இலக்கியா
Thursday, July 23, 2026
தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்
தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்
ஆசிரியர்: மூவலூர் இராமாமிர்தத்தம்மாள்
சில புத்தகங்கள் உலகின் சமூக-பொருளாதார-கலாச்சார அமைப்புகளையே மாற்றும். இதற்கு எடுத்துக்காட்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மூலதனம் மற்றும் சோவியத் இலக்கியங்கள் முதலானவை.
சில புத்தகங்கள், சமுதாய அமைப்பையே மாற்றும். இதற்கு உதாரணம் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், அவர் குடியரசு இதழில் எழுதிய கட்டுரைகள் முதலானவைகளாகும்.
சில புத்தகங்கள் படிப்போரின் எதிர்காலத் திசைவழியையே மாற்றி யமைத்திடும். இதற்கு உதாரணம், நினைவுகள் அழிவதில்லை, வீரம் விளைந்தது, தாய் முதலானவற்றைக் குறிப்பிடலாம்.
சில புத்தகங்கள் தாங்கள் தாங்கள் பிறந்த சமூகத்தின் காரணமாக, தாங்கள் அனுபவித்த சமூகக் கொடுமைகளை, வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததுடன் அதற்கெதிராகக் குரல் எழுப்பி, அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கைகள் எடுக்க தன் சமூகத்தில் பிறந்தவர்களையும், தங்கள் சமூகத்தின் பழக்க-வழக்கங்கள் இழிவு என்று கருதியவர்களையும் இணைத்து இயக்கம் காண வைப்பதும் உண்டு. இதற்கு உதாரணங்களாக டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நூல்களைக் குறிப்பிடலாம்.
இதே திசைவழியில் தோழர் மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் எழுதிய தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்னும் நூலும் ஒன்று என்று சொன்னால் அது மிகையல்ல, உண்மை.
இளைய சமுதாயத்திற்கு வரலாறு மிகவும் முக்கியம். இந்திய சமூக அமைப்பில் வர்ணாசிரம (அ)தர்மத்தின் கொடுங்கோன்மை சென்ற தலைமையினர் மத்தியில் எந்த அளவிற்குக் கொடூரமாக இருந்தது என்பது இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு அவ்வளவாகத் தெரியாது. இதன் காரணமாகத்தான் ஒரு காலத்தில் கீழத் தஞ்சை மாவட்டத்தில் தங்கள் இழிவினை ஒழித்துக் கட்டுவதற்கு செங்கொடி இயக்கம் எந்த அளவிற்கு முன்கை எடுத்துப் போராடியது என்பதை வரலாற்றுரீதியாகத் தெரிந்துகொள்ளாத காரணத்தால்தான், தலித் இளைஞர்களில் பலர் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு எதிராகவே செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. அநேகமாக இவர்கள் பி.சீனிவாசராவ், பி.எஸ். தனுஷ்கோடி முதலானவர்களின் வரலாறுகளை அறிந்திருக்க மாட்டார்கள்.
அதேபோன்றே, தமிழகத்தில் ஒரு சாதியில் பிறந்த பெண்கள் மிகவும் இழிவான முறையில் வர்ணாச்ரம (அ)தர்மம் வலியுறுத்தி வந்ததையும் அதனை தந்தை பெரியார் தலைமையில், அந்த சாதியில் பிறந்த பெண்ணான மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், தன் இனப் பெண்களைத் திரட்டி, அக்கொடுமைக்கு எதிராகப் போராடிய வரலாறும் அந்த இனத்தில் பிறந்த பலருக்கே இன்றைக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. தமிழகத்தில்தான் தேவதாசி முறை முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட்டிருக்கிறது. நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இப்போதும் வெளிப்படையாகவும், ஆந்திராவில் இலைமறை காய்மறையாகவும் இருந்து வருவதாகவே அறிகிறோம்.
வர்ணாச்ரம (அ)தர்மம் மத்தியில் கோலோச்சிக்கொண்டிருக்கிற இத்தருணத்தில் நம் முன்னோர்கள் நடத்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் குறித்த நூல்களை இன்றைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டும். அத்தகைய நூல்களில் ஒன்றுதான் மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் எழுதிய “தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்” என்னும் நூலாகும்.
இந்நூல் அவர்களால் 1930களில் எழுதிப்பட்டு வெளியாகியிருக்கிறது. இதனை வெளிக்கொணர்வதற்காக அவர் எவ்வளவு கடினமானமுறையில் உழைத்திருக்கிறார் என்பதை இந்நூலின் முன்னுரையில் அவரும், அவருக்கு உதவியாக இருந்த பெரியோர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்நூல் குறித்து நான் சொல்வதைவிட இதனை வெளிக்கொரண காரணமாக இருந்த மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் தன்னுடைய என்னுரையில் கூறியுள்ளவற்றில் ஒருசிலவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதற்கிணங்க கதையிலிருந்து ஒரு சிறு பகுதியை மட்டும் இங்கே பதிவிடலாம் என விரும்புகிறேன்.
மூவலூர் இராமமிர்தத்தம்மாள், என்னுரையில் கூறியிருப்பதன் சாராம்சம் வருமாறு:
“தேவதாசி, தேவடியாள்! ஆஹா, என்ன திவ்வியமான திருப்பெயர்கள். தெய்வத்திற்குப் பக்தி சிரத்தையுடன் திருத்தொண்டு புரிபவளே, தேவதாசி. தேவடியாள், இந்தப் பெயர் காதில்பட்ட மாத்திரத்தில் நாம் என்ன நினைக்கிறோம்? குடிகெடுக்கும் விபசாரி என்ற நினைவைத் தவிர தெய்வத் திருத்தொண்டு புரியும் பக்த சிரோமணி என்ற நினைவு கனவிலும் வருவதில்லை.
தேவதாசி வேறு, மற்ற விலைமகளும் பரத்தையும் வேறு என்று வாதிடுகின்றவர்களும் இங்கே இருக்கிறார்கள். ஆனால் பண்டைக் காலந்தொட்டே, கோவில் குருக்கள்மாரும், அரசர்களும், செல்வர்களும் மற்றவர்களும் தெய்வத்தின் பேரால், கலையின் பேரால், போகத்தின் பேரால், குறிப்பிட்ட ஒரு பெண் சமூகத்தை விபச்சாரத்திற்கு உபயோகிக்க ஆக்கம் அளித்து வந்தார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பது எனது கெட்டியான அபிப்பிராயம். எனவே அந்த விபச்சாரக் கூட்டத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்துக் கொண்டு வாதித்துப் பெருமை பேசிக்கொண்டிருப்பது வீண் வேலையாகும்
தேவ தாசி முறையை ஒழிக்க வேண்டும், தெய்வங்களின் பேரால் பொட்டுக்கட்டும் அநாகரிக வழக்கத்தை ஒழித்துவிட வேண்டும் என்று டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் போன்ற சீர்திருத்தவாதிகள் சொன்னால் இப்பொழுதும் முட்டுக்கட்டை போடுகின்றவர்கள் யார் என்பதைக் கவனியுங்கள். வைதீகர் கூச்சல் ஒருபுறம் இருக்கட்டும், பெரிய பெரிய சட்ட நிபுணர்களான அரசியல் தலைவர்கள் – சமூகச் சீர்திருத்தத் தலைவர்கள் என்பவர்களே குறுக்கு விழுகிறார்கள். கும்பகோண சாஸ்திரிகளைக் காட்டிலும் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் “தேவதாசிகள் இருக்க வேண்டும், தேவதாசி முறையை ஒழிப்பது தெய்வ விரோதம், சட்டவிரோதம்” என்று கூச்சல் போட்டுப் பிரச்சாரம் செய்யத் தொடங்குகின்றார்கள். கிருஷ்ணய்யர்களோ “தேவதாசி முறையை ஒழிப்பது நமது புராண நாட்டியக்கலை – இசைக்கலைப் பொக்கிசங்களை ஒழிப்பதாகும்,” என்று கூச்சல் கிளப்புகிறார்கள். சாஸ்திரிகளோ, “தேவதாசி முறையை ஒழித்தால் சாஸ்திரம் போச்சு, நாத்திகம் ஆச்சு,” என்று தலைகளில் அடித்துக்கொள்கிறார்கள்.
இனி, தாசிகள் வீடுகளே மோட்சம் என்று கருதிக்கொண்டிருக்கும் ஜமீன்தார்கள், பிரபுக்கள் முதலியவர்களைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. தேவதாசி முறையை ஒழிப்பதற்கு எதிரிடையாகத் தங்களுடைய அதிகாரமும் செல்வமும் எவ்வளவு தூரம் பாயுமோ அவ்வளவு தூரம் உபயோகிக்கத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நமது நாட்டில் பெண்கள் தெய்வங்களாகப போற்றப்படுகிறார்கள் என்பது ஏமாற்றுப் பேச்சு. இந்நாட்டுப் பெண்கள் எல்லாத் துறையிலும் அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்குத் தெய்வங்களின் பேராலும் சாஸ்திரங்களின் பேராலும் ஒரு பெண் சமூகத்தை விபச்சாரத்திற்குத் தயாராக்கிக் கொண்ட பாதகம் செய்திருப்பதொன்றே போதிய சான்றாகும்.
அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் தலைவர்ககளாய் விளங்கிய தோழர்கள் ஈ.வெ. ராமசாமியார், திரு.வி.கலியாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்ற பிரமுகர்கள் தேவதாசி முறையை ஒழிப்பதில் ஒருவாறு அநுதாபங் காட்டினர். இந்தச் சமூகத்திலேயே பிறந்து படாத பாடெல்லாம் பட்டுத்தேர்ந்த எனக்கு எவ்வழியிலேனும் இவ்விபசாரக் கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் ஒழித்துவிட வேண்டும் என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு அந்தச் சந்தர்ப்பம் பெருந்துணையாக வந்து வாய்த்தது.
பொட்டறுப்புச் சங்கங்கள் கண்டு பிரச்சாரம் செய்யத் தொடங்கினேன். தேவதாசி சமூகத்திலேயே பலமான எதிர்ப்புக் கிளம்பியதோடு நான் மேலே குறிப்பிட்ட பெரிய தலைவர்கள் – சாஸ்திரிகள் – ஜமீன்தார்கள் – பிரபுக்கள் மாமாக்களின் எதிர்ப்புகளும் விரோதங்களும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கிளம்பத் தலைப்பட்டன. எனக்கும் என்னுடைய தோழர்களுக்கும் ஏற்பட்டன.
தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் என்னும் பெயரில் உள்ள இந்நாவல் புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்ததொன்றாகும்.”
அடுத்து, அன்றைய சமூகம் தேவதாசிகள் சமூகம் எப்படி இருந்தது என்பதை கதையின் தொடக்கத்திலேயே மிகவும் சிறப்பாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். அது என்ன என்று கூறி என் உரையை முடித்துக்கொள்கிறேன்.
“மைசூர் வித்வானுக்கு ரூபாய் 5000 கொடுத்துச் சங்கீதம் பயின்று பிரபலமடைந்திருக்கும் கமலாபுரம் போக சிந்தாமணியின் புத்திரிகளான காந்தா கானவதி சகோதரிகள் சங்கீதக் கச்சேரிகளுக்கு ஏக கிராக்கியாய் இருக்கிறது. பக்கத்து வீட்டுத் தாசிகளெல்லாம் பொறாமையால் புழுங்கி வேதனையடையும்படி காந்தா கானவதி வீட்டிற்குக் காரிலும் வண்டியிலும் கோச்சிலுமாகப் பல பிரபுக்கள் வருவதும், போவதும் சங்கீதம் கேட்பதுமாய் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது ஒரு நாள் தந்திச் சேவகன் ஒரு தந்தியைக் கொண்டுவந்து கொடுத்தான்.
போகசிந்தாமணி உடனே கருணாகரனைக் கூப்பிட்டு, “இந்தத் தந்தியை எடுத்துக்கொண்டு ஓட்டமாய் ஓடிப்போய் வக்கீல் சுந்தரம் ஐயரிடத்தில் காட்டி விவரம் தெரிந்து கொண்டுவா. அவரையும் தங்கச்சிகள் வரச்சொன்னதாகச் சொல்லிவிட்டு வா,” என்று கட்டளையிட்டாள். அக்கட்டளையைச் சிரமேல் தாங்கிய கருணாகரன் தந்தியை எடுத்துக்கொண்டு வக்கீல் வீட்டுக்கு ஓடினான். வீட்டைச் சமீபித்தவுடன் மரியாதையாய் அங்கவஸ்திரத்தைக் கட்கத்தில் இடுக்கிக்கொண்டு அடக்க ஒடுக்கமாகச் சென்றான்.
ஏதோ அன்றைக்கு வேண்டிய கேஸ் கட்டைப் படித்துக் கொண்டிருந்த வக்கீல் ஐயர் இவனைப் பார்த்ததும் அப்படியே நிறுத்திவிட்டு எழுந்து கருணாகரன் அருகே வந்து “வா அப்பா! கருணாகரா! என்ன விசேஷம்?” என்று கேட்டார். கருணாகரன், தன் தாயார் தந்தியைக் கொடுத்து விவரத்தைத் தெரிந்துவரச் சொல்லியதையும் அவரைக் கையோடு அழைத்துவரச் சொன்ன விவரத்தையும் தெரிவித்தான்.”
இதுதான் நாவலின் முதல் பக்கம் உள்ளவை. இந்த முதல் பக்கத்திலேயே மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் அன்றைய தினம் தேவதாசி குடும்பத்தில் ஒரே தாய் வயிற்றில் பிறந்த பெண்களின் நிலையையும், ஆண்களின் நிலையையும் தோலுரித்துக்காட்டியிருப்பார்.
சமூகத்தை மாற்ற நினைக்கும் ஒவ்வொருவரும், நம் கடந்தகால சமூகம் எப்படி இருந்தது என்கிற வரலாறை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நம் மூதாதையர்கள் எப்படி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு, போராடி ஓரளவுக்காவது சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள், இதனைத் தக்க வைத்துக்கொண்டு மேலும் முன்னேற வேண்டியது அவசியம் என்பதை உணர்வோம். இல்லையேல், இப்போது ஆட்சிபுரிவோர் சமூகத்தை 150 ஆண்டுகளுக்குப் பின்னேயிருந்தது போல் மாற்றுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நம்மை அறியாமலேயே நாம் துணை போய்விடுவோம்.
எனவே, இதுபோன்று வரலாறுகளைக் கோடிட்டுக் காட்டும் நாவல்களை அவசியம் மீள்வாசிப்புச் செய்திடுவோம்.
Monday, August 18, 2025
உயர் கல்வியில் தீவிரமடையும் இந்துத்துவாமயம்
உயர் கல்வியில் தீவிரமடையும் இந்துத்துவாமயம்
-ஜி.ராமகிருஷ்ணன்
தமிழில்: ச.வீரமணி
இந்தியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சியைத் தொடர விரும்பும் எவரொருவரும், 2024-25 வரை இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ‘உதவிப் பேராசிரியர்’ மற்றும் ‘ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர்’ பதவிகளுக்கு இந்திய குடிமக்களின் தகுதியைத் தீர் மானிக்க நடத்தப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு-தேசியத் தகுதித் தேர்வில் (UGC-NET (Nati onal Eligibility Test) பங்கேற்க வேண்டும். 2024ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு - ஆராய்ச்சி திட்டங்களின் தரத்தை “தரப்படுத்துதல்” மற்றும் “மேம்படுத்துதல்” என்ற போர்வையில் - தேசியத் தகுதித் தேர்வு மதிப்பெண்களை முனைவர் என்னும் பிஎச்டி (PhD) பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஒரு முக்கிய அளவுகோலாக மாற்றியது.
மாநில பல்கலைக்கழகங்களின் சுயாட்சி பறிப்பு
மாநில அரசுகளின் உயர்கல்வித் துறைகளால் நிர்வகிக்கப்பட்டு, பொது நிதியுதவியுடன் இயங்கும் அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி கள், தங்கள் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி களில் பிஎச்டி மாணவர்களைச் சேர்ப்பதற்கு, தங்க ளின் சொந்த அளவுகோல்களையும் நடைமுறை களையும் பின்பற்றி வந்தன. நாட்டில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் நிறுவனங்களைவிட மாநில அரசுகள் நடத்திடும் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மிக அதிகமாகும். எனினும், இப்போது புதிதாக வெளியிடப் பட்டுள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆணை, மாநில அளவிலான நிறுவனங்களும் படிப் படியாக தேசியத் தகுதித் தேர்வு மதிப்பெண்களை தங்கள் சேர்க்கை செயல்முறைகளில் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளது. இத்த கைய தீவிர மையப்படுத்தல் ஏழை மற்றும் பின் தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை, குறிப்பாக தலித்/பழங்குடியின மாணவர்களை, ஆராய்ச்சிப் படிப்பைத் தொடருவதைக் கட்டுப் படுத்திடும்.
சேதுபந்த வித்வான் யோஜனா - இரட்டை நிலைப்பாடு
ஒரு பக்கத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில், ஒன்றிய அரசாங்கம் பிஎச்டி சேர்க்கைக்குக்கூட தேசியத் தகுதித் தேர்வை கட்டாயமாக்குகிறது. மறுபக்கத்தில் ஐ.ஐ.டி.கள் போன்ற கல்வி நிறுவனங்களில் பெருமளவில் விதி விலக்குகளை வாரி வழங்கியிருக்கிறது. சேதுபந்த வித்வான் யோஜனா (Setubandha Vidwan Yojana) என்னும் திட்டத்தின்கீழ் பாரம்பரிய குருகுலங்களில் சமஸ்கிருதம் படித்த மாணவர்களு க்கு கூட்டு நுழைவுத் தேர்வு (JEE-Joint Entrance Examination) மதிப்பெண்கள் தேவையில்லை என்று கூறியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மேற்கண்ட குருகுலங்களில் இருந்து வரும் மாண வர்களுக்கு அனைத்து விதமான நிதிஉதவியும் தாராளமாக வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதாவது, முறையான கல்விப் பட்டங்களைப் பெறாத மாணவர்கள் கூட, அங்கீகரிக்கப்பட்ட தகுதி களைப் பெறவும், முதன்மையான ஐ.ஐ.டி.களில் ஆராய்ச்சிப்படிப்புக்காக தாராளமாக கல்வி உத வித்தொகைகளைப் பெறவும் வாய்ப்பளிக்கிறது, இது ‘மாணவர் மேம்பாட்டுத் திட்டம்’ எனக் கூறப் பட்டுள்ளது.
திட்டத்தின் விரிவான அம்சங்கள்
ஜூலை 29 தேதியிட்ட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் வந்துள்ள தகவல்களின்படி, இந்தத் திட்டம், “கல்வி அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டு, மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் ‘இந்திய அறிவு அமைப்பு’ (Indian Knowle dge System) என்னும் பிரிவால் செயல்படுத்தப்படு கிறது. இது ஆயுர்வேதம் முதல் அறிவாற்றல் அறி வியல் (cognitive science) வரை, கட்டடக்கலை முதல் அரசியல் கோட்பாடு வரை, இலக்கணம் முதல் உத்தி சார் ஆய்வுகள் (strategic studies) வரை, நிகழ்த்துக் கலைகள் (performing arts) முதல் கணிதம், இயற்பியல் மற்றும் சுகாதார அறிவியல் வரை, என சுமார் 18 இடைநிலைத் துறைகளுக்கு மாதத்திற்கு 65 ஆயிரம் ரூபாய் வரை ஆய்வுதவித் தொகை (fellowship) வழங்குகிறது.
தரநிலைகளில் முரண்பாடு
ஆராய்ச்சிப் படிப்புகளில் சேருவதற்கான அடிப்ப டைத் தகுதி, 10+2+3+2 ஆண்டுகள் பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் உயர்கல்வி ஆகும். மேலும் இந்த 17 ஆண்டு கால கடுமையான அறிவியல் படிப்புக ளுக்கு மேல், ஆராய்ச்சியில் தரத்தை தரப்படுத்துவ தற்கு தேசியத் தகுதித் தேர்வின் மதிப்பெண்களை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியது. இவ்வாறு கட்டாயமாக்கிய இதே ஒன்றிய அரசாங் கம்தான் இப்போது, அங்கீகரிக்கப்பட்ட குரு குலத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் படித்து, சாஸ்திரங்கள் அல்லது பாரம்பரிய அறிவில் சிறந்து விளங்கினாலே, அவர்களும் ஆராய்ச்சிப் படிப்புக ளில் சேர அவை போதுமானது என்று கூறுகிறது.
சாதிய அரசியலின் புதிய முகம்
பிஎச்டி சேர்க்கைக்கு தேசியத் தகுதித் தேர்வைக் கட்டாயப்படுத்தியிருப்பதன் மூலம் படிப்பைத் தொடர முடியாமல் யார் வெளியேறுவார்கள்? சேது பந்த வித்வான் யோஜனா என்னும் வியக்க வைக்கும் விசித்திரமான திட்டத்தின் மூலம் யார் பயன் அடைவார்கள்? சாதி, வர்ணாஸ்ரம அமைப்பு முறையின் கீழ் பிளவுபட்டுள்ள சமூகத்தில் ஒன்றிய அரசாங்கத்தின் இவ்விருவகை அணுகுமுறையானது உண்மையில் ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டத்திற்கே பங்களிப்பினைச் செய்துள்ளது. தேசியத் தகுதித் தேர்வு கொண்டுவந்ததன் மூலம் சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருந்த அடிமட்ட அடுக்கில் சிக்கித் தவிப்ப வர்களிலிருந்து வரும் மாணவர்கள், ஆராய்ச்சிப் படிப்பில் சேர்வது என்பது மிகவும் கடினமாகும். அதா வது இந்த தேசியத் தகுதித் தேர்வு ஏழை மற்றும் விளிம்புநிலை பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை வடிகட்டிவிடும். அதே சமயத்தில், சமூகத்தின் உயர்மட்டப் பிரிவு களைச் சேர்ந்த மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்வதற்கான வாய்ப்புகளை தேசியத் தகுதித் தேர்வு அதிகரிக்கிறது. சேதுபந்த வித்வான் யோ ஜனா, வேத சாஸ்திரங்களின் மீது அதிகாரம் கொண்ட தாகக் கூறும் ஒரு குறிப்பிட்ட - சமஸ்கிருதம் தெரிந்த பிரிவினருக்கு, ஐ.ஐ.டி.களில் அவர்கள் விரும்பும் ஆராய்ச்சிப் படிப்புக்கான வாய்ப்புகளை தங்கத் தட்டில் வைத்து வழங்கி இருக்கிறது. அந்தப் பிரிவு யார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.
குருகுலக் கற்றல் முறையின் வரலாற்றுப் பின்னணி
குருகுலக் கற்றல் முறை என்பது வேத காலத்தில், அதாவது கி.மு.1500 வாக்கில் தோன்றியதாகக் கூறப்படும் ஒரு பண்டைய கற்றல் முறையாகும். இது வாய்மொழி மரபை அடிப்படையாகக் கொண்டது. மனப்பாடம் செய்வது, பாராயணம் செய்வது போன்ற வற்றில் கவனம் செலுத்தும் முறையாகும். இது பிராம ணரல்லாதவர்களை கல்வி கற்பதிலிருந்து வெளிப்படையாக விலக்கி வைத்தது. சாதி மற்றும் வர்ணாஸ்ரம அமைப்பின் கொடுமைகளுக்கு ஏகலைவன் -துரோணாச்சாரியார் கதை நம்முன் உள்ள ஒரு வலுவான சான்றாகும்.
குருகுலக் கல்வி மற்றும் அறிவியல் தரத்தின் சீரழிவு
குருகுலப் படிப்பிற்கு மொழி, இலக்கணம், சில அறிவியல் மற்றும் கணிதம் போன்றவற்றை உள்ள டக்கிய பல்வேறு பாடங்கள் இருப்பதாகக் கூறப் பட்டாலும், இவற்றுடன் மந்திரங்களை மனப்பாடம் செய்தல், மந்திரங்களை உச்சரித்தல் போன்றவை யும் குருகுலங்களில் கற்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த மந்திரங்களை மனப்பாடம் செய்து குரு குலத்தில் ‘கற்பவர்களை’ ஐ.ஐ.டி.களின் ஆராய்ச்சிப் பகுதிகளுக்குள் அனுமதிப்பது என்பதன் பொருள், கல்வி மற்றும் ஆராய்ச்சியில், குறிப்பாக பொறியி யல் மற்றும் தொழில்நுட்பத்தில், ஐ.ஐ.டி.கள் இது வரை அடைந்துள்ள உலகளாவிய தரத்தை இழக்கச் செய்வதற்கே இட்டுச்செல்லும். இது இந்தியாவின் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மனித மூலதனத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திடும். இது நாட்டின் தொழில் துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்திடும்.
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை
நமது இந்திய அரசமைப்புச்சட்டம், ஒவ்வொரு குடிமகனின் அறிவியல் மனப்பான்மையையும் வளர்ப்பதை அடிப்படைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 51A(h)-ஆவது பிரிவு, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் “அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், விசாரணை மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கட்டளையிடுகிறது. இந்த ஆணை பகுத்தறிவு சிந்தனை, விமர்சன ரீதியான விசாரணை (critical inquiry) மற்றும் அறிவியல் முறைகள் மூலம் அறிவியல் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது.
ஆர்.எஸ்.எஸ்.சின் இந்திய அறிவு அமைப்பு
எனினும், ஆர்.எஸ்.எஸ்./பாஜக தன்னுடைய 2020 தேசியக் கல்விக் கொள்கை மூலமாக தற்போதுள்ள அறிவியல் அமைப்பு முறையை அரித்து வீழ்த்தி விட்டு, இந்திய அறிவு அமைப்புகள் மூலம் தங்கள் மனுவாத சமூகத்தை, பகுத்தறிவற்ற மற்றும் சமத்து வமற்ற சமூகத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் நூறாண்டு கால கனவாகும். மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பல்க லைக்கழகம், தெற்காசியாவின் முதல் மகளிர் பல்க லைக்கழகம் என்று தன்னைக் கூறிக் கொள்கிறது. இது 1916இல் நிறுவப்பட்டது. இது 2020 தேசியக் கல்விக் கொள்கையின்படி “இந்திய அறிவு முறை யின் ஆரம்பம்” என்ற இளங்கலைப் பாடத்திற்கான பாடத்திட்டத்தை வகுத்துள்ளது. வேத தர்மம் மற்றும் ஷத் தரிசனம் (இந்து மதத்திற்குள் இந்திய தத்து வத்தின் ஆறு மரபுவழி பள்ளிகள்), வாஸ்து-வித்யா ஆகியவை இந்தப் பாடத்திட்டத்தில் பொதிந்துள்ள கற்றல் பாடங்கள் ஆகும்.
எதிர்காலத்தின் அபாயகரமான திசை
நமது கல்வி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவ னங்களில் ‘இந்திய அறிவு அமைப்புகளை’ அனு மதிப்போமானால், எதிர்காலத்தில் நமக்கு என்ன காத்திருக்கின்றன என்பதை இவை காட்டுகின்றன. உயர்கல்வி பாடத்திட்டத்தில் “இந்திய அறிவு அமைப்புகளை” இணைப்பதற்கான வழிகாட்டுதல் கள் 2023 ஜூனில் வெளியிடப்பட்டன. இளநிலை அல்லது முதுநிலை திட்டத்தில் சேரும் ஒவ்வொரு மாணவரும் மொத்த கிரெடிட்டுகளில் குறைந்தது 5 சதவீதம் ‘இந்திய அறிவு அமைப்புகளில் உள்ள கிரெடிட் படிப்புகளை எடுக்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அது பரிந்துரைத்திருக்கிறது. இதன் பொருள் என்ன? இளநிலை/முதுநிலை திட்டத்தில் சேரும் ஒவ்வொரு மாணவரும் ‘இந்திய அறிவு அமைப்பு’ என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்.சின் தத்துவத்தைக் கற்க வேண்டும். அதன் அணியில் சேர்வதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதாகும். இவ்வாறு 2014 முதல் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பாஜக அரசாங்கம், இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதற்கான நிகழ்ச்சி நிரலை அமல்படுத்திட வெறித்தனமாக ஈடுபட்டு வரு கிறது.
மனுஸ்மிருதி மற்றும் இந்து ராஷ்டிரத்தின் கனவு
ஆர்.எஸ்.எஸ்.க்கு சித்தாந்த அடித்தளங்களை அமைத்த எம்.எஸ். கோல்வால்கர், மனு (அ) தர்மத்தை உருவாக்கிய மனுவை ‘உலகின் முதல் மற்றும் மிகச்சிறந்த சட்டத்தை உருவாக்கியவர்’ என்று பாராட்டியபின்னர், உலகில் உள்ள அனை வரும் இந்துயிசத்திற்கு மாறி, இந்த மண்ணில் பிறந்த மூத்த குடியினரான பிராமணர்களின் புனித காலில் விழுந்து தங்கள் கடமைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறார். டாக்டர் அம்பேத்கராலும், அரசியல் நிர்ணயசபை யாலும் நிராகரிக்கப்பட்ட மனுஸ்மிருதிதான் இந்தியாவின் அரசமைப்புச்சட்டமாக அமைக்கப் பட்டிருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். வலி யுறுத்துகிறது. அரசமைப்புச்சட்டத்தின் மதச்சார் பற்ற தன்மையால் வருத்தமடைந்த எம்.எஸ். கோல் வால்கர், இந்திய அரசமைப்புச்சட்டம் “பாரதமற்றது” (“unbharat”) என்று பகிரங்கமாகவே புலம்பினார். இப்போது, தேசியக் கல்விக் கொள்கை மூலமாக ஆர்.எஸ்.எஸ்./பாஜக அரசாங்கம், மனுஸ்மிருதி யின் அடிப்படையிலான ஓர் இந்து ராஷ்டிரமாக, அதா வது நவீன தாராளமயத்தின் தேவைகளுக்கு ஏற்ற மற்றும் அதற்கு வளைந்துகொடுக்கக்கூடிய ஒரு வர்ணாஸ்ரம சமூக அமைப்பை உருவாக்கிட இந்தி யாவை இழுத்துச்சென்று கொண்டிருக்கிறது.
எதிர்த்துப் போராடுவது காலத்தின் கட்டாயம்
ஒரு நாட்டின் கல்விக் கொள்கை அதன் இளைஞர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் எதிர் காலத்தையும் தீர்மானிக்கிறது. மேலும், கல்வி என்பது இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பொதுப் பட்டியலில் (concurrent list) உள்ள ஒன்றாகும். எனினும் ஒன்றிய பாஜக அரசாங்கம் தேசியக் கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவோ அல்லது மாநில அரசாங்கங்களுடன் கலந்தாலோசனைகள் மேற்கொள்ளவோ இல்லை. இந்தியாவில் உள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஆர்.எஸ்.எஸ்.சின் இத்தகைய சூழ்ச்சித் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை இடைவிடாது நடத்திட தங்கள் முழு பலத்தையும் திரட்ட வேண்டும்.
..
Subscribe to:
Posts (Atom)
