Saturday, September 3, 2016

குஜராத் கோப்புகள் 4 திரைப்பட நடிகரிடமே நடித்த காட்சி!


ராணா அய்யூப்
மாலை நேரங்களில் மைக்கும் நானும் எங்கள் கேமராக்களை எடுத்துக் கொண்டு பழைய நகரப் பகுதிக்கு சென்று படங்களாக எடுத்துக்கொண்டிருப்போம். புகைப்படக்கலை ஈடுபாட்டினால் மட்டுமல்ல, எங்களை கவனிக்கக்கூடியவர்களின் பார்வையில் நாங்கள் படமெடுக்கிற வேலையாகத்தான் வந்திருக்கிறோம் என்று பதிவாக வேண்டும் என்பதற்காகவும்தான். எங்களைப் பற்றி சொல்லிக்கொண்டதற்குப் பொருத்தமாக, திரைப்பட ஆர்வலர்களின் வட்டம் ஒன்றையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. புகழ்பெற்ற ஓவியர் எம்.எப். ஹுசேன் உருவாக்கிய ‘அம்தவாத் நி குஃபா’ என்ற கலைக்கூடம் எங்களுக்கு உறுதுணையானது. அங்குள்ள பூங்காவில் இளம் ஓவியர்களும், கேமரா கலைஞர்களும் சுற்றி வருவார்கள்.
திரைப்பட ஈடுபாடு உடையவர்கள், நாடக நடிகர்கள்முதலியோரும் நடமாடுகிற அந்த இடத்தின் மாலைப் பொழுதுகள் ஒரு மைதிலியாகவும் ஒரு மைக்காகவும் எங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்ல ஏதுவாக அமைந்தன. உயர்நிலை அதிகாரிகள் பலருடன் தொடர்புகொள்ள வேண்டியிருந்தது. என்னிடமிருந்த பட்டியலில் முதலில் இருந்தவர் காவல்துறை உயரதிகாரி ஜி.எஸ். சிங்கால். குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் செயல்முறைத் தலைவராக நியமிக்கப்பட்டி ருந்தவர் அவர். இஸ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் வழக்கு விசாரணை அவர் மீதும் பாய்ந்திருந்தது. சக ஊடக நண்பர்கள் மூலம் கிடைத்த தகவல்களின்படி அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதையும், ஊடகவியலாளர்களைச் சந்திப்பதில்லை என்பதையும் அறிந்தேன். இப்படிப்பட்டவரை எப்படி நெருங்குவது?
குஜராத்தின் அமிதாப்
நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தபோது சமூகப்பணியாளரான ஒரு நண்பரிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் குஜராத்திய திரைப்பட நடிகர்கள் நரேஷ் கனோடியா, அவருடையமகன் ஹிட்டு கனோடியா பற்றிய விவரங்கள் இருந்தன. நரேஷ் கனோடியா, குஜராத்தின் அமிதாப்பச்சன்என்ற அடைமொழி பெற்றவர். ஹிட்டு இந்திப்பட வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தாலும், குஜராத் திரைப்படத்துறையில் தந்தையின் வழியைப் பின்பற்றத் தீர்மானித்திருந்தவர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான சிங்காலுடனும் வேறு பல உயரதிகாரிகளுடனும் நல்ல தொடர்பு உண்டு என்று அந்த மின்னஞ்சல் தெரிவித்தது.
இந்தத் தகவலால் உந்தப்பட்டவளாக நான் நரேஷ் கனோடியா வைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அவர் மறுநாள் காலை ஜிம்கானா மன்றத்திற்குவந்து பார்க்குமாறு அழைத்தார். அவருடன் என்ன பேச வேண்டும் என்று ஆங்கிலத்தில் தயாரித்துப்பலமுறை ஒத்திகை பார்த்துக்கொண்டு சென்றேன். நான் பேசியதை முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் கேட்டுக்கொண்டிருந்த அவர் கண்ணாடிப் பக்கம் திரும்பி தலைவாரிக் கொண்டே, ‘‘சகோதரி, இந்தியில் பேசு, இல்லையென்றால் ஆங்கிலத்தில் மெதுவாகப் பேசு.
இவ்வளவு வேகமாகப் பேசினால் எனக்குப் புரியாதம்மா,’’ என்றார். நான் என் ஒத்திகையை முறையாகச் செய்யவில்லை என்பது தெளிவானது! அடுத்த ஒரு மணி நேரம், நான் எடுக்கவுள்ள படத்தின் கருப்பொருளை அவரிடம் விளக்கினேன். குஜராத் குறித்துவெளியுலகம் அறியாதவற்றை என் படத்தில் சொல்ல விரும்புவதாகக் கூறினேன். குஜராத்தி திரைப்படம் குறித்தும் பிற்படுத்தப்பட்டவர்கள் எப்படி முன்னேறியிருக்கிறார்கள் என்பது பற்றியும்காட்ட விரும்புகிறேன் என்றேன். இப்போதுதான் அவர் கண்களில் ஆர்வம் ஒளிர்ந்தது.
கிராமத்தில் ஒரு சண்டைக்காட்சி
அடுத்த நாள் ஒரு கிராமத்தில் நடக்கவிருந்த படப்பிடிப்புக்கு வரச்சொன்னார். சண்டைக்காட்சியில் அவர் நடிப்பதைப் பார்க்கலாம் என்றார். விடுதிக்குத் திரும்பிய பின் எனது பயிற்சிகள் வீணாகிக் கொண்டிருக்கிறதோ என்ற கவலையில் மூழ்கினேன். ஆனா லும், நான் மேற்கொண்டிருக்கிற பணி ஆபத்தானது. இதைத் தவிர வேறு வழியில்லை.காலையில் கையில் கேமராவுடன் என் அறையிலிருந்து வெளியே வந்தபோது, மைக் என்னை நிறுத்தினான். ‘‘உங்களுடைய கேமராவில் லென்ஸ்களைக் காணவில்லை பாருங்கள்,’’ என்றான்.என் புது அவதாரத்திற்கு இன்னமும் நான் முழுவதுமாகப் பழக்கப்படாதிருந்தது தெரியவந்தது.
கிராமத்தில் படத்திற்கான ‘செட்’ போடப்பட்டிருந்தது. படப்பிடிப்பைக் காண ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தார்கள். கனோடியாவின் மகன் ஹிட்டுவும் அங்கிருந்தார், ஒரு கைதியின் உடையில். தந்தை ஒரு காவலர் உடையில் இருந்தார். நான் நடப்பவற்றைக் குறித்துக்கொண்டும், கேமராவில் படமெடுத்துக்கொண்டும் இருந்தேன். அங்கே வேறொரு இளைஞரும் தன்னுடைய கேமராவில் சண்டைக் காட்சிகளைப்பதிவு செய்து கொண்டிருந்தார். அவர் பெயர் அஜய் பஞ்ச்வானி (மாற்றப்பட்ட பெயர்) என்றும்ஆவணப்பட இயக்குநர் என்றும் கனோடியா எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் எங்களிடம் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
படமெடுப்பதிலேயே கவனம் செலுத்தினார். ஆயினும் நாட்கள் செல்லச் செல்ல எங்களிடையே ஒரு நட்பு வளர்ந்தது.இப்படியாகக் காலம் ஓடிக்கொண்டிருந்த நிலையில் ஒருநாள் கனோடியாவிடம், என் படத் திற்காக குஜராத் காவல்துறை உயரதிகாரிகளில் சிலரைப் பார்க்க வேண்டுமென்ற என் விருப்பத்தைக்கூறினேன். அந்த அதிகாரி ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக, வீர சாகசங்களில்ஈடுபட்டவராக, குறிப்பாகப் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்றேன்.
இந்த வார்த்தைகள் பலனளித்தன. ‘‘நீ மிஸ்டர்சிங்காலை சந்திக்க வேண்டும்மா. மிகத் திறமையான அதிகாரி. பல பயங்கரவாதிகளைத் தீர்த்துக்கட்டியவர்,’’ என்றார் கனோடியா. என் உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கட்டுப் படுத்திக்கொண்டு, சிங்கால் பற்றி அப்போதுதான் கேள்விப்படுவது போல அவரைப் பற்றிய விவரங்களை இவரிடமிருந்து கேட்டுக் குறித்துக்கொள்ளலானேன். சந்திக்கவிருக்கும் அதிகாரிகளுக்கு என்னைப்பற்றி எவ்வித சந்தேகமும் ஏற்படாம லிருக்க இப்படிப்பட்ட திரைப்படத்துறையினரின் அறிமுகக் கடிதங்கள் எனக்கு உதவின. குஜராத்தி மொழியில் திரைப்படம் எடுக்கிற நட்சத்திரம் ஒருவரிடமிருந்து வரும் சிபாரிசை சிங்கால் எப்படி சந்தேகிப்பார்?
(தொடரும்)


No comments: