Friday, September 2, 2016

வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கு சிஐடியு பாராட்டு



வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி
இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கு சிஐடியு பாராட்டு
புதுதில்லி. செப். 2-
அகில இந்திய வேலைநிறுத்தம் வரலாறுபடைத்திடும் விதத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது, இதற்கு இந்தியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு சிஐடியு தன் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது,
இது தொடர்பாக சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்துவித சூழ்ச்சிகளையும் முறியடித்து, இந்தியத் தொழிலாளி வர்க்கம் இன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தை வரலாறு படைத்திடும் வகையில் வெற்றிபெறச் செய்திருப்பதற்கு சிஐடியு வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 
நாட்டில் தொழிலாளி வர்க்கம் இதுவரை நடத்திய அகில இந்திய வேலைநிறுத்தங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வேலை நிறுத்தம் மிகப்பெரியதாகும். சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி நாட்டிவ்ல 18 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையானது தொழிற்சங்கங்களில் இணைந்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையைவிட மிகவும் கூடுலாகும்.  நாட்டில் உள்ள அமைப்புரீதியான மற்றும் முறைசாராத் தொழிலாளர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறை தொழிலாளர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், திட்டப் பணிகளில் பணியாற்றும் ஊழியர்கள் என அனைத்துத்தரப்புப் பிரிவினரும் இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பொருளாராத்தின் கேந்திரமான துறைகளாக விளங்கும் நிலக்கரி மற்றும் இதர சுரங்கத் தொழிலாளர்கள், மின்சாரம், பொறியியல், பெட்ரோலியம், ராணுவ உற்பத்தி, டெலிகாம், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறை தொழிலாளர்களும் ஊழியர்களும்  மத்திய மாநில அரசுகளின் அச்சுறுத்தல்களைத் துச்சமெனத் தூக்கி எறிந்துவிட்டு மிகப் பெரிய அளவில் இவ்வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளார்கள். 
தமிழ்நாடு. தெலங்கானா, ஒடிசா உட்பட மாநில அளவில் இயங்கிடும் பல்வேறு தொழிற்சங்கங்களும் இவ்வேலைநிறுத்தப்போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.
பிஎம்எஸ் தவிர மற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து அறைகூவல் விடுத்த இவ்வேலைநிறுத்தத்திற்குப் பொதுமக்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பெருவாரியாக ஆதரவு அளித்தனர். 
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் சாலை மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
மேற்கு வங்கம், ஹரியானா, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் போன்ற மாநில அரசுகள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டபோதிலும் அதனையும் மீறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றார்கள். மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் அரசாங்கம் போலீசையும், குண்டர்களையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்மீது  மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் ஏவியது.  பல மாவட்டங்களில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
மேற்கு வங்க போக்குவரத்து அமைச்சர், நீர்ப் போக்குவரத்து மேலாண் இயக்குநரிடம் வேலைநிறுத்தம் செய்திடும் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார். பர்த்வான் மற்றும் பல இடங்களில் திரிணாமுல் குண்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள்,  செய்தியாளர்களையும் கூட தாக்கியுள்ளார்கள். 
 ஹரியானா மாநிலத்தில் குர்கான், பரிதாபாத் தொழிற்பேட்டைப்பகுதிகளிலும், நொயிடாவிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குர்கானில் மாருதி சுசுகியில் பணியாற்றிய 12 தொழிலாளர்களும், போக்குவரத்து சங்கங்களைச் சேர்ந்த 22 தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று போலீசார் மிரட்டினர். 
ஹரியானா, பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா, அஸ்ஸாம், ஒடிசா, கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் சாலைப் போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. ஆந்திரம், ஒடிசா, கர்நாடக மாநிலங்களில் ஆட்டோக்களும் ஓடவில்லை. 
அஸ்ஸாம், பீகார், ஹரியானா, ஒடிசா, கேரளா, திரிபுரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும், மற்றும் கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல மாவட்டங்களிலும்  தொழிற்சங்கங்கள் பந்த்திற்கு அழைப்புவிடுக்காதபோதிலும்கூட பந்த் போன்ற நிலைமையே மாநிலங்களில் காணப்பட்டது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பூனே, ஔரங்காபாத், நாக்பூர், நாசிக், மும்பை, சோலாப்பூர் போன்ற தொழில்நகரங்களில் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாஜக அரசாங்கத்தின் தவறான தகவல்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தொழிலாளர்கள் பெரும்திரளாக வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டிருப்பதானது அவர்களுக்கு அரசின்மீது உள்ள கோபத்தையும் அதிருப்தியையும் நன்கு வெளிப்படுத்தியது.
இந்தியத் தொழிலாளி வர்க்கம், தங்கள் உரிமைகள் மட்டுமல்ல, நாட்டின் சுயசார்பு மற்றும் இறையாண்மையும் பறிபோக அனுமதிக்க மாட்டார்கள் என்ற எச்சரிக்கும் விதத்தில் இவ்வேலை நிறுத்தம் அமைந்திருந்தது.
இவ்வாறு வேலைநிறுத்தத்தை மகத்தான அளவிற்கு வெற்றிபெறச் செய்திட்ட தொழிலாளர்களுக்கும். ஆதரவு அளித்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பழங்குடியினருக்கும் சிஐடியு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும், அரசாங்கம் தன் தொழிலாளர் விரோதக் கொள்கையைத் தொடருமானால் தொழிலாளர் வர்க்கம் மேலும் தீவிரமான போராட்டத்தில் இறங்கிடத் தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும் சிஐடியு அறைகூவி அழைக்கிறது,
இவ்வாறு தபன்சென் அறிக்கையில் கூறியுள்ளார்,
(ந,நி,)

No comments: