Sunday, January 24, 2016

முற்றுகையின் பிடியில் குடியரசு


இந்தியா 66ஆவது குடியரசு தினத்தை அனுசரிக்கவிருக்கும் இத்தருணத்தில், நாட்டில் உள்ள விவகா ரங்கள் குறித்து ஆழ்ந்த பரிசீலனையை மேற்கொள்வது அவசியமாகும். 1950ஜனவரி 26 அன்று குடியரசு அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது என்பது சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய சாதனையாகும். குடியரசு அரச மைப்புச் சட்டத்தின்கீழ்தான் நாடாளு மன்ற ஜனநாயக அமைப்பு நிறுவப் பட்டிருக்கிறது.இந்திய அரசின் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ குணத்தின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் இருந்தபோதிலும் நாட்டு மக்கள் ஜனநாயகத்தின் மேல் வைத்துள்ள உறுதி யாலும், ஜனநாயக இயக்கங்களின் செல்வாக்கான போராட்டங்களின் காரண மாகவும் ஜனநாயக அமைப்பு ஜீவனுடன் நீடித்திருக்கிறது.
சம அளவில் பிரித்துக் கொடுக்க...இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகள், “சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நீதியை வழங்கி ஒரு சமூக ஒழுங்கை நாட்டிலுள்ள அனைத்து அமைப்புகளுக்கும் ஏற்படுத்துவதன் மூலம்’’ மக்களின் நலன்களை அரசு மேம்படுத்த வேண்டும் என்று கட்டளையிடுகிறது. “நாட்டின் வளங்களை சமூகத்தில் உள்ள மக்கள் அனை வருக்கும் பயனுறுமாறு சம அளவில் பிரித்துக் கொடுக்க வேண்டும்’’ என்று அரசுக்கு அது கட்டளையிடுகிறது. மேலும்பொருளாதார அமைப்பினை செயல் படுத்தும் விதமும், உற்பத்திச் சாதனங் களும் பொது நலனுக்கு ஊறுவிளை விக்கும் விதத்தில், செல்வம் ஒரு சிலரிடம் குவியக்கூடிய விதத்தில் இருக்கக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறது. மேலும் அது,“...வருமானத்தில் சமத்துவமின்மையைக் குறைத்திட’’ முயற்சிக்க வேண்டும் என்றும் அரசைக் கேட்டுக்கொண்டுள் ளது.இங்கேதான் முரண்பாடு. அரசமைப்புச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு 65 ஆண்டுகள் கழிந்தபின்னர், அரசு மேற்படி வழிகாட்டும் நெறிமுறைகளைக் கைவிட்டுவிட்டது. அரசின் செயல்பாடும் கொள்கைத் திசைவழியும் அரசமைப்புச் சட்டம் வகுத்துத் தந்துள்ள இந்த லட்சியங் களுக்கு நேரெதிராக இருக்கின்றன.
நம்முடைய அமைப்பில் மோதல்களும் நெருக்கடிகளும் அதிகரித்திருப்பதற்கு, இவ்வாறு செல்வம் ஒருசிலரிடம் குவிந்து கொண்டிருப்பதும் அதே சமயத்தில் பொருளாதார சமத்துவமின்மையும் வளர்ந்து கொண்டிருப்பதும் அடிப்படைக் காரணங்களாகும். நவீன தாராளமய முதலாளித் துவத்தின்கீழ், ஏற்றத்தாழ்வுகள் குறை வதற்குப் பதிலாக அதிகரித்திருக்கின்றன, விரிவடைந்திருக்கின்றன. நாட்டிலுள்ள மக்களில் 1 சதவீதத்தினர் நாட்டின் செல்வத்தில் 53 சதவீதத்திற்குச் சொந்தக் காரர்களாவார்கள். அதேசமயத்தில், மறுபக்கத்தில், உலகில் உள்ள மொத்த ஏழைகளில் ஐந்தில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். நாடுமுழுதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2015ஆம் ஆண் டில் மிகவும் அதிகமாகி இருக்கிறது. கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங் கானா, ஒடிசா மற்றும் பல மாநிலங் களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள்தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். மகாராஷ்டிராவில் மட்டுமே 3,228 விவசாயிகள் 2015ஆம் ஆண்டில்தற்கொலை செய்துகொண்டிருக் கிறார்கள்.
இதுவும்கூட குறைந்த மதிப்பீ டேயாகும். வேளாண் நெருக்கடி நாட்டுப் புற ஏழை மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.
அடித்தளங்களை ஒழித்துக்கட்ட முயற்சி
இந்தியக் குடியரசு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி என்னும் நான்கு கொள் கைகளை அடித்தளங்களாகக் கொண்டு கட்டப்பட்ட ஒன்று. தாராளமய மற் றும் தனியார்மயக் கொள்கைகளை அமல் படுத்தத் தொடங்கி கால் நூற்றாண்டு களுக்குப் பின்னே இவை நான்குமே, மதிப்பிழந்து, மிகவும் மாசேறிய நிலையில் காணப்படுகின்றன. ஆட்சி யில் தற்போது அமர்ந்திருப்போர், அரசுஇதுவரை கடைப்பிடித்துவந்த குறைந்த அளவிலான மதச்சார்பின்மை சாராம் சத்தையும் ஒழித்துக்கட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியின்கீழ் அர சையும், சமூகத்தையும் மதவெறிக்குள் தள்ளுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாட்டின் பிர ஜைகள் எந்த மதத்தினராக இருந்தாலும், எந்தப் பாலினத்தவராக இருந்தாலும் அல்லது எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள்அனைவருக்கும் சமமான அளவில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை.
இதனை ஒரு மதச்சார்பற்ற அரசால் மட்டுமே உத்தரவாதப்படுத்திட முடியும். நாட்டைத் தற்போது ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் இந்து அடையாளத்தை தேசியத்துடன் பொருத்தி, இந்துக்களுக்கு மட்டுமே பிரஜாவுரிமை அளித்திடக் கோரும் சித்தாந்தத்தை நம்புகிறவர்களாவார்கள். `இந்து ராஷ்ட்ரம்என்கிற இவர்களுடைய கருத்தாக்கம் இதர மதத்தைச் சார்ந்த வர்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகத் தள்ளிவிடுகிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத் தைச்சேர்ந்த செய்தித் தொடர்பாளர்கள், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார் பின்மை என்கிற வாசகம் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று வெளிப் படையாகவே கேட்கத் தொடங்கி இருக் கிறார்கள்.நம் அரசமைப்புச் சட்டத்தின் மிகவும்விசேஷமான அம்சமே தீண்டாமைக் கொடுமைகள் போன்ற சமூகப்பாகு பாடுகளையும், சமூக இழிவுகளையும் ஒழித்துக்கட்டுவதற்காக முன் மொழிந்திருக்கிற ஆக்கப்பூர்வ மான நடவடிக் கைகளுக்கான ஷரத்துக்களேயாகும். தற்போதுள்ள சாதிய அமைப்புமுறையில் நிலவும் இழிநிலைகளை படிப்படியாக சீர்திருத்தி, சமூகநீதியைக் கொண்டுவரக்கூடிய முறையில் இவை அமைந்திருக்கின்றன. ஆயினும் குடியரசு பிரகட னம் செய்யப்பட்டு 65 ஆண்டுகள் கழிந்தபின்னரும் தீண்டாமைக் கொடுமை உட்பட சாதிய ஒடுக்குமுறையின் பல்லாயிரக்கணக்கான வடிவங்கள் சமூகத்தை இன்னமும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன.
இந்துத்துவாவாதிகள் இந்து சாஸ்திரங்கள் கூறும் இவ்வாறான ஒடுக்குமுறை வடிவங்களை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தலித்துகளின் மீது தாக்குதல் அதிகரிப்பு
அரசின் மிகப்பெரிய தோல்வி என்பது, சமூகத்தில் மிகவும் ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தலித்துகளுக்கு நீதி வழங்காதிருப்பதாகும். வலதுசாரி இந்து வெறியர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர், தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகள் உக்கிரமடைந்திருக்கின்றன. தில்லி அருகே பரிதாபாத்தில் இரு தலித் சிறுவர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப் பட்டது, தற்போது ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் பயின்றுவந்த ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாதற்கொலை செய்துகொள்ள தள்ளப் பட்டுள்ளது ஆகியவை சாதிய வெறிச் செயல்கள் தொடர்வதை தெள்ளத் தெளிவாக்குகின்றன.இப்போது ஒரு சில நாட்களுக்கு முன்புகூட, கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தில் உள்ள கிருஷ்ணா கோவிலில், ஒரு நடைமுறை பின்படுத்தப்பட்டது.
அதன்படி பிராம ணர்களுக்கும் உயர்சாதியினருக்கும் தனியே சாப்பாட்டுப் பந்தி நடைபெறும். அவர்கள் சாப்பிட்டுவிட்டுச்சென்ற பின்னர் அவர்கள் சாப்பிட்ட மிச்சம் மீதி இருக்கும் எச்சில் இலைகள் மீது தலித்துகளும், இதர கீழ்சாதியைச் சேர்ந்தவர்களும் புரண்டு செல்லும் `மடஸ்நானாஎன்னும் இழிநிகழ்வு நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் மத்திய அமைச்சர்கள், ஆந்திரப்பிரதேச முதல்வர், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றார்கள். இவ்வாறு வெளிப் படையாகவே நடைபெற்ற சாதியப்பாகுபாட்டு இழிவான நடைமுறை களுக்கு எதிராக இவர்களில் எவருமே பேசவில்லை.அரசமைப்புச் சட்டம் தன் பிரஜை களுக்குஅறிவியல் மனோபாவம், மனிதாபிமானம் மற்றும் விசாரணை மற் றும் சீர்திருத்த உணர்வினை வளர்த் தெடுக்கவும்’’ கட்டளையிட்டிருக்கிற அதேசமயத்தில், ஆட்சியாளர்களோ பொது மேடைகளிலேயே மதவெறிக் கொள்கைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவருவது அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. மக்கள் மத்தியில் அறிவியல் உணர் வை வளர்த்தெடுக்க வேண்டிய, நாட்டின் பிரதமரே, “நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பாகவே, அறிவி யல் வளர்ந்திருந்தது’’ என்றும், “அதற்குஉதாரணம் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிள் ளையாருக்கு யானையின் தலையைப் பொருத்திய சாதனையைக் கூற முடியும்’’ என்றும் கூறி புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
கெஞ்சும் நிலைக்குதள்ளப்படும் மாநிலங்கள்அரசமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவம் என்பது, மிகவும் குறைந்த வடிவத்திலிருந்த போதிலும், இப்போது இருந்துவருகிறது. இது நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக தொடர்ந்து அரிக்கப்பட்டு வந்தது. மாநில அரசுகள் தங்களுக்கான வளங்களுக்கும், மூலதனத்திற்கும் சந்தையைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற அளவிற்கு சுருக்கப்பட்டுவிட்டன. மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஏதோ பிச்சை போடுவதுபோலஎய்ம்ஸ்’’ அல்லதுஐஐடி’’போன்று சில வடிவங்களில் அறிவிக்கக் கூடுமேயொழிய, உரிய பங்கினை இனிவருங்காலங்களில் அளிக்காது. மாநில அரசுகள் தங்களுக்கு வேண்டிய வற்றை மத்திய அரசிடம் இனி கெஞ்சி கேட்டுத்தான் பெற வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. திட் டக் கமிஷன் ஒழிப்பு மற்றும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கலைப்பு ஆகியவை மாநிலஅரசுகளை மத்திய அரசின் கருணையில் இருக்கக்கூடிய அளவிற்கு மாற்றிவிட்டன. நவீன தாராளமயக் கொள்கைகள் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் முக்கிய மூலக்கூறுகளையே அரித்துக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ கட்சிகளிடம் பண பலமும், முதலாளிகள் - அரசியல்வாதிகளிடையேயான கள் ளப்பிணைப்பும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இதன் விளை வாகத்தான் ஆட்சிக் கட்டிலில் கட்சிகள் மாறி, யார் ஆட்சிக்கு வந்தாலும், கொள் கைகள் மாறாமல் நீடிக்கின்றன. மக்கள் தாங்கள் விரும்பக்கூடியவர்களை ஆட்சிக் கட்டிலில் அமரச்செய்யக்கூடிய வலு வினை இழந்து கொண்டிருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் அரசியல் சமத்து வத்திற்கும், சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்திற்கும் இடையேயான தொடர்பின்மை குறித்து என்ன எச்சரித் திருந்தாரோ, அது இன்றளவும் நீடிக்கிறது.ஜனநாயகத்தின் மாண்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பல வழிகளில் காண லாம்.
அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டிருக்கும் சங்கம் அமைக்கும் உரிமை வரையறைக் குட்படுத்தப்பட்டு, மிகவும் சிக்கலான தாக மாற்றப்பட்டுவிட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்பட்டிருப்பதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் அங்குள்ள முதலாளிகளுக்குத் துணை போய்க் கொண்டிருக்கின்றன. தடுப்புக் காவல் தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தில் உள்ள குறை(flaw) காரணமாக, தனிநபர் சுதந்திரத்தையே கட்டுப் படுத்தக்கூடிய விதத்தில் அரக்கத்தன மான சட்டங்கள் வகைதொகையின்றி கொண்டுவரப்பட்டு, பயன்படுத் தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போதைய ஆட்சியாளர்கள், தங்கள்ஆட்சிக்கு எதிராக சிறுபான்மை யினரிடமிருந்து வரும் கருத்துக்களை யெல்லாம் தேச விரோதமானவை என்று முத்திரைகுத்தி, அவர்களுக் கெதிராக தேசத்துரோக வழக்குகள் ஏவப்படுகின்றன. நவீன தாராள மயமும், ஆட்சியாளர்களின் இந்துத் துவாமதவெறியும் இரண்டறக் கலந்து எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான பாதையை அமைத்துக் கொண்டிருக் கின்றன. இவ்வாறு நம் குடியரசு ஓர் அரச மைப்பு எதேச்சதிகாரமாக தரம் தாழ்வதற்குரிய ஆபத்தில் இருக்கிறது. ஜனநாயகம் மற்றும் மதச் சார்பின்மையைப் பாதுகாப்பதற்கான போ ராட்டத்தை, நவீன தாராளமயம் மற்றும் மதவெறிக்கு எதிரான போராட்டத்துடன் இணைத்தே நடத்த வேண்டியது அவசியமாகும்.
சமூக நீதி மற்றும் ஜன நாயக உரிமைகளுக்கான போராட்டம், இந்துத்துவா எதேச்சதிகார சக்திகளுக்கு எதிரான போராட்டத்தின் முக்கியமான கண்ணியாகும். நம் குடியரசின் ஜனநாயக - மதச்சார்பற்ற அடிப்படையின் மீதான ஒவ்வொரு தாக்குதலும் உடனுக்குடன் முறியடிக்கப்பட்டாக வேண்டும். இந்தக் குடியரசு தினத்தன்று அத்தகையதொரு உறுதியினை அனைத்துப் பிரஜைகளும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஜனவரி 19, 2016
தமிழில்: . வீரமணி