Friday, November 11, 2016

இலக்கியத்தில் புரட்சியின் ஈடில்லா தாக்கம்


இலக்கியத்தில் புரட்சியின் ஈடில்லா தாக்கம்
இலக்கியக் களத்திலும் தனிப்பட்ட முறையிலும் ரஷ்ய எழுத்துகளின் தாக்கம் அளவிட முடியாதது. நான் தமிழ் இலக்கியங்களைப் படித்து வளர்ந்ததைக் காட்டிலும் ரஷ்ய இலக்கியங்களைப் படித்தே பெரிதும் வளர்ந்தேன். ரஷ்ய இலக்கியங்களை வாசிப்பதற்காகவே ரஷ்ய மொழியைக் கற்றுக்கொண்டேன். ரஷ்யாவை எனது இன்னொரு தாயகமாகக் கருதுகிறேன். ரஷ்ய இலக்கியம் ஒரு மனிதரை என்ன செய்கிறது, புரட்சிக்கு எவ்வாறு தயார் செய்கிறது என்று ஆராய்ந்திருக்கிறேன். ரஷ்ய இலக்கியங்கள் மூலம் உருவானவர்கள்தான் தோழர் லெனினும் அவரது சகாக்களும் என்பேன்.சில நாட்களுக்கு முன் நவம்பர் புரட்சி பற்றிய மகத்தான திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். ‘அக்டோபர்’ என்ற, ஐசன்ஸ்டைன் இயக்கிய அந்தப் படத்தை, நவம்பர் புரட்சியின் பத்தாம் ஆண்டுவிழாவுக்காக சோவியத் அரசே தயாரித்திருந்தது. அந்தப் படத்தின் முதல் காட்சி எல்லோரும் தவிர்க்காமல் காண வேண்டிய காட்சி. ஜார் மன்னன் சிலை மீது ஒரு கூட்டமே ஏறுகிறது. சிலையை கயிறுகளால் கட்டி இழுக்கிறது. ஜார் விழுகிறான். யாரையெல்லாம் ஜார் அரசு அடிமைகள் என்று ஒதுக்கித்தள்ளியிருந்ததோ அந்த உழைப்பாளிகள், அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுடைய எழுச்சிதான் மகத்தான புரட்சி என்பதை அந்தக் காட்சி உணர்த்துவதைக் காணலாம். 1917 பிப்ரவரியில் நடந்த புரட்சியின் முதல் படியைச் சொல்கிற படம் அது. கொந்தளிப்பான காலக்கட்டத்தில் அந்த முதல் படியில் மக்கள் திரண்டு, எங்கும் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் என்று புரட்சியின் கனல் பற்றியெரியத் தொடங்கியதை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார் ஐசன்ஸ்டைன்.
மூன்று வழிகள்
ஒரு வரலாற்றை, ஒரு புரட்சியைத் தெரிந்துகொள்வதற்கு மூன்று வழிகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒன்று புத்தகங்கள். ஜான் ரீட் எழுதிய ‘உலகைக் குலுக்கிய 10 நாட்கள்’ என்ற ஒரு புத்தகம் போதும் புரட்சியை அப்படியே நேரடி அனுபவமாகப் பார்க்கலாம். மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவல் படித்தால், அந்தப் புரட்சியில் யார் பங்கேற்றார்கள், எப்படி அவர்கள் புரட்சிக்காரர்களாகப் பரிணமித்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். புரட்சியில் பெண்களை முன்னிறுத்தி சம மரியாதை அளித்தது கம்யூனிஸ்ட்டுகள்தான் என்பதையும் அந்த நாவல் நமக்கு உணர்த்தும். உலகில் போராடுகிற பெண்களின் அடையாளம்தான் அந்தத் தாய்.அதே போன்றதுதான் மிகயீல் ஷோலகோவ் எழுதிய நாவல் ‘டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.’ நோபல் பரிசு பெற்ற அந்த நாவல், புரட்சிக்கு முன் மக்கள் எப்படி இருந்தார்கள், புரட்சிக்குப் பின் எப்படி இருந்தார்கள், எவ்வாறு சந்தித்துக்கொண்டார்கள், வரலாறு அவர்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தது, அவர்கள் வரலாற்றுக்கு என்ன பங்களித்தார்கள் என்பதையெல்லாம் பேசுகிற நாவல் அது.இரண்டாவது வழி, ஐசன்ஸ்டைன் போன்றவர்கள் படைத்தளித்த திரைப்படங்களைப் பார்ப்பது. மூன்றாவது வழி ஆய்வுகள் மூலமாகத் தெரிந்துகொள்வது. நவம்பர் புரட்சி பற்றி ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். ஆனாலும் அது சொல்கிற ஒரே செய்தி, உழைக்கும் மக்கள் ஒரு நாள் அரியனையில் ஏறுவார்கள், எல்லா அதிகாரங்களும் அவர்களுக்குக் கிடைக்கும், அவர்களது ஆட்சி அமையும் என்பதே அந்தச் செய்தி.
ஓப்ளமோவ்களின் கொட்டம்
இந்தியாவைப் போன்று, பல்வேறு இனங்கள் பல்வேறு மொழிகள் கொண்ட நாடுதான் ரஷ்யா. அவர்கள் அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து, அத்தனை பேருக்கும் சம மதிப்புக் கொடுத்து தோழர் லெனின் வழி நடத்தியதுதான் நவம்பர் புரட்சி. அதற்கு முன்பு என்ன நடந்தது என்பது தெரிந்தால்தான் புரட்சியின்போது நடந்ததை நாம் புரிந்துகொள்ள முடியும். ஐவான் கோன்சரோவ் எழுதிய ‘ஓப்ளமோவ்’ என்ற புத்தகம் நமக்கு அதைத் தெரிவிக்கிறது. ஜார் மன்னனைச் சார்ந்து, அவன் அளித்த அதிகாரங்களைப் பயன்படுத்தி வாழ்ந்த பிரபுக்கள் எப்படியெல்லாம் இருந்தார்கள் என, நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிற புத்தகம் அது. அதிலே வருகிற ஓப்ளமோவ் என்ற ஒரு பிரபு, சோம்பேரித்தனத்தாலேயே உடல் பருத்துப்போனவன். கட்டிலை விட்டு கீழே இறங்கவே மாட்டான், கோழிக்கறியைக் கூட வேலைக்காரர்கள் தன் வாய் முன்பாக வைத்து முன்னும் பின்னுமாக அசைத்தால்தான் சாப்பிடுவான் என்கிற அளவுக்குச் சோம்பேரி. அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்கிற லெனின், இப்படித்தான் ரஷ்யாவின் பிரபுக்கள் பலரும் இருந்தார்கள் என்பார். அந்தப் பிரபுக்கள் இப்படி வாழ்ந்ததற்கு எதிரான மக்களின் கோபம்தான் புரட்சியாக உருவெடுத்தது.ஒரு பக்கம் ஒரு வேளை உணவுக்கும் வழியில்லாதவர்களாக மக்கள் பசியில் வாடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இப்படி சாப்பிடுவதற்குக் கூட சோம்பல்படுகிறவர்கள் இருக்கிற தேசத்தில், குறிப்பாக உழைக்கும் மக்கள் ஒடுக்கப்படுகிற நிலைமையில் அங்கே அவர்களது எழுச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
சாமியார்கள் அரசியல்
மதவாத அரசியல் தலைவிரித்தாடுகிற இந்தியச் சூழலில் ரஷ்யப் புரட்சி பற்றிப் பேசுவதில் இன்னொரு பொருத்தமும் இருக்கிறது. ரஷ்யாவும் மதவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த தேசம்தான். ரஸ்புடின் என்றொரு சாமியார் இருந்தார். நிக்கோலஸ் என்ற ஜார் மன்னனின் ஆலோசகராக இருந்தார். மன்னனின் மகனை ஒரு நோயிலிருந்து குணப்படுத்தினார் என்பதற்காக அவர் என்ன சொன்னாலும் கேட்பார் நிக்கோலஸ். இப்படி, சாமியார்கள் சொல்கிறபடி கேட்கிற ஜார்கள், அதிபர்கள் எல்லா தேசங்களிலும் இருந்துவந்திருக்கிறார்கள். இந்தியாவில் சொல்லவே வேண்டியதில்லை. எந்த சாமியார் காலில் எந்தத் தலைவர் விழுவார் என்று சொல்லவே முடியாது!அந்த ரஸ்புடின் ஆதரவாளர்கள் யாரை எதிர்த்தார்கள் தெரியுமா, போல்ஷ்விக்குகளைத்தான் எதிர்த்தார்கள். மதம் வேண்டாம் என்று சொல்கிறவர்கள், நம்மைப் போன்றவர்கள் ஆட்சியதிகார பீடத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று சொல்கிறவர்கள் போல்ஷ்விக்குகள் என்று கூறி போல்ஷ்விக்குகளுக்கு எதிராகக் கலவரங்களைத் தூண்டினார்கள். ‘அக்டோபர்’ திரைப்படத்தில் கூட இது தொடர்பாக ஒரு காட்சி வருகிறது. போல்ஷ்விக்குகளை சாமியாரின் ஆட்கள் கொடூரமாகத் தாக்குவது, போல்ஷ்விக்குகளின் பிரசுரங்களைக் கைப்பற்றி ஆற்று வெள்ளத்தில் போடுவது போன்ற காட்சிகள் அந்தப் படத்தில் உள்ளன
முன்னுரைத்த படைப்பாளிகள்
இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, ஏராளமான கொடுமைகளையும், ரத்தக் கறைகளையும் எதிர்கொண்டுதான் ரஷ்ய மக்கள் புரட்சிக்குத் தயாரானார்கள். எளிதாக வந்த விடுதலையல்ல அது. விடுதலையின்போது ஜார் ஆட்சியால் ரஷ்யாவுக்கு ஏற்பட்டிருந்த கடன் சுமை, ஐம்பது மில்லியன் ரூபிள். அந்தக் கடனை ஜார் அரசு திருப்பிச் செலுத்தாத நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் தெருவில் நின்றார்கள். உணவு கிடைக்கவில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே ரஷ்ய சமுதாயத்தின் முகத்தை அசலாகப் படம்பிடித்துக் காட்டியவர்கள்தான் டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி இருவரும். ரஷ்ய இலக்கியத்தின் மகத்தான படைப்பாளிகள் இவர்கள் இருவரும்.இந்தியாவில் காந்தி உருவாவதற்கே டால்ஸ்டாய்தான் காரணம். மதத்தை எதிர்த்து எழுதினார் டால்ஸ்டாய். கல்வியில் மாற்றம் பற்றி எழுதினார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பற்றித் தனது நாவல்களில் பேசினார். சொல்லப்போனால் டால்ஸ்டாய் எழுத்தின் மூலமாகத்தான் உலகமே ரஷ்ய மக்களின் நிலையைத் தெரிந்துகொண்டது.பதினோறாம் நூற்றாண்டில்தான் ரஷ்யாவில் இலக்கியம் அச்சு வடிவில் வந்தது. அது வரையில் வாய்மொழிக் கதைகளும் புராணங்களும் தொன்மக்கதைகளும்தான். ஆனால், 19ம் நூற்றாண்டு என்ற ஒரே நூற்றாண்டில் உலகின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகள் ரஷ்ய மொழியில் வந்துவிட்டன. இன்றைக்குக் கூட உலகின் மிகச்சிறந்த இலக்கியங்களைப் பட்டியலிட்டால், யார் பட்டியலிட்டாலும், முன்னிலையில் வரும் 10 படைப்புகளில் முதல் 5 படைப்புகள் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டவையாகவே இருக்கின்றன. அதில் முதல் இடத்தில் டால்ஸ்டாயோ தாஸ்தயேவ்ஸ்கியோ இருப்பர். ரஷ்ய இலக்கியம் அங்கேயல்ல, எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு அரசுப்பள்ளியில் படித்த என் போன்றவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அதன் சிறப்பை என்னவென்று சொல்வது?
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று (நவ.7) நடைபெற்ற நவம்பர் புரட்சி நூற்றாண்டு தொடக்கவிழா விழாவில் நிகழ்த்திய உரையிலிருந்து)


No comments: