Sunday, July 23, 2017

இஸ்லாமுக்கல்ல, நாட்டுக்கும் மக்களுக்குமே ஆபத்து சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநாட்டில் முகமது சலீம் பேச்சு



ஈரோடு, ஜூலை 23-
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் இரண்டாவது மாநிலமாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மக்களவை உறுப்பினருமான முகம்மது சலீம் பேசியதாவது:
ஹரியானாவை சார்ந்த ஜூனைத் என்கிற இளைஞன் ரயிலில் பயணம் செய்தபோது சிலரால் கொடூர மாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டான். அவனது சகோதரர் ஜாகீர் கடுமையான தாக்குதலுக்குஆளாக்கப்பட்டு தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருப்பதாக தகவல் வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து நானும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்தும் ஜாகீரின் தாயாரையும் , இளைய சகோதரனையும் சந்தித்துப் பேசினோம்.
இவ்வளவு பெரிய சம்பவம் நடைபெற்றும் கூட குற்றவாளிகள் யாரையும் காவல்துறை கைது செய்யவும்இல்லை, வழக்கும் பதிவுசெய்யவில்லை. காவல்துறை அதிகாரிகளும் ஊடகங்களுக்கு உண்மையைச் சொல்லாமல் திரித்துச்சொன்னார்கள். நாங்கள் நேரில் சென்று விசாரித்து நடந்த உண்மைகளையெல்லாம் ஊடகங்களுக்குச் சொன்ன பிறகுதான் இந்த சம்பவம் மக்களுக்குத் தெரியவந்தது.
கடந்த மூன்றாண்டுகளாக மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவத்தை மட்டும் உங்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்பதற்காகவே இதனைச் சொல்கிறேன்.
வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் இருக்கிற நிலைமைகள் வெவ்வேறாக இருக்கின்றன. தென்னிந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் நிலைமை நேர்மாறாக மிக மோசமானதாக இருக்கிறது. அதன் உச்சகட்டம்தான் குஜராத்தில் நடைபெற்ற கோரச் சம்பவங்கள். உ.பி. மாநிலத்தின் தாத்ரியில் நீங்கள் மாட்டிறைச்சி உண்டீர்கள், பசுவை வதைக்கிறீர்கள் என்று சொல்லித்தான் தாக்குதல் நடத்தப் பட்டது.
இந்த பிரச்ச னைகளெல்லாம் ஏன் வருகின்றன? ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பெரும்பான்மை மக்களின் மத வெறியை தூண்டிவிட்டு அம்மக்களை தங்களின் பக்கத்தில் திரட்டுவது என்பதுதான் இந்த பாசிச கூட்டத்தின் வேலையாக உள்ளது. ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு ஒவ்வொரு காட்சியும் வெவ்வேறு இடத்தில் எடுக்கப்படுகிறது. அந்த சின்ன சின்ன காட்சிகளை ஒன்றிணைத்து பிறகு மூன்று மணிநேரப் படமாக தயார் செய்து வெளியிடப்படும்.
அதுபோலத்தான் பாஜகவின் ஆட்சியில் கடந்த மூன்று வருடங்களாக ஒவ்வொரு இடத்திலும் சங்பரிவாரங்கள் வெவ்வெறு பிரச்சனைகளை கிளப்பிவிடுகிறார்கள். விவாதத்தை உருவாக்குகிறார்கள். கலவரத்தை நடத்துகிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மை மதத்தினரை தனது பக்கம் திரட்டி ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றுவது என்பதுதான் இவர்களின் நோக்கமாக உள்ளது. அரசு நடத்துகிற ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில்கூட கல்விக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனை எதிர்த்து ஐதராபாத் பல்கலை கழகம், தில்லி பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராடுகிறார்கள். ஆனால் இந்த போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது தேசவிரோத முத்திரை குத்தப்படுகிறது.
காஷ்மீரின் பயங்கரவாதிகள், பாகிஸ்தானின் ஏஜென்டுகள் என பழிசுமத்தப்படுகிறார்கள். உரிமைக்காக போராடுகிற மாணவர்கள் மீது இதுபோன்ற குற்றச் சாட்டை சுமத்துவதுதான் பாஜக அரசின் அணுகுமுறையாக உள்ளது. இதேபோல மோடி அரசு தனது பொருளாதாரக் கொள்கையை அமலாக்குவதற்கும் இதுபோன்ற தேச பக்த நாடகத்தை அரங்கேற்றுகிறது. தற்போது நாட்டில் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நமது அரசியல்சட்டம் வழங்கியுள்ள நல்ல அம்சங்கள் அனைத்தும் மீறப்படுகின்றன. அரசியல் சட்டத்தை ஏற்காதவர்கள்தான் தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சகோதர த்துவம், அமைதி, மனித நேயத்தை தகர்ப்பதற்கு சங்பரிவார அமைப்புகள் முயற்சிக்கின்றன. இதனை எதிர்த்து அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டியுள்ளது.
அன்றைக்கு கவிஞர் சுப்பிர மணிய பாரதி, காந்தி, தாகூர், அபுல்கலாம் ஆசாத் போன்ற தலை வர்கள் இந்த மாண்பைப் பாதுகாக்க போராடினார்கள். அதுபோலத்தான் நாமும் இந்த போராட்டத்தை ஒன்றிணைந்து நடத்த வேண்டி யுள்ளது. இன்று பிளவுவாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. இந்து முஸ்லிம் என்ற பெயரால் பிளவு படுத்தப்படுகிறது. சிறுபான்மைக்கு எதிராக பெரும்பான்மை திரட்டப்படுகிறது. தங்களின் சொந்தலாபத்திற்காக மதவெறி தூண்டப்படு கிறது. இதனால் மக்கள் கடுமை யான துன்ப துயரத்திற்கு ஆளாக்கப்படு கிறார்கள். ஆகவேதான், இந்துத்துவா அமைப்புகள் மக்களை பிளவுபடுத்தி அதன் மூலமாக ஆதரவு திரட்ட முனையும் நிலையில், மறுபுறம் சிறுபான்மை மக்களை மதவெறியூட்டி ஒன்றுபடுத்தி மதமோதலை உருவாக்கும் சூழல் நாட்டில் ஏற்பட்டு வருகிறது. இஸ்லாம் ஆபத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
உண்மையில் இஸ்லாம் ஆபத்தில் இல்லை, நம் நாடும் மக்களும்தான் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய சூழலில்தான் சிறு பான்மை மக்கள்நலக்குழு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் இயக்கங்களை தொடர்ந்து நடத்து கிறது. இதுபோன்ற மாநாடுகள் மதவெறியர்களின் சூழ்ச்சியை எதிர்கொள் வதற்கும், மக்களின் ஒற்றுமையை பாதுகாக்கவும் திட்டத்தை உருவாக்குகிற பணியைச் செய்கின்றன. மக்கள் ஒற்றுமை ஓங்குக.. நாட்டின் மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை ஓங்கட்டும்.இவ்வாறு அவர் பேசினர்.
இவரின் ஆங்கில உரையை எஸ்.நூர்முகம்மது தமிழாக்கம் செய்தார்.

(நன்றி-தீக்கதிர் நாளிதழ், 24-7.17)

No comments: