Sunday, November 6, 2016

புரட்சி அழைக்கிறது தோழனே...


சீத்தாராம் யெச்சூரி
{தத்துவ ஞானிகள் உலகை பல்வேறு வழிகளில் வியாக்கியானம் மட்டுமே செய்திருக்கிறார்கள். பிரச்சனை என்னவெனில், அதனை மாற்றுவதே ஆகும் என்றார் மாமேதை காரல் மார்க்ஸ். நவம்பர் புரட்சி அதை நிரூபித்து காட்டியது. மனிதகுல வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வீரசகாப்தம் நவம்பர் புரட்சி. இந்தியப் புரட்சிக்கு என்றென்றும் அதுவே உந்து சக்தி.)
இந்த ஆண்டு நவம்பர் 7 அன்று அக்டோபர் புரட்சி வெற்றி பெற்ற நூறாவது ஆண்டிற்குள் அடி எடுத்து வைக்கிறோம். இப்புரட்சியானது 20ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றில் ஆழமான செல்வாக்கினை ஏற்படுத்திய ஒன்றாகும், மனிதகுல விடுதலை மற்றும் முன்னேற்றத்தில் பாய்ச்சல் வேக மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். மனிதனை மனிதன்சுரண்டுவதை ஒழித்துக்கட்டி ஒரு சமூக அமைப்பை நிறுவுவதை நோக்கி மனிதகுல நாகரிகத்தை முன்னோக்கி உந்தித்தள்ளிய ஒன்றாகும். மார்க்சியம் என்பது ஓர் ஆக்கப்பூர்வமான அறிவியல் என்பதை சந்தேகமின்றி மெய்ப்பித்த ஒரு சகாப்த நிகழ்வாகும். நவம்பர் புரட்சி என்றென்றைக்கும் பொருந்தக்கூடியதே என்பது இதில்தான் அடங்கி இருக்கிறது.காரல் மார்க்ஸ் மறைவிற்குப்பின் 1883இல் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஜெர்மன் பதிப்புக்கு பிரடெரிக் ஏங்கல்ஸ் எழுதிய முன்னுரையில் அவர் குறிப்பிட்டதாவது:‘‘அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன. ஆகவே (புராதன நிலப் பொதுவுடைமை சிதைந்து போனகாலம் தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளிவர்க்கம்) சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் வர்க்கப்போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாய் விடுவிக்க வேண்டும்.அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித் துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிறகட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்குமட்டுமே உரியதாகும்.’’ மிகவும் சுருக்கமாகச் சொல்வதென்றால், நவம்பர் புரட்சியின் சாதனை என்பது இதுதான்: ‘...சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்து விடுவிக்க வேண்டும், ...’ மார்க்சியத்தின் இத்தகைய தீர்க்கமான முடிவுகளை எதார்த்தமற்றது என்று கண்டித்து, சர்வதேச பிற்போக்குவாதிகள் தாக்குதல் தொடுப்பது இயற்கையேயாகும். மார்க்சிசம் என்பது அறிவியல் உண்மையின் அடிப்படையிலான ஓர் ஆக்கபூர்வ அறிவியல் என்பதை ருஷ்யப்புரட்சியும், அதனைத் தொடர்ந்து சோவியத் யூனியன் அமைந்ததும் மிகவும் அழுத்தமாக உறுதிசெய்தது. நவம்பர் புரட்சியின் முக்கியத்துவம் எண்ணற்றவைகளாகும். சுரண்டலற்ற ஒரு சமூகஅமைப்பை எதார்த்தமாக்கிய அதே சமயத்தில், உழைக்கும் மக்களின் படைப்பாற்றலையும் இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது. சோசலிசத்தின் மூலமாக எண்ணற்ற சாதனைகளை மிக வேகமாக அடைய முடிந்தது. அதற்கு முன் மிகவும் பிற்போக்குப் பொருளாதார நாடாக இருந்ததை , ஒரு பலமிக்க பொருளாதார மற்றும் ராணுவ வல்லமை கொண்ட நாடாக, ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களை எதிர்க்கும் திறன் கொண்ட நாடாக மாற்றி, சோசலிச அமைப்புமுறையின் மேன்மையை உறுதி செய்தது. சோவியத் யூனியனில் சோசலிசம் கட்டி எழுப்பப்பட்டதானது மனிதகுல வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வீரகாவியமாகும். 20ஆம் நூற்றாண்டின் வரலாறு, நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து சோசலிசம் நிறுவப்பட்டதால் பிரதானமான முறையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பாசிசத்தை முறியடிப்பதில் சோசலிச சோவியத் யூனியன் குடியரசு மேற்கொண்ட தீர்மானகரமான பங்கும், அதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல சோசலிச நாடுகளாக உருவானதும் உலக வளர்ச்சிப்போக்கில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் மீதான வெற்றிக்கு சோவியத் செஞ்சேனை ஆற்றிய தீர்மானகரமான பங்களிப்பே பிரதான காரணமாகும். இது, காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளில் அதற்கு எதிராகப் போராடி வந்த இயக்கங்களுக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்து, பின்னர் அந்நாடுகள் காலனியாதிக்க சுரண்டலிலிருந்து விடுதலை அடைந்ததைப் பார்த்தோம். சீனப் புரட்சியின் வரலாறு படைத்திட்ட வெற்றி, வீரம் செறிந்த வியட்நாம் மக்கள் போராட்டம், கொரிய மக்கள் போராட்டம், கியூபா புரட்சி வெற்றிவாகை சூடியது ஆகியவை உலக வளர்ச்சிப்போக்கின் மீது மகத்தான செல்வாக்கைச் செலுத்தின.சோசலிச நாடுகளின் சாதனைகள் அளவிடற்கரியனவாக இருந்தன. வறுமை மற்றும் எழுத்தறிவின்மை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்ற துறைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியது ஆகியவை உலகம் முழுதும் போராடி வந்த உழைக்கும் மக்களுக்கு வலுவான முறையில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.
முதலாளித்துவத்துக்கு பெரும் சவால்
சோசலிசத்தின் சாதனைகள் உலக முதலாளித்துவத்திற்குப் பெரும் சவால்களாக அமைந்தன. எனவே அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சோசலிச நாடுகள் கடைப்பிடித்த மக்கள் நலத் திட்டங்களில் சிலவற்றைக் கடைப்பிடித்தன. உழைக்கும் மக்களுக்கு முன்னெப்போதும் அளிக்க மறுத்திட்ட உரிமைகளைத் தற்போது அளிக்க முன்வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதலாளித்துவ நாடுகள் நலத்திட்ட அரசுகளாக அமைந்து பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்தியதற்கு, சோவியத் யூனியனில் சோசலிசத்தின் சாதனைகளால் உத்வேகம் அடைந்த தொழிலாளி வர்க்கம் இந்நாடுகளில் நடத்திய போராட்டங்களின் விளைவுகளேயாகும். இன்றைய தினம் உலகின் பல நாடுகளில் ஜனநாயக உரிமைகளும், குடிமை உரிமைகளும் மனிதகுல நாகரிகத்தின் பிரிக்கமுடியாத பகுதிகளாக மாறி இருக்கின்றன எனில் அதற்கு சமூக மாற்றத்திற்கான மக்கள் போராட்டங்கள்தான் காரணமே தவிர, முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கருணை அல்ல. இத்தகைய புரட்சிகர மாற்றங்கள் தரமான விதத்தில் மனிதகுலத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்சென்றன. நவீன நாகரிக வாழ்க்கையில் அழிக்கமுடியாத வகையில் பங்களிப்பினைச் செய்தன. இவை, பண்பாடு, அறிவியல், அழகியல் என பல்வேறு துறைகளிலும் பிரதிபலித்தன. திரைப்படத்துறையின் இலக்கணத்தில் ஐசன்ஸ்டீன் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்த அதே சமயத்தில், ஸ்புட்னிக் நவீன அறிவியலின் எல்லையை விண்ணில் உள்ள கோள்களை ஆராயும் அளவிற்கு விரிவுபடுத்தியது.
பின்னடைவுகள்
20ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்தின் முன்னேற்றத்தில் மகத்தான சாதனைகளை ஏற்படுத்தி, அழிக்கமுடியாத அளவிற்கு தாக்கத்தை உருவாக்கி இருந்தபோதிலும், பலம் பொருந்திய சோவியத் யூனியன் சிதறுண்டது. அதன் காரணமாக அங்கே அதுநாள்வரையிலும் இருந்து வந்த சோசலிச அமைப்பும் முடிவுக்கு வந்தது. இதற்கான காரணங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1992இல் கம்யூனிஸ்ட் 14ஆவது காங்கிரசில் நிறைவேற்றிய தத்துவார்த்த தீர்மானத்தில் ஆய்வு செய்திருக்கிறது. சோசலிசம் நிறுவப்பட்டுவிட்டால், பின்னர் எதிர்காலம் ஒரே நேர்கோட்டில் எவ்விதப் பின்னடைவும் இன்றி முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கும் என்று அதுவரை தவறாகக் கருதப்பட்டு வந்தது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப்பின்னர், உலகில் மூன்றில் ஒரு பகுதி சோசலிச அமைப்பிற்குக் கீழ் வந்திருந்தபோதிலும், இவற்றில் பல நாடுகள் முதலாளித்துவ வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது பொதுவாக பிற்பட்டவைகளாக இருந்தன. உலகில் மூன்றில் இரண்டு பகுதி நாடுகள் நன்கு முன்னேறிய முதலாளித்துவத்தின் கீழ் இருந்தன. இதன் பொருள், சோசலிச உலகம், முதலாளித்துவ உலகத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது என்பதாகும். இவ்வாறு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உலகம், தான் இழந்துள்ள மூன்றில் ஒரு பகுதி சோசலிச உலகத்தை மீண்டும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக விடாப்பிடியாகத் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வந்தது. சோசலிசம் என்பது முதலாளித்துவம் தூக்கி எறியப்பட்டதைக் குறிக்கிறது. எனினும் இது, முதலாளித்துவத்தின் அடிப்படையிலான வர்க்க ஒடுக்குமுறையிலிருந்து, கம்யூனிசத்தின் அடிப்படையிலான வர்க்கமற்ற சமுதாயத்தை நோக்கிச் செல்லுவதற்கு இடையேயான, ஓர் இடைமாறுதல் கட்டம்தான். இத்தகைய இடைமாறுதல் கட்டத்தில் முதலாளித்துவத்துடனான வர்க்கப் போராட்டங்கள் மிகவும் உக்கிரமானதாக இருந்தன. முதலாளித்துவம், சோசலிசத்தை எப்பாடுபட்டாவது தூக்கி எறிந்துவிட முனைந்தது. சோசலிசம், உலக முதலாளித்துவம் தன்மீது ஏவிய தாக்குதலை எதிர்த்து முறியடிக்க முனைந்தது. எனவே இவ்வாறு இந்த இடைமாறுதல் கட்டத்தில், வர்க்க சக்திகளின் சேர்மானங்கள் சோசலிச ஒருங்கிணைப்பின் வெற்றிகளைச் சார்ந்ததாகும்.
பனிப்போர்
வர்க்க சக்திகளின் சேர்மானங்களின் பலம் குறித்து தவறான மதிப்பீட்டிற்கு வருவோமானால் அது சோசலிசத்தை நோக்கிய முன்னேற்றத்தைக் கடுமையாகப் பாதிக்கும். பாசிசத்தை வீழ்த்தியபின், மேலே குறிப்பிட்டவாறு இதர சோசலிஸ்ட் புரட்சிகள் வெற்றி பெற்றதை அடுத்து, மிகவும் தவறான முறையில் சோசலிசத்தின் பலம் குறித்து அதீதமாக மதிப்பீடு செய்யப்பட்டது. அதேபோன்று முதலாளித்துவத்தின் வல்லமை குறித்தும் குறைத்து மதீப்பீடு செய்யப்பட்டது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவம் தொடர்ந்து நீடித்தது. உலகில் மூன்றில் இரு பகுதி அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவற்றின் பொருள் என்னவெனில், உற்பத்தி சக்திகளின் மீதான கட்டுப்பாடு தொடர்ந்து அவர்களிடம் இருந்தது என்பதேயாகும். உலக நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கேற்ப முதலாளித்துவம் தன்னை தகவமைத்துக்கொண்டு, சோசலிசத்திற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டதுடன், தீவிரவாதம், அரசியல் மற்றும் பொருளாதாரம் என அனைத்து முனைகளிலும் விடாப்பிடியாகத் தொடர்ந்து தாக்குதல்களைத் தொடுத்தது. இவ்வாறான இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய காலகட்டம் உலக இருதுருவ கோட்பாட்டிற்கிடையேயான பனிப்போர் என்று அழைக்கப்படுகிறது. சோசலிச சோவியத் யூனியன் மற்றும் உலக சோசலிச முகாம் ஏகாதிபத்தியத்தின் சவாலை எதிர்கொண்ட அதே சமயத்தில், சோவியத் யூனியனில் சோசலிசக் கட்டுமானம் நடைபெற்ற போது நடந்த சில தவறுகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக அதன் உள்ளீடான வலு பலவீனமடைந்தது. அடிப்படையில் நான்கு பெரிய குறைபாடுகளைக் காண முடிந்தது. இங்கே அடிக்கோடிட்டு பார்க்க வேண்டிய விஷயம் என்னவெனில், மனிதகுலம் இதற்குமுன் கண்டிராத ஒரு பாதையில்தான் சோசலிசத்தைக் கட்டி எழுப்ப வேண்டியிருந்தது. சோசலிசக் கட்டுமானத்திற்கென்று குறிப்பிட்ட அனுபவ வரையறையோ அல்லது இதுதான் இதற்கான சூத்திரம் என்று குறிப்பிட்ட எதுவுமோ கிடையாது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது இந்திய மாநாடு, சோவியத் யூனியனில் நடைபெற்ற குறைபாடுகள் என்று கீழ்க்கண்ட நான்கு விஷயங்கள் குறித்து ஆய்வினை மேற்கொண்டது. அதாவது, சோசலிச அரசின் வர்க்க குணம், சோசலிசட் ஜனநாயகம் நிறுவப்படுதல், சோசலிச பொருளாதார கட்டுமானம் மற்றும் சோசலிசத்தின் கீழ் மக்களின் தத்துவார்த்த சமூக உணர்வினை உயர்த்தத் தவறியமை ஆகிய நான்கினை அது சுட்டிக்காட்டி இருந்தது. ஆகவே, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சிந்தனைகளில் இருந்த குறைபாடுகளினால் அல்ல என்கிற முடிவிற்கு ஒருவர் நிச்சயமாக வர முடியும். மாறாக, மார்க்சிய-லெனினியத்தின் அறிவியல் மற்றும் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து நழுவிச் சென்றதே பின்னடைவுக்குப் பிரதானமான காரணமாகும். எனவே, இந்தப் பின்னடைவுகள் மார்க்சிய-லெனினியத்தை மறுதலித்ததாலோ அல்லது சோசலிசச் சிந்தனையாலோ அல்ல.
பொருளாதார நெருக்கடிக்கு சோசலிசமே தீர்வு!
உலகப் பொருளாதார நெருக்கடியின் இன்றைய நிலைமைகளில் மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட சோசலிச சிந்தனையால் மட்டுமே சாத்தியம். 2008இல் உலகப் பொருளாதார மந்தம் துவங்கியதிலிருந்தே, உலக முதலாளித்துவம் ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு நெருக்கடி என்று மாறி மாறி மூழ்கி அதிலிருந்து வெளிவர முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. நெருக்கடியிலிருந்து மீள அது மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் மேலும் ஆழமான நெருக்கடிக்கே இட்டுச் செல்கிறது. மக்கள் மீது முதலாளித்துவச் சுரண்டலை உக்கிரப்படுத்தி இருப்பதன் மூலமாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதாரச் சுமைகள் ஏற்பட்டிருப்பதிலிருந்து இதனை தெளிவாகக் காண முடியும். இவற்றின் காரணமாக பொருளாதார சமத்துவமின்மை விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. ஒருவரை ஒருவர் கொள்ளையடிக்கின்ற முதலாளித்துவத்தின் குணம் பட்டவர்த்தனமாய்த் தெரியத் தொடங்கி இருக்கிறது. முதலாளித்துவத்தின்கீழ் கொண்டுவரப்படும் எந்தவொரு சீர்திருத்தமும் மனிதகுலத்தை இத்தகைய சுரண்டலின் பிடியிலிருந்து விடுவித்திட முடியாது.
முதலாளித்துவம் தானாக வீழாது
முதலாளித்துவம் ஆழமான நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தபோதிலும், எந்தக் காலத்திலும் அது தானாக வீழ்ந்துவிடாது. முதலாளித்துவத்திற்கு சவால்விடக்கூடிய விதத்தில் அரசியல் மாற்று வளராவிட்டால், முதலாளித்துவம் மனிதகுலத்தைச் சுரண்டுவதை உக்கிரப்படுத்துவதன் மூலம் தன்னை சீராகத் தக்கவைத்துக்கொள்ளும். எனவே, சோசலிச அரசியல் மாற்றின் பலம் பரந்த அளவில் வளர வேண்டியது தேவை. உலக முதலாளித்துவத்தின் தாக்குதல்களுக்கு எதிராகவும் அதனுடன் இணைந்து ஏகாதிபத்திய மேலாதிக்கத் தாக்குதலுக்கு எதிராகவும் உலகம் முழுதும் போராட்டங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்றபோதிலும், இப்போராட்டங்கள் அனைத்தும் இன்றைய நிலையில் சாராம்சத்தில் தற்காப்பு நிலையிலேயே உள்ளன. தற்காப்பு நிலை என்று நாம் கூறும்போது, மக்கள் தாங்கள் இதுநாள்வரை பெற்றிருந்த ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்வாதார நிலைமைகளைத் தக்க வைத்துக்கொள்வதற்கான போராட்டங்களின் மத்தியிலேயே இருக்கிறார்கள் என்பதேயாகும். இத்தகைய போராட்டங்களை, மூலதனத்தின் ஆட்சிமீது தாக்குதலைத் தொடுக்கக்கூடிய அளவிற்குக் கொண்டு செல்ல வேண்டும். இதற்குத் தேவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது அகில இந்திய மாநாட்டின் தத்துவார்த்தத் தீர்மானத்தில் பகுத்தாய்ந்தபடி, லெனினிஸ்ட் அகக் காரணியை வலுப்படுத்துவது, அதாவது, அந்தந்த நாடுகளிலும் முதலாளித்துவத்திற்கு எதிராக தீர்மானகரமான அடியை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு மக்கள் கிளர்ச்சிகள் மற்றும் இயக்கங்களை ராணுவக்கட்டுப்பாட்டுடன் முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் புரட்சிக் கட்சியின் திறனை வலுப்படுத்திட வேண்டும். இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தகு பணியில்தான் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. இந்திய நிலைமைகளில் இந்த அகக் காரணியை வலுப்படுத்தும் குறிக்கோளை அடையும் 21வது அகில இந்திய மாநாடும் ஸ்தாபனம் தொடர்பான பிளீனமும் கவனம் செலுத்தி இருக்கிறது.
இந்தியப் புரட்சி
இந்தியப் புரட்சியின் ஜனநாயகக் கட்டம் முழுமை அடைந்தபின்னரே, அதாவது மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற்றபின்னரே, இந்தியாவில் சோசலிசம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும். ஆயினும், சோசலிசத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மக்களுக்கு அடிப்படைத் தேவைகளாக எவை எவை இருந்திட முடியும் என்பதை நாம் கணித்திட முடியும். ஆகவே, இந்தியாவில் சோசலிசம் என்பதன் பொருள் என்ன?மக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டு வசதி அளித்திடுதல் தொழிலாளர்கள், விவசாயிகள், விளிம்புநிலையிலுள்ள மக்கள் அனைவரின் வாழ்வாதாரங்களையும் மிகப்பெரிய அளவிற்கு மேம்படுத்தக்கூடிய விதத்தில் அவர்களின் பொருளாதார அரசியல் மற்றும் சமூக நிலையினை மேம்படுத்துதல் முதலாவதும், முதன்மையானதும் மக்களின் அதிகாரம் என்பதே இதன் பொருள். சோசலிச நீதிமன்ற, அரசியல் மற்றும் சமூக அமைப்புகளில் ஜனநாயகமும், ஜனநாயக உரிமைகளும், குடிமை உரிமைகளும் ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாத விதத்தில் பின்னிப்பிணைந்தவைகளாக இருக்கும். முதலாளித்துவ ஜனநாயகத்தின்கீழ், உரிமைகள் இருப்பதுபோலத் தோன்றலாம். ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு தங்கள் உரிமைகளை நிறைவேற்றக்கூடிய திறன்கள் மறுக்கப்படுகின்றன. சோசலிசத்தின் கீழ், ஜனநாயகம் என்பது அனைத்து மக்களின் பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலும் அமைந்திருக்கும். மனிதகுலத்தின் தரத்தை உயர்த்திட இவை அடிப்படையான மற்றும் அவசியமான தேவைகளாகும். இவற்றின் அடிப்படையில்தான் சோசலிச ஜனநாயகம் தழைத்தோங்கும். சோசலிசத்தின்கீழ் மறுப்புக்கூறும் உரிமை, பேச்சுரிமை மற்றும் பல்வேறுவிதமான கருத்துக்களும், பாட்டாளி வர்க்க அரசின்கீழ் சோசலிசத்தை வலுப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு தழைத்தோங்கிடும்.சாதிய அமைப்புமுறை ஒழிக்கப்பட்டு சாதிய ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதே இதன் பொருள். அனைத்து மொழி பேசுவோரும் சமமாகக் கருதப்படுவார்கள், அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் சமமான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அனைத்து சிறுபான்மையினருக்கும், விளிம்புநிலை பிரிவினருக்கும் உண்மையான சமத்துவம் அளிக்கப்படும் என்பதும், பாலின ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டப்படும் என்பதுமே இதன்பொருள். சமூகப்படுத்தப்பட்ட உற்பத்திச் சாதனங்கள் மற்றும் மத்திய திட்டத்தின் அடிப்படையில் சோசலிசப் பொருளாதாரக் கட்டுமானம் இருந்திடும் பொருள் உற்பத்தி இருக்கும்வரை, சந்தையும் இருந்திடும். எனினும், மத்திய திட்டத்தின் வழிகாட்டுதலின் கீழ்தான் சந்தை சக்திகள் உட்படுத்தப்பட்டிருக்கும்,சொத்தின் அனைத்துவிதமான வடிவங்களும் தொடர்ந்து இருந்துவரும் அதே சமயத்தில், உற்பத்திச் சாதனங்கள் சமூக உடமையாக இருந்திடும். இவ்வாறு கூறுவதால் இது அரசின்கீழ் இயங்கும் பொதுத்துறை என்று மட்டும் பொருள்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு முக்கியமான பங்கினைச் செய்யும் அதே சமயத்தில், கூட்டுப்பண்ணை மற்றும் கூட்டுறவு உடைமைகள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டின் கீழான பொருளாதாரக் கொள்கைகள் அனைத்து மக்களின் பொருளாதார வாழ்நிலையையும் ஒழுங்குபடுத்திடும். (20ஆவது காங்கிரஸ், தத்துவார்த்தப் பிரச்சனைகள் சீலவற்றின் மீதான தீர்மானம்)நவம்பர் புரட்சி, உலகை மாற்றுவது சாத்தியம்தான் என்று நமக்குக் காட்டி இருக்கிறது. மனிதகுல வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்த வீர சகாப்தம் நம் அனைவருக்கும் புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிட நமக்கு உத்வேகம் அளிக்கிறது.
- தமிழில் : ச.வீரமணி






No comments: