Saturday, November 12, 2016

ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று சொல்லியிருப்பதற்குப் பின்னால்


ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று சொல்லியிருப்பதற்குப் பின்னால்
மாபெரும் ஊழல் நடந்திருக்கிறது
அரவிந்த் கேஜரிவால் பேட்டி
புதுதில்லி, நவ. 12-
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று சொல்லியதற்குப் பின்னே, மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். 
இது தொடர்பாக சனிக்கிழமையன்று அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“ஊழலை ஒழிக்கப்போகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழல் அரங்கேறியிருக்கிறது. இது தொடர்பாக சில சான்றுகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. தொலைக்காட்சி அலைவரிசைகள் அதைக்  காட்டிக்கொண்டிருக்கின்றன.  இதை நான் ஒன்றும் புதிதாகக் கூறிடவில்லை.
நவம்பர் 8ஆம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட இருப்பது குறித்து, உண்மையில் கறுப்புப்பணம் வைத்திருக்கும்  பாஜகவினருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே அவர்கள் அவற்றைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக போதுமான கால அவகாசம் அவர்களுக்கு ஏற்கனவே தரப்பட்டுவிட்டது.
கடந்த மூன்று மாதங்களில், அனைத்து வங்கிகளிலும், பணம் பெரிய அளவில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது பல்லாயிரம் கோடி ரூபாய் இவ்வாறு டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இது சந்தேகத்தை எழுப்புகிறது. 
இதற்கு முந்தைய காலாண்டில் டெபாசிட்டுகள் எதிர்மறையில் இருந்தபோது, நாட்டில் வளர்ச்சி இல்லாத சமயத்தில், எப்படி திடீரென்று ஜுலை - செப்டம்பர் காலாண்டில் இந்த அளவிற்கு அதிக அளவிற்கு டெபாசிட்டுகள் செய்யப்பட்டன? யாருடைய பணம் இது? எப்படி இந்த அளவிற்குப் பெரிய அளவில் டெபாசிட் செய்யப்பட்டது?
ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று சொன்னதன் மூலம் சாமானிய மக்கள்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையான கறுப்புப்பண பேர்வழிகளுக்கு புதிய நோட்டுகள் அவர்கள் வீடுகளைத் தேடிச் சென்றடைந்துவிடும். அதற்காக அவர்கள் ஒரு குறிப்பிட்ட கமிஷனை அளிக்க வேண்டியிருக்கும், அவ்வளவுதான்.
அனைத்து வங்கிகளின் வெளியிலும் மிகப் பெரிய அளவிற்கு நீண்ட கியூ வரிசைகள். இவ்வாறு நிற்பவர்களில் எங்காவது பெரிய தொழில் அதிபர்கள் அல்லது கறுப்புப்பண பேர்வழிகள் நிற்கிறார்களா? இல்லை. சிறிய அளவில் கடை வைத்திருப்பவர்கள், ரிக்சா இழுப்பவர்கள், ஆட்டோரிக்சா டிரைவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் -- இவர்கள்தான் வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள். இவர்களிடம்தான் கறுப்புப் பணம் இருக்கிறதா?
ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது கமிஷன்கள் பெறும் ஒரு புதிய அமைப்பை உருவாக்கி இருக்கிறது. தங்கத்தின் விலை  குறைவதற்குப் பதிலாக அதிகரித்திருக்கிறது.
இந்த அரசாங்கம்  உண்மையிலேயே முற்றிலுமாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்திருந்தால்கூட நீங்கள் அதனை ஆதரிக்கலாம். ஆனால், 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியிருப்பதிலிருந்து, கறுப்புப் பணம் என்கிற பிரச்சனை எப்படி தீரும்.
மக்கள் நொந்துபோயிருக்கிறார்கள். ஏழை மக்கள் 
ஓடாய் உழைத்து, சம்பாதித்தது சேமித்து வைத்திருக்கின்ற ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கிறது. இரண்டரை லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திடவேண்டுமெனில் 200 சதவீதம் தண்டம் (பெனல்டி) கட்ட வேண்டும். தங்கள் மகளின் திருமணத்திற்காக கடந்த பத்து ஆண்டுகளாக ஏழை மக்கள் சேமித்து வைத்திருந்த 5 முதல் 6 லட்சம் ரூபாய்க்கும் அவர்கள் தண்டம் கட்ட வேண்டும். கடவுள் உங்களை மன்னிக்கவே மாட்டார்.
உண்மையான கறுப்புப் பணம் ஸ்விஸ் வங்கிகளில் இருக்கிறது. திருவாளர் மோடி இதனைத் திரும்பக் கொண்டுவருவேன் என்று பிரதமராவதற்கு முன்பு உறுதி அளித்திருந்தார். ஆனால் பிரதமரானபின் இது தொடர்பாக இவர் எதுவுமே செய்திடவில்லை. ஸ்விஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்களின் கணக்கு எண்கள் அவர்களுக்குத் தெரியும். கறுப்புப் பணத்திற்கு எதிராக உண்மையிலேயே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்தில், அவ்வாறு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.“ 
இவ்வாறு அரவிந்த் கேஜரிவால் கூறினார்.
(ந.நி.)

No comments: