Friday, September 2, 2016

திரைப்படக்காரர் என்பதால் கிடைத்த இல்லம் குஜராத் கோப்புகள்(3)

-ராணா அய்யூப்
என்னுடைய கண்களில் காண்டாக்ட் லென்ஸ் பொருத்திக்கொண்டு, தலைமுடியை நீளமாக்கிக் கொண்டு, வண்ணப் புள்ளிகள் தூவிய தலைத்துணியுடனும், சில ஒலி/ஒளிப்பதிவுக் கருவிகளுடனும் அகமதாபாத்தில் தரை இறங்கினேன். வந்ததுமே மைதிலி தியாகி என்ற பெயரில் ஒரு சிம் கார்டு உடனடியாக வாங்கினேன். அகமதாபாத்தில் என் `குடும்ப பாதுகாவலர்’ ஒருவர் மிக எளிதாக அதனை எனக்குப் பெற்றுத் தந்தார். புலன் விசாரணைக்கு நீண்ட காலமாகும். அவ்வளவு காலம் நட்சத்திர விடுதிகளில் தங்கவைக்கிற அளவுக்கு எங்கள்நிறுவனம் வசதியானது அல்ல.
மேலும் மிகவும் குறைந்த நிதி வசதியே உள்ள திரைப்படத் தயாரிப்பாளராகவும், படத்தை எடுக்கப் பொருளாதாரமாய்ப் போராடிக்கொண்டிருப்ப வளாகவும் என்னைக் காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. என்னைப் போன்றவருக்கேற்ற தங்குமிட வசதிக்கு உள்ளூர்வாசிகள்தான் உதவ முடியும். அந்த உதவி ஓர் ஓவிய நண்பரின்மூலம் கிடைத்தது. அகமதாபாத்தில் கலை - இலக்கிய வட்டாரங்களில் நன்கு அறிமுகமானவரான அவர் என்னை ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு சங்கடத்திற்குள்ளாக்காமல் இங்கிதமாக நடந்துகொண்டார். நான் ஓர் ஊடகவியலாளர், என்னுடைய புலனாய்வுக் கட்டுரை காரணமாகவே மாநில உள்துறை அமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதே அவருக்குப் போதுமானதாக இருந்தது. அவர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி நேரு பவுண்டேசன் என்ற கல்வி நிலைய விடுதியில் நான் தங்குவதற்கு உதவினார். விடுதிக் காப்பாளரிடம் நான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்தப் பட்டேன். குளியலறையுடன் நாளொன்றுக்கு 250 ரூபாய் வாடகையில் 250 சதுர அடி அறையை வெற்றிகரமாகப் பெற்றுவிட்டேன்.
விடுதியில் தங்கியிருந்தவர்களும் எனக்குப் பல வகைகளில் உதவ முன்வந்தார்கள். ஜெர்மனி, கிரீன்லாந்து, லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் அவர்கள். விடுதியின் வார்டனாகவோ மேலாளராகவோ இருந்த மாணிக் பாய் (மாற்றப்பட்ட பெயர்) என் முதல் நண்பரானார். ‘மேடம் இங்கே குஜராத் குறித்து திரைப்படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார்,’’ என்று நண்பர் என்னை அறிமுகப்படுத்தியதும், ‘ஓ, ரொம்ப நல்லது, தயவுசெய்து எங்கள் நகரத்தைப் பற்றியும், எங்கள் முதலமைச்சரைப் பற்றியும் நல்ல விஷயங்களைக் கூறுங்கள். இந்த அகமதாபாத் மிக அழகான நகரம்...’’ என்றார். தொடர்ந்து அவர் நகரத்தை எனக்குச் சுற்றிக் காட்டவும் முன்வந்தார். எனக்கு ஒதுக்கப்பட்ட அறை, ஒரு படுக்கை, எழுதுவதற்கான ஒரு மேசை, ஒரு புத்தக அலமாரி ஆகியவற்றுக்கு மட்டுமே போதுமானதாக அமைந்திருந்தது. ஆனாலும், விடுதி அமைந்திருந்த சூழல் அறையின் இடப் போதாமையை ஈடுசெய்தது. குஜராத்தின் வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளில் ஒன்றாக, நகரின் மையத்தில் அது அமைந்திருந்தது. அடுத்த ஆறு மாத காலத்திற்கு அது என் இல்லமாக மாறியது. மறுநாள் காலை மைக் அகமதாபாத் வந்து சேர்ந்தான். கூர்மையான அறிவுத்திறனுடன் இருந்த அந்த 19 வயது பிரெஞ்சு இளைஞன் நல்ல உயரம். சீவிக் கலைத்துவிட்டதுபோன்ற தலைமுடி.
அவனை விடுதிக்கு அழைத்து வந்தேன். மாணிக் பாய் எனது அறைக்கு அடுத்த அறையை அவனுக்கு ஒரு மாத காலத்திற்கு என ஒதுக்கித் தந்தார். மைக், தனக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்தை அருமையாகச் செய்தான். கண்ணில் படுகிற அனைத்தையும் அறிவதில் முனைப்புக் காட்டினான். புதிய அம்சங்களைக் கற்பதிலும், பண்பாட்டுக்கூறுகளைத் தெரிந்துகொள்வதிலும் அக்கறை செலுத்தினான். எதையும்விட அவனுக்கு மிகவும் ஆர்வம் உணவு வகைகளில் தான்! எங்கள் முதல் நாள் இரவு உணவு பக்வான் என அழைக்கப்படும் பலவகை உணவுப் பொருட்களுடன் கூடிய தலி சாப்பாடுதான். நானும் மைக்கும் இப்போதும் பிரியத்துடன் நினைத்துப்பார்த்து சிரித்துக்கொள்வது என்னவெனில், அன்றைய தினம் அவன் விழுங்கிய சுமார் இரண்டு டஜன் பூரிகளும், ஆறு கிண்ணங்களிலிருந்த அல்வாவும்தான்!இரவு உணவு முடிந்து, விடுதியின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தபோது அவன் சன்னமாகக் கேட்டான்: ‘வேறு யாரும் இல்லாத இடங்களில், அல்லது நாம் மட்டும் இருக்கும் சமயங்களில், நான் உங்களுடைய உண்மைப் பெயரில் அழைக்கலாமா?’ ‘இல்லை,இந்த நாட்டைவிட்டு நீ திரும்பிச் செல்லும் வரைக்கும் நான் உனக்கும் மைதிலிதான்.’ மைக் அந்த உறுதிமொழியைக் கடைசி வரையில் காப்பாற்றினான்.
பாரீஸ் புறப்படுவதற்கு முதல் நாள் என்னிடமிருந்து விடைபெறும் விதத்தில் இந்தியில் எழுதிவைத்த குறிப்பில், ‘அன்புள்ள மைதிலி, இனிமேல் உங்களை நீங்களேதான் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். -மைக்’ என்று கூறியிருந்தான். முதல் சில நாட்கள், நேரு பவுண்டேசனில் எங்கள் புதிய வாழ்நிலைக்கு எங்களை நாங்கள் தயார்படுத்திக் கொண்டோம். மைக் அவன் அறையில் அமர்ந்து பிரெஞ்சு-இந்தி மொழிபெயர்ப்புப் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டே இருப்பான். என்னிடம் கேள்விகள் கேட்பான். அதே நேரத்தில் மார்க் துல்லி நூல் ஒன்றையும் படித்துக் கொண்டிருந்தான். அவனதுவயதுப் பையன்களுடன் ஒப்பிடும்போது, மைக் நன்கு பயிலும் மாணவனாகவும், கொள்கை உறுதிகொண்டவனாகவும், எதையும் கூர்மையாக ஆராய்கிற மனநிலை பெற்றவனாகவும் இருந்தான்.

பவுண்டேசனில் ஒரு கேண்டீன் இருந்தது. அதில் 25 ரூபாய்க்கு மதிய உணவு (லஞ்ச்) அளித்து வந்தார்கள். பவுண்டேசனின் மேல் மாடிக்குச் செல்ல சித்திரப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலேயிருந்து பார்த்தால் பக்கத்தில் ஓர் அழகான காடு இருப்பது தெரியும். மதிய நேரங்களில் நாங்கள் இருவரும் மடிக்கணினிகளோடு மேல் தளத்துக்குச் சென்று, மதிய உணவைச் சாப்பிட்டுக்கொண்டே, பணியில் ஈடுபடுவோம். அப்போதெல்லாம் அவன் கேட்பான், ‘ஆக, மைதிலி, இன்றைக்கு என்ன திட்டம்? இன்று யாரைச் சந்திக்கப் போகிறோம்?’ நான் அதற்கு, வழக்கம்போலவே, ‘சமயம் வரும்போது நானே உனக்குச் சொல்லுவேன்,’ என்பேன். (தொடரும்)

No comments: