Thursday, November 10, 2016

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது அறிவுடைமையற்ற, மக்கள் விரோத செயல்: பிரபாத் பட்நாயக்




ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது அறிவுடைமையற்ற,
மக்கள் விரோத செயல்
-பிரபாத் பட்நாயக்
பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் எட்டாம் தேதியன்று இரவு எட்டு மணிக்கு தேசியத் தொலைக்காட்சிகளில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டார். அதாவது இன்றைய நள்ளிரவு முதல், அதாவது அடுத்த நான்கு மணி நேரத்தில், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது  என்று அறிவித்தார்.
இந்த விசித்திரமான நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட வாதம் என்பது இது கறுப்புப்பணத்தைஅடித்து நொறுக்கிவிடும் என்பதாகும்.  மேலும் ஒரு வாதமும் முன்வைக்கப்பட்டது. அதாவது பயங்கரவாதிகள்போலி கரன்சி நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள் என்றும் இதனால் அவையும் செல்லாதவைகளாகிவிடும் என்றும் கூறுகின்றனர். அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் ஒருபடி மேலேயே சென்று, இது பயங்கரவாதத்திற்கு எதிரான சர்ஜிகல் ஸ்ட்ரைக்என்றும் கூத்தாடுகிறார்கள்.
போலி கரன்சி நோட்டுகள் பிரச்சனை குறித்து பின்னே வருகிறேன். இவர்கள் முன்வைக்கும் கறுப்புப்பணம்வெளிக்கொணரப்படும் என்பதைக்குறித்து ஆராய்வோம். இந்தக் கூற்றை குடியரசுத் தலைவரும்கூட சரியென்று கூறி பாராட்டி இருக்கிறார்.  இந்த வாதமானது, அதாவது 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததானது கறுப்புப் பணத்தின்மீதான தாக்குதல் என்பது, கறுப்புப் பணம்குறித்த புரிதலில் உள்ள முழுமையான பற்றாக்குறையேயாகும்.
கறுப்புப் பணம்என்றால் ரொக்கமாக, டிரங்க் பெட்டிகளில் அல்லது தலையணைக்குக் கீழே அல்லது பூமிக்கு அடியில் பதுக்கி வைத்திருப்பது என்ற பொருளில்தான் பலர் இதனைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்துவிட்டால், பின்னர் மக்கள் தாங்கள் இவ்வாறு வைத்திருக்கும் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு வங்கிகளுக்கு வந்து மாற்றிக்கொள்வார்கள், இதன் மூலம் வங்கிகள் அவர்கள் மீது சந்தேகம் கொண்டு, வரி விதிப்பு அதிகாரிகளுக்கு அவர்களைப்பற்றிக் கூறிடும், அவர்களும் இதுநாள்வரை அப்படி பதுக்கி வைத்திருந்தவர்களை வந்து பிடித்துக் கொள்வார்கள் என்ற புரிதலின் அடிப்படையில்தான் இவ்வாறு அறிவித்திருக்கிறார்கள். இவ்வாறாக  கறுப்புப் பணம்என்பது வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்று வைத்திருக்கும் பழக்கத்தை கைவிட்டுவிடுவார்கள் என்றும் நினைக்கிறார்கள்.
இவ்வாறு பதுக்கி வைத்திருந்த ரொக்கம்தான் கறுப்புப் பணம்என்பதை வாதத்திற்காக நாம் ஒப்புக் கொண்டாலும் இவ்வாறு  ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிப்பதால் அது எந்தப் பலனையும் தந்துவிடப் போவதில்லை. ஒருவர் சுமார் 20 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் வைத்திருக்கிறார், அவற்றையும் அவர் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளாகவே வைத்திருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம்.  நிச்சயமாக அந்த நபர் அந்த 20 கோடி ரூபாயையையும் ஒரே நாளில் வங்கிக்கு எடுத்துக் கொண்டு வந்து  புதிய நோட்டுகளாக மாற்ற மாட்டார். (அப்படியே வந்தாலும் அவ்வாறு செய்வதற்கு செய்வதற்கு அவர் அனுமதிக்கப்பட மாட்டார்). டிசம்பர் 30 வரையிலும் பல தேதிகளில் வங்கிக்குப் பல நபர்களை அனுப்பி கொஞ்சம் கொஞ்சமாக அதனை மாற்றிக் கொள்வார்.
 உண்மையில் இவ்வாறு நீண்ட நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகூட தேவையில்லாமல் போகலாம். பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றித்தருவதற்கான தரகர்கள் ஏராளமானவர்கள் அதற்குள் முளைத்துவிடுவார்கள். இவ்வாறு கறுப்பு பணத்தைபழைய நோட்டுகளிலிருந்து புதிய நோட்டுகளுக்கு மாற்றித்தருவதற்கான கறுப்பு பரிவர்த்தனைதாரர்கள் (“black operators”), 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருக்கிற பணத்தையெல்லாம் வெளிக்கொண்டுவந்து விடலாம் என்பதனையே அர்த்தமற்றதாக்கிவிடுவார்கள்.
 ஆயினும், இதில் மிகவும் முக்கியமாகக் கூற வேண்டியது என்னவெனில், கறுப்புப் பணம்குறித்த இத்தகைய கருத்தாக்கமே மிகவும் அபத்தமானதாகும். உண்மையில், கறுப்புப்பணம்என்கிற சொற்றொடரே ஒரு  பொருந்தாத பெயராகும். ஏனெனில்,  இந்தச் சொற்றொடரானது வங்கிகளில் சேமிப்பு வடிவத்தில் வெளிப்படையாக இல்லாமல், இரகசியமாக தலையணைகளுக்கு அடியிலும், கண்டெய்னர்களிலும் பதுக்கி வைத்திருக்கிற தொகை என்ற அர்த்தத்தைத் தருகிறது.
உண்மையில்,  கறுப்புப் பணம்என்று நாம் பேசும்போது, கடத்தல் அல்லது போதை மருந்துகள் எடுத்துச் செல்லுதல், அல்லது பயங்கரவாத அமைப்புகளுக்காக ஆயுதங்கள் சேகரித்தல், அல்லது சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்டதைவிட அதீதமாக எடுத்துச் செல்லுதல், அல்லது வரி ஏய்ப்பு செய்வதற்காக வெளிப்படையாக அறிவிக்காமல் வைத்திருத்தல் போன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகள் அனைத்தையும் மனதில் வைத்துத்தான்  நாம் சொல்கிறோம்.
100 டன்கள் கனிம வளங்கள் எடுக்கப்படுகிறது. ஆனால், வரி செலுத்துவதைக் குறைப்பதற்காக,  80 டன்கள் மட்டும்தான் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது என்றால், பின் இது கறுப்புப் பணம்உருவாவதற்கான ஒரு வழியாகும். இதேபோன்று, 100 டாலர்கள் மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் 80 டாலர்கள் மதிப்பிலான பொருள்கள்தான் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று கூறிவிட்டு, மீதம் 20 டாலர் மதிப்பிலான பொருள்களின் தொகையை ஸ்விஸ் வங்கிகளில் போடப்பட்டிருக்கிறது என்றால். அது சட்டவிரோதமான செயல், இதன் மூலம் கறுப்புப் பணம்உருவாகிறது என்று சொல்கிறோம்.   அல்லது அந்நிய நாட்டுனான பரிவர்த்தனையில் ஹவாலா வழியாக பணம் கைமாறுகிறது என்றால், அதன்மூலமும் கறுப்புப் பணம்உருவாகிறது என்று சொல்கிறோம். இவ்வாறு அறிவிக்கப்படாத நடவடிக்கைகள் அனைத்தும் கறுப்புப் பணம்என்பதன் கீழ் வரும்.
கறுப்புப் பணம்என்பது இவ்வாறு கையில் உள்ள இருப்பு அல்ல மாறாக சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறிக்கும். வெள்ளை நடவடிக்கைகள்போன்றே கறுப்பு நடவடிக்கைகளும்இதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபத்தை ஈட்டித்தரும் என்றே பொருளாகும். பணத்தை பதுக்கி வைத்திருப்பதாலேயே அது லாபத்தை ஈட்டிடாது. மார்க்ஸ் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடும்போது, கறுப்பு நடவடிக்கைகள்குறித்தும் கூறியிருக்கிறார். அதாவது, லாபம் பணத்தை பதுக்கி வைத்திருப்பதால் அல்ல மாறாக அதனை சுற்றுக்கு விடுவதன் மூலம் ஈட்டுவதாகும் என்கிறார்.  கருமிமுன்னதைச் செய்கிறான். முதலாளி பின்னதைச் செய்கிறான். எனவே கறுப்பு நடவடிக்கைகளில்ஈடுபடுபவர்கள் முதலாளிகளே யொழிய, கருமிகள் அல்ல.
கறுப்பு பணத்தைவெளிக்கொணர்வது  என்பதன் சாரம் கறுப்புப் பண நடவடிக்கைகளை  கண்டுபிடிப்பதில்தான் இருக்கிறதேயொழிய, இப்போது செய்திருப்பதைப்போல பணம் வைத்திருப்பவர்களைத் தாக்குவது அல்ல. இதற்கு நேர்மையான, திட்டமிட்ட மற்றும் கடுமையான புலனாய்வு தேவையாகும்.
கணினிகள் வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பிரிட்டிஷ் உள்ளார்ந்த வருவாய் சர்வீஸ் (British Internal Revenue Service) அலுவலர்கள் வரி ஏய்ப்போரை நுட்பமாக விசாரணை செய்வதன் மூலமே கண்டுபிடித்திடும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள். இந்தியாவைவிட பிரிட்டன் ஒரு சிறிய நாடு என்பது உண்மைதான். எனினும், வரி வசூல் செய்திடும் நிர்வாக எந்திரம் நாட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கேற்ப இருக்க வேண்டும் என்பதே இதில் மிக முக்கியமான விஷயம். இதைச் செய்தோமானாலேயே, நம் நாட்டிலும்  கறுப்புப்பணத்தைவெளிக் கொணர்வது என்பது கடினமான ஒன்று அல்ல. இவ்வாறு கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வது என்பது, மிகவும் பொறுமையுடன், திறமையாக வேலை செய்திடும் வரிவசூல் நிர்வாக அமைப்பைச் சார்ந்தே உள்ளது. 
கணிசமான அளவிற்கு கறுப்பு நடவடிக்கைகள்வெளிநாடுகளில் அமைந்துள்ள வங்கிகளின் வாயிலாகவே நடந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் இதுதான் அதிகமான இடத்தினை வகிக்கிறது. நரேந்திரமோடியே தேர்தலுக்கு முன் என்ன பேசினார்? வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை  எல்லாம் மீண்டும் கொண்டுவருவேன்என்றும், கறுப்புப் பணம்அதிகமான அளவில் வெளிநாடுகளில்தான் இருக்கிறது என்றும் கூறினார். இவ்வாறு வெளிநாட்டில் உள்ள வங்கிகள் கறுப்பு நடவடிக்கைகளுக்குஅதிகமான அளவில்  காரணமாக இருக்கும்பட்சத்தில், இங்கே இந்தியாவில்  500 ரூபாய் நோட்டுகளையும், 1000 ரூபாய் நோட்டுகளையும் செல்லாது என்று அறிவிப்பதன் மூலம், இங்குள்ள சாமானிய மக்களை கஷ்டத்திற்குள்ளாக்குவதைத் தவிர, இதுபோன்ற கறுப்பு நடவடிக்கைகளை ஒழித்திட எவ்விதத்திலும் உதவப் போவதில்லை.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பது இது ஒன்றும் முதன்முறையல்ல. 1946 ஜனவரியில் 1000 ரூபாய் நோட்டுகளும், 10,000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. பின்னர் 1978இல் மொரார்ஜி தேசாய் அரசாங்கம் 1000, 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று ஜனவரி 16 அன்று நள்ளிரவிலிருந்து செல்லாது என்று அறிவித்தது. 1946ஐ விடுங்கள், 1978இல் இவ்வாறு அறிவிக்கப்பட்டபோதுகூட, இந்த அறிவிப்பு சாமானிய மக்களுக்கு எந்த கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை.  ஏனெனில் அவர்களில் அபூர்வத்திலும் அபூர்வமானவர்களே இந்த நோட்டுகளையே அந்தக்காலத்தில் பார்த்திருப்பார்கள்.  பார்ப்பதே இப்படி குதிரைக் கொம்பாக இருக்கையில் அவர்கள் எங்கே வைத்திருக்கப் போகிறார்கள்?  ஆயினும் மொரார்ஜி தேசாயின் அந்த நடவடிக்கை மூலமும் கறுப்புப் பண நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட முடியவில்லை. அதேபோன்றுதான் இப்போது மோடி அரசாங்கத்தின் நடவடிக்கையும், சாமானிய மக்களுக்கு, துன்ப துயரங்களைக் கொண்டுவர வழிவகுத்திருப்பதைத் தவிர கறுப்புப்பணநடவடிக்கைகளை எந்தவிதத்திலும் தடுத்திடாது.
எல்லை தாண்டிபயங்கரவாதிகளால்வ அச்சிடப்பட்டு கொண்டுவரப்பட்டு சுற்றுக்கு விடப்பட்டுள்ள போலி கரன்சி நோட்டுகளைத் தடுத்திடவதற்காகவும் இவ்வாறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. புதிதாக அச்சிடப்படும் நோட்டுகளைப் போல போலி நோட்டுகள் அச்சிடப்பட முடியாது என்றும் கூறப்படுகிறது. இவர்கள் கூறும் ஊகங்களை ஏற்றுக்கொள்வோம். இது படிப்படியாகத்தான்  செயல்பாட்டுக்கு வரும். பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிதாக அச்சிடப்படும் நோட்டுகள் செயல்பாட்டுக்கு வருவதைப்போலத்தானேயொழிய, இதற்காக பழைய நோட்டுகளை செல்லாது என்று அறிவித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அப்படியே போலி நோட்டுகள் பயங்கரவாதிகளால் இறக்கிவிடப்பட இருக்கிறது என்று அரசாங்கம் எதிர்பார்த்திருந்தாலும், நவம்பர் 8 அன்று இரவிலிருந்து ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறி மக்களை திடீரென்று அதிர்ச்சியடைய வைத்து தாக்குதலுக்கு உள்ளாக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன?
மோடி அரசாங்கம் செய்திருக்கும் வேலை நவீன இந்தியாவின் வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெறாத ஒன்று. காலனியாதிக்க அரசாங்கம் கூட மக்களின் கூருணர்வினைப் பெரிதும் மதித்து எச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்தது. மிகப்பெரிய பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ரூபாய் நோட்டுகள் மீதுதான் அது கை வைத்தது. மோடி செய்திருப்பதைப்போல சாமானிய மக்கள் பயன்படுத்தும் நோட்டை செல்லாது என்று அறிவித்திடவில்லை.  மோடி அரசாங்கம் சமீபத்தில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை ஒட்டியே இப்போது இந்த அவசர நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது.  இதன்மூலம் மக்கள்மீது மோடி அரசாங்கம் அறிவிக்கப்படாத அவசர நிலையைஏவியிருக்கிறது.
(தமிழில்: ச. வீரமணி)
  



No comments: