ராணா அய்யூப்
நான் மைக்கை சிங்காலுக்கு
அறிமுகப்படுத்தினேன். அவனை அவர் பிரச்சனையின்றி ஏற்றுக்கொண்டதாகவே தோன்றியது.
வெளிநாட்டவரின் ஆங்கில உச்சரிப்பில் அவரிடம் நாங்கள் வந்ததன் நோக்கத்தை
விளக்கினேன். சிங்கால் அவ்வப்போது தலையை ஆட்டியபடி ஒவ்வொரு சொல்லையும் கவனித்துக்
கேட்டார்.அவர் கவனத்தை மேலும் கவர்கிற எண்ணத்துடன், இருவருக்கும் தெரிந்த
பெயர்களைப் பயன்படுத்த முயன்றேன். ‘உண்மையிலேயே சார், மாயா கோட்னானி மேடத்தை
நாங்கள் சந்தித்தபோது அவர் உங்களைப் பற்றி மிக உயர்வாகச் சொன்னார்.
மாநிலத்தின் பிரகாசமான
அதிகாரிகளில் நீங்களும் ஒருவர் என்றார்,’’ என்றேன். இது தேவையான விளைவைத் தந்தது.
அவரது இறுக்கமானமுகம் தளர்ந்தது. அவருடைய சாதனைகளை நான் பாராட்டியபோது அவர் முகம்
சிவந்தது. தன் பதவியே பறிபோய்விடுமோ என்ற சிக்கலான நிலைமை ஏற்பட்டிருந்த நிலையில்,
வெளிநாட்டிலிருந்து வந்தவர் அவரைப் பாராட்டியது அவர் மனதிற்கு ஆறுதலாக
இருந்திருக்கலாம்.
சாதி பற்றி ஒரு பேச்சு
எங்கள் உரையாடலில் சாதி அமைப்பு
குறித்துப் பேச்சு வந்தது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் பிறந்து,
சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் பற்றிப் பேசியபோது, சிங்கால், தன்னைச்
செதுக்கிய ராஜன் பிரியதர்சி அப்படிப்பட்டவர்தான் என்று மிகுந்த மரியாதையுடன்
குறிப்பிட்டார். ஏடிஎஸ் முன்னாள் தலைவரான ராஜன் பிரியதர்சி எங்கள் ஆவணப்படத்திற்கு
ஒரு வடிவம் கொடுக்க முடியும் என்றார். ஓராண்டுக்கு முன் பணி ஓய்வு பெற்ற அவர்
அகமதாபாத்தில்தான் தன் குடும்பத்துடன் வசிக்கிறார் என்று தெரிவித்தார்.
படத்தயாரிப்பு பற்றி நாங்கள் கூறியவற்றில் அவருக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டிருக்க
வேண்டும்; அவரைப் பார்ப்பதற்குத் தானே உதவுவதாகத் தெரிவித்தார்.
ஒரு மணி நேர உரையாடலுக்குப்
பின், கடும் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஏடிஎஸ்தலைமையகத்திலிருந்து மைக்கும்
நானும் அமைதியாக வெளியே வந்தோம். வழியில்நின்றுகொண்டிருந்த பாதுகாவலர் இப்போது
எங்களுக்குப் புன்னகையுடன் விடைகொடுத்ததுடன், ஓர் ஆட்டோவையும் வரவழைத்து, எங்களை
அதில் அனுப்பிவைத்தார். ஆட்டோ ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு, நாங்கள் ஒருவரை
யொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். ‘‘நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது,
இல்லையா,’’ என்று கேட்டான் மைக். ஆம் என்று தலையாட்டினேன்.
அடுத்த அழைப்பு
மறுபடியும் சிங்காலை
சந்திப்பதற்கு சிறிது இடைவெளி விடத் தீர்மானித்தேன். அவரை அடிக்கடிபோன் மூலம்
தொடர்பு கொண்டால் ஒருவேளை அவர் எரிச்சலடையக்கூடும், சந்தேகம்கூட ஏற்படக்கூடும்.
இதற்கிடையில் குஜராத் பற்றிய எங்களது ஆராய்ச்சி தொடர்பான பதிவு ஒன்றைத் தயாரித்து
அவருக்கு அனுப்பினேன்.
அவருடன் நடத்திய உரையாடலில்
கிடைத்த தகவல்களின்அடிப்படையிலேயே அதைத் தயாரித்திருந்தேன். அதில் அவர் மாநில
வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன்பங்களித்து வருவதாகக் காட்டியிருந்தேன். அதைத்
தொடர்ந்து அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் அழைப்பு விரைவில் வந்தது.இந்தத் தடவை நான்
மட்டும் செல்லத் தீர்மானித்தேன்.
அரசியல்வாதிகளுடன் நடத்திய
நேர்காணல்களில் நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம், இப்படிப்பட்டவர்கள்
அதிகாரப்பூர்வமற்ற முறையில் நம்மோடு பேச முன்வருகிறபோது வேறு யாரும் உடனிருப்பதை
விரும்ப மாட்டார்கள் என்பது. இம்முறை கேட்க வேண்டிய கேள்விகளை முதல் தடவையை விட
நன்றாகத் தயார் செய்துகொண்டு செல்லத் தீர்மானித்தேன். சென்ற சந்திப்பின்போது
சிங்கால் நடந்துகொண்ட விதம், தற்போதைய சந்திப்பில் அவரிடமிருந்து நிறைய
விஷயங்களைக் கறந்திட முடியும் என்ற நம்பிக்கையை அளித்திருந்தது.
குர்தாவுக்குள் மறைத்த கேமரா
அன்று மாலை எச்சரிக்கையாக,
சின்னஞ்சிறு வீடியோ கேமராவை எனது குர்தாவிற்குள் மறைத்து வைத்தேன். குர்தாவின்
மேல் பகுதியில் காஷ்மீரி பூ வேலைப்பாடு நெய்யப்பட்டிருந்தது. அதற்குள் ஒரு சிறிய
துளை இருந்தது. கேமராவுடன் இணைக்கப்பட்ட ஒரு ஒயர் அந்தத் துளையின் வழியே கீழே
சென்று ஒரு சிறிய பட்டனுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
நான் அந்தப் பட்டனை அழுத்தினால்
கேமரா இயங்கும். அது இயங்குவதற்கு அடையாளமாக ஒரு சிவப்பு விளக்கு எரியும். இது ஒரு
மிகவும் நுட்பமான உத்தி. அது வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு
நான் நன்றாகப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். கேமரா இயங்குவதை
நிச்சயப்படுத்துவதற்காக என் பேனாவை அடிக்கடி நழுவ விடுவேன். அதனை எடுப்பதற்காகக்
குனிவது போல, குர்தாவுக்குள் கேமரா சிவப்பு விளக்கு எரிவதை உறுதிப்படுத்திக்
கொள்வேன். இம்முறை ஏடிஎஸ் அலுவலகப் பாதுகாவலர் புன்னகையுடன் வரவேற்றார். ‘‘மேடம்,
எப்போதுஷூட்டிங் ஆரம்பிக்கப் போகிறீர்கள்,’’ என்று கேட்டார்.
விரைவில் என்று
பதிலளித்தேன்.சிங்காலின் அறைக்குள் நுழையும்போது அவர் உற்சாகத்துடன் ‘ஹலோ’ என்று
வரவேற்பார்என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏதோ தவறாக
நடந்திருக்கிறது என்பதை அவர் முகம் காட்டிற்று. தன் முன் கணினித் திரையில்
ஓடிக்கொண்டிருந்த வீடியோவையும்அதன் கீழ் வந்த அடிக்குறிப்புகளையும் அவர்
உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் வசிக்கும் பகுதியில் உள்ள வம்பர்கள்
சிலர் தயாரித்திருந்த வீடியோ அது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின்
கண்காணிப்பாளராக இருப்பவருக்கு அது ஒரு பெரிய பிரச்சனையேகிடையாது. ஆனால் அந்த
அடிக்குறிப்புகள் அப்படிப்பட்டவையல்ல. காவல்துறையிலேயே உள்ள சக அதிகாரிகள் சிலர்
அவருக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சில ரகசிய உள்ளடி
வேலைகளில் இறங்கியிருந்தார்கள்.
அப்படித் தயாரிக்கப்பட்டிருந்த
வீடியோ பதிவுதான் அது. சிறிது நேரம் கழித்து அதனை நிறுத்திய சிங்கால் தன்னை
இயல்பாக மாற்றிக்கொண்டார். அவரைப் பற்றி நான் செய்திருந்த ஆராய்ச்சி அவருக்குப்
பிடித்திருந்தது போலும். தன்னைப் பற்றி வேறு எவரிடமாவது விசாரித்தேனா, அவர்கள்
என்ன சொன்னார்கள் என்று அறிவதில் ஆர்வமாக இருந்தார். உரையாடலைப் பதிவு செய்ய
சரியான தருணம் அது. நாட்டிலேயே பயங்கரமானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டவர்களைச்
சுட்டுக் கொன்றவருக்கு எதிரில் நான் அமர்ந்திருந்தேன்.
(தொடரும்)
No comments:
Post a Comment