Thursday, November 17, 2016

மக்கள் மீதான இரக்கமற்ற தாக்குதலுக்கு முடிவு கண்டிடுக



500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளையத் திரும்பப்பெற்றதென்பது, கறுப்புப் பணத்தின் மீதான யுத்தம் அல்ல, மாறாக அது சாமானிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகும்.
நாட்டு மக்கள் நாட்டிலுள்ள அனைத்து வங்கிகள், ஏடிஎம்கள் மற்றும் அஞ்சலங்களுக்கு வெளியே நீண்ட கியூ வரிசையில் நின்று கொண்டிருப்பதை ஊடகங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவர்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளைக் கொடுத்துவிட்டு 4000 ரூபாய் வரை (இப்போது அது 2000 ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது) பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு அவர்கள் நின்று கொண்டிருக்கின்றனர்.  ஆனால், இது மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளில் ஓர் அம்சம் மட்டுமேயாகும்.
ஆனால் மிகவும் மோசமான அம்சம் என்னவெனில், பணம் கொடுக்கல் வாங்கலையே பெரிதும் சார்ந்திருக்கிற கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறிய வியாபாரிகள், கடைக்காரர்கள் போன்றோரின் வருமானங்களும், வாழ்க்கையும் அடியோடு நாசம் அடைந்து அவர்கள் கடும் பொருளாதார அதிர்ச்சிக்கு ஆளாகி இருப்பதாகும்.
பிரதமர் நவம்பர் 8ஆம் தேதி இவ்வாறு அறிவித்து ஒருவாரம் கழித்தும், பொருளாதாரம் ஸ்தம்பித்து இருக்கிறது. கிராமப்புற பொருளாதாரம் முற்றிலுமாக நிலைகுலைந்து போயுள்ளது. விவசாய உற்பத்திப் பணிகள் முழுமையாக நின்றுவிட்டன.
விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பயிர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. விவசாய நடவு தொடங்கியுள்ள இடங்களில் விதைகள் மற்றும் ரசாயன உரங்களை பணம் கொடுத்து அவர்களால் வாங்க முடியவில்லை. விவசாயத் தொழிலாளர்களுக்கும் கூலி கொடுக்க முடியவில்லை. சந்தைக்கு விற்பனைக்கு வந்த காய்கறிகள், வாங்குபவர்கள் இல்லாததால் அழுகி  வீணாகிக் கொண்டிருக்கின்றன. அதேபோன்ற மீன் சந்தையிலும் மீன்களை வாங்குவதற்கு மக்கள் வராததால் மீன் வியாபாரிகளுக்கும் மீனவர்களுக்கும் கடும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
செங்கல் சூளை வைத்திருப்பவர்களிலிருந்து சிறிய அளவிலான  தொழிற்சாலைகளை நடத்துபவர்கள் வரை தங்கள் தொழிலாளர்களுக்கு ஊதியங்கள் வழங்குவதை நிறுத்திவிட்டனர் அல்லது முழுமையான ஊதியங்களை வழங்கிடவில்லை. அவர்கள் வாரத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே வங்கிகளிலிருந்து எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது வாரத்திற்கு 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்ற போதிலும் அதுவும் போதுமானதல்ல. ஏனெனில் ஊதியம் வழங்கவேண்டிய தொகை வாரத்திற்கு சுமார் 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் ரூபாயாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டளைப்படி, மாவட்ட மற்றும் கிராம கூட்டுறவு வங்கிகள் பணப் பரிவர்த்தனை செய்திட அனுமதிக்கப்படவில்லை. இதனால்  பல லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியவில்லை. இது கிராமப்புற விவசாயிகள் மற்றும் நாட்டுப்புற மக்களை மிகவும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. குறிப்பாக கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் அதிகமாகவுள்ள கேரளாவில் இதன் பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கிறது.
நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் உள்ள சந்தைகள் மற்றும் கடைகளுடன் தங்களை இணைத்துக்கொண்டும், பிணைத்துக் கொண்டும் வேலை பார்க்கும் பல லட்சக்கணக்கான மக்கள், போக்குவரத்து ஊழியர்கள், கேசுவல் தொழிலாளர்கள் தங்களுடைய வருமானங்கள் காலியாகிக் காய்ந்து போய் இருக்கிறார்கள். அவர்களால் தங்களுடைய ரேஷன் பொருள்களையோ அல்லது இதர அத்தியாவசியப் பண்டங்களையோ வாங்க முடியவில்லை. தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை மேற்கொள்ளவோ, மருந்துகளை வாங்கவோ முடியாமல் உழைக்கும் மக்களின் துன்ப துயரங்கள் பல்கிப் பெருகியுள்ளன.
இந்தியாவில் பொருளாதார நடைமுறை என்பது மிகவும் விரிவான அளவில் ரொக்கப் பரிவர்த்தனைகளையே சார்ந்திருக்கிறது. (500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம்,) 86 சதவீத பணச் சுழற்சியைத் திரும்பப் பெற்றால், அதன் தாக்குதலின் பலமான விசை முறைப்படுத்தப்படாத தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகள் மீதுதான் வீழ்ந்திருக்கிறது.
 உண்மை நிலை இப்படி இருக்கக்கூடிய அதே சமயத்தில், “அமைதியை இழந்த பணக்காரர்கள் தாங்கள் தூங்குவதற்காக தூக்க மாத்திரைகளைத் தேடிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், ஏழை மக்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள்,” என்று அவதிக்குள்ளாகியுள்ள மக்களிடம்,  நரேந்திரமோடி மிகவும் குரூரமான ஜோக் ஒன்றை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.  ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த நிகழ்வின்மூலம் மோடி அரசாங்கம் மற்றும் பாஜகவின் பிற்போக்குத்தனமான வர்க்க கண்ணோட்டம் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. உழைக்கும் மக்களின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் ஒரு தற்காலிக அசௌகரியமே என்று முத்திரை குத்தப்படுகிறது. ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததும், அதன் பின்னர் அது தொடர்பாக நாள்தோறும் அது வெளியிடும் அறிவிப்புகளும் இந்த அரசாங்கம் எந்த அளவிற்கு ஒரு திறமையற்ற மற்றும் தவறுக்குமேல் தவறு செய்யும் அரசாங்கம் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. புதிய கரன்சி நோட்டுகளை போதுமான அளவிற்கு தருவதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் தயாரிப்புப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஏடிஎம் மிஷின்களில் புதிய கரன்சி நோட்டுகளை வைக்கக்கூடிய விதத்தில் அவற்றை மாற்றி அமைப்பதற்கான வேலைகள் இன்னமும் பல இடங்களில் தொடங்கப்படவே இல்லை. இவ்வாறு மாற்றி அமைத்திட பல வாரங்கள் ஆகும் என்று நிதி அமைச்சரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததை, பிரதமரும், பாஜக அரசாங்கமும் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதற்கான மிகப்பெரிய நடவடிக்கை என்கிற விதத்தில் சித்தரிக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இதன்மூலம் இவர்கள், கறுப்புப்பணம் என்றால் அவை மூட்டை மூட்டையாக கரன்சி நோட்டுகளாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்பது போன்ற தவறான சிந்தனையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். கறுப்புப் பணத்தில் பெரும்பகுதி ரியல் எஸ்டேட்டுகளாகவும், தங்கம், ஆபரணங்கள் மற்றும் வெளிநாடுகளில் வெளிநாட்டு கரன்சிகளாகவும் இருந்து வருகின்றன. கறுப்புப் பணம் இணையான பொருளாதாரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அவை சட்டவிரோதமான பொருளாதார நடவடிக்கைகள் மூலமும், சட்டத்திற்கு உட்பட்டு எவ்வளவு செலவு செய்யவேண்டுமோ அதைவிடக் கூடுதலாக செலவு செய்வதன் மூலமும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நடவடிக்கைகளின் மூலமாக வரும் வருமானங்கள் வரி செலுத்தப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகக் காட்டப்படுவதில்லை. உதாரணமாக, ரியல் எஸ்டேட் துறையில், பல பரிவர்த்தனைகள் முழுமையாக அறிவிக்கப்படுவதில்லை. பலதும் பினாமி சொத்துக்களாக இருக்கின்றன.  அதேபோன்று வெளிநாடுகளுடனான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் பல வர்த்தகங்கள் உண்மையான ஏற்றுமதியையும், இறக்குமதியையும் கூட்டியோ, குறைத்தோ காண்பித்து அதன் மூலம் மீதமாகும் பணம் வெளிநாடுகளிலேயே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. கறுப்புப் பணத்தை மாற்றுவதற்காக ஹவாலா பரிவர்த்தனைகளும்கூட நடந்து கொண்டிருக்கின்றன.
கறுப்புப் பணம் தொடர்பாக இவ்வாறுள்ள ஓட்டைகள் எதையுமே அடைத்திட மோடி அரசாங்கம் முன்வரவில்லை. வரி ஏய்ப்பு செய்திடும் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு அதனைத் திருப்பிச் செலுத்தாமல்  ஏமாற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவோ எவ்வித நடவடிக்கையையும் இந்த அரசு எடுத்திட வில்லை.
அதேபோன்று இந்நடவடிக்கை மூலமாக லஞ்ச ஊழலை ஒழித்திட முடியும் என்று கூறியிருப்பதும் உள்ளீடற்ற வெறுமையான ஒன்றேயாகும். பெரும் வர்த்தகநிறுவனங்கள் – ஆளும் அரசியல்வாதிகள் – அதிகாரவர்க்கத்தினர் ஆகியோரிடையேயான கள்ளப்பிணைப்பைத் தகர்க்காதவரையிலும் லஞ்ச ஊழல் என்பது செழித்து வளர்ந்துகொண்டுதான் இருக்கும். புதிய 2000 ரூபாய் நோட்டு இதற்கு மிகவும் வசதி செய்து தந்திடும்.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் உண்மையான நோக்கம் வேறெங்கோ இருக்கிறது. மோடி அரசாங்கம், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை மீளவும் கொண்டுவருவோம் என்றும், வேலையின்றி இருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை அளிப்போம் என்றும் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தது. இவற்றில் இந்த அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் படுதோல்வி அடைந்துவிட்டது. மேலும் விரைவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் எதிர்க்கட்சிகள் தங்களிடம் உள்ள பணத்தை செலவு செய்யவிடாமல் அவற்றை முடமாக்கிட வேண்டும் என்பதும் பாஜகவின் நோக்கமாகும். இவ்வாறு மோடி அரசாங்கம் நயவஞ்சகமாக யோசித்திருக்கிறது என்பதை, மோடி ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது மிகவும் ரகசியமான ஒன்று என்று கூறிவந்தபோதிலும், அவ்வாறு அறிவிப்பதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள பாஜக கிளை நான்கு தவணைகளில் 1000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் மொத்தம் 3 கோடி ரூபாயை வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பதுடன் ஒப்பிட்டால் புரிந்துகொள்ள முடியும். எப்படி இது நடந்தது என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.
மோடி அரசாங்கம், மக்கள் மீது இவ்வாறு இரக்கமற்ற முறையில் தாக்குதல் தொடுத்திருப்பதை நிறுத்திட, அதனைக் கட்டாயப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தப்பிரச்சனைக்கு முடிவு காண்பதற்கான ஒரே வழி, மாற்று கரன்சி நோட்டுகள் முழுமையாகக் கிடைத்திடும் வரையில், பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படுவதை டிசம்பர் 30 வரைக்கும் நீட்டித்திட அனுமதித்திட வேண்டும். இது மக்களின் உரிமையாகும். இவ்வாறு மக்களின் உரிமையைப் பாதுகாத்திட நாடு தழுவிய அளவில் ஒரு வலுவான இயக்கம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
(நவம்பர் 16, 2016)
(தமிழில்: ச. வீரமணி)





No comments: