Showing posts with label november revolution. Show all posts
Showing posts with label november revolution. Show all posts

Tuesday, November 15, 2016

பகத்சிங்குகளை உருவாக்கிய நவம்பர் புரட்சி


(பகத்சிங்குடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்ட தோழர் சிவவர்மா, ‘நாட்டில் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி - சபேகார் முதல் பகத்சிங் வரை’ என்னும் தன்னுடைய நூலில், மாபெரும் நவம்பர் புரட்சி எந்த அளவிற்கு தோழர் பகத்சிங்கையும், தங்கள் இயக்கத்தையும் உருக்குபோன்று மாற்றி அமைத்தது என்பதையும் விளக்குகிறார்.)
மக்களிடம் செல்லுங்கள், தொழிலாளர்கள் - விவசாயிகள் - படித்த மத்திய தர இளைஞர்கள் இடையே செயல்படுங்கள், அவர்களை அரசியல்ரீதியாகப் பயிற்றுவியுங்கள், அவர்களை வர்க்க உணர்வுள்ளவர்களாக மாற்றி, வர்க்க அடிப்படையிலான சங்கங்களின் கீழ் அவர்களை அணிதிரட்டுங்கள் என்று அறிவுறுத்தினார்.
நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியானது மனிதகுல வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாகும். அது ரஷ்யாவிலிருந்த ஏகாதிபத்திய ஆட்சியை முற்றிலுமாக அழித்து ஒழித்ததோடு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருந்த அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும் திகிலூட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனிதனை மனிதன், ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டும் முறைக்கு நவம்பர் புரட்சி முற்றுப்புள்ளி வைத்தது.
சோவியத் மக்கள் தங்கள் விதியை தாங்களே நிர்ணயித்துக்கொள்ளும் எஜமானர்களாக மாறினார்கள்.அது உலகில் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த பல்வேறு நாட்டின் விடுதலைப் போராளிகளுக்கும் உத்வேகத்தைக் கொடுத்தது, தங்களுடைய லட்சியப் போராட்டமும் வெல்லும் என்கிற நம்பிக்கையை விளைவித்தது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டங்களுக்கு புதிய பரிமாணத்தை அளித்தது. இந்தியாவில் விடுதலைக்கான போராட்டமும், உலகத்தில் நடைபெற்று வந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதி என்ற அடிப்படையில், பாதிக்கப்படாமலிருக்க முடியவில்லை.
இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் உதயம்பொதுவாக 1920களிலும், குறிப்பாக 1928-1930களிலும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும். இந்தக் காலகட்டத்தில்தான், இடதுசாரி சக்திகள் அமைப்புரீதியாக வலுவான சக்தியாக உருவாகத் தொடங்கியிருந்தன. பெரிய அளவில் வீரஞ்செறிந்த தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் நாடு முழுவதும் நடைபெற்றன.
அமைப்புரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாக தொழிலாளர்கள் சிறந்த வேலை நிலைமைகளுக்காகவும், கூடுதல் ஊதியத்திற்காகவும் வலுவான போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரிக்கத் தொடங்கியது. தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கம்யூனிசத்தின் மீதான ஈர்ப்பு வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. முதன்முறையாக, அமைப்புரீதியாக விரிவான முறையில் இடதுசாரி அரசியல் இயக்கம் நாட்டில் உருவாகிக் கொண்டிருந்தது.
நாங்கள் சோசலிச சிந்தனையை நோக்கி அடிமேல் அடியெடுத்து வைத்து முன்னேறிக் கொண்டிருந்தோம். நாங்கள் கைது செய்யப்பட்ட பின்னர்தான், எங்களுக்கு நிறைய நேரமும், புத்தகங்களும் கிடைத்தன. அவற்றைப் படித்தோம், விவாதித்தோம், கடந்த காலங்களில் நாங்கள் செய்தவற்றைத் தீர ஆய்வுசெய்து, சரியான முடிவுகளுக்கு வந்தோம்.முதலாவதாக, நாங்கள் கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், நாங்கள் மார்க்சியத்தை முறையாக ஆழ்ந்து கற்றதன் அடிப்படையில் அமைந்திடவில்லை.
நம் நாட்டில் அன்றைக்கு மேலோங்கியிருந்த சமூகச் சூழ்நிலைமையில், மார்க்சியத்தைக் கசடறக் கற்பது என்பது அப்படியொன்றும் அவ்வளவு எளிதல்ல.இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் முன்னெடுத்துச் சென்ற நடவடிக்கைகளில் மார்க்சியத்தை அதன் தத்துவமாகவும், சோசலித்தை அதன் இறுதி லட்சியமாகவும் ஏற்றுக்கொண்டதை மிகப்பெரிய முதல் நடவடிக்கை என்றுகூற முடியும்.
விஞ்ஞானப்பூர்வமான சோசலிசத்தை நோக்கி ...
பகத்சிங் இளம் அரசியல் ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். மார்க்சையும் லெனினையும் கற்க வேண்டும் என்றும், அவர்கள் போதனைகளை செயலுக்கான வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் செல்லுங்கள், தொழிலாளர்கள் - விவசாயிகள் - படித்த மத்திய தர இளைஞர்கள் இடையே செயல்படுங்கள், அவர்களை அரசியல்ரீதியாகப் பயிற்றுவியுங்கள், அவர்களை வர்க்க உணர்வுள்ளவர்களாக மாற்றி, வர்க்க அடிப்படையிலான சங்கங்களின் கீழ் அவர்களை அணிதிரட்டுங்கள் என்று அறிவுறுத்தினார். மக்களின் கட்சி ஒன்று இல்லாமல் அது அனைத்தும் சாத்தியமல்ல என்றும் அவர் மேலும் கூறினார். கட்சி குறித்த அவரது சிந்தனையை மேலும் விளக்கும் வகையில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
‘‘தோழர் லெனின் மிகவும் பிரியத்துடன் பயன்படுத்திய வார்த்தைகளில் சொல்வதானால் ‘புரட்சியைத் தொழிலாகக் கொண்டவர்களே’ நமக்குத் தேவை. புரட்சியைத் தவிர வேறெந்த ஆசாபாசங்களும் வேலையும் இல்லாத முழுநேர ஊழியர்களே நமக்குத் தேவை. எந்த அளவிற்கு அத்தகைய ஊழியர்கள் ஒரு புரட்சிக் கட்சிக்குக் கிடைக்கிறார்களோ அந்த அளவிற்கு அதன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகும்.’’ அவர் மேலும், ‘திட்டமிட்டமுறையில் செயலாற்றுவதற்கு உங்களுக்குத் தேவை, மேலே விவரித்ததுபோன்று மிகவும் தெளிவான சிந்தனைகளுடன் கூரிய அறிவும், முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும், விரைந்து செயல்படும் ஆற்றலும் கொண்டவர்கள் நிறைந்த ஒரு கட்சியாகும். கட்சி உருக்கு போன்ற கட்டுப்பாட்டைப் பெற்றிருக்க வேண்டும்.
அதற்காக அது ஒன்றும் தலைமறைவுக் கட்சியாகச் செயல்பட வேண்டும் என்று அவசியம் இல்லை, அதற்கு மாறான நிலையில் கூட இருக்கலாம். ... கட்சி வெகுஜனப் பிரச்சாரப் பணியுடன் தொடங்கப்பட வேண்டும். ... விவசாயிகள் - தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துவதும் அவர்கள் நம்பிக்கையைப் பெறுவதும் அவசியமாகும். கட்சியின் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்று வைத்திடலாம். மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடிய அரசியல் ஊழியர்களைக் கொண்ட இக்கட்சியானது, அதன்கீழ் உள்ள அனைத்து இயக்கங்களையும் வழிநடத்த வேண்டும்,இவ்வாறு பகத்சிங், மார்க்சிசத்திற்காகவும், கம்யூனிசத்திற்காகவும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும் வெளிப்படையாகவே வந்து விட்டார்.
(தமிழில்: ச.வீரமணி)


Friday, November 11, 2016

இலக்கியத்தில் புரட்சியின் ஈடில்லா தாக்கம்


இலக்கியத்தில் புரட்சியின் ஈடில்லா தாக்கம்
இலக்கியக் களத்திலும் தனிப்பட்ட முறையிலும் ரஷ்ய எழுத்துகளின் தாக்கம் அளவிட முடியாதது. நான் தமிழ் இலக்கியங்களைப் படித்து வளர்ந்ததைக் காட்டிலும் ரஷ்ய இலக்கியங்களைப் படித்தே பெரிதும் வளர்ந்தேன். ரஷ்ய இலக்கியங்களை வாசிப்பதற்காகவே ரஷ்ய மொழியைக் கற்றுக்கொண்டேன். ரஷ்யாவை எனது இன்னொரு தாயகமாகக் கருதுகிறேன். ரஷ்ய இலக்கியம் ஒரு மனிதரை என்ன செய்கிறது, புரட்சிக்கு எவ்வாறு தயார் செய்கிறது என்று ஆராய்ந்திருக்கிறேன். ரஷ்ய இலக்கியங்கள் மூலம் உருவானவர்கள்தான் தோழர் லெனினும் அவரது சகாக்களும் என்பேன்.சில நாட்களுக்கு முன் நவம்பர் புரட்சி பற்றிய மகத்தான திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். ‘அக்டோபர்’ என்ற, ஐசன்ஸ்டைன் இயக்கிய அந்தப் படத்தை, நவம்பர் புரட்சியின் பத்தாம் ஆண்டுவிழாவுக்காக சோவியத் அரசே தயாரித்திருந்தது. அந்தப் படத்தின் முதல் காட்சி எல்லோரும் தவிர்க்காமல் காண வேண்டிய காட்சி. ஜார் மன்னன் சிலை மீது ஒரு கூட்டமே ஏறுகிறது. சிலையை கயிறுகளால் கட்டி இழுக்கிறது. ஜார் விழுகிறான். யாரையெல்லாம் ஜார் அரசு அடிமைகள் என்று ஒதுக்கித்தள்ளியிருந்ததோ அந்த உழைப்பாளிகள், அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுடைய எழுச்சிதான் மகத்தான புரட்சி என்பதை அந்தக் காட்சி உணர்த்துவதைக் காணலாம். 1917 பிப்ரவரியில் நடந்த புரட்சியின் முதல் படியைச் சொல்கிற படம் அது. கொந்தளிப்பான காலக்கட்டத்தில் அந்த முதல் படியில் மக்கள் திரண்டு, எங்கும் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் என்று புரட்சியின் கனல் பற்றியெரியத் தொடங்கியதை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார் ஐசன்ஸ்டைன்.
மூன்று வழிகள்
ஒரு வரலாற்றை, ஒரு புரட்சியைத் தெரிந்துகொள்வதற்கு மூன்று வழிகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒன்று புத்தகங்கள். ஜான் ரீட் எழுதிய ‘உலகைக் குலுக்கிய 10 நாட்கள்’ என்ற ஒரு புத்தகம் போதும் புரட்சியை அப்படியே நேரடி அனுபவமாகப் பார்க்கலாம். மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவல் படித்தால், அந்தப் புரட்சியில் யார் பங்கேற்றார்கள், எப்படி அவர்கள் புரட்சிக்காரர்களாகப் பரிணமித்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். புரட்சியில் பெண்களை முன்னிறுத்தி சம மரியாதை அளித்தது கம்யூனிஸ்ட்டுகள்தான் என்பதையும் அந்த நாவல் நமக்கு உணர்த்தும். உலகில் போராடுகிற பெண்களின் அடையாளம்தான் அந்தத் தாய்.அதே போன்றதுதான் மிகயீல் ஷோலகோவ் எழுதிய நாவல் ‘டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.’ நோபல் பரிசு பெற்ற அந்த நாவல், புரட்சிக்கு முன் மக்கள் எப்படி இருந்தார்கள், புரட்சிக்குப் பின் எப்படி இருந்தார்கள், எவ்வாறு சந்தித்துக்கொண்டார்கள், வரலாறு அவர்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தது, அவர்கள் வரலாற்றுக்கு என்ன பங்களித்தார்கள் என்பதையெல்லாம் பேசுகிற நாவல் அது.இரண்டாவது வழி, ஐசன்ஸ்டைன் போன்றவர்கள் படைத்தளித்த திரைப்படங்களைப் பார்ப்பது. மூன்றாவது வழி ஆய்வுகள் மூலமாகத் தெரிந்துகொள்வது. நவம்பர் புரட்சி பற்றி ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். ஆனாலும் அது சொல்கிற ஒரே செய்தி, உழைக்கும் மக்கள் ஒரு நாள் அரியனையில் ஏறுவார்கள், எல்லா அதிகாரங்களும் அவர்களுக்குக் கிடைக்கும், அவர்களது ஆட்சி அமையும் என்பதே அந்தச் செய்தி.
ஓப்ளமோவ்களின் கொட்டம்
இந்தியாவைப் போன்று, பல்வேறு இனங்கள் பல்வேறு மொழிகள் கொண்ட நாடுதான் ரஷ்யா. அவர்கள் அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து, அத்தனை பேருக்கும் சம மதிப்புக் கொடுத்து தோழர் லெனின் வழி நடத்தியதுதான் நவம்பர் புரட்சி. அதற்கு முன்பு என்ன நடந்தது என்பது தெரிந்தால்தான் புரட்சியின்போது நடந்ததை நாம் புரிந்துகொள்ள முடியும். ஐவான் கோன்சரோவ் எழுதிய ‘ஓப்ளமோவ்’ என்ற புத்தகம் நமக்கு அதைத் தெரிவிக்கிறது. ஜார் மன்னனைச் சார்ந்து, அவன் அளித்த அதிகாரங்களைப் பயன்படுத்தி வாழ்ந்த பிரபுக்கள் எப்படியெல்லாம் இருந்தார்கள் என, நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிற புத்தகம் அது. அதிலே வருகிற ஓப்ளமோவ் என்ற ஒரு பிரபு, சோம்பேரித்தனத்தாலேயே உடல் பருத்துப்போனவன். கட்டிலை விட்டு கீழே இறங்கவே மாட்டான், கோழிக்கறியைக் கூட வேலைக்காரர்கள் தன் வாய் முன்பாக வைத்து முன்னும் பின்னுமாக அசைத்தால்தான் சாப்பிடுவான் என்கிற அளவுக்குச் சோம்பேரி. அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்கிற லெனின், இப்படித்தான் ரஷ்யாவின் பிரபுக்கள் பலரும் இருந்தார்கள் என்பார். அந்தப் பிரபுக்கள் இப்படி வாழ்ந்ததற்கு எதிரான மக்களின் கோபம்தான் புரட்சியாக உருவெடுத்தது.ஒரு பக்கம் ஒரு வேளை உணவுக்கும் வழியில்லாதவர்களாக மக்கள் பசியில் வாடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இப்படி சாப்பிடுவதற்குக் கூட சோம்பல்படுகிறவர்கள் இருக்கிற தேசத்தில், குறிப்பாக உழைக்கும் மக்கள் ஒடுக்கப்படுகிற நிலைமையில் அங்கே அவர்களது எழுச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
சாமியார்கள் அரசியல்
மதவாத அரசியல் தலைவிரித்தாடுகிற இந்தியச் சூழலில் ரஷ்யப் புரட்சி பற்றிப் பேசுவதில் இன்னொரு பொருத்தமும் இருக்கிறது. ரஷ்யாவும் மதவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த தேசம்தான். ரஸ்புடின் என்றொரு சாமியார் இருந்தார். நிக்கோலஸ் என்ற ஜார் மன்னனின் ஆலோசகராக இருந்தார். மன்னனின் மகனை ஒரு நோயிலிருந்து குணப்படுத்தினார் என்பதற்காக அவர் என்ன சொன்னாலும் கேட்பார் நிக்கோலஸ். இப்படி, சாமியார்கள் சொல்கிறபடி கேட்கிற ஜார்கள், அதிபர்கள் எல்லா தேசங்களிலும் இருந்துவந்திருக்கிறார்கள். இந்தியாவில் சொல்லவே வேண்டியதில்லை. எந்த சாமியார் காலில் எந்தத் தலைவர் விழுவார் என்று சொல்லவே முடியாது!அந்த ரஸ்புடின் ஆதரவாளர்கள் யாரை எதிர்த்தார்கள் தெரியுமா, போல்ஷ்விக்குகளைத்தான் எதிர்த்தார்கள். மதம் வேண்டாம் என்று சொல்கிறவர்கள், நம்மைப் போன்றவர்கள் ஆட்சியதிகார பீடத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று சொல்கிறவர்கள் போல்ஷ்விக்குகள் என்று கூறி போல்ஷ்விக்குகளுக்கு எதிராகக் கலவரங்களைத் தூண்டினார்கள். ‘அக்டோபர்’ திரைப்படத்தில் கூட இது தொடர்பாக ஒரு காட்சி வருகிறது. போல்ஷ்விக்குகளை சாமியாரின் ஆட்கள் கொடூரமாகத் தாக்குவது, போல்ஷ்விக்குகளின் பிரசுரங்களைக் கைப்பற்றி ஆற்று வெள்ளத்தில் போடுவது போன்ற காட்சிகள் அந்தப் படத்தில் உள்ளன
முன்னுரைத்த படைப்பாளிகள்
இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, ஏராளமான கொடுமைகளையும், ரத்தக் கறைகளையும் எதிர்கொண்டுதான் ரஷ்ய மக்கள் புரட்சிக்குத் தயாரானார்கள். எளிதாக வந்த விடுதலையல்ல அது. விடுதலையின்போது ஜார் ஆட்சியால் ரஷ்யாவுக்கு ஏற்பட்டிருந்த கடன் சுமை, ஐம்பது மில்லியன் ரூபிள். அந்தக் கடனை ஜார் அரசு திருப்பிச் செலுத்தாத நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் தெருவில் நின்றார்கள். உணவு கிடைக்கவில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே ரஷ்ய சமுதாயத்தின் முகத்தை அசலாகப் படம்பிடித்துக் காட்டியவர்கள்தான் டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி இருவரும். ரஷ்ய இலக்கியத்தின் மகத்தான படைப்பாளிகள் இவர்கள் இருவரும்.இந்தியாவில் காந்தி உருவாவதற்கே டால்ஸ்டாய்தான் காரணம். மதத்தை எதிர்த்து எழுதினார் டால்ஸ்டாய். கல்வியில் மாற்றம் பற்றி எழுதினார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பற்றித் தனது நாவல்களில் பேசினார். சொல்லப்போனால் டால்ஸ்டாய் எழுத்தின் மூலமாகத்தான் உலகமே ரஷ்ய மக்களின் நிலையைத் தெரிந்துகொண்டது.பதினோறாம் நூற்றாண்டில்தான் ரஷ்யாவில் இலக்கியம் அச்சு வடிவில் வந்தது. அது வரையில் வாய்மொழிக் கதைகளும் புராணங்களும் தொன்மக்கதைகளும்தான். ஆனால், 19ம் நூற்றாண்டு என்ற ஒரே நூற்றாண்டில் உலகின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகள் ரஷ்ய மொழியில் வந்துவிட்டன. இன்றைக்குக் கூட உலகின் மிகச்சிறந்த இலக்கியங்களைப் பட்டியலிட்டால், யார் பட்டியலிட்டாலும், முன்னிலையில் வரும் 10 படைப்புகளில் முதல் 5 படைப்புகள் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டவையாகவே இருக்கின்றன. அதில் முதல் இடத்தில் டால்ஸ்டாயோ தாஸ்தயேவ்ஸ்கியோ இருப்பர். ரஷ்ய இலக்கியம் அங்கேயல்ல, எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு அரசுப்பள்ளியில் படித்த என் போன்றவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அதன் சிறப்பை என்னவென்று சொல்வது?
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று (நவ.7) நடைபெற்ற நவம்பர் புரட்சி நூற்றாண்டு தொடக்கவிழா விழாவில் நிகழ்த்திய உரையிலிருந்து)


Tuesday, November 8, 2016

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு துவக்க விழா--பிரகாஷ் காரத் உரை


நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு துவக்க விழா

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான என். சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், கல்வியாளர் டாக்டர் வே. வசந்தி தேவி, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sunday, November 6, 2016

இறுதி வெற்றி


ஆர்.நல்லகண்ணு
(நவம்பர் புரட்சி இந்திய விடுதலை இயக்கத்திற்கு உத்வேகம் அளித்தது; அதன் நூற்றாண்டு இந்திய புரட்சி இயக்கத்திற்கு என்றென்றும் வழிகாட்டும்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு நேர்காணல்)
நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழாவை உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட்டுகள் கொண்டாட இருக்கிறார்கள். அந்தப் புரட்சி பற்றி நீங்கள் முதலில் தெரிந்துகொண்டது எப்போது? எந்தப் பின்னணியில் அதைத் தெரிந்துகொண்டீர்கள்?
இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில்தான் சோவியத் யூனியன் பற்றிய செய்திகளை அறியத் தொடங்கினேன். உலகத்தையே ஆக்கிரமிக்கிற நோக்கத்தோடு ஹிட்லரின் ஜெர்மனி ஐரோப்பிய நாடுகளையெல்லாம் ராணுவ பலத்தால் பிடித்த பிறகு, சோவியத் யூனியனையும் பிடிக்கத் திட்டமிட்டது, அப்போது அதை அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டுகொள்ளாமல் விட்டன. அந்த நாடுகளுக்கு எதிராகவும் ஹிட்லர் படையனுப்பப்போவது தெரிந்த பிறகுதான் அவை ஸ்டாலினோடு பேச்சு நடத்தி ஒரு அணியமைத்தன... இப்படியான செய்திகள் வழியாகத்தான் அப்போது சோவியத் யூனியன் எனக்கு அறிமுகமானது. அதே காலகட்டத்தில், சென்னை மாகாணத் தேர்தல் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நடைபெறுகிறது. யுத்தம் தொடர்பாக இங்கே பெரிய விவாதம் நடத்தப்பட்டது. யுத்தத்தில் ஆள் வடிவிலோ பொருள் வடிவிலோ இந்தியாவிலிருந்து பங்கேற்கக்கூடாது என்று காங்கிரஸ் முடிவு செய்தது. இந்த நிகழ்வுகளையும் கவனித்துக்கொண்டே உலக யுத்தம் பற்றிய செய்திகளைப் படித்தோம். இரண்டு கோடி மக்களின் உயிரைப் பறித்தது அந்த யுத்தம். மிக அதிகமாகத் தன் மக்களை இழந்தது சோவியத் யூனியன்தான். சோவியத் யூனியனின் வீரமும் தியாகமும்தான் இரண்டாம் உலக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.
அப்போது உங்கள் உணர்வு எவ்வாறு இருந்தது?
சோவியத் யூனியன் அந்த யுத்தத்தை எவ்வாறு கையாண்டது என்பதைக் கவனித்தபோது ஒரு வியப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதைப் பற்றித் தெரிந்துகொள்ள முயன்றேன். யுத்தத்தில் மகத்தான வெற்றிபெற்றாலும் எந்த நாட்டையும் சோவியத் அரசு அடிமைப்படுத்தவில்லை. மாறாக, ஜெர்மன் பிடியிலிருந்து மீட்கப்பட்ட நாடுகள் சுதந்திர நாடுகளாக, தங்களுக்கான அரசியல் பாதையை வகுத்துக்கொள்ளவே சோவியத் யூனியன் உதவியது. யுத்தம் என்றாலே நாடுகளைக் கைப்பற்றுவதுதான் என்ற வரலாற்றில், முதல் முறையாக இப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டியது சோவியத் யூனியன். இதனால் அந்த நாட்டின் மீது ஒரு மதிப்பு உருவானது. நம் பாரதி எழுதிய "ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி" பாடல் ஒரு கண்ணோட்டத்தைக் கொடுத்தது. அதுவரையில் பாரதியின் "வந்தே மாதரம்" போன்ற பாடல்களைத்தான் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பாடிக்கொண்டிருப்போம். இந்தப் பாடல் புதிய பார்வையைக் கொடுத்தது. சோவியத் புரட்சி உலகம் முழுவதும் பேரெழுச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதைத் தெரிந்துகொண்டேன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீரநாயகரான பகத் சிங், பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பொதுவாகக் காலை நான்கு மணிக்குத்தான் தூக்கில் போடுவார்கள். ஆனால், பகத் சிங்கை முதல் நாள் மாலை நான்கு மணிக்கே தூக்கில் போட்டார்கள். அதற்குக் காரணம், முதல் நாளே தூக்கில் போட்டுவிட்டால், நேற்றே முடிந்துவிட்டது என்ற உணர்வின் பெரும் கொந்தளிப்பாக அது மாறாது என்று கணக்குப் போட்டதுதான். தூக்கில் போட அழைத்துச் செல்ல சிறையதிகாரிகள் வந்தபோது பகத் சிங் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தார், அது லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்.’ இவையெல்லாம் ஏற்படுத்திய தாக்கத்தில் நவம்பர் புரட்சி பற்றியும், சோவியத் நாடு பற்றியும் பல நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கப் படிக்கத்தான், பாரதி எழுதியதும் பகத் சிங் படித்ததும் வெறும் செய்தி என்ற அடிப்படையில் அல்ல, தமிழகத்திலும் இந்திய அளவிலும் புரட்சிகரமான மாற்றங்கள் விளைய வேண்டும் என்ற தாகத்தோடுதான் என்பதையும் புரிந்துகொண்டேன். நம் பாரதிதாசனும் புதிய கோணத்தில் சோவியத் புரட்சி பற்றிப் பாடல் எழுதியிருக்கிறார். தமிழகத்தில் சிங்காரவேலர் செங்கொடி ஏற்றி இயக்கத்தைத் தொடங்கியதன் பின்னணியில் சோவியத் புரட்சியின் தாக்கமும் இருக்கிறது. சுதந்திர இந்தியா உருவான பிறகு தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் காலூன்றி நிற்பதற்காக, மற்ற நாடுகள் உதவ முன்வராத நிலையில் சோவியத் யூனியன்தான் பேருதவி செய்தது. கைம்மாறு எதிர்பாராத உதவி அது. ஒரு நாடு இப்படித் திகழ முடியுமா என்று யோசித்தபோது, அதற்கு அடித்தளமாக சோசலிச அறம் இருப்பது தெளிவானது.
பொதுவாக ஒரு நாட்டில் அரசியல் எழுச்சியும் ஆட்சி மாற்றமும் நடக்கிறது என்றால் அது அந்தந்த நாட்டோடு நின்றுவிடும். ஆனால் சோவியத் புரட்சி உலகம் முழுவதும் மாற்றங்களை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள் கூடத் தங்கள் பிள்ளைகளுக்கு லெனின், ஸ்டாலின் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.
நீங்கள் சோசலிச அறம் பற்றிச் சொன்னீர்கள், இந்த அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்தியதில் நவம்பர் புரட்சியின் அறம் என்ன?
நீங்கள் சொன்னது போல், அது வரையில் பல நாடுகளில் அரசியல் எழுச்சிகளால் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதாவது ஆள்கிறவர்கள் மாறுவார்கள். ஆனால், அடிப்படையான வேறு மாற்றங்கள் எதுவும் நடக்காது. இதுவோ பாரதி சொன்னதுபோல் உலகத்துக்கொரு புதுமை என்பதாக, அடிப்படையான மாற்றங்களை நிகழ்த்தியது. முதலில், சமுதாய மாற்றத்திற்கான லட்சியத்தை ஏற்றுக்கொண்ட பெருந்திரள் மக்கள் அந்த அரசியல் மாற்றத்தில் பங்கேற்றார்கள் என்பதே முக்கியமான மாற்றம்தான். அடுத்து, மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்கான கடைகள் அதுவரையில் ஜார் மன்னனின் கடைகளாகவே இருக்கும். பணம் மன்னனுக்குத்தான் போய்ச்சேரும். இப்போது தங்களுடைய கடைகள், அதன் வருவாய் அரசின் மூலம் தங்களுக்கே வரும் என்ற மாற்றம் நிகழ்ந்ததை அந்த மக்கள் கண்டார்கள். மக்கள் எதிர்பார்ப்புகளின் கண்ணாடியாக சோவியத்தின் கம்யூனிஸ்ட்டுகள் இயங்கினார்கள். சோவியத் அரசு பொறுப்பேற்றதும், "வேறு எந்த நாட்டின் மீதும் நாங்கள் படையெடுக்க மாட்டோம். எங்கள் வளத்தை மேம்படுத்திக்கொள்வதில்தான் கவனம் செலுத்துவோம்" என அறிவித்தது. சமாதானத்தையே முதல் அறிவிப்பாக வெளியிட்டது. வேறு எந்த நாட்டின் அரசும் அதுவரையில் இப்படி அறிவித்ததில்லை. அதே வேளையில், உலகம் முழுவதும் மாற்றங்களுக்காகப் போராடுவோருக்கு சோவியத் அரசு துணைநின்றது. ஏகாதிபத்திய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தியது. சோவியத் அரசு மக்களின் மதச் சுதந்திரத்திற்கு உறுதியளித்தது. அதே வேளையில் அரசு எந்த மதத்தையும் சாராததாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது. போல்ஷ்விக்குகளின் இந்தக் கொள்கையைப் பாராட்டுவதாகக் காந்தி எழுதியிருக்கிறார். இப்படிப்பட்ட மாற்றங்கள்தான் சோவியத் சமுதாயத்தை ஒப்பிலாத சமுதாயமாக மாற்றியது.சொல்லப்போனால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் அரசுகள், நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தை சோவியத் அரசின் நடவடிக்கைகள் ஏற்படுத்தின. பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான விழிப்புணர்வு உள்பட நவம்பர் புரட்சியின் அறம் என்று இன்னும் விரிவாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
சோவியத் புரட்சி வரலாற்றிலிருந்து இன்று மக்களிடம் கொண்டுசெல்லவேண்டிய சிந்தனைகள் என்ன? புதிய தலைமுறையினருக்கு அதன் செய்தி என்ன?
சோவியத்துக்குப் போய் வந்த பெரியார் பல முக்கியமான விசயங்களைக் கவனித்து எழுதியிருக்கிறார். அவற்றை இன்றைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். வெற்றிபெற்ற ஒரு நாடு, வெற்றி கொண்ட நாட்டை அடிமைப்படுத்தாமல் சுதந்திர நாடாக இருக்க உதவியது என்பதெல்லாம் வரலாற்றில் மிக முக்கியமானது. அது உலக அளவிலேயே பலரையும் ஈர்த்த ஒரு மாற்றம். அதே போல், ரஷ்யாவில்தான் மையமான புரட்சி நடந்தது என்றாலும், பிற பகுதிகள் இணைகிறபோது அதற்கு ரஷ்யா என்ற பெயர் வைக்கப்படவில்லை. ஐக்கிய சோசலிச சோவியத் குடியரசுகள் என்றுதான் பெயர் சூட்டப்பட்டது. அதில் ஒரு முக்கியமான அரசியல் செய்தி இருக்கிறது. இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு இதுவும் ஊக்குவித்தது என்று சொல்லலாம். இன்று மொழித்திணிப்பு முயற்சிகள் இங்கே நடக்கிற பின்னணியில், நவம்பர் புரட்சி விழாவில், அனைத்து மொழிகளுக்கும் சம மரியாதை என்ற சோவியத் கொள்கையை எடுத்துச் செல்ல வேண்டும். மனிதனுக்கும் உழைப்புக்கும் உள்ள உறவு சந்தைப் பொருளாதாரத்தில் அவமதிக்கப்படுகிறது. அந்த உறவுக்கு உன்னதமான மதிப்பு சோசலிச சமுதாயத்தில்தான் சாத்தியம் என்ற செய்தியும் நவம்பர் புரட்சி விழாவில் இருக்கிறது. அதைப் போல், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்துச் சமத்துவ மாற்றங்களுக்குமான செய்தியை நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழாவையொட்டி மக்களிடையே விரிவாகவும் பரவலாகவும் கொண்டு செல்ல செங்கொடி இயக்கத் தோழர்கள் உறுதியேற்க வேண்டும்.
---


நவம்பர் புரட்சி - தீக்கதிர் சிறப்புத் தலையங்கம்


கனவு விதைகள் கண் விழித்த நாள் இது


நூறு ஆண்டுகள் என்பது பூவுலகின் வரலாற்றில் ஒரு துளியின் துமிதான். ஆனால் மகத்தான நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு என்பதுமனிதகுல வரலாற்றையே மாற்றியமைத்த ஒரு யுகத்தின் பிரசவம். சமத்துவம், சோசலிசம் குறித்த கனவுகளும், கற்பனைகளும் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன. "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்பது குறித்து வள்ளுவப் பேராசான் வகுத்துத் தந்தான். ஆனால் அது அவரது விருப்பமாக இருந்ததேயன்றி நிதர்சனமாக இல்லை. பிச்சை எடுத்துப் பிழைக்கும் வாழ்க்கை இருந்ததால் தான், இந்த உலகைப் படைத்த இறைவன் கெட்டொழியட்டும் என்று சாபம் விட்டார் வள்ளுவர். "எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை, உடையாரும் இல்லை மாதோ" எனும் ஒரு சமூகமாக அயோத்திஇருந்ததாகக் கம்பன் பாடினான். ஆனால் அது அவரது கற்பனையாக மட்டுமே இருந்தது. கவிஞர்களின் கனவாக மட்டுமே இருந்த ஒப்புயர்வற்ற சமுதாயத்தைச் சமைத்துக் காட்டியதுதான் ரஷ்ய மண்ணில் நிகழ்ந்த நவம்பர் புரட்சியின் மகத்தான சாதனையாகும். சோசலிசம் என்பது கனவல்ல. அது சாத்தியம் தான்என்பதைச் சாதித்துக்காட்டியது தான் கோடிக் கால் பூதமான தொழிலாளி வர்க்கத்தின் ஆகப் பெரிய சாதனையாகும். இந்த யுகப்புரட்சிக்கான படைக்கலன்களாக மார்க்சியத் தத்துவத்தை வகுத்தளித்தனர் தத்துவஆசான்கள் மார்க்சும் ஏங்கெல்சும். இந்தத் தத்துவஆயுதத்தைக் களத்தில் கச்சிதமாகப் பயன் படுத்தி, மாமேதை லெனின் தலைமையில் பாட்டாளிவர்க்கம் புதியதொரு பொன்னுலகை உருவாக்கிக் காட்டியது. உலகில் தோன்றிய மதங்கள் எல்லாம் சொர்க்கம் விண்ணில் இருப்பதாகவே கைகாட் டின. ஆனால் வாழும் மண்ணிலேயே ஒரு சொர்க்கபுரியை, சுரண்டல் இல்லாத, பட்டினி இல்லாத ஒரு சமூகத்தைப் படைத்துக்காட்டிய நிகழ்வுதான் நவம்பர் புரட்சி. பாசிச அபாயத்தை முறியடித்து இந்தப் பூமியைப் பாதுகாக்க மாவீரன் ஸ்டாலின் தலைமையில் சோவியத் மக்கள் ஒரே மனிதனாக எழுந்து நின்றார்கள். தங்களுடைய இன்னுயிரைத் தியாகம் செய்து, மனிதகுல வரலாறுகோணல் புத்திக்காரர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் நேர்வழியில் நிமிர்ந்து நடைபோட சோவியத் யூனியன் தான் காரணமாக அமைந்தது. விண்வெளித்துறை தொடங்கி விளையாட்டுத்துறை வரை... விவசாயம் தொடங்கித் தொழில்நுட்பம் வரை... சோவியத் யூனியன் படைத்துக்காட்டிய சாதனைகள் அதுவரை வரலாற்றில் நடந்திராத ஒன்று. காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் அனைத்து நாடுகளின் மக்களுக்கும் சோவியத் நேசக்கரம் நீட்டுவதாகப் பிரகடனம் செய்தார் மாமேதை லெனின். இந்தியாஉட்படப் பல்வேறு நாடுகளின் விடுதலை வேட்கை வீறு கொண்டு எழுந்தது இதன்பிறகுதான்.
சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பின்னணியில்இனி, கம்யூனிசத்திற்கு எதிர்காலம் இல்லை;முதலாளித்துவம் தான் உலகை ஆளும் எனக் கெக்கலி கொட்டியவர்கள் நெருக்கடியின் பிடியில் சிக்கி உலகம் திணறிக் கொண்டிருப்பதை நியாயப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள். மனிதகுலத்தின் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவத்தால் ஒருபோதும் தீர்வு காண முடியாது. ஏனெனில் அது நோய். சோசலிசம் என்பதே மனிதகுலத்திற்கு மாமருந்து என்ற உண்மை விடியற் காலை வெளிச்சமாய் வெளிவந்தே தீரும். மாமேதை லெனின் நடத்திய ‘இஸ்க்ரா’ என்றபுரட்சிகர ஏட்டின் தமிழ்ப் பெயராக அமைந்துள்ள தீக்கதிர் மார்க்சிய லெனினியத்தை உயர்த்திப் பிடித்துப் புரட்சிகர இயக்கத்தின் போர்வாளாகக் கடந்த 54 ஆண்டுகளாகக் களமாடி வருகிறது. நவம்பர் புரட்சியைக் கொண்டாடும் வகையில் ஆண்டு முழுவதும் ‘யுகப்புரட்சி’ எனும் தலைப்பில்தொடர்ந்து வாசகர்களைச் சந்திக்க இருக்கிறது தீக்கதிர். வாசகர்களுக்கு வணக்கத்தையும் வாழ்த்துக் களையும் சொல்லி பொதுவுடைமை மலரும் புத்துலகைப் படைக்க உறுதியேற்கிறது தீக்கதிர் நாளேடு.

Thursday, November 6, 2014

நவம்பர் புரட்சியும் இன்றும் முக்கியத்துவம் உடையதே.-சுகுமால் சென்


1991ஆம் ஆண்டு ஆகஸ்டில் சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு  தகர்ந்தபின், உலக அளவில் சமூக மாண்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக தரம் தாழ்ந்து செல்லத் தொடங்கிவிட்டன.  கோர்பசேவ் கூட மிகவும் பட்டவர்த்தனமாகச் செய்யத் தயங்கிய வேலைகளை, அவரது அக்கிரம நடவடிக்கைகள் அனைத்திற்கும் துணையாக இருந்த எல்ட்சின் மேற்கொண்டு, “என் குறிக்கோள் நிறைவேறிவிட்டது,’’ என்று கூறினார்.  சோவியத் யூனியனைத் தகர்க்கும் இவர்களின் நயவஞ்சகத் திட்டம்  முழுமையாக நிறைவேறியது. தன்னுடைய சொந்த நாடான போலந்திலும் மற்ற நாடுகளிலும் கம்யூனிசத்தை முற்றிலுமாக வேரறுத்திதிட உறுதிபூண்டிருந்த போப் ஜான் பால் 2 என்பவர்கூட, “கம்யூனிசம் தீமைகள் நிறைந்த ஒன்றாக இருந்தபோதிலும்மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சிக்கு அதிலும் சில அடிப்படைக்கூறுகள் இருந்தன,’’ என்றும் எனவே அது முடிவுற்றுவிட்டதென்று அதீதமாக `சந்தோஷம்அடைய வேண்டாம்,’’ என்று பதிவு செய்திருக்கிறார்.
சோவியத் யூனியன் தகர்ந்தபோது  காழ்ப்புடன் மிகவும் குதூகலம் அடைந்த பிரிட்டிஷ் முதலாளிகளின்  ஊதுகுழலான  லண்டன் `டைம்ஸ்பத்திரிகையே இதனைப் பதிவு செய்திருக்கிறது.  அப்போது அந்த ஏடு தன் தலையங்கத்தில் கட்சி முடிவுக்கு வந்துவிட்டது,’’ என்று எழுதிவிட்டு, “ரஷ்யர்கள்  தற்போது ஏழை லெனினை கிறித்துவமத அடிப்படையில் கல்லறையில் வைத்திடுங்கள்,’’ என்று அறிவுரையும் வழங்கி இருக்கிறது.  உண்மையான, சிறந்து விளங்கிய சோசலிசம்’’ நிலைகுலைந்ததில் ஆச்சர்யம் எதுவும் இருப்பதாக நாம் பார்க்கவில்லை.  மாபெரும் அக்டோபர் புரட்சியானது மன்னிக்கப்படக்கூடாத விதத்தில் கசிந்து கொண்டிருந்த ஊழல் மற்றும் பேராசை குணங்களை வேருடன் பிடுங்கி எறியத் தவறியதே இதற்குக் காரணங்களாக இருந்திருக்க வேண்டும்.
உலகின் பல நாடுகளில் சோசலிச அமைப்பு தகர்ந்ததற்குப்பின்னர்பெரும் பணம் படைத்தவர்களால் ஆட்சி செய்யப்படும் இன்றைய உலகில், அநேகமாக அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் பொது வாழ்க்கை என்பது இருளார்ந்த முறையில் சீர்கேடு அடைந்து கொண்டிருப்பது குறித்துஇவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.  அமெரிக்கா புரிந்திட்ட `போர்க் குற்றங்கள்தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்தின் முன்னாள் அட்டார்னி ஜெனரல் தன் சொந்த அரசாங்கத்தின்மீதே குற்றம் சுமத்தியதைத் தவிர, அமெரிக்கா இராக் மீது 1991க்கு முன்பு மிகவும் கொடூரமான முறையில் தொடுத்த தாக்குதல்கள் குறித்து, எவரும் கண்டனம் எழுப்பிடவில்லை.  அமெரிக்காவின் தாக்குதலால் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைக்கப்பட்டனர், ஈராயிரம் இராக்கியர்கள் சரணடைந்தனர்.  சர்வதேச சட்டங்களை மீறி அமெரிக்கா இவ்வாறு அட்டூழியம் புரிந்திருந்தபோதிலும், அட்டூழியத்தில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தினர் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டார்களேயொழிய, அவர்களது அட்டூழியங்களுக்கு எதிராக உலகமோ, ஐ.நா. ஸ்தாபனமோ கண்டித்திடவில்லை.    வெளிப்படையாக இல்லை என்றபோதிலும் நடைமுறையில் ஸ்.நா. ஸ்தாபனம், அமெரிக்காவின் கைப்பாவையாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் அணிசேரா நாடுகளின் காவலனாகத் திகழ்ந்த இந்தியா, தற்போது அமெரிக்காவின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு எதிராக வாயே திறப்பதில்லை. சர்வதேச அளவில் அறநெறி என்பது எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இவ்வரலாற்றுப் பதிவுகள் சான்றுகளாக விளங்குகின்றன. ஐரோப்பாவில் சோசலிச நாடுகள் வீழ்ச்சி அடைந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
1985-87களில் மிகயீல் கோர்பசேவ் சோசலிசம் என்ற பெயருடனேயே சோசலிசத்திற்கு எதிராக மிகவும் நேர்த்தியாக முகமூடி அணிந்துகொண்டு நடவடிக்கைகள் மேற்கொண்டதானது உலகின் பல நாடுகளில் இருந்த அறிவுஜீவிகள் கண்டுகொள்ளாமல் மவுனம் சாதித்தது மிகவும் கவனத்துடன் ஆராயப்பட வேண்டிய சங்கதிகளாகும்.
கோர்பசேவின் சதி வேலைகள் நீண்ட காலமாக மிகவும் நன்கு திட்டமிடப்பட்டவைகளாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.  அந்தக் காலத்தில் அமெரிக்காவில் கோர்பசேவ் பெயர் புகழ் பெற்றிருந்த அளவிற்கு வேறெவர் பெயரும் புகழடையவில்லை. `கோர்பிஎன்றும் `இப்பத்தாண்டுகளின் மனிதர்என்றும் பெரும் புள்ளிகளின் ஊடகங்களால் புகழப்பெற்றது மட்டுமல்ல, நோபல் அமைதிப் பரிசை அளித்தும் அவர் முடிசூடப்பட்டார். (அந்தக் காலத்தில் அரபு உலகில் நாசரின் கொள்கைகளுக்குத் துரோகம் இழைத்ததற்காக ஹென்றி கிசிஞ்சருடன் அன்வர் சதாத்திற்கும் பரிசளிக்கப்பட்டதை நினைவுகூர்க) `கோர்பிஜூரம் மறைந்துவிட்டது. சோசலிசத்தின் எதிரிகளின் பகடைக் காயாக இருந்த நபர் நவீன காலனிய சுரண்டலுக்கு ஒரு வளமான பொருளாகக் கருதப்பட்டார். எனவே, எனவே அவர் குப்பைக் கூடையில் தூக்கி எறியப்படும் வரை ஒட்ட உறிஞ்சப்பட்டார். கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கணிசமான அளவிற்கு கோர்பசேவ் போன்ற மோசடி பேர்வழிகள் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.  இவர்களைக் கண்டுபிடித்து கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து களை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய காலம் முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மாபெரும் அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய காலம் முழுவதையுமே ஏன் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்இதனை கோர்பசேவின் பெரெஸ்ட்ரோய்கா கொள்கையால் ஈர்க்கப்பட்ட நபர்கள் அலட்சியம் செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். லெனின் மற்றும் ஸ்டாலின் காலத்தில் சோவியத் யூனியன் புரிந்திட்ட அளப்பரிய சாதனைகள் எல்லாம் கூறப்படுவதையோ,  கோர்பசேவ்களுடைய விசித்திரமான தில்லுமுல்லுகளையெல்லாம் கடந்து, சோவியத் கம்யூனிசம் வரலாற்றில் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியதையோ மீண்டும் நினைவுகூரப்படுவதை இவர்கள் விரும்பவில்லை. ரவீந்திரநாத் தாகூர், ரொமைன் ரோலண்டு, பெர்னார்ட் ஷா, ஐன்ஸ்டீன், சார்லி சாப்ளின் மற்றும் பலராலும் போற்றிப் பாராட்டப்பட்ட சோவியத் யூனியனை மீளவும் நினைவு கூர்வதை இவர்கள் விரும்பவில்லை. 
உலகில் நம்மைப்போன்று செயல்பட்டுக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் கோர்பசேவின் திட்டம் வெற்றி பெற்றது குறித்து அதிர்ச்சி அடைந்தார்கள். நம்மைப் போன்றவர்கள் இத்தகைய துரோகிகளின் நடவடிக்கைகளால் பெருமை அடைய முடியாது. மிகவும் வருத்தம் அடைந்தோம்.
மார்க்ஸ் போன்றவர்கள் கூட வரலாற்று ரீதியாக முன்னேறிய நாடுகள்தான், ஜனநாயகத்தில் தங்களுக்குள்ள அனுபவத்தின் காரணமாக, புரட்சியை நோக்கி நகர்ந்து வரும் என்று நினைத்தார்கள் என்பதை  நாம் மறந்துவிட்டோம்.   ஆனால் அவ்வாறு நடந்திடவில்லை. இது குறித்து ஏராளமான ஆய்வு நூல்கள் வெளிவந்துவிட்டன. பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் புரட்சி முதலில், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் மிகப் பிரம்மாண்டமான பகுதிகளை உள்ளடக்கிய ரஷ்யாவில்தான் வர முடிந்தது, வந்தது.  அதற்குமுன் அப்பகுதிகளில் அநேகமாக ஜனநாயகமே இல்லாதிருந்த நிலைதான்.  புரட்சி இங்கிலாந்து அல்லது ஹாலந்து போன்ற முன்னேறிய நாடுகளில்தான் வரும் என்றும் அப்போதுதான் அங்கே உண்மையான ஜனநாயகம் எளிதாகவும் வேகமாகவும் வரும் என்றும் மார்க்ஸ், ஒரு சமயத்தில்எதிர்பார்த்தார். ஜனநாயகம் வழியே சோசலிசத்தை நோக்கி எளிதாக அதிக விலை கொடுக்காது முன்னேற முடியும் என்று அப்போது நினைக்கப்பட்டது.      
மேலும், லெனின் போன்ற தீர்மானகரமான புரட்சியாளர்கள் (சோசலிசத்திற்கு முக்கியமான மூலக்கூறாக விளங்கும்) ஜனநாயகத்தை நோக்கி ரஷ்யாவைக் கொண்டு செல்லும்போது அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று கருதப்பட்டது.  உலகக் கம்யூனிஸ்ட் இயக்கமும், `மாபெரும் அக்டோபர் புரட்சியும்  அந்த சவாலை ஏற்றுக்கொண்டன. அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் வரலாற்றில் புதிய அத்தியாயங்களை அவை தோற்றுவித்தன.  1917 அக்டோபரில் மனிதகுல வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடிய விதத்தில் புரட்சியை நடத்தி, மகத்தான சாதனை படைத்தனர். அதனைத் தொடர்ந்து முப்பதாண்டு காலம் லெனின் மற்றும் ஸ்டாலின் தலைமையில்  போல்ஷ்விக்குகள் உலகையை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.
இங்கே ஒரு விஷயத்தைக்குறிப்பிட வேண்டியது அவசியமாகும். சோவியத் ரஷ்யா, கோர்பசேவின் துரோகத்தனமான நடவடிக்கைகளால் சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், கம்யூனிஸ்ட் சீனா கோர்பசேவின் நடவடிக்கைகளை உதறித்தள்ளி எறிந்துவிட்டு, தங்கள் நாட்டிற்கேற்ப மார்க்சிய லெனினியப் பாதையில் முன்னேறியது.கோர்பசேவிசத்திற்கு இரையாகி உலகில் பல கம்யூனிஸ்ட் நாடுகளில் தலைவர்கள்   வர்க்கப் போராட்டத்தை’’ கைவிட்டுவிட்டபோதிலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மிகச் சரியான நிலை எடுத்தது.  வர்க்கப் போராட்டத்தை எப்போதும் மறக்கக்கூடாது’’ என்கிற மாவோவின் பொன்மொழி நிவாரணத்தை அளிக்கிறது.   சிறிய நாடாக இருந்தாலும் செங்கொடியை உயர்த்திப்பிடித்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இன்றளவும் சிம்ம சொப்பனமாகத் திகழும் கியூபாவை பெருமையுடன் நினைவுகூர்வோம்.  சோசலிசம் இல்லையேல் மரணம். நிச்சயம் நாங்கள் வெல்வோம்’’ என்று பிடல் கேஸ்ட்ரோ வீர முழக்கமிட்டார்.
இன்றைக்கு உலகில் நடைபெறும் நிகழ்ச்சிப்போக்குகள் ஸ்டாலின் கருத்தாக்கமான வர்க்கப் போராட்டத்திற்கும், சோசலிசத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கின்றன.
ஸ்டாலினுக்குப்பின் பொறுப்பேற்ற மாலங்கோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரசில் ஸ்தாபனம் தொடர்பாக பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்தார். ஆனால் அவற்றை சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை.
ஸ்டாலின் நடவடிக்கைகள் அனைத்தையும் சரி என்று நாமும் கூறிடவில்லை. ஆயினும், சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு, மனித குலம் உண்மையான முறையில் விடுதலை பெறுவதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை எவரும் மறுதலித்திட முடியாது.
நவீன தாராளமய முதலாளித்துவக் கொள்கைகள் உலக அளவில் அறநெறி ஒழுங்கை சிதைத்து சின்னாபின்னமாக்கியுள்ள நிலையில், கம்யூனிஸ்ட்டுகளும் முற்போக்காளர்களும் புத்துயிர் பெற்று, இவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடித்திட வேண்டும். சோவியத் வரலாற்றை ஸ்டாலின் மற்றும் இதர தலைவர்களின் பங்களிப்புகளுடன் முறையாக ஆய்வு செய்வது என்பது முற்போக்கு சக்திகளுக்கும், தாங்கள் தலைமை ஏற்க வேண்டிய மக்களுக்கும் துணிவையும், நெஞ்சுரத்தையும் கொடுத்திடும்.
எனவே, 1917 நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியின் முக்கியத்துவம் இன்றும் முக்கியத்துவம் உடையதேயாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

Sunday, November 7, 2010

நவம்பர் புரட்சியும் சோசலிஸ்ட் உணர்வும்--சுகுமால் சென்



1917 அக்டோபர் 17இல் நடைபெற்ற அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி, பின்னர் திருத்தப்பட்ட ரஷ்ய காலண்டரின்படி நவம்பர் 7இல் நவம்பர் புரட்சி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. ரஷ்யாவின் முதல் சோசலிஸ்ட் புரட்சி, உலகையே குலுக்கிய நிகழ்வாகும். அதன் முக்கியத்துவம் இன்றைய உலகில் - அதாவது உலக முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள இன்றைய உலகில் - பெரிய அளவில் பொருளாதார மந்தம் மற்றும் கொடூரமான முறையில் ஏகாதிபத்தியத் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இன்றைய உலகில் - மேலும் மேலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. சமீபத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியானது, செப்டம்பர் 15 அன்று தன் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் ஏழை மக்கள் மீதும் தாங்க முடியாத அளவிற்கு அது தாக்குதல்களை ஏவிவிட்டுக் கொண்டிருக்கிறது. இத்தாக்குதல் களுக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கின்றன. இவ்வாறு, உலக முதலாளித்துவம் மிகவும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கக்கூடிய இன்றைய சூழல் நவம்பர் சோசலிஸ்ட் புரட்சிக்கு மேலும் அதிக முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது.

ஏகாதிபத்திய மேலாதிக்கம் மற்றும் அதன் நாசகர யுத்த நடவடிக்கைகள் இன்றைய தினம் மிகவும் கூர்மையடைந்து, உலகம் முழுவதையும் தன் மேலாதிக்கக் கருவிகளின்மூலம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியம் ஏற்படுத்திட்ட நவீன தாராளமயப் பொருளாதார முறை, உலகச் சந்தையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும் தொழிலாளர் வர்க்கத்தையும் சாமானிய மக்களையும் ஒட்டச் சுரண்டி கொள்ளை லாபம் ஈட்டவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
தோழர் லெனின் விளக்கியதுபோல், ஜார் மன்னனின் ஆட்சியின் கீழ் ஒரு பின்தங்கிய நாடாக விளங்கிய ரஷ்யாதான், 1917இல் முதலாளித்துவ சங்கிலியின் ‘‘பலவீனமான கண்ணியை’’ உடைத்து நொறுக்கி, முதலாளித்துவ உலகில் தொழிலாளர் வர்க்கத்தின் ஆட்சியை நிறுவிய முதல் நாடாக வெற்றி பெற்றது. ரஷ்ய சோசலிஸ்ட் புரட்சியின் மிக முக்கியமான அம்சம், முதலாளித்துவத்தின் சுரண்டும் வர்க்க ஆட்சிக்கு முடிவு கட்டிய முதல் உலகப் புரட்சி இதுவே என்பதாகும்.

இறுதியாக, 1991இல் பல்வேறு காரணங்களால் சோவியத் சோசலிஸ்ட் அரசு முடிவுக்கு வந்தது. சோசலிசத்தின் புரட்சிகரத் தத்துவத்தை பெரிய அளவில் திரித்ததும், விலகிச் சென்றதும் இதற்கு முக்கிய காரணங்கள் என்றாலும், இது குறித்து உலகம் முழுதும் உள்ள மார்க்சிஸ்ட்டுகள் இன்னமும் தனியே ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
சோசலிஸ்ட் உணர்வு உருவாதல்

சோவியத் சோசலிஸ்ட் புரட்சியானது, தன்னுடைய நிகழ்ச்சிநிரலில் சோசலிஸ்ட் உணர்வினைப் பிரதானமாக முன்வைத்தது. ஆனாலும், இதனை எய்துவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. தொடர் போராட்டம் அவசியம். உலகிலேயே மிகவும் முக்கியமான பொக்கிஷம், மனித இனமேயாகும். ஆயினும், வரலாற்றுரீதியாகப் பார்த்தோமானால், மனிதகுலத்தின் பெரும்பகுதி பகைமையுடனான சமூக வர்க்கங்களின் ஆளுகைகளின் கீழேயே, சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சமூக உறவுகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. இத்தகைய நிலைமைகள் - அதாவது தன்னைத்தானே பீற்றிக்கொள்ளும் தனிநபர்வாதம் (heightened individualism), அதீத நுகர்வோரியம் (hyper-consumerism), தற்பெருமை (egotism), இரக்கமின்மை (apathy), பகைமையுணர்வு (alienation), பேராசை (greed), வெறுப்பு மனப்பான்மை (cynicism) ஆகிய அத்துணை குணங்களும் சோசலிசத்தைக் கட்டுவதற்கும் வலுப்படுத்துவதற்குமான அனுகூலமானவை என்று சொல்வதற்கில்லை. முதலாளித்துவம் மற்றும் புரட்சிக்கு எதிரான சிந்தனையாளர்களில் பலர் இத்தகைய குணங்கள் மக்களிடம் இருப்பது இயல்பானவைகளே என்றும் இதற்கு மேல் மக்களிடமிருந்து நாம் அதிகமாக எதிர்பார்க்க முடியாது, கூடாது என்றும் வாதிடுகிறார்கள். ஆயினும் இது ஒரு நம்பிக்கையே யொழிய, அறிவியலின் அடிப்படையில் அமைந்த ஒன்றல்ல. இதேபோன்றுதான் ஒவ்வொருவரின் ‘‘திறமை’’ (ability) மற்றும் ‘‘புத்திசாலித்தனம்’’ (intelligence) ஆகியவையும் வெவ்வேறானவை என்றும், ஒரு சில தனிநபர்கள் வரலாற்றையோ, கலாச்சாரத்தையோ அல்லது சுற்றுச்சூழலையோ தீர்மானிப்பதில் எவ்விதப் பங்கும் ஆற்றவில்லை என்றும் சிலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இவற்றிற்கு மாறாக, தனிநபர்கள் நிலையானவர்கள், மாற்ற இயலாதவர்கள் என்கிற எண்ணத்தைப் பொய்ப்பிக்கக்கூடிய விதத்தில் அறிவியல் சான்றுகள் உண்டு. மனித இனம் மாற்றங்களுக்கு - சமூகப் பின்னணியுடன் சம்பந்தப்பட்ட மாற்றங்களுக்கு - உட்பட்டவையே. இவ்வாறு மனித குலத்தின் மகத்தான சக்தியை எவரும் அறுதியிட்டுக் கூறிட முடியாது.

இன்றைய சிக்கல் நிறைந்த மற்றும் முரண்பட்ட பின்னணியில், அதிலும் குறிப்பாக, பல வளர்முக முதலாளித்துவ நாடுகளில் ஏகாதிபத்தியத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நவீன தாராளமய உலகமயக் கொள்கையானது, மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் மற்றும் முதலாளித்துவம் என்னும் அடிப்படையில் வெவ்வேறான இரு உலகக் கண்ணோட்டங்களுக்கு இடையே ஒரு மூர்க்கத்தனமான போராட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த இரு கண்ணோட்டங்களுமே மக்களது சிந்தனைகளை, பழக்க வழக்கங்களை, கருத்துக்களைத் தங்கள் கண்ணோட்டங்களின்பால் ஈர்ப்பதற்கு முயல்கின்றன. உதாரணமாக, இன்றைய தினம் முக்கியமான பிரச்சனைகள் என்ன என்பது குறித்தும் அவற்றைத் தீர்த்திட சிறந்த வழி எது என்பது குறித்தும் இரு கண்ணோட்டங்களும் இரு கருத்துக்களை முன்வைக்கின்றன. ‘‘மகிழ்ச்சி’’ என்பதற்கான அளவுகோலைக் கூட இரண்டும் இரு விதங்களில் அளிக்கின்றன. வலுவான முறையில் இயங்கிடும் ஏகாதிபத்திய சக்திகள், மக்கள் மத்தியில் சுயநலத்தையும், புதிய புதிய பொருள்களின்மேல் அளவிடற்கரிய ஆசைகளையம் உருவாக்கி, வளர்த்திடக்கூடிய வகையில் பிரச்சாரத்தை செய்துவருகின்றன. இவை அளிக்கும் நிர்ப்பந்தங்களில் பல மிகவும் பசப்பலானவைகளாகும்: மேலோட்டமாகப் பார்த்தால் முற்போக்கானவைகள் போல் தோன்றும். ஆனால் உண்மையில் அவை படு பிற்போக்கானவைகளாகும்.

நவீன தாராள உலகமயக் கட்டத்தில், பல்வேறுபட்ட சமூக நலன்களும், அது உற்பத்தி செய்த வர்க்க முரண்பாடுகளும், மக்கள் மத்தியில் வேலைவாதம் (Careerism, சந்தர்ப்பவாதம், ஒருமைப்பாடின்மை (lack of solidarity), மற்றும் சோசலிசத்தைக் கட்டுவதில் ஆர்வமின்மை ஆகியவற்றைக் கொண்டு வந்திருக்கின்றன. உதாரணமாக, நகர்ப்புறங்களில் வேலைபார்க்கும் அதிக ஊதியம் வாங்கும் ஊழியர்களின் சுகபோக வாழ்க்கையானது தொழிற்சாலைகளிலும் கிராமப்புறங்களிலும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களிடமிருந்தும், குறைந்த சலுகைகளுடன் வாழ்பவர்களிடமிருந்தும், சொந்த ஊர்களில் வாழும் பெற்றோர்களிடமிருந்தும், ஓய்வூதியதாரர்களிடமிருந்தும் அவர்களைத் தனியே ஒதுக்கி வைத்து விட்டது. மூலதனம் - அது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது பிரச்சனையே அல்ல - தன் அதிகாரத்தையும் அதன் விரிவடையும் தன்மையையும் குறைத்து மதிப்பிடுவது எவ்வாறு தவறோ அதேபோன்று, தத்துவார்த்த சிந்தனைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல் போன்ற அதன் எதிர்மறை விளைவுகளையும் குறைத்து மதிப்பிடுவது மாபெரும் தவறாகும். புரட்சிகர உணர்வு மட்டம்
சோவியத் யூனியன் இப்போது இல்லை என்ற போதிலும் கூட, சோசலிசத்தைக் கட்டியமைத்திட வேண்டும் என்கிற நிகழ்ச்சிநிரலானது இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் அது தொடரும். சோசலிசத்தைக் கட்டியமைத்து, அதனை நிலைநிறுத்துவதற்கு, உலகளாவிய அளவில் சுத்தமான காற்று மற்றும் தண்ணீர், சுத்தம், இயற்கை வளங்களைச் சமமாகப் பகிர்ந்து கொள்ளுதல் உட்பட பொதுவான நலன்களுக்காக உண்மையுடன் கவலைப்படும் அனைவரும் ஒன்றிணைய வேண்டியதும், உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையையும் பெற வேண்டியது அவசியம். அதே சமயத்தில், சமூகத்தை, ஒரு முதிர்ச்சியடைந்த சோசலிஸ்ட் சமூகமாக மாற்றியமைத்திட இத்தகைய கண்ணோட்டங்களை உடைய முன்னணி ஊழியர்கள் தேவை. புரட்சிகர உணர்வும் தேவை. இது சோசலிசத்தின் கீழ் உருவாக்கப்படும். மார்க்சும், ஏங்கெல்சும் பின்னர் லெனினும் சமூக நிலைமைகளில் மாற்றம் மற்றும் மக்களிடையே சோசலிஸ்ட் கல்வி மற்றும் சோசலிஸ்ட் நடைமுறை ஆகியவற்றின் மூலம் மக்களின் மனமாற்றம் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள உறவுகள் குறித்து விளக்கி இருக்கிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தோமானால் சோசலிசத்தை எய்துவது என்பது அதிகமான அளவில் ஒரு தொழில்நுட்ப அம்சமாகும். புரட்சிகர உணர்வு என்பதே ஒரு குறிப்பிட்ட அளவில் பொருளாதார வளர்ச்சியை எட்டியபின்னர்தான் ஏற்படும். ஒரு முறையான அரசியல் கட்சி அதிகாரத்தில் இருந்து, சோசலிஸ்ட் சமூகத்தைக் கட்டுவதற்கு அது வழிகாட்டினால், பின்னர் முதலாளித்துவ சமூகத்தின் நாசகரமான முரண்பாடுகளை வெல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
உற்பத்தியில் சோசலிஸ்ட் உறவுகள் அல்லது சோசலிஸ்ட் உணர்வு இல்லாவிட்டாலும்கூட அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பயன்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை விரிவாக்கிட முடியும் என்று வரலாறு மெய்ப்பித்திருக்கிறது. அமெரிக்காவில் சோசலிசம் உருவாவதற்கான பொருளியல் அடித்தளம் (material foundation) அமைந்துள்ள போதிலும், சோசலிசத் தத்துவ வளர்ச்சி என்பது அந்நாட்டில் மிகமிக அரிதாகும். சமூக வாழ்க்கைதான் உணர்வை உருவாக்குகிறது என்பது உண்மைதான் என்ற போதிலும், உற்பத்திக்கான சமூக உறவுகளை நடைமுறைப்படுத்த நம்மால் முடியவில்லை. சோசலிஸ்ட் உணர்வு என்பது, உற்பத்தியில் ஏற்படும் முன்னேற்றங்களிலிருந்து சோசலிஸ்ட் உணர்வு என்பதும் தாமாகவே வரும் என்ற கருத்து தவறாகிவிட்டது. உற்பத்தியின் புதிய உறவுகள் சாத்தியக்கூறுகளை மட்டுமே உருவாக்கி இருக்கிறதேயொழிய நிச்சயமாக சோசலிஸ்ட் உணர்வு உறுதியாக உருவாகும் என்று சொல்வதற்கில்லை. முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறுதல் என்பது திட்டமிட்டு நடைபெறுவதாகும். அதாவது, தாங்கள் எதனை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், ஏன் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று நன்கு புரிந்துகொண்டுள்ள மக்களால் திட்டமிட்டு நடைபெறுவதாகும். என்ன செய்ய வேண்டும் என்னும் நூலில் லெனின், தொழிலாளர் வர்க்கம் எப்படி வர்க்க உணர்வைப் பெறுகிறது என்பதை விளக்கி இருக்கிறார்.புரட்சிகரத் தத்துவத்தை வளர்த்து முன்னெடுத்துச் செல்வதற்கு இது அவசியம் என்று அவர் கூறுகிறார். தற்போது இருந்து வரும் சமூகப் பொருளாதார அமைப்பை, பெருவாரியான மக்களின் நலன்களுக்கானதாக, ஒவ்வொருவரும் தன் ஆற்றலை முழுமையாக உணரச் செய்யக்கூடிய விதத்தில் மாற்றியமைத்திடுவதற்கு, புரட்சிகர, அறிவியல்பூர்வமான உணர்வு அவசியம் என்று லெனின் வாதிடுகிறார். ஒருவர் சோசலிஸ்ட் உணர்வைப் பெறுவதென்பது நீண்ட கால நடைமுறையாகும். ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு பொருளாதார முன்னேற்றத்தை எய்தும் வரை இந்நிலையினை எய்திட முறையான கவனம் செலுத்தி வரவேண்டும். மக்கள்திரளிடம் அவர்கள் ஆற்றலை உணரச் செய்து, சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் அவர்களை முன்னேற்ற வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. சோசலிஸ்ட் கொள்கைகளை எய்திடத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளக்கூடிய முன்னணி ஊழியர்களை அதிகரிப்பதிலும் சிரமங்கள் உண்டு. இவ்வாறு, சோசலிசத்தைக் கட்டுவதற்கு, பொருளாதாரத்தை வளர்ப்பது அவசியமாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி வழியாக சோசலித்தை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டே பொருளாதார வளர்ச்சி இருக்க வேண்டும் என்று கருதுபவர்கள், வர்க்கப் போராட்டத்தில் தத்துவத்தின் முக்கிய பங்களிப்பையும் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகத்தை மாற்றும் அனைத்துக் கட்டங்களிலும் அதன் விமர்சனரீதியான முக்கியத்துவத்தையும் கிரகித்துக் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். சோசலிஸ்ட்டாக மாற்றியமைத்தல்
ஒருவரை சோசலிஸ்ட்டாக மாற்றியமைப்பதற்கு, ஒரு சமூகம் உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரத்தைத் தந்திருந்தால் மட்டும் போதுமானதல்ல, பெற்றிட்ட சோசலிஸ்ட் ஆதாயங்களைத் தக்க வைத்துக் கொள்வதிலும் அவற்றை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொள்வதிலும் அது அடங்கியிருக்கிறது. சோசலிஸ்ட் ஆதாயங்களை அடைவதும், மேலும் மேலும் தொடர்ந்து அந்தத் திசைவழியில் முன்னேறிச் செல்வதும் மிகவும் கடினமான, நீண்ட, நெடிய, அடிக்கடி ஆபத்துக்களை எதிர்கொள்ளக்கூடிய ஒன்றாகும். வரலாறு இவ்வாறுதான் நமக்குக் கற்பிக்கின்றது. புதிய கொள்கைகள், சட்டங்கள், நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் ஆகியவை புதிய (மற்றும் பழைய) முதலாளித்துவ, திருத்தல்வாத மற்றும் பல்nறு எதிரான சக்திகளின் செல்வாக்கிற்கு தொடர்ந்து இழுக்கப்படுகின்றன. எனவே நம் முயற்சிகள் என்பவை தொழிலாளர் வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை ஏவக்கூடிய விதத்தில் இருந்திட வேண்டும். இதன் பொருள், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகள் அனைத்தும் மக்களின் பெரும்பான்மையோர் நலன்களை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் பெருவாரியான மக்கள் பங்கேற்கக் கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியானது தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதையும், தொழிலாளர் வர்க்கம் தன் அரசியல் செயல்பாடுகளைச் செம்மையாகச் செய்திட ஆதரவையும், வழிகாட்டுதலையும் செய்வதையும் குறிக்கோளாகாக் கொண்டிருக்கக் கூடிய அதே சமயத்தில், தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தை, வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தொழிலாளர்களின் ஆட்சி அமைவது என்பது தொழிலாளர் வர்க்கத்தைத் தவிர வேறெந்தக் குழுவாலோ அல்லது வேறெவராலுமோ அல்ல. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை தொழிலாளர் வர்க்கம்தான் வலுவாக நடைமுறைப்படுத்திட முடியும். உண்மையில், மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் சமூகத்தைச் சரியானத் திசைவழியில் செலுத்திடத் தன் பங்களிப்பினைச் செய்யும்போதுதான், ஜனநாயகம் குறித்த மார்க்சியக் கண்ணோட்டம் உத்தரவாதப் படுத்தப்படுகிறது. சாமானிய மக்களில் பெரும்பான்மையானவர்களின் நலன்களுக்காக அரசு செயல்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டுமானால் அதற்கு சமூகத்தின் ஸ்தல மட்டத்திலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் சமூக ரீதியாகத் தொழிலாளர் வர்க்கம் பரந்துபட்ட அளவில் பங்கேற்பது அவசியமாகும். துல்லியமான கோரிக்கைகளின் மீது வெகுஜனப் போராட்டங்கள், குறிப்பாக அவை கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் வழிநடத்தப்படும் பொழுதும், அவ்வாறு பெரும்பான்மையோர் நலன்களுக்கு உதவிடும் பொழுதும், அரசு அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுத்து, பெரும்பான்மை மக்களுக்கு நீதி கிடைத்திடச் செய்திட முடியும். தொழிலாளர் வர்க்கங்களின் நலன்களை மேம்படுத்தக்கூடிய வகையில் ஸ்தல மட்டங்களில் தொழிலாளர் ஸ்தாபனங்கள் அமைக்கப்படுதல், அதன் தலைவர்கள் மக்களோடு இருந்து, அவர்கள் உணர்வுமட்டத்தை உயர்த்திட உதவுதல், உண்மையான வெற்றிகளைக் பெற்றிட வழிகோலலாம், விரிவான அளவிலும் நீடித்து நிலைக்கக்கூடிய விதத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த அது உதவிட முடியும். மக்களுடன் நெருக்கமாக இருந்து, அவர்கள் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு, அவர்களது கனவுகளை நனவாக்கிட, அவர்களுடன் இணைந்து நின்று போராடிட வேண்டும். இதன் மூலம் தத்துவார்த்தப் போராட்டத்தை, தத்துவார்த்த மட்டத்தில் மட்டுமல்லாது நடைமுறை வேலைகளின் மூலமும் வென்றிட முடியும்.

தத்துவார்த்த நிலையை உயர்த்திட அனைத்து மட்டத்திலும் போராட்டம்
தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி ஊழியர்கள் நாள்தோறும் நடைபெறும் நடைமுறைப் போராட்டங்கள் மூலம்தான் கற்றுக்கொண்டு முன்னேற முடியும், தங்களுடைய சமூக உணர்வினை தொழிலாளர்களின் புரட்சிகர உணர்வாக வளர்த்தெடுக்க முடியும். புரட்சிகர தத்துவார்த்த வளர்ச்சி என்பது அநீதிகளுக்கு எதிராக மக்களின் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தொடங்குகிறது. அநீதிகளுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களின் உள்ளடக்கம் மற்றும் வடிவம் ஆகியவற்றின்மூலம் அனுபவங்களிலிருந்து கற்பது என்பதும், ஆக்கபூர்வமான விமர்சனங்களை அளிப்பதற்கும் கற்பது என்பதும் அவற்றின் மூலமாக நாசகர சமூகப் பதட்ட நிலைமைகளைக் குறைப்பது என்பதும், மக்களைத் தங்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிலிருந்து விடுவித்திடக் கூடிய வகையில் தீர்மானங்களை உருவாக்கிடும் இயக்கங்களில் பங்கேற்கச் செய்வதென்பதும் சாத்தியமாகின்றன.
புரட்சி என்பது பழையனவற்றை அழிப்பது மட்டுமல்ல, புதியனவற்றை விதைப்பதுமாகும். ‘‘புரட்சியாளன்’’ என்பவன் ‘‘விஷயங்களை அவற்றின் வேர்களிலிருந்து கிரகித்துக்கொள்பவன்’’ என்று மார்க்ஸ் கூறுகிறார். அதாவது சமூகப் புரட்சியின்போது பழையனவற்றை அழித்து அவ்விடத்தில் புதியனவற்றை விதைப்பது என்பதாகும். இந்தியாவில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டங்களுக்கும் மார்க்சின் சித்தாந்தம் பொருந்தக்கூடியதே.

1991இல் சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின்னர், உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் தத்துவார்த்தத் தடுமாற்றத்தில் சிக்கிக்கொண்டது. உலகின் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீண்டு எழவில்லை. இதன் விளைவு, சில கட்சிகள் வர்க்க சமரசப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன, வர்க்க மோதலை எதிர்க்கின்றன, ‘‘ஒளிரும் முதலாளித்துவம்’’ அல்லது ‘‘மனித முகத்துடன் கூடிய உலகமயம்’’ ஆகியவற்றின் நம்பிக்கை கொண்டிருக்கின்றன. உண்மையில், இத்தகைய போக்குகள் புரட்சிகர வளர்ச்சியைத் தடுக்கின்றன, இறுதியாக மூலதனத்தின் நலன்களுக்கே சேவகம் செய்கின்றன. அதுவும் உலக முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கடியில் சிக்கித் தள்ளாடித் தடுமாறிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில்தான் இவை இவ்வாறு கருதிக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறு, இன்றைய உலகில் நவம்பர் தினத்தின் படிப்பினையாக நாம் கொள்ள வேண்டியது என்னவெனில் சமூகப் புரட்சி குறித்த மார்க்சிய சித்தாந்தத்தைக் கிஞ்சிற்றும் தடுமாற்றமின்றி நாம் உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்பதும், பல்வேறு நாடுகளில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுமேயாகும். நம்முடைய வரலாற்று இலட்சியத்தை ஈடேற்ற, சோசலிஸ்ட் உணர்வைத் தொழிலாளி வர்க்கம் மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வைத்திடுவோம். இன்றைய இன்றியமையாத தேவை என்பது இத்தகைய சோசலிஸ்ட் உணர்வு பெற்ற தொழிலாளர்களேயாவர்.

(தமிழில்: ச.வீரமணி)

Friday, November 6, 2009

நவம்பர் புரட்சியின் படிப்பினைகள் இன்றைக்கும் பொருந்தக் கூடியதே! - சுகுமால்சென்





ரஷ்யாவில் 1917 அக்டோபர் 17 அன்று நடைபெற்ற நவம்பர் சோசலிஸ்ட் புரட்சி, (ரஷ்யாவின் பழைய காலண்டர்படி அக்டோபர் 17 அன்றும், புதிய காலண்டர்படி நவம்பர் 7 அன்றும் நடைபெற்றது) உலகைக் குலுக்கிய முக்கியமானதொரு நிகழ்வு மட்டுமல்ல, அதன் படிப்பினைகள் இன்றைய உலக நிலைமைகளுக்கும் சரியாகப் பொருந்தக் கூடியதேயாகும்.
இன்றைய உலக முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கடிச் சேற்றில் சிக்கி, பெருமளவில் மந்த நிலைமைக்குச் சென்று செப்டம்பர் 15 உடன் ஓராண்டு காலமாகிவிட்டது. தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் மற்றும் முதலாளித்துவ நாடுகளில் வாழும் ஏழை மக்கள் மீதும் எந்த அளவிற்கு அது பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து இன்னமும் முழுமையாக வெளிக்கொணரப் படவில்லை. இப்போது ஏற்பட்டிருக்கிற உலக முதலாளித்துவ நெருக்கடியானது நவம்பர் புரட்சியின் முக்கியத்துவத்தை உலகுக்கு மீண்டும் நடைமுறையில் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது.

ஏகாதிபத்தியமானது இன்றையதினம் எவ்வித கூச்சநாச்சமுமின்றி தன் யுத்த முஸ்தீபுகளை கூர்மைப்படுத்திக் கொண்டு உலகின் அனைத்துப் பகுதிகளையுமே தன் மேலாதிக்க நடவடிக்கைகளால் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, மக்கள் நலன் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாது, தன்னுடைய நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் மூலமாக உலகச் சந்தையில் மிகவும் ஈவிரக்கமற்ற முறையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் தொழிலாளர் வர்க்கம் மற்றும் சாமானிய மக்களின் மீதான சுரண்டலும் ஆழமாகியிருக்கிறது.
1917இல் ரஷ்யாதான் முதலாளித்துவ சங்கிலித் தொகுப்பிலிருந்த மிக பலவீனமான கண்ணியை உடைத்துத் தூளாக்கி, தங்களுடைய நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் ஆட்சியை நிறுவியது. ரஷ்யப் புரட்சியின் மிக முக்கிய அம்சம் என்னவெனில், அது முதலாளித்துவத்தின் சுரண்டல் ஆட்சி முறைக்கு முற்றுப் புள்ளி வைத்தது என்பதேயாகும்.

சோவியத் சோசலிசக் குடியரசு 1991இல் முடிவுக்கு வந்தது என்றால் அதற்குக் காரணம் அங்கு ஆட்சியிலிருந்தவர்கள் மார்க்சிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கைவிட்டு விலகிச் சென்றதேயாகும். உலகம் முழுதும் உள்ள மார்க்சிஸ்ட்டுகள் அதற்கான காரணங்களை ஆராய்வதில் ஈடுபட்டார்கள்

மார்க்சின் புரட்சித் தத்துவம்
புரட்சிகர மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன? மார்க்சின் கூற்றுப்படி, ஒரு வர்க்க சமுதாயத்திற்குள் வளர்ந்திடும் முரண்பாடு என்பது வளர்கின்ற உற்பத்திச் சக்திகளுக்கும் ஏற்கனவேயுள்ள சொத்துடைய வடிவங்களுக்கும் இடையிலானதாக இருந்திடும். இதுவே முதலாளித்துவ அமைப்பைப் பலவீனப் படுத்தி, புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் முக்கிய கூறாகும். அது புராதனப் பொதுவுடைமை சமுதாயமாக இருந்தாலும் சரி அல்லது ஆண்டை - அடிமை சமுதாயமாக இருந்தாலும் சரி, அல்லது நிலப்பிரபுத்துவ அமைப்பாக இருந்தாலும் சரி அல்லது முதலாளித்துவ அமைப்பாக இருந்தாலும் சரி இவ்வாறுதான் மனிதகுல வரலாற்றை ஆய்வு செய்து வந்திருக்கிறோம். முதலாளித்துவத்தின் கீழான இந்த முக்கிய முரண்பாட்டை, ‘‘அதீத உற்பத்தியினால் உருவாகும் கொள்ளை நோய்’’ மூலம் நன்கு உணர முடியும்.

மார்க்ஸ் ஆரம்பத்தில் முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகள் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நன்கு முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில்தான் ஏற்படும் என்று நினைத்திருந்தார். ஆனால் அவர் தன் வாழ்நாளின் பிற்பகுதியிலேயே, மிகவும் வளர்ச்சிகுன்றிய ரஷ்யா போன்ற முதலாளித்துவ நாடுகளில் கூட புரட்சி வெடிக்கும் என்பதைக் கண்டார். இதன் மூலம் வளர்ச்சிகுன்றிய அல்லது ‘‘பிற்பட்ட’’ நாடுகளில் கூட முதலாளித்துவ சங்கிலியின் பலவீனமான கண்ணியை உடைத்தெறிவதன் மூலம் புரட்சி சாத்தியம் என்கிற சிந்தனையோட்டம் தோன்றி வளர்ந்தது.

மாமேதை லெனினின் கூர்மதியால் அவரது தலைமையின் கீழான போல்ஷ்விக் கட்சியானது ‘‘பலவீனமான கண்ணியை’’க் கண்டறிந்து உடைத்து சுக்குநூறாக்கி, முதலாளித்துவ ரீதியாக ஒரு பிற்பட்ட ரஷ்யாவில் புரட்சியை வெற்றிகரமானதாக உருவாக்கியது.

மார்க்ஸ் முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சிப் போக்குகளை நன்கு ஆய்ந்து, புரட்சி குறித்த சிந்தனைகளை உருவாக்கினார். வாழ்வதற்கான போராட்டம் மற்றும் இயற்கையோடு இருந்த பிணைப்பு ஆகியவற்றின் விளைவாக, மனிதன் சில கருவிகளை, உபகரணங்களை, உழைப்பை அளிப்பதிலும் பல்வேறு வடிவங்களை வளர்த்திட்டான். மார்க்ஸ் இவற்றை உற்பத்திச் சக்திகள் என்று விவரித்தார். பின்னர், அவர் உற்பத்தி உறவுகள் குறித்து விவரித்தார்.

மார்க்ஸ், கம்யூனிஸ்ட் அறிக்கையிலும், மூலதனத்திலும் தொடர்ந்து ஏற்படும் முதலாளித்துவ நெருக்கடிகள் அவற்றை மேலும் உக்கிரமானதாக மாற்றும் என்று கருதினார். ‘‘அதீத உற்பத்தி என்னும் கொள்ளைநோயை’’ ஒழித்துக்கட்ட வேண்டுமானால், முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளுக்கு எதிராக, சமூகக் குணத்துடனான உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்றும், உற்பத்திச் சாதனங்கள் சமூகத்திற்கு உடைமையாக்கப்பட வேண்டும் என்றும் கோரினார்.

பொருளாதார நெருக்கடிகள் இந்த மோதலை வெளிப்படையாகக் கொண்டு வந்துவிட்டன. மார்க்சின் கூற்றின்படி, ‘‘உண்மையான எல்லா நெருக்கடிகளுக்கும் முடிவான காரணம் மனித சமூகத்தின் ஏழ்மையேயாகும். அதன் ஓரெல்லைக்குள் கட்டுப்பட்டுள்ள குறைந்த நுகர்வு ஆற்றலே. மக்களது வறுமைக்கும் அவர்தம் குறைந்த நுகர்வாற்றலுக்கும் எதிராக, சமூகத்தில் எல்லையற்ற உயர்ந்த நிலை அளவுக்கு நுகர்வு ஆற்றல் உளது என்று எண்ணிக்கொண்டு, உற்பத்திச் சக்திகளைப் பெருக்குவதில் முதலாளித்துவ உற்பத்தி உந்தப்படுகின்றது.’’

மூலதனத்தின் மற்றொரு பகுதியையும் நாம் ஆராய்வோம். ‘‘மூலதனத்தின் ஏகபோகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுகையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகிவிடும் நிலை வருகிறது. ஆகவே, அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது.’’

ஆயினும் சோசலிசத்திற்கு மாறிச் செல்லுதல் என்பது தானாகவே நடைபெற்று விடாது. தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் மூலம் அது அமல்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. ஏனெனில் தொழிலாளர் வர்க்கம்தான் சமூகத்தின் ‘‘மாபெரும் உற்பத்தி சக்தி’’யாகும். உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான மோதலில் மற்றவர்களை விட அதிகமான அளவில் அவதிப்பட்ட பிரிவுமாகும். எனவே உற்பத்திச் சாதனங்களை சமூகமயப்படுத்துதலில் தொழிலாளர் வர்க்கத்திற்குத் தனி ஆர்வம் உண்டு.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்

மக்களை உறிஞ்சும் குணம் கொண்ட சுரண்டல் சமுதாயத்தை அடித்த நொறுக்கிவிட்டு, தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் ஓர் அரசை அமைத்திட வேண்டுமானால், உற்பத்திச் சாதனங்களைப் படிப்படியாக சோசலிசமயமாக்கிட வேண்டும். மார்க்ஸ், இதனைக் குறிப்பிடுகையில், ‘‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். இந்தச் சொற்றொடரில் தொழிலாளர் வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய மகத்தான போராட்டங்கள் மற்றும் வெற்றிகள் மட்டுமல்ல மக்கள்திரளின் மத்தியில் ஜனநாயகத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் ஆகிய அனைத்தும் அடங்கியிருக்கின்றன.

தொழிலாளர் வர்க்கம் நடத்துகின்ற வர்க்கப் போராட்டம் அனைத்தும், தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்று மார்க்ஸ் கூறுகிறார். அனைத்து வர்க்கங்களும் அழித்து ஒழிக்கப்பட்டு, வர்க்க சமுதாயம் உருவாகும்வரை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் அவசியமாகும்.

தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் அரசின் தன்மை குறித்து மார்க்ஸ் விரிவாக எழுதியிருக்கிறார். குறைந்த காலமே நீடித்த 1871 பாரிஸ் கம்யூன் தொழிலாளர் தலைமையில் அமைந்த முதல் அரசாங்கம் என்று அவர் கருதுகிறார்.

சமூக மாற்றத்தின் இன்றைய பிரதிநிதிகள் யார்?

மார்க்ஸ் காலத்தில் ‘‘தொழிலாளர்’’ (proletariat) என்போர் அநேகமாக தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களையே குறித்தது, தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அநேகமாக கரத்தால் உழைப்பவர்களாகவே இருந்தார்கள். சுரங்கங்கள் மற்றும் பல்வேறு தொழில்மையங்களில் பணியாற்றியவர்கள். ஆனால் தொழிலாளர் வர்க்கம் என்னும் கருத்தாக்கத்திற்குள் நிதிநிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு எந்திரத்தில் பணியாற்றும் கருத்தால் உழைப்பவர்களும் படிப்படியாக ஈர்க்கப் பட்டார்கள். ஏன், சமீபத்தில் இன்போடெக் மற்றும் மிக நவீன பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கூட, தாங்களும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினரே என்பதை உணரத் தலைப்பட்டுள்ளனர். முதலாளித்துவத்தின் நலன்களுக்கு ஏதேனும் ஒருவகையில் சேவை செய்யும் ஒவ்வொருவரும், தங்கள் பணிநிலைமைகள் மற்றும் வாழ்நிலைமைகள் மிகவும் பரிதாபகரமான முறையில் இழிநிலைக்குச் சென்று கொண்டிருப்பதை உணரத் தலைப்பட்டு, தொழிலாளர் வர்க்கப் படையின் போராளிகளாக மாற வேண்டிய அவசியத்தை உணரத் தொடங்கியுள்ளனர்.

ஒரு காலத்தில் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களை, ‘‘காக்கிச் சட்டைத் தொழிலாளர்கள்’’ என்றும், அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களை ‘‘வெள்ளைச் சட்டைத் தொழிலாளர்கள்’’ என்றும் வித்தியாசப் படுத்தியதை அறிவோம். காக்கிச்சட்டைத் தொழிலாளர்களைவிட, வெள்ளைச் சட்டைத் தொழிலாளர்கள் அதிகமான அளவில் பணிப்பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்று கூட சொல்லப்பட்டது. உண்மையில் இது அனைத்தும் கற்பனாவாதமே. மேலும் வெள்ளைச் சட்டைத் தொழிலாளர்கள் ‘‘மத்திய வர்க்கமாக’’ உயர்ந்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.

ஆயினும் இன்றும்கூட உலகில் பெரும் பகுதி, கரத்தால் உழைக்கும் காக்கிச்சட்டைத் தொழிலாளர்களேயாவர். இந்தியாவிலும் இதுதான் உண்மை நிலை.
மார்க்ஸ் தன் படைப்புகளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியவாக்கில் எழுதிக்கொண்டிருந்தார். 1883இல் மரணம் அடைந்தார். அதன்பின் எண்ணிலடங்கா மாற்றஙகள் ஏற்பட்டுள்ளன. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றஙகளை மார்க்ஸ் கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது.

இந்நூற்றாண்டில் தொடக்கத்தில் முதலாளித்துவம் தன்னைப் புனரமைத்துக் கொண்டு, வளர்ந்தது. ஆயினும் இன்றைய தினம் உலக முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமானதாகும்.
வர்க்கப்போராட்டத்தின் முக்கியத்துவம்

அரசு எந்திரம் அதிகமான அளவில் அதிகாரவர்க்கத்தின் ஆலோசனையின்படி நடப்பதால், அது பெரும்பாலும் மூலதனத்தின் நலன்களுக்கே - முதலாளிகளின் நலன்களுக்கே - சேவகம் செய்கிறது. மார்க்ஸ் புரட்சி குறித்து கூறிய கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்தக் கூடியதே. ஆயினும், ‘‘ஒரு பெரிய உந்துதல், அனைத்தையும் மற்றும் எல்லாவற்றையும் சரிசெய்துவிடும்’’ என்ற சொற்றொடரை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. மார்க்சைப் பொறுத்தவரை புரட்சி என்கிறபோது அவர் எப்போதும் ‘‘சமூகப் புரட்சியையே’’ பொருள் கொண்டார். ஒரு ‘‘பெரிய உந்துலு’’க்காக ஒருசிலரின் தலைகளைக் கொய்துவது எளிதுதான். அதைத்தான் இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகள் புரட்சி என்ற பெயரில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக மார்க்ஸ் பொருள்கொண்டது இதையல்ல.
இதுபோன்ற காரியங்கள் கடந்த காலத்தில் பயன் அளிக்கவில்லை, எதிர்காலத்திலும் பயனளிக்க முடியாது என்பதை நாம் நம் கசப்பான அனுபவங்களிலிருந்து அறிந்து கொண்டிருக் கிறோம். புரட்சிகர சித்தாந்தம் என்பது முன்பிருந்தது போலவே இன்றைக்கும் பொருந்தக் கூடியதே. புரட்சி என்பது ஒன்றை அழிப்பது என்பது மட்டுமல்ல, அந்த இடத்தில் மற்றொன்றை உருவாக்குவது என்பதுமாகும். அழித்தல் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு உருவாக்கம் என்பதும் முக்கியம். மார்க்ஸ் ஒருமுறை, ‘‘புரட்சிகரமான சிந்தனை’’ என்பது ‘‘விஷயங்களை அதன் மூலத்திலிருந்தே கிரகித்துக்கொள்வது’’ என்றார். மார்க்சின் இக்கூற்று இன்றைக்கும் பொருந்தக் கூடியதேயாகும்.
சமூகப் புரட்சி குறித்த மார்க்சிய சிந்தனை, இந்தியாவில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டத்திற்கும் பொருந்தக்கூடியதேயாகும். இதிலிருந்து பிறழ்ந்து செல்வதென்பது புரட்சிகர நடைமுறைக்கு சொல்லொணா தீங்கினை ஏற்படுத்தும்.

1991இல் சோவியத் யூனியனில் ஏற்பட்ட பின்னடைவு உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அதிர்ச்சியை அளித்தது என்பதும் அதில் பாதிப்பிலிருந்து உலகில் பல நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் முழுமையாக மீண்டு எழவில்லை என்பதும் உண்மை. இவற்றில் சில கட்சிகள் வர்க்கப் போராட்டம் என்னும் கருத்தோட்டத்தைக் கைவிட்டு, ‘‘தெளிவுபெற்ற முதலாளித்துவம்’’ அல்லது ‘‘மனிதமுகத்துடன் கூடிய உலகமயம்’’ என்பதில் நம்பிக்கைகொண்டு, சமூக ஜனநாயகவாதக் கட்சிகளாக மாறியிருக்கின்றன. உண்மையில், இத்தகைய போக்குகள் அனைத்தும் புரட்சிகர வளர்ச்சிப்போக்குகளுக்குத் தீங்கு விளைவிப்பவைகள் என்பதிலும், இறுதியாக இவை மூலதனத்தின் நலன்களுக்கே சேவை செய்திடும் என்பதிலும் எவ்வித ஐயமமில்லை.
இவ்வாறு, இன்றைக்கும் அனைத்து நாடுகளிலும் சமூகப் புரட்சியையும் புரட்சிகரப் போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல நவம்பர் புரட்சியின் படிப்பினைகள் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

(தமிழில்: ச.வீரமணி)