Friday, November 23, 2018

சபரிமலை: ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் சூழ்ச்சித்திட்டங்களை முறியடித்திடுவோம்



 தலையங்கம்
சபரிமலைக் கோவிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் எந்த அளவிற்கு மோசமான முறையில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பது நன்கு தோலுரித்துக்காட்டப்பட்டிருக்கின்றன. எப்படியாவது வன்முறையைத் தூண்டி, கோவில் வளாகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்திட வேண்டும், அதற்கானப் பழியை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் மீது போட வேண்டும் என்று சங் பரிவாரங்கள் திட்டங்கள் தீட்டுகின்றன. பாஜக மாநிலத் தலைவரான ஸ்ரீதரன் பிள்ளையே ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின்போது, தங்களுடைய போராட்டம் என்பது கோவிலுக்குள் செல்லும் பெண்களுக்கு எதிரானது அல்ல என்றும், ஆளும் கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிரானதே என்றும் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
பாஜக-வின் சார்பாக அனைத்து மாநில பொதுச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றும் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த சுற்றறிக்கையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொண்டர்களை அணிதிரட்டிட வேண்டும் என்றும் இதற்கு தலைவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சுற்றறிக்கையானது நவம்பர் 11 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்காகத் திறக்கப்படும் நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக இவ்வாறு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த சமயத்தில் திறக்கப்படும் கோவிலுக்கு பக்தர்கள் ஜனவரி மாதம் 20 வரை வருவார்கள்.
இதனைத்தொடர்ந்து பாஜக-வின் கண்ணூர் மாவட்டக்குழுவின் சார்பில் மற்றுமொரு சுற்றறிக்கை வெளியாகி இருக்கிறது. இதில் சபரிமலைக்கு வரும் டிசம்பர் 13 அன்றைய தினம் 200 பேரை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறு வருபவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருந்திட வேண்டும் என்றும், அவர்கள் தங்களுடைய கைப்பைகளில் தேவையான பொருள்களை (materials) எடுத்து வர வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
செப்டம்பரில் வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப்பின்னர் கோவில் அக்டோபரிலும், நவம்பரிலும் இரு தடவைகள், சிறிது காலத்திற்காகத் திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சமயங்களில் ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தங்களுடைய ஆட்களை அனுப்பி வைத்தன. அவற்றில் சில கிரிமினல்களும் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் மூலமாக கோவில் வளாகத்தினைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், கோவிலுக்குப் பெண்கள் வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்திடவும் திட்டமிட்டிருந்தனர். இவ்வாறு அவர்கள் அனுப்பிவைத்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கிரிமினல் பேர்வழிகள் கைது செய்யப்பட்டு, அவர்களை வீடியோ படங்கள் எடுத்து மக்கள் மத்தியில் அடையாளங்காட்டப்பட்டனர்.
தற்போது, கோவில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16 அன்று திறக்கப்பட்டபோது, கோவிலுக்கு வரும் பாதை முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்புப் பணி பலப்படுத்தப்பட்டது. தடை உத்தரவுகளும் அமல்படுத்தப்பட்டன. இரவு நேரத்தில் கோவிலுக்குள் நுழைவதற்காக முயற்சிகள் மேற்கொண்ட ஆர்எஸ்எஸ்/பாஜக தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு, கோவில் வளாகத்திற்குள் ரகளை செய்திட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முன்கூட்டியே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக கோவிலுக்கு வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எவ்விதச் சிரமமுமின்றி ஐயப்பனைத் தரிசித்துவிட்டுத் திரும்பியிருக்கின்றனர்.
நிர்வாகம் இவ்வாறு உறுதியான நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, சங் பரிவாரக் கும்பல் இப்போது ஊளையிடத் தொடங்கி இருக்கின்றன. நவம்பர் 17 அன்று மாநிலம் தழுவிய அளவில் ஹர்த்தால் அனுஷ்டித்திட அறைகூவல் விடுத்தன. இதன் காரணமாக வெளிமாநிலங்களிலிருந்து வந்த பக்தர்களுக்குச் சிரமங்கள் ஏற்பட்டன. பாஜக தலைவர்கள் அமித் ஷாவிலிருந்து, மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தனம் வரையிலும் மாநில அரசாங்கத்தைக் கண்டித்து வசைபாடினர். காவல்துறையினர் மீதும் நிர்வாகத்தினர் மீதும் பக்தர்களைத் துன்புறுத்துவதாகப் பொய்யாகக் குற்றஞ்சாட்டினர். ஆனால் உண்மையில் ரகளை செய்திட வந்த ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்கள்தான் பொறுக்கி எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, கேரளாவில் இருக்கின்ற காங்கிரஸ் கட்சியினரும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களைத் தற்போது நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்துத்துவா சக்திகளின் பின்னே இவர்கள் மிகவும் வெட்கங்கெட்டமுறையில் அணிவகுத்து நின்றுகொண்டு, மாநில அரசாங்கத்தைக் கண்டித்துக்கொண்டிருக்கின்றனர், பாஜகவின் கோரிக்கைகளை எதிரொலித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் செய்வதன்மூலம், பாஜகவின் அரசியல் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதற்கு உடந்தையாக இருந்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது ஜனநாயக முன்னணியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மக்கள் மத்தியில் மிகவும் விரிவான அளவில் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. பாலின சமத்துவத்திற்கும், சமூக சீர்திருத்தத்திற்கும் இத்தீர்ப்பு ஆற்றியுள்ள முக்கியத்துவத்தையும், எனவே இத்தீர்ப்பினை அமல்படுத்துவது தொடர்பாக இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மேற்கொண்ட நிலைப்பாட்டையும் அப்பிரச்சாரத்தின்போது மக்கள் மத்தியில் கொண்டு சென்றோம்.
மக்கள் மத்தியில் மதவெறித்தீயை உசுப்பிவிட்டு மக்களை மதரீதியாக பிளவுபடுத்த வேண்டும் என்கிற அகில இந்திய அளவிலான ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் சூழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் போராட்டங்களை முடுக்கிவிட்டுள்ளன. மோடி அரசாங்கம் அனைத்து முனைகளிலும் மிகவும் பரிதாபகரமான முறையில் படுதோல்வி அடைந்ததன் காரணமாகவும், இன்னும் ஆறு மாத காலத்திற்குள் மக்களவைக்குத் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில் இருப்பதாலும், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மீண்டும் தங்களுடைய மதவெறி மற்றும் பிளவுவாத நடவடிக்கைகளைப் புதுப்பித்திட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன. இவற்றில் மிகவும் மையமானது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதாகும்.
ராமர் கோவில் பிரச்சனை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அவசரம் காட்டாததாலும், அதனை அடுத்த ஆண்டு ஜனவரிக்குப்பின்பே விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம் என்று அது கூறிவிட்டதாலும், ஆர்எஸ்எஸ் தலைமையிலான பரிவாரங்கள்  அனைத்தும் ஊளையிடத் தொடங்கிவிட்டன. இவ்வாறு விசாரணையைத் தாமதப்படுத்துவதன் மூலமாக இந்து உணர்வுகள் புண்பட்டுவிட்டதாக கத்தத்துவங்கிவிட்டன. ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத், விஜயதசமி அன்று ஆற்றிய உரையின்போது, ராமர் கோவில் கட்டுவதற்கு வசதி செய்து தரும் விதத்தில் அரசாங்கம் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். மற்றொரு ஆர்எஸ்எஸ் தலைவர், மற்றுமொரு ராமஜன்ம பூமி இயக்கம் துவங்கிட வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
அதன்பின்னர் ஆர்எஸ்எஸ் ஏற்பாட்டின்கீழ் தில்லியில் நவம்பர் 3 – 4 தேதிகளில் பல்வேறு சாமியார்களும், சாதுக்களும் அடங்கிய ‘சந்த் சமிதி’ என்னும் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள். இந்தக்கூட்டத்தில் இதுபோன்று சாமியார்கள் கூட்டத்தை அயோத்தி, நாக்பூர் மற்றும் பெங்களூரில் நவம்பர் 24 அன்று நடத்திட வேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றனர். பின்னர் தில்லியில் டிசம்பர் 9 அன்று சாதுக்களின் மாநாட்டை நடத்திடுவது என்றும் முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து டிசம்பர் 18க்குப்பின்னர் நாடு முழுதும் ஐநூறுக்கும் மேற்பட்ட கூட்டங்களை இவ்வாறு நடத்திட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர்.
இந்தக் கோவிலுக்கான பிரச்சாரத்தின் பின்னே ஒளிந்திருக்கும் அரசியல் நிகழ்ச்சிநிரல் என்ன என்பதும் சாதுக்கள் மற்றும் சாமியார்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தினைக் கண்ணுற்றோமானால் நன்கு தெரிந்து கொள்ள முடியும். இந்தக் கூட்டத்தில் அவர்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானம் என்ன தெரியுமா? நம்முடைய வாழ்க்கை, கோவில்கள், மடங்கள், மகள்கள், சகோதரிகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பர்யத்தைப் பாதுகாத்திட மீளவும் மோடி அரசாங்கத்தை கொண்டுவர வேண்டும் என்பதாகும்.
எனவே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்கிற பிரச்சாரத்தை இவர்கள் புதுப்பித்திருப்பதும், சபரிமலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இவர்கள் போராட்டம் நடத்துவதும் சங் பரிவாரக் கும்பல் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிற நிகழ்ச்சிநிரலின் இன்றியமையாத தொரு பகுதியேயாகும். எனவே, கேரளாவில் சபரிமலை கோவிலை வைத்து, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மேற்கொண்டிருக்கிற தில்லுமுல்லு நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பது என்பது, நாடு தழுவிய அளவில் இந்துத்துவா மதவெறி சக்திகளுக்கு எதிராக நடத்திடும் ஒட்டுமொத்த போராட்டத்தின் ஓர் அத்தியாவசியமான பகுதியேயாகும்.
(நவம்பர் 21, 2018)
தமிழில்: ச. வீரமணி      



Friday, November 16, 2018

என்னத்துக்காகப் பெயர் மாற்றம்?



அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது என்ற பிரச்சனையைப் புதுப்பித்திருப்பதுடன், ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் தங்களுடைய மதவெறி நோக்கத்திற்காகப் புதிதாக, மற்றுமொரு முன்னணியில் செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். அதுதான், நாட்டில் முஸ்லீம் கலாச்சாரத்துடனும், வரலாற்றுடனும் சம்பந்தப்பட்ட பெயர்களைத் தாங்கி இருக்கக்கூடிய நகரங்கள் மற்றும் இடங்களின் பெயர்களை மாற்றுவதாகும்.  உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசாங்கம், மிகவும் குதியாட்டம் போட்டுக்கொண்டு பெயர் மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில்  முன்னனிக் கல்வி மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றாகத்திகழும் அலகாபாத்தை, பிரயாக்ராஜ் என்று அதிகாரபூர்வமாக மாற்றி இருக்கிறார்கள். தீபாவளிக்கு முன்னால், ஆதித்யநாத் அயோத்தியிலிருந்து ஓர் அறிவிப்பினைச் செய்தார். அதாவது, அயோத்தி இருந்துவரும் பைசாபாத் மாவட்டம் இனி அயோத்தி மாவட்டம் என்று  அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்குச் சற்று முன்புதான், வட இந்தியாவில் மிகப்பெரிய ரயில்வே சந்திப்பாகத் திகழும் மொகல்சராய் என்னும் ரயில்வே சந்திப்பை, தீன் தயால் உபாத்யாயா சந்திப்பு என்று பெயர் மாற்றம் செய்தார்கள். தாஜ்மகால் இருந்து வரும்  ஆக்ரா நகரையும்  ஆக்ராவான் என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும் என்றும் அதேபோன்று முசாபர்நகர் என்னுமிடத்தை லட்சுமிநகர் என்று மாற்ற வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று உத்தரப்பிரதேச பாஜக அரசாங்கம் மட்டும் ஈடுபட்டுக்கொண்டில்லை. குஜராத் மாநிலத்தில் துணை முதல்வராக இருப்பவரும் தலைநகர் அகமதாபாத்தை கர்ணாவதி என்று மாற்றிடலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இவ்வாறு நகரங்களின் பெயர்களை மாற்றுவதற்கு அவர்களின் ஒரே குறிக்கோள், நாட்டில் முஸ்லீம்களின் கலாச்சாரம் மற்றும் பங்களிப்புகளின் விளைவாக ஏற்பட்டிருக்கும் தாக்கங்களை முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட வேண்டும் என்பதேயாகும். ஆர்எஸ்எஸ் இயக்கம் முன்வைக்கிற வரலாற்றின்படி, முஸ்லீம்கள் ஆட்சி செய்த ஆயிரம் ஆண்டு காலம் அடிமைத்தனம் நிலவிய காலம், அதற்கு முன்னர் இருந்த காலம், இந்துக்களின் பொற்காலம். ஆகவே, கடந்த பத்து நூற்றாண்டு காலத்தில் ஆர்எஸ்எஸ் கூறிவரும் இந்துத்வா மதவெறி சிந்தனைக்கு எதிரான வரலாறு மற்றும் கலாச்சாரத் தன்மைகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிடவேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும். இவ்வாறுதான் அலகாபாத் நகரம் அக்பர் ஆட்சிக்காலத்தில் உருவானது. பிரயாக்ராஜ் என்று எந்த நகரமும் கிடையாது.  கங்கை நதியும் யமுனை நதியும் சங்கமிக்கும் இடத்தின் பெயர்தான் பிரயாக்ராஜ் என்று அழைக்கப்பட்டு வந்தது. அது நகரத்திற்கு வெளியே இருக்கிறது. எனினும், அலகாபாத் என்ற பெயருடன் சம்பந்தப்பட்ட வரலாற்றையும், கலாச்சாரத்தையும் முழுமையாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக, புராண நகரமாக விளங்கும் பிரயாக்ராஜ் என்னும் பெயரை வைக்கிறார்கள்.
எப்படிப் பசுப் பாதுகாப்புக்குழு என்ற பெயரிலும், மாட்டுக்கறிக்கு எதிரான பிரச்சாரம் என்ற பெயரிலும் முஸ்லீம்களைக் குறிவைத்துத் தாக்கினார்களோ, அதேபோன்று நகரங்களின் பெயர்களை மாற்றுவதும் நம் நாட்டின் மற்றும் நம் சமூகத்தின் பன்முகக் கலாச்சாரத்தின் வரலாற்றையும், நம் சமூகத்தில் பல மதத்தினரும் இரண்டறக்கலந்து உருவாக்கியுள்ள உன்னதமான கலாச்சார மாண்பினையும் நசுக்கி, ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே இவர்களது இழிநோக்கமாகும். நீங்கள் எவ்விதம் உடை அணிகிறீர்கள், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், நீங்கள் என்ன மொழியில் பேசுகிறீர்கள் என்பது மட்டும்தான் இவர்களின் தாக்குதலுக்கு இதுவரை ஆளாகியிருந்தன. ஆனால், இப்போது ஒருவர் முஸ்லீமாக இருப்பதற்கான வரலாற்றையும், அடையாளத்தையுமே தாக்கிட முன்வந்திருக்கிறார்கள்.
இத்தகைய வரலாற்றுக் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை, இதற்கு முன்பு செய்ததைப்போல  ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் கட்டவிழ்த்துவிடும் கும்பல்கள் செய்திடவில்லை, மாறாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கட்டளைப்படி செயல்பட்டுவரும் அரசாங்கங்களே செய்யத் தொடங்கி இருக்கின்றன. வரலாற்றை மாற்றி எழுதும் பணியுடன், இவ்வாறு கலாச்சாரத்தை சுத்தப்படுத்தும் பணியிலும் இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
புதிய வடிவத்தில் மதவெறி நிகழ்ச்சிநிரலை இவர்கள் தூக்கிப்பிடித்திருப்பதற்கான காரணம், வேறொன்றுமில்லை. உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இத்தகைய இழிவான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். அனைத்து முனைகளிலும் பரிதாபகரமான முறையில் படுதோல்வி அடைந்துள்ள மோடி அரசாங்கம், இவ்வாறு பெயர்களை மாற்றுவதன் மூலம் எதார்த்த நிலைமையை சற்றே மாற்றிடலாம் என்று நம்புகிறது.
(நவம்பர் 14, 2018)
(தமிழில்: ச.வீரமணி)



இலங்கையில் நெருக்கடி



கடந்த மூன்று வாரங்களாக மைத்திரி ஸ்ரீசேனா மேற்கொண்டுவரும் தன்னிச்சையான நடவடிக்கைகளின் காரணமாக ஓர் அரசியல் மற்றும் அரசமைப்புச்சட்ட நெருக்கடிக்குள் இலங்கை சிக்கிக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி, பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயை டிஸ்மிஸ் செய்திருப்பதுடன்,  முந்தைய எதிராளியான மகிந்தா ராஜபக்சேயைப் பிரதமராக அக்டோபர் 26 அன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.
ஸ்ரீசேனா, ஸ்ரீலங்கா விடுதலைக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதையும்,  ராஜபக்சேயிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டிருந்தவர் என்பதையும் நினைவுகூர்ந்திடவேண்டும். 2015 ஜனவரியில் நடைபெற்ற தேர்தலின்போது விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, ராஜபக்சேயைத் தோற்கடித்திருந்தார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா விடுதலைக் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன.
தற்போது ஸ்ரீசேனாவிற்கும், விக்ரமசிங்கேயிற்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் தற்போதைய நெருக்கடிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. ராஜபக்சே ஆதரவுடன் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா மக்கள் கட்சி இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரிய அளவில் வெற்றியை ஈட்டியது. இது ஆளும் கூட்டணியில் நெருக்கடியை ஆழப்படுத்தியது. நாட்டில் பொருளாதார நெருக்கடி ஆழமாகியிருந்ததன் விளைவாக மக்கள் மத்தியில் அதிகரித்து வந்த அதிருப்தியே இவ்வாறு கூட்டணியில் இருந்த இரு பெரிய கட்சிகளுக்கு இடையேயான விரிசலுக்கு முக்கிய காரணமாகும்.
பிரதமர் விக்ரமசிங்கேயை நீக்கியது அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானதாகும். ஸ்ரீசேனா – விக்ரமசிங்கே கூட்டணியால் கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 19ஆவது திருத்தம், ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றிற்குக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. புதிய ஷரத்துக்களின்படி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டாலன்றி, பிரதமரை நீக்கிட முடியாது.
ஸ்ரீசேனா, ராஜபக்சேயை பிரதமராக்குவதற்காக பல்வேறு தில்லுமுல்லு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் குதிரை பேரத்தின் மூலமாக எப்படியாவது பெரும்பான்மையைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நவம்பர் 16 வரை நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தார். நாடாளுமன்றம் கூடிய சமயத்தில், ராஜபக்சேயால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஸ்ரீசேனா நாடாளுமன்றத்தைத் தன்னிச்சையாகக் கலைத்து, ஜனவரி 5 அன்று தேர்தல்கள் என்று அறிவித்தார்.
மீண்டும், அரசமைப்புச்சட்டத்தின் 19ஆவது திருத்தத்தின்கீழ், ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை அதன் முதல் நான்கரை ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் கலைத்திட முடியாது. நாடாளுமன்றும் அவ்வாறு அதன் முழுமையான காலத்திற்கு முன்பு கலைக்கப்பட வேண்டும் என்று கருதினால், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களித்திட வேண்டும்.  தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் காலம் இதுவரை மூன்று ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்திருப்பதால், இந்த சமயத்தில் இதனைக் கலைத்திட ஜனாதிபதி முடிவு செய்திருப்பது அரசைமைப்புச்சட்டத்திற்கு விரோதமானதாகும்.
நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன போன்ற இதர எதிர்க்கட்சிகளும் மனுச் செய்தன. இந்த மனு மீது தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வாயம் டிசம்பர் 7 வரையிலும் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்குத் தடை விதித்தது. மேலும் ஜனவரி 5 அன்று தேர்தல் நடத்துவதற்கான தயாரிப்புப் பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்திருக்கிறது.‘
நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அவையை அடுத்த நாளே, அதாவது நவம்பர் 14 அன்று கூட்டினார். அன்று ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. ராஜபக்சேயின் ஆதரவாளர்கள், வாக்கெடுப்பு நடந்த விதத்தையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்கள். நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றதாக ஜனாதிபதி ஸ்ரீசேனா ஏற்றுக்கொள்ளாததால் நெருக்கடி தொடர்கிறது.
இந்தியாவில் இருக்கின்ற பிரதான ஊடகங்கள், இலங்கைப் பிரச்சனையானது, சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டியின் வெளிப்பாடு என்று கூறுகின்றன. ராஜபக்சே, ஒரு சீன ஆதரவாளராக சித்தரிக்கப்படுகிறார். விக்ரமசிங்கே மேற்கத்திய ஆதரவு மற்றும் இந்திய ஆதரவாளராக பார்க்கப்படுகிறார். எனினும், தற்போதைய நெருக்கடிக்கு, பிரதானமாக அந்நிய நாடுகளின் தலையீடு காரணம் என்று கூறிட முடியாது. இதற்குப் பிரதான காரணம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி 2015இல் கூறியபடி ஜனநாயக நிலைமாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் தோல்விகண்டதும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து அதனை மீட்டெடுக்கக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கைகளை உருவாக்குவதில் தோல்வியடைந்ததுமே இதற்குப் பிரதான காரணமாகும்.
கடந்த பல ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த நவீன தாராளமயக் கொள்கைகள்தான் பொருளாதார நெருக்கடி விளைந்ததற்கே காரணமாகும். விக்ரமசிங்கே அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் சுதந்திர சந்தைக் கொள்கைகளே நெருக்கடியை உக்கிரப்படுத்தின. 2017ஆம் ஆண்டில் வளர்ச்சி 4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. மலைபோல் உயர்ந்துள்ள கடன் மற்றும் ஏற்றுமதி – இறக்குமதி சமநிலை நெருக்கடி (balance of payment crisis) ஆகியவை அரசாங்கத்தை சர்வதேச நிதியத்திடம் ஒரு மூன்றாண்டு காலத்திற்கு 1.5 பில்லியன் டாலர்கள் பிணை எடுப்பு தொகுப்பு (bailout package) பெற நிர்ப்பந்தித்தது. இதற்க சர்வ தேச நிதியம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
அத்தியாவசியப் பொருள்களின் மீதான மானியங்கள் வெட்டு, அரசுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல், பொதுக் கல்வி முறையையும் தனியாரிடம் தாரைவார்த்துக் கொண்டிருத்தல், பணவீக்கம் போன்ற அனைத்தும் மக்களின் வாழ்நிலைமைகளைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. சமீப காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் உட்பட உழைக்கும் மக்களில் பல்வேறு பிரிவினரின் போராட்டங்களையும் பார்க்க முடிந்தது.
தமிழ் பேசும் வட மாகாணத்திற்கு இயல்புநிலையை மீளவும் கொண்டுவருவதற்காக அரசமைப்புச்சட்ட சீர்திருத்தங்களை நோக்கி நகர்வதற்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே விரிசல் அதிகரித்துக்கொண்டே வந்ததால் இதில் முன்னேற்றம் ஏற்படாமல் ஸ்தம்பிப்பு நிலை ஏற்பட்டது. ராஜபக்சே திரும்பவும் அதிகாரத்திற்கு வருவதைப் பொறுத்தவரையில் தமிழ் அமைப்புகள் மத்தியில் நியாயமானமுறையில் ஐயுறவுகள் ஏற்பட்டிருக்கின்றன.
ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதற்கான ஆணிவேர் என்பது 1978இல் நிர்வாக அதிகாரங்களை ஜனாதிபதிக்கு அளித்து அங்கே கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறை (executive presidency)யாகும். தற்போதுள்ள அரசாங்கம் இதனைக் கைவிடுவதாக உறுதிமொழி அளித்திருந்தது. எனினும், அரசமைப்புச்சட்டத்தின் 19ஆவது திருத்தமானது ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றை மட்டுமே கட்டுப்படுத்தி இருக்கிறது. ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அதீதமாக இருந்தது போன்று, எதேச்சாதிகாரம் நோக்கிச் செல்வதற்கு இருந்து வரும் அச்சுறுத்தல்  இப்போதும் தொடர்கிறது. தற்போது ஜனாதிபதி ஸ்ரீசேனா எடுத்திருக்கும் நடவடிக்கைகள் அவற்றிற்குச் சாட்சியமாக அமைந்திருக்கின்றன.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி எந்தவிதத்தில் தீர்வுகாணப்பட்டாலும், ஆளும் வர்க்கங்களின் தற்போதைய கொள்கைகள் கைவிடாப்படாதவரையில், இலங்கையானது ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூக நீதிக்கான பாதையில் முன்னேறுவது சாத்தியமில்லை.
(நவம்பர் 14, 2018)
(தமிழில்: ச.வீரமணி)

Thursday, November 15, 2018



ரபேல் ஊழல் குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ்
சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டிட வேண்டும்:
சீத்தாராம் யெச்சூரி
புதுதில்லி, நவ.15-
ரபேல் ஊழல் குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் இன்று (வியாழன்) மாலை செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
மத்திய  ஆட்சியாளர்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிநிலைமைகளைச் சரியாக மேலாண்மை செய்யாததாலும், கூட்டுக்களவாணி முதலாளித்துவத்திற்குப் பரிந்து செயல்பட்டு வருவதாலும், நாட்டின் பொருளாதாரமே மிகவும் மோசமான நிலையில் சீர்கேடடைந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் தற்சமயம் மிகவும் பாதாளத்திற்குச் சென்றுள்ளது. ஆட்சியாளர்கள்  ஆட்சிக்கு வருவதற்கு முன் அளித்திட்ட எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றிடவில்லை. நவீன தாராளமயப் பொருளாதாரக்கொள்கையை மிகவும் மூர்க்கத்தனமாகப் பின்பற்றியதன் விளைவாக, அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தின் நிறுவனங்கள் மாறியிருக்கின்றன. உயர்மட்ட அளவில் ஊழல்கள் பெருக்கெடுத்திருப்பதற்கு இதுவே ஊற்றுக்கண்ணாகும். கார்ப்பரேட் ஆதரவு அரசின் நிலைப்பாடானது, நாட்டில் செயல்பட்டுவந்த நிறுவனங்களைக் கண்காணிப்பதற்காக இருந்து வந்த சுயேச்சையான அமைப்புகள் அனைத்தையும் செயலற்றவைகளாக மாற்றிவிட்டது. ரபேல் ஒப்பந்தமாக இருக்கட்டும், பிரதான் மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டமாக இருக்கட்டும், டெலிகாம் துறையில் நடைபெறும் செயல்திட்டங்களாகட்டும் அல்லது வங்கிகள் சூறையாடல்களாகட்டும் – இவை அனைத்திலுமே கூட்டுக்களவாணி முதலாளித்துவம் பிரதானமாக செயல்பட்டு வருகிறது. எனவேதான், நம் நாட்டின் பொருளாதாரமே இன்றையதினம் மிகவும் மோசமான முறையில் சீர்கேடடைந்துள்ளது.
ரபேல் ஊழல்
ரபேல் ஒப்பந்தத்தை மத்திய அரசாங்கம் மேற்கொண்டதில், அரசாங்கம் மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பாக புதிய உண்மைகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது, ரபேல் விமானம் தொடர்பாக எவ்விதமான இறையாண்மைமிக்க உத்தரவாதமும் (sovereign guarantee) பெறவில்லை என்பதும், மாறாக சௌகரியம் தொடர்பான கடிதம் (letter of comfort) மட்டுமே பெற்றிருப்பதாகவும், இக்கடிதத்தின் மூலமாக இந்த மதிப்புமிக்க ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது என்பதையும் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருப்பதாகும்.
ரபேல் விமானத்தின் விலையைப் பொறுத்தவரையில், அரசாங்கம் 2018 மார்ச் மாதத்தில், விமானத்தின் அடிப்படை விலை, ஒவ்வொரு விமானத்திற்கும் தலா 670 கோடி ரூபாய் என்றது. ஆனால், 2016 செப்டம்பரில் 36 விமானங்களுக்கு அவற்றில் பொருத்தப்பட்டுள்ள அனைத்துக் கருவிகளுடனும் சேர்த்து 60 ஆயிரம் கோடி ரூபாய் என்று – அதாவது ஒவ்வொரு விமானத்திற்கும் 1,600 கோடி ரூபாய் என்று 2016 செப்டம்பரில் சுட்டிக்காட்டி இருந்தது.
டசால்ட் நிறுவனத்தின் தலைவர் (CEO), 36 விமானங்களின் விலையானது, முன்பு செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்தின்படி 18 விமானங்களின் விலைக்குச் சமமாகும் என்று கூறியிருக்கிறார். இந்த இலக்கங்கள் ஒத்துப்போகவில்லை. டசால்ட் நிறுவனத்தின் தலைவர் 2015 மார்ச் மாதத்தில் எச்ஏஎல்  (இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அது கோரியிருந்த தேவைகளின் அடிப்படையில்  கிட்டத்தட்ட முடிவுற்றுவிட்டது என்று கூறியிருந்தார். இதுதொடர்பான ஒப்பந்தம் 2015 ஏப்ரலில் பாரிஸ் நகரில் பிரதமரால் அறிவிக்கப்பட்டது என்பதும், பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் பின்னர் சந்தித்து 2015 மே மாதத்தில் இதனை இறுதிப்படுத்தியது என்பதும் இப்போது தெள்ளத்தெளிவாகி இருக்கிறது. இதன்னியில், அனில்  அம்பானியின் செயல்படா நிறுவனமான ரிலயன்ஸ் பாதுகாப்பு என்னும் நிறுவனத்திடமிருந்தும் வருவாய் பெறப்பட்டிருக்கிறது. இவ்வாறு இதில் நடைபெற்ற ஊழலின் எதார்த்த நிலைமை இப்போது மிகவும் நன்கு நிறுவப்பட்டுள்ளது. எனவே, இதில் நடைபெற்ற ஊழலை உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றைத்தவிர வேறு எந்த அமைப்பினாலும் முழுமையாக வெளிக்கொணர முடியாது. நாட்டின் நலன் காத்திட, குறிப்பாக நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட, இது மிகவும் முக்கியமாகும். மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்படக்கூடிய ஒவ்வொன்றுக்கும் இந்த அரசாங்கம் பதில் சொல்லக் கடமைப்பட்டதாகும்.
பணமதிப்பிழப்பு
2016 நவம்பர் 8க்கு முன் நாட்டில் ரொக்கப் பணம் இருந்த நிலைமை மீளவும் வந்துவிட்டது. பணமதிப்பிழப்பை அரசாங்கம் அறிவித்தபோது, நான்கு குறிக்கோள்களை அது கூறியது. ஆனால் அதில் ஒன்றுகூட எய்தப்படவில்லை. இப்போது நம்முன் எழுந்துள்ள கேள்வி இந்த அறிவிப்பால் பயனடைந்தவர்கள் யார்? வழக்கத்திற்குப் புறம்பாக மிக அதிக  அளவில் குஜராத் கூட்டுறவு வங்கிகளில் ரூபாய்  நோட்டுகள் மாற்றப்பட்டிருக்கின்றன. மாறாக, பணமதிப்பிழப்பு அறிவிப்பானது ரூபாய் நோட்டுகளைக் கொண்டு செயல்பட்டுவந்த முறைசாராத் தொழில்களை முற்றிலுமாக அழித்து ஒழித்துக் கட்டியுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியைக் கடுமையாகத் தாக்கி முடமாக்கியது.
வேலைவாய்ப்பிலும் இது கடும் பாதிப்பைக் கொண்டுவந்தது. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் வெளியேறியபின்பு, (இந்திய ரிசர்வ் வங்கி அரசின் முடிவை அமல்படுத்தியிருந்தபோதிலும்கூட) பணமதிப்பிழப்பு குறித்து அரசுத்தரப்பில் கூறப்பட்ட காரணங்கள் அனைத்தையும், அப்போது இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற உண்மை, இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டதன் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மேலும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டியது அவசியமாகும். மேற்கண்ட உண்மைகள் மற்றும் நிகழ்ச்சிப்போக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒரு கூட்டு நாடாளுமன்றக்குழு இதன்மீது விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் இத்தகையே மோசமான நடவடிக்கையின் பின்னால் மறைந்துகிடக்கும் உண்மைகளைச் சரியாக வெளிக்கொணர முடியும்.
மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் சுதந்திரம் பறிப்பு
மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ-இன்) சுதந்திரமான செயல்பாடு பறிக்கப்பட்டிருப்பது இப்போது நன்கு வெளிப்படையாகவே தெரியத் தொடங்கி இருக்கிறது. மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் இயக்கரின் செயல்பாடுகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தொடர்பாகத் தற்போது, ஓர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் மத்திய விஜிலன்ஸ் கமிஷன் (CVC) விசாரணை செய்து கொண்டிருக்கிறது.  சிபிஐ இயக்குநர் தவறு செய்தார் என்பதை மெய்ப்பிப்பதற்கு ஆதரவாக உருப்படியாக எதுவும் வெளிக்கொணரப்படவில்லை என்று ஊடகங்கள் வாயிலாகத் தெரிய வருகிறது. அதேசமயத்தில், ஆர்.கே. அஸ்தானாவை இயக்குநராக நியமிக்க முடியாமல் தோல்வியடைந்ததை அடுத்து அரசாங்கம் நீதித்துறையின் தலையீட்டின் காரணமாக அவரை சிறப்பு இயக்குநர் நிலையில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆளும் கட்சியினரின் திட்டங்களுக்கு அஸ்தானா உதவி வந்திருப்பது நன்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவரின் உதவி என்பது, 2002 கோத்ரா விசாரணையைக் கையாண்ட விதத்திலிருந்தும், சமீபத்தில் மத்தியப் பிரதேச வியாபம் ஊழலைக் கையாண்ட விதத்திலிருந்தும் நன்கு தெரிய வருகிறது. லஞ்ச ஊழலில் அவருக்கிருந்த பங்கு குறித்து தற்போது சிபிஐ-இல் விசாரணை நடைபெற்று வருகிறது. ரபேல் ஊழல் தொடர்பாகவும் கூட்டுக்களவாணி முதலாளித்துவத்திற்கு ஆதரவு அளித்து வருவது தொடர்பாகவும் சிபிஐ மேற்கொண்டுள்ள விசாரணைகளைத் தடுத்துநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் சிபிஐ-இல் மேற்கண்டவாறு இயக்குநர் மாற்றப்பட்டார் என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது.  ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு அரசாங்கம் மறுத்திருப்பதும், 2023க்கு முன்னர் இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு கணக்குத் தணிக்கைத் தலைவரின் (சிஏஜி-யின்) ஆய்வுக்கு உட்படுத்தக்கூட மறுத்திருப்பதும் ஆட்சியாளர்கள் அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கும் மற்றுமொரு நிறுவனத்தின் சுதந்திரத்தைப் பறித்திருப்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் பறிப்பு
 இந்திய ரிசர்வ் வங்கியில் நடந்துவருபவைகள்போல் முன்னெப்போதும் நடந்ததில்லை. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 7-ஆவது பிரிவை செயல்படுத்த வேண்டும் என்பது இதற்கு முன் நடந்ததே கிடையாது. இது, நாட்டின் நிதிநிலைமையை ஸ்திரமாக வைத்திருப்பதற்காக செயல்பட்டுவரும் இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தின் ஆணி வேரையே  வெட்டி எறிந்துவிடும். பணமதிப்பிழப்பு, வராக் கடன்களைக் கையாளும் விதம், ஒவ்வோராண்டும் இந்திய ரிசர்வ் வங்கி அடையும் இலாபத்தில் 99 சதவீதம் இப்போதைய அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்படுதல், இப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் தொகையாக இருக்கக்கூடிய 3.5 லட்சம் கோடி ரூபாயையும் வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்வதற்கான முயற்சி ஆகிய அனைத்தும் மத்திய வங்கியாக செயல்பட்டு வரும் இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல்களாகும். குஜராத்தில் தனியார் மின் திட்டங்கள் தொடர்பாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பாரத ஸ்டேட் வங்கி அங்கே செயல்பட்டுவரும் கார்ப்பரேட்டுகளின் வங்கிகளைத் தள்ளுபடி செய்ததைப் பார்த்து, இந்திய ரிசர்வ் வங்கி இவ்வாறு அரசாங்கத்தின் கோரிக்கையை துணிச்சலுடன் மறுத்திருப்பதாகவே தோன்றுகிறது. கூட்டுக்களவாணிகளின் நலன்களைப் பாதுகாப்பது என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தாக்குதலை ஏற்படுத்துவதற்கு இட்டுச் செல்லும்.
தேர்தல் பத்திரங்கள்
கூட்டுக்களவாணி முதலாளித்துவத்துடன் கள்ளத்தனமாக உடந்தையாக இருப்பதன் மூலம் பிரதமரும், பாஜகவும் அடைந்திடும் உடனடி ஆதாயங்கள் என்பவை தேர்தல் செலவுகளுக்கு கார்ப்பரேட்டுகளிடமிருந்து நிதி பெறுவது என்பதேயாகும். கார்ப்பரேட்டுகள் பாஜகவிற்கு அளித்தும் அளவிற்கும், இதர அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் அளவிற்கும் இடையே இருந்துவரும் இடைவெளி அனைவரும்  அறிந்ததே. தேர்தல் நிதி சம்பந்தமான சட்டங்கள் திருத்தப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் பத்திரங்கள், ஆளும் கட்சியினருக்கு அள்ளித்தரும் கார்ப்பரேட்டுகள் எவ்விதமான சட்டச் சிக்கல்களும் இன்றி வாரிவழங்குவதற்கு வாய்ப்புகளை அளித்துள்ளன. எனவே, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் வகைதொகையின்றி தேர்தல் பத்திரங்கள் மூலமாக வாரி வழங்கி வருவது உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இதற்கு தேர்தல் பத்திரங்கள் விநியோகிப்பதையே விலக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
(ந.நி.)



Saturday, November 10, 2018


ராகேஷ் அஸ்தானா

[சாதாரணமான நிலையிலிருந்த காவல்துறை அதிகாரி,
மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி?]
-அனுபமா கடகம்

ராகேஷ் அஸ்தானா, பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரிய காவல்துறை அதிகாரிகளில் மிகவும் உயந்த இடத்தைப் பிடித்திருக்கிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின்னர், மிகவும் கேந்திரமான அமைப்புகளிலும் மற்றும் நிறுவனங்களிலும் இந்துத்துவா வெறியுடன் செயல்படக்கூடிய அதிகாரிகளை நியமித்திருப்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். குஜராத் மாநில ஐ.பி.எஸ். அதிகாரியான ராகேஷ் அஸ்தானா,  மத்தியில் மோடி பிரதமரான பின்னர், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ-இன்) உயர்பீடத்திற்கு இரண்டாவது அதிகாரியின் அந்தஸ்துக்குக் கொண்டுவரப்பட்டார்.
அஸ்தானா மீது மூன்று கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதான குற்றச்சாட்டு வந்ததைத் தொடர்ந்து, அவர் விடுப்பில் செல்ல வேண்டும் என்று அவருக்கும் மேல் பணியாற்றி வரும் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அவர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார். கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு வழிகளிலும் தன் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து சலுகைகள் காட்டியிருக்கிறார் என்று மேலும் பல குற்றச்சாட்டுகளும் அவருக்கு எதிராக உண்டு.
அஸ்தானா, 2016இல் வடோடராவில் இருக்கின்ற பிரம்மாண்டமான லெட்சுமி விலாஸ்  அரண்மனையில் தன்னுடைய மகளின் திருமணத்தை மிகவும்  ஆடம்பரமான முறையில் நடத்தியது தொடர்பாக, அமலாக்க இயக்குநரகத்தினர் (E.D.-Enforcement Directorate) சோதனைகள் மேற்கொண்டிருக்கின்றனர். அப்போது அவர் மிகவும் படாடோபமாக செலவு செய்திருக்கின்ற தோரணை என்பது அரசு ஊதியம் பெறும் ஒரு நபரால் செய்யக் கூடியது அல்ல என்று வடோடராவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
1990கள் வரையிலுமே ராகேஷ் அஸ்தானா ஒரு சாதாரண காவல்துறை அதிகாரியாகத்தான் பணியாற்றி வந்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில் காவல்துறைத் தலைவராக இருந்த, நேர்மையான அதிகாரியான, ஆர்.பி. ஸ்ரீகுமார் அவர்களே, தான் பணியாற்றிய காலத்தில் தனக்குக் கீழ் பணிபுரிந்த ராகேஷ் அஸ்தானா ஒரு மனசாட்சி உள்ள, நேர்மையான அதிகாரியாகத்தான் பணிபுரிந்தார் என்று கூறுகிறார்.
திருப்புமுனை
1995இல் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தின் சார்பில் வேற்றுப்பணி  (on deputation) அடிப்படையில், பீகார் மாநிலத்தில் தன்பாத் என்னுமிடத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளராக அனுப்பப்பட்டதானது, அவர் உத்தியோகத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அஸ்தானாவிடம், அப்போதைய பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் அவர்களின் 950 கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழல் சம்பந்தமான வழக்கு விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது. அஸ்தானா, லாலு பிரசாத் யாதவ் மீதான புலன்விசாரணையில் எவ்விதக் குறையும் ஏற்படாத அளவிற்கு மிகவும் திறமையுடன் செயல்பட்டதுதான், லாலுவிற்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தது என்று ஆர்.பி. ஸ்ரீகுமார் கூறினார்.
இது, அப்போது பாஜக தலைவராக இருந்த எல்.கே. அத்வானியின் கவனத்தைக் கவ்விப்பிடித்தது. அப்போது பாஜக-விற்கு முதல் எதிரியாக விளங்கிய லாலுவை சிறைக்கு அனுப்பியதற்காக, அத்வானி, பின்னர் அஸ்தானாவிற்கு விருது வழங்கினார்.
மாட்டுத்தீவன ஊழல் விசாரணை முடிவுற்றபின்னர், அஸ்தானா மீளவும் குஜராத்திற்குத் திரும்பினார். 2002 முஸ்லீம்கள் மீதான படுகொலைகள் தொடங்கவிருந்த சமயத்தில் அதற்குச் சற்று முன்னர் அவர் குஜராத்திற்குத் திரும்பி வந்தார்.  கலவரங்களுக்குக் காரணமாக அமைந்த, சபர்மதி ரயில் எரிப்பு தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ளுமாறு குஜராத் அரசாங்கம் அஸ்தானாவை நியமித்தது. அஸ்தானாவை நியமித்ததில் அத்வானிக்கு ஒரு பங்கு உண்டு என நம்பப்படுகிறது.
ஒருவேளை மாட்டுத்தீவன வழக்கில் அஸ்தானா பெற்ற வெற்றியும், அவர் இந்துத்துவா சித்தாந்தத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்ததும்தான், அவரை இப்பொறுப்பிற்குத் தேர்வு செய்திருக்கக்கூடும்,என்று ஆர்.பி. ஸ்ரீகுமார் தெரிவித்தார்.
அதன்பின்னர் குஜராத் மாநிலத்தின் ஆட்சியாளர்கள் ஆட்டுவித்தபடியெல்லாம் மாநில அதிகார வர்க்கமும், காவல்துறை அதிகாரிகளும் ஆடியதுபோன்று அஸ்தானாவும் உடனடியாக ஆடத் தொடங்கிவிட்டார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஏனெனில் ஒரு நல்ல அதிகாரியாக நான் அவரை அறிந்திருந்தேன். இந்தமாதிரி அவர் செல்வார் என்று நான் நினைத்ததே இல்லை, என்று ஆர்.பி. ஸ்ரீகுமார் கூறினார். 
கோத்ரா புலன்விசாரணையை எந்தவிதத்தில் கொண்டுசென்றால் குஜராத்தில் ஆட்சி செய்த மோடி அரசாங்கத்திற்குப் பிடிக்கும் என்பதை நன்கு உணர்ந்திருந்த அஸ்தானா, அதற்கேற்ப அதனைக் கொண்டுசென்றதுதான், அஸ்தானாவை மோடிக்கு மிகவும் நெருக்கமாக மாற்றியது. ஆரம்பத்தில் ரயில் எரிப்பு சம்பவமானது, ரயிலில் அயோத்தி சென்றுவிட்டு, திரும்பி வந்த கர சேவகர்களின் அட்டகாசத்தால் உள்ளூரிலிருந்த சிறு வியாபாரிகள் அவர்கள் வந்த பெட்டியை எரித்தனர் என்று நம்பப்பட்டது.   ஆனால் அஸ்தானா, இந்த விபத்தை முன்பே நன்கு திட்டமிட்ட, தாக்குதல் என்று சாட்சியங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த விளக்கமானது மோடி அரசாங்கத்திற்கு வெகுவாகப் பிடித்துப்போய்விட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி உமேஷ் பானர்ஜி அவர்கள் சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்று கூறியிருந்ததை அஸ்தானாவின் முடிவு மாற்றியது. எனவே மோடி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு, அஸ்தானாவின் முடிவினை ஏற்றுக்கொண்டு செயல்படத் துவங்கிவிட்டார். அதன்பின்னர் சுமார் 100 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டார்கள். காவல் அடைப்பிலிருந்த காலத்திலேயே அவர்களில் சிலர் இறந்துவிட்டார்கள். 2011இல் குஜராத் உயர்நீதிமன்றம் இவர்களில் 63 பேரை விடுதலை செய்தது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. தூக்கு தண்டனைவிதிக்கப்பட்ட 11 பேரின் தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்று வழக்குரைஞர்களும், சமூக ஆர்வலர்களும் சாட்சியங்களை அளித்துள்ள போதிலும், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அஸ்தானா கூறியதுபோன்று அது சதித்திட்டம் என்றே முடிவு செய்துள்ளது. அஸ்தானாவின் புலன்விசாரணையின்படி சர்வதேச அளவிலான பயங்கரவாதிகளும், உள்ளூரில் இருந்த சிறுபான்மை ஸ்தாபனங்களின் பயங்கரவாதிகளும் சேர்ந்து திட்டமிட்டு மேற்கொண்ட சதிவேலையாகும். ஆனால் அவ்வாறு திட்டமிட்டவர்கள் யார், அவர்கள் பெயர் என்ன என்று இதுவரை வெளிவரவில்லை.
ஒரு வழக்குரைஞர், அஸ்தானா, தனிப்பட்டமுறையில், கோத்ரா புலன்விசாரணையை அரசின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப மாற்றியமைத்தார். அவர், தன்னை ஆட்சியாளர்களின் நம்பிக்கைக்குரிய இந்துத்துவா நபர் என்று மெய்ப்பித்துள்ளார். அவர்களுக்கு என்ன தேவையே அதையெல்லாம் அவர் செய்வார். அதற்காகத் தனக்கு உரிய விருதுகள் வழங்கப்படும் என்பதையும் அவர் அறிவார், என்று கூறினார்.
கோத்ரா புலன்விசாரணைக்குப்பின்னர், அஸ்தானா வடோடரா மற்றும் சூரத்திற்கு மாற்றப் பட்டார். வடோடராவில் உள்ள ஒரு வர்த்தகர், வடோடரா வந்தபின்னர் அஸ்தானா ஓர் உயர்மட்ட போலீஸ் அதிகாரி என்கிற நிலையிலிருந்து, மிக விரைவாக வடோடரா பணக்காரர்களுக்கு மிகவும் வேண்டிய போலீஸ் அதிகாரியாக மாறினார். மிகப்பெரிய பணக்காரர்களாக விளங்கிய ஸ்டெர்லிங் பயோடெக் என்னும் மருந்துக் கம்பெனி வைத்திருக்கும் சண்டேசரா சகோதரர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகத் தொடங்கினார். சண்டேசரா குழுமம், 2017இல் ஐயாயிரம் கோடி ரூபாய் அளவுக்கான வங்கி மற்றும் பண மோசடி வழக்குகளில் மாட்டிக்கொண்டது. இதன்பின்னர் இந்தியாவிலிருந்து துபாய்க்கு சேடன் மற்றும் நிதின் சண்டேசரா தப்பி ஓடிவிட்டார்கள்.  சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அஸ்தானாவிற்கு எதிராக அளித்துள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்று, சண்டேசரா கம்பெனியை ரெயிடு செய்த சமயத்தில் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட நாட்குறிப்புகளில் ஆர்ஏ(RA) என்று சுருக்கொப்பங்கள் இருந்தன என்பதும் ஒன்றாகும். சண்டேசரா சகோதரர்களின் செயல்முறைகளுக்கு அஸ்தானா உதவிவந்தார் என்பது குற்றச்சாட்டாகும்.
குஜராத்தில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்கள் மற்றும் என்கவுண்டர் கொலைகள் மட்டுமல்லாது உயர்புள்ளிகள் சம்பந்தப்பட்ட கிரிமினல் வழக்குகளிலும் அஸ்தானா மிகவும் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கிறார். முதல்வர் மோடி மக்களின் நலன்களுக்காக பாடுபடுவதாகக் காட்டநினைக்கும்போதெல்லாம் அவர் அஸ்தானாவைப் பயன்படுத்திக் கொள்வார். தன்னுடைய ரகசிய நிகழ்ச்சிநிரலை செயல்படுத்த விரும்பும்போதெல்லாம், அஸ்தானா, மோடியின் வலதுகரமாகச் செயல்பட்டார்.
பயங்கரவாத வழக்குகள்
2008 ஜூலையில் அகமதாபாத்தில் 21 குண்டுகள் வெடித்த சமயத்தில், மாநிலமே குலுங்கியது. மோடி, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருப்பதாகக் காட்டிக்கொள்ள விரும்பினார். அஸ்தானா வரவழைக்கப்பட்டார். மிகவிரைவாக அவர், நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள், இந்திய முஜாஹிதீன், லஷ்கர்-இ-தொய்பா போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் உதவியுடன் மேற்கொண்டவைகளாகும் என்று முடிவுக்கு வந்தார். இச்சம்பவங்களையொட்டி, இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தினைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உட்பட உள்ளூர் முஸ்லீம் தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டார்கள். எதிர்க்கட்சியினரும்  சமூக ஆர்வலர்களும், புலன் விசாரணை மேற்கொண்டவர்கள் தங்களுக்குச் சாதகமாக மிக எளிதாக தாங்கள் சந்தேகிக்கும் நபர்களைப் பிடித்துச்சென்றுள்ளனர் என்று விமர்சித்தார்கள்.  பயங்கரவாத வழக்குகள் பலவற்றில், உண்மை விவரங்கள் எப்போதுமே வெளிவருவதில்லை. அஸ்தானா, முதல்வர் விரும்பும் வகையில் முடிவுகளை உற்பத்தி செய்திடுவார் என்று ஒரு சமூக ஆர்வலர் கூறினார்.
பாலியல் புகழ் சாமியாரான ஆசாராம் பாபு, மோடியின் அன்பையும் ஆதரவையும் பெற்றிருந்தார். ஆனால், ஆசாராம் பாபுவிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் பூதாகாரமாக வெளிவந்தபின்னர், மோடி தன்னை குருவின் தொடர்பிலிருந்து கத்தரித்துக் கொண்டார். ஆசாராமையும் அவர் மகன் நாராயண் சாய் (இவனும் பாலியல் வன்புணர்வுக் குற்றம் இழைத்தவன்தான்) என்பவனையும் சிறைக்குள் வைக்கப்படுவதை அஸ்தானா உத்தரவாதப் படுத்தினார்.  அதேபோன்று, பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல் மோடிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சமயத்தில், அஸ்தானா, ஹர்திக் பட்டேல் வழக்கிற்குத் தலைமைதாங்கி,  தேசத்துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தி அவரை பல மாதங்கள் சிறையில் அடைத்து வைத்தார்.
மோடி பிரதமரானபோது, அஸ்தானா சிபிஐ-க்கு இடைக்காலத் தலைவராக 2016 டிசம்பரிலிருந்து 2017 ஜனவரி வரை தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சியினர் இது தொடர்பாக ரகளை எதுவும் செய்யாமலிருந்திருந்தால், அவர் இயக்குநராகவே மாற்றப்பட்டிருக்கலாம்.  பின்னர் அஸ்தானா துணை இயக்குநராக மாற்றப்பட்டார்.
அஸ்தானா, சிபிஐ-க்கு மீண்டும் திரும்பிவந்தபின், அஸ்தானா அகஸ்டா-வெஸ்ட்லாண்ட் பாதுகாப்பு வழக்கு, இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ரா சிங் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகள் மற்றும் விஜய் மல்லையா மீதான மோசடி வழக்கு ஆகியவற்றைப் புலனாய்வு செய்தார். அவருடைய திறமைகள் காரணமாக, அவர் மோடியின் வலதுகரமாக மாறினார். வர்மாவிற்கும் அஸ்தானாவிற்கும் இடையேயான பிளவிற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். அரசின் சார்பில் முக்கியமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் சமயங்கள் பலவற்றின் போது, வர்மா ஓரங்கட்டப்பட்டார் அல்லது அவரை அழைப்பதே  இல்லை.  
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கொடூரமான கொலைகள் பலவற்றிற்காக 32 காவல்துறை அதிகாரிகள் (இவற்றில் ஐபிஎஸ் அதிகாரிகளும் உண்டு) கைது செய்யப்பட்டனர். என்கவுண்டர் புகழ் டி.ஜி. வன்சரா உட்படா பல காவல்துறையினர் சிறிது காலம் சிறையிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள்  அனைவருமே பின்னர் விடுவிக்கப்பட்டனர், மீளவும் பணியில் அமர்த்தப்பட்டனர், சிலருக்குப் பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. மோடியும், அமித்ஷாவும் குஜராத் மாநில உள்துறைக்குச் சிறிது காலம் பொறுப்பு வகித்தனர். அவர்கள் தங்களுக்கு உதவி செய்த காவல்துறையினரைத் தண்டனையிலிருந்து காப்பாற்றி, பதவி உயர்வும் அளித்தனர்.
அஸ்தானா தற்போது ஒரு தற்காலிகமான சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறார். இத்தகைய சங்கடமான நிலைமையிலிருந்து அநேகமாக அவர் வெற்றிகரமானமுறையில் வெளிவந்திடலாம். அல்லது, மோடி-அமித்ஷா இரட்டையரால் காப்பாற்றப்பட முடியாத நபராகக்கூட மாறலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
(நன்றி: ப்ரண்ட்லைன்)
(தமிழில்: ச.வீரமணி)


Monday, November 5, 2018







அக்டோபர் புரட்சி குறித்து தெரிந்துகொள்வது  இன்றைக்கும் அவசியமானதாகும்


(கேரள மாநிலம், திருச்சூரில், 2017 ஜூன் 13 அன்று இஎம்எஸ் நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று துவக்கவுரையாற்றினார். அப்போது  அவர் கூறியதிலிருந்து சில அம்சங்கள்:)

இந்த ஆண்டும் இஎம்எஸ் நினைவு கருத்தரங்கைத் துவக்கி வைத்திட எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 19 ஆண்டுகளாக, எவ்விதத் தொய்வுமின்றி தொடர்ந்து ஒவ்வோராண்டும் இக்கருத்தரங்கை நடத்தி வருவதற்காக இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு முதற்கண் என் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2017ஆம் ஆண்டு, மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்ற நூற்றாண்டாக அனுசரித்து வருகிறோம்.  இப்புரட்சியானது 20ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றில் ஆழமான செல்வாக்கினை ஏற்படுத்திய ஒன்றாகும், மனிதகுல விடுதலை மற்றும் முன்னேற்றத்தில் பாய்ச்சல் வேக மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். மனிதனை மனிதன்சுரண்டுவதை ஒழித்துக்கட்டி ஒரு சமூக அமைப்பை நிறுவுவதை நோக்கி மனிதகுல நாகரிகத்தை முன்னோக்கி உந்தித்தள்ளிய ஒன்றாகும். மார்க்சியம் என்பது ஓர் ஆக்கப்பூர்வமான அறிவியல் என்பதை சந்தேகமின்றி மெய்ப்பித்த ஒரு சகாப்த நிகழ்வாகும். நவம்பர் புரட்சி என்றென்றைக்கும் பொருந்தக்கூடியதே என்பது இதில்தான் அடங்கி இருக்கிறது.

காரல் மார்க்ஸ் மறைவிற்குப்பின் 1883இல் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஜெர்மன் பதிப்புக்கு பிரடெரிக் ஏங்கல்ஸ் எழுதிய முன்னுரையில் அவர் குறிப்பிட்டதாவது: ‘‘அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன. ஆகவே (புராதன நிலப் பொதுவுடைமை சிதைந்து போனகாலம் தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளிவர்க்கம்) சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் வர்க்கப்போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாய் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.’’ (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.)
மிகவும் சுருக்கமாகச் சொல்வதென்றால், நவம்பர் புரட்சியின் சாதனை என்பது இதுதான்: ‘...சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்து விடுவிக்க வேண்டும், ...’ மார்க்சியத்தின் இத்தகைய தீர்க்கமான முடிவுகளை எதார்த்தமற்றது என்று கண்டித்து, சர்வதேச பிற்போக்குவாதிகள் தாக்குதல் தொடுப்பது இயற்கையேயாகும். மார்க்சிசம் என்பது அறிவியல் உண்மையின் அடிப்படையிலான ஓர் ஆக்கபூர்வ அறிவியல் என்பதை ருஷ்யப்புரட்சியும், அதனைத் தொடர்ந்து சோவியத் யூனியன் அமைந்ததும் மிகவும் அழுத்தமாக உறுதிசெய்தது.
நவம்பர் புரட்சியின் முக்கியத்துவம் எண்ணற்றவைகளாகும். சுரண்டலற்ற ஒரு சமூகஅமைப்பை எதார்த்தமாக்கிய அதே சமயத்தில், உழைக்கும் மக்களின் படைப்பாற்றலையும் இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது. சோசலிசத்தின் மூலமாக எண்ணற்ற சாதனைகளை மிக வேகமாக அடைய முடிந்தது. அதற்கு முன் மிகவும் பிற்போக்குப் பொருளாதார நாடாக இருந்ததை , ஒரு பலமிக்க பொருளாதார மற்றும் ராணுவ வல்லமை கொண்ட நாடாக, ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களை எதிர்க்கும் திறன் கொண்ட நாடாக மாற்றி, சோசலிச அமைப்புமுறையின் மேன்மையை உறுதி செய்தது. சோவியத் யூனியனில் சோசலிசம் கட்டி எழுப்பப்பட்டதானது மனிதகுல வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வீரகாவியமாகும். 20ஆம் நூற்றாண்டின் வரலாறு, நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து சோசலிசம் நிறுவப்பட்டதால் பிரதானமான முறையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பாசிசத்தை முறியடிப்பதில் சோசலிச சோவியத் யூனியன் குடியரசு மேற்கொண்ட தீர்மானகரமான பங்கும், அதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல சோசலிச நாடுகளாக உருவானதும் உலக வளர்ச்சிப்போக்கில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் மீதான வெற்றிக்கு சோவியத் செஞ்சேனை ஆற்றிய தீர்மானகரமான பங்களிப்பே பிரதான காரணமாகும். இது, காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளில் அதற்கு எதிராகப் போராடி வந்த இயக்கங்களுக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்து, பின்னர் அந்நாடுகள் காலனியாதிக்க சுரண்டலிலிருந்து விடுதலை அடைந்ததைப் பார்த்தோம்.
சீனப் புரட்சியின் வரலாறு படைத்திட்ட வெற்றி, வீரம் செறிந்த வியட்நாம் மக்கள் போராட்டம், கொரிய மக்கள் போராட்டம், கியூபா புரட்சி வெற்றிவாகை சூடியது ஆகியவை உலக வளர்ச்சிப்போக்கின் மீது மகத்தான செல்வாக்கைச் செலுத்தின.சோசலிச நாடுகளின் சாதனைகள் அளவிடற்கரியனவாக இருந்தன. வறுமை மற்றும் எழுத்தறிவின்மை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்ற துறைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியது ஆகியவை உலகம் முழுதும் போராடி வந்த உழைக்கும் மக்களுக்கு வலுவான முறையில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.

முதலாளித்துவத்துக்கு பெரும் சவால்
சோசலிசத்தின் சாதனைகள் உலக முதலாளித்துவத்திற்குப் பெரும் சவால்களாக அமைந்தன. எனவே அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சோசலிச நாடுகள் கடைப்பிடித்த மக்கள் நலத் திட்டங்களில் சிலவற்றைக் கடைப்பிடித்தன. உழைக்கும் மக்களுக்கு முன்னெப்போதும் அளிக்க மறுத்திட்ட உரிமைகளைத் தற்போது அளிக்க முன்வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதலாளித்துவ நாடுகள் நலத்திட்ட அரசுகளாக அமைந்து பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்தியதற்கு, சோவியத் யூனியனில் சோசலிசத்தின் சாதனைகளால் உத்வேகம் அடைந்த தொழிலாளி வர்க்கம் இந்நாடுகளில் நடத்திய போராட்டங்களின் விளைவுகளேயாகும். இன்றைய தினம் உலகின் பல நாடுகளில் ஜனநாயக உரிமைகளும், குடிமை உரிமைகளும் மனிதகுல நாகரிகத்தின் பிரிக்கமுடியாத பகுதிகளாக மாறி இருக்கின்றன எனில் அதற்கு சமூக மாற்றத்திற்கான மக்கள் போராட்டங்கள்தான் காரணமே தவிர, முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கருணை அல்ல.
இத்தகைய புரட்சிகர மாற்றங்கள் தரமான விதத்தில் மனிதகுலத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்சென்றன. நவீன நாகரிக வாழ்க்கையில் அழிக்கமுடியாத வகையில் பங்களிப்பினைச் செய்தன. இவை, பண்பாடு, அறிவியல், அழகியல் என பல்வேறு துறைகளிலும் பிரதிபலித்தன. திரைப்படத்துறையின் இலக்கணத்தில் ஐசன்ஸ்டீன் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்த அதே சமயத்தில், ஸ்புட்னிக் நவீன அறிவியலின் எல்லையை விண்ணில் உள்ள கோள்களை ஆராயும் அளவிற்கு விரிவுபடுத்தியது.
அக்டோபர் புரட்சியின் பாரம்பர்ய மாண்புகள்
அக்டோபர் புரட்சியின் விளைவாகத் தோன்றிய சோவியத் யூனியன் இன்றில்லை. அது சிதைந்து சிதறுண்டு போனதற்கான காரணங்களைத் தனியே விவாதித்திருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1992இல் 14ஆவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தத்துவார்த்த தீர்மானத்தில் ஆய்வு செய்திருக்கிறோம். சோவியத் யூனியன் இன்றில்லை என்ற போதிலும், அக்டோபர் புரட்சியின் புரட்சிகர பாரம்பர்யத்தின் முக்கியமான நான்கு அம்சங்கள், மனிதகுலம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்தை நோக்கி செல்வதற்கு  இடையிலான இடைப்பட்ட மாறுதல் காலத்தில் அச்சாணியாக விளங்கக்கூடிய  நான்கு அம்சங்களை  அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும்.
(1)  தோழர் லெனின் அவர் காலத்திய உலக நிலைமைகளுடன் முதலாளித்துவ வளர்ச்சி விதிகளின் அடிப்படையில் மார்க்சிய சிந்தனையை வளர்த்தெடுக்கையில், மூலதனக் குவியல் ஏகபோக மூலதனத்தினை உருவாக்கும் என்று மார்க்ஸ் கூறியதானது, அடுத்து ஏகாதிபத்தியக் கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றார்.  மேலும் தோழர் லெனின் ஏகாதிபத்தியத்தின் சங்கிலியின் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து அதனைத் தகர்க்கும் விதத்தில் மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகளில் முதல் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் அந்தப் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து, தகர்த்திட்டார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தத்தை தங்கள் விடுதலைக்கான உள்நாட்டு யுத்தமாக மாற்றிட  ருஷ்யத் தொழிலாளர் வர்க்கத்திற்கு வாய்ப்பினை அளித்தது. எனவே, இன்றைய சூழ்நிலையில், எந்தவொரு நாடும் ஏகாதிபத்தியத்தினை உறுதியுடன் எதிர்த்திடாமல்  தங்கள் நாட்டில் புரட்சிகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்திட முடியாது என்பது தெளிவாகும்.
இன்றைய  ஏகாதிபத்திய உலகமயக் காலத்திலும்கூட அக்டோபர் புரட்சியின் இந்த அம்சம் இப்போதும் செல்லத்தக்கதாகவே தொடர்கிறது.  ஏகாதிபத்திய உலகமயம் என்னும் சங்கிலியின் பலவீனமான கண்ணிகளால் உருவாக்கப்பட்டுள்ள மூலதனத்தின் வர்க்க ஆட்சியின்மீதான அரசியல் தாக்குதல் அழுத்தமாகத் தொடரப்பட வேண்டும்.
இங்கே அடிக்கோடிட்டு பார்க்க வேண்டிய விஷயம் என்னவெனில், மனிதகுலம் இதற்குமுன் கண்டிராத ஒரு பாதையில்தான் சோசலிசத்தைக் கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது. சோசலிசக் கட்டுமானத்திற்கென்று குறிப்பிட்ட அனுபவ வரையறையோ அல்லது இதுதான் இதற்கான சூத்திரம் என்று குறிப்பிட்ட எதுவுமோ கிடையாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாடு, சோவியத் யூனியனில் நடைபெற்ற குறைபாடுகள் என்று கீழ்க்கண்ட நான்கு விஷயங்கள் குறித்து ஆய்வினை மேற்கொண்டது. அதாவது, சோசலிச அரசின் வர்க்க குணம், சோசலிச ஜனநாயகம் நிறுவப்படுதல், சோசலிசப் பொருளாதாரக் கட்டுமானம் மற்றும் சோசலிசத்தின் கீழ் மக்களின் தத்துவார்த்த சமூக உணர்வினை உயர்த்தத் தவறியமை ஆகிய நான்கினை அது சுட்டிக்காட்டி இருந்தது. ஆகவே, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சிந்தனைகளில் இருந்த குறைபாடுகளினால் அல்ல என்கிற முடிவிற்கு ஒருவர் நிச்சயமாக வர முடியும். மாறாக, மார்க்சிய-லெனினியத்தின் அறிவியல் மற்றும் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து நழுவிச் சென்றதே பின்னடைவுக்குப் பிரதானமான காரணமாகும். எனவே, இந்தப் பின்னடைவுகள் மார்க்சிய-லெனினியத்தை மறுதலித்ததாலோ அல்லது சோசலிசச் சிந்தனையாலோ அல்ல.
சரியற்ற மதிப்பீடுகள்: 20ஆம் நூற்றாண்டில் சோசலிம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஈடிணையற்ற விதத்தில் முன்னேற்றங்களைக் கண்டபோதிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஒருசிலவற்றைத்தவிர பல நாடுகளில் ஏற்பட்ட அனைத்து சோசலிசப் புரட்சிகளும் ருஷ்யாவில் இருந்ததைப்போன்ற ஒரு பிற்போக்கு முதலாளித்துவ நாடுகள் அல்ல. இந் நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் கண்ணி, லெனினிசத்தின் புரிதல்படி பலவீனமான ஒன்று  அல்ல. இந்நாடுகளில் உலக முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் மீது தன்னுடைய பிடிப்பை வலுவாகப் பற்றிக்கொண்டிருந்தது. அதன் காரணமாக எதிர்காலத்தில் அதனால் வளரவும் முடிந்தது. சோசலிச நாடுகள் உலகச் சந்தையின் மூன்றில் ஒரு பகுதியை முதலாளித்துவத்திடமிருந்து நீக்கியது. எனினும்,  இதன்மூலம் அதனால், உலக முதலாளித்துவம் தன்னுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அடிப்படையில் தன்னுடைய உற்பத்தி சக்திகளை மேலும் வளர்த்தெடுப்பதற்கான கொள்திறனை நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாக்க முடியவில்லை. இதன்காரணமாக ஏகாதிபத்தியம் நவீன காலனியாதிக்கத்தின் மூலமாக உலகச் சந்தையை விரிவாக்கிக்கொள்வதை சாத்தியமாக்கிக் கொண்டுள்ளது.
முன்னூறு ஆண்டுகளில் முதலாளித்துவத்தால் சாதிக்கமுடியாததை, சோசலிசத்தின் மூலம் முப்பது ஆண்டுகளில் சோவியத் யூனியன் சாதித்துக் காட்டியது. இது, எதிர்காலத்தில் சோசலிச முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்திட முடியாது என்கிற எண்ணத்திற்கு இட்டுச்சென்றது.   சோசலிசத்தால் தோல்விக்கு ஆளாகியுள்ள முதலாளிகள் முன்னிலும் பன்மடங்கு மூர்க்கத்தனத்துடன் திருப்பித்தாக்குவார்கள் என்கிற லெனினிஸ்ட் எச்சரிக்கை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
தவிர்க்கமுடியாதபடி முதலாளித்துவம் நிர்மூலமாகிவிடும் என்பது தானாய் நடக்கக் கூடிய ஒன்று அல்ல. முதலாளித்துவத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் எதுவும் அதனை சுரண்டலற்ற ஒன்றாகவோ அல்லது நெருக்கடியற்ற ஒன்றாகவோ மாற்றிட முடியாது.  முதலாளித்துவம் தூக்கி எறியப்பட வேண்டியிருக்கிறது.  ஆனால் அதன் பலம் என்ன என்பது குறித்து சரியான மதிப்பீடு அவசியமாகும். அப்போதுதான் அதனைத் தூக்கி எறியக்கூடிய விதத்தில், மார்க்சிய - லெனினியத்தை ஏற்றுக்கொண்டுள்ள கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரமான தத்துவார்த்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கூர்மைப்படுத்திக் கொண்டும் வலுப்படுத்திக்கொண்டும் இருப்பது  அவசியம் என்பதை உணர்ந்திட முடியும். இவ்வாறு ஒரு புரட்சிகரமான கட்சி இல்லாமல் புரட்சிகரமான மாற்றம் சாத்தியமில்லை.
சோசலிசத்தின் வல்லமை குறித்து அதீத மதிப்பீடும் கூடாது. முதலாளித்துவத்தின் வல்லமை குறித்து குறைந்த மதிப்பீடும் கூடாது. இவை இரண்டும் ஒரு சரியான ஆய்வினை மேற்கொள்வதற்கும், அதன் காரணமாக இன்றைய உலக நிலைமை குறித்த ஒரு முறையான மதிப்பீட்டை உருவாக்குவதற்கும் அனுமதித்திடாது.

சோசலிசம் – ஓர் இடைநிலை மாறுபாட்டுக்காலம்: மேலும், சோசலிசம் என்பது முன்னேற்றத்தின் முதல்படி என்பதுபோல கருதப்பட்டது. ஒருதடவை சோசலிசத்தை அடைந்துவிட்டோமானால், அதன்பின்னர்  எதிர்காலத்தில் எவ்விதத்தடையுமின்றி ஒரு  வர்க்கமற்ற, கம்யூனிச சமூகத்தை எய்தும்வரை எவ்விதமானத் தடையும் இல்லாமல் மிகவும் நேரான பாதையாக இருந்திடும் என்று கருதப்பட்டது. இது ஒரு பிழையான சிந்தனையாகும்.
அனுபவமும் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. சோசலிசம் என்பது ஓர் இடைநிலை மாறுபாட்டுக்காலம், அல்லது, மார்க்ஸ் கூறியதேபோன்று, கம்யூனிசத்தின் முதல் கட்டம் --  அதாவது ஒரு வர்க்கப் பிரிவினையுடனனான சுரண்டும் முதலாளித்துவ ஒழுங்கிற்கும், வர்க்கமற்ற கம்யூனிச ஒழுங்கிற்கும் இடையேயான இடைநிலை மாறுபாட்டுக் காலமாகும். எனவே, இந்த இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில், வர்க்க மோதல்களை ஒழித்துக்கட்டிவிட முடியாது. மாறாக உலக முதலாளித்துவம் தான் இழந்த  ஆட்சிப்பரப்பை மீளவும் பெறுவதற்கு முயற்சித்திடும் விதத்தில் அவை உக்கிரமடையும். எனவே இக்காலகட்டம் மிகவும் ஏற்ற இறக்கத்துடன் இருந்திடும்.  அதிலும் குறிப்பாக முதலாளித்துவரீதியாக பின்னடைந்திருந்த புரட்சி நடைபெற்ற  நாடுகளில் இந்த நிலைமை இருந்திடும்.
உலக சோசலிசத்தின் சக்திகளின் வெற்றியோ அல்லது தோல்வியோ, சோசலிசக் கட்டுமானத்தில்  எய்தப்பட்ட வெற்றிகளைக் கொண்டும் அதனை ஈட்டிய வர்க்க சக்திகளைச் சரியாக மதிப்பீடு செய்வதைக் கொண்டும் தீர்மானிக்கப்படும். இதனைச் சரியாகச் செய்திடாவிடில், எதிரி குறித்து, குறைத்து மதிப்பீடு செய்வதற்கே இட்டுச் செல்லும். அந்த எதிரி சோசலிச நாடுகளில் இருப்பினும் சரி, அல்லது வெளியே இருந்தாலும் சரி. சோசலிசம் குறித்த அதீத மதிப்பீடு என்பதும் சோசலிச நாடுகளில் உருவான பிரச்சனைகள் குறித்து கண்டுகொள்ளாது விடுவதற்கும், உலக முதலாளித்துவம் தன்னை ஒருமுகப்படுத்திக் கொள்வதற்கும் இட்டுச் செல்லும்.
துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்தல் என்பதே இயக்கவியலின் உயிரோட்டமான சாராம்சம் என்று மாமேதை லெனின் நமக்கு எப்போதும் நினைவுபடுத்தி வந்துள்ளார்.  இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வு தடுமாற்றம் அடைந்தால், அல்லது எதார்த்த நிலைமை குறித்து சரியான புரிதல் இல்லாமல் தவறிழைத்தோமானால், பின், பிழையான புரிதல்களும் நெறிபிறழ்வுகளும் உண்டாகும்.
இத்தகைய நெறிபிறழ்வுகள்தான், முக்கியமாக, சோவியத் யூனியனின் பிந்தைய ஆண்டுகளில் மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சாராம்சத்திலிருந்து விலகல்களும், குறிப்பாக, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசுக்குப் பின்னர் சோசலிசக் கட்டுமானத்தின்போது தீர்க்கப்படாதிருந்த பிரச்சனைகள் இத்தகைய பின்னடைவுகளுக்கு இட்டுச் சென்றன.
சோசலிசக் கட்டுமானத்தின்போது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய குறைபாடுகள்
சோசலிசக் கட்டுமானத்தின்போது நான்கு முக்கியமான அம்சங்களில் குறைபாடுகள் நடந்துள்ளன. இதனை விவாதிப்பதற்கு முன்பாக, சோசலிசம் என்பதைக் கட்டும் பணி, மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத ஒரு பாதையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை, மீண்டும் ஒருமுறை நாம் அடிக்கோடிட்டுக்கொள்வது அவசியமாகும். இதற்கென்ற எந்தவிதமான குறிப்பிட்ட சூத்திரமோ அல்லது வரைபடமோ கிடையாது. இத்தகு எதார்த்த உண்மைகளையும் நாம் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்திடும்போது கணக்கில் கொண்டிட வேண்டும்.
அரசின் வர்க்க குணம்
மேற்கண்ட நான்கு குறைபாடுகளில், முதலாவது, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணம் சம்பந்தமானதாகும்.  முந்தைய முதலாளித்துவ அரசமைப்பில் சுரண்டும் சிறுபான்மை வர்க்கங்களுக்கு எதிராக, பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர் வர்க்கத்தின்  சர்வாதிகாரமே, அதாவது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணமாகும்.
எனினும், இந்த வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருந்தது.  தோழர் ஸ்டாலின் இதற்கான ஓர் அரசியல் அறிக்கையை 1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது  காங்கிரசில் சமர்ப்பித்தார்.  ஆயினும், சோசலிசம் பல்வேறு கட்டங்களைக் கடந்தசெல்ல வேண்டியிருந்ததால், இத்தகு வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் இருந்தது.  சோவியத் யூனியன், முதலாளித்துவ  நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த சூழலில், அல்லது உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், சோவியத் யூனியனில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கால கட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த வடிவத்திலேயே தொடர்ந்து நீடித்திருந்துவிட வேண்டிய அவசியம் தேவையாய் இருக்கவில்லை.  பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் பல்வேறு கட்டங்களையும், சோசலிச அரசின் பல்வேறு வடிவங்களையும்,  மிகவும் விரிவானமுறையில்  1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது  காங்கிரசின் அரசியல் அறிக்கையில் தோழர் ஸ்டாலின்  சமர்ப்பித்தார். இதற்கு "சித்தாந்தம் குறித்த கேள்விகள்" ("Questions of theory") என்று தலைப்பிட்டிருந்தார்.  எனினும், இவ்வாறு  வடிவங்களை மாற்றியமைத்ததை நடைமுறைப்படுத்தும்போது, இதற்கான இயக்கங்களை அரசு அறிவிக்கும்போது அதில் மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்பு தேவைப்பட்டது. இதனை  மக்கள் தாமாக முன்வந்து மேற்கொள்வதற்கு அவர்களைத் தயார்ப்படுத்தாததன் காரணமாக, அவர்கள் அரசிடமிருந்து தனிமைப்படுவதற்கும், அரசின் மீது அதிருப்தி கொள்வதற்கும் இட்டுச்  சென்றது. மேலும், இதே வடிவம் சோசலிச நாடுகள் அனைத்திற்கும் ஒரே சீரான முறையில் அமல்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. அந்தந்த நாட்டின் வரலாறு மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வுசெய்வதன் பின்னணியில்  தீர்மானிக்கப்பட வேண்டியதாகும். 
தோழர் லெனின் இதுகுறித்து தன்னுடைய அரசும் புரட்சியும் என்னும் நூலில் மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்று தோழர் லெனின் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும்,  வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது என்றும் அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டிருந்தார். "முதலாளித்துவ அரசுகளின் வடிவங்கள் மிகவும் தீவிரமானமுறையில் வேறுபட்டிருக் கின்றன, எனினும் அவற்றின் வடிவங்கள் வேறுபட்டிருந்தபோதிலும், இறுதி ஆய்வில் தவிர்க்கமுடியாதவகையில் அவை முதலாளிவர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே இருந்திடும். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும், வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது."
இரண்டாம் உலகப் போருக்குப்பின் உருவான கிழக்கு  ஐரோப்பிய சோசலிச நாடுகள்,  சோவியத் யூனியனில் இருந்தைப்போன்ற சோவியத் வடிவத்தை கையகப்படுத்திக் கொண்டன. அவை தங்கள் நாடுகளின் துல்லியமான சமூகப் பொருளாதார நிலைமைகளையோ மற்றும் வரலாற்றுப் பின்னணியையோ கணக்கில் கொள்ளவில்லை.  இவற்றின் விளைவாக இந்நாட்டின் அரசுகள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டன. இவற்றுக்கு எதிராக மக்களின் இடையேயான அதிருப்தியும் வளர்ந்துகொண்டிருந்தன.  
சோசலிஸ்ட் ஜனநாயகம்: இரண்டாவதாக மிகப் பெரிய குறைபாடு, சோசலிஸ்ட் ஜனநாயகம் சம்பந்தப்பட்டதாகும். ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தின் கீழ் இருந்ததை விட சோசலிசத்தின்கீழ் ஆழமானதாகவும், வளமானதாகவும் இருந்திட வேண்டியது அவசியம். முதலாளித்துவம் பெயரளவில் ஜனநாயக உரிமைகளை வழங்கும் அதே சமயத்தில், அது மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அதனை உண்மையில் அளித்திடாது. (முதலாளித்துவத்தின்கீழ் ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்பும் எதனையும் வாங்குவதற்கு உரிமை படைத்தவன்தான். எனினும் அவ்வாறு வாங்குவதற்கான சக்தியை பெரும்பாலானவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள்.) ஆனால் சோசலிசம் எதனையும் வாங்கும் உரிமையையும், அதற்கான சக்தியையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளித்திருக்கும்.
எனினும், பல நாடுகளில் சோசலிஸ்ட் கட்டுமானம் நடைபெற்ற சமயத்தில், இரு விதமான குறைபாடுகள் நடைபெற்றுள்ளன. முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு,  பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பது, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையின் சர்வாதிகாரமாக, அதாவது கம்யூனிஸ்ட்  கட்சியின் சர்வாதிகாரமாக, மாற்றப்பட்டிருந்தது. இதுவும் சிறிது காலத்திற்கப்பின் கட்சித் தலைமையின்  சர்வாதிகாரமாக மாற்றப்பட்டது. இவ்வாறு சோசலிச அரசு என்பது, ஒட்டுமொத்த  பாட்டாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய சோசலிச அரசு என்பது, நடைமுறையில்  கட்சியின் ஒரு சிறு பிரிவால், அதாவது  கட்சியின் அரசியல் தலைமைக்குழுவால்,  மேற்கொள்ளப்படும் ஒரு விசித்திரமான நிலைமை ஏற்பட்டது. 
அரசு அறிவிக்கும் ஆணைகள் பெரும்பான்மையான மக்கள் ஏற்கக்கூடிய விதத்தில் அமைந்திடவில்லை.  அவை சோவியத்துகள் போன்ற அடிப்படையான ஜனநாயக அமைப்புகளின் மூலம் மக்களிடம் எடுத்துச்செல்லப்படவில்லை. மாறாக அரசின் கட்டளைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டன.  இவை இயற்கையாக மக்களை அரசிடமிருந்து தனிமைப்படுத்திட இட்டுச்சென்றது.
இரண்டாவதாக, ஜனநாயக மத்தியத்துவத்தை அமல்படுத்தும் சமயங்களில், உள்கட்சி ஜனநாயகம் என்பது அடிக்கடி பலிகிடாவாக மாறியது.  சோவியத் யூனியனின் வரலாற்றில் சில சமயங்களில் இருந்ததைப்போல மத்தியத்துவம் முன்னுக்கு வந்தது. இது, அதிகாரத்துவம் வளர்வதற்கு இட்டுச் சென்றது. இவ்வாறு அதிகாரத்துவம் வளர்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். இவற்றின் காரணமாக சோசலிசத்திற்கு விரோதமான போக்குகள், ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்குச் சலுகை போன்றவை தலை தூக்கின.  சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல நாடுகளில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த  பெரும்பாலானவர்கள் சலுகைகள் அனுபவித்தது இதற்கு எடுத்துக்காட்டாகும். இதன்காரணமாக கட்சியின் புரட்சிகரத் தன்மை கொள்ளை போய்விட்டது, கட்சி மக்களிடமிருந்து தனிமைப்பட்டது, கட்சித் தலைமையிடமிருந்து கட்சி அணிகளும் தனிமைப்பட்டன.   
இதுபோன்ற திரிபுகளைச் சரிசெய்வதற்குப்  பதிலாக, கோர்பசேவ் தலைமையானது தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தையும், ஜனநாயக மத்தியத்துவத்தையும் கைவிடும் நிலைக்குச் சென்றது. நடைமுறையில் அது புரட்சிகரமான கட்சியையே நிராயுதபாணியாக்கியது,  அவசியமான  திருத்தங்கள் மேற்கொள்வதைத் தடுத்தது. இவை அனைத்தும் சோசலிசத்தையே கைவிடும் நிலைக்கு இறுதியில் இட்டுச் சென்றது.
சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானம்:  சில குறைபாடுகள் காணப்பட்ட மூன்றாவதான பகுதி என்பது சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானமாகும். அக்டோபர் புரட்சி வெற்றிபெற்றபின் முதலில் அது தேர்ந்தெடுத்த பாதை தொழிலாளர்-விவசாயிக் கூட்டணியின் அடிப்படையில் வெற்றிகரமாக ஜனநாயகப் புரட்சியை நிறுவியதாகும். இதுவே புதிய சவால்களை எதிர்கொண்டது.  ஜனநாயகப் புரட்சியிலிருந்து சோசலிஸ்ட் புரட்சிக்குத் மாறுவதற்கான இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் தேவைப்பட்டது, எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதார அடிப்படையில் சொத்து உறவுகளில் ஒரு புரட்சிகரமான மாற்றம் நிறுவ வேண்டியிருந்தது.  தொழிலாளி – விவசாயிக் கூட்டணிதான் ஜனநாயகப் புரட்சிக்கான முதுகெலும்பு என்கிற உண்மை, விவசாயத்தில் சொத்து உறவுகளில் மாற்றம் ஏற்பட்டது என்பது விவசாயிகளில் சில பிரிவினரது அந்தஸ்தைக் கடுமையாகப் பாதித்தது என்று பொருளாகும். இவர்கள்தான் ஜனநாயகப் புரட்சியை எய்துவதற்குத் தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டாளியாக இருந்தவர்கள். உள்நாட்டு யுத்தம் மற்றும் சோவியத் யூனியன் முதலாளித்துவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இந்த சிக்கலான பிரச்சனை மேலும் சிக்கலானது.  ஆனாலும், சோசலிஸ்ட் அரசை நிலைநிறுத்துவதற்கும்,  சோசலிஸ்ட் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் கட்டி எழுப்புவதற்கும் அபரிமிதமான தொழில்மயம் அவசியமாக இருந்தது. ‘யுத்த கம்யூனிசம்’ (‘war communism’), ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ (new economic policy) காலங்களின்போது, தோழர் லெனின் இந்தப் பிரச்சனையை இறுகப்பற்றிக் கொண்டிருந்தார். 

தோழர் லெனின் முன்னதாகவே இறந்ததை அடுத்து, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியில் சோசலிஸ்ட் தொழில் மற்றும் விவசாயிகளின் விவசாயம் ஆகியவற்றுக்கிடையிலான உறவு குறித்து ஒரு விவாதம் எழுந்தது.   விவசாய உற்பத்தி அபரிமிதமாக இருந்ததன்  காரணமாக, அதன்மூலம் ஏற்பட்ட உபரியை தொழிற்துறை செயல்பாடுகளுக்கு எந்த அளவிற்குப் போடுவது என்பது தொடர்பாகவும், இதனை எப்படி தீர்மானிப்பது என்பது தொடர்பாகவும் விவாதங்கள் முன்னுக்கு வந்தன. தொழில்துறை நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கு விவசாய உற்பத்தியின் உபரியை வெகுவாகப் பயன்படுத்தப்பட வேண்டியிருந்தது. இதனை எப்படிச் செய்வது? இதில் பிரச்சனைகள் எழுந்தன. விவசாயத்துறையில் புதிதாக உருவான பணக்கார விவசாயிகள் (குலாக்குகள்) வர்க்கம் அக்டோபர் புரட்சிக்கு ஒரு வித்தியாசமான விதத்தில் அச்சுறுத்தலாக அமைந்தனர்.
எனினும், உலகம் முழுதும் சோவியத் யூனியனுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் தொடர்ந்து இருந்த சூழ்நிலையில், இப்பிரச்சனையை தோழர் ஸ்டாலின் மிகவும் வெற்றிகரமாக சமாளித்தார். அவ்வாறு சமாளிக்காமல் மட்டும் இருந்திருந்தால் சோவியத் யூனியன் நாஜிக்கள் சோவியத் யூனியன் மீது மேற்கொண்ட தாக்குதலை வெற்றிகரமானமுறையில் முறியடித்திருக்க முடியாது.  அப்போது தோழர் ஸ்டாலின் மக்களுக்கு விடுத்த அறைகூவல்களை நினைவுகூருங்கள்.  நாஜிக்களுக்கு எதிராகப் போர்முனையில் போராடுவதால் மட்டும் வென்றுவிடமுடியாது, மாறாக அதனை தொழிற்சாலைகளிலும்,  வயல்களிலும் நாம் வெற்றிபெறுவதன் மூலமே சாத்தியமாக்கிட முடியும்.  சோசலிசத்தைக் காப்பதற்காகவும், உலகை பாசிசத்திலிருந்து காப்பதற்காகவும், போர்முனையில் சோவியத் செஞ்சேனை வீரஞ்செறிந்த முறையில் போராடுவதற்கு, எவ்விதத் தொய்வுமின்றி அவர்களின் தேவைகள் எவ்விதத் தொய்வுமின்றி பூர்த்தி செய்யப்பட்டதே அடிப்படைக் காரணமாகும்.
ஆனால் "சந்தைப் பொருளாதாரம் என்கிற முதலாளிகளின் கடவுள்", செல்வாக்கு செலுத்தியதன் காரணமாகவும், இத்தகைய சோசலிஸ்ட் பொருளாதார அடித்தளங்களை,  கோர்பசேவ் படிப்படியாகக் கைவிட்டதன் காரணமாக, சோசலிசமே கைவிடப்படக்கூடிய நிலைக்கு கொண்டுசென்றது.
தத்துவார்த்த உணர்வினை உதாசீனம் செய்தல் (Neglect of Ideological Consciousness):  அடுத்து மாபெரும் குறைபாடு காணப்பட்ட பகுதி, மக்களின் கூட்டு தத்துவார்த்த உணர்வினை (collective ideological consciousness of the people) வலுப்படுத்தத் தவறியமையாகும்.  மக்களிடம் இத்தகைய கூட்டு தத்துவார்த்த உணர்வு உயர்ந்தோங்கி இருப்பதன்மூலமாகத்தான் சோசலிசம் நிலைத்து நிற்கமுடியும் மற்றும் அதனை மேலும் வளர்த்தெடுக்க முடியும். இதனை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த உறுதிப்பாடு இல்லாமல் மேற்கொண்டிட முடியாது.  சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசின் திருத்தல்வாதி திரிபுக்கு (revisionist deviation)ப் பின்னர் இது மிகப்பெரிய ஆபத்தாக (casualty-ஆக) மாறியது.  
இக்குறைபாடுகளின் காரணமாக, சோவியத்  யூனியனிலும் இதர சோசலிச நாடுகள் பலவற்றிலும் எதிர்ப்புரட்சி சக்திகள் முன்னுக்கு வரக்கூடிய நிலை ஏற்பட்டு, சோசலிசம் கைவிடப்பட்டது.
இவ்வாறு இந்நாடுகளில் சோசலிசம் கைவிடப்பட்டதற்கு, மார்க்சிசம்-லெனினிசத்தின் அடிப்படைக் கொள்கைகள் காரணமல்ல. மாறாக, மார்க்சியம்-லெனினியத்தின் அறிவியல் மேற்றும் புரட்சிகர சாராம்சத்திலிருந்து நழுவிச் சென்றதே காரணமாகும்.  உலக முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் குறித்து சரியற்ற மதிப்பீடுகளும் காரணமாகும். மார்க்சியத்தின் ஆக்கபூர்வ அறிவியலை வறட்டுத் தனமான முறையில் வியாக்கியானம் செய்ததும் காரணமாகும். மேலும் சோசலிசக் கட்டுமானத்தின்போது மேலே கூறியவாறு மேற்கொண்ட குறைபாடுகளும் காரணமாகும்.
நடப்பு முதலாளித்துவ நெருக்கடி – சோசலிச மாற்று
மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட இன்றைக்கும் ஒரே வழி, சோசலிசம்தான்.  இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடியின் இன்றைய நிலைமைகளிலிருந்து மீள்வதற்கும் ஒரே மாற்று சோசலிசம்தான்.  2008இல் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்திலிருந்தே, உலக முதலாளித்துவம் ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடி என்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது.  நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக முதலாளித்துவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதனை மேலும் ஆழமான முறையில் புதிய நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் மீது பொருளாதாரச் சுமைகளை ஏற்றுவதன் மூலம் இதனை நன்கு உணர முடியும். இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்  மேலும் அதிகரித்திருக்கின்றன.  முதலாளித்துவ அமைப்பின்கீழ் இருந்துகொண்டு கொண்டுவரப்படுகிற எந்தவொரு சீர்திருத்தமும் மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட முடியாது. சோசலிசம் என்கிற அரசியல் மாற்று ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும். சுரண்டலிலிருந்து மனிதகுலத்தை விடுவித்திட வேண்டுமானால், மனிதகுலத்தின்மீது முதலாளித்துவத்தால் ஏவப்பட்டுள்ள கொடுங்கோன்மையாட்சிக்க எதிராக சோசலிசத்திற்கான அரசியல் மாற்று தன் தாக்குதலை உக்கிரப்படுத்திட வேண்டும்.
முதலாளித்துவத்தின் மீதான நெருக்கடி எவ்வளவுதான்  உக்கிரமானதாக இருந்தபோதிலும், நாம் முன்பே பலமுறை குறிப்பிட்டிருப்பதைப்போல, எந்தக் காலத்திலும் அது தானாக வீழ்ந்துவிடாது. முதலாளித்துவத்திற்கு சவால் விடக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் மாற்று உருவாகாதவரை, மனிதகுலத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்துவதன் மூலம் முதலாளித்துவம் எப்படியாவது தன்னைத் தக்கவைத்துக் கொண்டுதான்  இருக்கும். எனவே, சோசலிஸ்ட் அரசியல் மாற்று அதனை எதிர்கொள்ளக் கூடிய விதத்தில் வெகுவாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தற்போதைய முதலாளித்துவத் தாக்குதல்களுக்கு எதிராக உலகம் முழுதும் மக்கள் மத்தியில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிற போதிலும்,   இன்றையநிலையில் இவை அனைத்தும் தற்காப்புநிலையில்தான் இருந்து வருகின்றன.  தற்காப்புநிலையில்தான் என்று ஏன் கூறுகிறேன் என்றால், மக்கள் தங்கள் போராட்டங்களின் மூலமாகத் தாங்கள் இதுநாள்வரை பெற்றிருந்த ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்வாதார நிலைமைகள் பறிக்கப்படும்போது அவற்றைத் தக்க வைத்துக்கொள்ளக்கூடிய விதத்தில்தான் இன்றைய போராட்டங்கள் இருந்துவருகின்றன.  இத்தகு போராட்டங்கள் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக தாக்குதலைத் தொடுக்கக்கூடிய அளவிற்கு அதிகரித்திட வேண்டும். இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 20ஆவது கட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்னைகள் மீதான தீர்மானத்தில் அலசி ஆராய்ந்திருப்பதைப்போல, லெனினிஸ்ட் அகநிலைக் காரணியை வலுப்படுத்திட வேண்டும். அதாவது, மக்களின் கிளர்ச்சிகள் மற்றும் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு புரட்சிக் கட்சியின் வல்லமையை வலுப்படுத்திட வேண்டும்.
இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப்பணியைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறது. நமது கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடும், ஸ்தாபனத்தின் மீதான பிளீனமும் இந்தியாவின் நிலைமைகளில் அகக்காரணியை (கட்சியை) வலுப்படுத்தும் குறிக்கோளை எய்தக்கூடிய விதத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.
அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டங்கள்
அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்றைய தினம் தன் நிலையை சர்வதேச அளவில் வலுவாக்கிக்கொண்டுள்ள நிலையில், தன்னுடைய உலக அளவிலான மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்காக மூன்று முக்கிய குறிக்கோள்களை எய்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
முதலாவதாக அது இப்போது மீதம் இருந்துவரும் சோசலிஸ்ட் நாடுகளைக் கலைத்திட விரும்புகிறது. இரண்டாவதாக,  அணிசேரா இயக்கத்தின்கீழ் முக்கியமாக இருந்த  மூன்றாம் உலக நாடுகளை வலுவிழக்கச்செய்வதன்மூலம் எதற்கும் இலாயக் கற்றவைகளாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இறுதியாக, உலகத்தின்மீது பொதுவாகவும், குறிப்பாகத் தனக்குப் போட்டியாக வருபவர்கள் யார் என்று கருதுகிறதோ அவர்களை அழித்து ஒழித்து, தன்னுடைய ராணுவ மற்றும் பொருளாதார மேன்மையை நிலைநிறுத்திட முயற்சிக்கிறது. 
ஏகாதிபத்தியத்தின் ஒருதுருவ உலகக் கோட்பாட்டைத் திணிக்கும் முயற்சிக்கு எதிராக வலுவானத் தத்துவார்த்த தாக்குதலால் வெற்றிபெற முடியவில்லை.  ஏகாதிபத்தியம், ஜனநாயகத்தை சுதந்திர சந்தையுடன் சமமாக்கப் பார்க்கிறது. இத்தகைய நிலைப்பாட்டுடன்,  தன்னுடைய மேலாதிக்கத்தையும் மற்றும் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ‘சுதந்திர சந்தைகளை’த் திணிப்பதை எதிர்த்திடும் ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல்ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தலையிடுகிறது.
ஏகாதிபத்தியம், ‘மனித உரிமைகள்’ மற்றும் ‘மண்ணின் மாண்புகள்’ ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கிறோம் என்ற பெயரில் சுயேச்சையான இறையாண்மை நாடுகளுக்கு எதிராக ராணுவரீதியாகத் தலையிடுகிறது. இவ்வாறு ராணுவத் தலையீடுகளின் மூலமடாக அப்பட்டமாக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுவருகிறது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வளர்ந்துவந்த முதலாளிவர்க்கம் தங்கள் வர்க்க ஆட்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, தேசிய இறையாண்மையை மிகவும் புனிதமானதாக உயர்த்திப்பிடித்தது. இன்றையதினம், ஏகாதிபத்தியம், ‘மனித உரிமைகளை’ப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அந்த நாடுகளின் தேசிய இறையாண்மையை மறுதலித்து, ராணுவ ரீதியாகத் தலையிட்டுக் கொண்டிருக்கிறது.
ஏகாதிபத்தியம், வெறித்தனமாக கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. கம்யூனிசத்தை, சர்வாதிகாரத்துடனும் பாசிசத்துடனும் சமப்படுத்திக் கூறிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் கம்யூனிசத்தை பாசிசத்துடன் இணைத்து சமப்படுத்தி, அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று சட்டங்களை இயற்றி இருக்கிறது.  செக் குடியரசு, போலந்து போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கம்யூனிச அடையாளங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் சட்டபூர்வமாகத் தடை விதித்திருக்கின்றன.
கடந்த இருபதாண்டுகளில் இந்தப் போக்குகள் மேலும் உக்கிரமடைந்திருக்கின்றன. சோவியத் யூனியன் தகர்ந்ததற்குப்பின்னர் மார்க்சியத்தை மக்கள் மத்தியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் அரங்கேறத் தொடங்கி இருக்கின்றன. எனவேதான் மார்க்சியத்தைப் பல்வேறுவிதமாக திரித்திடும் சித்தாந்தங்கள் அறிவுஜீவிகள் மத்தியில் வலம் வருவது வாடிக்கையாகிவிட்டன. இவற்றின்மூலம் மக்களைக் குழப்பிடும் பணி வெகுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.
பின்-நவீனத்துவம் (Post-Modernism): ஏகாதிபத்தியமும், உலக நிதி மூலதனமும் எண்ணற்ற மார்க்சிஸ்ட் எதிர்ப்பு சித்தாந்தங்களை உருவாக்கி வெளித்தள்ளிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம் அனைத்து முற்போக்கு சித்தாந்தங்களையும் மறுதலித்திட முனைகின்றன.  வர்க்கப் போராட்டம் மறைந்துவிட்டது, தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் பங்களிப்பு மறுதலிக்கப்பட்டுவிட்டது போன்ற சிந்தனைகள் முதலாளித்துவ சித்தாந்தக் கொட்டடியிலிருந்து வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் இப்போது புதிதாகச் சேர்ந்துள்ள சித்தாந்தம்தான், பின்-நவீனத்துவம் என்பதாகும்.
பின்-நவீனத்துவம் என்பது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலாளித்துவம் வெற்றிபெற்று, சோசலிசத்திற்குப் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உருவான முதலாளித்துவ தத்துவார்த்தக் கண்ணோட்டமாகும்.  இத்தத்துவமானது மார்க்சியம் உட்பட எந்தவொரு தத்துவமோ, அரசியலோ உலகளாவிய அளவில் இருந்திடமுடியாது என்று நிராகரிக்கிறது.  பின்-நவீனத்துவம் என்பது முதலாளித்துவத்தையோ அல்லது சோசலிசத்தையோ ஒரு கட்டமைப்பு (a structure) அல்லது ஒரு முறை (a system) என்கிற விதத்தில் அங்கீகரித்திடவில்லை. இவ்வாறு, இது, உலக நிதி மூலதனத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு தத்துவமாகும். ஏனெனில் இது வர்க்கங்கள் இருப்பதை மறுதலிக்கிறது. எனவே, வர்க்கம் மற்றும் வர்க்கப் போராட்டம் என்பனவற்றையும் மறுதலிக்கிறது. மேலும் இது, அடையாள அரசியலை உந்தித்தள்ளுவதற்கும், மக்களை அரசியலற்றவர்களாக ஆக்குவதற்கும் மிகவும் பொருத்தமான ஒரு தத்துவமுமாகும்.
கலாச்சாரா மேலாதிக்கம் (Cultural Hegemony): இந்தக் கால கட்டத்தில் ஏகாதிபத்தியமும், நவீன தாராளமயமும்  தங்களுடைய கலாச்சார மேலாதிக்கத்தை வலுவாக நிறுவியுள்ளன.  இவை மக்களைத் தங்களுடைய தகவல் (Information), தொடர்பு (Communication) மற்றும் பொழுதுபோக்கு (Entertainment) என்கிற மூன்று ஐசிஇ (ICE) ஆகியவற்றைத் தங்களுடைய மெகா கார்ப்பரேஷன்கள் மூலமாக மக்களிடையே கொண்டுசெல்வதில் மூர்க்கத்தனமாக இறங்கியிருக்கின்றன.  தங்களுடைய கார்ப்பரேட் ஊடகங்கள் மூலமாக செய்திகளைத் திரித்துக்கூறுதல் என்பதும், மக்களிடம் கூறப்படும் தகவல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதும் இவற்றின்  ஏகபோகமாக மாறியிருக்கின்றன.  கலாச்சாரத்தை வணிகமயமாக்குவது உலகமயத்தின் ஒரு பகுதியாகும்.
வர்க்க மேலாதிக்கத்தின் காரணமாக, உலகமயக் கலாச்சாரம் மக்களை தங்களுடைய எதார்த்தமான  வாழ்க்கை நிலைமைகளிலிருந்து கத்தரித்துவிட முயல்கிறது. இவர்களின் கலாச்சாரம் என்பது அழகியலை மேம்படச் செய்வதற்கானது அல்ல, மாறாக மக்கள் மத்தியில் காணப்படும் வறுமை மற்றும் ஏழ்மை  ஆகியவற்றால் உண்டாகும் பிரச்சனைகளிலிருந்து அவர்களை திசைதிருப்புவதற்கானதாகும்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை ஏகாதிபத்தியம் தன் ஆளுகையை அதிகரித்துக் கொள்வதற்கும், மக்கள் இயக்கங்களை நசுக்குவதற்கும் நன்கு பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது.
பின்-உண்மை (Post-Truth): மார்க்சியத்திற்கும், சோசலிசத்திற்கும் எதிராக, முதலாளித்துவ சித்தாந்தக் கொட்டடியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சொற்றொடர்தான், பின்-உண்மை (Post-Truth) என்பதாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தன்னுடைய 2016ஆம் ஆண்டின்  அகராதியில் ‘இந்த ஆண்டின் புதிய வார்த்தை’ என இதனைக் குறிப்பிட்டு, இதன் பொருளை வரையறுக்கும்போது, உணர்ச்சிக்கும் தனிப்பட்ட நம்பிக்கை அடிப்படையில் எழுப்பப்படும் வேண்டுகோள் அளவிற்கு  மக்களிடம் பொதுக்கருத்தை உருவாக்கக்கூடிய அளவிற்கு செல்வாக்கு செலுத்தாத சொற்றொடர் என்று கூறுகிறது.
டொனால்டு டரம்ப் மற்றம் நரேந்திர மோடி அரசோச்சும் இக்காலத்தில் இதனைப் புரிந்துகொள்வது எளிதாகும். ஈராக்கில் யுத்தத்தைத் தொடங்குவதற்காக அமெரிக்க புஷ் நிர்வாகம் அவிழ்த்துவிட்ட பொய்கள் மற்றும் ஏகாதிபத்திய அரசியல் மற்றம் ராணுவ ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்திட அவிழ்த்துவிடப்படும் பொய்களும் இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இந்தியாவிலும் இதேபோன்றே முஸ்லீம்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக பொய்ப்பிரச்சாரங்கள் அவிழ்த்துவிடப்படுவதிலிருந்து இதனை நோம்  அறிந்துகொள்ள முடியும்.  மக்கள் மத்தியில் மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதற்காக தலித்துகள் மற்றம் முஸ்லீம்கள் மீது பசுப்பாதுகாப்புப் படை போன்ற தனியார் ராணுவத்தினர் கொலைபாதகத் தாக்குதல்கள் தொடுப்பதிலிருந்து இதனைத் தெரிந்துகொள்ள முடியும்.
பின்-உண்மை என்கிற சொற்றொடரும் மனிதகுல வரலாற்றில் புதிதான ஒன்றல்ல. ஹிட்லரின் கொள்கைப் பரப்பு அமைச்சராக இருந்த கோயபல்ஸ், "ஒரு பெரிய பொய்யைக் கூறுங்கள், திருப்பித் திருப்பி  அதனைக் கூறுங்கள், அது உண்மையாகிவிடும்," என்று கூறிவந்தான் அல்லவா?  அதுதான் இது. இதுதான் அன்றைக்கு நாஜி பாசிஸ்ட்டுகளின் பிரச்சாரத்திற்கு ஆணிவேராக இருந்தது. இன்றைக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் இந்துத்துவா வெறியர்களுக்கும்  முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு ஹிட்லரின் பேச்சுகள் வானொலியில் ஒலிபரப்பப்படும் போது எப்படி மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டினார்கள் என்று ஒலிபரப்பப்பட்டதோ அதேபோன்றுதான் இன்றைக்கு மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியும் நடைபெற்றுக் கொண்டிதுருக்கிறது. எனவே, பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி என்பது புதிய உருவாக்கம் ஒன்றுமல்ல.
இவ்வாறு ‘பின்-உண்மை’ என்பதும் மக்களை தாங்கள் சுரண்டப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் எதிரான போராட்டங்களிலிருந்து திசைதிருப்புவதற்கான ஒன்றே தவிர, வேறல்ல.
மார்க்சியம் ஒரு வறட்டு சூத்திரம்  அல்ல. மாறாக, அது ஓர் ‘ஆக்கபூர்வமான அறிவியல்’ ஆகும். அது, "துல்லியமான நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வு செய்வதன்" அடிப்படையில் அமைந்த ஒன்று. மார்க்சியம், வரலாற்றைப் பொதுவாகவும், முதலாளித்துவத்தைக் குறிப்பாகவும் ஆய்வுசெய்திடும் ஓர் அணுகுமுறையாகும்.  மாமேதை மார்க்ஸ் அவர்களால் அளிக்கப்பட்டுள்ள இந்த அடித்தளத்தில் நின்றுகொண்டுதான், நாம் இன்றைய சூழ்நிலையைச் சரியான முறையில் புரிந்துகொண்டு, நம் தத்துவார்த்த சிந்தனையை வளர்த்துக்கொண்டு, எதிர்காலத்திற்கான நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம்.
இந்த அடிப்படையில் நான் சரியானமுறையில் நின்றுகொண்டு, வர்க்க ஒற்றுமையையும், தொழிலாளர் ஒற்றுமையையும்  சீர்குலைக்கும் விதத்தில்,  நமக்கு எதிராகத் தற்போதும், எதிர்காலத்திலும் கட்டவிழ்த்துவிடப்படும் மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தங்களை முறியடித்திட வேண்டியது அவசியமாகும்.
இந்திய நிலைமைகளில் சோசலிசம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய 20ஆவது கட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்னைகள் தொடர்பான தீர்மானத்தில், இந்தியாவில் சோசலிசம் என்பதன் கருத்தாக்கம் என்ன என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் சோசலிசம் எப்படி இருக்கும் என்பதை,  இந்தியப்புரட்சியின் ஜனநாயகக் கட்டம் நிறைவடைந்தபின்புதான், அதாவது மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றிபெற்ற பின்னர்தான் கெட்டிப்படுத்திட முடியும்.
எனினும், சோசலிசத்தின்கீழ் இந்தியாவில் உள்ள மக்களுக்கு எவை எவை தேவை என்பதை நம்மால் எதிர்பார்த்திட முடியும். எனவே, இந்தியாவில் சோசலிசம் என்றால் அதன் பொருள் என்ன?
அதன்பொருள், அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு, முழு வேலைவாய்ப்பு,  அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி.
அதன் பொருள்,தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நலிந்த பிரிவினர் என அனைத்து மக்களுக்கும் வாழ்வாதாரநிலைமைகளை மேம்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக மேம்பாடு.
அதன்பொருள், மக்கள் அதிகாரமே உயர்வானது. ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் சமூகத்தின் அனைத்து அரசியல் மற்றும் சமூக ஒழுங்கிலும் பிரிக்கமுடியாதபடி பின்னிப்பிணைந்தவைகளாகும். முதலாளித்துவ ஜனநாயகத்தில் இதுபோன்ற உரிமைகள் தரப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் அவை மாயை. இவ்வுரிமைகளைப் பயன்படுத்தி பெரும்பாலான மக்களுக்கு அதற்கான வல்லமை கிடையாது. சோசலிசத்தின் கீழ், அனைத்து மக்களுக்கும் பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தி இருப்பதன் காரணமாக மனிதகுல வாழ்வின் தரம் உயர்ந்து, அங்கே சோசலிஸ்ட் ஜனநாயகத்தின் அடித்தளங்கள் செழுமையுடன் காணப்படும்.
அதன் பொருள், சாதி அமைப்புமுறை ஒழிக்கப்படுவதால் சாதி ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அனைத்து மொழிப்பிரிவினரும் சமமாக நடத்தப்படுவார்கள். அனைத்து மொழிகளும் சமமான முறையில் வளர்த்தெடுக்கப்படும். அனைத்து சிறுபான்மையினருக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் உண்மையான சமத்துவம் அளிக்கப்படும், பாலின ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
அதன் பொருள், சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டமைப்பு, சோசலிச உற்பத்திச் சாதனங்கள் மற்றும் மத்திய திட்டமிடல்  அடிப்படையில் அமைந்திடும்.  சந்தை சக்திகள், மத்திய திட்டமிடலின் வழிகாட்டுதலின்கீழ் இயங்கிடும். சொத்தின் அனைத்துவிதமான வடிவங்களும் இருக்கும் அதே சமயத்தில், உற்பத்திச் சாதனங்களின் சமூக உடைமையை தீர்மானகரமான வடிவமாக இருந்திடும். இவ்வாறு கூறுவதால் அது அரசின்கீழான பொதுத்துறை என்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பினைச் செய்திடும் அதே சமயத்தில், கூட்டு(collective) மேற்றும் கூட்டுறவு அமைப்புகள், அரசுக் கட்டப்பாட்டில் உள்ள பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் பொருளாதார வாழ்வாதாரங்களை இயக்கி முறைப்படுத்திடும்.
அக்டோபர் புரட்சி : உலகத்தை மாற்ற முடியும்
மாமேதை காரல் மார்க்ஸ் ஒரு சமயம் கூறிய பொருள்பொதிந்த வார்த்தைகள்: "தத்துவ ஞானிகள் உலகை பல்வேறு வழிகளில் வியாக்கியானம் மட்டுமே செய்திருக்கிறார்கள். பிரச்சனை என்னவெனில், அதனை மாற்றுவதே ஆகும்."  அக்டோபர் புரட்சி உலகை மாற்றுவது சாத்தியமே என்று உலகுக்கு காட்டியிருக்கிறது. அது இன்றைக்கும் பொருந்தக்கூடிய ஒன்றேயாகும்.  பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தபோதிலும், அக்டோபர் புரட்சி மற்றம் அதன் பங்களிப்புகள் மனிதகுல நாகரிகத்தை முன்னேற்றுவதற்கு இன்றளவும் உதவிக்கொண்டு இருக்கிறது. நம் புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுத்துச்சென்றிட வீர சகாப்தம் படைத்திட்ட அக்டோபர்புரட்சி தொடர்ந்து நமக்கு உத்வேகத்தை அளித்துவரும்.  அக்டோபர் புரட்சி உலகை மாற்றியதைப்போல, இந்தியப் புரட்சியும் இந்தியாவை மாற்றி அமைத்திடும். இதனை எதார்த்தமாக்கிடக்கூடிய விதத்தில் நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியதே இன்றைய தேவையாகும்.