Tuesday, July 11, 2017

7. ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி புதிய உருவாக்கமல்ல... சீத்தாராம் யெச்சூரி


 

[நம் புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிட வீர சகாப்தம் படைத்திட்ட நவம்பர் புரட்சி தொடர்ந்து நமக்கு உத்வேகத்தை யளித்திடும். நவம்பர் புரட்சி உலகை மாற்றியதைப்போல, இந்தியப் புரட்சியும் இந்தியாவை மாற்றி அமைத்திடும். இதனை எதார்த்தமாக்கிடக் கூடிய விதத்தில் நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியதே இன்றைய தேவையாகும்.]
டொனால்டு டிரம்ப் மற்றும் நரேந்திர மோடி அரசோச்சும் இக்காலத்தில் இதனைப் புரிந்துகொள்வது எளிதாகும். இராக்கில் யுத்தத்தைத் தொடங்குவதற்காக அமெரிக்க புஷ் நிர்வாகம் அவிழ்த்துவிட்ட பொய்களும் மற்றும் ஏகாதிபத்திய அரசியல் மற்றும் ராணுவ ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்திட அவிழ்த்துவிடப்படும் பொய்களும் இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகும். இந்தியாவிலும் இதேபோன்றே முஸ்லிம்கள், கிறிஸ்த்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக பொய்ப்பிரச்சாரங்கள் அவிழ்த்துவிடப் படுவதிலிருந்து இதனை நாம் அறிந்துகொள்ள முடியும். மக்கள் மத்தியில் மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதற்காக தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் மீது பசுப்பாதுகாப்புப் படை போன்ற தனியார் ராணுவத்தினர் கொலைபாதகத் தாக்குதல்கள் தொடுப்பதிலிருந்து இதனைத் தெரிந்துகொள்ள முடியும். பின்-உண்மை என்கிற சொற்றொடரும் மனிதகுல வரலாற்றில் புதிதான ஒன்றல்ல.
ஹிட்லரின் கொள்கைப் பரப்பு அமைச்சராக இருந்த கோயபல்ஸ், ‘ஒரு பெரிய பொய்யைக் கூறுங்கள், திருப்பித் திருப்பி அதனைக் கூறுங்கள், அது உண்மையாகிவிடும்,’ என்று கூறிவந்தான் அல்லவா? அதுதான் இது. இதுதான் அன்றைக்கு நாஜி பாசிஸ்ட்டுகளின் பிரச்சாரத்திற்கு ஆணிவேராக இருந்தது. இன்றைக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் இந்துத்துவா வெறியர்களுக்கும் முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு ஹிட்லரின் பேச்சுகள் வானொலியில் ஒலிபரப்பப்படும் போது எப்படி மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டினார்கள் என்று ஒலிபரப்பப்பட்டதோ அதேபோன்றுதான் இன்றைக்கு மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி என்பது புதிய உருவாக்கம் ஒன்றுமல்ல. இவ்வாறு ‘பின்-உண்மை’ என்பதும் மக்களை தாங்கள் சுரண்டப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் எதிரான போராட்டங்களிலிருந்து திசைதிருப்புவதற்கான ஒன்றே தவிர, வேறல்ல. மார்க்சியம் ஒரு வறட்டு சூத்திரம் அல்ல. மாறாக, அது ஓர் ‘ஆக்கப்பூர்வமான அறிவியல்’ ஆகும். அது, ‘துல்லியமான நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வு செய்வதன்’ அடிப்படையில் அமைந்த ஒன்று. மார்க்சியம், வரலாற்றைப் பொதுவாகவும், முதலாளித்துவத்தைக் குறிப்பாகவும் ஆய்வுசெய்திடும் ஓர் அணுகுமுறையாகும்.
மாமேதை மார்க்ஸ் அவர்களால் அளிக்கப்பட்டுள்ள இந்த அடித்தளத்தில் நின்றுகொண்டுதான், நாம் இன்றைய சூழ்நிலையைச் சரியான முறையில் புரிந்துகொண்டு, நம் தத்துவார்த்த சிந்தனையை வளர்த்துக்கொண்டு, எதிர்காலத்திற்கான நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம். இந்த அடிப்படையில் நான் சரியானமுறையில் நின்றுகொண்டு, வர்க்க ஒற்றுமையையும், தொழிலாளர் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் விதத்தில், நமக்கு எதிராகத் தற்போதும், எதிர்காலத்திலும் கட்டவிழ்த்துவிடப்படும் மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தங்களை முறியடித்திட வேண்டியது அவசியமாகும்.
இந்திய நிலைமைகளில் சோசலிசம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய 20ஆவதுகட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்சனைகள் தொடர்பான தீர்மானத்தில், இந்தியாவில் சோசலிசம் என்பதன் கருத்தாக்கம் என்ன என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் சோசலிசம் எப்படி இருக்கும் என்பதை, இந்தியப்புரட்சியின் ஜனநாயகக் கட்டம் நிறைவடைந்தபின்புதான், அதாவது மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றிபெற்ற பின்னர்தான் இறுதிப்படுத்திட முடியும். எனினும், சோசலிசத்தின்கீழ் இந்தியாவில் உள்ள மக்களுக்கு எவை எவை தேவை என்பதை நம்மால் எதிர்பார்த்திட முடியும். எனவே, இந்தியாவில் சோசலிசம் என்றால் அதன் பொருள் என்ன?
அதன்பொருள், அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு, முழு வேலைவாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி.
அதன் பொருள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நலிந்த பிரிவினர் என அனைத்து மக்களுக்கும் வாழ்வாதாரநிலைமைகளை மேம்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக மேம்பாடு.
அதன்பொருள், மக்கள் அதிகாரமே உயர்வானது. ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் சமூகத்தின் அனைத்து அரசியல் மற்றும் சமூக ஒழுங்கிலும் பிரிக்கமுடியாதபடி பின்னிப்பிணைந்தவைகளாகும். முதலாளித்துவ ஜனநாயகத்தில் இதுபோன்ற உரிமைகள் தரப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் அவை மாயை. இவ்வுரிமைகளைப் பயன்படுத்தி பெரும்பாலான மக்களுக்கு அதற்கான வல்லமை கிடையாது.
சோசலிசத்தின் கீழ், அனைத்து மக்களுக்கும் பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தி இருப்பதன் காரணமாக மனிதகுல வாழ்வின் தரம் உயர்ந்து, அங்கே சோசலிஸ்ட் ஜனநாயகத்தின் அடித்தளங்கள் செழுமையுடன் காணப்படும். அதன் பொருள், சாதி அமைப்புமுறை ஒழிக்கப் படுவதால் சாதி ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அனைத்து மொழிப்பிரிவினரும் சமமாக நடத்தப்படுவார்கள். அனைத்து மொழிகளும் சமமான முறையில் வளர்த்தெடுக்கப்படும். அனைத்து சிறுபான்மையினருக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் உண்மையான சமத்துவம் அளிக்கப்படும், பாலின ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதன் பொருள், சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டமைப்பு, சோசலிச உற்பத்திச் சாதனங்கள் மற்றும் மத்திய திட்டமிடல் அடிப்படையில் அமைந்திடும்.
சந்தை சக்திகள், மத்திய திட்டமிடலின் வழிகாட்டுதலின்கீழ் இயங்கிடும். சொத்தின் அனைத்துவிதமான வடிவங்களும் இருக்கும் அதே சமயத்தில், உற்பத்திச் சாதனங்களின் சமூக உடைமையே தீர்மானகரமான வடிவமாக இருந்திடும். இவ்வாறு கூறுவதால் அது அரசின்கீழான பொதுத்துறை என்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பினைச் செய்திடும் அதே சமயத்தில், கூட்டு மற்றும் கூட்டுறவு அமைப்புகள், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் பொருளாதார வாழ்வாதாரங்களை இயக்கி முறைப்படுத்திடும்.
நவம்பர் புரட்சி: உலகத்தை மாற்ற முடியும்
மாமேதை காரல் மார்க்ஸ் ஒரு சமயம் கூறிய பொருள்பொதிந்த வார்த்தைகள்: ‘தத்துவ ஞானிகள் உலகை பல்வேறு வழிகளில் வியாக்கியானம் மட்டுமே செய்திருக்கிறார்கள். பிரச்சனை என்னவெனில், அதனை மாற்றுவதே ஆகும்.’ நவம்பர் புரட்சி உலகை மாற்றுவது சாத்தியமே என்று உலகுக்கு காட்டியிருக்கிறது. அது இன்றைக்கும் பொருந்தக்கூடிய ஒன்றேயாகும். பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தபோதிலும், நவம்பர் புரட்சி மற்றும் அதன் பங்களிப்புகள் மனிதகுல நாகரிகத்தை முன்னேற்றுவதற்கு இன்றளவும் உதவிக்கொண்டு இருக்கிறது. நம் புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுத்துச்சென்றிட வீர சகாப்தம் படைத்திட்ட நவம்பர் புரட்சி தொடர்ந்து நமக்கு உத்வேகத்தை அளித்திடும். நவம்பர் புரட்சி உலகை மாற்றியதைப்போல, இந்தியப் புரட்சியும் இந்தியாவை மாற்றி அமைத்திடும். இதனை எதார்த்தமாக்கிடக்கூடிய விதத்தில் நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியதே இன்றைய தேவையாகும்.
- தமிழில்: ச.வீரமணி

No comments: