Wednesday, August 26, 2015

எரிசக்தித் தேவைகளை அழிக்க முயல்வதா?
சீத்தாராம் யெச்சூரி

[இந்தப் புவியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தான் சுவாசிக்கும் காற்று அதில் உள்ள நிறைகுறைகளுடன் சமமானதாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில், தங்கள் நாட்டிலிருந்து கார்பன் உமிழ்தலைப் படிப்படியாகக் குறைத்திட வேண்டும் என்கிற அறிவுரையை அமெரிக்கா ஏற்க மறுக்கிறது.]
நாடாளுமன்றம் நடைபெறாமல் முட் டுக்கட்டை, பீகார் தேர்தல், நாட்டின் பல பகுதிகளிலும் வகுப்புவாதப் பதற்றநிலை அதிகரித்துக் கொண்டிருத்தல், சாமானிய மக்களின் துன்ப துயரங்கள் வளர்ந்து கொண்டிருத்தல், போன்றவை நாட்டின் அரசியலில் முனைப்பாய் முன் வந்திருக்கக் கூடிய அதே சமயத்தில், புவிவெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டுக்கொண்டிருத்தல் போன்ற கேந்திரமான பிரச்சனைகள் தொடர்பாக இந்தியாவில் பாஜக தலைமையிலான அரசாங்கம் போதுமானஅளவிற்குக் கவனம் செலுத்தாமல்இருப்பதும் குறிப்பிடப்பட வேண்டியதொரு முக்கிய அம்சமாகும். புவிவெப்பமயமாதல் குறித்த ஐ.நா. கட்டமைப்பு கன்வென்ஷனின் கீழ் (UNFCCC-UN Framework Convention on Climate Change) 21ஆவது சர்வதேச மாநாடு வரும் டிசம்பரில் பாரீசில் நடைபெறவிருக்கிறது. இப்பிரச்சனை தொடர்பாக இந்தியா நீண்டகாலமாக மேற் கொண்டுவந்த நிலைப்பாடுகளை மோடி அரசாங்கம் கணிசமான அளவிற்கு நீர்த் துப்போகச் செய்துகொண்டிருக்கிறது என்றே வெளிவந்துள்ள அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. வறுமையை ஒழிக்கவும் அது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாம் எடுத் துக்கொண்டிருந்த உறுதிமொழிகளுக்கு இது மிகவும் மோசமான அளவில் விளைவுகளை ஏற்படுத்திடும்.
பனி ஆறுகள் உருகுதல்
1990களிலிருந்து நடைபெற்று வரும் உலக அளவிலான உச்சிமாநாடுகள் அனைத்துமே பசுங்கூட வாயுக்களை உருவாக்கி அவற்றின்மூலம் புவி வெப்ப மயமாதலைக் கட்டுப்படுத்தாவிட்டால், பருவ நிலைகளில் கடும் மாற்றங்கள் ஏற்படும் என்று எச்சரித்து வந்திருக்கின் றன. இந்த மாற்றங்கள் மனிதகுலம் முழுமைக்கும் கேடு பயக்கக்கூடிய அதேசமயத்தில், இதனால் மிகவும் பாதிக்கப் படுவது ஏழை மக்களேயாவர், அதிலும் குறிப்பாக வளர்முக நாடுகளில் உள்ள ஏழை மக்களாவர். இந்தியாவில் இமய மலையின் வெண்பனிக்கட்டி ஆறுகள் உருகிக்கொண்டிருப்பதாலும், பருவமழை பெய்வதில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதன் விளைவாக வெள்ளம், வறட்சி, கடல் மட்டம் உயர்வு போன்றவை ஏற்படுவதன் காரணமாகவும், பல கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டுப் புலம்பெயர்ந்து செல்லக்கூடிய அபாய நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
உலக அளவிலான தட்பவெப்பம் 2 டிகிரி செல்சியசுக்கு மிகைப்படாமல் இருக்க வேண்டும் என்பது அனைவரும் விவாதித்து ஏற்றுக்கொண்ட விஷயம். இதனை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றால் அனைத்து நாடுகளும் கார்பன்(கரிமப்பொருள்) உமிழ்தல் வரையறுக்கப்பட வேண்டியதை உத்தரவாதப்படுத்த வேண்டியது இன்றைய அவசரத் தேவையாகும். இல்லையேல் மக்களின் எதிர்கால வாழ்க்கை மீண்டும் சரிப்படுத்த இயலாஅளவிற்குச் சொல்லொண்ணா அச்சுறுத்தலுக்குள்ளாகும். சுற்றுச்சூழல் குறித்துஆய்வு செய்யும் சர்வதேச ஏஜென்சிகள், ஜூலை மாதத்தில் உலகம் முழுதுவமான சராசரி தட்பவெப்பநிலை, நிலம் மற்றும் கடல் மேற்பரப்பில், 20ஆம் நூற்றாண்டின் சராசரியை விட 0.81 டிகிரி செல்சியஸ்அதிகம் இருந்தது என்று தெரிவித்திருக்கின்றன.
விலக்கும் இலக்கும்
ஆர்க்டிக் கடல் பனிக்கட்டிகள் 1981-2010 ஆண்டுகளின் சராசரியைவிட 3,50,000 சதுர மைல்கள் (9.5 சதவீதம்) உருகிவிட்டன. உண்மையில் உலகம் வெப்பமாகி இருக்கிறது.இது தொடர்பாக, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக உலக நாடுகளிடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள், ‘ஒரு பொதுவான ஆனால் அதே சமயத்தில் வித்தியாசமான பொறுப்புடன்’ (‘common but differentiated responsibility’)கார்பன் உமிழ்தலைக் கட்டுப்படுத்திடநடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்திருந்தன. அதாவது, உலகம் இவ்வாறு வெப்பமயமாவதற்கு பெரிதும் காரணமாகவுள்ள வளர்ச்சி அடைந்த (முதலாளித்துவ) நாடுகள் இதனைக் குறைப்பதற்குப் பெரிய அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். 1997இல் நடைபெற்ற கியாட்டோ புரோ டோகால் (Kyoto Protocol), இந்தியா போன்ற வளர்முக நாடுகள் தங்கள் சக்திக்கேற்ற விதத்தில் எந்த அளவிற்கு முடியு மோ அந்த அளவிற்குக் குறைத்திட நடவ டிக்கைகள் எடுத்திட வேண்டும் என்ற அறிவுரையுடன் விலக்கு அளித்திருந்த அதே சமயத்தில், வளர்ச்சி அடைந்த நாடு கள் ஒவ்வொன்றுக்கும் இலக்குகளை நிர் ணயித்திருந்தது. ஆனால் நடந்துள்ளது என்ன? வளர்ச்சி அடைந்த நாடுகள் கார்பன் உமிழ்தலைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரித்திருக்கின்றன. 1900 சராசரியுடன் ஒப்பிடும் போது அவை 5 சதவீதம் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக 10சதவீதம் அதிகரித்திருக்கின்றன. அமெரிக்கா கியாட்டோ புரோடோகாலை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், தன் நாட்டில்அதனை 17 சதவீதமாக அதிகரித்திருக் கிறது.
நியாயமற்ற நிபந்தனை
அமெரிக்கா, உலக நாடுகள் ஏற்றுக் கொண்டிருந்த, ‘ஒரு பொதுவான ஆனால் அதே சமயத்தில் வித்தியாசமான பொறுப்புடன்கார்பன் உமிழ்தலைக் கட்டுப்படுத் திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்ற கொள்கையைக் கைவிட்டு விட்டு, அதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாடும் தன்னிச்சையாக முன்வந்து தங்கள் நாடு எந்த அளவு கார்பன் உமிழ்தலைக் குறைத்திட முடியும் என்று அறிவித்திட வேண்டும் என்று நியாயமற்றமுறையில் நிபந்தனை விதித்துக் கொண்டிருக்கிறது.இத்தகைய நிபந்தனைகளை எதிர்ப்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையின் கீழ் இயங்கும் பாஜக அரசாங்கம், அந்த நிபந்த னைகளை அப்படியே தலைகுனிந்து கை கூப்பி ஏற்றுக்கொண்டு, கார்பன் உமிழ்தலைத் தன்னிச்சையாக வெட்டிக் குறைத்திட இலக்கு நிர்ணயிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. பாரீஸ் உச்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்படயிருக்கும் இதன் பெயர் திட்டமிட்டிருக்கிற தேசிய அளவிலான தீர்மானிக்கப் பட்டுள்ள பங்களிப்புகள் (INDCs-Intended Nationally Determined Contributions) என்பதாகும்.
ஏற்க மறுக்கும் அமெரிக்கா
ஒரு பொதுவான ஆனால் அதேசமயத்தில் வித்தியாசமான பொறுப்புடன்கார்பன் உமிழ்தலைக் கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று உலக நாடுகள் ஒப்புக்கொண் டிருந்த முடிவினை மறுதலித்திட வேண் டும் என்பதும், வளர்ந்த (முதலாளித்துவ)நாடுகளுக்குக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கக்கூடாது என்பதும்தான் அமெரிக்காவின் விருப்பமாகும். அதை இந்தியா தன்னுடைய தன்னிச்சையான நடவடிக்கை மூலம் செயல்படுத்த முன்வந்திருக்கிறது. 1990 அளவுமட்டங்களில் கார்பன் உமிழ்தலைக் கட்டுப்படுத்திட வேண்டும் என்கிற கியாட்டோ புரோடோகால் கைவிடப்படுகிறது. மாறாக, 2005ஆம் ஆண்டு அளவில் 2030க்குள் அமெரிக்கா 20 சதவீதம் உமிழ்தலைக் குறைத்திடவும், ஐரோப்பிய யூனியன் 40 சதவீதம் குறைத்திடவும், ரஷ்யா 25 சதவீதம் குறைத்திடவும் இப்போது முன் வந்திருக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாஇந்தியாவிற்கு வந்திருந்த சமயத்தில், வெளியிடப்பட்ட இந்தியா – அமெரிக்கா கூட்டு அறிக்கையில், புவி வெப்பமயமாதல் சம்பந்தமான நிகழ்ச்சிநிரல் மீது ஆர்வம் காட்டப்படவில்லை. அப்போது இந்தியா, தற்போதுள்ள புவிவெப்பமயமாதல் குறித்த ஐ.நா. கட்டமைப்பு கன்வென்ஷனின் அறிவுரைகள் பாரீஸ் உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. இதன்பொருள், அமெரிக்கா, ‘ஒரு பொதுவான ஆனால் அதே சமயத்தில் வித்தியாசமான பொறுப்புடன்கார்பன் உமிழ்தலைக் கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்பதற்கு உட்பட வேண்டும், அதன் மூலம் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் சமம் என்ற கொள் கையை அது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
இந்தப் புவியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தான் சுவாசிக்கும் காற்று அதில் உள்ள நிறைகுறைகளுடன் சமமானதாக இருக்க வேண்டும் என்கிற அடிப் படையில், தங்கள் நாட்டிலிருந்து கார்பன் உமிழ்தலைப் படிப்படியாகக் குறைத்திட வேண்டும் என்கிற அறிவுரையை அமெரிக்கா ஏற்க மறுக்கிறது.
அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் வெளியேற்றும் கார்பன் உமிழ்தலின் அளவு இந்தியாவை விட 20 மடங்கு அதிகமாகும்.வளர்முக நாடுகள் தங்களின் சமூகப்பொருளாதார வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்புக்கும் உதவிட, வளர்ந்த நாடுகள் புவி வெப்பமயமாதல் குறித்த ஐ.நா. கட்டமைப்பு கன்வென்ஷனின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய நான்காவது பிரிவின்கீழ் ஏழாவது பத்தியில் மிகவும் தெளிவாகத் தெரிவித் திருக்கிறது.
சிவப்புக் கோடுகளை மீறக்கூடாது
ஆனால் அமெரிக்கா இவ்வாறு பொறுப்பினை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.ஆயினும், இந்தியா, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து, திட்டமிட்டிருக்கிற தேசியஅளவிலான தீர்மானிக்கப்பட்டுள்ள பங்களிப்புகளை, ஒருதலைப்பட்சமாக அறிவித்திருக்கிறது. சூரிய எரிசக்தியை அதிகப்படுத்துவதன்மூலம் இதனைச் செய்திடலாம் என்று இந்தியா இவ்வாறு முடிவு செய்திருக்கிறது. இது சாத்தியமற்ற ஒன்று. சூரிய எரிசக்தி உற்பத்திக்கான செலவினம் சர்வதேச அளவில் குறைந்திருக்கிறது. எனினும், இந்தியாவில் இதனை உற்பத்தி செய்வதற்காக 90 சதவீதம் வரை மானியம் அளித்து வருகிறது.ஆயினும், புவிவெப்பமயமாதலுக்கு எதிராக நீண்டகாலமாகக் குரல் கொடுத்துவரும், சந்திரசேகர் தாஸ்குப்தா கூறியிருப்பதுபோல, “சூரிய எரிசக்தி உற்பத்தி லாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, புவிவெப்ப மயமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல.’’
இவ்வாறு மோடி அரசாங்கம் மிகவும் தெளிவான முறையில் தவறுசெய்துகொண் டிருக்கிறது. 2009இல் நாடாளுமன்றம் இதுதொடர்பாக, இந்தியாவின் நிலை குறித்து விவாதித்து, சில சிவப்புக் கோடுகளை‘red lines’) வரையறுத்திருக்கிறது. அதனை எந்த அரசாங்கமாக இருந்தாலும் மீறக் கூடாது.
அவை பின்வருமாறு:
(1)   இந்தியா ஒருதலைப்பட்சமாக எந்த உறுதிமொழியையும் அறிவித்திடக் கூடாது, அல்லது கார்பன் உமிழ்தலைக் குறைப்பது தொடர்பாக எந்தக் கட்டுப் பாட்டையும் ஏற்றுக்கொள்ளவும் கூடாது.
(2)   வளர்ந்த (முதலாளித்துவ) நாடுகள் பரஸ்பரம் உறுதியளிக்க முன்வராத நிலையில், இந்தியா கார்பன் உமிழ்தல் தொடர் பாக எவ்வித காலக்கெடுவையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
(3)   இந்தியா, இதுதொடர்பான ஐ.நா.அறிவுரைகளை வளர்ந்த நாடுகளை ஏற்றுக்கொள்ளச் செய்திட, தொடர்ந்து நிர்ப்பந்தங்கள் அளித்திட வேண்டும். வளர்முக நாடுகள் பசுங்கூடத் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதற்கு அறிவுச் சொத்துரிமையின்கீழ் ராயல்டி எதுவும் கோராமல் நிதி உதவிமற்றும் தொழில்நுட்ப உதவி செய்திட வேண்டும்.
மோடி அரசாங்கம் இப்போது இந்த சிவப்புக் கோடுகளைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. இதன்பொருள், நாட்டில் வறுமை மற்றும் பசி-பஞ்சம்-பட்டினி போன்றவற்றை சமாளித்திட அத்தியாவசியத் தேவையான நம் எரிசக்தித் தேவைகளைக் கைவிடுவது என்பதாகும்.
(நன்றி: தி இந்துஸ்தான் டைம்ஸ், 25-8-2015)
(தமிழில்: ச.வீரமணி)

Tuesday, August 25, 2015

சுதந்திரதினத்தில் வெற்று உரைசென்ற ஆண்டு சுதந்திரத் தினத்தன்று செங்கோட்டையில் மிகவும் படாடோபமாகவும் ஆரவார முழக்கங்களுடனும் ஆற் றிய உரையுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் மோடி ஆற்றிய உரை தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அளவிலேயே இருந்தது. உண்மையில் மோடி மிகவும் தற்காப்பு அடிப்ப டையிலேயே பேசி இருக்கிறார். அவருடைய உரை அநேகமாக சென்ற ஆண்டு செங்கோட்டையில் ஆற்றிய உரையின் போது அறிவித்தவை சம்பந்தமாகவும் அதில் அரசாங்கம் என்னவெல்லாம் நிறைவேற்றி இருக்கிறது என்கிற ரீதியிலும்தான் இருந்தது. ஆனால் அவ்வாறு பூசி மெழுகுவதற்குக்கூட அவர் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. தூய்மையான பாரதம் என்னும் முழக்கம் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்ததுஎன்றபோதிலும், எங்கேயும் அது அமல்படுத்தப்படாததையே காண்கிறோம். மாநகரங்களும், நகரங்களும் இது விஷயத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் காட்ட வில்லை. அது, குப்பைக்கூளங்களை அப்புறப்படுத்தும் பணியாக இருந்தாலும் சரி, துர்நாற்றம் வீசும் சாக்கடை நீரை அப் புறப்படுத்தும் பணியாக இருந்தாலும் சரி அல்லது சுகாதாரம் பேணும் பணி யாக இருந்தாலும் சரி எவ்வித முன்னேற்றத் தையும் காட்டவில்லை. சுற்றுச்சூழல் கெட்டிருப்பது மிகவும் கேடுபயக்கக் கூடிய அளவிற்கு மாறி இருக்கிறது.
மாணவிகளுக்கு தனிக் கழிப்பிடங்கள்
பள்ளிக்கூடங்களில் மாணவிகளுக் குத் தனிக் கழிப்பிடங்கள் கட்டுவதைப் பொறுத்தவரை, நாட்டில் உள்ள 2.62 லட்சம் பள்ளிகளில் 4.25 லட்சம் கழிப் பிடங்கள் கட்டப்பட்டிருப்பதாகவும் அதன் மூலம் இதுதொடர்பான குறியீடு அநேகமாக நிறைவேறியுள்ளதாகவும் மோடிகூறியிருக்கிறார். இந்தப் புள்ளிவிவரங்கள் எதார்த்த நிலைமைகளுடன் ஒத்துப்போக வில்லை. மேலும், கழிப்பிடங்கள் கட்டப் பட்டிருக்கக்கூடிய இடங்களிலும் அவற் றில் பலவற்றிற்கு, தண்ணீர் வசதியோ மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளோ கிடையாது.ஜன்தன் யோஜனா திட்டத்தைப் பொ றுத்தவரை, இது முந்தைய அரசாங்கத்தின் திட்டம்தான், பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின்கீழ் 17 கோடி கணக்குகள் துவக்கப்பட்டிருப்பதாக மோடி ஜம் பமடித்திருக்கிறார். ஆனால், இவற்றில் கிட்டத்தட்ட பாதி கணக்குகளில் வங்கி இருப்பு என்பது பூஜ்யம் என்பதையோ, அவை செயலற்ற நிலையில் இருப் பதையோ அவர் கூற வில்லை. மோடி இந்தத்தடவை தன்னுடைய “இந்தியாவில் உற்பத்திசெய்’’ கோஷம் குறித்து அதிகம் எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் அதுதொடர்பாக பதிவு செய்வதற்கு அவரிடம் அதிகமாக எதுவும்இல்லை. நாட்டின் பொருளாதார நிலை தம்பட்டம் அடிக்கக் கூடிய அளவிற்கு இல்லை. நாட்டின் ஏற்றுமதி ஏழாவது மாத மாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஏற்றுமதி 14.11 சதவீத அளவிற்கு சுருங்கிவிட்டது. கேந்திரமான துறைகளில் சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் வளர்ச்சி வீதம்8.7 சதவீதமாக இருந்தது. ஆனால் அதுஇந்த ஆண்டு 3 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. முதலீட்டிலும் மேல்நோக்கிய போக்கு எதுவும் இல்லை. சென்ற சுதந்திரதினத்திற்குப் பிறகு கடந்த ஓராண்டில் வேளாண் நெருக்கடி மிகவும் கூர்மையடைந் திருக்கிறது.
ஊழல் கரையான்களும் ஊசிகளும்
மோடி தன்னுடைய தூய்மையான அரசு குறித்து இந்தத்தடவை அதிகமாகப் பேச வில்லை. தங்கள் ஆட்சியின் ஓராண்டு முடிவுற்ற சமயத்தில் அதனைக் கொண் டாடுகையில், தங்களின் கடந்த ஓராண்டு கால ஆட்சியில் ஊழல் எதுவும் கிடையாது என்று சொல்லியதற்குப்பின்னர், பாஜக வின் அலமாரிக்குள்ளிருந்து ஒன்றன்பின் ஒன்றாக ஊழல்கள் வெளிவந்து கொண்டி ருக்கின்றன. லலித்கேட் விவகாரத்தில் மத்திய அயல்விவகாரங்கள் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் சம் பந்தப்பட்டிருக்கிறார்கள். மத்தியப்பிர தேசத்தில் நடைபெற்றுள்ள வியாபம் ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள ஊழலுக்கு புதிய எல்லைகளையே அமைத்திருக்கிறது. மகாராஷ்ட்ரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவ்வாறு நடைபெற்றுள்ள ஊழல் களிலிருந்து, மோடியின் தூய்மை பாரதம்பிரச்சாரத்தை மோடி தன்னுடைய கட்சிக் குள்ளேயும், மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள தன் அரசாங்கங்களுக்குள்ளேயுமே அதிக அளவில் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும், இந்தசமாச்சாரங்கள் குறித்து பிரதமர் மோடிவாயே திறக்கவில்லை. அவர் கூறியதெல்லாம், ஊழல் என்பது அனைத்து இடங்களி லும் கரையான்போல பரவி அமைப்பையே அரித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான். ஊழல் கரையானை ஒழித்துக்கட்ட அமைப்பின் ஒவ்வொரு சதுர மீட்டருக்கும் ஊசிகள் குத்த வேண்டும் என்று ஒருமருத்துவரைப்போல அறிவுரை கூறினார்.ஆனால், தன்னுடைய அமைச்சரவை சகாக்களுக்கும், தன் கட்சி மாநில முதல்வர்களுக்கும் அந்த சிகிச்சையை அளிக்க வேண்டும் என்று கூறாமல் நழுவிவிட்டார். லோக்பால் தொடர்பாக நாடாளு மன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னும் அதனை ஏன் அமைக்கவில்லை என்பதுகுறித்து பிரதமர் மிகவும் தெளிவானமுறை யில் மவுனம் சாதிக்கிறார்.மதவெறி சக்திகள் ஆட்டம்நம் சமூகத்தில் வகுப்புவாதத்திற்கும் சாதியத்திற்கும் இடமில்லை என்று மோடி அறிவித்திருக்கிறார். ஆனால் நடந்துள்ள நிகழ்வுகள் வேறு மாதிரியாகக்காட்டுகின்றன. மோடி அரசாங்கம் அமைந்தபிறகு மதவெறி சக்திகளின்ஆட்டம் முழுவீச்சுடன் அதிகரித்திருக் கின்றது. உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2014ஆம் ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரிக் கும் மே மாதத்திற்கும் இடையில் வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் 24 சதவீதம்அதிகரித்திருக்கின்றன. இந்துத்துவா கொள்கைகளை எதிர்ப்பவர்கள் எவராகஇருந்தாலும் அவர்கள் பாகிஸ்தானுக் குப் போய்விட வேண்டும் என்று பாஜகதலைவர்கள் மட்டுமல்ல, அமைச்சர்க ளும் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். மதவெறி சித்தாந்தத்தைப் பரப்பும் குறிக் கோளுடன் கேந்திரமான கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் பேர்வழிகளை அமர்த்தும் வேலையில் மோடி அரசாங்கம் மிகவும் குறியாக இருக்கிறது. மோடியின் உரையில் அயல்துறைக் கொள்கை குறித்து எதுவுமே கூறாததைக் கவனிக்க வேண்டும். சென்ற சுதந்திர தினத்திற்குப் பின்னர் நரேந்திர மோடிஅதிகமான எண்ணிக்கையில் அயல்நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். வரலாற்றுச் சிறப்பு மிக்க முறையில் வங்கதேசத்துடன் எல்லைகளைத் திருத்தி அமைத்துக் கொண்டதைக்கூட அவர் கூறவில்லை. அயல் விவகாரங்கள் துறை என்பது அவருடைய தனிப்பட்ட விஷயம் என்று கருதுவதுபோன்றே இதிலிருந்து தோன்றுகிறது. எனவேதான் இதுகுறித்து அவர் எவருட னும் பகிர்ந்துகொள்ளத் தயாரில்லை போல் தெரிகிறது.
மிகப்பெரிய ஏமாற்றம்
முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு எதுவும்மோடியின் உரையில் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றமாகும். மக்களவைத் தேர் தல் பிரச்சாரத்தின் துவக்கத்திலேயே இது தொடர்பாக ஓர் உறுதிமொழியை மோடி அளித்திருந்தார். பாஜக அரசாங்கம் அமைந்த பின்பு அதனைத் திரும்பவும் வலியுறுத்திக் கூறினார். ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டம் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது என்ப துடன் அவர் தன்னைச் சுருக்கிக் கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக உருப்படி யான திட்டம் எதையும் அவர் அறிவித்திட வில்லை. இவ்வாறு மோடியின் உரையில் உருப்படியான திட்டம் எதுவும் இல்லை என்பது சுதந்திர தினத்திற்கு முதல்நாள் அன்று தில்லி, நாடாளுமன்ற வீதியில் தொடர் உண்ணாவிரதம் இருந்த முன்னாள் ராணுவத்தினரை மிகவும் அருவருப்பான முறையில் தில்லி காவல்துறையினர் அப்புறப்படுத்திய சம்பவம் இதனை முன்கூட் டியே எச்சரித்துவிட்டது. இவ்வாறு ஆட்சியாளர்கள் நடந்துகொண்ட விதம் நாடு முழு வதும் உள்ள முன்னாள் ராணுவத்தினர் மத்தியில் கடுஞ் சீற்றத்தை ஏற்படுத்தி விட்டது. இம்முறை மோடியின் உரையில், புதியமுழக்கங்களோ, புதிய உறுதிமொழிகளோ மிகவும் குறைவாகத்தான் இருந்தன. பிரதமர், “புறப்படு இந்தியா’’என்று அறிவித்த போது, அவர் கார்ப்பரேட்டுகளின் கைத்தடி யாகவே கண்ணுக்குத் தெரிந்தார். மேலும் அவர், தாராளமாக ஓர் உறுதி மொழியையும் அளித்துள்ளார். அதாவது அடுத்த ஆயிரம் நாட்களுக்குள் மின்சாரம் இல்லாத - நாட்டில் உள்ள 18 ஆயிரத்து 500கிராமங்களுக்கும் - (அதாவது அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்) மின் இணைப்புவழங்கப்படுமாம்.மோடி, சொன்னதையும் செய்ததையும் வைத்துப்பார்க்கும்போது, அவர் செங் கோட்டையில் நின்றுகொண்டு ஆற்றிய இரண்டாவது சுதந்திரதின உரையில், அவர்கூறாத பல விஷயங்களின் காரணமாக இந்த அரசாங்கத்தின் தோல்விகளை அவர் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் என்றே முனைப்பாய்த் தெரிகிறது. 
(ஆகஸ்ட் 19, 2015)
(தமிழில்: ச.வீரமணி)

Monday, August 17, 2015

பலே கில்லாடி ஃபாக்ஸ்கான்

ஃபாக்ஸ்கான், நுகர்வோர் மின்னணுப் பொருள்களை உற்பத்தி செய்யும்உலகின் மிகப்பெரும் ஒப்பந்த உற்பத்திநிறுவனமாகும். இந்நிறுவனம் மகாராஷ்டிராவில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய்) முதலீட்டுடன் ஒரு தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறது.தைவானை தலைமையிடமாகக் கொண்டு ஹான் ஹாய் பிரிசிசன் இண்டஸ்ட்ரி கம்பெனி (Hon Hai Precision Industry Company)யின் வர்த்தகப் பெயர்தான் ஃபாக்ஸ்கான். இது ஒரு ராட்சத உற்பத்திநிறுவனமாகும்.
இந்நிறுவனம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்பிள், ஹெவ்லட் பேக்கார்ட், ஐபிஎம், சாம்சங் (Apple, Hewlett Packard, IBM, Samsung) மற்றும் பல மின்னணு நிறுவனங்களுக்குத் தங்கள் உற்பத்தி சாதனங்களை விநியோகம் செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிறுவனம் ஒன்று இந்தியாவில் வன்பொருள் உற்பத்தி வசதிகளை (hardware manufacturing facilities) அமைப்பது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றுதான். ஆனால் இந்நிறுவனம் மற்றொருவிதத்திலும் பேர்போனது. அது குறித்து அனைவரும் முன்னெச்சரிக்கையாய் அறிந்து வைத்துக்கொள்வது அவசியம். ஃபாக்ஸ்கான், உலகில் தொழிலாளர்களைச் சுரண்டுவதில் பேர்போன ஒருநிறுவனமாகும். ஃபாக்ஸ்கானின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்கள் சீனாவைச் சுற்றி அமைந்துள்ளன. இங்கே சுமார் 9 லட்சம் தொழிலாளர்கள் வேலைசெய்கிறார்கள். மிகக் குறைந்த ஊதியம்,மிக அதிக நேர வேலை, கட்டாய மிகுதிநேர வேலை மற்றும் பல்வேறு சுரண்டல் நடைமுறைகளின் காரணமாக சீனாவைச் சுற்றியுள்ள ஃபாக்ஸ்கான் ஆலைகளில் 2010க்கும் 2013க்கும் இடையே எண்ணற்ற வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் சுரண்டலின் கடுமையும், தொழிலாளர்களை அது மிகவும் கொடூரமாகக் கசக்கிப்பிழியும் அளவும் எந்த அளவிற்கு இருந்திருக்கிறது என்பதை, ஷென்சென் என்னும் நகரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் 2010ல் ஓராண்டில் மட்டும் 13 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதைப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். ஒட்டுமொத்தத்தில் 17 தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருக்கிறார்கள். இறந்தவர்கள் அனைவரும் இளம் தொழிலாளர்கள். அதுமட்டுமல்ல, ஃபாக்ஸ்கான் மற்றுமொரு சுரண்டல் நடைமுறையிலும் பெயரெடுத்ததாகும். தொழில்நுட்பப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குப்பயிற்சிதருகிறோம் என்று கூறி அவர்களையும் நிரந்தரத் தொழிலாளர்கள் போல் வேலை வாங்குவதிலும் பலே கில்லாடியாகும்.
ஆனால் அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியமோ நிரந்தரத் தொழிலாளர்களுக்கு அளிப்பதில் பாதிதான். ஃபாக்ஸ்கான் சீனாவில் தொழிலாளர்களைச் சுரண்டி பிரதானமாக ஆப்பிள் நிறுவனத்திற்கான ஐபோன்சாதனங்களை உற்பத்தி செய்து வந்தது.இது உலகின் கவனத்தை ஈர்த்தது. சீனாவில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளிலும் இதர தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் கடைசியில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை அதிகரித்திட இட்டுச்சென்றது. ஃபாக்ஸ்கான் மகாராஷ்டிராவில் நிறுவிடும் தொழிற்சாலை இந்தியாவில் முதலாவது அல்ல.
இதற்கு முன்பே இந்நிறுவனம் சென்னையில் ஒரு தொழிற்சாலையை நிறுவி, நோக்கியா நிறுவனத்திற்கு, சாதனங்களை உற்பத்தி செய்து அளித்து வந்தது. அப்போது அங்கே 1,800 நிரந்தரத் தொழிலாளர்களையும், 6,200 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அது பணியிலமர்த்தி இருந்தது. ஃபாக்ஸ்கான் நிறுவனமும், இதர பன்னாட்டு நிறுவனங்களைப்போலவே, தொழிலாளர்களால் அமைக்கப்படும் சங்கம் எதையும் விரும்புவதில்லை. தொழிலாளர்கள் சிஐடியு-வுடன் இணைக்கப்பட்ட ஒரு சங்கத்தில் சேர்ந்தபோது, ஃபாக்ஸ்கான் நிர்வாகம் அவர்களைப் பழிவாங்கத் தொடங்கியது. அது 2010 அக்டோபரில் வேலைநிறுத்தத்திற்கு இட்டுச்சென்றது.
நிர்வாகம், சங்கத்தை அங்கீகரிக்க விடாப்பிடியாக மறுத்ததன் விளைவாக, கடைசியில் இப்பிரச்சனை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நீதிமன்றம், 2014ல் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்ற முடிவினை அளித்தது. அப்போது,ஃபாக்ஸ்கான் தன்னுடைய தொழிற்சாலையையே மூடிவிடத் தீர்மானித்தது. இதற்கு அது கூறிய காரணம், நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டதாம். ஃபாக்ஸ்கான் இப்போது மீண்டும்இந்தியாவிற்கு திரும்பி வந்துகொண்டிருக்கிறது. தன்னுடைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை முழுமையாகத் தொடரமுடியும் என்கிற எதிர்பார்ப்புடன் மகாராஷ்டிராவில் முதலீடுசெய்துகொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆட்சிபுரியும் பாஜக தலைமையிலான அரசாங்கமானது, ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் செய்துள்ளதைப்போல தங்கள் மாநிலத்திலேயும் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி, சட்டப் பேரவையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது.
உதாரணமாக, தொழில் தாவா சட்டத்தில் (Industrial Disputes Act) தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்படி 300 அல்லது அதற்குக் குறைவாக தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளர்களை இஷ்டம்போல் வேலையை விட்டு நீக்கலாம். எதுவும் கூறாமலேயே ஆலைமூடலையும் மேற்கொள்ளலாம். இவ்வாறு சட்டத்தைத் திருத்தி இருப்பதன்மூலம் மகாராஷ்டிராவில் உள்ள 95 சதவீத தொழில் பிரிவுகள் தொழிலாளர்களுக்கானப் பாதுகாப்பு வளையத்திற்கு அப்பால் சென்றுவிடுகின்றன. மகாராஷ்டிர பாஜக அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கை காரணமாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஊக்கம் பெற்றிருக்கலாம்.ஃபாக்ஸ்கான் நிறுவனம், தொழிலாளர் விரோத மற்றும் தொழிற் சங்கவிரோத நிலையினை மேற்கொள்ளக்கூடாது என்று முன்னதாகவே எச்சரிக்கப்பட வேண்டும். அமைப்புரீதியாகத் திரண்டு சங்கம் வைக்கும் உரிமை என்பது, இந்தியத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையாகும். மகாராஷ்டிரா அரசாங்கம் எந்தவிதத்திலும் தொழிலாளர்களின் உரிமைகளை மீறக்கூடிய விதத்தில், ஃபாக்ஸ்கானுக்கு, அதன் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு மறைமுக ஆதரவு அளித்திடக்கூடாது என்று முன்னதாகவே அறிவித்துக் கொள்கிறோம்.
(ஆகஸ்ட் 12,2015)
(தமிழில்: ச. வீரமணி)