Friday, June 27, 2014

அவசரநிலைப் பிரகடனத்தின் 39ஆம் ஆண்டு:ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாத்திட உறுதி ஏற்போம்பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

39 ஆண்டுகளுக்கு முன் 1975ஆம் ஆண்டில் இதே நாளில் (ஜூன் 25)தான், அப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில்  மறைந்த இந்திரா காந்தி தலைமையிலிருந்த அன்றைய காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தால் அவசரநிலைப் பிரகடனம்’’ செய்யப்பட்டது.  அன்றைய தினம் சூரியன் உதித்தபோது, ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு, சுதந்திர இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் கறுப்பு அத்தியாயம் தொடக்கி வைக்கப்பட்டது. இதன் பின்னர் விடாது தொடர்ந்து நடைபெற்ற மக்கள் போராட்டங்களின் விளைவாக 1977இல் முன்கூட்டியே தேர்தலை நடத்த இந்திரா காந்தி முன்வந்ததும் அத்தேர்தலில் அவசரநிலை ஆட்சி முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டதும் நடைபெற்றது.  சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, காங்கிரஸ் கட்சி முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு, காங்கிரஸ் அல்லாத மத்திய அரசாங்கம் அமைக்கப்பட்டது.  அவசரநிலையை எதிர்த்த கட்சிகளில் சில ஒன்றிணைந்து `ஜனதா கட்சிஎன்ற பெயரில் அரசாங்கத்தை அமைக்க முன்வந்தது. ஆயினும்பல்வேறு அரசியல் சக்திகளின் கதம்பமாக அது இருந்ததால் அதனால் நீடித்திருக்க முடியவில்லை.
ஜனதா கட்சி உருவான தருணத்திலிருந்தே அக்கட்சிக்குள் நடந்துவந்த குடுமிபிடி சண்டைகளின் காரணமாகவும், அக்கட்சியும் காங்கிரஸ் கட்சியைப் போன்றே வர்க்க நலன்களையே அடிப்படையில் பிரதிநிதித்துப்படுத்தியதாலும், மக்களின் அபிலாசைகளை அதனால் தீர்த்து வைக்க முடியவில்லை. அதனால் விரைவில் மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டுவிட்டது.  எந்த மக்கள் அவசரநிலைக் காலத்தில் அக்கட்சிக்கு அமோக வரவேற்பு அளித்தார்களோ அதே மக்கள் அதனைத் தூக்கி எறியவும் முன்வந்துவிட்டார்கள். வரலாற்றிலிருந்து முறையான படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள இவை அனைத்தும் முக்கியமாகும். இன்றைய தினம் இதனையும் நாம் நன்கு மனதில் கொள்ள வேண்டும். 18 மாதங்களுக்குப்பின்னர் அவசரநிலையை முறியடித்தது நவீன இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் ஒரு முக்கியமான அடையாளச்சின்னமாகும்.  நாட்டில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள்எதிர்காலத்தில் எதேச்சாதிகாரம் எந்த ரூபத்தில் தலையெடுத்தாலும் அதனைத் தடுத்துநிறுத்தக்கூடிய அளவிற்கு ஜனநாயகத்தின் அடித்தளங்களை நன்கு ஆழமாகப் பதிய வைத்தன.
மாறாக, 1977இல் உள்நாட்டு அவசரநிலைப் பிரகடனத்தை முறியடித்ததுடன் நாட்டைப் பீடித்த எதேச்சாதிகார ஆபத்துக்களை முற்றிலுமாக முறியடித்துவிட்டோம் என்று நம்பினோமானால் வெற்றி மயக்கத்தில் முட்டாள்தனமாக இருக்கிறோம் என்றே அர்த்தம்.  இது தொடர்பாக, ஜனதா கட்சி அரசாங்கம் அடிப்படையிலேயே ஒரு ஸ்திரமற்ற தன்மையுடன் பிறந்தது என்பதை நாம் நினைவுகூர்தல் அவசியம். அப்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழ்ந்த ஜன சங்கம் என்னும் கட்சி (இன்றைய பாஜக) தன்னைக் கலைத்துவிட்டு, ஜனதா கட்சியின் ஓர் அங்கமாக மாறியது. ஆயினும், அதன் உறுப்பினர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரகர்களாகத் தொடர்ந்து பணியாற்றியும் வந்தார்கள். இவ்வாறான `இரட்டை உறுப்பினர்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை ஜனதா கட்சிக்குள்ளே எழுந்தது. இதனை ஆர்எஸ்எஸ் வகையறாக்கள் ஏற்காததன் விளைவாக அரசாங்கம் கவிழும் நிலை ஏற்பட்டது.
அவசரநிலைப் பிரகடனம் திணிக்கப்பட்ட 39ஆம் ஆண்டை அனுஷ்டிக்கக்கூடிய இத்தருணத்தில்புதிய ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கம் மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கக்கூடிய இன்றைய நிலையில், இதனை நினைவுகூர்தல் முக்கியம். ஏனெனில் எதேச்சாதிகாரப் போக்குகள் அவசரநிலைப் பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட காலத்தில் வந்ததுபோன்றே வரவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவை பல வழிகளிலும் வர முடியும். நாட்டில் புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின்னர் அவற்றின் கறுப்பு நிழல்கள் ஏற்கனவே விழத் தொடங்கிவிட்டன. அவற்றில் ஒருசிலவற்றை இப்பகுதியில் கடந்த சில வாரங்களாகக் குறிப்பிட்டு வந்திருக்கிறோம்.
நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் கீழான அமைப்புகள் நலிவடையும்பொழுது அல்லது அரித்து வீழ்த்தப்படும்போது எதேச்சாதிகாரப் போக்குகள் இயல்பாகத் தலைதூக்கத் தொடங்கிவிடும். நம்முடைய குடியரசின் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை சாராம்சம் என்பது நாட்டின் உச்சபட்ச இறையாண்மை மக்களையே சார்ந்திருக்கிறது என்பதாகும். “... மக்களாகிய, நாம், ’’ என்றுதான் நம் அரசமைப்புச் சட்டம் துவங்குகிறது. இவ்வாறு மக்களின் இறையாண்மை மக்களால் நாடாளுமன்றத்திற்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மேற்கொள்ளப் படுகிறது. இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது என்பதும்  ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது.  நாடாளுமன்றம் விழிப்புடனிருந்து அரசாங்கத்தை மக்களுக்குப் பதில் சொல்ல வைக்கிறது. இவ்வாறு, அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குப் பதில் கூறக் கடமைப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இவ்வாறு நாடாளுமன்றம் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டது. இவ்வாறு ஒருவர்க்கொருவர் பதில்கூறும் இத்தகைய சங்கிலித்தொடர் திட்டமிட்டு தகர்க்கப்பட்டால் அல்லது வலுவிழக்கச்செய்யப்பட்டால், பின்னர் இதன் விளைவுகள் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்து, எதேச்சாதிகாரம் தலைதூக்குவதற்கு இட்டுச் செல்லும்.
இந்த அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர், இத்தகைய சங்கிலித்தொடரைத் தகர்ப்பதற்கான வேலைகளில் அது இறங்கியிருப்பதைப் பார்க்கிறோம். மத்திய அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்குப் பதிலாக, நாம் இப்பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, `முக்கியமான கொள்கை முடிவுகளைபிரதமர் மட்டுமே எடுப்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர்கள் அமைச்சரவைக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற பொறுப்புஅரித்து வீழ்த்தப்பட்டிருக்கிறது. அதேபோன்றுஅரசாங்கத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு செயலாளர்களும் பிரதமரால் நேரடியாக அழைப்பாணை அனுப்பப்பட்டு அவருக்குத் தாங்கள் ஆற்றிய பணிகள் குறித்து கூற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இதன்மூலம் அரசு செயலாளர்கள் தாங்கள் எந்தத்துறையில் பணியாற்றுகிறார்களோ அந்தத்துறையின் அமைச்சருக்குப் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு இதர அமைச்சர்களின் சுயாட்சி உரிமைகள் அரித்து வீழ்த்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தவிர்க்கமுடியாத வகையில் கூட்டப்பட வேண்டிய நிலையில் இருந்தபோதிலும்கூட நாடாளுமன்றத்தில் ஜனநாயகரீதியிலான விவாதம் அல்லது நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்வதைத் தவிர்க்கும் விதத்தில் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. பிரதமர் அலுவலகத்தில் மிக முக்கியமான பதவிகளில் தனக்கு வேண்டியவர்களை நியமிக்கும் விதத்தில் இவ்வாறு அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.  இத்தகைய போக்குகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கீழான அரசமைப்புச் சட்ட வடிவங்களைக் காட்டிலும் ஜனாதிபதி தலைமையிலான ஆட்சி வடிவங்களையேப் பெரிதும் ஒத்துள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகத்தை அரித்து வீழ்த்திட வகைசெய்யும் அணுகுமுறைகள் எதேச்சாதிகாரத்தை நோக்கியப் பயணமேயாகும்.
பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் ஆகியவற்றை இன்னும் பதினைந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில்டீசல், சமையல் எரிவாயு அல்லது ரயில்வே கட்டணங்கள் போன்று அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளையும், ஒரு நிர்வாக உத்தரவின் கீழ் உயர்த்தி இருப்பதன் மூலம் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு அரசு பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு ஆகியவற்றையே மீண்டும் ஒருமுறை இந்த அரசு அரித்து வீழ்த்தி இருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் கால அட்டவணையைச் சற்றே ஆராய்ந்து பார்க்கையில் ஒவ்வொரு அமைச்சகத் துறை சார்பாகவும்  பட்ஜெட் விவரங்களை விவரமான ஆய்வுக்கு உட்படுத்தக்கூடிய விதத்தில் அவை அமைந்திடவில்லை என்பதைப் பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் இதற்காக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகையில்  பட்ஜெட் ஆவணங்களை நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் ஆய்வு செய்வதற்காக இடையில் மூன்று வாரங்கள் கூட்டத்தொடர் நடைபெறாமல் கால அவகாசம் அளிக்கப்படும். பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்தபின் இதுவரை இத்தகைய நிலைக்குழுக்களே அமைக்கப்படவில்லை. இதன்மூலம், அரசாங்கத்தை நாடாளுமன்றம் ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு இக்கூட்டத்தொடரில் பறிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய ஆரோக்கியமற்ற போக்குகள் மட்டுமல்லாது, நாம் இதற்குமுன் இப்பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, நாட்டின் பல பகுதிகளிலும் மதவெறித் தீயை விசிறிவிடும் போக்குகள் மிகப் பெரிய அளவில் நடைபெற்று வருவதாக செய்திகள் வந்துள்ளன. கூடுதலாக, பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படையான ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகக் கூட `சகிப்புத் தன்மையற்ற போக்குஅதிகரித்து வருவதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நாட்டில் ஜனநாயகத்தின் எதிர்காலம் எந்த அளவிற்கு மோசமாக இருக்கக்கூடும் என்பதற்கு தீய அறிகுறிகளாக கீழே குறிப்பிடப்படும் நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். 
முகநூல் பக்கத்தில் மோடிக்கு எதிராக சில கருத்துக்களைப் பதிவு செய்தமைக்காக சென்ற மாதம் பானாஜியில் பணியாற்றும் கடற்படைப் பொறியாளர் தேவு சோடங்கார் என்பவர் சிக்கலில் மாட்டிக்கொண்டார். அமர்வு நீதிமன்றம் ஒன்று அவரைக் கைது செய்ய ஆணைபிறப்பித்திருக்கிறது. அவரது முன்பிணை மனுவைக் கூட நிராகரித்திருக்கிறது. அதேபோன்று பெங்களூரில் எம்.பி.ஏ. படிக்கும் சையது வகாஸ் என்னும் மாணவர் ஒருவர் மோடிக்கு எதிராக இணையதளத்தில் கருத்தக்களைப் பரப்பினார் என்று குற்றம்சாட்டப்பட்டு சென்ற மே மாதம் கைது செய்யப்பட்டார்.  மே 15 அன்று `புல்லட் ராஜாஎன்று திரைப்படத்தின் கதாசிரியர் புகழ்பெற்ற அமரேஷ் மிஷ்ரா, இதேபோன்று தன்னுடைய டிவிட்டர் அக்கவுண்டில் செய்திகள் பதிவு செய்திருந்தார் எனக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார். கடந்த ஒருசில நாட்களில் மட்டும் கேரள காவல்துறையினர் 18 கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக இரு வெவ்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இவர்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா? தங்களுடைய கல்லூரி சஞ்சிகைகளில் `மோடியை இகழ்ந்துகட்டுரைகள் எழுதியிருந்தார்களாம்.
இவ்வாறுநாம் இன்றைக்குப் பார்க்கும் விஷயங்கள் ஜனநாயகத்திற்கு ஆபத்தை அளிப்பவை மட்டுமல்ல, நம் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் மதவெறித் தீயை விசிறிவிடும் போக்குகளும் அதிகரித்து வருகின்றன. இவை அனைத்தும் தீய அறிகுறிகளாகும். நாம் ஏதோ மிகவும் அவசரப்பட்டு இவ்வாறெல்லாம் கூறுவதாக சிலருக்குத் தோன்றக்கூடும். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்த ஊறுபோலக் கெடும் என்பதால் அனைவரையும் எச்சரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அப்போதுதான் இத்தகைய ஆபத்துக்களை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாம், அவற்றை எதிர்த்துநின்று முறியடித்திடவும் முடியும்.
அவசரநிலைப் பிரகடனத்தின் 39ஆவது ஆண்டை அனுஷ்டிக்கும் இவ்வேளையில் இந்தியக் குடியரசைப் பாதுகாத்திட தயாராக இருக்க வேண்டும் என்று அனைவரும் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட வேண்டும். இந்தத் தடவை ஜனநாயகத்திற்கு எதிரான ஆபத்துக்களை முறியடிப்பதோடு மட்டும் அல்ல, மதச்சார்பின்மை மற்றும்  வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் சமூகத்தின் மகோன்னதமான மாண்பினையும் உயர்த்திப்பிடித்திடவும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியமாகும்.  நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாதுகாப்பது நம்முன் உள்ள பணியாகும். நம் மக்களுக்கு சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்கான போராட்டங்களை வலுப்படுத்துவதற்கு இதுவே அடித்தளமாகும்.
(தமிழில்: ச.வீரமணி)

Monday, June 23, 2014

துயரங்களைப் பெருக்கிடும் பாஜக ஆட்சிபீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்

புதிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்கூட்டத்தொடரை அறிவிப்பதற்கு முன்பே, அது தன்னுடைய முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யக்கூடிய சமயத்தில் பொருளாதார அரங்கில் மிகவும் கவலையளிக்கக்கூடிய அளவில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்திகள் இருதரப்பாருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முதலாவது தரப்பினர், இந்தியாவின் கார்ப்பரேட்டுகள் ஆவார்கள். இரண்டாவது தரப்பினர் நாட்டின் பெரும்பான்மை மக்களாவார்கள்.தேர்தலுக்குப் பிந்தைய நாட்கள் என்பவை பாஜக வின் தேர்தல் பிரச்சாரத்தின்போது நரேந்திர மோடியை இந்திய கார்ப்பரேட்டுகளின் `மீட்பர்என்று வலுக்கட்டாயமாக சித்தரித்திட கோடிகோடியாகக் கொட்டிச் செலவு செய்த தொகையை மேற்படி கார்ப்பரேட்டுகள் மீண்டும் எடுக்கும் காலமாகும்.

இவ்வாறு இவர்கள் செலவு செய்த தொகையில் பெரும்பகுதியை, தேர்தல் முடிந்த மறுநாளன்றே பங்குச்சந்தை வணிகத்தில் `சென்செக்ஸ்குறியீட்டு எண்களை வீங்க வைத்து ஏற்கனவே இவர்கள் மீண்டும் எடுத்துவிட்டபோதிலும், இவர்களின் அகோரப்பசிக்கு இது போதாது என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது பொருளாதாரத்தில் இறங்கு முகம் தொடங்கிவிட்டது. மீண்டும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கி இருக்கிறது. எனவே இந்தியக் கார்ப்பரேட்டுகள் மீண்டும் ஒரு புதிய பொருளாதார சீர்திருத்தங்களுக்கான நடவடிக்கைகள், அதிலும் குறிப்பாக நிதித்துறை தாராளமயம் விரைவில் தொடங்கும் என நம்புகின்றனர்.

இத்தகைய சீர்திருத்தங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு மிகவும் எளியமுறையில் குறைந்த வட்டிவிகிதத்தில் மூலதனத்தைப் பெருக்கிக்கொள்வதற்கான வாய்ப்பினைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும், பொருளாதார அரங்கில் வெளியாகியுள்ள செய்திகள் அவர்களின் நம்பிக்கைகளைக் குலைத்திருக்கிறது. பணவீக்கம்திடீரென்று மேல்நோக்கி ஏறத்தொடங்கிவிட் டது. மொத்த விலைவாசிக் குறியீட்டெண் 2014 ஏப்ரலில் 5.2 சதவீதமாக இருந்தது, 2014 மே மாதத்தில் 6.01 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதன்காரணமாக நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண் வளர்ச்சி இயற்கையாகவே பன்மடங்கு அதிகரித்து விலைவாசிஉயர்வை விண்ணை முட்ட வைத்திருக்கிறது. உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை அடிப்படையாக வைத்துத்தான் பணவீக்கத்தின் எழுச்சி மதிப்பிடப்படுகிறது.

உணவுப் பணவீக்கம் ஏப்ரலில் 8.64 சதவீதமாக இருந்தது மே மாதத்தில் 9.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. உருளைக் கிழங்கு பண வீக்கம்தான் மிக அதிகம். அதாவது 31.4 சதவீதம். இதனைத் தொடர்ந்து பழங்களின் பணவீக்கம் 19.4 சதவீதமாகவும், முட்டைகள், இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றின் பணவீக்கம் 12.47 சதவீதமாகவும் உயர்ந்திருக்கின்றன. உற்பத்திசெய்யப்பட்ட பொருள்களின் பணவீக்கம் 3.55 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இவை அனைத்தும், இயற்கையாகவே, ஏழை, நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் பெரும்பகுதியினரைக் கடுமையாகப் பாதிக்கும்.இத்தகைய நிலைமைகளில், கார்ப்பரேட்டுகள் கனவு காண்பதுபோல நிதித்துறை சீர்திருத்தங்கள் மூலம் அவர்களுக்குத் தேவையான மூலதனம் எளிதாக குறைந்த வட்டி விகிதத்தில் அவர்களுக்குக் கிடைப்பது சாத்தியமில்லை.

ஏனெனில், நவீன தாராளமய சித்தாந்தம் சொல்வது என்னவெனில், வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் பண விநியோகம் இருக்கும் ; அது விலைவாசி உயர்வை மேலும் உயர்த்துவதற்கான நிர்ப்பந்தத்தைக் கொடுக்கும் என்பதாகும். விலைவாசி உயர்வால் அவதிப்படும் ஏழை மக்கள் குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கும் நவீன தாராளமய சீர்திருத்த மேதாவிகள், பணவீக்கம் குறித்து உண்மையிலேயே கவலைப்படுகிறார்கள். ஏனெனில் அது அவர்களின் கொள்ளைலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளுக்கு இடையூறு உண்டாக்கும். இதன்காரணமாகத்தான் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் ஏற்படக்கூடிய பணவீக்கம் மேலும் பெரிய அளவிற்கு நிர்ப்பந்தத்தை அளிக்கும் விதத்தில் மாறக்கூடும். மத்தியஅரசு ஜூன் 18 அன்று அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு தாக்கீது அனுப்பியிருக்கிறது.

அதில் வானிலை ஆய்வு மையம், வரவிருக்கும் மழைக்காலம் மிகவும் வலுவின்றி இருக்கும் என்று எச்சரித்திருப்பதைச் சுட்டிக்காட்டி வறட்சியை எதிர்கொள்ள தயாராயிருக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது.அதற்கு அடுத்த நாளே மத்திய அரசு பணவீக்கம் கடந்த ஐந்து மாதங்களில் இருந்ததைவிட அதிகமாக இருக்கும் விவரங்களை வெளியிட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்து அவசரக்கூட்டத்தை ஏற்பாடு செய்தது. எவராலும் நம்பமுடியாத அளவிற்கு இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன தெரியுமா? கள்ளச்சந்தைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பதாகும். உண்மையிலேயே இவ்வாறு செய்யப்பட்டாலும்கூட, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட இது போதுமான தல்ல.

மேலும் கூடுதலாக இரு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெகுகாலமாகவே கூறி வருகிறது. முதலாவது, அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் மீதான அனைத்து ஊக வர்த்தகங்களுக்கும் தடை விதித்திட வேண்டியது உடனடித்தேவை. ஆயினும் இத்தகைய ஊகவர்த்தகத்தின் மூலம்கொள்ளை லாபம் ஈட்டிவரும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் நம் நாட்டு வர்த்தகப்புள்ளிகள் (இவர்கள்தான் பாஜகவின் சமூகத் தளத்தின் முக்கியமான அடிப்படை மூலக்கூறாக இருப்பவர்கள்) அரசாங்கம் இதனை மேற்கொள்ள அனுமதித்திட மாட்டார்கள். பாஜக இந்நடவடிக்கையை மேற்கொள்ள மறுத்திருப்பதன் மூலம் அதன் நலன்கள் எவரை சார்ந்திருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது.

எனவே இக்கூட்டம் கொள்ளை லாபம் ஈட்ட அனுமதிப்பதன் மூலம், மக்கள் மீதான துன்ப துயரங்கள் மேலும் அதிகரிக்கும். இரண்டாவதாக, மத்திய அரசாங்கம் மிக அதிக அளவில் உணவு தானிய இருப்பைத் தங்கள் கிடங்குகளில் வைத்திருப்பதைத் தொடர்கிறது. பொது விநியோக முறையில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பத்தினருக்கு, குறைந்தவிலையில் இவற்றை விநியோகம் செய்வதற்காக, மாநில அரசுகளுக்கு விடுவித்திட அல்லது அரசுக் கட்டுப்பாட்டில் வெளிச்சந்தையில் கட்டுப்பாட்டு விலையில் இவற்றை விற்பனை செய்திட முன்வந்தால், அவற்றைத்தொடர்ந்து தானாகவே உணவுப் பொருள்களின் விலைகள் குறையும். ஆயினும் இதனையும் செய்திட பாஜக அரசு மறுக்கிறது. மாறாக, இதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடவே முனைந்துள்ளது.
மக்கள் மீதான சுமைகளை மேலும் அதிகரித்து அதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தைப் பெருக்கிடவே அது திட்டமிட்டுள்ளது. ஒரு புது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பைஏற்றபின் குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வில் ஆற்றிடும் உரையானது அப்புதிய அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலையும், அப்புதிய அரசு முதலாண்டில் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை களையும் எடுத்தியம்பும். இவ்வாறு எவ்விதமான விவரங்களையும், முன்னுரிமை நடவடிக்கைகளையும் குடியரசுத் தலைவர் உரை கொண்டிருக்கவில்லை.மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட குஜராத் மாடல் வளர்ச்சி’’ என்றால் என்ன என்பதும், அரசாங்கத்தின் உண்மையான நிகழ்ச்சிநிரல் என்ன என்பதும், நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரதமர் ஆற்றியிருக்கும் உரையிலிருந்து வெளி வந்திருக்கிறது. ஜூன் 13 அன்றுஅவர் ஆற்றிய உரையில் கடினமான பொருளாதார முடிவுகள்’’ குறித்துப் பேசியிருக்கிறார். தாங்கள் பொறுப்பேற்றபோது முந்தையஅரசாங்கம் அனைத்தையும் காலிசெய்து விட்டுப் போய்விட்டார்கள் என்றும் எதையும்விட்டுவைக்க வில்லை என்றும் கூறியிருக்கிறார்.

எனவே, நிதி ஒழுங்கை மீட்டெடுப்பதற்காக கடும் நடவடிக்கைகள்’’ மூலம் மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறி தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி இருக்கிறார். கடந்த பத்தாண்டு காலமாக ஒரு செயல்படும் அரசையே மக்கள் பார்க்கமுடியவில்லை,’’ என்று அவர் தன்னுடைய சமூக இணையதளமான ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் மேலும், “நாட்டின் நலன்களுக்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கும் தருணம் வந்திருக்கிறது,’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பத்தாண்டுகளாக இருந்த செயல்படா அரசாங்கம்’’ என்ற முந்தைய அரசாங்கம் எழுப்பிய முழக்கங்களுக்கும், இவர்களது கூற்றுகளுக்கும் எந்தவிதத்திலாவது வித்தியாசம் இருக்கிறதா?முந்தைய அரசாங்கத்தின் பிரதமர் மன்மோகன் சிங் என்ன சொன்னார்? “மக்கள் தங்கள் வயிற்றை இறுகக் கட்டிக்கொள்ள வேண்டும்,’’ என்றார். விளைவு, தாங்கமுடியாத அளவிற்குப் பணவீக்கம், வேலையின்மை அதிகரிப்பு, உழைக்கும் மக்களின் பெரும்பான்மையினர் மீது சால்லொண்ணா துன்ப துயரங்கள்.

இவற்றின்மூலம் மக்கள் மத்தியில் ஆட்சியாளர்களுக்கு எதிராக இருந்த அதிருப்தியை நன்கு அறுவடை செய்து ஆட்சிக்கு வந்துள்ள பாஜக இப்போது மக்களைப் பார்த்து முந்தைய அரசாங்கம் அளித்துவந்த, மக்களைக் கொஞ்சம்கொஞ்சமாகக் கொல்லும் அதே மருந்தை மேலும் கூடுதலாக எடுத்துக்கொள்ள தயாராயிருங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. தாங்கள் எடுக்கப்போகும் கடுமையான நடவடிக்கைகள்’’ என்ன என்பதை பிரதமர் இன்னும் கூறவில்லை. ஆயினும் அவர் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என இந்தியக் கார்ப்பரேட்டுகள் ஊடகங்கள் மூலம் வெளியிட்டிருக்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்திலிருந்து வெளிவர வேண்டும்என்ற பெயரில் தங்களுக்கு வரிச் சலுகைகள்அளித்திட வேண்டும் என்று தொழிலதிபர்கள் சங்கங்கள் கோரிக்கை வைப்பதில் முந்திக்கொண்டுள்ளன. சென்ற ஐமுகூ அரசாங்கம்சென்ற பட்ஜெட்டில் சுமார் 5.73 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச்சலுகைகள்அளித்ததை சற்றே நினைவுகூர்க.

அதுமட்டுமல்ல, அதிகாரப்பூர்வ பதிவேடுகளின்படி, வசூலிக்கப்படாத நேரடி வரி வசூல் மட்டும் 5.1 லட்சம் கோடி ரூபாயாகும். இவ்வாறு பத்துலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான நியாயமான தொகை, அரசாங்கத்திற்கு வரவேண்டிய தொகை, அரசாங்கத்திற்கு அளிக்கப்படாமல் இவர்களால் மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த லட்சணத்தில்தான் இந்திய கார்ப்பரேட்டுகள் தங்களுக்கு மேலும் வரிச் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர். சென்ற பட்ஜெட் மதிப்பீட்டின்படி நிதிப் பற்றாக்குறை 5.20 லட்சம் கோடி ரூபாயாகும். இதுவரை கார்ப்பரேட்டுகளுக்கு அளித்த வரிச் சலுகைகள் அவர்களுக்கு இவ்வாறு அளிக்கப்படாதிருந் தாலேயே இந்த பற்றாக்குறையை இல்லாது செய்திருக்க முடியும்.

மேலும் அரசாங்கத்திடம் கணிசமான அளவிற்கு உபரியாக தொகை மிஞ்சி இருக்கும். அவற்றின் மூலம் நாட்டிற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இருக்க முடியும். அதனைத் தொடர்ந்து நம் நாட்டின் தொழில் வளர்ச்சியையும் அதிகரித்திருக்க முடியும். ஆயினும் இது எதுவும் நடைபெறவில்லை.பாஜக தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி உதவி அளிப்பதில், இந்திய ஜனநாயக வரலாற்றில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, முன்னின்ற இந்திய கார்ப்பரேட்டுகள், இந்த அரசாங்கத்தின் கொள்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதில் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். எனவே மக்களின் ஆசை அபிலாசைகளைப் பற்றி இவர்கள் கவலைப்படப் போவதில்லை.

இந்திய கார்ப்பரேட்டுகள் கசியவிட்டுள்ள செய்திகளின்படி, பிரதமர் அநேகமாக அறிவிக்க இருக்கும் 15 கடினமான நடவடிக்கைகள் என்பனவற்றில் டீசலுக்கு அளித்துவரும் மானியத்தைப் படிப்படியாக குறைத்து இல்லாமல் ஒழித்துக்கட்டுவது, சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை மாதந்தோறும் அதிகரிப்பது, உணவுப் பாதுகாப்பை ஒழித்துக்கட்டுவது, இரசாயன உரத்திற்கு அளித்து வரும் மானியத்தை ஒழிப்பது, நிலம் கையகப்படுத்தும் முறைகளை எளிதாக்கக்கூடிய விதத்தில் சட்டத்திருத்தங்கள் கொண்டுவருவது, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை உருக்குலைப்பது, தொழிலாளர்களிடம் வேலை வாங்கியபின் அவர்களைத் துரத்தி அடிக்கக்கூடிய விதத்தில் தொழிலாளர்சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டுவருதல், ரயில் கட்டணம் உயர்வு, வேளாண் பொருள்களுக்கு அளித்துவரும் குறைந்தபட்ச ஆதார விலைகளை உயர்த்துவதன் மூலம் உணவு மானியங்களை வெட்டுதல், ஆகியவை உள்ளடங்கி இருக்கின்றன. இதில் கடைசியாகக் கூறப்பட்டுள்ள நடவடிக்கை மூலம் விவசாய நெருக்கடி மேலும் கடினமாகும். மக்கள் மீது சுமைகளை ஏற்றுவதன் மூலம் கொள்ளை லாபம் ஈட்டிட எத்தகைய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கவிருக்கிறது!அதே சமயத்தில், சர்வதேச நிதியம் ஜூன் 16 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் முந்தைய மதிப்பீடான 2.8 சதவீதத்திலிருந்து 2014ல் 2 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டி இருக்கிறது.

இது நம் இந்திய கார்ப்பரேட்டுகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. ஏனெனில், உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக நம் ஏற்றுமதிகள் ஏற்கனவே கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. மேற்படி சர்வதேச நிதியத்தின் கூற்றுப்படி இது மேலும் வீழ்ச்சியடையும். எனவே, இந்திய கார்ப்பரேட்டுகள் தங்கள் கொள்ளை லாப வேட்டைக்கு முழுமையாக இந்திய சந்தையையே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். எனவேதான், பொதுத்துறை நிறுவனங்களை முற்றிலுமாக தனியாருக்குத் தாரை வார்த்திட வேண்டும் என்று அவை அதிகமான அளவில் குரல் எழுப்பி வருகின்றன. எந்த அளவிற்குத் தெரியுமா? பிரதமர்/நிதி அமைச்சர் இவ்வாறு தனியாருக்குத் தாரை வார்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாக செய்யக்கூடாது என்றும், இப்போது இருக்கும் சட்டங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறாமலேயே, ஒரு நிர்வாக உத்தரவின் மூலமே செய்திட வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறார்கள்.

மேலும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியே யாக வேண்டும் என்ற நிலை வரும் எனில், தற்போது மாநிலங்களவையில் அதற்குப் பெரும்பான்மை இல்லாததால், “இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்றுங்கள்’’ என்றும் இந்த அரசுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். இதைவிட வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? பாஜக தேர்தல் பிரச்சாரத்தின்போது முழங்கிய முழக்கங்களின் உண்மை சொரூபங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் மக்களின் துன்ப துயரங்கள் பல்கிப்பெருக இருக்கின்றன. பெரும்திரளான மக்களைஇவர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அணிதிரட்டிப் போராட வைப்பதன் மூலமே இவர்களின் இத்தகைய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட முடியும். வரவிருக்கும் காலங்களில்இத்தகைய மக்கள் போராட்டங்களை வலுப் படுத்திடுவோம்.

தமிழில்: ச.வீரமணி


Friday, June 13, 2014

`நல்லாட்சி’ சந்தேகம்தான்!


நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு விட்டது. பதினாறாவது மக்களவைத் தேர்தல்கள் முடிந்தபின்னர் நடைபெற்ற முதல் கூட்டத்தொடர் தேசிய கீதத்துடன் சம்பிரதாயமான முறையில் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. சமீப காலத்தில் என் நினைவுக் கெட்டியவரை அநேகமாக மிகவும் குறுகிய நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இதுதான். இக்கூட்டத்தொடரின் ஒரேயொரு நிகழ்ச்சி நிரல் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடரில் முதல் நாளன்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு சம்பிரதாயமான முறையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவதுதான். கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது விவாதங்கள் நடைபெற்று மூன்றாம் நாள் நிறைவேற்றப்பட்டு, கூட்டத்தொடர் முடிவடைந்தது. வழக்கமான கேள்வி நேரம் இரு அவைகளிலும் இல்லை.
அதேபோன்று பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளையும் உறுப்பினர்கள் எழுப்புவதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீதான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, பரிசீலிக்கப்படவும் இல்லை. சமீபத்தில் என் நினைவுக் கெட்டியவரை, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிப்பதற்கும் அப்பாற்பட்டு வேறெந்த நாடாளுமன்ற நடவடிக்கைகளும் நடைபெறாது முடிந்த கூட்டத்தொடர் இதுவேயாகும்.பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்தபின்னர் குடியரசுத் தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தொடரில் உரையாற்றுவதும், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் எடுக்க வைப்பதும், வழக்கமான ஒன்றுதான். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தின்படி மேற் கொள்ளப்படவேண்டிய சம்பிரதாயமான பழக்க வழக்கங்களுக்கு மேல் இக்கூட்டத்தொடரில் எதுவும் நடந்திடவில்லை.
பொதுவாக, புதிய அரசு பதவியேற்கும்போது, குடியரசுத்தலைவர் உரையில் இந்த அரசு முதலாண்டில் என்ன என்ன திட்டங்களை அமல்படுத்த இருக்கிறது என்று குறிப்பிடப்படும். எனவே அதிலிருந்து புதிய அரசு எந்தத் திசைவழியில் பயணிக்க இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இந்த அரசு முன்னுரிமைகொடுத்து முக்கியமாக பரிசீலிக்க இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்படும் எனவும் ஊகிக்கப்பட்டது. உதாரணமாக, ஐமுகூ-2 அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற சமயத்தில், அப்போதைய குடியரசுத் தலைவர் அந்த அரசின் முன்னுரிமைத் திட்டங்கள் எவை எவை என்றும் அவற்றை நிறைவேற்ற முதல் நூறு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். அவ்வாறு ஐமுகூ அரசாங்கம் அளித்த உறுதிமொழிகளை அது நிறைவேற்றவில்லை என்பது வேறு விஷயம். இப்போது, குடியரசுத் தலைவர் உரையில் அவ்வாறு எவ்விதமான முன்னுரிமைத் திட்டங்களும் குறிப்பிடப்படவில்லை. இப்போது குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை என்பது இன்றைய ஆளும் கட்சியானது தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்திய தேர்தல் முழக்கங்களின் தொகுப்பும் மற்றும் பாஜக தேர்தல் அறிக்கையின் புதியவடிவமும் ஆகும்.
எனவே இந்த அரசாங்கம் எந்தத் திசைவழியில் செல்ல இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நாம் நாடாளுமன்றத்தின் அடுத்தக் கூட்டத்தொடர் வரைக்கும் -அதாவது முறையான பட்ஜெட் கூட்டத்தொடர் வரைக்கும் - காத்திருக்க வேண்டியிருக்கும். அநேகமாக அக்கூட்டத்தொடர் ஜூலை முற்பகுதியில் ஏதேனும் ஒருநாளில் துவக்கப்படக்கூடும். இது தொடர்பாக இதுவரை எவ்வித அறிவிப்பும் இல்லை. இப்போது நமக்கு ஏற்பட்டுள்ள அனுபவத்தின்படி எப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று எவராலும் நிச்சயமாகக் கூற முடியாது. இந்த அரசாங்கம் `நல்லாட்சிஉட்பட பல முழக்கங்களை வாரி வழங்கியதன் அடிப்படையில் ஆட்சிக்கு வந்திருக்கிறது. நல்லாட்சி என்பதற்குப் பல்வேறு சிறப்பியல்புகள் உண்டு. முதலாவது, மக்களின் உடனடிப் பிரச்சனைகள் மீதான உறுதிமொழிகளை எப்படி நிறைவேற்றப்போகிறார்கள் என்பது உட்பட தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் நிகழ்ச்சிநிரல் குறித்து மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் போதுமான தகவல்களை அவர்கள் தெரிவித்திட வேண்டும்.
இரண்டாவது, இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் கீழ் அமைந்துள்ள அமைப்புகளில் போதுமான அளவிற்கு ஒரு பொருள்பொதிந்த விவாதத்திற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். மூன்றாவது, அவ்வாறு உரிய பரிசீலனைகள் மேற்கொண்டபின், நாடாளுமன்ற நடவடிக்கைத் தொடர வேண்டும். இதேபோன்று பல்வேறு சிறப்பியல்புகளுடன், நல்லாட்சி என்பதன் பொருள் அரசாங்கம், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நாடாளுமன்றத்திற்கு சொல்லியாக வேண்டும். இதனை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைத் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குச் சொல்லியாக வேண்டும். இதுதான் நம் முடைய அரசமைப்புச் சட்டத்தின் திட்டப்பின்னணியாகும்.
அதாவது, இவ்வாறு மக்கள்தான் நாட்டின் விவகாரங்களில் மிக உயர்ந்த அதிகாரங்களைப் பெற்றிருக்கிறார்கள். இத்தகைய சிறப்பியல்புகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, இந்த அரசாங்கம் செயல்படத் தொடங்கியிருப்பதன்மூலம், நாட்டு மக்களுக்கு இது மிகவும் மோசமான முறையில் பல் வேறு தீய அறிகுறிகளையே அனுப்பிக் கொண்டிருக்கிறது. அவசரச்சட்டங்களைப் பிறப்பிப்பதன்மூலம் இந்த அரசாங்கம் தன் வேலையைத் தொடங்கி இருக்கிறது. அவ்வாறு அவசரச்சட்டம் பிறப்பித்தால் அதனை அடுத்து நடைபெறக்கூடிய நாடாளுமன்றக்கூட்டத்தொடரில் பரிசீலனைக்காகவும், ஏற்புரைக்காகவும் தாக்கல் செய்திட வேண்டும் என்பது மரபு. ஆனால் இந்த அரசு நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அவ்வாறு இச்சட்டங்களைத் தாக்கல் செய்திடவும் இல்லை. இதுகுறித்துக் கேட்டபோது, அடுத்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வார்களாம். அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத கால அளவிற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக மாற்றாவிட்டால், அது, சட்டப்படி, காலாவதியாகிவிடும்.அவசரச்சட்டங்கள் மூலம் ஆட்சி நடத்துவதென்பது நாடாளுமன்றத்தைப் பிடித்த சனியன் என்று பொதுவாகக் கருதப்படும்.
இந்த அரசாங்கம், தனக்கு மிகவும் தெளிவான முறையில் பெரும்பான்மை கிடைத்திருக்கிற போதிலும்கூட, `அவசரச்சட்டவழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. நிச்சயமாக இது `நல்லாட்சிக்கு அழகல்ல. நல்லாட்சிக்கான இலக்கணங்கள் இந்த அரசின் மேலும் பல நடவடிக்கைகள் மூலம் சந்தேகத்திற்கிடமளித்துள்ளது. முன்பு நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த நபர், தற்போது இந்த அரசின் கீழ் தனிப்பொறுப்புடன் இணை அமைச்சராக ஆகி இருப்பவர். முந்தைய அரசாங்கத்தால் ராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் குறித்து வெளிப்படையாகவே எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கீழ், ஓர் அரசாங்கம் என்றால் அது அரசாங்கம்தான். ஒரு குறிப்பிட்ட காலத்தில் எந்தக் கட்சியின் கீழ் அது ஆட்சியில் இருந்திருந்தாலும் சரி. தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுபவர்கள் முந்தைய அரசாங்கம் மேற்கொண்ட முடிவுகளை மதிக்க வேண்டும்.
ஏனெனில் பல விஷயங்களில் ஒரு முடிவினை எடுப்பதற்குமுன்பு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பல்வேறு நடைமுறைகள் மற்றும் விதிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர்தான் முடிவுகள் எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவினை பாஜகவின் புதிய இணை அமைச்சர் கேள்விக்கு உட்படுத்துகிறார், வெளிப் படையாகவே தன்னுடைய `ட்விட்டர்இணையத் தளத்தில், இவ்வாறு புதிதாகப் பொறுப்பேற்க இருக்கும் ராணுவத் தலைமைத் தளபதி அப்பாவிகளைக் கொன்றவர்,” என்றும், “கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டவர் என்றும், “கிரிமினல்களுக்கு அடைக்கலம் கொடுத்துக்கொண்டிருக்கிறவர்,’’ என்றும் குற்றஞ்சாட்டி இருக்கிறார். ராணுவத் தலைமைத் தளபதியாகப் பொறுப் பேற்க இருப்பவர் குறித்து, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவரும், முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதியுமான ஒருவர், இவ்வாறு கடுமையான முறையில் கண்டனங்கள் தெரிவித்திருப்பது உண்மையில் குளவிக் கூட்டுக்குள் கையை விட்டவர் கதை போலாகிவிட்டது.
இதனால் மிகவும் தர்மசங்கடத்திற்குள் ளாகி இருக்கும் பாஜக அரசாங்கம் தன்னு டைய ராணுவ அமைச்சரின் மூலமாக நாடாளுமன்றத்தில் முந்தைய அரசாங்கம் இவ்வாறுராணுவத் தலைமைத் தளபதியை நியமித்திருப்பது முற்றிலும் சரிதான் என்று கூற வைத்திருக்கிறது. இந்த அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடைபெறும் வழக்கில்ஜூன் 10 அன்று ஒரு பிரமாண உறுதிவாக்கு மூலம் (sworn affidavit) சமர்ப்பித்திருக்கிறது. அதில் அது, இவ்வாறு புதிதாக ராணுவத் தலைமை தளபதி நியமனம் செய்யப்பட்டிருப்பது சரி என்றும், முந்தைய ராணுவத்தலைமைத் தளபதியும் தற்போதைய அமைச்சரும் அவர் மீது மேற்கொண்டுள்ள ஒழுங்குநடவடிக்கை சட்டவிரோதமானது’’ (“illegal”), சம்பந்தமற்றது (extraneous”) மற்றும் முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொண்ட ஒன்று”(“pre-meditated”) என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த உறுதிவாக்குமூலத்தில் தற்போதைய மத்திய அமைச்சர், 2012 மே மாதத்தில், பொறுப்பேற்க விருக்கும் ராணுவத்தலைமைத் தளபதிக்கு எதிராக மேற்கொண் டுள்ள ஒழுங்கு நடவடிக்கைக்கு எந்த அடிப்படையும் இல்லை அல்லது பதிவேடுகளின் படி ஆதாரமும் இல்லைஎன்றும் கூறியிருக்கிறது.
`நல்லாட்சிஅளிப்போம் என்று உறுதிமொழி அளித்துள்ள புதிய பாஜக அரசாங்கத்திற்கு உண்மையிலேயே இது ஓர் அசாதாரணமான நிலைதான். முந்தைய அரசாங்கம் நியமனம் செய்த புதிய ராணுவத் தலைமைத் தளபதி நியமனம் செல்லும் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பதும், அவ்வாறே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண உறுதிவாக்குமூலம் சமர்ப்பித்திருப்பதும், முன்பு நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்து, தற்போது மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவருக்கு எதிரான ஒன்று என்பது தெள்ளத்தெளிவானதாகும். தன் சொந்த அமைச்சரைவை சகா குறித்தே மிகவும் கடுமையான முறையில் அரசாங்கம் கண்டித்திருப்பதானது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. சம்பந்தப்பட்ட அமைச்சர் வெளிப்படையாகவே மன்னிப்பு கோரி தன் செயலினை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது மத்திய அமைச்சரவையிலிருந்து தானாகவே விலகிக் கொள்ளவேண்டும்.
அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் பயபக்தியுடன் அளித்துள்ள பிரமாண உறுதி வாக்குமூலத்தில் அமைச்சர், ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த சமயத்தில் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக்கு எவ்வித அடிப்படையும் இல்லை அல்லது பதிவேடுகளின்படி ஆதாரமும் இல்லை,’’ என்று கூறி அவரது செய்கையை வெளிப்படையாகக் கண்டித்திருப்பது மிகவும் மோசமான ஒன்று. இதனைச் சரிசெய்திடாமல் இந்தப் புதிய பாஜக அரசாங்கம் தன்னுடைய நடவடிக்கைகளை `வழக்கமான முறையில் தொடர்வதுஎன்பது சாத்தியப்படாது. இப்புதிய அரசாங்கம் இந்த அமைச்சரைத் தன்னுடைய அமைச்சரவையிலேயே தொடர்ந்து வைத்திருக்கப்போகிறதா? நல்லாட்சி அளிப்போம் என்று உறுதிமொழி அளித்துள்ள இப்புதிய அரசாங்கத்திற்கு இவ்வாறு மிகவும் சிக்கலான முறையில் சோதனை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே, “இந்த அரசாங்கத்திடமிருந்து இரு கோணங்களிலிருந்து வரும் தாக்குதல்களையும் சந்திக்கத் தயாராயிருக்குமாறுநாம் மக்களை எச்சரித்திருந்தோம். முதலாவது, பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையில். நமக்குக் கிடைத்திருக்கிற அனைத்து அறிகுறிகளிலிருந்தும், மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்படும். இரண்டாவது, மதவெறிக் கூர்மைப்படுத்தப்படுவது தொடர்பானது. தேர்தல்கள் முடிந்தவுடனேயே நாட்டின் பல பகுதிகளில் மதவெறியாட்டங்கள் அதிகமாகி இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் புனேயில் பொறியாளர் மாணவர் ஒருவர் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற இந்துத்துவா அமைப்பு ஒன்றால் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். ஆட்சியாளர்களின் இத்தகைய நடவடிக்கைகளால் மக்களின் துன்ப துயரங்கள் மேலும் அதிகமாகும். இவ்வாறு இரு முனைகளிலிருந்தும் வரும் இவர்களது தாக்குதல்களை முறியடித்திடவும், அதன் மூலம் நாட்டின் நலன்களைக் காத்திடவும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திடவும் வலுவான வகையில் மக்கள் இயக்கங்களைக் கட்டி எழுப்பிடுவோம்.
(தமிழில்: ச.வீரமணி)


Sunday, June 8, 2014

தீய அறிகுறிகள்


புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மத்திய அரசாங்கம் குறித்து அதற்குள் விமர்சனங்களை அளிப்பது என்பது சரியல்ல. ஒவ்வொரு பொதுத்தேர்தலுக்குப்பின்னரும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, புதிதாக மக்களவை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டபின்னர், குடியரசுத் தலைவர். நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடரில்,   உரையாற்றுவார். இவ்வாறு அவர் உரையாற்றுவது 2014 ஜூன் 9 திங்களன்று நடைபெறவுள்ளது. அவருடைய உரையில், குடியரசுத் தலைவர். `அவருடைய அரசாங்கம் எதிர்காலத்தில் ஆற்ற இருக்கும் பணிகள் குறித்த பொதுவான திட்ட வரையறைகளை முன்வைப்பார். இது வழக்கமாக முன்னுரிமைகொடுத்து, அரசு அடுத்த நூறு நாட்களில் நிறைவேற்றுவதாக மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகளாக அமைந்திருக்கும். இவ்வாறு இவர்கள் அளித்திடும் திட்டம் மற்றும் இவற்றை நிறைவேற்றிட இவை மேற்கொள்ளும் பாணி ஆகியவை நிறைவுற்றபின்னர்தான் இவை குறித்த விமர்சனங்களை  இயல்பானமுறையில் வைத்திட முடியும்.
ஆயினும், `நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கசிந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களிலிருந்து, அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் குறித்த சமிக்ஞைகள்அவ்வளவு நன்றாக இல்லை. ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது நாம் ஏதோ குடியரசுத் தலைவர் தலைமையிலான ஆட்சியை நடத்துவதுபோல அமைந்திருந்ததைப் பார்த்தோம். இப்போது தற்போதைய நாடாளுமன்ற ஆட்சி அமைப்பையே அவ்வாறு மாற்றிட (modify) கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதுபோலத் தெரிகிறது.
பிரதமர் மட்டுமே பொறுப்பா...?
புதிய அரசாங்கம் பதவிப் பிரமாணம் மேற்கொண்டதற்கு அடுத்த நாள் காலை, பிரதமரின் அறிவுரைக்கிணங்க, கேபினட் அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள்குடியரசுத் தலைவரின் மாளிகை யிலிருந்து ஒரு பத்திரிகைச் செய்தியாக வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் பட்டியல், இயற்கையாகவே, பிரதமரின் பொறுப்புக்களிலிருந்து தொடங்குகிறது. பல்வேறு துறைகளுக்கு மத்தியில், பட்டியல் அனைத்து முக்கிய கொள்கைப் பிரச்சனைகளையும் உள்ளடக்கி இருக்கிறது. இது வழக்கத்திற்கு விரோதமானது. அரசாங்கத்தின் கேபினட் வடிவ அமைச்சரவையில், கேபினட் அமைச்சரவைஅரசாங்கம் பின்பற்றக்கூடிய கொள்கைகளையும் திட்டங்களையும் ஒட்டுமொத்தத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதே சமயத்தில்ஒவ்வொரு கேபினட் அமைச்சரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை சம்பந்தமாக அவசியமான முடிவுகளையும்  மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கேபினட் அமைச்சரவையில் ஒவ்வோர் அமைச்சருக்கும் தனிப்பட்ட முறையில் பொறுப்புகள் அளிக்கப்பட்டிருப்பதுடன், கூட்டு செயல்பாட்டின் ஜனநாயக வடிவமும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. `அனைத்து முக்கிய பிரச்சனைகள் மீதும் பிரதமர் மட்டுமே பொறுப்பு எனில், பின்  இப்போதைய அமைப்புமுறை குடியரசுத்தலைவர் வடிவ ஆட்சியை நோக்கி தள்ளப்படுகிறது என்றே கொள்ள வேண்டும். மேலும், அரசின் அனைத்து செயலாளர்களும் தங்கள் துறை சம்பந்தப்பட்ட விவரங்களைத் தங்கள்துறை சார்ந்த அமைச்சர்களுக்குத் தெரிவிப்பதோடு பிரதமருக்கும் நேரடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பதாக  ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.  மேலும், முந்தைய அரசாங்கம் பின்பற்றி வந்த `அமைச்சர்கள் குழுக்கள் (`Group of Ministers)மற்றும் `அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுக்கள் (`Empowered Group of Ministers) ஆகிய இரண்டையுமே கலைத்துவிட்டதாகவும் ஊடகங்களுக்குத் `தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன. இத்தகைய குழுக்கள் சில முக்கியமான பிரச்சனைகள் குறித்து பரிசீலிப்பற்கான ஓர் இடைப்பட்ட நிர்வாக ஏற்பாடாகத்தான் இருந்தன. இத்தகைய குழுக்களின் பரிசீலனைகள் முடிந்தபின்னர் கேபினட் அமைச்சரவையில் உரிய தீர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இப்போது இத்தகைய ஏற்பாடுகள் கைவிடப்பட்டு அனைத்தும் நேரடியாக பிரதமருக்கோ அல்லது பிரதமர் அலுவலகத்திற்கோ செல்லும்.
ஜனநாயகத்தின் அடித்தளம் மறுதலிப்பு
இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்தையும் மிகவும் கூர்மையாகக் கண்காணிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அரசியல் நிர்ணயசபை மிக நீண்ட நெடிய விவாதங்களுக்குப்பின்னர்தான் நாடாளுமன்ற அமைச்சரவை ஆட்சி வடிவம்தான், குடியரசுத்தலைவர் ஆட்சி வடிவத்தைவிடஉகந்தது என முடிவுக்கு வந்தது.  நமது நாட்டின் வளம்பொருந்திய வேற்றுமைகள் மற்றும் பன்முகத்தன்மைகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான், அரசியல் நிர்ணயசபை அரசமைப்புச் சட்டத்தில்  மக்கள்தான் இறுதி இறையாண்மை அதிகாரத்தைப் பெற்றிருப்பவர்கள் என்ற பொருளைத்தரக்கூடிய விதத்தில், முதல் பத்தியிலேயேஇந்திய மக்களாகிய...நாம், என்று தீர்மானித்தது. மக்கள் இவ்வாறு தங்கள் இறையாண்மையை தாங்கள் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் தீர்மானிக்கிறார்கள். அரசாங்கம் அந்த மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இதனைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகளும், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இதை மீளவும் உறுதிப்படுத்துவதற்காகத்தான் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.  இத்தகைய அமைப்பில் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டுவந்தால் அது நம் ஜனநாயகத்தின் அடித்தளங்களையே மறுதலிக்கக்கூடிய விதத்தில் எதேச்சாதிகாரப் போக்கிற்கு இட்டுச்செல்லும் ஆபத்தை உள்ளடக்கி இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் புதிய அரசாங்கம் உருவாக்கிக் கொண்டிருக்கும் பத்தாண்டு கால நிகழ்ச்சி நிரல் பார்க்கப்பட வேண்டும். நாம் நம் நாடாளுமன்றத்தை ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை மறுபடியும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொள்வது அவசியம். 1975இல் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டு இதனை மாற்றக்கூடிய விதத்தில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. அத்தகைய எதேச்சாதிகார அணுகுமுறையை நாட்டு மக்கள் தங்கள் உறுதியான போராட்டத்தின் மூலம் முறியடித்து, நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுத்தார்கள்.
அவசரச் சட்டத்துக்கு அவசியம் என்ன?
அதேபோன்று அரசாங்கம் அவ்வப்போது அவசரச்சட்டங்கள் வெளியிடுவதன் மூலம் தங்கள் பணிகளைத் துவக்குவதும் கவலைக்குரிய ஒன்றாகும். முதலாவதாக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டம் பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக நபரைத் தேர்வு செய்வது தொடர்பானதாகும்.  தனக்கு வேண்டிய ஒருவருக்கு இப்பதவியை அளிக்க வேண்டும் என்பதற்காக நடைமுறையிலிருந்த சட்டமே மாற்றப்பட்டிருப்பது, உண்மையில், முன்னெப்போதும் இல்லாத ஒன்று.    இரண்டாவதாக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச்சட்டம் சமீபத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் எல்லைகளை மீளவும் மாற்றியமைப்பது தொடர்பானதாகும். ஆந்திரப்பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றபோது, போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதி இரு மாநிலங்களுக்கும் இடையே பிரிக்கப்படாது என்ற பரிந்துரையை ஏற்றுக்கொள்ள ஐமுகூ-2 அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இது தொடர்பான அவசரச் சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் அப்போது ஒப்புதல் அளிக்கவில்லை. பொதுத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் அவ்வாறு அவரால் ஒப்புதல் அளிக்கப்பட வில்லை. நாடாளுமன்றம் கூட்டப்படவிருக்கக்கூடிய நிலையில் இப்போது இது தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தவிர்க்கவியலாக சூழ்நிலைகளில் மட்டுமே அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்படுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகும்.  மற்றபடி சட்டம் தொடர்பான அனைத்து விஷயங்களும் நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் ஒரு வாரத்தில் கூடவிருக்கையில் அதுவரைக்கும்கூட காத்திருக்கமுடியாதது ஏன் என்பது புதிராக இருக்கிறது. அவசரச் சட்டங்கள் மூலம் ஆட்சி செய்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைரீதியாக எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறது. பாஜக கூட கடந்த காலத்தில் இத்தகைய `அவசரச்சட்ட ஆட்சியை எதிர்த்ததுதான். தவறான தகவல்கள்
புதிய கேபினட் அமைச்சர்களின் கல்வித்தகுதி குறித்தும் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளன. மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் தற்போது சாலை விபத்து ஒன்றில் துயரார்ந்தமுறையில் இறந்த கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆகியோர் தாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தன்னிச்சையாக அளித்த உறுதிவாக்குமூலங்களில் தங்கள் கல்வித்தகுதி குறித்து தவறான தகவல்களை அளித்திருக்கிறார்கள் என்று புகார்கள் எழுந்துள்ளன. வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்னும் அந்தஸ்தை,   பல முதிர்ச்சிபெற்ற மேற்கத்திய ஜனநாயக நாடுகள் எல்லாம் கொண்டுவருவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே, சாதி, சமயம், பாலினம், பட்டதாரி, பட்டாதாரர் என எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது, வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அளித்த நாடு, இந்தியா என்று நாம் அனைவருமே பெருமைப்பட்டுக் கொண்டிருந்தோம்.  நாம் `ஒரு நபர், ஒரு வாக்கு, `ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்ற கொள்கைக் கோட்பாட்டை உயர்த்திப்பிடித்தோம். எனவே இப்போது நம்முன் எழுந்துள்ள பிரச்சனை கல்வித் தகுதி சம்பந்தப்பட்டதல்ல. மாறாக உண்மையல்லாதவைகளைக் குறிப்பிட்டிருப்பதுதான். இவ்வாறு தகவல்களை மறைத்திருப்பது `நல்லதோர் அரசாங்கத்திற்கு நல்லதோர் அறிகுறியாகத் தெரியவில்லை. இதில் மேலும் மோசமான விஷயம் என்னவெனில் இவ்வாறு அமைச்சரின் பட்டப்படிப்பு சம்பந்தமாக `உண்மைத் தகவல்களைக் கொடுத்தார்கள் என்பதற்காக  தில்லிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஐந்து ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகும். இதனை அதிகாரபூர்வமாக மறுத்திட நிர்வாகத்தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், தகவல் உரிமைச் சட்டம் அமலில் உள்ள இக்காலத்தில் இவ்வாறு நிர்வாகத்தினர் நடந்துகொண்டிருப்பது அட்டூழியமாகும், ஏற்க முடியாததாகும். `நல்லதோர் ஆட்சியை அளிப்போம் என்கிற புதிய அரசாங்கத்தின் வரையறை உண்மையில் புதிராகத்தான் இருக்கிறது.
உள்நாட்டுத் தொழில்கள், நாட்டின் பாதுகாப்பு பாதிக்கும்
`வளர்ச்சி கோஷத்தைச் சுற்றி மிகவும் படாடோபமான முறையில் தேர்தல் பிரசாரம் இருந்ததைப் பொறுத்தவரை, மக்கள் புதிய அரசாங்கத்திடமிருந்து தங்கள் மீது ஏற்றப்பட்டுள்ள பொருளாதார சுமைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்பினார்கள். ஆனால் நடந்தது என்னடீசலின் விலை மீண்டும் ஒருமுறை ஏற்றப்பட்டிருக்கிறது. அதன் மூலம் பல அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மேலும் உயரும். பாதுகாப்புத் துறை உட்பட பல துறைகளில் அந்நிய மூலதனத்திற்கு ஆதரவான கொள்கை அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இவற்றால் நாட்டின் உள்நாட்டுத் தொழில்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பே கடும் பாதிப்புக்கு உள்ளாகும். நாட்டின் உற்பத்தித் திறனை விரிவாக்கக்கூடிய விதத்திலும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய விதத்திலும், நம் நாட்டின் தொழில்நுட்பத்தை உயர்த்தக்கூடிய விதத்திலும் அமைந்திருந்தால் மட்டுமே அந்நிய மூலதனத்தை வரவேற்கவேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை நிலைப்பாடாகும்.   மேற்படி மூன்று குறிக்கோள்களையும் நிறைவேற்றாத எந்தவொரு அந்நிய நேரடி முதலீடும் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ பயன் அளிக்காது.  சில்லரை  வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்ததற்கான காரணமே இத்துறையில் தற்போது உள்ள வேலைவாய்ப்புகளை இது குறைத்திடும் என்பதால்தான். தற்போதுள்ள வேலைவாய்ப்புகளை சுருக்கிடும் என்பதால்தான் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை பாஜகவும் முந்தைய காலங்களில் எதிர்த்து வந்தது. அவ்வாறு எதிர்த்து வந்தததன் மூலம் அது தன் சமூக ஆதரவுத் தளத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது.
குழப்பங்களின் மூலம் `வளர்ச்சி மற்றும் `நல்லாட்சி அளிப்போம் என்று பிரகடனம் செய்து ஐந்தாண்டு காலத்திற்கு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசின் ஆரம்ப நடவடிக்கைகளே மிகவும் குழப்பம் விளைவிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கின்றன.  தேர்தல் வெற்றிக்குப்பின்னால் மிகவும் ரகசியமாக இயங்கிக் கொண்டிருக்கும் மதவெறியைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்கிற இவர்களது செயல்பாடுகளே இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணங்களாகும். இவ்வாறாக இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளிலிருந்து வெளிவந்துள்ள ஆரம்ப சமிக்ஞைகள் - ஒரு பக்கத்தில் மதவெறியைக் கூர்மைப்படுத்திக்கொண்டே, மறுபக்கத்தில் மக்கள் மீதான சுமைகளை மேலும் திணித்தல் என்பவை - உண்மையில் தீய அறிகுறிகளாகும். மக்களின் ஆசை அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அரசாங்கத்தின் மீது போதுமான அளவிற்கு வெகுஜன இயக்கங்களின் நிர்ப்பந்தத்தைக் கட்டி எழுப்ப வேண்டியது அவசியம் என்பது தெளிவாகி இருக்கிறது. அப்போதுதான் இவர்கள் உறுதிமொழி அளித்துள்ள `வளர்ச்சி மற்றும் `நல்லாட்சி என்பவைகளையும் நடைமுறையில் பயனளிக்கக் கூடியவைகளாக மாற்ற முடியும்.

(தமிழில்: ச.வீரமணி)