Wednesday, July 26, 2017

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறிக்கை


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறிக்கை
புதுதில்லி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் ஜூலை 24-26 தேதிகளில் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மத்தியக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அனைத்து முனைகளிலிருந்தும் மக்கள் மீதான தாக்குதல்கள்
பாஜக தலைமையிலான அரசாங்கத்தால் மக்களில் பெரும்பான்மை யவர்களின் வாழ்வாதாரங்களின் மீது அனைத்து முனைகளிலிருந்தும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, நவீன தாராளமயப் பொருளாதாரத் தாக்குதல்கள் மக்களில்  பெரும்பகுதியினரை  சொல்லொண்ணான துன்ப துயரங்களுக்கு ஆழ்த்தி இருக்கின்றன, பசுப்பாதுகாப்பு  போன்ற தனியார் ராணுவத்தினரால் தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் மீதான மதவெறித் தாக்குதல்கள் கூர்மையடைந்திருக்கின்றன, மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது மேலும் எதேச்சாதிகாரமான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன, நாடாளுமன்ற அமைப்புகளின் செயல்பாடுகளே அரித்து வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறு நான்கு முனைகளிலும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பதோடு, ஆட்சியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய போர்த்தந்திர பங்காளியாக தன்னை மாற்றிக்கொண்டு, அதன் காரணமாக நம் அயல்துறைக் கொள்கையிலேயே மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதை தெள்ளத்தெளிவாகப் பார்க்கின்றோம்.
அதிகரித்துவரும்  சகிப்புத்தன்மையின்மை:
பாஜக, நாடு முழுதும் மதவெறித் தீயை கூர்மைப்படுத்துவதன்முலம் தன்நிலையை ஒருமுகப்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின்கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் மதவெறிபிடித்த நபர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை போன்ற அமைப்புகள் உட்பட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்  அனைத்தும் ஆர்எஸ்எஸ் நபர்களால் நிரப்பப்பட்டு, மதவெறித்தீயைக் கூர்மைப்படுத்தும் விதத்தில் வரலாறே மாற்றி எழுதப்பட்டு வருகிறது.  பொது நிறுவனங்கள் அனைத்திலுமே மதவெறித் தீயை விசிறிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  தாகூர், கலிப், டிங்கர், அவதார் சிங் பாஷ் போன்றவர்கள் குறித்த விவரங்களையும், முகலாயர்களை புகழ்ந்துரைத்திடும் உருது வார்த்தைகளையும் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கி புத்தகங்களை ‘ஞானஸ்நானம் செய்திடவேண்டும்’ என்று ஆர்எஸ்எஸ் கூறிவருகிறது. நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென் குறித்த ஓர் ஆவணப்படத்தில் வரும் ‘பசு’, ’குஜராத்’, ’இந்துத்துவா’ போன்ற வார்த்தைகளை நீக்கவேண்டும் என்று கூறி, அப்படத்தைத் திரையிடக்கூட தணிக்கை வாரியம் மறுத்திருக்கிறது. நாட்டில் சகிப்புத்தன்மையின்மை இவ்வாறு மிகவும் கூர்மையாக வளர்ந்துவரும் சூழல் இருந்துவருகிறது.
இதுபோன்ற தனியார் ராணுவங்கள்,  அதிலும் குறிப்பாக பசுப்பாதுகாப்புக் குழுக்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி இருக்கிறது.    
கால்நடை வர்த்தகத்திற்குத் தடை விதித்த அரசாங்கத்தின் அறிவிக்கைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை ஆணையைத் தொடர்ந்து,  தற்போது உச்சநீதிமன்றமும் தடையாணை பிறப்பித்திருக்கிறது. பாஜக அரசாங்கம், உச்சநீதிமன்றத்திடம் மேற்படி அறிவிக்கையைத் திருத்தம் செய்து, மீளவும் நீதிமன்றத்திற்கு வருவோம் என்று கூறியிருக்கிறது. எந்தவிதமான திருத்தத்திற்கும் தேவையே இல்லை. இந்த அறிவிக்கை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டியதாகும்.  
விவசாய நெருக்கடி:
இந்தக்கால கட்டத்தில், வேளாண் நெருக்கடி உக்கிரமடைந்திருக்கிறது. விவசாயிகளின் தன்னெழுச்சியான மற்றும் அமைப்புரீதியான எதிர்ப்புக் கிளர்ச்சிகள் நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்தெழுந்து வருகின்றன. அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலைகள் இத்தகைய கிளர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்கின்றன. மத்தியப்பிரதேசத்தில் மண்ட்சர் என்னுமிடத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் விவசாயிகளால் அறிவிக்கப்பட்ட பொது வேலை நிறுத்தம் போன்றவை விவசாய நெருக்கடியை நாட்டின் ஒட்டுமொத்த கவனத்திற்கும் எடுத்துச் சென்றுள்ளன.
மோடி அரசாங்கம், விவசாய விளைபொருள்களுக்கு, அரசு நிறுவனமான வேளாண் பொருள்கள் உற்பத்திச் செலவினம் மற்றும் விலை தொடர்பான ஆணையம் நிர்ணயிக்கும் உற்பத்திச் செலவினத்தைவிட ஒன்றரை மடங்கு  குறைந்தபட்ச ஆதார விலை அளித்திடுவோம் என்று அளித்த தேர்தல் உறுதிமொழியை நடைமுறைப்படுத்தாமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்திருக்கிறது.  
இவ்வாறு இந்த அரசாங்கம் கடந்த மூன்றாண்டுகளாக விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு மேற்கண்ட விதத்தில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் உரிமையை அளித்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிட வேண்டும். இதன்பொருள் என்னவெனில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களைக் கொண்டுவந்தால், அரசாங்கம் சட்டத்தின்படி  அதனைக் குறைந்தபட்ச ஆதார விலையுடன் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.
அதிகரித்து வரும் வேலையின்மை:
ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததானது, நாட்டில் முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருப்போரின் வாழ்வாதாரங்களை முழுமையாக சிதறடித்துவிட்டதால், தினக்கூலி மற்றும் வாரக்கூலி தொழிலாளர்களின் வாழ்க்கை வீதிகளில் தூக்கி எறியப்பட்டுவிட்டன. 2016 ஜனவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையேயும், மற்றும் 2017 ஜனவரி – ஏப்ரலுக்கு இடையேயும் அமைப்பு சார் வேலைவாய்ப்புகள்கூட 93 மில்லியனிலிருந்து, 86 மில்லியன் வரையிலும் வீழ்ச்சி அடைந்திருப்பதாக, அதாவது முன்பு வேலை பார்த்தவர்களில் 70 லட்சம் பேர் தற்போது வேலையிழந்துவிட்டதாக இந்திய பொருளாதாரத்தைக் கண்காணித்து வரும் மையத்தால் (CMIE-- Centre for Monitoring Indian Economy) குறிப்பிடப்பட்டிருக்கிறது. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட வேண்டிய ஒதுக்கீட்டுத்தொகை தொடர்ந்து வெட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இதன் பொருள் கிராமப்புற வேலைவாய்ப்புகள்  மேலும் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கின்றன என்பதேயாகும். கிராமப்புற இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வாய்ப்பே இல்லை என்றே அறிக்கைகள் கூறுகின்றன.
மோடி அரசாங்கம், தாங்கள் ஆட்சிக்கு வந்தால்,  ஒவ்வோராண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று உறுதி அளித்திருந்தது. ஆனால் அதற்குப் பதிலாக, நாம் இன்றைக்குப் பார்ப்பது என்னவென்றால், வேலைவாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி  அடைந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வோராண்டும் இளைஞர்கள் பட்டாளம் சுமார் 1.5 கோடி பேர் வேலைவாய்ப்பு சந்தையில் தங்களை இணைத்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், இத்தகு நிலைமை இளைஞர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல்:
நிட்டி ஆயோக் பரிந்துரையின்படி, இந்த பாஜக அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களைப் பெரிய அளவில் தனியாருக்குத் தாரைவார்த்திட நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. நிட்டி ஆயோக் முழுமையாக கார்ப்பரேட்டுகளால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டது. அதன் முன்மொழிவுகள் அனைத்துமே நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நிதி மூலதனம் மற்றும் உள்நாட்டு பெரும் கார்ப்பரேட்டுகளின் மூலதனத்திற்கு சேவகம் செய்யக்கூடிய விதத்திலேயே அமைந்திருக்கின்றன.  நாட்டின் பிரதானமான பொதுத்துறை சொத்துக்களை அந்நிய மற்றும் உள்நாட்டு தனியார் மூலதனத்திற்கு அடிமாட்டு விலைக்கு அளிப்பதற்கு முன்வந்துள்ளது, சமீபத்திய தாக்குதலாகும்.
அந்நிய ராணுவ தளவாடங்கள் உற்பத்தி கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்கொடுக்கக்கூடிய விதத்தில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி மையங்களை மிகப்பெரிய அளவில் தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இது, நாட்டின்  பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.  ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான வேலைகளும் தொடங்கிவிட்டன. நாட்டு மக்களை உயிரோட்டமான முறையில் பிணைத்து வைத்திருக்கக்கூடிய ரயில்வேயையும் கூட தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில்வேயுடன் இணைந்துள்ள பல்வேறு சேவைகள்  தற்போது தனியார்  வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.  இவை அனைத்தும் ரயில்வேயையே தங்கள் வாழ்க்கையின் ஓட்டத்திற்கு துணையாகக்கருதி வாழ்ந்து கொண்டிருக்கும் கோடானு கோடி இந்திய மக்கள் மத்தியில் கடும் சுமைகளை ஏற்றிடும்.
நிதித்துறையில் புதிதாக இயற்றப்பட்டுள்ள நிதித் தீர்மானம் மற்றும் சேம்ப்பு இன்சூரன்ஸ் சட்டமுன்வடிவு (FRDI—Financial Resolution and Deposit Insurance Bill, 2017) மூலம் இந்த அரசாங்கமானது வங்கிகளையும், நிதித்துறை நிறுவனங்களையும் முற்றிலுமாக பொதுத்துறை கண்காணிப்பு மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளிலிருந்து நீக்கி இருக்கிறது.
ஆதாரும் தனிநபர் அந்தரங்கத்தைக் காப்பதற்கான உரிமையும்:
தனிநபர் அந்தரங்கத்தைக் காப்பதற்கான உரிமை குறித்த பிரச்சனையைத் தற்போது உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச்சட்ட அமர்வாயம் விசாரித்துக் கொண்டிருக்கிறது. இந்த உரிமைமீது போதுமான அளவிற்கு வரம்புகள் விதிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆதார்  அட்டையில் கூறப்பட்டுள்ள தனிநபர் தரவுகளை தனிநபர்களுக்கு அளிப்பது குறித்து அரசாங்கம் மிகவும் தெளிவாக வரையறுத்திட வேண்டும்.
இங்கே பிரச்சனை, ஒரு தனிநபரின் அந்தரங்கம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதல்ல.  பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு இது தேவைஎன்று அரசாங்கத்தின் தரப்பில் சொல்லப்படுகிறது. இன்றைய உலகில் இந்தப் பிரச்சனையானது, இவ்வாறான தனிநபர்களின் தரவுகளை உலக அளவில் இயங்கும் பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் இந்தியக் கார்ப்பரேட்டுகள் தங்கள் லாபங்களைப் பெருக்கிக் கொள்வதற்காகவும். தனிநபர்களைக் கசக்கிப் பிழிவதற்காகவும், பல்வேறு விதங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதேயாகும். இவ்வாறு கார்ப்பரேட்டுகள் தனிநபர்களைச் சூறையாடுவதைத் தடுக்கக்கூடிய விதத்தில்  மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியமாகும். எனவேதான், தனிநபர் அந்தரங்கங்களைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில் புதிய சட்டம் ஒன்றை இயற்றிட அரசாங்கம் முன்வர வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.  ஆதார் தகவல்களை இணைய தளத்தில் ஜியோ நிறுவனம் பரப்பியதுபோல் எவரேனும் பரப்பினால் அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை அந்தச் சட்டத்தில் குறிப்பிட வேண்டும்.
கேரளம்
கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தபின்னர், ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் தாக்குதல்களில் 13 தோழர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.  200க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் காயங்கள் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 150க்கும்  மேற்பட்ட வீடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கட்சி அலுவலங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன, தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன மற்றும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன.  
ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கக் காலத்திலும் நம் தோழர்கள் 27 பேர் ஆர்எஸ்எஸ் குண்டர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அத்தகு தாக்குதல்கள் இப்போதும் தொடர்கின்றன. அதே சமயத்தில், தங்கள் கொலைபாதக நடவடிக்கைகளையும், வன்முறை வெறியாட்டங்களையும் மூடி மறைப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ‘அட்டூழியங்கள்’ புரிவதாக அவதூறு செய்து வருகிறார்கள்.  
திரிபுரா
திரிபுராவில் வரவிருக்கும் சட்டமன்றத்  தேர்தலில் இடது முன்னணி அரசாங்கத்தை பலவீனப்படுத்திட வேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ-பாஜக வகையறாக்கள் தலைகீழாக நின்று முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.  அம்மாநிலத்தில் பழங்குடியினருக்கும், பழங்குடியினரல்லாதவர்களுக்கும் இடையே மோதலை உருவாக்கிட முயற்சிகளை உக்கிரப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக்குழுவும், திரிபுரா மாநில அரசாங்கமும்  சமீபத்தில் திரிபுராவில் நெடுஞ்சாலையில் முற்றுகைப்போராட்டம் நடத்திய ஐபிஎப்டி (IPFT) அமைப்பினரின் போராட்டத்தை மிகவும் சாதுர்யமாகக் கையாண்டதற்கு மத்தியக்குழு தன் திருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறது.
பாஜக மேற்கொண்டுவரும் தாக்குதல் நடவடிக்கைகளையும், தேர்தல் தயாரிப்பு வேலைகளையும் எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக திரிபுரா மாநிலக்குழு அளித்துள்ள அறிக்கையை மத்தியக்குழு கேட்டறிந்தது. அமைதியை விரும்பும் திரிபுரா மாநில மக்கள் பாஜகவினர் மேற்கொண்டுவரும் சூழ்ச்சி வலைகளைத் தகர்த்தெறிவார்கள் என்றும், வரவிருக்கும் தேர்தலிலும் அவர்கள் இடது முன்னணியையே மீளவும் தெரிவு செய்வார்கள் என்றும்  மத்தியக்குழு நம்புகிறது. 
மத்திய அரசின் சமீபத்திய தரவு ஒன்று, நாட்டிலேயே இரண்டு மாநிலங்கள்தான் பொது சுகாதாரம் மற்றும் கல்வியில் மிகவும் சிறந்து விளங்குவதாகவும், அவை கேரளாவும், திரிபுராவும் என்று குறிப்பிட்டிருக்கிறது.  திரிபுராவைப் பொறுத்தவரை,  அங்கே எழுத்தறிவு 96 சதவீதமாகும், மக்களின் ஆயுட்காலம் ஆண்கள் 71 ஆண்டுகள், பெண்கள் 73 ஆண்டுகளாகும். பொது சுகாதாரம் மற்றும் கல்வியிலும்  நாட்டின் மற்ற மாநிலங்களைவிட மிகவும் உயரத்தில் இருக்கிறது.  இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி அரசாங்கங்களும் அமல்படுத்தும் இத்தகைய மக்கள் ஆதரவு முற்போக்குக் கொள்கைகளைத்தான் பாஜக குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது.
மேற்கு வங்க மாநிலங்களவைத் தேர்தல்
மாநிலங்களவைக்கு மூன்றாவது முறையாக சீத்தாராம் யெச்சூரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலக்குழு கொண்டுவந்த முன்மொழிவை, மத்தியக் குழு நிராகரித்துள்ளது.  மேற்கு வங்கத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் ஏற்கத்தக்க சுயேச்சை உறுப்பினரை நிறுத்தினால் அதனைப் பரிசீலிக்கலாம் என்றும் அவ்வாறில்லையேல் மேற்கு வங்க இடது முன்னணிக்குழு சார்பில் போட்டியிடுவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என்றும் மத்தியக்குழு கருதுகிறது.
காஷ்மீர்
ஜம்மு – காஷ்மீரில் நிலைமைகள் சீர்கேடடைந்து வருவது குறித்து மத்தியக் குழு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி இருக்கிறது. பாஜக அரசாங்கம், காஷ்மீர் மக்களுக்கும், இந்திய நாடாளுமன்றத்திற்கும், உள்துறைஅமைச்சரின் தலைமையில்  காஷ்மீருக்குச் சென்ற அனைத்துக் கட்சி நாடாளுமன்றத் தூதுக்குழுவிற்கும் அளித்த உறுதிமொழிகளுக்குத் துரோகம் செய்துவிட்டது.   பெல்லன்குண்டுகள் பயன்படுத்த மாட்டோம், காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கு நடவடிக்கை எடுத்திடுவோம் என்பது போன்ற நடவடிக்கைகள் மூலமாக நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வோம் என்று அது அறிவித்திருந்தது. அதேபோன்று காஷ்மீரில் இயங்கும் அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்திடுவோம் என்றும் வாக்குறுதி அளித்தது. ஆனால், அது கடந்த ஆறு மாதங்களில் இதில்  எதனையுமே செய்திடவில்லை. காஷ்மீர் மக்கள் அந்நியப்படுதல் அதிகமாவதற்கு இவைகள் பெரிய அளவில் பங்களிப்பினைச் செய்துள்ளன. 
அனைத்துத்தரப்பு அரசியல் சக்திகளையும், மக்கள் இயக்கங்களையும் ஒருங்கிணைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சிகள் தொடர்ந்திட வேண்டும் என்று மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது.
கட்சியின் அகில இந்திய மாநாடு
கட்சியின் அகில இந்திய 22ஆவது மாநாட்டை 2018 ஏப்ரலில் தெலங்கானா மாநிலத் தலைநகர், ஹைதராபாத்தில் நடத்திட மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது.
மத்தியக்குழு அறைகூவல்
வரவிருக்கும் காலத்தில் கீழ்க்கண்ட இயக்கங்களை நடத்திட மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது.
(1)
(அ) கடன்சுமையால் தற்கொலைப்பாதைக்குத் தள்ளப்பட்டு வரும் விவசாயிகள் கடன்களை உடனடியாகத் தள்ளுபடி செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,
(ஆ) விவசாயப் பொருள்களின் உற்பத்திச் செலவினத்தைவிட ஒன்றரை மடங்கு விலை வைத்து குறைந்தபட்ச ஆதார நிலை நிர்ணயம் செய்திடுவோம் என்று பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும்,
(இ) விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை குறைந்தபட்ச ஆதாரவிலையில் மத்திய அரசே கொள்முதல் செய்திட சட்டம் இயற்றிட வேண்டும் என்று வலியுறுத்தியும்,
(ஈ) இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவோம் என்கிற பாஜக தன் தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்தக்கோரியும்,
(உ) பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறைசேவைகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை நிறுத்தக்கோரியும்,
(ஊ) 2014 தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்ததுபோல் மகளிர்க்கான  இடஒதுக்கீட்டு சட்டமுன்வடிவை நிறைவேற்ற வலியுறுத்தியும்,
வரும் 2017 ஆகஸ்ட் 15 முதல் 31 தேதிகளில் நாடு முழுதும் கிளர்ச்சி இயக்கங்களை நடத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துக் கிளைகளுக்கும் மத்தியக்குழு அறைகூவல் விடுக்கிறது. 
2. வரும் 2017 செப்டம்பர் 1 அன்று உலக அமைதி மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தினத்தை அனைத்துக் கிளைகளும் அனுசரித்திட வேண்டும். அன்றைய தினம் மோடி அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்திருப்பதையும் அதன் இளைய பங்காளியாக மாறியிருப்பதையும் மக்கள் மத்தியில் விளக்கிட வேண்டும்.  பிரதமரின்  சமீபத்திய இஸ்ரேல் பயணம், உலக அளவில் அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா கூட்டணியை உருவாக்கிட பாஜக அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திட வேண்டும்.
3. செப்டம்பர் மாதத்தில் நாடு முழுதும் மதவெறிக்கு எதிராக இயக்கங்களை நடத்திட வேண்டும். இதில் அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை இணைத்திட வேண்டும்.
4. செப்டம்பர் மாதத்தில் தலித்துகள் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் தாக்குதல்களைக் கடுமையாக எதிர்த்திட வேண்டும். பசுப்பாதுகாப்புக்குழுக்களையும் ஆர்எஸ்எஸ்-ஆல் நடத்தப்படும் தனியார் ராணுவங்களையும் தடை செய்திட  வலியுறுத்தி மத்திய சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்திட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)



No comments: