ஆர்.நல்லகண்ணு
(நவம்பர் புரட்சி இந்திய விடுதலை இயக்கத்திற்கு உத்வேகம் அளித்தது; அதன்
நூற்றாண்டு இந்திய புரட்சி இயக்கத்திற்கு என்றென்றும் வழிகாட்டும்.இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு நேர்காணல்)
நவம்பர்
புரட்சியின் நூற்றாண்டு விழாவை உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட்டுகள் கொண்டாட இருக்கிறார்கள்.
அந்தப் புரட்சி பற்றி நீங்கள் முதலில் தெரிந்துகொண்டது எப்போது? எந்தப் பின்னணியில்
அதைத் தெரிந்துகொண்டீர்கள்?இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில்தான் சோவியத் யூனியன் பற்றிய செய்திகளை அறியத் தொடங்கினேன். உலகத்தையே ஆக்கிரமிக்கிற நோக்கத்தோடு ஹிட்லரின் ஜெர்மனி ஐரோப்பிய நாடுகளையெல்லாம் ராணுவ பலத்தால் பிடித்த பிறகு, சோவியத் யூனியனையும் பிடிக்கத் திட்டமிட்டது, அப்போது அதை அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டுகொள்ளாமல் விட்டன. அந்த நாடுகளுக்கு எதிராகவும் ஹிட்லர் படையனுப்பப்போவது தெரிந்த பிறகுதான் அவை ஸ்டாலினோடு பேச்சு நடத்தி ஒரு அணியமைத்தன... இப்படியான செய்திகள் வழியாகத்தான் அப்போது சோவியத் யூனியன் எனக்கு அறிமுகமானது. அதே காலகட்டத்தில், சென்னை மாகாணத் தேர்தல் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நடைபெறுகிறது. யுத்தம் தொடர்பாக இங்கே பெரிய விவாதம் நடத்தப்பட்டது. யுத்தத்தில் ஆள் வடிவிலோ பொருள் வடிவிலோ இந்தியாவிலிருந்து பங்கேற்கக்கூடாது என்று காங்கிரஸ் முடிவு செய்தது. இந்த நிகழ்வுகளையும் கவனித்துக்கொண்டே உலக யுத்தம் பற்றிய செய்திகளைப் படித்தோம். இரண்டு கோடி மக்களின் உயிரைப் பறித்தது அந்த யுத்தம். மிக அதிகமாகத் தன் மக்களை இழந்தது சோவியத் யூனியன்தான். சோவியத் யூனியனின் வீரமும் தியாகமும்தான் இரண்டாம் உலக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.
அப்போது உங்கள் உணர்வு எவ்வாறு இருந்தது?
சோவியத் யூனியன் அந்த யுத்தத்தை எவ்வாறு கையாண்டது என்பதைக் கவனித்தபோது ஒரு வியப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதைப் பற்றித் தெரிந்துகொள்ள முயன்றேன். யுத்தத்தில் மகத்தான வெற்றிபெற்றாலும் எந்த நாட்டையும் சோவியத் அரசு அடிமைப்படுத்தவில்லை. மாறாக, ஜெர்மன் பிடியிலிருந்து மீட்கப்பட்ட நாடுகள் சுதந்திர நாடுகளாக, தங்களுக்கான அரசியல் பாதையை வகுத்துக்கொள்ளவே சோவியத் யூனியன் உதவியது. யுத்தம் என்றாலே நாடுகளைக் கைப்பற்றுவதுதான் என்ற வரலாற்றில், முதல் முறையாக இப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டியது சோவியத் யூனியன். இதனால் அந்த நாட்டின் மீது ஒரு மதிப்பு உருவானது. நம் பாரதி எழுதிய "ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி" பாடல் ஒரு கண்ணோட்டத்தைக் கொடுத்தது. அதுவரையில் பாரதியின் "வந்தே மாதரம்" போன்ற பாடல்களைத்தான் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பாடிக்கொண்டிருப்போம். இந்தப் பாடல் புதிய பார்வையைக் கொடுத்தது. சோவியத் புரட்சி உலகம் முழுவதும் பேரெழுச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதைத் தெரிந்துகொண்டேன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீரநாயகரான பகத் சிங், பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பொதுவாகக் காலை நான்கு மணிக்குத்தான் தூக்கில் போடுவார்கள். ஆனால், பகத் சிங்கை முதல் நாள் மாலை நான்கு மணிக்கே தூக்கில் போட்டார்கள். அதற்குக் காரணம், முதல் நாளே தூக்கில் போட்டுவிட்டால், நேற்றே முடிந்துவிட்டது என்ற உணர்வின் பெரும் கொந்தளிப்பாக அது மாறாது என்று கணக்குப் போட்டதுதான். தூக்கில் போட அழைத்துச் செல்ல சிறையதிகாரிகள் வந்தபோது பகத் சிங் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தார், அது லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்.’ இவையெல்லாம் ஏற்படுத்திய தாக்கத்தில் நவம்பர் புரட்சி பற்றியும், சோவியத் நாடு பற்றியும் பல நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கப் படிக்கத்தான், பாரதி எழுதியதும் பகத் சிங் படித்ததும் வெறும் செய்தி என்ற அடிப்படையில் அல்ல, தமிழகத்திலும் இந்திய அளவிலும் புரட்சிகரமான மாற்றங்கள் விளைய வேண்டும் என்ற தாகத்தோடுதான் என்பதையும் புரிந்துகொண்டேன். நம் பாரதிதாசனும் புதிய கோணத்தில் சோவியத் புரட்சி பற்றிப் பாடல் எழுதியிருக்கிறார். தமிழகத்தில் சிங்காரவேலர் செங்கொடி ஏற்றி இயக்கத்தைத் தொடங்கியதன் பின்னணியில் சோவியத் புரட்சியின் தாக்கமும் இருக்கிறது. சுதந்திர இந்தியா உருவான பிறகு தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் காலூன்றி நிற்பதற்காக, மற்ற நாடுகள் உதவ முன்வராத நிலையில் சோவியத் யூனியன்தான் பேருதவி செய்தது. கைம்மாறு எதிர்பாராத உதவி அது. ஒரு நாடு இப்படித் திகழ முடியுமா என்று யோசித்தபோது, அதற்கு அடித்தளமாக சோசலிச அறம் இருப்பது தெளிவானது.
பொதுவாக ஒரு நாட்டில் அரசியல் எழுச்சியும் ஆட்சி மாற்றமும் நடக்கிறது என்றால் அது அந்தந்த நாட்டோடு நின்றுவிடும். ஆனால் சோவியத் புரட்சி உலகம் முழுவதும் மாற்றங்களை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள் கூடத் தங்கள் பிள்ளைகளுக்கு லெனின், ஸ்டாலின் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.
நீங்கள் சோசலிச அறம் பற்றிச் சொன்னீர்கள், இந்த அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்தியதில் நவம்பர் புரட்சியின் அறம் என்ன?
நீங்கள் சொன்னது போல், அது வரையில் பல நாடுகளில் அரசியல் எழுச்சிகளால் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதாவது ஆள்கிறவர்கள் மாறுவார்கள். ஆனால், அடிப்படையான வேறு மாற்றங்கள் எதுவும் நடக்காது. இதுவோ பாரதி சொன்னதுபோல் உலகத்துக்கொரு புதுமை என்பதாக, அடிப்படையான மாற்றங்களை நிகழ்த்தியது. முதலில், சமுதாய மாற்றத்திற்கான லட்சியத்தை ஏற்றுக்கொண்ட பெருந்திரள் மக்கள் அந்த அரசியல் மாற்றத்தில் பங்கேற்றார்கள் என்பதே முக்கியமான மாற்றம்தான். அடுத்து, மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்கான கடைகள் அதுவரையில் ஜார் மன்னனின் கடைகளாகவே இருக்கும். பணம் மன்னனுக்குத்தான் போய்ச்சேரும். இப்போது தங்களுடைய கடைகள், அதன் வருவாய் அரசின் மூலம் தங்களுக்கே வரும் என்ற மாற்றம் நிகழ்ந்ததை அந்த மக்கள் கண்டார்கள். மக்கள் எதிர்பார்ப்புகளின் கண்ணாடியாக சோவியத்தின் கம்யூனிஸ்ட்டுகள் இயங்கினார்கள். சோவியத் அரசு பொறுப்பேற்றதும், "வேறு எந்த நாட்டின் மீதும் நாங்கள் படையெடுக்க மாட்டோம். எங்கள் வளத்தை மேம்படுத்திக்கொள்வதில்தான் கவனம் செலுத்துவோம்" என அறிவித்தது. சமாதானத்தையே முதல் அறிவிப்பாக வெளியிட்டது. வேறு எந்த நாட்டின் அரசும் அதுவரையில் இப்படி அறிவித்ததில்லை. அதே வேளையில், உலகம் முழுவதும் மாற்றங்களுக்காகப் போராடுவோருக்கு சோவியத் அரசு துணைநின்றது. ஏகாதிபத்திய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தியது. சோவியத் அரசு மக்களின் மதச் சுதந்திரத்திற்கு உறுதியளித்தது. அதே வேளையில் அரசு எந்த மதத்தையும் சாராததாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது. போல்ஷ்விக்குகளின் இந்தக் கொள்கையைப் பாராட்டுவதாகக் காந்தி எழுதியிருக்கிறார். இப்படிப்பட்ட மாற்றங்கள்தான் சோவியத் சமுதாயத்தை ஒப்பிலாத சமுதாயமாக மாற்றியது.சொல்லப்போனால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் அரசுகள், நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தை சோவியத் அரசின் நடவடிக்கைகள் ஏற்படுத்தின. பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான விழிப்புணர்வு உள்பட நவம்பர் புரட்சியின் அறம் என்று இன்னும் விரிவாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
சோவியத் புரட்சி வரலாற்றிலிருந்து இன்று மக்களிடம் கொண்டுசெல்லவேண்டிய சிந்தனைகள் என்ன? புதிய தலைமுறையினருக்கு அதன் செய்தி என்ன?
சோவியத்துக்குப் போய் வந்த பெரியார் பல முக்கியமான விசயங்களைக் கவனித்து எழுதியிருக்கிறார். அவற்றை இன்றைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். வெற்றிபெற்ற ஒரு நாடு, வெற்றி கொண்ட நாட்டை அடிமைப்படுத்தாமல் சுதந்திர நாடாக இருக்க உதவியது என்பதெல்லாம் வரலாற்றில் மிக முக்கியமானது. அது உலக அளவிலேயே பலரையும் ஈர்த்த ஒரு மாற்றம். அதே போல், ரஷ்யாவில்தான் மையமான புரட்சி நடந்தது என்றாலும், பிற பகுதிகள் இணைகிறபோது அதற்கு ரஷ்யா என்ற பெயர் வைக்கப்படவில்லை. ஐக்கிய சோசலிச சோவியத் குடியரசுகள் என்றுதான் பெயர் சூட்டப்பட்டது. அதில் ஒரு முக்கியமான அரசியல் செய்தி இருக்கிறது. இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு இதுவும் ஊக்குவித்தது என்று சொல்லலாம். இன்று மொழித்திணிப்பு முயற்சிகள் இங்கே நடக்கிற பின்னணியில், நவம்பர் புரட்சி விழாவில், அனைத்து மொழிகளுக்கும் சம மரியாதை என்ற சோவியத் கொள்கையை எடுத்துச் செல்ல வேண்டும். மனிதனுக்கும் உழைப்புக்கும் உள்ள உறவு சந்தைப் பொருளாதாரத்தில் அவமதிக்கப்படுகிறது. அந்த உறவுக்கு உன்னதமான மதிப்பு சோசலிச சமுதாயத்தில்தான் சாத்தியம் என்ற செய்தியும் நவம்பர் புரட்சி விழாவில் இருக்கிறது. அதைப் போல், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்துச் சமத்துவ மாற்றங்களுக்குமான செய்தியை நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழாவையொட்டி மக்களிடையே விரிவாகவும் பரவலாகவும் கொண்டு செல்ல செங்கொடி இயக்கத் தோழர்கள் உறுதியேற்க வேண்டும்.
---
No comments:
Post a Comment