Saturday, November 26, 2016

நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதிப்பதால் பிரதமருக்கு எதிராக நோட்டீஸ் கொடுத்திருக்கிறேன் நியூஸ்7-தமிழ் அலைவரிசைக்கு சீத்தாராம் யெச்சூரி பேட்டி


நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதிப்பதால்
பிரதமருக்கு எதிராக நோட்டீஸ் கொடுத்திருக்கிறேன்
நியூஸ்7-தமிழ் அலைவரிசைக்கு சீத்தாராம் யெச்சூரி பேட்டி
(புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவன் முன்பு, டியூஸ் 7-தமிழ் அலைவரிசை செய்தியாளர் சரோஜ்கண்பத்திடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:)
ஐநூறு ரூபாய். ஆயிரம் ரூபாய் பண முடக்கப் பிரச்சனையால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டு வருகிறது. மக்களைப் பாதித்துள்ள இந்த நடவடிக்கைக்கு பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு போராடி வருகின்றன. ஆனால் பிரதமர் அவைக்கு வருவது அரிதாக இருக்கிறது. வியாழன் அன்று சிறிது நேரம் மாநிலங்களவையில் இருந்தார். அதற்கு முன் தினம் மக்களவையில் இருந்தார்.  இந்தப் பண முடக்கம் விவகாரத்தை மாநிலங்களவையில் எடுத்துக்கொண்டபோது பிரதமர் தொடந்து இல்லாததைக் காட்டி எதிர்க்கட்சிகள் பிரச்சனையை எழுப்பின. இதனால் அவையும் ஒத்திவைக்கப்பட்டது. இப்படி பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதே அரிதாக இருக்க,  எதிர்க்கட்சிகள் பிரதமர் நாடாளுமன்றத்தை அவமதிக்கிறார் என்று குற்றம் சாட்டுகின்றன. இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக  நோட்டீஸ் கொடுத்துள்ளார். இந்த நோட்டீஸ் குறித்தும் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குவது குறித்தும் சீத்தாராம் யெச்சூரியுடன் பேசினோம்.
நியூஸ்7 தமிழ்: நீங்கள் பிரதமர் நாடாளுமன்றத்தை அவமதிக்கிறார் என்று கூறி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறதே, அந்த நோட்டீஸ் என்னவாயிற்று?
சீத்தாராம் யெச்சூரி: அது மாநிலங்களவைத் தலைவர் முன்னிலையில் உள்ளது.  அவர் தான்  இது குறித்து முடிவு எடுப்பார். நான் கொடுத்தது அவமதிப்பு நோட்டீஸ் தான். உரிமைமீறல் நோட்டீஸ் கொடுக்கவில்லை. பிரதமர் நாடாளுமன்றத்திற்குள் பேசுவதில்லை. இது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். ஆனால் இந்த விவகாரம் குறித்து வெளியே நாள்தோறும், நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதிப்பதாகும். இது  கண்டனத்திற் குரியது என்பதால் இதற்கான நோட்டீஸ்  கொடுக்கப்பட்டுள்ளது’’
நியூஸ்7: ‘’ கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தான் இந்தவிவகாரத்தில் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்று பிரதமர் குற்றம்  சாட்டியுள்ளாரே?
சீத்தாராம் யெச்சூரி:  மக்கள் கியூவில் நிற்கிறார்கள். தினக்கூலிகள், வாராந்தரக் கூலிகள், மீனவர்கள் என இந்த விவகாரத்தில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாலு லட்சம் பேர்கள் வேலையிழந்துள்ளனர் என்று ஏற்றுமதிமேம்பாட்டுகவுன்சில் கூறுகிறது. இவர்களெல்லாம் தினக்கூலிகள் தான். நாட்டில் மூன்று முக்கிய ஏற்றுமதி கவுன்சில்கள் உள்ளன. தோல்,, துணிகள் மற்றும் ஜூவல்லரி ஆகியவை. இதில் முப்பத்திரெண்டு மில்லியன் பேர்கள்(3 கோடியே 20 லட்சம்) பணியாற்றுகின்றனர். இவர்கள் எங்கே பேவார்கள்? இவர்களெல்லாம் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களா? அவர்கள் எப்படி வாழ்க்கை நடத்துவார்கள்? இப்படி பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பேசுகிறாரா? ஏற்கனவே 75 பேர்கள் இறந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் இதயத்தை அதிரவைக்கும் பரிதாபக்குரிய சம்பவங்களை கேட்டுக்கொண்டு வருகின்றோம். தந்தையை மருத்துவமனைக்கு கொண்டு போகமுடியவில்லை. மகளைக் காப்பாற்ற முடியவில்லை என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதையெல்லாம் கேட்டபின்னர்  அரசின் நடவடிக்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அரசால் முடக்கப்பட்ட பணத்தை உடனடியாக மாற்றிக்கொடுக்க முடியவில்லையென்றால் உரிய ஏற்பாடுகள் செய்யும் வரை உபயோக்க அனுமதிக்கவேண்டும்.
நியூஸ்7: இந்த நெருக்கடி தீர பிரதமர் நாற்பது நாட்கள் தான் அவகாசம் கேட்கிறார்.. அது வரை பொறுத்திருக்க கூறுகிறார்? இதை த்திரும்ப பெறமுடியாதே?
சீத்தாராம் யெச்சூரி:  நாங்கள் திரும்ப பெறக் கோரவில்லை… இதற்குச் சரியான மாற்று ஏற்பாடு செய்யவே கோருகின்றோம். ஒருவேளை இது சரியாக ஐம்பது நாட்களாகும் என்றால் அதுவரை பழைய நோட்டுகளை உபயோகிக்க அனுமதிக்கவேண்டும். மாற்று ஏற்பாடு செய்யமுடியவில்லையென்றால் தயாராகும் வரை தொடர அனுமதிக்கவேண்டும்.
நியூஸ்7: நாடாளுமன்றம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமுன்வடிவுகூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. இப்படியென்றால் இதற்கு என்ன தீர்வு?
சீத்தாராம் யெச்சூரி:  பிரதமரும் அரசும் தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும். அரசு நாடாளுமன்றத்திற்கு பதில் சொ ல்ல கடமைப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். இது தான் இறையாண்மை. நம் அரசமைப்புச்சட்டம் தொடங்கும்போதே, “இந்திய மக்களாகிய, நாம்”  என்றுதான் தொடங்குகிறது. அதனால்தான் , நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் சொல்லுங்கள் என்று கேட்கின்றோம்.
நியூஸ்7 : உங்களுடைய விவாதத்திற்கும் கேள்விகளுக்கும் அரசின் சார்பில் நிதியமைச்சர் பதிலளிக்க தயாராக இருக்கிறார். ஆனால் நீங்கள் பிரதமர் தான் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறீர்களே?
சீத்தாராம் யெச்சூரி: யார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள்? நிதியமைச்சர் இல்லையே? பிரதமர் தானே வெளியிட்டார்.. அவர்தானே நாட்டு மக்களிடம் உரையாற்றினார். எனவே அவர் தான் பதில் கூறவேண்டும்.
---

No comments: