Thursday, November 24, 2016

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதன் மூலம் நாட்டு மக்களை சூறையாடி இருக்கிறீர்கள் மன்மோகன்சிங் காட்டம்





500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதன் மூலம் நாட்டு மக்களை சூறையாடி இருக்கிறீர்கள்
மன்மோகன்சிங் காட்டம்
புதுதில்லி. நவ. 24-
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் நாட்டு மக்களின் பணத்தை ஸ்தாபனரீதியாக சூறையாடி இருக்கிறீர்கள் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்  ந டைபெற்று வருகிறது. வியாழன் அன்று மாநிலங்களவையில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து நடைபெற்ற விவாதத்தில் மன்மோகன்சிங் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
“500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து பேசிட எழுந்து நிற்கின்றேன். இந்த நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவும். கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காகவும், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்யப்படுவதைத் தடுப்பதற்காகவும்  கொண்டுவரப்பட்டது என்று பிரதமர் கூறிக்கொண்டிருக்கிறார். இந்தக் குறிக்கோள்களில் நான் உடன்படுகிறேன். ஆனால் இதற்காக ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததானது, மிகவும் மோசமான மேலாண்மை நடவடிக்கை (monumental mismanagement) என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடம் இருக்க முடியாது.  இந்த நடவடிக்கையை ஆதரிப்பவர்கள்கூட, இது மக்களுக்கு குறைந்த காலத்திற்கே துன்பம் விளைவித்திடும் என்றும் நீண்டகால நோக்கில் நன்மை பயக்கும் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக ஜான் கீட்ஸ் ஒருமுறை சொன்னதை நினைவுகூர விரும்புகிறேன், அவர், “நீண்டகால நோக்கில் நாம் அனைவரும் இறந்திருப்போம்,” என்றார்.
இந்த அறிவிப்பால் மக்கள், சாமானிய மக்கள், படும் துன்ப துயரங்களைக் கணக்கில் கொள்ளவேண்டியது மிகவும் முக்கியமாகும். இதன் இறுதி வெளிப்பாடு எப்படி இருக்கும் என்று எவராலும் சொல்ல முடியாது என்று மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி அவர்கள் 50 நாட்களுக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்கிறார். நல்லது, 50 நாட்கள் குறுகிய காலம்தான். ஆனால் ஏழை, வறிய மக்களைப் பொறுத்தவரை 50 நாட்கள் என்பது அவர்களின் வாழ்வில் பேரழிவினை ஏற்படுத்திடும். அதன்காரணமாகத்தான் இதுவரை 60 முதல் 65 பேர் இறந்திருக்கிறார்கள். இது அதிகமாகக்கூட இருக்கலாம்.
இதைவிட மிகவும் மோசமான விஷம், இந்த நடவடிக்கை மக்களின் நம்பிக்கையை கரன்சி முறையின் மீதும், வங்கி முறையின் மீதுமே  அவநம்பிக்கையை ஏற்படுத்திடும்.
நான் பிரதமர் அவர்களிடம் இருந்து ஒரு விஷத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உலகில் வேறெந்த நாட்டிலாவது, மக்கள் தான் வங்கியில் போட்ட பணத்தை தாங்களே எடுப்பதற்கு அனுமதிக்காத நிலை இருக்கிறதா என்று தெரிவிக்கக் கோருகிறேன். இது ஒன்றே இந்த நடவடிக்கையைக் கண்டிக்கப் போதுமானது என்று நான் நினைக்கிறேன்.
அடுத்து ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு அமல்படுத்தும் முறை குறித்து ஒருசில கூற விரும்புகிறேன். இது விவசாய உற்பத்தியைப் பாதித்திருக்கிறது. சிறிய தொழில்பிரிவுகளைப் பாதித்திருக்கிறது. முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் மக்களைப் பெரிதும் பாதித்திருக்கிறது. நாட்டின் தேசிய வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதுவே குறைந்தமதிப்பீடுதான். எனவே, பிரதமர் அவர்கள் ஏதேனும் ஆக்கபூர்வமான முன்மொழிவுகளுடன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதன்மூலம் மக்களின் துயரங்களைப் போக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்-
வங்கியின் நிர்வாகத்தில், மக்கள் தாங்கள் போட்ட பணத்தைத் திரும்ப எடுப்பதில்,  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறை பின்பற்றப்படுவது நல்லதல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது, பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி எவ்வளவு மோசமாக செயல்படுகின்றன என்பதையே எடுத்துக் காட்டுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி இந்த அளவிற்கு மக்களிடம் தோலுரித்தக்காட்டப்பட்ட அவலநிலை முன்னெப்போதும் இருந்ததில்லை.
இதற்கு மேல் இதுகுறித்து நான் எதுவும் கூறவிரும்பவில்லை.
பிரதமர் அவர்கள், மக்களின் துயர் துடைத்திடக்கூடிய விதத்தில்,  கொஞ்சம் நடைமுறைவாதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாட்டு மக்களில் 90 சதவீத மக்கள் எவ்விதமான வங்கிகளுடனும் தொடர்பற்ற முறையில்தான் இருந்துவருகிறார்கள், 55 சதவீத மக்கள் விவசாயத்துறையில் மிகவும் வறிய நிலையில் வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிராமப்புற மக்களுக்கு உதவி வந்த கூட்டுறவு வங்கி முறை முற்றிலுமாக செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டிருக்கிறது,
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள விதம், மிக மோசமான மேலாண்மை நடவடிக்கை (monumental management failure) என்பதை மெய்ப்பித்துள்ளன. உண்மையில் இது மக்கள் மீது ஸ்தாபனரீதியாக ஏவப்பட்ட சூறையாடல் (organized loot) மற்றும் சாமானியமக்கள் சட்டரீதியாக கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறார்கள் (legalized plunder) என்பதேயாகும்.
பிரதமர் அவர்கள் இப்போதாவது முன்வந்து, நடைமுறைசாத்தியமான வழிவகைகளைக் கண்டு, அவதிக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு நிவாரம் அளித்திட வேண்டும்,
இவ்வாறு மன்மோகன் சிங் கோரினார்,
(ந,நி,)


No comments: