Sunday, November 6, 2016

நவம்பர் புரட்சி - தீக்கதிர் சிறப்புத் தலையங்கம்


கனவு விதைகள் கண் விழித்த நாள் இது


நூறு ஆண்டுகள் என்பது பூவுலகின் வரலாற்றில் ஒரு துளியின் துமிதான். ஆனால் மகத்தான நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு என்பதுமனிதகுல வரலாற்றையே மாற்றியமைத்த ஒரு யுகத்தின் பிரசவம். சமத்துவம், சோசலிசம் குறித்த கனவுகளும், கற்பனைகளும் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன. "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்பது குறித்து வள்ளுவப் பேராசான் வகுத்துத் தந்தான். ஆனால் அது அவரது விருப்பமாக இருந்ததேயன்றி நிதர்சனமாக இல்லை. பிச்சை எடுத்துப் பிழைக்கும் வாழ்க்கை இருந்ததால் தான், இந்த உலகைப் படைத்த இறைவன் கெட்டொழியட்டும் என்று சாபம் விட்டார் வள்ளுவர். "எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை, உடையாரும் இல்லை மாதோ" எனும் ஒரு சமூகமாக அயோத்திஇருந்ததாகக் கம்பன் பாடினான். ஆனால் அது அவரது கற்பனையாக மட்டுமே இருந்தது. கவிஞர்களின் கனவாக மட்டுமே இருந்த ஒப்புயர்வற்ற சமுதாயத்தைச் சமைத்துக் காட்டியதுதான் ரஷ்ய மண்ணில் நிகழ்ந்த நவம்பர் புரட்சியின் மகத்தான சாதனையாகும். சோசலிசம் என்பது கனவல்ல. அது சாத்தியம் தான்என்பதைச் சாதித்துக்காட்டியது தான் கோடிக் கால் பூதமான தொழிலாளி வர்க்கத்தின் ஆகப் பெரிய சாதனையாகும். இந்த யுகப்புரட்சிக்கான படைக்கலன்களாக மார்க்சியத் தத்துவத்தை வகுத்தளித்தனர் தத்துவஆசான்கள் மார்க்சும் ஏங்கெல்சும். இந்தத் தத்துவஆயுதத்தைக் களத்தில் கச்சிதமாகப் பயன் படுத்தி, மாமேதை லெனின் தலைமையில் பாட்டாளிவர்க்கம் புதியதொரு பொன்னுலகை உருவாக்கிக் காட்டியது. உலகில் தோன்றிய மதங்கள் எல்லாம் சொர்க்கம் விண்ணில் இருப்பதாகவே கைகாட் டின. ஆனால் வாழும் மண்ணிலேயே ஒரு சொர்க்கபுரியை, சுரண்டல் இல்லாத, பட்டினி இல்லாத ஒரு சமூகத்தைப் படைத்துக்காட்டிய நிகழ்வுதான் நவம்பர் புரட்சி. பாசிச அபாயத்தை முறியடித்து இந்தப் பூமியைப் பாதுகாக்க மாவீரன் ஸ்டாலின் தலைமையில் சோவியத் மக்கள் ஒரே மனிதனாக எழுந்து நின்றார்கள். தங்களுடைய இன்னுயிரைத் தியாகம் செய்து, மனிதகுல வரலாறுகோணல் புத்திக்காரர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் நேர்வழியில் நிமிர்ந்து நடைபோட சோவியத் யூனியன் தான் காரணமாக அமைந்தது. விண்வெளித்துறை தொடங்கி விளையாட்டுத்துறை வரை... விவசாயம் தொடங்கித் தொழில்நுட்பம் வரை... சோவியத் யூனியன் படைத்துக்காட்டிய சாதனைகள் அதுவரை வரலாற்றில் நடந்திராத ஒன்று. காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் அனைத்து நாடுகளின் மக்களுக்கும் சோவியத் நேசக்கரம் நீட்டுவதாகப் பிரகடனம் செய்தார் மாமேதை லெனின். இந்தியாஉட்படப் பல்வேறு நாடுகளின் விடுதலை வேட்கை வீறு கொண்டு எழுந்தது இதன்பிறகுதான்.
சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பின்னணியில்இனி, கம்யூனிசத்திற்கு எதிர்காலம் இல்லை;முதலாளித்துவம் தான் உலகை ஆளும் எனக் கெக்கலி கொட்டியவர்கள் நெருக்கடியின் பிடியில் சிக்கி உலகம் திணறிக் கொண்டிருப்பதை நியாயப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள். மனிதகுலத்தின் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவத்தால் ஒருபோதும் தீர்வு காண முடியாது. ஏனெனில் அது நோய். சோசலிசம் என்பதே மனிதகுலத்திற்கு மாமருந்து என்ற உண்மை விடியற் காலை வெளிச்சமாய் வெளிவந்தே தீரும். மாமேதை லெனின் நடத்திய ‘இஸ்க்ரா’ என்றபுரட்சிகர ஏட்டின் தமிழ்ப் பெயராக அமைந்துள்ள தீக்கதிர் மார்க்சிய லெனினியத்தை உயர்த்திப் பிடித்துப் புரட்சிகர இயக்கத்தின் போர்வாளாகக் கடந்த 54 ஆண்டுகளாகக் களமாடி வருகிறது. நவம்பர் புரட்சியைக் கொண்டாடும் வகையில் ஆண்டு முழுவதும் ‘யுகப்புரட்சி’ எனும் தலைப்பில்தொடர்ந்து வாசகர்களைச் சந்திக்க இருக்கிறது தீக்கதிர். வாசகர்களுக்கு வணக்கத்தையும் வாழ்த்துக் களையும் சொல்லி பொதுவுடைமை மலரும் புத்துலகைப் படைக்க உறுதியேற்கிறது தீக்கதிர் நாளேடு.

No comments: