம் மத்திய காவல்படையினர் அனுப்பப்பட்டிருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டமான டிசம்பர் 6 அன்று மாநில அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கத் தவறியபோது, தாங்கள் செயல்படுவதற்கு எவ்விதமான  ஆணையையும் மத்திய அரசிடமிருந்து மத்திய காவல்படையினர் பெறவில்லை.
உத்தரப்பிரதேச மாநில அரசின் ஆதரவுடன் ஆர்எஸ்எஸ் தலைமையிலான இந்துத்துவா சக்திகள்.  மத்திய அரசின் உத்தரவுகளை மீறவும், மதச்சார்பற்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் நாணங் கெட்டமுறையில் தூக்கி எறியவும்,  துணிந்தனர்.  இந்தப் பிரச்சனை என்பது, தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது என்பது மட்டுமல்ல, அதன்மூலம் தங்கள் அரசியல் அணிசேர்க்கையைத் தொடங்குவது என்பதுமாகும். 1989இல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் பாலம்பூரில் நடைபெற்றபோது அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து இதனை நன்கு அறிய முடியும். அயோத்தியில் தாவாவுக்கு உட்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்று அத்வானி நடத்திய ரத யாத்திரைதான் நாட்டின் பல பகுதிகளில் ரத்த ஆறு ஓடக் காரணமாக இருந்தது. மசூதியை இடிப்பது என்பது அவர்களின் அடுத்த கட்டமாக இருந்தது. இவற்றின் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் உருவாகியிருந்த ராமர் அலை மற்றும் மக்கள் மத்தியில் உருவாகியிருந்த மதவெறி ஆகியவற்றின் காரணமாக 1991இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வென்றது. இந்தக் காலம் முழுவதுமே ஆர்எஸ்எஸ்-விசுவ இந்து பரிசத் ஆட்கள் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பகிரங்கமாகவே பேசி வந்தனர்.
அயோத்தியில் ஆர்எஸ்எஸ் தலைமையிலான கும்பல்கள் இவ்வாறு பாபர் மசூதியை இடித்ததன் மூலம் இரத்தக்கறை படிந்த செயலை செய்து முடித்ததென்றால், மத்தியில் ஆட்சியிலிருந்த நரசிம்மராவ் அரசாங்கத்தின் பங்களிப்போ மிகவும் வெறுக்கத்தக்கவிதத்தில் இருந்தது. இத்தகைய ஆர்எஸ்எஸ் கூடாரத்தின் அடாத செயலைத் தடுத்துநிறுத்திடக்கூடிய விதத்தில் எதுவும் செய்திடக்கூடாது என்பதில்  பிரதமர் நரசிம்மராவ் உணர்வுபூர்வமாக உறுதியாக இருந்தார். மசூதியின் பிரதான மூன்று மாடங்கள் இடித்துத்தரைமட்டமாக்கப்பட்ட பின்னரும்கூட, மத்திய அரசு இதில் தலையிடவில்லை என்பதோடு, நடவடிக்கை எடுத்திட மத்திய காவல் படையினரைக் கேட்டுக்கொள்ளவும் இல்லை. டிசம்பர் 6க்கு முன்னர், அயோத்தியில்  மசூதியை இடித்துத் தரைமட்டமாக்குவதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு  கொண்டிருக்கின்றனர் என்றும், அதனைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும்  மத்திய உளவு ஸ்தாபனத்திடமிருந்தும், முஸ்லீம் சமூகத்தினரிடமிருந்தும் கோரிக்கைகள் வந்தபோதும்கூட, நரசிம்மராவ் அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, அவர், தன்னிடம் அந்த இடத்தில் வெறும் பூஜை மட்டுமே நடத்தப்படும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் உறுதி  அளித்திருப்பதாக மட்டும் கூறிக்கொண்டிருந்தார்.
இதில் மேலும் மிகவும்  அதிர்ச்சியளிக்கக்கூடிய சங்கதி என்னவெனில், மசூதி இருந்த இடத்தில் அது இடிக்கப்பட்டு ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே தற்காலிகக் கோவில் (makeshift temple) ஒன்று கட்டப்பட்டதாகும். டிசம்பர் 7 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட இருக்கிறது என்று தெரிந்தும்கூட இவ்வாறு தற்காலிகக் கோவில் கட்டுவதற்கு அங்கே அனுமதிக்கப்பட்டது. தற்காலிகக் கோவிலை அப்புறப்படுத்துவதற்கு மத்திய அரசாங்கம் எதுவுமே செய்திடவில்லை.   
அதுமட்டுமல்ல. 1993 ஜனவரியில் மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அயோத்தி சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இச்சட்டமானது, தற்காலிகக் கோவிலை சட்டபூர்வமாக்கியதுடன், இது தொடர்பாக இறுதித் தீர்வு வரும்வரை அது நீடித்திடும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. மசூதி இருந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்டித்தரப்படும் என்கிற முந்தைய உறுதிமொழி கைவிடப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக. இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றமும் 3:2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் ஏற்றுக்கொண்டு ஏற்பளிப்பு அளித்துள்ளது. இவ்வாறு நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் மிகவும் மோசமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ள சமயத்தில், அவற்றைப் பாதுகாக்க வேண்டிய மத்திய அரசும், அதன் நிர்வாக அமைப்புகளும் – அரசாங்கமும், நீதித்துறையும் – அவற்றை முறியடித்திடத் தீர்மானகரமான முறையில் செயல்படத் தவறிவிட்டன.  காங்கிரஸ் அரசாங்கம், தன்னுடைய முகஸ்துதி மற்றும் ஊசலாட்டம் போன்ற கொள்கைகளின் காரணமாக,  இந்துமதவெறியர்களுடன் சமரசம் செய்துகொண்டது.  
அலகாபாத் உயர்நீதிமன்றமானது அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தை மூன்று பகுதிகளாகப்பிரித்தும், அதில் ஒரு பகுதி மட்டுமே முஸ்லீம்கள் பெற முடியும் என்றும்  அளித்திட்ட குறைபாடுகள் கொண்ட தீர்ப்புரைக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்க இருக்கிறது. இதற்கான  விசாரணை உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 5 அன்று தொடங்குகிறது. நீதிமன்றத்தை தங்கள் செல்வாக்கிற்குள் கொண்டுவருவதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. உடுப்பியில், விசுவ இந்து பரிசத் சார்பில் நடைபெற்ற தர்ம சன்சாத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத், மசூதி இருந்த இடத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்படும் என்று மீளவும் வலியுறுத்திப் பேசியிருக்கிறார். ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் என்கிற சாமியார் இந்துத்துவா சாமியார்கள் சொல்வதைப்போல பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பான பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ளலாம் என்று மிகவும் கேலிக்கூத்தான ஆலோசனையை நல்கியிருக்கிறார்.
பாபர் மசூதி – ராம ஜன்ம பூமி தாவா  என்பது இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் இந்தியக் குடியரசுக்கான ஒரு சோதனைக்களமாக தொடர்ந்து நீடிக்கிறது. 1992இல் நடைபெற்றவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசைத் தகர்த்திட்டு, அதற்குப் பதிலாக இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிட விரும்பும் சக்திகளுடன் எவ்விதமான சமரசத்தையும் செய்து கொள்ள முடியாது. மதவெறி சக்திகளை முகஸ்துதி செய்து, சமரசம் செய்து கொள்வதன் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என்று நினைப்பவர்கள், அவர்களுடைய சந்தர்ப்பவாதத்தினால் விளைந்த கசப்பான அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
மதச்சார்பின்மையைப் பாதுகாத்திடவும் நாட்டில் பிற்போக்கான கறுப்பு சக்திகளுக்கு எதிராகப் போராட மக்களை அணிதிரட்டிடவும் உறுதியான நிலையினை எடுப்பதைத்தவிர மாற்று வழி எதுவும் கிடையாது.
(நவம்பர் 29, 2017)
தமிழில்:  ச. வீரமணி

  



Monday, November 13, 2017

Sitaram yechury on demonetisation



In an interview with Karan Thapar for The Wire, Sitaram Yechury, general secretary of the Communist Party of India (Marxist), criticises demonetisation and argues that it failed to achieve all the objectives that were promised by the government.


                              


Sunday, August 27, 2017

அமெரிக்காவுடன் மேலும் நெருங்கிடும் மோடியின் விசுவாசம்


மோடி அரசாங்கம், அமெரிக்காவை ராணுவ ரீதியாக மிகவும் நெருக்கமானமுறையில் கட்டித்தழுவிக்கொண்டிருக்கிறது. டிரம்ப் நிர்வாகத்திற்கு நரேந்திர மோடி தன்னாலான அனைத்து விதங்களிலும் விசுவாசமாக நடந்துகொள்வார் என்றே தோன்றுகிறது.
ஆகஸ்ட் 15 அன்று, டொனால்டு டிரம்பிற்கும் நரேந்திர மோடிக்கும் இடையே தொலைபேசி வாயிலாக ஓர் உரையாடல் நடந்திருக்கிறது. டிரம்ப், மோடிக்கு இந்தியாவின் சுதந்திர தின வாழ்த்துக்களைக் கூறியதுடன், இரு நாடுகளின் உறவுகளுக்கு இடையே புதிய சில நடவடிக்கைகள் குறித்தும் கோடிட்டுக்காட்டியிருக்கிறார்.
வெள்ளை மாளிகை யிலிருந்து வந்துள்ள செய்தி, “இருநாட்டின் தலைவர்களும் இந்தியபசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் வளர்த்துக்கொள்வதற்காக ஒவ்வொரு நாட்டின் சார்பிலேயும் இரு அமைச்சர்களைக் கொண்ட ஓர் அமைப்பு நிறுவப்படும்என்றும்அந்த அமைப்பு ராணுவரீதியான (strategic) கலந்தாலோசனைகளை முன்னெடுத்துச் செல்லும்என்றும் கூறுகிறது.

புதிய இரண்டுக்கு இரண்டு

இரண்டுக்கு இரண்டு அமைச்சர்கள் என்பது, இந்தியாவின் தரப்பில் ராணுவ அமைச்சர் மற்றும் அயல்துறை அமைச்சர்களையும், இதேபோன்று அமெரிக்காவில் இத்துறைகளுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர்களையும் குறிப்பிடுகிறது.

இதுவரை இந்த 2க்கு 2 என்பது, நம் நாட்டின் சார்பில் அயல்துறை அமைச்சரும், வர்த்தகத்துறை அமைச்சருமாக இருந்தார்கள். அதேபோன்று அமெரிக்காவின் சார்பிலும் அயல்துறை அமைச்சரும், வர்த்தகத்துறை அமைச்சருமாகத்தான் இருந்தார்கள். இப்போது வர்த்தகத்துறை அமைச்சர் என்பது ராணுவத்துறை அமைச்சர் என்று மாற்றப்பட்டிருக்கிறது.
இம்மாற்றம், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியான ஒத்துழைப்பு அதிகரித்துக்கொண்டிருப்பதையே காட்டுகிறது. அமெரிக்கா, ஆசியாபசிபிக் பிராந்தியத்தில் இவ்வாறு 2க்கு 2 அமைச்சர்களைக் கொண்ட ராணுவக் கூட்டணிகளை இதுவரையிலும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன்தான் வைத்திருந்தது. இப்போது அதனுடன் இந்தியாவும் சேர்ந்துகொண்டிருக்கிறது.
இந்திய-பசிபிக் பிராந்தியம் என்பதன் பொருள் என்னவென்பதை இந்தப் பின்னணியில் பார்த்திட வேண்டும். 2015 ஜனவரியில் ஒபாமா இந்தியாவிற்கு வந்திருந்த சமயத்தில், ஆசியபசிபிக் மீதான அமெரிக்கஇந்திய கூட்டு தொலைநோக்கு அறிக்கை (US-India Joint Vision Statement on Asia Pacific)  ஒன்று தயாரிக்கப்பட்டதைப் பார்த்திட வேண்டும். இப்போது இவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டணி என்பது, சீனாவே தங்களின் பிரதான கவலை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மோடியின் நன்றி உணர்த்துவது என்ன?

இந்தப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலைமையை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு மோடி சென்றிருப்பதை, மோடி “வட கொரிய அச்சுறுத்தலுக்கு எதிராக உலகத்தை ஒன்றுபடுத்திட ஒரு வலுவான தலைமையைக் கொடுப்பதற்காக ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி தெரிவித்திருப்பதிலிருந்தே நன்கு தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தியா, அமெரிக்காவின் ஒரு நம்பகமான கூட்டாளியாக இருந்திடும் என்பதை மீண்டும் உறுதியளித்திடும் விதத்தில் இந்தக்கூற்று அமைந்திருக்கிறது.

அதன்பிறகு, ஜனாதிபதி டிரம்ப், ஆப்கானிஸ்தானத்துடனும், தெற்கு ஆசிய நாடுகளுடனும் அவருடைய அணுகுமுறை எப்படி இருந்திட வேண்டும் என்று உரையாற்றியிருக்கிறார். பாகிஸ்தானில் அடைக்கலம்புகுந்துள்ள பயங்கரவாதிகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததில் மோடி அரசாங்கம் புளகாங்கிதம் அடைந்திருக்கிறது.

டிரம்ப் மேலும் கூறுகையில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர்கள் கொடுத்திருப்பதாகவும், இந்நிலையில் தாங்கள் யாருக்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோமோ அத்தகைய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதை சகித்துக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இவ்வாறு அறிக்கைகள் விடுவதெல்லாம் அமெரிக்கா கடந்த 15 ஆண்டுகளாக செய்து வந்ததுதான். எதார்த்த நிலை என்னவென்றால், ஆப்கானிஸ்தானத்தில் பாகிஸ்தானின் உதவியில்லாமல் அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாது என்பதுதான்.
டிரம்பின் எதிர்பார்ப்பு

இந்தியா குறித்து, டிரம்ப் கூறுகையில், “இந்தியா, அமெரிக்காவுடன் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானத்தில் எங்களுக்கு அதிக அளவில் இந்தியா உதவிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக, பொருளாதார உதவி மற்றும் வளர்ச்சிப் பகுதிகளில் அதன் உதவி மிகவும் அவசியமாகும்.
டிரம்ப், தன்னுடைய நேட்டோ கூட்டணி நாடுகளுடனும் இதே போன்றே நிலை எடுத்திருக்கிறார். தாங்கள் தங்களுடைய ராணுவத்தினருக்கு அதிக அளவில் பணம் செலவு செய்துகொண்டிருப்பதாகவும், அத்தகைய செலவுகளைத் தங்களுடன் ராணுவக் கூட்டணி வைத்துள்ள நாடுகள் தாங்குவதை அமெரிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் டிரம்ப் கூறியிருக் கிறார். ஆப்கானிஸ்தானத்தைப் பொறுத்தவரை, தன்னுடைய கூட்டணிகளாக இருக்கக்கூடிய பாகிஸ்தானும் இந்தியாவும் பல பில்லியன் டாலர்கள் ஈட்டிக்கொண்டிருப்பதால், அதற்குப்பிரதிபலனாக தங்களுடைய உரிய பங்கினைச் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் எதிர்பார்க்கிறார்.
இந்த ஆண்டின் இறுதிவாக்கில் அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜெனரல் ஜேம்ஸ் மாட்டிஸ் இந்தியா வர இருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது. லீமோ (LEMOA-Logistics Exchange Agreement)  கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்த னை ஒப்பந்தத்தினைத் துவக்கி வைப்பதே அவர் திட்டம். அப்போது அவர் இந்தியாவிற்குக் கொண்டு வரும் விமானப்படை விமானத்திற்கு எரிபொருள் களை நிரப்புதல் மற்றும் பணிபுரிதல் ஆகிய வற்றைத் திறந்துவைத்திடுவார்.
லீமோ என்பது இந்திய தலங்களை (bases)  அமெரிக்கப் போர் விமானங்கள்
மற்றும் போர்க் கப்பல்கள் பயன்படுத்திக்கொள் வதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஒப்பந்தமாகும்.

தங்கள் வளைக்குள் இழுக்க

அமெரிக்காவுடன் ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்துக் கொண்டிருப்பது, டோக்லாம் சமவெளியில் சீனாவுடன் பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டி ருக்கும் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவே இந்தியாவை தங்களின் போர்த்தந்திர வலைக்குள் ஈர்ப்பதற்குச் சரியான தருணம் என்று அமெரிக்கா கருதுகிறது.

ஒவ்வோராண்டும் நடத்தப்படும் மலபார் பயிற்சியில் ஆஸ்திரேலியாவையும் சேர்த்து அதனை விரிவாக்கிடவேண்டும் என்று இந்தியாவை அமெரிக்கா நச்சரித்துக்கொண்டி ருக்கிறது. அவ்வாறு நடைபெற்றால் அது நான்கு நாடுகளின்அதாவது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா என நான்கு நாடுகளின்கூட்டுப் பயிற்சியாக மாறிவிடும்.
மோடி அரசாங்கம், போர் ஆயுதங்கள் செய்திடும் அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில் ராணுவத்தளவாடங்கள் உற்பத்தி செய்வதற்குக் கதவைத் திறந்துவிடும் வேலைகளிலும் இறங்கி இருக்கிறது.இவற்றுடன் இந்தியக் கார்ப்பரேட்டுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கேந்திரமான ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்திடவும் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.
அமெரிக்காவின் ராணுவ மற்றும் போர்த்தந்திர நடவடிக்கைகளுக்கு இந்தியாவை அடிபணிய வைத்திருப்பது, நாட்டின் இறையாண்மைக்கும், சுதந்திரத்திற்கும் மாபெரும் அச்சுறுத்தலாகும். போலி தேசிய இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான போராட்டத்துடன் அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதி அடைந்துகொண்டிருப்பதற்கு எதிராகவும் போராடிட வேண்டும்.
செப்டம்பர் 1 அன்று ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தினமாகவும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான தினமாகவும் அனுசரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு அறைகூவல் விடுத்திருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் மிகவும் விரிவான அளவில் எடுத்துச் சென்றிட வேண்டும்.

===பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்====                                                                                              தமிழில்: .வீரமணி