Tuesday, September 6, 2016

7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் அரசு ஊழியர் சங்க அமைப்புகள் வலியுறுத்தல்

7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்
அரசு ஊழியர் சங்க அமைப்புகள் வலியுறுத்தல்
புதுதில்லி. செப். 6-
மத்திய அரசு 7ஆவது ஊதியக்குழு அளித்திட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் படிகள் (allowances) தொடர்பான பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று அரசு ஊழியர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
மத்திய அரசு 7ஆவது ஊதியக்குழு கூறியிருந்த படிகள் தொடர்பாக ஒரு குழு அமைத்திருந்தது. அது சென்ற வியாழன் அன்று கூடியது. மத்திய அரசு நிதி (செலவினங்கள்) செயலாளர் தலைமை வகித்தார். மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
‘கூட்டம் துவங்கிய உடனேயே சங்கங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசு தான் உறுதி அளித்தபடி உயர்மட்டக்குழு அமைக்காததற்கு தங்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். ஜூலைமாதம் நடைபெற்ற கூட்டத்தின்போது மத்திய அமைச்சர்கள் குழு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பல்வேறு காரணிகள் குறித்து குழு அமைக்கப்படும் என்று அரசுத்தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆயினும் இதுநாள்வரையில் அவ்வாறு ஒரு குழு அமைக்கப்படவே இல்லை. ஊழியர் சங்கங்கள், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். 18 ஆயிரம் ரூபாய் என்று ஊதியக்குழு பரிந்துரைத்திருப்பதை அவர்கள் ஏற்க வில்லை.  
மேலும் ஊதியக்குழு படிகள் (allowances) தொடர்பாக அளித்துள்ள பரிந்துரைகளை 2016 ஜனவரி 1 முதல் அமல்படுத்திட உடனடியாகத் தீர்மானித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
வீட்டு வாடகைப்படி அடிப்படை சம்பளத்தில் 10 முதல் 30 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அவர்கள்  கோரியிருக்கிறார்கள். இது ஊழியர்கள் பணியாற்றும் நகரத்திற்கேற்ப அமைந்திட வேண்டும், மேலும் குழந்தைகளின் கல்விப்படி மூவாயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும், விடுதி மான்யத் தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும், இவ்வாறு வழங்கப்படும் படிகள் அனைத்திற்கும் வரி விலக்கு அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
குழந்தைகளுக்கான கல்விப் படிகளில் முதுகலை மற்றும் தொழிற்கல்விப் படிப்புகளும் சேர்க்கப்பட வேண்டும் என்றும், வடகிழக்குப் பிராந்தியத்தில் சிறப்பு பணிப்படி (special duty allowanhce) உயர்த்தப்பட வேண்டும் என்றும் கோருகின்றனர்.
நிலையான மருத்துவப் படி (fixed medical allowance) 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். கூடுதல்நேர பணிப் படி (overtime allowance) , சிறிய குடும்ப படி (small family allowance) மற்றும் உடைப்படி (dress allowance)  ஆகியவை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
ரத்து செய்யப்பட்டிருக்கிற பல்வேறு துறை படிகளும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
(ந,நி,) 


No comments: