Friday, November 11, 2016

கலப்படமற்ற எதேச்சதிகாரமான ஆட்சி



(இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றுவதற்காக தலித்துகள், முஸ்லிம்களை ஒடுக்குவது, பல்கலைக் கழகங்களில் மிகவும் மோசமான முறையில் தலையிடுவது, அரசியல் எதிரிகளை நசுக்குவதற்காக காவல்துறையினரை கூச்சநாச்சமின்றி பயன்படுத்துவது என அனைத்தும் தலைதூக்கி இருக்கின்றன. இவை அனைத்தும், கலப்படமற்ற எதேச்சதிகார ஆட்சியேயன்றி வேறல்ல.)
கடந்த சில நாட்களாகவே சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஆட்சியாளர்களிடமிருந்து எதேச்சதிகாரத்தின் முன்னறிகுறிகள் வெளிவரத் துவங்கி இருக்கின்றன. இதில் வேடிக்கை விநோதம் என்னவெனில், இந்த சமயத்திலும் பிரதமர் மோடி தில்லியில், ராம்நாத் கோயங்கா விருதுகள் வழங்கும் நிகழ்வின்போது அவசரநிலை என்னும் பாவத்தைச் செய்திட எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல் தலைவனும் நினைக்கக்கூடாது என்ற விதத்தில் ஒவ்வொரு தலைமுறையும் அவசரநிலையைப் பிரதிபலித்திட வேண்டும் என்று பேசியிருப்பதுதான். இது எந்த அளவிற்கு பித்தலாட்டமான பேச்சு என்பதை, இந்த நிகழ்வு நடைபெற்ற நவம்பர் 2 அன்றே தற்கொலை செய்துகொண்ட ஓய்வுபெற்ற சுபேதார் ராம் கிஷன் என்பவருடைய குடும்பத்தினரை சந்திப்பதற்காக ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குச் சென்ற தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், தில்லி மாநில துணை முதல்வர் மணீஸ் சிசோடியாவையும் தில்லி காவல் துறையினர் கைது செய்திருப்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும். அரசியல் தலைவர்களின் மிகச் சாதாரணமான நடவடிக்கைகள் கூட இந்த அரசாங்கத்திற்கு அவமரியாதையாகவும், சட்டம் ஒழுங்கு மீறலாகவும் மாறி இருக்கின்றன.
முத்திரை குத்துதல்
பிரதமர் உரை நிகழ்த்துவதற்கு இரு நாட்களுக்கு முன்பு, `சிமி` இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்ட எட்டு விசாரணைக் கைதிகள், போபால் மத்திய சிறையிலிருந்து தப்பி இருந்தார்கள். அவர்கள் 15 கிலோ மீட்டர் தூரத்தில் காவல்துறையினரால் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களிடம் எவ்விதமான ஆயுதமும் கிடையாது. அவர்கள் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கொல்லப்பட்டதை மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சௌஹான் நியாயப்படுத்தி இருக்கிறார். பயங்கரவாதிகள் சிறையில் பல ஆண்டுகள் இருத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்கள் சிக்கன் பிரியாணி ஊட்டி வளர்க்கப்பட்டார்கள் என்றும் கிண்டலடித்திருக்கிறார். மத்தியப்பிரதேசத்தை ஆளும் பாஜக அரசாங்கத்திற்கு, எவரையாவது பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதே அவரை என்கவுண்ட்டர் மூலம் தீர்த்துக்கட்டுவதற்குப் போதுமானதாகும். மோடி அரசாங்கத்தின் அணுகுமுறையும் இதில் வித்தியாசப்படவில்லை. மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அரசாங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் செய்கைகளை எவரும் கேள்வி கேட்கக்கூடாது என்றும் அவ்வாறு கேட்பது நம் ‘கலாச்சாரத்திற்கு’ எதிரானது என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இவ்வாறு கேள்விகள் கேட்பது ‘தேச விரோத நடவடிக்கை’களாகக் கருதப்படும் என்றும் மிரட்டி இருக்கிறார்.
காவல்துறை அட்டூழியம்
காவல்துறையினர் தான்தோன்றித்தனமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் நடந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது சமீபத்திய மேலும் இரு நிகழ்வுகளின் மூலமாகவும் பார்க்க முடியும். முதலாவது நிகழ்வு, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் நஜீப் அகமது, காணாமல் போயுள்ள வழக்கை தில்லி காவல்துறையினர் நடத்திடும் லட்சணம். நஜீபைத் தாக்கிய ஏபிவிபி மாணவர்களை விசாரிப்பதற்கே அது மறுத்து வருகிறது. மாறாக, அது காவல்துறையினரின் அசிரத்தையான நடத்தைக்கு எதிராக இந்தியா கேட் முன்பு கிளர்ச்சியில் ஈடுபட்ட மாணவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நஜீபின் தாயாரைக் கூட விட்டுவைக்கவில்லை. அவரை தரதரவென்று இழுத்துச் சென்று கைது செய்திருக்கின்றனர். இரண்டாவது நிகழ்வில், சத்தீஸ்கர் காவல்துறையினர் தில்லிப் பல்கலைக்கழகம் மற்றும் ஜேஎன்யு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு பேராசிரியர்களுக்கு எதிராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருக்கு எதிராகவும் மற்றும் சில ஆர்வலர்களுக்கு எதிராகவும் கொலை மற்றும் கொலை செய்வதற்காக சதி செய்தனர் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கின்றனர். பஸ்டாரில் ஒரு கிராமத்தில் நவம்பர் 4 அன்று ஒரு பழங்குடியினத்தவர் கொல்லப்பட்டதற்குப் பின்னர் இவர்களுக்கு எதிராக இவ்வாறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மேலே கூறிய கல்வியாளர்களும், அரசியல் ஆர்வலர்களும் மே மாதத்தில், அதாவது ஆறு மாதங்களுக்கு முன்பு, அப்பகுதிக்குச் சென்றிருந்தார்கள். காவல்துறையினரும், அவர்களின் அடியாட்களும் அப்பாவி பழங்குடியினருக்கு எதிராக புரிந்துவந்த அட்டூழியங்களை இவர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்கள் என்பதற்காக, அதற்குப் பழிவாங்கும் விதத்தில் இவ்வாறு அவர்கள் மீது பொய்யாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பாசாங்கு அறிவிப்பு
நவம்பர் 2 அன்று பிரதமர் மோடி ஆற்றிய உரையில் அவர் மற்றுமொரு பாசாங்குத்தனமான அறிவிப்பைச் செய்திருக்கிறார். ‘கூர்மையான ஜனநாயகத்திற்கான’ கருவியாக எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்கும் விதத்தில் ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அடுத்த இரு நாட்களில், அரசாங்கம் என்டிடிவி இந்தியா தொலைக்காட்சி அலைவரிசைக்கு 24 மணி நேரத்திற்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. குற்றச்சாட்டு என்ன தெரியுமா? தேசியப் பாதுகாப்புடன் சமரசம் செய்துகொள்ளும் விதத்தில், பத்து மாதங்களுக்கு முன்பு, ஜனவரியில், பதான்கோட் தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்டதாம். நாட்டில் முதன்முறையாக இவ்வாறு ஒரு செய்தி அலைவரிசைக்கு எதிராக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிராக ஊடகங்கள் கண்டனக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து அரசாங்கம் இப்போது இதனை நிறுத்தி வைத்திருக்கிறது. ஆயினும், தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் இவ்வாறு ஊடகங்களுக்குத் தண்டனை அளிப்பதை அரசாங்கம் தவறாகக் கருதவில்லை என்று இப்போதும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருப்பதானது, அரசாங்கம் கொஞ்சமும் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. மோடியின் ஆட்சியில், தன் ஆட்சிக்கு எதிரானவர்களை எல்லாம் தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவது, தங்களுடைய இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றுவதற்காக தலித்துகள், முஸ்லிம்களை ஒடுக்குவது, பல்கலைக் கழகங்களில் மிகவும் மோசமான முறையில் தலையிடுவது, அரசியல் எதிரிகளை நசுக்குவதற்காக காவல்துறையினரை கூச்சநாச்சமின்றி பயன்படுத்துவது என அனைத்தும் தலைதூக்கி இருக்கின்றன. இவை அனைத்தும், கலப்படமற்ற எதேச்சதிகார ஆட்சியேயன்றி வேறல்ல.
(நவம்பர் 9, 2016)
(தமிழில்: ச. வீரமணி)


No comments: