Friday, September 9, 2016

குஜராத் கோப்புகள் 10 உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட உரையாடல்


ராணா அய்யூப்
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் குழு பொறுப்பதிகாரி சிங்கால் ஒரு சிகரெட்டைப்பற்ற வைத்துக்கொண்டு என் கேள்விகளுக்குத் தயாரானார். அந்த உரையாடல் அவரதுசிக்கலான வாழ்க்கையையும், அவரது மனப்போக்கு உருவாகியிருந்த விதத்தையும் அறிந்துகொள்ளஉதவியது.
பதில்கள் பூடகமாகவே இருந்தன என்றாலும் அவருடைய நீண்ட அமைதியும், கூர்மையான பார்வையும், மேசையில் தன் விரல்களால் தட்டிக்கொண்டிருந்த விதமும் எண்ணற்ற பக்கங்களைக் கூறின. எச்சரிக்கையாகப் பேசுவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, என்னிடமிருந்து தீங்கு எதுவும் வராது நம்பியதாலோ என்னவோ மனம்திறந்து பேசினார்.
‘சார், உங்களை உங்கள் வீட்டில் குடும்பத்தாருடன் சந்திக்க விரும்புகிறேன், என்றேன்.‘வேண்டாம் ப்ளீஸ். அவர்கள் ஏற்கெனவே சங்கடத்துடன் இருக்கிறார்கள். என் என்கவுண்ட்டர்கள்அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
வீட்டிற்கு அருகே போலீஸ் வண்டி வரக்கூடாது, தூரத்திலேயே நிறுத்திவிட்டு வரச் சொல்லுங்கள் என்கிறார்கள்,’ என்றார்.
ஒப்புதல் வாக்குமூலம்
நான் இந்தப் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த பின்னாட்களில், அவர் சிபிஐ-யால் கைதுசெய்யப்பட்டு, இஸ்ரத் ஜஹான் என்கவுண்ட்டரில் தன்னுடைய பங்கு குறித்து ஒப்புதல் வாக்குமூலம்அளித்திருந்தார். அந்த என்கவுண்ட்டரில் மாநிலத்தின் வேறு பல அதிகாரிகளும் உடந்தையாகஇருந்ததை அவருடைய வாக்குமூலங்கள் வெளிப்படுத்தின.
சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில், இஸ்ரத் ஒரு லஸ்கர்-இ-தொய்பா ஆள் அல்ல என்றும், அவர்மீதான என்கவுண்ட்டர் போலியானதுஎன்றும் குறிப்பிட்டிருந்தது.சிங்காலின் மூத்த மகன் ஹர்டிக், தனது தந்தையைப் பற்றிய விமர்சனங்கள் ஊடகங்களில் வந்ததன் பின்னணியில் மனம் நொந்து 2013ல் தற்கொலை செய்துகொண்டார். ஹர்டிக் மேல் மிகுந்தபாசம் கொண்டிருந்தவர் சிங்கால். மகனின் அகால மரணத்திற்குப்பிறகுதான் அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தார்கள்.அந்த நண்பர்களிடமிருந்து வந்த கடைசித் தகவல்:
அவர் பதவி விலகிவிட்டார். அரசாங்கம்வற்புறுத்தியும் தனது முடிவை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார். சிபிஐ-யிடம் சிங்கால், தான் அப்ரூவராக மாற விரும்பவில்லை என்றும், தன்மீது இரக்கம் காட்ட வேண்டியதில்லை என்றும்,வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களைப் போலவே தன்னிடமும் விசாரணையை நடத்துமாறும் கேட்டுக் கொண்டார். இந்த மாறுபட்ட வேண்டுகோள், என்னை 2010 டிசம்பரில் எங்களுக்கிடையே நடந்த உரையாடலுக்கு இழுத்துச் சென்றது.
வேடிக்கையான சூழ்நிலை
ஜி.எல். சிங்காலுடன் ஒரு திரைப்பட இயக்குநராக நான் நடத்திய அந்த உரையாடலிலிருந்து:
கேள்வி: குஜராத் காவல்துறையினர் குறித்து ஏராளமானவைகள் அடிபடுகிறதே?
பதில்: இது ஒரு வேடிக்கையான சூழ்நிலை. எங்களிடம் ஏதாவது புகாருடன் வரக்கூடிய ஒருவருக்கு மனநிறைவாக நாங்கள் செயல்பட்டோம் என்றால் அது அரசாங்கத்தை நிலைகுலையச்செய்ததாகிவிடும். நாங்கள் அரசாங்கத்திற்கு சாதகமாக நடந்து கொண்டால், புகார்தாரர்நிலைகுலைந்து போவார். போலீஸ்காரர்களாகிய நாங்கள் இப்படித்தான் இடையில் சிக்கியிருக்கிறோம்.
கேள்வி: என்கவுண்ட்டர் அதிகாரிகளில் பெரும்பாலோர் கீழடுக்கு சாதிகளிலிருந்து வந்தவர்கள். அவர்கள் இன்றைய அரசியல் அமைப்பில் பயன்படுத்தப்பட்டுவிட்டு பின்னர் கைவிடப்பட்டார்களா?
பதில்: ஆம், அவர்கள் எல்லோரும் போலீசில்தான் இருக்கிறார்கள். அதிகாரம் மிகுந்ததுறை இது.
மதவாதியாக காவல் அதிகாரி
கேள்வி: கலவரங்கள் மாநிலத்தைப் பாதித்தது எப்படி?
பதில்: நான் இங்கே 1998லிருந்து பணியில் இருந்து வருகிறேன். எண்ணற்ற கலவரங்களைப் பார்த்திருக்கிறேன். 1982, 1983, 1985, 1987 ஆகிய ஆண்டுகளிலும் கலவரங்களைப் பார்த்திருக்கிறேன். அயோத்தி சம்பவத்திற்குப் பிந்தைய 1992 கலவரத்தையும்பார்த்திருக்கிறேன். 2002ல் நிறைய முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு முன் முஸ்லிம்கள்தான் இந்துக்களைக்கொன்றார்கள். எனவே 2002ல் என்ன நடந்திருந்தாலும், அது இத்தனை ஆண்டு கால முஸ்லிம்களின் தாக்குதல்களுக்குப் பழி வாங்குவதாகவே இருந்தது. வெளி உலகில் இருப்பவர்கள்தான் கூச்சல் போட்டார்கள். இந்துக்கள் கொல்லப்பட்ட சூழ்நிலையை அவர்கள் பார்க்கவில்லை.
கேள்வி: நீங்கள் சொன்னபடி, தலித்தாகிய முன்னாள் அதிகாரி ராஜன் பிரியதர்சியை நான் சந்தித்தேன்.
பதில்: எல்லா அதிகாரிகளுடனும் நான் பணியாற்றியிருக்கிறேன். அவரைப் போல ஓர் அற்புதமான அதிகாரியாக என்னால் வேறு யாரையும் பார்க்க முடியவில்லை. எவருக்கும் வளைந்துகொடுக்காத நேர்மையான அதிகாரி அவர்.
கேள்வி: அவர் என்னுடன் பேசியபோது, தான் அனுசரித்துப்போக அரசாங்கம் விரும்பியதாகவும், ஆனால் தான் ஒருபோதும் அதற்குத் தயாராக இல்லை என்றும்கூறினார்...
பதில்: ஒருதடவை நீங்கள் அரசாங்கத்துடன் சமரசம் செய்துகொண்டு விட்டீர்கள் என்றால்,பின்னர் நீங்கள் எல்லாவற்றுடனும் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும்...
சாதியால் மறுக்கப்பட்ட பதவி உயர்வுகள்
கேள்வி: ஆனால் ஆட்சியாளர்கள் உங்களை ஆதரிக்கத்தானே செய்தார்கள்?
பதில்: இல்லவே இல்லை. நான் ஒரு தலித். ஆனால் பிராமணனைப்போல ஒவ்வொன்றை யும் என்னால் செய்ய முடியும். என் மதத்தைப் பற்றி அவர்களை விட எனக்கு அதிகமாகவே தெரியும்.ஆனால் ஜனங்கள் இதனை உணரவில்லை. ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தது என் தவறா?
கேள்வி: உரிய பதவி உயர்வுகள் உங்களுக்கு வழங்கப்படவில்லை, அதற்கு உங்கள் சாதிதான்காரணம் என்று சொல்லப்படுகிறதே.
பதில்:ஆம். எல்லா மாநிலங்களிலும் இருப்பது போலத்தான் இங்கேயும். பிராமணர்களோ சத்திரியர்களோ தங்களுடைய ஜூனியராக, தலித்தையோ, பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களை யோ வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
(தொடரும்)


No comments: