Tuesday, November 15, 2016

பகத்சிங்குகளை உருவாக்கிய நவம்பர் புரட்சி


(பகத்சிங்குடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்ட தோழர் சிவவர்மா, ‘நாட்டில் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி - சபேகார் முதல் பகத்சிங் வரை’ என்னும் தன்னுடைய நூலில், மாபெரும் நவம்பர் புரட்சி எந்த அளவிற்கு தோழர் பகத்சிங்கையும், தங்கள் இயக்கத்தையும் உருக்குபோன்று மாற்றி அமைத்தது என்பதையும் விளக்குகிறார்.)
மக்களிடம் செல்லுங்கள், தொழிலாளர்கள் - விவசாயிகள் - படித்த மத்திய தர இளைஞர்கள் இடையே செயல்படுங்கள், அவர்களை அரசியல்ரீதியாகப் பயிற்றுவியுங்கள், அவர்களை வர்க்க உணர்வுள்ளவர்களாக மாற்றி, வர்க்க அடிப்படையிலான சங்கங்களின் கீழ் அவர்களை அணிதிரட்டுங்கள் என்று அறிவுறுத்தினார்.
நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியானது மனிதகுல வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாகும். அது ரஷ்யாவிலிருந்த ஏகாதிபத்திய ஆட்சியை முற்றிலுமாக அழித்து ஒழித்ததோடு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருந்த அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும் திகிலூட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனிதனை மனிதன், ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டும் முறைக்கு நவம்பர் புரட்சி முற்றுப்புள்ளி வைத்தது.
சோவியத் மக்கள் தங்கள் விதியை தாங்களே நிர்ணயித்துக்கொள்ளும் எஜமானர்களாக மாறினார்கள்.அது உலகில் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த பல்வேறு நாட்டின் விடுதலைப் போராளிகளுக்கும் உத்வேகத்தைக் கொடுத்தது, தங்களுடைய லட்சியப் போராட்டமும் வெல்லும் என்கிற நம்பிக்கையை விளைவித்தது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டங்களுக்கு புதிய பரிமாணத்தை அளித்தது. இந்தியாவில் விடுதலைக்கான போராட்டமும், உலகத்தில் நடைபெற்று வந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதி என்ற அடிப்படையில், பாதிக்கப்படாமலிருக்க முடியவில்லை.
இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் உதயம்பொதுவாக 1920களிலும், குறிப்பாக 1928-1930களிலும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும். இந்தக் காலகட்டத்தில்தான், இடதுசாரி சக்திகள் அமைப்புரீதியாக வலுவான சக்தியாக உருவாகத் தொடங்கியிருந்தன. பெரிய அளவில் வீரஞ்செறிந்த தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் நாடு முழுவதும் நடைபெற்றன.
அமைப்புரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாக தொழிலாளர்கள் சிறந்த வேலை நிலைமைகளுக்காகவும், கூடுதல் ஊதியத்திற்காகவும் வலுவான போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரிக்கத் தொடங்கியது. தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கம்யூனிசத்தின் மீதான ஈர்ப்பு வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. முதன்முறையாக, அமைப்புரீதியாக விரிவான முறையில் இடதுசாரி அரசியல் இயக்கம் நாட்டில் உருவாகிக் கொண்டிருந்தது.
நாங்கள் சோசலிச சிந்தனையை நோக்கி அடிமேல் அடியெடுத்து வைத்து முன்னேறிக் கொண்டிருந்தோம். நாங்கள் கைது செய்யப்பட்ட பின்னர்தான், எங்களுக்கு நிறைய நேரமும், புத்தகங்களும் கிடைத்தன. அவற்றைப் படித்தோம், விவாதித்தோம், கடந்த காலங்களில் நாங்கள் செய்தவற்றைத் தீர ஆய்வுசெய்து, சரியான முடிவுகளுக்கு வந்தோம்.முதலாவதாக, நாங்கள் கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், நாங்கள் மார்க்சியத்தை முறையாக ஆழ்ந்து கற்றதன் அடிப்படையில் அமைந்திடவில்லை.
நம் நாட்டில் அன்றைக்கு மேலோங்கியிருந்த சமூகச் சூழ்நிலைமையில், மார்க்சியத்தைக் கசடறக் கற்பது என்பது அப்படியொன்றும் அவ்வளவு எளிதல்ல.இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் முன்னெடுத்துச் சென்ற நடவடிக்கைகளில் மார்க்சியத்தை அதன் தத்துவமாகவும், சோசலித்தை அதன் இறுதி லட்சியமாகவும் ஏற்றுக்கொண்டதை மிகப்பெரிய முதல் நடவடிக்கை என்றுகூற முடியும்.
விஞ்ஞானப்பூர்வமான சோசலிசத்தை நோக்கி ...
பகத்சிங் இளம் அரசியல் ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். மார்க்சையும் லெனினையும் கற்க வேண்டும் என்றும், அவர்கள் போதனைகளை செயலுக்கான வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் செல்லுங்கள், தொழிலாளர்கள் - விவசாயிகள் - படித்த மத்திய தர இளைஞர்கள் இடையே செயல்படுங்கள், அவர்களை அரசியல்ரீதியாகப் பயிற்றுவியுங்கள், அவர்களை வர்க்க உணர்வுள்ளவர்களாக மாற்றி, வர்க்க அடிப்படையிலான சங்கங்களின் கீழ் அவர்களை அணிதிரட்டுங்கள் என்று அறிவுறுத்தினார். மக்களின் கட்சி ஒன்று இல்லாமல் அது அனைத்தும் சாத்தியமல்ல என்றும் அவர் மேலும் கூறினார். கட்சி குறித்த அவரது சிந்தனையை மேலும் விளக்கும் வகையில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
‘‘தோழர் லெனின் மிகவும் பிரியத்துடன் பயன்படுத்திய வார்த்தைகளில் சொல்வதானால் ‘புரட்சியைத் தொழிலாகக் கொண்டவர்களே’ நமக்குத் தேவை. புரட்சியைத் தவிர வேறெந்த ஆசாபாசங்களும் வேலையும் இல்லாத முழுநேர ஊழியர்களே நமக்குத் தேவை. எந்த அளவிற்கு அத்தகைய ஊழியர்கள் ஒரு புரட்சிக் கட்சிக்குக் கிடைக்கிறார்களோ அந்த அளவிற்கு அதன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகும்.’’ அவர் மேலும், ‘திட்டமிட்டமுறையில் செயலாற்றுவதற்கு உங்களுக்குத் தேவை, மேலே விவரித்ததுபோன்று மிகவும் தெளிவான சிந்தனைகளுடன் கூரிய அறிவும், முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும், விரைந்து செயல்படும் ஆற்றலும் கொண்டவர்கள் நிறைந்த ஒரு கட்சியாகும். கட்சி உருக்கு போன்ற கட்டுப்பாட்டைப் பெற்றிருக்க வேண்டும்.
அதற்காக அது ஒன்றும் தலைமறைவுக் கட்சியாகச் செயல்பட வேண்டும் என்று அவசியம் இல்லை, அதற்கு மாறான நிலையில் கூட இருக்கலாம். ... கட்சி வெகுஜனப் பிரச்சாரப் பணியுடன் தொடங்கப்பட வேண்டும். ... விவசாயிகள் - தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துவதும் அவர்கள் நம்பிக்கையைப் பெறுவதும் அவசியமாகும். கட்சியின் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்று வைத்திடலாம். மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடிய அரசியல் ஊழியர்களைக் கொண்ட இக்கட்சியானது, அதன்கீழ் உள்ள அனைத்து இயக்கங்களையும் வழிநடத்த வேண்டும்,இவ்வாறு பகத்சிங், மார்க்சிசத்திற்காகவும், கம்யூனிசத்திற்காகவும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும் வெளிப்படையாகவே வந்து விட்டார்.
(தமிழில்: ச.வீரமணி)


No comments: